Friday, August 30, 2013

இலை போட்ட சாப்பாடு......(மலேசியப் பயணம் 12 )

ஒத்தைப் பருக்கையை விடாம அப்படியே வழிச்சுத் தின்னுருக்கேன். என்ன ஆச்சுன்னு இவர் திகைச்சுப்போய் பார்க்கிறார். அப்படி ஒரு பசியா? இல்லை  சம்பிரதாயமான  சாப்பாட்டைப் பார்த்து  ரொம்பநாளாயிருச்சேன்ற நினைப்பா?  ஒன்னு ரெண்டு மூணுன்னு விரல்விட்டு எண்ணிப்பார்த்து  எட்டுநாளாச்சு  நம்மசாப்பாட்டைப் பார்த்துன்னேன். அப்ப பாலியில் தின்னது?  ஐய்ய.... அது நார்த் இண்டியன் சாப்பாடில்லையோ?

சரவணபவன் (சென்ட்ரல்) வாசலில் இறக்கிவிட்டுட்டார் டெக்ஸிக்காரர். உள்ளே போய் மெனுகார்டைக் கையில் எடுத்தால்  சவுத் இண்டியன் லஞ்ச்  ஆன் பனானா லீஃப்.  ஆஹா..... இன்னிக்கு விருந்து சாப்பிடவேண்டிய நாள்தான்.  இலைச்சாப்பாடுதன்னே அய்க்கோட்டே!

மெனுகார்டை ஆராய்ஞ்சவர், மோர்மிளகாயைத் தட்டில் காணோமேன்னு விசாரிச்சதும், பரிமாறுபவர் ஓடிப்போய்க் கொண்டுவந்து விளம்பினவர், நிறையப்பேர் அதை சாப்பிடாமல் தட்டுலேயே வேஸ்ட்டா விட்டுட்டுப்போயிடறாங்க. அதான் கேளுங்கள் கொடுக்கப்படும் வகையில் சேர்த்தாச்சுன்னார்.

இலை போட்ட சாப்பாட்டில் சாம்பார், ரசம், மோர், ரெண்டு கறி வகைகள், கூட்டு, ஸ்பெஷல் குழம்புன்னு ஒரு புளிக்குழம்பு, மோர்க்குழம்பு, தயிர்பச்சடி, ஒரு இனிப்பு,  ஊறுகாய், மோர்மிளகாய் அப்பளம், அளவுச்சோறு . இதுக்கு பத்து ரிங்கிட்,நாப்பது சென்ட்  சார்ஜ். இங்கெல்லாம்  சாப்பாட்டுக்கு  6 % வரி கூடுதலா தனியா பில்லில் சேர்க்கறாங்க.

திருப்தியா சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு கல்லாக்காரரிடம்  அருமைன்னு சொல்லிட்டுக் கிளம்பினோம். வலக்கைப்பக்கம் நடந்தால் மோனோ ரயிலுக்கான சென்ட்ரல் ஸ்டேஷன் வருமாம்.  இந்த சாலை முழுசும் ஏகப்பட்ட ரெஸ்டோரன்கள்.  மீன் தலை இங்கே ஸ்பெஷாலிட்டி ஐட்டம்போல!  பல இடங்களில் காட்சிக்கு உக்கார்ந்துருக்கு.

 சாலை பிரியும் ஒரு இடத்தில் கூடாரம் ஒன்று போட்டு சுறுசுறுப்பான வியாபாரம். பஜ்ஜி, போண்டா, வடை வகையறாக்கள்.. எல்லாம் மகளிரணி தயாரிப்பு. நல்ல சுவையாக இருக்கும்போல்.... கூடியிருக்கும் கூட்டமே சொல்லுது. வடை இழுத்தாலும் வயிற்றில் இப்போ இடமில்லை:(




ஹொட்டேல் டி செண்ட்ரல் , பார்க்க நல்லாவும்  அறைவாடகை விலை குறைவாகவும் இருப்பதாகத் தோணுச்சு. அடுத்து ஒரு  தமிழ்சினிமா  ஸி டி கடை.  தமிழ்ப்பாட்டு முழக்கமா இருக்கு.  சும்மா எட்டிப்பார்த்தேன்.  வாங்கிக்கத் தோணலை. நம்ம வீட்டுலேசினிமா சினிமான்னு  தேடித்தேடிப் பார்க்கும்  நபர் உள்ளே போய்  விசாரிச்சுட்டு வந்தார்.


புகிட் பின்டாங் ரயில் நிலையத்துக்கு  தானியங்கி இயந்திரத்தின் மூலம் பயணச்சீட்டு வாங்கிக்கிட்டு  மாடியேறிப்போய் ரெயிலைப் பிடிச்சோம்.  ரயிலில் போகும்போது கண்ணுக்குத் தெரியும் காட்சிகள் எல்லாம்  அதிக தூரமுமில்லாமல் ரொம்பப்பக்கத்திலும் இல்லாமல் இல்லாமல் நம்ம கெமெராக் கண்களுக்குப் பொருத்தமா இருக்கு. க்லாங் நதி அமைதியா நகரத்துக்குள்ளெ ஓடுது. கூவத்துக்கு விடிவுண்டோ என்ற எண்ணம் வந்து தொலைக்குது:(

அறைக்கு வந்ததும் கொஞ்சநேரம் ஓய்வு.  உண்ட மயக்கம் இல்லையோ!  இன்றைக்கு மாலை நம்ம பேட்டையிலேயே வேடிக்கை பார்க்கலாம்.  ஷாப்பிங் டிஸ்ட்ரிக்ட் என்ற பெயர் புகிட் பின்டாங்குக்கு இருக்கே.

மாலை கிளம்புமுன்,  கொண்டாட்டத்தின் ஆரம்பமாக , காலையில்  முதலில் ருசிக்க நினைச்சு, மறந்து போன  இனிப்பை உள்ளெ தள்ளினோம். மாலைப்பொழுது(ம்) இனிதாக இருக்கட்டும்! ததாஸ்து.....

கூடாரம் என்னும் புது ஷாப்பிங் மால் இப்போதைக்கு மிகப்பெருசு என்னும் வரிசையில்முதலில் நிக்குது.  பதிமூணு லக்ஷத்து எழுபதாயிரம் சதுர அடிகள் பரப்பு.  ஐநூறு  கடைகள். எல்லாமே விஸ்தாரமாத்தான்.  காலை பத்துக்குத் திறந்தால் இரவு பத்துக்கு மூடுவாங்க. நின்னு நிதானமா ஷாப்பிங் செய்யலாம்.  நமக்கு விண்டோ ஷாப்பிங் செய்ய கசக்குதா என்ன?

