Friday, February 14, 2014

மீசைக்காரனும், ' மீசை வச்ச' சரஸ்வதியும்!


பொழுது விடியும்போதே.... இன்று, இன்றுன்னு  மனசு துள்ளியது  உண்மை!  முதலில் டிக்கெட் கிடைக்குமான்னு பார்க்கணுமே! வாசலுக்கு வந்ததும்  ஒரு ஆட்டோ  கிடைச்சது.    மீட்டர்  போட்டார். ஹைய்யோ   எந்தொரு ஆஸ்வாசம்!  சென்னை வாழ்வில் முதல்முறையா   நோ  (ஆட்டோ)பேரம்!!!

வீணையும் கையுமா உக்கார்ந்து  வாணி நம்மை  வரவேற்கும் வாணி மஹாலில்போய் இறங்கினோம்.  இசைவிழா ஸ்பெஷல் இங்கே ஞானாம்பிகா கேட்டரர்ஸ். வாசலில் வச்சுருந்த மெனு வாவா என்று கூப்பிட்டது.  அங்கே இங்கேன்னு சுத்தாம,  மதியச் சாப்பாட்டுக்கு நேரா இங்கே வந்திடலாமா?

வளாகத்தில்  இசைவிழா நிகழ்ச்சிகளின்  பேனர்.  டிசம்பர் 10 முதல் ஜனவரி  15 வரை கொண்டாட்டமோ  கொண்டாட்டம். என்னென்ன விட்டேன்னு பார்த்து மனசைத் தேற்றிக்கிட்டேன். கோபால்  கவுண்ட்டரில் இருந்து கூப்பிட்டு  "எந்த ரேஞ்ச் டிக்கெட் வாங்க?'ன்னு கேக்கறார். 250, 500 ன்னு ரெண்டே  வகைதான். கேட்கத்தானே?  250 போதும்.

ரொம்பவருசங்களுக்கு முன்னே சென்னை விஜயத்தில்   உறவினர் வீட்டில்  ப்ரேமி (டிவி சீரியல்)  கொஞ்ச நேரம் பார்த்தேன்.  வீட்டுக்கு யாராவது வந்தாலும் கூட ஓடும் டிவியை  எங்குமே நிறுத்துன்  வழக்கமே  இல்லை நம்ம மக்கள்ஸ் இடம்.  அதில் ஒருவர் வீணை வாசிக்கிறார். அந்த விரல்கள் ஓடும்  வேகத்தைப் பார்த்து ஒரு பிரமிப்பு;. அதுவரை  எனக்கு வீணைன்னா காயத்ரிதான்.

அப்புறம் ரொம்ப நாளா அப்பப்ப , அது அந்த வீணை யாரா இருக்குமுன்னு  விசாரிக்கத்தோணும். அப்பெல்லாம்  யூ ட்யூப் எல்லாம் கிடையாது கேட்டோ!  அஞ்சு வருசத்துக்கு முன்னால் சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சியில்  தீபிகாவின் இசையைக் கேட்டு மயங்கி ஒரு பதிவும் போட்டேன்.

குழந்தை நட்சத்திரமா கையளவு மனசில் வந்தாங்கன்னு பின்னூட்டத்தில் தெரிஞ்சதும்   யூ ட்யூபில் தேடிப்பிடித்து அந்தத் தொடர்  முழுசும்  தினம் கொஞ்சம் கொஞ்சமாப் பார்த்தேன். தங்கச்சுரங்கம் போல யூ ட்யூப் கிடைச்சதும் கொள்ளை மகிழ்ச்சி.


வீணைக்காகவே அந்த  ப்ரேமி சீரியல் தேடுனப்ப, யூ ட்யூபில் அகப்பட்டது. அதில் ராஜேஷ் வைத்யாவின் வாசிப்பு அருமை என்றாலும் நடிப்பைக் கண்டு  இவர் உண்மையில் ஒரு  excentric என்ற (தவறான ) எண்ணமும் கூடவே வந்துச்சு.  எல்லாம் கே பி யின் உபயம் வேறென்ன? நிழலை நிஜமென நினைக்க வைக்கும்  நடிப்பு!

அப்புறம் சூப்பர் சிங்கரில் ராஜேஷ் வீணை வாசிக்கும் போதெல்லாம்  இங்கே சீக்கிரம் வந்து பாருன்னு  கூப்பிட்டுக் காட்டுவார் நம்ம கோபால். சினிமாப்பாட்டைக் கூட என்னம்மா..... வாசிக்கிறார் இல்லே? ஹைய்யோ!! ஒரு வாட்டியாவது நேரில் கேக்கணும்.....

