Monday, March 31, 2014

அனைத்தும் அன்பே! அனைவரையும் நேசி.

உடல்களைப்பில் இன்னிக்கு  வெளியே கிளம்பக் கொஞ்சம் தாமதமாச்சு. அப்படியும்  ஒன்பதேகாலுக்கு  புறப்பட்டோம்,  கோபாலபுரம் நோக்கி.  அங்கே ஒரு ஸ்ரீ வேணுகோபாலன் கோவில் இருக்குன்னு கேட்டது முதல்,   ஒருக்கா அங்கே போகணும் என்று ஒவ்வொரு பயணத்திலும்  நினைச்சுக்குவேன்.  இதுவரை நடக்கலை. இன்று விடக்கூடாது.

கோவிலைப் பூட்டி இருந்தாங்க. மார்கழி என்பதால் காலை  நாலரைக்கு  கோவில் திறந்து  நித்யபடி பூஜைகள் முடிச்சுட்டு,  காலை ஒன்பதுக்கே  மூடிடுவாங்களாம்.  அட நாராயணா:(

இன்னுமொரு கோவில்  காரில்  போகும்போதும் வரும்போதுமா  ஆயிரம்தடவை  பார்த்தும், ஒரு நாளும் இறங்கிப்போய் சேவிக்காத கோவிலுக்குப்போக நமக்கு  அதிர்ஷ்டம் இருக்கான்னு  பார்த்தால், இருந்தது:-)

 லஸ் கார்னரில் இருக்கும் நவசக்தி விநாயகர்.


 சின்னக்கோவில்தான். ஆனால் பராமரிப்பு அருமை. ரொம்பவே பிஸியான இடத்தில்  இருக்கார். நாலு முனை கூடுமிடம் என்றாலும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாம ஓரமாப்போய் உக்கார்ந்ததை நினைச்சால், அவர் புத்திசாலித்தனம் எவ்ளோ அதிகம்னு புரியும்:-)


அப்படியே நம்ம கபாலியையும் கண்டுக்கிட்டு வந்தோம்.  ஜஸ்ட் ஒரு சுத்து.  நின்னு ரசிக்க நேரம் இல்லை. கோவில் மூடிக்கிட்டு இருக்காங்க. சலோ பாண்டி பஸார்.




போகும் வழியில் ரங்காச்சாரி கடையில் சின்னதா ஒரு பத்து நிமிச இடைவேளை:-)   தோழியின் நினைவு வந்து நின்னது மனசுக்குள்!


இன்னிக்கு கோபாலின் ஷாப்பிங் டே!  வருசக்கடைசிநாள். போயிட்டுப்போகுது. 'எனக்காக ஒருநாள்  கடை கண்ணிக்கு வந்துருக்கியா?'ன்னு நாளைக்கு ஒரு கேள்வி வந்துறக்கூடாது பாருங்க:-) சென்னைப்பயணத்தில் வழக்கமாப்போகும் கடைதான் இது.  ரேமாண்ட்ஸ். 90 பாண்டி பஸார்.


நம்ம கீதா கஃபேக்குப் பக்கத்துக்கடை. நடத்துபவர்  வெங்கடேஷ். வெறும் வெங்கடேஷ் இல்லை. 'சிங்கம்' வெங்கடேஷ்.
பூனைக்குட்டியாட்டம்தான் இருப்பார்.  சின்ன உருவம். ஆனால் திறமைசாலி. இல்லைன்னா தி நகரில் இத்தனை வருசம் குப்பை கொட்டி  இருக்க முடியுமா?


புள்ளையார் பக்தர் என்பதைப் பார்த்தவுடன் தெரிஞ்சுக்கலாம். கல்லாமேசையில் ஊஞ்சலாடும் புள்ளையார் இருப்பார். கடைக்குள்ளே அட்டகாசமான அலங்காரங்களுடனும்  ஒருவர். மூலவரும்  உற்சவருமாக:-)