கூடாரத்தின் நுழைவு வாசலில் ஒரு நீரூற்று. Liuli Crystal Fountain . இதுதான் மிகவும் உயரமான செயற்கை நீரூற்று என்று பதிவாகி இருக்கு. முழுசும் கண்ணாடி. மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்திப்பூ  இடம்பிடிச்சுருக்கு.  ஆறு மீட்டர்  விட்டமும்  3.6 மீட்டர் உயரமும்.  வெவேறு நிறமுள்ள  ஒளி வரும்படி அமைச்சுருக்காங்க. பிரமாதமான லைட்டிங்ஸ்.  மால் ஆரம்பிச்சது 2007 என்றாலும்   இந்த நீரூற்று வச்சது என்னமோ 2009 இல்தான்.





மூணு பெரிய கண்ணாடிப் பாத்திரங்கள்,  மலேசியாவின் பல்வேறு இனமக்கள் இணைஞ்சு வாழும் கலாச்சாரத்தைக்குறிப்பிடுதாம்.  (Malaysia's multiracial culture living)  மலேசியாவின் சுற்றுலாத்துறை வெகுவாகப் பாராட்டி இருக்கு.

Teh tarik (literally "pulled tea")  இதை 'ஒரு மீட்டர்  டீ'ன்னும் சொல்றாங்க:-) எப்படி டீயை இழுப்பாங்க?  நம்மூர்  நாயர் கடையில் போய்ப் பாருங்க. அவர் எல்லா டீயையுமே இழுத்துருவார் !   டீயை  பெரிய (mug) மக்  இரண்டில்  இந்தக் கைக்கும் அந்தக் கைக்குமா மாத்தி மாத்தி ஆத்தறதுதான் இங்கே tarik! தலைக்கு மேல் கையை உசரத்தில் வச்சு  அங்கிருந்து  டீ அடுத்த மக்குக்குள் சிந்தாமல் சிதறாமல் பாய்வது' ஆ'ன்னு வாயைப் பொளந்து பார்க்கும் அதிசயம் வெள்ளைக்காரனுக்கு!
 சுட்ட படம்


நாலைஞ்சு தளத்தில் கடைகள் இருக்கே தவிர  வானம் நோக்கிப்போகும்  அடுக்கு மாடிகளில் ஆடம்பரமான வீடுகள்தானாம்.  விலைக்குத் தர்றோம் வேணுமான்னு  கேட்டதுக்கு மறு பேச்சில்லாம  தலையை மட்டும் இடதுவலதா ஒரு ஆட்டு.  பெவிலியன் டவர். வெறும் இருவது மாடிகள்தானாம்,   (ரொம்பப் புளிக்குதே இந்தப்பழம்) யாருக்கு வேணும்?

ச்சும்மாச் சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம். ஒரு கேஃபேயில் வெளி வராந்தாவில்  உக்கார்ந்து சாப்பிடும் அமைப்பு ரொம்பப் பிடிச்சது. சுவரிலேயே ஒட்டிப்பிடிக்கும் இருக்கையும் மேசையும். அறுவது  உணவுக்கடைகள் இதுக்குள்ளே  இருக்குன்னு  தகவல்.   இன்னொரு மாடியில் ஃபுட் கோர்ட் ஒன்னும் இருக்கு. இந்தியா வகைகள் கூட கிடைக்குமாம்.

போய்ப் பார்க்கலாமுன்னு போனால்....   அது ஒரு Teh Tarik Station  ரொட்டிச்சனாய் (பயந்துறாதீங்க. நம்மூர்  பரோட்டா தான்) தேத்தண்ணி ஆர்டர் கொடுத்தோம். ச்சாயா இப்ப   ஸ்பெஷல் டீலில் இருக்கு. வழக்கம் போல் அரை லிட்டர்  டீ.

பெவிலியன் மாலில் சுத்திட்டுப் பக்கத்து கடையில் ஷாப்பிங் செஞ்சோம். கோபாலுக்கு   ரெண்டு சட்டைகளும், மகளுக்கு  ரெண்டு க்ரீமும்.  எனக்கு? இந்த முறை மெலமைன் வாழை இலைத் தட்டு  வேணும் . கொக்குக்கு ஒன்றே மதி!  நோக்கமில்லாமல் எந்தக் கடைக்குள்ளும் நுழையமாட்டேன் கேட்டோ:-)

நல்ல தரமான ஷூஸ்  இருக்குன்னு  செருப்புக்கடைகளில் புகுந்து புறப்பட்டார்.  லேடீஸ்தான் ஷாப்பிங்கில் அதிக நேரம் செலவழிப்பாங்களாமே!  அது பொய் என்பது உறுதியாச்சு:-)

மறுநாளைக்கு தேவையான பழங்கள் வாங்கிக்கிட்டு அறைக்குத் திரும்பினோம்.

தொடரும்............:-)






Wednesday, August 28, 2013

வரம் தருவாய் முருகா .....(மலேசியப் பயணம் 11 )

வேரைப்பிடிச்சுத் தொங்கிக்கிட்டே எவ்ளோ நாள்தான் மலையேற முடியும்?  1920 ஆம் ஆண்டு,அங்கங்கே கொஞ்சம் வெட்டிச் சரியாக்கி மரப்படிகள் வச்சுக் கட்டுனாங்க. தைப்பூசம் களை கட்ட ஆரம்பிச்சது. இப்படியே  ஒரு பத்தொன்பது வருசம் ஓடுச்சு.  முருகனின் புகழ் பரவ ஆரம்பிச்சு உச்சத்துக்குப்போகும் நிலை பார்த்து, 1939 ஆம் ஆண்டு ராமசந்திர நாயுடு என்பவர், கெனிசன் ப்ரதர்ஸ் நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு ரெட்டைப் படிகள் வரிசை ஏற்பாடு செஞ்சார்.  தோட்டத்தொழிலாளிகள் அனைவரும் தோள்கொடுத்தாங்க. அவுங்களின் ஒரு நாள் சம்பளம் முருகனுக்குப் போச்சு. அந்தக் காலக்கட்டத்தில் ஒரு நாளைக்கு அரை ரிங்கிட்தான்  தினக்கூலி(யாம்)

கட்டி முடிச்சப்ப அது 272 படிகளா அமைஞ்சது.  அதிக அளவில் தைப்பூசத்துக்குக் காவடிகள் எடுத்துவர ஆரம்பிச்சாங்க. கட்டுப்படுத்த முடியாமல் போனபோது இன்னொரு வரிசைப்படிகளையும் காவடிக்குன்னே   1975 ஆம் ஆண்டு  கட்டிவிடும்படி ஆச்சு. இப்போ அழகான மூன்று வரிசைகள்.