டிக்கெட் வாங்கி, இருக்கைகள் உறுதியானதும்  அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடிச்சு  பாண்டியனார் அங்காடி சரவணபவனுக்குப் போனோம். சென்னை வந்து ரெண்டு நாளாகுது. இதுவரை இங்கே வந்து ஒரு  காஃபி குடிக்கலைன்னா எப்படி?  இது ஃபாஸ்ட் ஃபுட்  செக்‌ஷன்.   என் இஷ்ட இருக்கை (மரத்தடி) கிடைச்சது.

புது மெனு போஸ்டர்களைச் சுவரில் ஒட்டிக்கிட்டு  இருந்தாங்க.  நல்ல விளம்பர உத்தி.  அப்பத்தான் வியாபாரம் கைமாறுன சமாச்சாரம் கசிந்து வெளியே வந்தது.  வாங்கியது ரொம்பப் பெரிய இடம்.  - - - - கோடிகளாம்.  மசாலாவிமானத்தில் இனியாவது  நல்ல சாப்பாடு கிடைக்கும் என்ற நப்பாசைதான் எனக்கு.



இதுவரை போகாத ஒரு துணிக்கடையில் நுழைஞ்சு  சில சல்வார் கமீஸ் துணிகளை வாங்கி கையோடு நம்ம டெய்லரிடம்  கொடுத்துட்டு  பகல் சாப்பாட்டை அதே க்ராண்ட் ஸ்நாக்ஸில் முடிச்சுக்கிட்டு அறைக்கு வந்தோம்.  இன்னிக்கு தச்சு மம்மு ஒரே புளிப்பு.  கொஞ்சம் பால் கொண்டு வரச் சொல்லி ஊத்திப் பிசைஞ்சாலும்  கொஞ்சம் தூக்கலான புளிப்பே:( கோபாலுக்கு  சப்பாத்தி குருமா.

மூணு மணி போல கிளம்பி மீசைக்காரனை தரிசிக்கப் போனோம்.  கோவில் இன்னும் திறக்கலை. ஆனால் கதவுக்கு முன் நல்லகூட்டம். ஒரு  ஹாஃப் க்ரோன் மாடும் இருந்தது. மூடுன கதவுகளை முதல்முறையாப் பார்த்தேன்! கோவில்திறக்கும் வரை மண்டபத்துச் சிற்பங்களை ரசித்துக்கலாம்.

கோவில் திறந்ததும் திமுதிமு என்று உள்ளே ஓடும் கூட்டம் கொஞ்சம் திகைப்பைத் தந்தது. வரவர பக்தியின் பெருக்கம் கூடித்தான் போயிருக்கு! மனுசனின் மற்ற தேவைகள்  பெருகினதுக்குச் சமமா  சாமித்தேவையும்  பெருகி இருக்கு. நல்லா இருக்கட்டும். ஓம் நமோ நாராயணாய!

தில்லக்கேணிக்குப் பலமுறை  தரிசனத்துக்கு வந்திருந்தாலும்  மூலவர்  சந்நிதிக்குப் போகும் (தர்ம தரிசன வரிசையில் போகும் வழி) போதே  ஸ்ரீ ராமரையும்,  ஸ்ரீ ரங்கநாதரையும் நமஸ்கரிச்சுட்டு, மூலவரான மீசைக்காரரைப் பார்த்து சேவிச்சுட்டு அவரருகில் நிற்கும் மற்ற குடும்பத்தினரையும்  ஏறிட்டு (அதுவும்  காவலாளி விரட்டாமல் அனுமதித்தால்!) நோக்கி, பட்டர்  கையால்  தீர்த்தம் சடாரி வாங்கின கையோடு சட்னு வெளியே வந்துடணும்.  நீளக் கம்பி வேலி கடந்து வரும்போது,  ஐயோ..பெருமாளை இன்னொருக்கில் பார்க்கலாமேன்னு  நின்ன இடத்திலிருந்தே திரும்பிப் பார்த்தாலும் காவலாளிக்குப் பொறுக்காது......  ம் ம் ன்னு  அலறிக்கொண்டே இருக்கணும் என்பது  அவருக்கிட்ட உத்திரவோ என்னவோ:(   பாவம்!

