Monday, August 19, 2013

ஆத்தா........ மாரியாத்தா....மலேசிய மாரியாத்தா.... (மலேசியப் பயணம் 7 )

'உள்ளே போய் நிறுத்த எங்களுக்கு  அனுமதி இல்லை. அப்படியே வெளியே நிறுத்தினால் நீங்க இறங்கிப்போயிக்குவீங்களா'ன்னார்  டிரைவர்.  ரெட் டெக்ஸியில் போய்க்கிட்டு இருக்கோம், இப்போ.  அப்படி என்ன  மேன்மை பொங்கி வழியும் இடமுன்னு ......     பெருமைக்கு உசரம் கூடித்தான் போச்சு போல!

பெட்ரோனாஸ் ரெட்டைக் கோபுரத்தைப் பார்த்துக்கலாமுன்னு  வந்துருக்கோம். பிரமாண்டமான வளாகம். நேரே போய் கீழ்த்தளத்தில்  இருக்கும்  டிக்கெட் கவுண்டருக்குப் போறோம்.  அட்வான்ஸ்புக் பண்ணிக்கணுமாம்!  இது என்னடா இப்படி? ஆனானப்பட்ட அமெரிக்க ரெட்டைக் கோபுரத்துக்கே  நேராப் போனமா, டிக்கட்டை வாங்கினமா,  லிஃப்ட் தூக்கிப்போய் மாடியில் விட்டுச்சான்னு  பார்த்தமே!  ப்ச்.....இப்ப அதுவே இல்லைன்னு ஆகிருச்சு போங்க:(


வந்த கையோடு கடமையை முடிச்சு விடலை பாருங்களேன்! வெவ்வேற  டைமிங்ஸ்  இருக்கு. எந்த நேரம் வேணுமுன்னு கேக்கறாங்க. இன்னிக்கு  இடம் இல்லை.  நாளைக்கு  நமக்கு முடியாது. அப்ப ஆறாம்தேதி காலை 10 மணி (ஷோ) புக் பண்ணிக்கலாம்.  நாம் எந்த ஊருன்னு கேக்காமலேயே  இண்டியான்னு எழுதிக்கிட்டார்,  பதிவு  செய்கிறவர்.  அடுத்த கேள்வி  வயசு எத்தனை?  நம்ம வயசு கேட்டு என்னாகப்போகுதுன்ற குறுகுறுப்புடன்  மெள்ள   சிக்ஸ்டி ப்ளஸ்ன்னேன்.  அப்ப உங்களுக்கு அம்பது பெர்ஸன்ட் டிஸ்கவுண்ட் என்றார்.  அடிச்சக்கை.  அப்ப எம்பதுன்னா  எழுபத்தியஞ்சா:-))))))



ச்சும்மா   பேஸ்மெண்டைச் சுத்திப் பார்த்தோம்.  நல்ல ஷாப்பிங் செண்டர் போலக்கிடக்கு.  மத்ததை நாளை கழிஞ்சு மற்ற நாள் பார்த்தால் ஆச்சு. இப்போ இதுக்கு ஒதுக்குன நேரத்தில் வேறெங்கே..........  இங்கே ஒரு மாரியம்மன் கோவில் இருக்காமே...... மழைவேற நசநசன்னு  ஆரம்பிச்சிருக்கு.

கோவில்வாசலில் போய் இறங்குனோம். ஒரு ரெட் டெக்ஸிதான். மீட்டர் எல்லாம்  போடலை. முப்பதுன்னு பேரம் பேசிக்கிட்டார். வாசலிலேயே நம்ம ஆன்மீகச்செல்வர் ஜிரா நினைவுக்கு வந்தார். 'குராங்கன் லாஜூ' :-)))  (அவர் தன் முதல் மலேசியப்பயணத்தில் ஜலான் என்பதை லேண்ட் மார்க்கா வச்சதுபோல  நானும் முந்தி குராங்கன் லாஜுவை வச்சுருந்தேன்!!!   ரெண்டுமே வேலைக்காகாது கேட்டோ!  முன்னது தெரு, பின்னது ஸ்லோ டௌன்)