பத்து  ஆற்றின் கரையில் இருந்து அலங்கரிச்ச காவடிகள் புறப்பட்டு வரும். தைப்பூசம் வரப்போகுதுன்னவுடனே  ஒரு செண்ட் காசுகளை சேகரிக்கத் தொடங்குவாங்களாம். திருவிழா சமயம்  படிகளில் வரிசையா  இடம்பிடிச்சு உக்காந்துருக்கும் பிச்சைக்காரர்களுக்கு  ஒவ்வொரு செண்ட் காசாப் போட்டுக்கிட்டுப் போறது சின்னப்பிள்ளைகளுக்கு பயங்கர அட்ராக்‌ஷனா இருந்துருக்கு.  நல்லவேளை இந்தக்காலத்தில்  பிச்சைக்காரர்கள் யாரும்  இப்படி  படிகளில்  உட்காருவதில்லை. ஓரளவு  நல்ல வாழ்க்கை அமைஞ்சுருக்கு போல!

ஆரம்ப காலங்களில் கார்த்திகை தீபம் சமயங்களில்  மாட்டுவண்டி நிறைய பப்பாளிக் காய்களை ஏத்திக்கிட்டு வந்து அதை நெடுகா, நீண்டவாக்கில்  ரெண்டா வகுந்து உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிட்டு , எண்ணெய்  ஊத்தி அகல்விளக்குகளா  தீபமேத்தி இருக்காங்க. வாவ்......  என்ன ஒரு  கவிதை!!!

திருத்தணியில் நடப்பதுபோல இங்கேயும்  படித்திருவிழா கூட ஆண்டுக்கு ஒரு முறை செய்யறாங்களாமே!!!!

இனம், மதம் இப்படி எந்தப் பாகுபாடும் இல்லாம  எல்லோருமே மலையேறி வரலாம்.  எல்லாமும், எல்லாருக்கும் என்பது எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.  காலணி கூடப் போட்டுக்கிட்டே போகலாம்.  சந்நிதிக்குள் போகுமுன் வெளியே கழட்டினால் போதும். குரங்கன்ஸ் கூட  செருப்பு திருடத் தெரியாத  அப்பாவிகள். மூலவரைப் படம் எடுக்கக்கூட எந்த ஒரு தடையும் இல்லை. கெமெரா சார்ஜ்? மூச்! அப்படி ஒன்னு இருப்பதே இங்கத்து மக்களுக்குத் தெரியாது போல!

தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை கோவில் திறந்துருக்கு.  காலையில் கொஞ்சம் சீக்கிரமா மலையேறிட்டால் அவ்வளவாகக் களைப்பு தெரியாது. இடையில் நடை அடைக்கிறாங்களா என்ன? கே ஆர் எஸ் சொல்றாரே! 

தைப்பூசம் விழா சமயத்தில்  ஒரு படிக்கட்டு , காவடிகளுக்குன்னே ஒதுக்கிருவாங்க.  வெறும் காவடியும் பால்குடமுன்னாலும் கூடப் பரவாயில்லை. உடம்பு முழுசும் வேல் குத்திக்கிட்டு கூண்டு போல் இருக்கும் பெரிய காவடியும் தூக்கி மலையேறும் பக்தர்களைப் படத்தில் பார்க்கும்போதே... எனக்கு மனசெல்லாம் சிலிர்த்துப்போகுது.  பக்தின்றதே பெரிய போதையா இருக்கு(ம்) போல!!!!!

போன திருவிழாக் காட்சிகளை இங்கே படங்களாப் புடிச்சுப் போட்டுருக்கார் ஒரு புண்ணியவான். அவருக்கு நன்றி சொல்லிக்கிறேன். விருப்பம் இருந்தால் க்ளிக்கிப் பார்த்துட்டு அவருக்கும் அங்கே ஒரு நன்றி போட்டீங்கன்னா நல்லது

ஆரம்பநாட்களில்  ஒருநாள் விழாவா இருந்த தைப்பூசத் திருவிழா, இப்ப ஏழுநாள் கொண்டாட்டமா ஆகிப்போச்சு. கடைகளும் வேடிக்கை விநோதங்களுமா  எக்கச்சக்கமான  கூட்டம் அம்மும் பெரிய திருவிழா இது. இந்த 2013 தைப்பூசத்துக்கு  16 லட்சம்பேர் கூடி இருந்தாங்களாம்.

தைப்பூசத் திருவிழாவில் அரசாங்கப் பிரதிநியாகக் கலந்துகொள்ள பிரதமரே வருகிறார்.  மதம் என்பது  இங்கே தடையே இல்லை பாருங்களேன்!  இந்த வருசம் பிரதமர் நஜீப் அவர்கள் ஊரில் இல்லை என்பதால் துணைப்பிரதமர்  மொய்தீர்,  விழாவில் கலந்து கொண்டாராம்.

கோலாலம்பூர் மஹா மாரியம்மன் கோவிலில் இருந்து  தைப்பூசத்துக்கு முதல்நாள்  மாலை , முழு அலங்காரத்துடன் தயாரா இருக்கும் வெள்ளிரதத்தில்  முருகன் குடும்பசமேதரா ஏறினதும்  நடு ராத்திரி 12 மணிக்குப் புறப்படும் ரதம், இந்த 13 கிலோமீட்டர் தூரமும் பக்தர்கள் புடை சூழ, மேளதாளங்கள் ஒலிக்க   பத்துமலைக்கு மறுநாள் காலை பத்துமணிக்கு வந்து சேர்ந்துருமாம். வழி நெடுக தண்ணீர் பந்தலும், பக்தர்களுக்கு  பிரசாத விநியோகங்களுமா  ஜேஜேன்னு  இருக்குமாம். நினைக்கும்போதே.... ஒருமுறை சான்ஸ் கிடைக்காதான்ற .... நப்பாசை.

தமிழர்கள் மட்டுமில்லாமல்  மலேய்களும் சீனர்களும் கூட அலகு குத்திக்கிட்டுக் காவடிகளைச் சுமந்து வந்து  முருகனை வழிபடறாங்க! விதவிதமான அலங்காரக் காவடிகளைப் பார்த்து ரசிக்கவே ஒரு கூட்டம் வருதாமே!