ஆண்களுக்கான கடை என்பதால்........ நமக்கு உக்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம்:-) என்னவோ எடுத்துக்கிட்டு போகட்டும்.  சுதந்திரம் கொடுத்துருவேன்.  ரெண்டு பேண்ட்ஸ் போதுமுன்னு இவர் முதலில் ஆரம்பிப்பார். அங்கே  மதன் என்ற விற்பனையாளர்  வெவ்வேற துணிகளை எடுத்துப்போட்டு  விவரிக்கும்போது, நம்மாள் கண்ணில், மின்னல் வருவதைக் கவனிச்சு அவைகளிலும் ஒன்னு  எடுத்துக்குங்கன்னு 'சின்னதா சவுண்ட்' விடுவேன்.  என் பேச்சை ,கோபால் கேக்கறாரோ இல்லையோ,   மதன் கேட்டு அதன்படி நடந்துக்குவார்:-))))) குறைஞ்சது  ஆறு பேண்ட்ஸ் என்றாகும்.  தயங்கும் கோபாலிடம்,  அவற்றின் விலையை டாலராக மாற்றி  இந்தக் காசுக்கு  அங்கே ஆறு எடுக்கமுடியாதுல்லேன்னு சமாதானம் சொல்வேன்.  கொஞ்சூண்டு சுயநலமும் இந்த தாராளத்தில் இருக்குன்னு தனியாச் சொல்லணுமாக்கும்:-)

நீலச்சட்டை மதன். வெள்ளை வெங்கட்.


வெங்கட்ன்னு  ஒரு  'மெஷர்மெண்ட் மாஸ்டர்' இப்போ இங்கிருக்கார்.  அவர் முதுகுக்குப் பின்னால்  நாம் எண்ணும் நோட்டு, ரூபாயா டாலரா இல்லை பவுண்டான்னு   தன் முகத்தைத் திருப்பாமலேயே கண்டு பிடிச்சுருவாராம்!!!  ரொம்ப சாதாரணமா இருக்கும் நம்மையும்  பார்த்து , 'இவுங்க ஃபாரின் மக்கள்'னு எப்படித்தான் கண்டு பிடிக்கிறாங்களோன்னு  எனக்கு இன்றுவரை ஒரு சம்ஸயம் உண்டு கேட்டோ! (அவர் சொன்ன நாடு மட்டும் தவறு)

 மேடம் சொல்றது சரிதான்.வாங்கிக்குங்க ஸார். ஃபாரின்லே எல்லாம் விலை ஜாஸ்தியா இருக்குமேன்னார்:-)

விலையை விடுங்க.... இங்க அளவெடுத்துத் தைச்சுக்கொடுப்பது என்பதே அடியோடு இல்லையே. ரெடி மேட்தான். அதுவும் வெள்ளைக்கார உசரத்துக்கு தைச்சு வரும்.  நம்மாட்களுக்கு  காலை வெட்டணும். அதுக்குத் தனியா சார்ஜ் செய்வாங்க. சில சமயம் முப்பது டாலர் பேண்ட்ஸ்க்கு இருபது டாலர்  வெட்டணும், வெட்டித் தைக்க.  இதுவே ஸூட் செட் என்றால் அம்பது வள்ளிசாக் கொடுக்கணும்.  அநியாயமில்லையோ? அதுக்குத்தான் ஓசைப்படாம ஊரில் தைச்சுக்கிட்டு வர்றது:-) இங்கே பெருமையா சொல்லிக்கலாம் 'made to measure '

வெங்கட்நாராயணா சரவண பவனில் பகல் சாப்பாடு ஆச்சு.  அப்புறம் எனக்கு கண்ணாடி ஆர்டர் கொடுத்திருந்த கடைக்கு  ஃபோன் செஞ்சா, கண்ணாடி ரெடின்னாங்க. போய் வாங்கிக்கிட்டு அறைக்கு வந்தோம்.   கொஞ்சம் விலை கூடுதல் என்றாலும் நல்ல சர்வீஸ். ஏறக்கொறைய எங்கூரில் செலவாகும் அதே அளவுதான்.