சட்னு பார்த்தால் கோவில் இருக்குமிடம் தெரியாமல் கட்டிடங்களுக் கிடையில்  ஒளிஞ்சு இருக்கு வாசல்.  கொஞ்சம் வித்தியாசமான பெரிய  தூண்கள். சற்றே தலையை உசத்திக் கண்களை அனுப்பினால்....  ஆஹா....அஞ்சு நிலைக்கோபுரம்!  228 பொம்மைகளுடன்,  75 அடி உசரத்தில் கம்பீரமா ஜொலிக்குது. 1972 இல் தமிழ்நாட்டுலே இருந்து வந்து  இங்கே கோபுரத்தைக் கட்டிக்கொடுத்துட்டுப் போனவர் முனியப்ப ஸ்தபதி அவர்கள். அடுத்தவருசமே மகா கும்பாபிஷேகமும் ஆச்சு.

ரெண்டரையாள் உசரக் கோபுரவாசல் கதவு!  பளிச்ன்னு  ரெண்டு பக்கமும்  ஒரு ஷூ படம்.  காலணியோடு உள்ளே வராதே!  அட ராமா......   முதலில் கண்ணில் படுவது செருப்பா:(   அப்படியா சனம் செருப்புக்காலோடு  போகுது????



உள்ளே  கண்ணெதிரே கருவறை. தங்கக்கொடி மரம்.  ஜொலிக்கிறாள் மாரி! அமர்ந்த திருக்கோலம். முன்மண்டபம் ரொம்பப் பெரூசு.   நம்ம கவலை நமக்குன்னு  கோவில் அலுவலகம் தேடி ஓடினேன்.  'எஸ் ஃபொட்டோக்ராஃபி'  வயிற்றில்  பாலும் தேனும் பஞ்சாமிர்தமுமாய் வார்த்தார். நல்லா இருக்கணும்!   இனி மகளே உன் சமர்த்து என்று சிரிக்கிறாள் மாரி. மாரியம்மா....  மாரியம்மா, திரிசூலியம்மா..... சூலியம்மா....

பளிச்சுன்னு  சுத்தமாக இருக்கு  கோவில்.  கருவறையும் முன் மண்டபமும் நடுவிலும், சுற்றி வர  பெரிய பிரகாரமும், ஓரங்களில்பெரிய வராந்தா போன்ற மண்டபங்களுமாய் அட்டகாசமா இருக்கு.  வராந்தா மண்டபச் சுற்றுச்சுவர்களில் நேர்த்தியான  ஓவியங்களும் சிற்பங்களுமாய்  சந்நிதிகள்.

கருவறை வெளிப்புற சுவர்களில் அம்பாளின் திவ்ய சொரூபங்கள் கண்ணாடித் தடுப்பின் பின்னே மாடங்களில்.

கோலாலம்பூரின் முதல் ஹிந்துக் கோவில் என்ற பெருமையும் பணக்காரக்கோவில் என்ற பெருமையும் ஒன்னாச்சேர்ந்து இருக்கு  மாரியம்மனுக்கு!  மொத்தமாப் பார்த்தால் மலேசியாவில் 311 ஹிந்துக்கோவில்கள்  இருக்குன்னு அரசு பதிவு செஞ்சுருக்கு. அதில் 21 கோவில்கள்  நம்ம கோலாலம்பூரில் இருக்கு.