காவடிகளுக்கு  மயிற்பீலிகளால் அலங்காரம் செஞ்சு தர அதிகபட்சமா அஞ்சாயிரம் ரிங்கிட்  ஆகுதாம். சிம்பிள் அலங்காரமுள்ள சின்னக் காவடிகள் நூறு ரிங்கிட்டுக்குக்  கிடைச்சுருமுன்னு சொன்னார்  அலங்காரத்தொழிலில் பலகாலமா ஈடுபட்டிருக்கும் அன்பர். முந்தியெல்லாம் மயிற்பீலிகள் மலிவாக் கிடைச்சது. அம்பத்தி ஏழு சென்ட்தான். இப்ப ஒவ்வொன்னும் ஒரு வெள்ளின்னு விலை ஏறிப்போச்சுன்னு காரணம் சொல்றாங்க. மயில்  பீலி கனமே இல்லைன்னாலும் அலங்கரிச்ச காவடிகள் சிலசமயம் நூறு கிலோ எடை வந்துருமாமே!

 அம்மாடியோவ்....  அதையும் சுமந்து 272 படிகள் ஏறணுமுனால்......  அந்த முருகந்தான்  சக்தி கொடுப்பான் போல!

இந்தியாவில் இருந்து மயிற்பீலி இறக்குமதியாகுது. எனக்கு  மயிற்பீலி ரொம்ப ஆசை. எங்கூருக்குள்ளே கொண்டுவர  அனுமதி இல்லை:( அதனால் க்ளிக் க்ளிக் மட்டுமே!




பத்துமலையின் மொத்த கோவில்களையும் பொறுப்பேத்து நடத்துவது ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானம்தான்.  நான் முதல்முறை (2003)கே எல் வந்தப்ப முருகன் மட்டும் குகைக்குள்ளே தனியா நின்னு இருந்தார்.  தனியா நிக்கறவனிடம் என்ன பேச்சுன்னு பேசாமப்போயிட்டேன்:-)  இப்ப என்னன்னா பெரிய குடும்பியா சுற்றம் சூழ!!!

நம்மாட்கள் எல்லோரும்   பக்தர்களை வந்து கண்டுக்கிட்டதும் கையில் உள்ள ஒரு தேங்காய் மூடியைத் தட்டிக்கிட்டுப்போய் ஒரத்தில் உள்ளதை முடிஞ்சவரை பல்லால்  சுரண்டித் தின்னுட்டு,      பல்லுக்கு எட்டாத நிலை வந்ததும் தூக்கிப்போட்டுட்டு வேறொரு பக்தரை வழிமறிப்பதுமா இருப்பதைப் பார்த்துட்டு, நம்ம பையில் இருக்கும் தேங்காய் மூடியை உடைச்சே கொடுக்கச் சொல்லி கோபாலிடம் சொன்னேன்.  தேங்காய்ச்சில்லா  இருந்தால் திங்க சுலபமா இருக்காது?

அதேபோல்  உடைச்சுக் கொடுத்தார்.  பயபுள்ளைக்கு அப்படித் தின்னத் தெரியலை! கையில் எடுத்துப் பார்த்துட்டு, வேணாமுன்னு சொல்லிட்டுப் போகுது.  பழக்க தோஷம்!!!




கீழே போகலாமுன்னு  எந்திருச்சு வந்தோம்.  இந்த மேல் குகையின்  உட்புறச்சுவர் ஓரங்களிலும் தகப்பன்சாமி காட்சி தர்றார். நடராஜரின் பொன்னம்பலம் விமானம் இன்னொரு புறம்.  உத்துப் பார்த்தால் குகையின் மேல்கூரையை ஒட்டி சிலபல வௌவால்கள் தலைகீழ்த் தவம். சுண்ணாம்புப் பாறைகள்  அப்படியே கீழிறங்கி வருது.





நினைவுப்பொருட்கள்  கடையில் முருகர் குவிஞ்சு கிடக்கார்.  200 ரிங்கிட் முதல்  விலை மேலே போகுது. அடிவாரத்தில் பார்த்துக்கலாமுன்னு படி இறங்க ஆரம்பிச்சோம்.  எண்ணி பதினாலே நிமிசத்தில் கீழே வந்தாச்சு.   வழியிலேயே இருட்டுக் குகை ஒன்னு இருக்கு. பழம்தின்னி வௌவால்களும் இன்னும் சிலபல மிருகங்களும் இருக்காம்.  வனத்துறை பாதுகாக்கும் இடம் என்பதால் போகலை.  குறிப்பிட்ட எண்ணிக்கையில்  சிலநாட்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டாம்.

மேலே முருகனின் குகைகளைத் தவிர இந்த மலையில்  இன்னும் சிறுசும் பெருசுமா பதினெட்டு குகைகள் இருக்குன்னும் அடிவாரத்தில்   ராமாயணக்குகை என்பதில்  ராமாயணக் காட்சிகளையும், வள்ளுவர் கோட்டம் என்பதில் குறள் சொல்லும் சேதிகளைக் காட்சிப்படுத்தி இருக்காங்கன்னும்  இன்னும் கலைக்கூடம் ஒன்னும் இருக்குன்னு  அப்புறமாக் கேள்விப்பட்டேன். (நெவர்  மைண்ட்.நெக்ஸ்ட் டைம் (இதுதான் எங்க கிவி ஆட்டிட்யூட்!)
ஆனாலும் வால் ரொம்பத்தான் நீளம்:-)))



தங்க முருகனுக்கு இடப்புறம்  இன்னொரு சந்நிதி  சனீஸ்வரனுக்கு. மூலவராக சனி இருக்க, அவர் முன்னே மண்டபத்தில்  நவகிரகங்கள் இருக்காங்க.  சுவரில் நவகிரக ஸ்தோத்திரங்கள் எழுதி வச்சுருக்காங்க.

அங்கேயும் ஒரு கும்பிடு போட்டுட்டு அடுத்துள்ள சின்ன வணிக வளாகத்துக்குள் நுழைஞ்சோம். புத்தகக்கடை ஒன்னு கண்ணில்பட்டது.  வழக்கமான 'ஆன்மீக'புத்தகங்களுக்கிடையில் பத்துமலை என்றதைப் பார்த்து  சரித்திரம் தெரிஞ்சுக்கலாமுன்னு வாங்கினோம்.  ஜெயபக்தி ட்ரஸ்ட் போட்டுருக்கும் souvenir வகை. முதல் பத்துபக்கங்களில்  டடோ (Dato)ஸ்ரீ சாமிவேலு அவர்கள்,(மலேசிய இந்தியக் காங்ரெஸின் தலைவர்)   ஸ்ரீ மஹாமாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் நடராஜா  அவர்கள், பதிப்பாளர்  ஜெயபக்தி ட்ரஸ்ட்  ஆகியோரின் வாழ்த்துரை, முன்னுரைகளுடன், முருகன் பெருமைகளும், தலவரலாறுமாக இருக்க மீதி உள்ள எழுபத்தி இரண்டு பக்கங்களும் படங்களே!  அதிலும் ராமாயணக்குகை, கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம் பற்றியவைகளே அதிகம்.  நேரில் பார்க்கவில்லையே என்ற மனக்குறை  தீர்ந்ததுன்னே சொல்லலாம்.