அப்புறம் பக்கவாட்டு வாசலில் வெளிவந்து வேதவல்லித் தாயாரை  நமஸ்கரிச்சுட்டு( இங்கே  ரெண்டு நிமிசம் நிக்க முடியும். ) அப்புறம் நேரா  யோக நரசிம்மர்தான்.  கோடியில் நம்ம ஆண்டாள். கஜேந்திரவரதரை எப்படியோ கோட்டை விட்டுருவேன். அந்த சந்நிதி  எங்கே இருக்குன்னு இதுவரை கவனிச்சதும் இல்லை.   இந்த முறையாவது அவரைத் தேடிப்பார்க்கணும் என்று மூளையில் முடிச்சுப்போட்டு வச்சுருக்கேன்.
பத்து ரூபாய் ஸ்பெஷல் தரிசனம் எல்லாம் போய் இப்ப   சீக்ர (ஹைஸ்பீடு) தரிசனமுன்னு  ஒன்னு  புதுசா வந்துருக்குன்னு  போனமுறை போனப்பவே கவனிச்சேன்,

 வேங்கட க்ருஷ்ணனின் குடும்பம் பற்றி இங்கே!

இப்பவே மணி நாலரை. இன்னும் ரெண்டுமணி நேரத்துக்குள்ளே  திரும்பிப்போய் வாணி மஹாலில் நெடுநாள் ஆசையை நிறைவேத்திக்கணும். அதனால் சீக்ர தான்னு அதிசீக்ரமா முடிவெடுத்தேன்.  மார்கழின்றதை எப்படி மனசு மறந்துச்சுன்னே தெரியலை.  முறுக்கு மீசைக்காரர்  தைலஎண்ணெய் தேய்ச்சுக்கிட்டுத் திரைக்குப்பின் இருக்கார். பூஜை எல்லாம் உற்சவருக்கே!  ஏமாந்த கண்களைப் பார்த்த பட்டர், ஜனவரி 6 ஆம் தேதி  திரையை விலக்கிக் காட்சியளிப்பார்ன்னு சொன்னார். அதுவும்  இங்லீஷில்:-)

பக்கவாட்டு வாசலில் வெளிவந்து தாயாரை நமஸ்கரிச்சோம்.  பிறகு பின்புறமிருக்கும் பெரிய மண்டபத்துக்குள்ளே போகணும். போனோம்.  ஆரம்பத்துலேயே அங்கே ஒரு நாலைஞ்சு படிகள் ஏறிப்போக வேண்டிய  சந்நிதி இருக்கும்.  நாங்கள் போனபோதெல்லாம் அது  பூட்டியே கிடக்கும். என்ன சந்நிதியோன்னு  யோசிச்சுக்கிட்டே கீழே இருந்தே ஒரு கும்பிடு போட்டுட்டு வலப்பக்கம் போய்  வலம் தொடர்வேன். என்ன சந்நிதின்னு ஒரு பெயர் எழுதி வைக்கக்கூடாதா?

இன்றைக்கு என்னவோ அதிசயமாக் கதவு திறந்து இருக்கவே,  என்ன சாமிதான் இருக்கார்னு பார்த்துக்கப் படியேறி நுழைஞ்சால்......  கஜேந்த்ர வரதர்!  அடடா.....நீர்  இங்கேயா இருக்கீர்?  இதுநாள்வரைத் தெரியாமப் போச்சே! நம்ம யானைக்கு தரிசனம்  கொடுத்தீரே.... நீர் நல்லா இரும். வலம் தொடர்ந்தால் தொட்டடுத்த  கல்தூண் ஒன்றில் (மட்டும்)  பிசுக் என்று  இருக்கும் நேயர்.  சனம் வெண்ணெயைத் தடவிக் கும்பிட்டுப் போகும். நாள்பட்டவெண்ணெய் காரணம் லேசான ஒரு  புளிப்பு நாத்தம்  எப்போதுமே  உண்டு:(