பொழுது விடிஞ்சால் புது வருசம். மாலை  கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பி நாலரைக்குக் கோவில் திறந்ததும்  நம்ம அடையார் பத்மநாபனுக்கு  ஹேப்பி நியூ இயர்  சொல்லிட்டு இப்போ புது அனுபவத்தைத் தேடிப்போய்க்கிட்டு இருக்கோம்.  ராமராஜ்யம் போகணும். கேளம்பாக்கத்தில் இருக்கு.  கொஞ்சநாளா எனக்கு இந்த ஆன்மீகத்தேடல் அதிகமாகிக்கிட்டு இருக்கு. வயசானால் தானே வந்துரும்போல!  ஆன்மீகத்தேடல் இல்லைன்னா வாழ்க்கையில் எதையோ மிஸ் பண்ணறோமுன்னு பொருள்,இல்லையோ?

கோவிலுக்குப்போய்  வெறும் சாமி கும்பிடுவது ஆன்மீகம் இல்லையாக்கும்:-) அது ஜஸ்ட் ஒரு ஆரம்பம் மட்டுமே!  மனத்தைக் கடவுளில் லயிக்கவிட அது ஒரு உபாயம். அவ்ளோதான். தன்னைத்தானே அறிந்து கொள்வதுதான்   முக்கியம்.  செல்ஃப் ரியலைசேஷன். கடவுள் உண்மையில் இருக்காரா இல்லையா என்பது  ப்ரச்சனையே இல்லை.  இருக்குன்னு நினைச்சால் இருக்கார். அப்ப இல்லைன்னு நினைச்சால்?

கோவிலில் நாம் பார்க்கும் ரூபத்தில் இல்லாமல் , வேற ரூபத்தில் இருக்கார். நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையை கவனியுங்கள். பறவைகளோ, மிருகங்களோ, மரங்களோ, செடிகொடிகளோ , பூக்களோ   சொல்லித் தராத பாடங்களா? இதெல்லாம் கூட கடவுளின் அம்சங்கள் என்றுதான்  எனக்குத் தோணும்.

நம்ம நியூஸித் தோழி ஒருவர் சொல்லிதான் எனக்கு ராமராஜ்யத்தைப் பற்றித் தெரியும். பொதுவா எனக்கு  ஆன்மீகக் குருக்களைப் பற்றிய நம்பிக்கைகள் அறவே இல்லை.  குடும்பத்தில்  சிலர்  ஒரு ஆன்மீக குருவைப் பின்பற்றி இருந்த காலத்தில் அவர்களின் யோக்கியதையைக் கண்முன் பார்த்த காரணத்தால்......  குரு என்றாலே எனக்கு அலர்ஜி:(  அப்ப நான் அறியாப்பருவத்தில் இருந்த காலம் என்றாலும் கூட.....   மேற்படி சமாச்சாரங்கள் மனசில் ஆழமாப் பதிஞ்சு போச்சு.  சாமிக்கும் எனக்கும் இடையில் இன்னொருவர் தேவையே இல்லை. எல்லாம் டைரக்ட் அப்ரோச்தான்.   அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் யாரு இருந்தாங்களாம்?

யாருக்காவது நல்லது செய்யணுமுன்னு நினைச்சால் உடனே செஞ்சுறணும்.  இல்லை ஒன்றும் உதவ முடியாத நிலையா?  நல்லது செய்ய முடியலையா? நல்லது செய்யப் பார். முடியலைன்னா கஷ்டப்படுத்தாமல் 'சும்மா இரு'. சும்மா இருப்பதே  சுகம்.  'சும்மா இரு' என்றால் வேலை வெட்டி செய்யாமல் சோம்பி இரு என்று அர்த்தமில்லை. மற்றவர்களுக்கும்  & எந்த உயிர்களுக்கும் தொல்லை கொடுக்காமல் 'சும்மா இரு'.

தோழி சொன்ன ஆன்மீகக் குருவைப் பற்றிக் கொஞ்சம் அனுபவங்களை  கேட்டதில்  நம் எண்ணத்துக்கு கொஞ்சம் கிட்டே வருவது போலவே இருந்தது.  மேலும் நமக்கு இருக்கும் சில ஐயங்களையும்   அவரிடம் கேட்டுத் தெளிவு பெறலாம் என்றும் நினைச்சேன்.  தோழியின் கணவர் அவருடைய அனுபவங்களை எழுதி  இதுவரை  ரெண்டு புத்தகங்களாக வெளி வந்திருக்கு.  அவற்றை வாசிச்சதும்,  இன்னும் சமீபத்தில் நான்  நெருங்குவதைப்போல்   ஒரு உணர்வு.