புத்தகத்தின் தலைப்புதான்..... எனக்குக் கொஞ்சம்.......   பத்துமலை என்று தமிழிலும், Batu Caves என்று ஆங்கிலத்திலும்.  போயிட்டுப்போகுது போங்க.


கடையில் விற்பனையாளரா இருக்கும் இளைஞர் , யாழ்பாணத்துக்காரர். வந்து மூணு மாசம் ஆச்சாம். உறவினர் மூலம் இந்த வேலை கிடைச்சதுன்னார்.

இன்னும் சிலபல நினைவுப்பொருட்கள் கடைகளும்,  ரெடிமேட் உடைகளும்  கைவினைப்பொருட்களும்  விற்கும்  கடைகளும் இருக்கு. கூடவே சில உணவுக்கடைகளும். தாகமா இருக்கேன்னு ஆளுக்கொரு இளநீர்.  அஞ்சு விலை என்றாலும்  ஃப்ரிட்ஜுக்குள் வைத்திருந்ததால்  ஆறு என்றார் கடைக்காரர்.

இப்பெல்லாம் தினமுமே குறைஞ்சது மூவாயிரம் பேர் பது குகைகளுக்கும், முருகன் தரிசனத்துக்கும் வந்து போறாங்களாம். அதுவும் வார இறுதின்னால் இன்னும்  கொஞ்சம் கூடுதலாம். மலேசிய அரசு, இந்த இடத்தை மேம்படுத்தி  அலங்கார விளக்குகளும்  அடிப்படை வசதிகளும் அமைக்க சுற்றுலாத்துறையின் மூலம்  3.6 மில்லியன் ரிங்கிட்டுகள்  செலவு செய்துகொள்ள  பிரதமரே அனுமதி   கொடுத்தாருன்னு  கோவில் நிர்வாகம் அறிக்கையில் சொல்லி இருக்காங்க.  அடிவாரத்துலே இருக்கும் 16 ஏக்கர்  இடமும் அப்பழுக்கின்றி ஜொலிப்பது பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.

இதுக்குப்பின் இன்னுமொரு 4.6 மில்லியன் ரிங்கெட் அரசு ஒதுக்கித் தந்ததை வாங்கிய தேவஸ்தானம் பத்துமலை அடிவாரத்துலேயே ஒரு பள்ளிக்கூடம் கட்டி விட்டுருக்கு. கல்விதான் கடவுள் என்பது ரொம்பச் சரி. கல்வி கிடைச்சாலே மக்கள்  மேன்மையடைஞ்சுருவாங்க.  எல்லோருக்கும் கல்வி வேண்டும், முருகா.

முருகனை  நம்ம வீட்டுக்குக்கொண்டு போகணும். சில கடைகளில் விசாரிச்சப்போ... சரிவரலை.  என்னவோ தோணலுடன் கண்ணில் பட்ட இன்னொரு கடைக்குள் சட்னு நுழைஞ்சேன். அங்கெல்லெ நமக்காகக் காத்துக்கிட்டு இருக்கான், அப்ப எப்படி வேற கடைகள் சரியாகும்?

நெடுந்தொலைவு பயணப்படும் முருகனை நல்லபடி  பேக் பண்ணிக் கொடுத்தார் கடைக்காரர். என் கேபின் பேக் இனி முருகனுக்கே!

பட்டைபட்டையாத் தொங்கும் மயிற்பீலிகளை அடுக்கிட்டால் நம்ம காவடி ரெடி. எழுத்துக்கலை கைகூடிவர , வரம் தருவாய் முருகா.......

நூற்றி இருபத்தியஞ்சுன்னு  இருந்தவர் நியூஸி வரும் ஆசையில் சட்னு எம்பதுக்கு இறங்கி வந்தார்.  நம்ம  ஜிராவின் ஆசை இப்படி நிறைவேறுச்சு:-)



(நம்ம வீட்டுக்குள் வந்ததும் அண்ணன் பக்கத்தில் இடம் புடிச்சார். அவுங்க குடும்பக்கார்னர் அங்கேதான் இருக்கு)

மணி  பனிரெண்டரை ஆச்சே, திரும்பிப் போக என்ன டெக்ஸின்னு பார்த்தால்  ரெண்டும் கலந்த ஒன்ணு நமக்கு.  முப்பத்தியஞ்சுக்கு  செண்ட்ரல், பேரம் சரியாச்சு.

பார்வையில் இருந்து தப்ப முடியாதவனிடம், போயிட்டு வரேண்டான்னு  சொல்லிட்டு  வண்டி ஏறினோம்.

தொடரும்...............:-)

PIN குறிப்பு:  பத்துமலையில் எடுத்த படங்கள் எல்லாவற்றையும் எடிட்செய்யாமல் கூகுள் ப்ளஸ் ஆல்பத்தில் போட்டுருக்கேன். நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம்,

https://plus.google.com/u/0/photos/106551900495801732302/albums/5914700996316280753

கோவில் வரலாறு , இன்னும் மற்ற சில தகவல்கள் எல்லாம் கோவிலின் வலைப்பக்கத்துலே இருந்தும், நாம் வாங்கின புத்தகத்துலே இருந்தும், இன்னும் சில மலேசியத் தோழியரிடமிருந்தும் தெரிந்து கொண்டதே!  அவர்கள் அனைவருக்கும் துளசிதளத்தின் நன்றி.




Monday, August 26, 2013

முருகா...என்பது உனைத்தானோ? (மலேசியப் பயணம் 10 )


கிட்டே போய் அண்ணாந்து பார்த்ததும் பிரமிப்பு !.  140 அடி உசரமாம்.  விஸ்வரூபம் எடுத்தது போல் நெடுநெடுன்னு நிக்கறான்.  முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.  உலகில் பெரிய முருகன் என்று பதிவாகிட்டான். பெரியது எதுன்னு  அவ்வையை இப்போ கேட்டிருக்கணும். பத்துமலை முருகனென்று பதில் வந்திருக்கும்:-)

இவனும்  வந்து சரியா ஏழு வருசம் ஆகி இருக்கு. 2006 இல் பிரதிஷ்டை.  மொத்தம் பதினஞ்சு  சிற்பிகள் . எல்லோரும்  மூணு வருசமா உழைச்சதின் பலன்.  தமிழகத்தின் திருவாரூரில் இருந்து தியாகராஜன் என்னும் தலைமைச் சிற்பியும் குழுவினருமா  வந்திருந்து  இவனை உருவாக்கி நிக்கவச்சுட்டாங்க.  இவர் ஏற்கெனவே மலேசியாவில் பல கோவில்களின் கட்டுமானத்தில் பணி செய்தவரே. போன பதிவில் பார்த்த அந்த அம்பதடி ஆஞ்சநேயரும்கூட இவர் கைவண்ணமே!  'பெரிய'முருகனுக்கு  1550 கன டன்  காங்க்ரீட் . தாய்லாந்துலே இருந்து  300 லிட்டர் தங்கக் கலவை இப்படி எல்லாம்  அதிக அளவில் பயன்படுத்தி இருக்காங்க.  மொத்தம் ரெண்டரை மில்லியன் ரிங்கிட் செலவு.