அடுத்து யோக நரசிம்மர். அவருக்கு  நேரெதிரா   கோவிலின் பின்புற வாசல். அங்கேயும் பெரிய முற்றத்தில்  நரசிம்மர் பார்வைக்கு  நேரெதிரில்  அஞ்சடி உயர  மேடையில் பெரிய திருவடி.   ரெண்டு பேரும் ஏறக்குறைய ஒரே  உயரம்.  கழுத்து  வலிக்காமல் ஒருவரை ஒருவர்  அனுதினமும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.  சிம்மத்தின்  கம்பீர அளவுக்கு முன் பெரிய திருவடியின் உருவம் மட்டும் கொஞ்சம் சின்னது. அவருக்குப்பின்  இன்னொரு கொடிமரம்!   கடந்தால்  பின்பக்கத்து கோபுரவாசல்.  வெளியே போய்  வலக்கைப்பக்கம் கண்ணை ஓட்டினால் நம்ம பாரதியார் வீடு!
கோவில் வாசலில் இருந்து பாரதி வாழ்ந்த வீடு.எதிர்ப்புறம் வலக்கோடி.

ஆண்டாளம்மாவை நமஸ்கரிச்சு, தூமணி மாடம் பாடி   நேரா மண்டபம்  கடந்தால் வலத்தை முடிச்சுருப்போம்.  பிரசாத ஸ்டால் அங்கே வா வான்னும். பெருமாளைப்பார்க்கலையேன்ற மனக்குறையோடு  கிளம்பி மயிலை வழியா அறைக்குப் போறோம்.  வழியில் நம்ம தோழியின் வீடு. அவுங்க ஊரில் இல்லை. இல்லேன்னா இதுவரை  இந்த மூணு நாளில்  நாலுமுறை வந்திருப்பேன். கேட்டைக் கடந்து  உள்ளே போனால் தோட்டக்காரர் இருந்தார்.  அவரிடம் சில விசாரிப்புகள். குழந்தைகள் போல இருக்கும் செடிகொடிகளை நல்லாப் பார்த்துக்குங்க. அம்மா சீக்கிரம் வந்துருவாங்கன்னு  சொன்னேன்.

 அறைக்குப் போகுமுன் நேத்து ஃப்ரேம் செய்யக்கொடுத்த படத்தை வாங்கிக்கணும்.  ரெடியா இருக்கு.  பெரியவர்,கொஞ்சம் தயங்கியபடியே  கணக்கு தப்பாப்போட்டுட்டேன். நீங்க செலக்ட் செஞ்ச ஃப்ரேம் விலை அதிகமுள்ளது. மேலும்நான் நினைச்சதை விட அதிக அளவு  பயன்படுத்தும்படியா ஆச்சுன்னுட்டுத் தலையைச் சொறிகிறார்.  அவர் நீட்டுன பில்லில்  நேத்து சொன்னதை விட 125% அதிகம்.

உண்மை பேசறார் என்று கண்களில் தெரிஞ்சது. படத்தை வாங்கிப்போய் அறையில் வச்சுட்டு வாணிமஹால் போனோம்.  வாசலில் நல்ல கூட்டம்.  கையோடு ஞானாம்பிகாவில் நுழைஞ்சு  ஆளுக்கொரு காஃபி. எனக்கு மட்டும்  ஒரு  காசி ஹல்வா.  காசிக்கு போறோமுல்லெ:-) ஆறரை மணிக்கு  ஆரம்பமாக வேண்டிய நிகழ்ச்சிக்கு ஆறே முக்கால் ஆகியும் ஹால் கதவு திறக்கலை. தரைத்தளத்தில் இருக்கும்  மகாசுவாமிகள் ஆடிட்டோரியத்தில் தான்  நிகழ்ச்சி.

இன்னும் ட்யூனிங்  முடிஞ்சுருக்காது.  அவர் ஒரு பெர்பெக்ஷனிஸ்ட் இல்லையோ அதான் நேரம் ஆகுதுன்னு மனசைச் சமாதானப்படுத்தினேன். அக்கம்பக்கம் விசாரிக்கும்  மக்கள்ஸ்க்கும் என் கண்டுபிடிப்பைச் சொன்னதும்  ஆமாமாம்னு ஒத்துக்கிட்டாங்க:-)

ஏழடிக்கப் பத்து நிமிசம்.ஹால் திறந்ததும் நாங்கள் உள்ளே போய் உட்கார்ந்தோம். ஆறுஅம்பத்தியஞ்சுக்கு திரை மேலெழுந்தது.  சரியா ஏழுமணிக்கு  'டொய்ங்.........  என்று  மீட்டும் ஒலி!

காருகுறிச்சி திரு மோகன் ராம் மிருதங்கம்
தென்காசி  திரு பரமசிவம் கஞ்சீரா
திரு  சந்த்ரஜித் தப்லா
திரு சுப்ரமணியம்  கடம்.