1873 வருசம் தம்புசாமி என்றவர், தன்னுடைய குடும்பக்கோவிலா இதைக் கட்டி அம்மனை ஆராதிச்சு வந்துருக்கார்.  கே எல் ரயில்வே ஸ்டேஷனுக்குப்பக்கத்தில்  கொஞ்சநாள் இருந்த கோவிலை, இப்போ இருக்கும் இடத்துக்கு மாத்தினது 1885 ஆம் ஆண்டு. அப்போதையக் காலக்கட்டத்தில் இருந்தவைகளைப்போலவே இங்கேயும்  மரம் வச்சுச் சுவர் எழுப்பி மேலே பனை/தென்னை ஓலைக்கீற்றால் வேயப்பட்ட கூரையுடன் கோவில்.  அக்கம்பக்கத்து மக்களும் வந்து கும்பிட்டுக்கிட்டுப் போயிருக்கணும். ரெண்டு வருசம் கழிச்சு ,செங்கல் தயாரிப்பு கைவந்த கலையா மாறிட்டதால்  செங்கல் கட்டிடமா மாத்திப்பிட்டாங்க.சீனர்களும் தொட்டடுத்துள்ள  மற்ற இடங்களை வாங்கி சைனா டவுனா இந்த இடம் மாறிக்கிட்டு இருந்துருக்கு. மாரி சட்னு இடம்பிடிச்சு நகராம உக்கார்ந்துட்டாள்.




 சிலபல ஆண்டுகளில் ஊர் மக்கள் எல்லோருக்கும் பொதுவா இருக்கட்டுமேன்னு  கோவிலையே தூக்கிக் கொடுத்துட்டாங்க  பெரிய மனசுள்ள தம்புசாமியும் குடும்பத்தினரும். ஒரு ட்ரஸ்ட் பொறுப்பை ஏத்துக்கிச்சு.  அதுக்குப்பிறகு வளர்ச்சி அமோகம். புள்ளையாரும் முருகனுமா புள்ளைங்க ரெண்டு பேரும் அம்மா கூடவே குடியேறிட்டாங்க.

தேர் திருவிழாகூட நடக்க ஆரம்பிச்சது. அந்தக் காலத்துலேயே மரத்தேர் ஒன்றை, அம்பதாயிரம் மலேசிய வெள்ளி செலவில் தமிழ்நாட்டுலே செஞ்சு இங்கே கொண்டு வந்துருக்காங்க.  கோவிலின் செல்வவளம் பெருகப்பெருக மரத்தேர்  இப்போ அசல் வெள்ளித்தேரா மாறி இருக்கு.  முன்னூத்தியம்பது கிலோ அசல் வெள்ளியில் மூணரை லட்சம் மலேசிய ரிங்கிட் செலவில் 240 வெள்ளி மணிகளும், அச்சு அசலா ரெண்டுகுதிரைகளுமா ஜொலிக்குது.  மொத்தம் பனிரெண்டு தனித்தனி பாகங்களாச் செஞ்சு தமிழ்நாட்டிலே இருந்து இங்கே கொண்டு வந்து ஒன்னாச் சேர்த்துப் பொருத்தி இருக்காங்க. தேரின் உசரம்  ஆறரை மீட்டர்.

தைப்பூசத் திருவிழாவுக்கு  இங்கே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து முருகன்  வள்ளி தேவசேனா சகிதம் வெள்ளித்தேரில் புறப்பட்டு பத்து மலைக்கு விஸிட் போயிட்டு வர்றாராம். 25 கிலோமீட்டர் தூரம். அன்னிக்கு தேரோடும் பாதையில்  பொதுவான போக்குவரத்துகள் மாத்தி அமைச்சுக்கொடுத்து அரசு உதவுதாம்.

தேருக்கு வெளிச்சம் போடும் வழக்கமான விளக்குகளை சமீபகாலமா மாற்றிச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத LED  bulbs போட்டு க்ரீன் சிக்னல் வாங்கிட்டாங்க.




 குழந்தை ஸ்மிதா (இன்னும் ரெண்டு நாளில் முதல் பொறந்தநாள்!) வுக்காக , நேர்ந்துக்கிட்டு  பால்சாதமும், வெள்ளைக் கொண்டைக் கச்சான் சுண்டலும் செஞ்சு கொண்டுவந்து  அம்மனுக்கு படைச்சுட்டு  பக்தர்களுக்கும்  விளம்பினாங்க. நல்ல  டேஸ்ட்!