சிலையின் திறப்பு விழாவுக்கு, ஏற்கெனவே  தங்கமாலையுடன் ஜொலிக்கும் முருகனுக்கு  பொன்நிற மஞ்சள் சாமந்திப்பூ மாலை சூட்டுனாங்க பாருங்க, அதுவே பதினைஞ்சாயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள  ஒரு டன் எடையுள்ள  பூமாலை. ஆயிரம் கிலோவைத் தூக்கிக் கழுத்தில் போட மனிதக்கைகளால் முடியுமோ?  இயந்திரக்கைகளுக்கு அந்தபாக்கியம் கிடைச்சுருக்கு.  அந்த க்ரேன் என்ன புண்ணியம் பண்ணியதோ!  2006 வது வருச தைப்பூசம் , என்றும் மனதில் நின்னுபோச்சு  நம்ம மலேசிய மக்களுக்குன்னே சொல்லலாம்.

மலையேறலாம் என்று இந்தப்பக்கம் வந்து நின்னதும் மலைத்தேன்!  272 படிகள்.  என்னால் முடியுமான்னு  எனக்கே கவலை. நல்லவேளையா 16 படிகளுடன் பகுதிபகுதியா இருக்கு  கேசவா, நாராயணா, கோவிந்தா, மாதவா, மதுசூதனா, த்ரிவிக்ரமா,  வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா,  பத்மாநாபா,தாமோதரா, ஹரி, ராமா, க்ருஷ்ணா, கோபாலா, வாசுதேவான்னு  ஒவ்வொரு படிக்கும் சொல்லி மெள்ள ஏறினதும் ஒரு செக்மெண்ட்  முடிஞ்சுரும். ஒருநிமிச  ரெஸ்ட்.  அடுத்த  செட் படிக்கட்டில் கால் வைக்க இடையில்  பத்தடி சமதரை. திரும்பி நின்னு கண்ணில் பட்டதையெல்லாம்  க்ளிக் க்ளிக்.

மறுபடி கேசவா, நாராயணான்னு  ஆரம்பிச்சு இன்னொரு 16 படி. ஒரு மினிட் ரெஸ்ட். க்ளிக் க்ளிக். இப்படியே மெள்ள மெள்ள போய்க்கிட்டே இருக்கேன்.  நம்ம சனம் மூணு வரிசைப்படிகளிலும்  ஏறுவதும் இறங்குவதுமா இருக்காங்க. அவர்கள் கையில் இருக்கும் ப்ளாஸ்டிக் பைகளைக் குறி வச்சு  மூணு வரிசைகளிலும்  தாண்டிக்குதிக்கும்  குரங்கன்ஸ் இப்படி ஒரே கோலாகலம்.


நானும்  ஒருவழியா 17 முறை 16 நாமம் ஜெபிச்சு மேலே போய்  குகைக்குள் காலடி வச்சேன்.  ஒரு 25 நிமிசத்துலே  ஏறிட்டேனேன்ற (தற்)பெருமையுடன்  கண்ணை ஏறிட்டால், மயிலுடன் நிற்கும் முருகன் ,'என்னம்மா முட்டிவலி எப்படி இருக்குன்னு  சிரிச்சுக்கிட்டே வரவேற்கிறான்.

அவன் நிற்கும்   பாறைப்பகுதியின்  பக்கவாட்டுப் பொந்துக்குள்ளே ரெண்டுமூணு பேர்  உத்துப்பார்த்துக்கிட்டு இருக்காங்க. 'க்யா ஹே'ன்னேன். 'அந்தர் த்தோ ஸாஃப் ஹே'ன்னார்  டர்பன் தலைக்காரர்.  கஹாங்? குச் பி நை திக்தா...

என் கண்பார்வை இருக்கும் அழகுக்கு பாம்பு கண்ணுலே பட்டுட்டாலும்...... எதுக்கும் இருக்கட்டுமுன்னு க்ளிக்கி வச்சேன். சட்டை கிடக்கு!  என்ன தைரியம் பாருங்களேன் அந்தப் பாம்புக்கு! மயில் நிற்கும் பாறைக்கு அடியிலேயே  வாழ்ந்துக்கிட்டு இருக்கு! முருகன் இருக்கான்,பார்த்துப்பான்  என்ற தைரியமோ!!!!

நினைவுப்பொருட்கள் கடைகள் நிறைஞ்ச பகுதியைக் கடந்து  ஒரு பத்துப்படிகள் போல கீழே இறங்கினோம்.  வெளிச்சத்தில் இருந்து வந்துருக்கோம். உள் இருட்டு கண்ணுக்குப் பழக ரெண்டு நிமிசம் ஆச்சு. நல்ல பெரிய இடமாத்தான் இருக்கு. குகையைச் சுத்திக் கண்ணை ஓட்டுனால்  உள்சுவர்களுக்கு ஒட்டுனாப்போல  இடும்பன் சந்நிதி. இன்னும் சில படைவீடுகளின்  காட்சிகள்.  கொஞ்சதூரத்தில் மூலஸ்தானம் என்று போட்ட அம்புக்குறி. மஞ்சளா மின்னும்  விளக்கின்  பளீர்.


சின்னதா கருவறையும் முன்மண்டபமுமா கச்சிதம்.

அர்ச்சனை சீட்டு வாங்கப்போனால்..... மூணு வெள்ளி, சில்லறையாக் கொடுங்கன்றார் கவுண்ட்டர்காரர். கோவில்களில் சில்லறை மாத்துமிடம் கோபாலுக்கு நல்லாவேத் தெரியும். நேரா குருக்கள் கிட்டேபோய் அம்பதுக்கு ஒத்தை வெள்ளியா கைநிறையக் கத்தையா வாங்கிக்கிட்டு வந்தார்.