இவர்களுடன்  ஒரு சின்னப்பெண்ணும்  ( ஒரு 20 வயசு இருந்தால் அதிகம்)  மேடையில்.  பெயரை அறிவிச்சார் நம்ம ராஜேஷ். எனக்குச் சரியாக் காதில் விழலை. கவனம் எல்லாம்  அந்த வீணையின் மேலேதான். எனக்கு  வீணைமேல் ஒரு அடங்காத ஆசை. வாசிக்கத் தெரியலைன்னாலும் பரவாயில்லை வீட்டில் ஒரு வீணை இருந்தே ஆகணுமுன்னு  பேராசை.  ஜஸ்ட்  வீணை  இருந்தாலே வீட்டுக்கு ஒரு ஐஸ்வர்யம், அல்லே?  ஏழுவருசமா நம்மூட்டுலேயும் ஒரு வீணை இருக்கு கேட்டோ:-)

இப்பக் கொஞ்சநாளா ஒரு எலக்ட்ரானிக்  ஸ்ருதிப்பெட்டி வாங்கிக்கணும். அதுவும் தம்பூரா  டிஸைனில்  இப்ப வருதே அதைப்போல ஒன்னு  வேணும் என்று கோபாலிடம் சொன்னப்ப, எதுக்குன்னார். (குரலில் பயம் தெரிஞ்சது.  எங்கெ பாட ஆரம்பிச்சுருவனோன்னு......)

ச்சும்மாதான் என்றேன்.   வீட்டுக்குள் நுழைஞ்சதும்...........  மெல்லிசா  ஹூம்............ன்னு கேக்கணும்.

கடவுள் வாழ்த்தா  ஒரு பாட்டுப் பாடுனாங்க அந்த இளைஞி. ஹைய்யோ...  என்ன குரல்டாப்பா!!!  உச்சரிப்பும் த்வனியும் அபாரம்!  மானஸியின் பாட்டு(குரல்)  நினைவுக்கு வந்தது. ஸ்ரீரஞ்ஜனி ராகத்தில்  நடனமாட ஆரம்பிச்சது  நம் ராஜேஷின் விரல்கள்.   அடடா..... என்னொரு அசுர வேகம். என்னமாத்தான் இப்படி வாசிக்கறாரோ!!!!

சின்ன வயசுலே  திருமதி ஜெயலக்ஷ்மி அவர்களிடமும், சரஸ்வதி  வீணை என்று திருமதி ரமா நம்பிநாராயணன் அவர்களிடமும்  வீணை கத்துக்கிட்டதும்  மேற்படிப்புக்காக  அவருக்கு அமைஞ்ச குரு நம்ம வீணை சிட்டிபாபு த க்ரேட்! குரு எவ்வளவு புகழ் வாய்ந்தவரா இருந்தாலும்  குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனா இருப்பது  கற்றுக்கொள்ளப்போகிறவரின்  கவனமும் இடைவிடாத சாதகமும் இல்லையோ!

அடுத்து   தியாகைய்யரின் 'பண்டுரீத்தி கொலு'  கெமெராவை க்ளிக்கக்கூடத் தோணாமல்  நான் வா பொளந்து இருப்பதைப் பார்த்து கோபால்  அதை வாங்கி  அந்த வாசிப்பை வீடியோவாப் பதிவு செஞ்சார்.  இங்கே  போட்டுருக்கேன்.கட்டாயம் கேளுங்களேன். உங்களுக்கு(ம்) பிடிக்கும்!



அப்புறம்  துர்கையை போற்றி ஒரு பாடலின் வாசிப்பு. என்ன ராகம், என்ன தாளம் எத்தனை பீட் என்று  ஒவ்வொரு பாடலுக்கும் சொல்லிட்டுத்தான் வாசிக்கிறார். எனக்கு  ரொம்பப் பிடிச்ச சமாச்சாரம் இது!

 அதுக்கப்புறம்  வீணையில் ஆலாபனை தொடங்குச்சு. இது கட்டாயம் தமிழ்ப்பாட்டுதான்.சட்னு நினைவுக்கு வரலையேன்னு பரிதவிப்பு. 'தாயே யசோதா'ன்னு கோபால் கிசிகிசுத்தார்.  ஊஹூம்.....   இருங்கன்னு மண்டையை உடைச்சுக்கறேன்.  ஆ....வந்துருச்சு!

"வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் . மயில்குயிலாச்சுதடீ"

ஆலாபனை முடிஞ்சு பாட்டு ஆரம்பிச்சதும்   என் மண்டையில்  ஒரு போடு!   நாந்தான் குட்டிக்கிட்டேன்.  'சின்னஞ்சிறு கிளியே! '  அட ராமா.........  எத்தனை முறை அலுக்காமல் கேட்டுருக்கேன்.  ஹூம்.......கர்வபங்கம்.


மனசை இழுத்துப்பிடிச்சு  வீணையில் லயிக்கவிட்டேன்.  சொல்லவிட்டுட்டேனே.... கடவுள் வாழ்த்துப்பாடிய இளைஞி,  வீணை வாசிப்பு முழுசுக்கும் பக்கவாத்தியமா புல்லாங்குழல்  வாசிச்சு அமர்க்க்களப்படுத்திட்டார். நல்ல எதிர்காலம் அமையட்டுமுன்னு மனசார வாழ்த்தினேன், மனசுக்குள். (ஏன் அவர் பெயரை பேனரில் போடலை? )

ரெண்டு மணி நேரம் போனதே தெரியலை.  என்ன அற்புத வாசிப்பு!  அந்த சரஸ்வதியே  மீசை வச்சுக்கிட்டு வாசிச்சாளோ?

தன்னுடைய குருநாதருக்குத் தன் வணக்கத்தையும் நன்றியையும் சொன்ன கையோடு,  குருநாதர்  கம்போஸ் செஞ்ச குயில் பாட்டு ஒன்னு வாசிச்சார் பாருங்க....ஹைய்யோ!!!! வீணை பேசும் என்பார்கள். சரி. குயில் போலும் கூவுமோ!!!!

இடையிடையே நான் பயந்தமாதிரி சட்னு வாசிப்பை நிறுத்திட்டு  எழுந்து போகலை.  இந்த கே. பாலச் சந்தரை.....

கச்சசேரி முடிஞ்சதும்  மேடைக்கருகில் போனோம். ராஜேஷின்  கைகளைக் கண்ணில் ஒற்றிக்கணும் என்று கோபாலிடம் சொல்லிக்கிட்டே இருப்பேன்.  என்னை சின்னதா அறிமுகப்படுத்திக்கிட்டு  ராஜேஷோடு கை குலுக்கினேன்.  கண்ணிலும் ஒற்றிக்கொண்டேன்னு தனியாச் சொல்லணுமா?

வாசிச்சு வாசிச்சு  கைகள் அதுவும் முக்கியமா இடது கை காப்புக் காய்ச்சு இருக்கு! சட்னு ஸேண்ட் பேப்பரைத் தொட்ட மாதிரி.

அரங்கை விட்டு வெளிவந்தப்ப, 'சந்தோஷம்தானே?' ன்னு  கோபால் கேட்டார்.

தேங்க்ஸ்  என்றேன், நிறைஞ்ச மனசுடன்!

தொடரும்........:-)




24 comments:

said...

பாலசந்தரின் ப்ரேமியை மறக்க முடியுமா?. ராஜேஷ் வைத்யாவின் வீணையையும்தான்.

said...

உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டது. கோபால் சாருக்கு நன்றி கண்டிப்பாய் சொல்ல வேண்டும் தான்.

said...

ப்ரேமியை மறுபடியும் போட்டாலும் பார்க்கலாம்... அவ்வளவு ரசித்து பார்த்த தொடர்...

என்னா வேகம் அம்மா... இத்தனையும் ஞாபகம் வைத்துக் கொண்டு எழுதுவதென்பது - வாழ்த்துக்கள் அம்மா...

said...

சங்கீத மழையில் மழையில் நனைந்த திருப்தி தந்தது தங்கள் பகிர்வுகளும் , படங்களும் காணொளியும் ..

நன்றிகளும் பாராட்டுக்களும் , வாழ்த்துகளும் ...!

said...


இங்கே வாங்க...

http://jaghamani.blogspot.com/2014/02/blog-post_2.html

அதிசயப் பூனைகளும்
ஆடம்பர ஹோட்டல்களும்..!

said...

படிக்கும் போதே என் மனசும் நெறஞ்சுது .

எங்கள் சார்பாகவும் கோபால் அவர்களுக்கு தேங்க்ஸ் சொல்லிடுங்க . வீடியோ பதிந்தமைக்கு .

said...