இவருடைய  கொள்கைன்னு  சொன்னால்  ரெண்டே வரிகள்தான்.   Love all.  Love is all. வெரி சிம்பிள்!!!

அனைத்தும் அன்பே!   அனைவரையும் நேசி.

சட்னு மனசில் ஒட்டிப்பிடிக்கும் சமாச்சாரம்!  ஆன்மீகவாதியா இருப்பது  இவ்ளோ சுலபமா?  வியப்புதான்!

இவர் ஹைடெக் குருவாகவும்  இருக்கார்.  மனசு தவிக்கும் சமயம், ஒரு  இ மெயில் தட்டிவிட்டால் போதும்.  உடனே  பதிலும் அனுப்பறார்.  ஒரு கவுன்ஸிலிங் போலத்தான்.  குருவா உடனே என் மனசு ஏத்துக்கலைன்னாலும், ஒரு நல்ல நண்பரா ஏத்துக்க முடிஞ்சது எனக்கு.  அப்பப்ப  மின்மடல் தொடர்பில் இருந்தேன்.

போனவருசம் போனபோது  ராமராஜ்யம் போய் அவரை சந்திக்க ஆவல் இருந்தாலும், அவர்  அப்ப வெளிநாட்டுக்குப் போயிருந்ததால்  வாய்ப்பு கிடைக்கலை.  இந்த  முறை தோழியின் குடும்பமும் நாங்களும்  ஒரே நாளில் விடுமுறைக்குக் கிளம்பினோம்.  ஆனால்  அவுங்கவுங்க  உள்ளூர்  பயணத்திட்டம் தனித்தனி.  வருசாவருசம்  புது வருசச் சமயம் மட்டும்  (தொடர்ந்து  நாலு வருசங்களா )  அவுங்க ராமராஜ்யத்தில் தங்கி இருக்காங்க என்பதால்  நாங்களும்  'நியூ இயர்ஸ் ஈவ்' நிகழ்ச்சியில்   அவுங்களுடன் சேர்ந்து கொள்ள நினைச்சோம்..

முதலில் மின்மடலில்,  ராமராஜ்யத்துக்கு நாங்கள்  வரலாமான்னு  அனுமதி கேட்டுக்கிட்டேன்.  தாராளமா வாங்கன்னு சொல்லி,  அங்கே  வந்து யாருடன் தொடர்பு கொள்ளனுமுன்னு  பதிலும் வந்துச்சு.

வரும் வழியைப் படிச்சுப்படிச்சுச் சொல்லி இருந்தாங்க  தோழி, என்றாலும்  கேளம்பாக்கம் - வண்டலூர்  மெயின் சாலையில் இருந்து  இடது பக்கம் திரும்பும் வழியைக் கோட்டை விட்டுட்டு  நேராப்போய்க்கிட்டு இருக்கோம்.  பாக்கம் என்ற ஊர்ப்பலகை கண்ணில் பட்டதும், ரொம்பதூரம் வந்துட்டதைப்போல உணர்வு வந்துச்சு. அவ்வளவாப்போக்குவரத்து இல்லாத சாலை. யாரிடமாவது வழி கேக்கணும்.  கடவுளாப் பார்த்து அனுப்பிய  மாதிரி  ஒருத்தர்  தென்பட்டார்.   அவர் சொன்னமாதிரியே  திரும்பி வந்தப்ப  எமரால்ட் கம்பெனி  கண்ணில் பட்டது.  அங்கிருந்து  கொஞ்சதூரம் போய்  யூ டர்ன் எடுத்து மீண்டும் மெயின்சாலையில் வந்தப்ப, இடதுபுறம் போகும் வழி கண்ணில் கிடைச்சது.

அதில் நுழைஞ்சு இங்குமங்கும் வலதும் இடதுமாய்க்  கொஞ்சம் திரும்பியவுடன் பழனி கார்டன்ஸ் கண்ணில் பட்டது.  சரியா பாதைதான் என்று உறுதியாச்சு.  மெயின் கேட்டில் வண்டியை நிறுத்தினோம். அலங்கரிச்ச யானைகள் வரிசையா நின்னு வரவேற்பு  கொடுத்தன. ஓக்கே. ரைட் ப்ளேஸ்!

தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணை, செல்லில் கூப்பிட்டதும் , ஓப்பன் சிஸமெ ....... கேட் திறந்தது.


நல்வரவு சொல்லி  உள்ளே அழைத்துப்போக வந்த  ஆன்மீக அன்பருக்கு   வணக்கம்சொல்லி,  'நியூஸி மக்கள் சார்பில்' என்று கொண்டு போன படத்தைக் கொடுத்தேன். மாடர்ன் கோகுலம்:-)))) (பாண்டிபஸார் தாத்தா போட்டுக்கொடுத்த ப்ரேம் இதுதான்)

தொடரும்.............:-)

PINகுறிப்பு:  ஆங்கிலப்புத்தாண்டைப் பற்றி பதிவு எழுதும்  இந்நாளில்,  பாரதத்தின் புத்தாண்டும்  தற்செயலாக  இணைஞ்சுருச்சு. அனைவருக்கும்  இனிய யுகாதிப் பண்டிகை வாழ்த்து(க்)கள்.  இன்றைய ஸ்பெஷல் 'கிஷ்மு' பாயஸம்:-))))






Saturday, March 29, 2014

நடந்தது என்ன? (பார்வையின் தொடர்ச்சி)

பொதுவா பல் மருத்துவம் பார்த்துக்கப் போவோமில்லையா, அப்போ   வலி தெரியாமல் இருக்க ஒரு ஊசியை  எந்தப்பல்லோ அந்தப்பல்லுக்கிட்டே போடுவாங்க.  வாயிலே ஊசியான்னு பயப்படவேணாம். அதுக்கு முன்னால் ஊசி குத்தும் வலி தெரியாமல் இருக்க  ஒரு மருந்தை  தடவி விடுவாங்க நம்ம பல் மருத்துவர். (இவுங்களும் இந்தியர்.  பம்பாய் பஞ்சாபி!)

அப்ப கண்ணுக்கு?  கண்ணூசி இருக்குமோன்னு உள்ளூர ஒரு சின்ன (!) நடுக்கம். சிகிச்சைக்கு மூணு நாள் இருக்கும்போது  ஆஸ்பத்திரியில் இருந்து  ஃபோன் செஞ்சு, எத்தனை மணிக்கு நாம் அங்கே இருக்கணுமுன்னு  சொன்னாங்க. பகல் ஒன்னரைக்கு.  மயக்கமருந்து  நினைப்பால்   லஞ்ச் சாப்பிடலாமான்னு கேட்டேன். அது ஒன்னும் பிரச்சனை இல்லையாம்.

எதுக்கும் இருக்கட்டுமுன்னு   பனிரெண்டு மணிக்கு முன்னாலேயே  சாப்பாட்டை லைட்டா முடிச்சுக்கிட்டேன். வழக்கமா , கோபால்  பகல் சாப்பாட்டுக்கு  வரும் பனிரெண்டரைக்கு  வந்து சாப்பிட்டதும் மருத்துவமனைக்குப்போய்ச் சேர்ந்தோம்.

எல்லா விவரமும்  ( நம்மிடம் இருந்து  முந்தி வாங்கின படிமத்தில் இருந்தவைகளையும் சேர்த்துத்தான்) நம்ம பெயர் ,விலாசம், தொலைபேசி எண், நம்ம குடும்ப வைத்தியர், என்ன சிகிச்சைக்காக வந்திருக்கோம்,  எந்தக் கண், நம்ம நேஷனல் ஹெல்த் இன்டெக்ஸ் நம்பர்  எல்லாம் சரிபார்த்துட்டு, ஃபைலை நம்மிடம் கொடுத்து  முதல்மாடியில் இருக்கும்  டே சர்ஜரி யூனிட் ரிசப்ஷனுக்கு  அனுப்பினாங்க.