சீட்டு வாங்கிப்போய் குடுத்துட்டு அர்ச்சனையை கேட்டும், பார்த்தும் தரிசனம் செஞ்சுக்கிட்டோம். கற்பூர ஆரத்தி காமிச்சு விபூதி ப்ரஸாதம் கொடுத்தார்  குருக்கள். குட்டியூண்டு குகைக்குள் நிற்கும் வேலாயுதர் ஸ்வாமி அருள் பொங்கப் பார்க்கிறார். மன நிறைவுடன் நின்றேன்.

 நாம் ஒன்னும் (வழக்கம்போல்) வாங்கிப் போகலைன்னாலும் ஒரு வாழைப்பழம், தேங்காய் மூடி ஒன்னு, வெத்தலை பாக்கு கிடைச்சது.  வாழைப்பழத்தை மட்டும் கையில் எடுத்துக்கிட்டு மற்றவைகளை கோபாலின் கைப்பையில் போட்டேன். நல்ல ராசியான பை. லலிதா ஜுவல்லரியில்  கோபால் எனக்கு வைர ஒட்டியாணம் (!!!) வாங்கியபோது  இலவசமாக் கிடைச்சது:-)))(இது என்ன ஒட்டியாணக் கதைன்னு  தெரிஞ்சுக்க விருப்பமுன்னா 'என்னங்க வாங்கிறலாமா? 'போய் பாருங்க)



கையில் இருந்த பழத்தைப் பார்த்ததும்  கிட்டே வந்த செல்லத்துக்குக் கொடுத்தேன்.  அதில் அவன் பெயர் எழுதி இருக்கு:-)
இன்னொரு  நாலு வரிசைப்படிகள் மேலே போகுதேன்னு பார்த்தால்  அங்கே  வள்ளி தெய்வானையோடு முருகன் இருக்கானாம். முப்பத்தியஞ்சு படிகள். ஏறிப்போனால் பளீர்ன்னு இருக்கு  குகை. அண்ணாந்து பார்த்தால் ஓப்பன் சிஸெமீன்னு  பெரிய துவாரத்தில் ஆகாயம் தெரியுது.


குகையில் இயற்கையாக அமைஞ்ச  மேல் திறப்பு.  இதுவும் பெரிய இடமே! இங்கும் இடதுபக்கமா முன்மண்டபதோடு ஒரு கருவறை. சந்நிதியில்  வள்ளி தேவானை சமேதரா  சிரிச்சமுகத்தோடு நிக்கறான். மனைவிகளை விட்டுட்டு தனக்கு மட்டும் சந்தனக் காப்பு. நல்லா இருக்குடா நியாயம்?







சமீப காலங்களில் ஆண்களுக்கு(ம்) சிகப்பழகு க்ரீம்கள் மார்க்கெட்டில் அதிக அளவு பெருத்துக் கிடக்குன்னு இவனுக்கும் புரிஞ்சு போயிருக்கு:-)
இங்கும்  தரிசனம் சூப்பரா அமைஞ்சது.  கோபால் எழுந்து போனவர்,  கைநிறையக் கற்பூரக்கட்டிகளுடன் வந்து ' இந்தாம்மா, கொளுத்து'ன்றார்.  எதுக்கு இவ்ளோன்னால் அப்படித்தான் தர்றாங்கன்றார். ஏற்கெனவே எரியும்  கற்பூரக்கூட்டத்தில் இதையும் சேர்த்தேன். அப்புறம் நெய் விளக்கு ஒன்னை ஏத்தி,ஏந்திக்கிட்டு வர்றார்.  நாலுபேரைப் பார்த்துப் படிக்கணும்தான், அதுக்காக.....



 மண்டபத்துலே கொஞ்சநேரம் உக்கார்ந்து  தலைமேல் தெரியும் ஆகாயம் பார்த்துக்கிட்டு இருந்தேன். பெருமழை பெய்தால் தண்ணீர் உள்ளே தேங்காதோ?

பள்ளிக்கூட லீவுன்னு  குடும்பத்துடன் ஈப்போவிலிருந்து,   கே எல் வந்த தமிழ்ச்செல்வன் நண்பனானார்:-) தமிழ்பேசத் தெரியுமாம்.  பள்ளிக்கூடத்துலே தமிழ் சொல்லித்தர்றாங்களாம்! அப்படிப்போடு என் ராஜா!


 சரி,  வாங்க ....  கொஞ்ச நேரம் இப்படி சந்நிதி முன்மண்டபத்துலே உக்கார்ந்து  கால்களுக்கு ஓய்வு கொடுத்துக்கிட்டே  குகைக் கதையைச் சொல்றேன். கவனமாக் கேட்டுக்குங்க. பரீட்சைக்கு வரும் பகுதி இது:-)))

வெறும் நானூறு மில்லியன் ஆண்டுகள் வயசுதான் இந்த பத்துமலையில் இருக்கும் சுண்ணாம்புக்கல் குகைகளுக்கு.  ஆதியில் பழங்குடி மக்கள் பயன்படுத்திக்கிட்டு இருந்துருக்காங்க. அவுங்க காலத்துக்கு முன்னேயே வௌவால்கள்  குகைமுழுக்கச் சொந்தம் கொண்டாடிக்கிட்டு இருந்துருக்குங்க.(இப்பவும்தான், ஆனால் எண்ணிக்கை குறைஞ்சு போயிருக்கு)

மலையைச்சுத்தி ஏராளமான ரப்பர் தோட்டங்கள். மலையை ஒட்டியே ஓடும் ஆறு ஒன்னு இருக்கு. Batu river.  சில பல ரப்பர் தோட்டங்களுக்கு  பத்து எஸ்டேட், பத்து வில்லேஜ் எஸ்டேட் ன்னு ஆற்றின் பெயரையே அடையாளமா வச்சுருந்தாங்க. அதுவே பக்கத்தில் இருந்த மலைக்கும் பெயராச்சு. Batu என்ற பெயரை தமிழில் எழுதும்போது ஒரு  சங்கடம். பது, படு என்றால் சரியான உச்சரிப்பு வர்றதில்லை. வேற வழி இல்லாம நானும் பத்து என்றே சொல்லிக்கிட்டுப் போகப்போறேன்:(

ரப்பர் எஸ்டேட் ன்னு சொன்னதும் அங்கே வேலை செய்ய இந்தியாவில் இருந்து  இங்கே கொண்டுவரப்பட்ட தமிழர்களின் நினைவு வராமல் இருக்காது இல்லையோ?