ஒரேநாளில் என்னவெல்லாம் பண்ணியிருக்கிறீர்கள்! சூப்பர் வுமன் தான் நீங்கள்!

said...

ஆஹா இது நல் இசை. நீங்கள் மோதிரமே போட்டிருப்பீர்கள் துளசி. எத்தனை எளியவராக இருக்கிறார் வைத்யா. நானும் ப்ரேமியி, அவரைப் பார்த்துக் கொஞ்சம் அரை யோ என்று நினைத்தேன். அருமை அருமை. இசையும் பதிவும் இட்டுச் சென்ற கோபாலும்.தோழி இல்லாதவீட்டுக்குப் போனது உங்கள் பரிவைக் காண்பிக்கிறது.

said...

வணக்கம்

எங்களையும் இசைமழையில் நனைய விட்டீர்கள் பாடலும் படமும் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

said...

வாங்க சாந்தி.

ரொம்பச் சரி!

இப்பெல்லாம் நினைவு வச்சுக்கும்படி டிவி ஸீரியல்கள் வர்றதில்லை போல இருக்கே:(

said...

வாங்க கோமதி அரசு.

நன்றிகள் பல.

said...

வாங்க தி.த.

ரசனைக்கு நன்றீஸ்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

அனைத்துக்கும் நன்றீஸ்ப்பா.

said...

வாங்க சசி கலா.

நன்றி மழையில் நனைஞ்சு போயிருக்கார் கோபால்!!!

said...

வாங்க செல்லப்பா.

அதான் சக்கரம் காலில்/காரில் இருக்கே:-))))

said...

வாங்க வல்லி.

தோழி இல்லாதபோதுதான் அவுங்க அருமை ரொம்பப்புரிஞ்சது. கூடவே மனசிலொரு சின்ன வலி:(

மோதிரம்..... ஆமாம்.அட இது தோணலையேப்பா:(

said...

வாங்க ரூபன்.

வணக்கம்.

உங்கள் ரசிப்புக்கு என் நன்றி. மீண்டும் வருக.

said...

நீங்கள் ரசித்ததை நாங்களும் ரசிக்கும்படி காணொளியாகக் கொடுத்தமைக்கு நன்றி டீச்சர்....

எத்தனை அருமையாக வாசிக்கிறார்.....

உங்கள் மகிழ்ச்சி பதிவு முழுதும் தெரிகிறது!

said...

அவரின் திறமையை வியந்து நானும் மிகவும் ரசிப்பதுண்டு.

நன்றி.

said...

ஜருகண்டி ஜருகண்டிக்கு சொல்லும் காரணம் “கூட்டம்” என்பதே. அப்படி விரட்டலைன்னா எப்படி இவ்வளவு கூட்டத்தைச் சமாளிக்கிறது!

நியாயமாத்தான் படுது. அப்போ அமைதியாச் சொல்லலாமே!

அதுல பாருங்க.. நம்ம மக்களுக்கு எதையும் நல்லவிதமாச் சொன்னா ஏத்துக்கவே தெரியல. எரிஞ்சு விழுந்தாதான் எட்டு வெச்சு நகர்ராங்க!

வீணை இசையில் இருக்கும் நளினம் வேறு இசையில் வராது. வீணையின் முன்னாடி யாழ். யாழுக்கும் இந்த மயக்கும் தன்மை உண்டு. நீங்க மயங்குனதுல வியப்பே இல்லை.

இசையால் வசமாகா இதயம் எது?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டால் அது பலமடங்கு பெருகுவது உண்மைதானே!!!

said...

வாங்க மாதேவி.

அந்த ரெண்டு மணி நேரம் சொர்கம்தான்!

said...

வாங்க ஜிரா.

அமைதியாச் சொன்னா சனம் கேட்டுட்டாலும்.......

ஆடிக் கறக்கற மாட்டைப் பாடிக் கறக்க முடியுமா?

//இசையால் வசமாகா இதயம் எது?//

கோடி மடங்கு சரி!

said...

ப்ரேமியையும் மறக்க முடியாது. அதில் வரும் ராஜேஷ் வைத்தியாவின் பாத்திரத்தையும் மறக்க முடியாது. என்னமாய் வாசிக்கிறார், மனிதர்!
வீணையில் பண்டுரீத்தி கொலுவை நன்றாக ரசித்தேன்.