பிரகாரத்தின் மூலைகளில்  நாட்டார் தெய்வங்களுக்கான சந்நிதியில் பெரியாச்சி பேச்சி அம்மனும், மதுரை வீரனும், முனியாண்டி, வீரபத்திரர்  இருக்காங்க.

இன்னொரு சந்நிதியில் துர்க்கை அம்மன். தகதகக்கும் பெரிய கண்களோடும் எலுமிச்சை மாலையோடும் !

 ராவு காலத்தில் எலுமிச்சம்பழம்/காய்  மூடிகளில் விளக்கேற்றிக் கும்பிடறாங்க உள்ளூர் மக்கள். நாம் போன சமயம் கொஞ்சம் பிந்திப்போச்சு என்ற அவசரத்தில் எலுமிச்சங்காய்களை அங்கேயே உக்கார்ந்து வெட்டி விளக்கு தயாரிச்சுக்கிட்டு இருந்தாங்க உள்ளூர் சகோ ஒருத்தர். அன்றைக்குச் செவ்வாய் என்பதால் மூணு நாலரை ராகுகாலம்.  முகத்தில் பதைப்பைக் கண்டு விசாரிச்சதில்  பிந்தினபிறகு போட்டால் பலிக்காதோ என்ற சம்சயம்:(

'கவலையை விடுங்க.  அந்த சரியான நேரத்தில்  விளக்குப் போடணுமேன்னு நினைச்சீங்களா இல்லையா'ன்னேன். ஆமாவாம்.  ஐயோ...  பிந்திருமேன்னு நினைச்சேன்னாங்க.  அப்ப அதுக்குண்டான பலன் கிடைச்சுருச்சு.  அம்மனுக்குத் தெரியாதா..... என்ன காரணத்தால்  பிந்திப்போச்சுன்னு. அதெல்லாம் மன்னிச்சுட்டாள்னு அடிச்சுச் சொன்னதும் ஆமாவா ஆமாவான்னு முகத்தில் நிம்மதி வந்துச்சு. கைகள் மட்டும் பரபரன்னு எலுமிச்சைகளை வெட்டி உள்ளே இருக்கும் சதைப் பற்றுகளை கத்தியால் சுரண்டிப் போட்டுக்கிட்டு இருந்தவேகம் பார்த்திருக்கணும் நீங்க!  வீட்டுலேயே செஞ்சு கொண்டு வந்திருந்தால்  சாயங்காலம் எலுமிச்சை சாதம் மெனுவில் இருக்கும்!

கோவில்  சுத்தமாத்தான் இருக்குன்னாலும்..... தரையில் பதிச்ச பளிங்கு ஓட்டின்  நிறமோ என்னமோ 'அந்த பளிச் ' மிஸ்ஸிங்.  நம்ம கோவில்களுக்கு வெள்ளை நிறம் சரிப்படாதுன்னு மனசைத் தேற்றிக்கிட்டேனாக்கும்.

பெருமாளுக்கும் ஒரு தனிச்சந்நிதி உண்டு. தாயார்களுடனும் சிறிய திருவடியுடனும் சேவை சாதிக்கிறார்.  கோவில் முன்மண்டபத்தின் வலது பக்கமும்  தனிச்சந்நிதிகளில் உற்சவர்கள் இடம்பிடிச்சு இருக்காங்க.

அறங்காவலர்கள் வரிசைகளில்  மலேசிய அரசின் அங்கங்களான  தமிழமைச்சர்கள் பங்கு பெறுவதால்  எல்லாம் நல்லபடியாகவே நடக்குது.

வெளியே பூமாலைக்கடையில் எனக்குத் தலையில் சூட்டிக்க ரெண்டு முழம் மல்லிகை வாங்கிக் கொடுத்தார் கோபால். சென்னையில் பூக்கட்டி விற்பவர்களிடம் இந்தப் படத்தைக் காண்பிக்கவே கூடாது!


தொடரும்...........:-)






19 comments:

said...