அங்கே போனதும்   எந்தக் கண்ணுன்னு கேட்டுட்டு,  உக்காரச் சொன்னாங்க.  அடுத்த ரெண்டு நிமிசத்தில் நமக்கு சேவை செய்யும் நர்ஸம்மா தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டு இன்னொரு அறைக்குக் கூட்டிப்போனாங்க.  இன்னொருக்கா நம்ம  முழு ஜாதகத்தையும் கிரக பலன்களையும்  சரிபார்த்துட்டு  'என்ன சிகிச்சைக்கு வந்துருக்கீங்க'ன்னு தெரியுமா?ன்னு கேட்டாங்க.

  "காடராக்ட் கண் லென்ஸை எடுத்துட்டு புது  ஐ ஓ எல் இம்ப்ளாண்ட்க்கு வந்துருக்கேன்."

உண்மையைச் சொன்னால்   எனக்கு இந்த  காடராக்ட் என்னும் சொல் மீது  ஒரு ஒவ்வாமை . யக்:( சொல்றதுக்கே ஒரு கூச்சம்:-)

"  எந்தக் கண்ணு?"

" வலது."

"கையால் சுட்டிக் காட்டி விளக்குக!"

வலது கை சுட்டு விரலால் வலது கண்ணைத் தொட்டுக் காமிச்சேன்.

அடுத்து  நம்முடைய நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை எல்லாம் அளந்தாங்க. பிபி மட்டும் அதிகமா இருக்கு. இருக்காதா பின்னே?

"மருந்து சாப்பிடலையா?"

"எப்பவும் பிபி மருந்து ராத்திரிதான் சாப்பிடுவேன்."

"ஏன்? எதாவது காரணமா?உங்க டாக்டர் அப்படியா சொன்னாங்க? காலையில் மருந்து எடுத்துக்கிட்டா நாள்  முழுசும்  அழுத்தம் கூடாமல் இருக்கலாம். ராத்திரின்னா.... உடம்பு ரெஸ்ட் எடுக்கும் நேரம் மாத்திரைக்கு அவ்வளவா வேலை இல்லையே."

"அட! ஆமாம். சரி. நாளை முதல் காலைக்கு மாத்திக்கறேன்."

நம்ம பெயர் ,விலாசம், செல் எண், வீட்டுத் தொலைபேசிஎண், என் ஹெச் ஐ  எண், நம்ம கண்டாக்டர்  பெயர் எழுதுன பட்டை கையில்  வளையலா வந்துச்சு. இன்னொரு சிகப்புப்பட்டையில் நமக்கு அலர்ஜின்னு  நாம் எழுதிக்கொடுத்த மருந்து மாத்திரை விவரங்கள் இன்னொரு வளையல்.

"கண்ணுக்கு  இப்ப சொட்டு மருந்து விடப்போறேன்.  அஞ்சு நிமிசத்துக்கு  ஒன்னுன்னு மொத்தம் ஆறுமுறை விடணும்.  சொட்டு கண்ணில் விழுந்ததும்  கண் ஓரத்தை (மூக்காண்டை இருக்கும்  ஓரம்)  ஆள்காட்டி விரலால்  பத்து செகண்ட் அழுத்திக்கணும்.  இல்லைன்னா மருந்து  கண்ணீர் சுரப்பிக்குப் போயிரும் "

குட்டியா ஆறு ட்யூப்கள் இருந்த ஒரு சின்ன பேக்கைத் திறந்தாங்க. அதை  ஒவ்வொன்னா  பெயரைப் படிச்சுப் பார்த்து என்னவோ வரிசைக் கிரமமாய்  அடுக்கிக்கிட்டாங்க. முதலாவது சொட்டு கண்ணில் விழுந்தது . சொன்னபடி செஞ்சேன். இப்படியே  நாலு முறை   ஆச்சு.  இப்ப வெளியே ரிசப்ஷனில் நாம் உக்கார்ந்திருந்த இருக்கைக்குப் போகச் சொன்னாங்க. சின்னதா ஒரு ட்ராலியைத் தள்ளி வந்து நம்முன்னால் நிறுத்தியாச்சு. அங்கேயும்  ரெண்டு முறை கண் மருந்து போட்டாங்க. நாம் வந்து ஒருமணி நேரம் ஆகி இருந்துச்சு.  நெர்வஸா இருக்குன்னு,  ரெஸ்ட் ரூமுக்குப் போய் வந்தபிறகு  நம்ம உடுப்புக்கு மேலேயே  ஆஸ்பத்ரி கௌன் மாட்டினாங்க.