ஈயச்சுரங்கம் காரணம் ஏராளமான சீனர்களும்  (1860)வந்து சேர்ந்துருந்தாங்க. சாப்பாட்டுக்கான காய்கறித் தோட்டம் போட்டுக்கறதிலே அவுங்க கில்லாடிங்க. எங்க கிறைஸ்ட்சர்ச்சில் கூட சீனர்கள் வந்த பிறகுதான்  நமக்குப் பரிச்சயமான வெள்ளைப்பூசணி, பாவக்காய்,சுரைக்காய், முள்ளங்கி, பீர்க்கங்காய், சில கீரைவகைகள் எல்லாம் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு.  ஹாட் ஹௌஸ் வச்சு விளைவிக்கறாங்க!

தோட்டத்துக்கு உரம் போட வௌவால் எச்சங்களைச் சேகரிக்க இந்த சுண்ணாம்புக் குகைகளுக்குள்ளே வந்துட்டு போயிருக்காங்க. ஆனால் இடத்தைப் பற்றி 'மூச்' விடலை. குன்றின் மேலே ஏறிப்போக வழி? மரத்தின்  வேர்கள், செடி கொடிகளைப் பிடிச்சுக்கிட்டு  மெள்ளமெள்ள ஏறிப்போகணும்.

 ரப்பர் தோட்ட வெள்ளைக்கார முதலாளிகளில்  இயற்கை நேசிகளா  இருந்த சிலர்  அக்கம்பக்கம்    குன்றுகள் காடுகளில்  எல்லாம் சுத்திப் பார்த்தபோது வெள்ளைக்காரர் வில்லியம் ஹோர்னடே (1878)  இந்த  குகை சமாச்சாரத்தை வெளியே சொல்லி இருக்கார். ரப்பர் தோட்ட தொழிலாளிகள்   தங்கள் ஓய்வு நேரத்தில்  வௌவால் பிடிக்க வந்து போய்க்கிட்டு இருந்தாங்க. அப்படியே அடிவாரத்துலே இருக்கும் குட்டையிலும் மீன் பிடிச்சுக்கிட்டுப் போறதுதான். இந்தக் குட்டைதான் இப்ப பெரிய தடாகமா இருக்கு. படம் போன இடுகையிலிருக்கு. பார்வதி பரமசிவன் பால்கனியில் இருந்து பார்க்கிறாங்களே அதே தடாகம்தான்.

கோலாலம்பூருக்கும்  இந்த குன்றுக்கும் இடைவெளி அதிகம் ஒன்னுமில்லை. வெறும் எட்டு மைல்தானாம்.  காயாரோகணம் என்றவர் கனவில் மாரியம்மா வந்து, மகனுக்கு ஒரு கோவில் இந்த குகையில் கட்டுன்னு சொல்லி இருக்காங்க.  மலையைத் தேடிக்கிட்டு வந்து பார்த்திருக்கார்.  கீழே இருந்து பார்க்கும்போது குகையின்  வாசல் ஒரு வேல் போல இருந்துருக்கு.

 அப்போ  இருந்த  கேப்டன் யாப்   ஆ   லோய் (Kapitan Yap Ah Loy, founder of modern Kuala Lumpur. செங்கற்சூளைக்கு  ஐடியா கொடுத்து அதுக்குன்னு  இடம் பார்த்து ஒதுக்கியவர் இவரே)) என்றவருக்கு  உதவியாளாரா இருந்தவர்தான் இந்தக் காயாரோகணம். நல்ல செல்வாக்கோடு  இருந்துருக்கார். காடுகளை அழிச்சு  தோட்டம் வைக்க ஏராளமான ஆட்கள் தேவைப்பட்டபோது, தமிழ்நாட்டுக்கு வந்து உழைப்பாளிகளை, வேலைவாய்ப்பு இருக்குன்னு சொல்லி மலேயாவுக்குக் கூட்டிப்போனவர் இவர்தான். நம்ம கோலாலம்பூர் மாரியாத்தா கோவில் கட்டிய தம்புசாமி இந்த காயாரோகணத்தின் மகன்தான். மகாமாரியம்மன் கோவிலை செங்கல் கட்டிடமாக் கட்ட அடிக்கல் நாட்டுனது  காயாரோகணம்தான். கோவில் வளர்ந்ததைப்பார்க்கக் கொடுப்பினை இல்லாமல் போச்சு.

அப்பாவின் கனவில் மாரியம்மா வந்து சொன்னதை அடிக்கடி நினைச்சுக்கிட்டு இருந்த தம்புசாமி, தகப்பன் மறைஞ்ச ரெண்டாவது வருசம்  1888 முதல்முறையா   சுண்ணாம்புக்கல் குகைக்கு  ஏறிப்போய்ப் பார்த்தார். கூடவே போனது  கந்தப்பத்தேவர் என்ற குடும்ப நண்பர்.  கோவில் ஒன்னு எழுப்பவேண்டியதுதான் என்ற எண்ணத்தோடு    வேல் ஒன்றை நட்டு வழிபாடு ஆரம்பிச்சு இருக்காங்க. முருகன் வந்துட்டான் என்ற சேதி தெரிஞ்ச அக்கம்பக்கத்துத் தோட்டத்தொழிலாளிகள் வர ஆரம்பிச்சது அப்போதான்.

மூணாம் வருசம் 1891 இல் முதல்முறையா தைப்பூசம் கொண்டாட்டம். அக்கம்பக்கத்து மக்கள் வந்து கலந்துக்கிட்டாங்க. குகைக்கு பது கேவ்ஸ்  என்ற பெயரும் ஆச்சு.  குகையில் ஹிந்து சாமி வழிபாடு நடக்குதுன்னதும், கோலாலம்பூர் நகர(!) கலெக்டர் ஜியார்ஜ் துரை, அந்த வேலைப் பிடுங்கிப்போடச் சொல்லி உத்தரவு போட்டார்.

சாமி மேலே கை வைக்க விடுவமான்னு  தமிழாட்கள் கூட்டம் குமிஞ்சது. கலெக்ட்டருக்கு எதிரா  கேஸ் போட்டுட்டாங்க. அப்போ நம்ம தம்புசாமி, புகழ்வாய்ந்த வெள்ளைக்கார  வக்கீல் டேவிட்ஸனுக்கு  உதவியாளராவும் மொழிபெயர்ப்பாளராவும்  இருந்தார். வழக்கு நீதிமன்றத்தில் நடந்துச்சு. வெற்றி, கடைசியில் முருகனுக்கே!

முருகன் ஒரு இடுகையில் அடங்கமாட்டேன்றான். பதிவின் நீளம் கருதி பாக்கியை அடுத்த இடுகையில் பார்க்கலாம்.


தொடரும்......:-)