மாரியம்மன் கோவில்கள் மட்டும் தானா அங்கு. அந்த இரட்டை கோபுரத்தை வைத்து ஒரு சினிமா எடுத்து இருந்தார்கள். Sean Connery நடித்த படம்.

உங்களுக்கு Sean Connery யார் என்று நன்றாக தெரிந்து இருக்கும்; இது இளைய தலை முறைகளுக்கு: தமிழ்நாட்டில் பாமரனையும் ஆங்கிலப் படம் பார்க்க வைத்ததற்கு இவர் படங்களும் ஒரு காரணாம்.

மறக்கமுடியுமா? இந்த வசனத்தை...
Bond! My name is James Bond..!

said...


வாங்க நம்பள்கி.

ஆயுசு நூறு உங்களுக்கு. எலுமிச்சம்பழம் படம் பதிவில் சேர்க்கும்போது என்னமோ உங்கள் நினைவு வந்துச்சு.

ஜேம்ஸ் பாண்டை மறக்க முடியுமா?
ஷான் போனபிறகு அந்த வகை படம்பார்க்கும் ஆசையே போயிருச்சு:(

என்னுடைய முதல் புத்தகத்துக்கு (2010) லோகோ பேஜ் ஜுக்கு எழுதுனது கீழே!

//கிருஷ்ணன்.கோபால கிருஷ்ணன் 009

கைநீட்டுனா ஏன் யாருமே கை குலுக்க மாட்டேங்கறீங்க?

அதெல்லாம் நகத்தை உள்ளே இழுத்துக்குவேன். கவலையே படாதீங்க. ஒருவேளைக் கடிச்சுருவேனோன்னு ப்யமா? அதுக்கும் வழி இல்லை. பல்லெல்லாம் கொட்டிப்போச்சு. உடம்பு பூராவும் சக்கரை இருக்காம். இப்போப் புரியுதா ஏன் இவ்வளவு இனிப்பாப் பேசறேன்னு?

உள்ளே வாங்களேன்..... உக்கார்ந்து பேசலாம்.//

said...

துளசி கோபால்:
நானும் வாறேன் ஆன்மீக சுற்றுலாவுக்கு உங்களுக்கு போட்டியாக! நானும் என் மனைவியும் சேர்ந்து சுத்திய தமிழ்நாட்டு கோவில் தலங்கள் எராளம். கால் படாத இடங்கள் கிடையாது!

நிறைய படங்கள். எல்லாவற்றிலேயும் என் மனைவி தான் central subject; அதான் யோசனை!

நான் 30 0r 32 வருடம் முன்பே Minolta SLR 1:1.4 lens உள்ள கேமரா மூலம் படம் எடுத்து உள்ளேன். எல்லா படங்களும் தமிழ்நாட்டில் எங்க வீட்டில் இருக்கு.

என் பெற்றோர்களிடம் பேசினேன்; எல்லாம் இருக்கு நீ முதல்ல வாடா என்றார்கள். அவைகளை விரைவில் வெளியிடுகிறேன்--என் மனைவி அனுமதி கொடுத்தால்.

said...

ரசித்தேன்.

said...

அருமையான தரிசனம்
படங்களுடன் பதிவு
நேரடியாகப் பார்ப்பதைப்போன்று இருந்தது
பகிர்வுக்கு மனமாஅர்ந்த நன்றி

said...

ஒரு ரெட் டெக்ஸிதான். மீட்டர் எல்லாம் போடலை.
>>
அங்கயுமா?!

said...

எவ்வளவு அழகான கோவில்...!!!

said...

எவ்வளவு பெரிய கோவில் பா. எவ்வளவு சுத்தம். இத்தனை சந்நிதிகள் இருந்தும் அத்தனையும் நல்லா வச்சிருக்காங்க. ஸ்மிதா பேபி படு க்யூட்.
நல்ல உழைப்பாளிகளால் தான் நாடு இவ்வளவு முன்னேறி இருக்கிறது.
அட ஜிகே பேசின வசனமில்லையோ அது!!!
எனக்கும் ஷான் க்குப் பிறகு எந்த ஜேம்ஸ்பாண்டும் ரசிக்கவில்லை.:)

said...