இன்னொரு   ரெக்கவரி ஹாலுக்கு கோபாலை  கூட்டிப்போவதாக சொல்லிட்டு என்னை மட்டும்  உள்ளே கூட்டிப் போனாங்க. இது ஒரு பத்து படுக்கை உள்ள வார்டு.  அங்கிருந்த நர்ஸம்மாவிடம் நம்மை  ஒப்படைச்சதும் , நம்மை ஒரு நாற்காலியில் உக்காரவச்ச  புது நர்ஸம்மா, எந்தக் கண்ணு என்ற கேள்வியுடன் ஆரம்பிச்சு, நம்ம பெயர், பிறந்த தேதி  முதல் எல்லா ஜாதகத்தையும் சரிபார்த்துட்டு, வளையல் பட்டை விவரத்தையும் சரி பார்த்தாங்க.

இப்ப  ஒருத்தர் வந்தார்.  மயக்கமருந்து கொடுக்கும் டாக்டர். தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டு   எந்தக் கண்ணுன்னு ஆரம்பிச்சு எல்லா விவரமும் சரி பார்த்துட்டு, கட்டிலில் ஏறிப் படுக்கச் சொன்னார்.  ரொம்ப அகலம் குறைவான கட்டில், எதோ எனக்கே எனக்குன்னு அளவு எடுத்துச்  செஞ்சதைப்போல் ரொம்ப  இடுக்கமாத்தான் இருக்கு. நம்ம தலை, கட்டிலின் தலைமாட்டில் கடைசி ஓரத்தில் இருக்கும் தலகாணியின்  இறுதியைத் தொடும்படி படுக்கணும்.  காலில் இருக்கும் செருப்பைக் கழட்டினால்  எங்கே வைப்பதுன்னு தெரியாமல் தயங்கினேன். 'அதெல்லாம் பிரச்சனையே இல்லை. அப்படியே செருப்போடு படுத்துக்கோ! '  படுத்தவுடன் செருப்பு காலை விட்டு  மேலே போகுது. இது சரிப்படாது. கழட்டித்தான் வைக்கணும் என்றதும், சட்னு காலில் இருந்து உருவி  கட்டிலின் மேலேயே கால்பக்கத்தில் வச்சுட்டாங்க. அடராமா.............  பேசாம ஷூ போட்டு வந்திருக்கலாம்.

ஐவி கொடுப்பதற்கான குத்திவைப்பு  இப்ப.பொதுவாத் தேவைப்படாதுன்னாலும்........  ஒருவேளை  தேவையானால்.... அப்போ நரம்பு தேடிக்கிட்டு இருக்கமுடியாதுல்லெ? முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்.

அப்புறம் கண்ணில் சொட்டு மருந்து போட்டார்.  அங்கேயும்  நாலு இல்லை அஞ்சு முறை போடணுமாம். ஒவ்வொன்னுக்கும் இடைவெளி அஞ்சு மினிட். நமக்கு ஆறுமுறை போட்டாங்க.

முகமூடியுடன் நம்ம கண் டாக்டர்  வந்து ஹலோ சொல்லிட்டு, எந்தக் கண் என்றார்.  வலதுன்னு தொட்டுக் காமிச்சதும்  ஒரு மார்க்கிங் பேனாவால் நெத்தியில் இருந்து புருவத்துக்கு ஒரு அம்புக்குறி! தவறான கண்ணை யாரும் நோண்டிடக்கூடாது என்பதால் இத்தனை முறை  கேட்டு  உறுதிப்படுத்திக்கறாங்க. இப்போ 'இங்கே'ன்னு  அடையாளமும் வரைஞ்சாச்சு:-)

இதுக்குள்ளே நர்ஸம்மா, கட்டிலுக்கு ரெண்டு பக்கமும் இருக்கும்  கைப்பிடியை மேலே இழுத்து விட்டாங்க. இனி நான் கீழே உருண்டு விழமாட்டேன். தியேட்டருக்குப் போறோமுன்னு சொல்லி  மயக்கமருந்து மருத்துவர் நம்ம கட்டிலை தள்ள  வந்தார்.  ஆளுக்கொரு பக்கமா நின்னு நம்மைத் தள்ளிக்கிட்டுப் போனாங்க.  வளைஞ்சு வளைஞ்சு போகும் பாதையில்  ரைடு:-)