அம்மன் கோவில் இவ்ளோ சுத்தமா இப்போதான் பாக்கறேன் அதுவும்(இப்பதான் ஆடி மாசம் சென்னைல இருக்க அம்மன் கோவில்கள் ஒரேடியா கூட்டம் அண்ட் ரொம்ப ஓவர் சவுண்ட் (மைக்குதான் ) ) .

மல்லிகை முழம் ஆனாலும் ஒவர் தான் .படங்களும் விளக்கங்களும் அருமை .

said...

நம்பள்கி,

32 வருசமுன்னா இப்ப ஆளே அடையாளம் தெரியாது. உங்க மனைவியின் அனுமதி பெற்று விரைவில் போட்டிக்கு வந்து சேருங்கள்.
எதிர்பார்க்கின்றோம்.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ரசித்தமைக்கு நன்றி.

உங்கள் மலேசியப் பயணத்தில் இங்கெல்லாம் போயிருப்பீர்கள்தானே?

said...

வாங்க ரமணி.

ரசித்தமைக்கு நன்றீஸ்.

said...

வாங்க ராஜி.

தமிழன்னு பின்னே எப்படி நிரூபிப்பது, சொல்லுங்க:-)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

உண்மையான பக்தியுடன் செயல்பட்டால் கோவிலும் அழகாக அமைஞ்சுருது போல!

said...

வாங்க வல்லி.

நம்மூட்டு 009 சொன்னதை மறக்கவியலுமா?:-))))))))

தமிழ்நாட்டுக் கோவில்களுடன் ஒப்பிட்டால் நல்ல சுத்தமான பராமரிப்புதான் இங்கே!

ஷானுக்குப்பின் ரோஜர் மூர் ஜஸ்ட் பரவாயில்லை. அதுக்குப்பிறகுதான்..... வேணாமுன்னு ஆகிப்போச்சு.

நம்மிடம் ஷானின் முழு செட்டும் இருக்கு. தோணும்போது பார்ப்பேன்.

said...

வாங்க சசி கலா.

மக்கள் தொகைக்கேற்ப வேண்டுதல் எண்ணிக்கைகளும் அதிகமா இருப்பதாலும் இதுக்கு இதுன்னு சாமியிடம் பேரம் பேசுதல் அதிகமா ஆனதாலும் ஆடி மாசக்கூட்டம் அம்முவதைக் கேட்பானேன்?

நம்மூர் பூக்காரர்களுக்குச் சின்னதா ஒரு கோவிலே கட்டிடலாம்ப்பா:-)

said...

மாரியம்மனின் தரிசனம் முடிந்து, ஸ்மிதா பாப்பாவிற்கு வாழ்த்து சொல்லி, உங்களுடன் இரட்டை கோபுரம் பார்க்கத் தயார்!நானும் சிக்ஸ்டி ப்ளஸ்!

said...

மாலையழகு!
மாரியழகு!

முருகனழகு!

புறாக்கள் சுழ் குழந்தை ஸ்மிதா அழகோ அழகு!!

said...

"சென்னையில் பூக்கட்டி விற்பவர்களிடம் இந்தப் படத்தைக் காண்பிக்கவே கூடாது!" ஹா...ஹா.. நம்மநாட்டிலும் சாதாரணமாக இப்படித்தான் விற்பார்கள்.
நான் முற்கூட்டியே சென்று நெருக்கமாக கட்டித்தரும்படி கூறி வாங்கிக்கொள்வேன் விலை கூட. பரவாயில்லை மாலைஅழகாக இருக்குமன்றோ எப்போதாவதுதானே தலையில் வைக்கப்போகின்றோம் நிறைந்துவைப்போமே :))

கோயில் அழகாக இருக்கின்றது. குழந்தையும் புறாக்களும் மிக அழகு.