தியேட்டர்  நம்பர் ஒன் நமக்கு.  ஆச்சரியம் தரும்மெஷீன்கள் பக்கத்துக்கு ஒன்னு இருக்க நடுவில் நம்ம கட்டிலைக் கொண்டுபோய் நிறுத்தினாங்க.   திரும்ப அங்கே இருந்த நர்ஸம்மா  கை பட்டை வளையலைச் சரிபார்த்து அது நாந்தான்னு உறுதி செஞ்சுக்கிட்டாங்க.

மோடி மஸ்தான் கேட்பது போல,

"எந்தக் கண்? "

"வலது!"

வச்சிருந்த தலயணையை மாற்றி வேறொன்னு தலைக்கு வந்துச்சு.  டாக்டர் வந்துட்டார். நாடித்துடிப்பு அளக்க கைவிரலுக்கு தொப்பி போட்டபிறகு, சுடச் சுட இருந்த  போர்வை நமக்குப் போர்த்தினாங்க.  அதுக்கு மேலே குட்டியா ஜன்னல் வச்ச  துணியை நம்மீது போர்த்தி, ஜன்னல் நம்ம வலது கண்ணுக்கு வந்துச்சு. ஜன்னலைச் சுத்தி இருந்த  ஒரு ப்ளாஸ்டிக் கண்ணைச் சுத்தி ஓட்டிக்கிச்சு. கையால் நல்லா நீவி விட்டு   கீழ் இமையையும் மேல் இமையையும்  நல்லாப் பிரிச்சு  இன்னொரு  டேப்பால்  மேலேயும் கீழேயுமா  ஒட்டியாச்சு. இமைகளை மூடவே முடியாது இப்போ!

கைவிரல்கள் கண்ணைச் சுத்தி நடக்கும் உணர்வு தெரியுதே. கண் இன்னமும் நல்லா  மரத்துப்போகலை போல இருக்கே!  டாக்டரை விசாரிச்சேன்.  கண் விழிப்படலம் மட்டுமே மரத்துப்போகும் மருந்தாம் அது.  ஐ பால் ஒன்லி!  ஓக்கே ஓக்கே:-)

ஹப்பா......பல்லாண்டை ஊசிபோல, கண்ணாண்டை ஊசியோன்னு கதிகலங்கிப் போயிருந்தேனே!

கண்ணுக்கு மேலே பளீர்னு ஒளி வெள்ளம்.  அசையாம அதையே பார்க்கும்படி உத்தரவாச்சு.  ஒரு நிமிசத்தில் கண் அதுக்குப்பழகி அழகான Opal  கல்லின்  இளநீல பால்வெளிச்சமா மாறுச்சு.  பாற்கடலில் பரந்தாமனைத் தேடினேன்.  கிடைச்சானா? ஊஹூம்.......

கண்ணில்  பன்னீர் தெளிச்சுக்கிட்டே இருக்கு மெஷீன்.  வலியே இல்லை.  கண்ணாடிக்குமிழ் ஒன்னு  காத்துலே பறப்பது போல்  ஒரு காட்சி. என்னவோ நடக்குது. மர்மமா இருக்குது:-) தெரிஞ்ச  பகவான் நாமங்களைச் சொல்லிக்கிட்டு இருந்தேன் மனசுக்குள். கேசவா, நாராயணா, கோவிந்தா......

'ஓக்கே. டன் 'என்றார் நம்ம டாக்டர்.  நம்ம மேல்போர்த்தியிருந்த  ஜன்னல் வச்ச போர்வையை கண்ணை விட்டு முதலில் பிரிச்செடுக்கும்போது  சரசரன்னு  ஒரு மெல்லிய சப்தம்.  கண் தானாய் மூடிக்கிச்சு. கண்ணைச் சுற்றி மருந்துப்பஞ்சு ஒன்னு ஓடித் துடைச்சது.  என்னத்தையோ கண் மேல் வச்சு  சரக் சரக்ன்னு  டேப்  இழுத்து ஒட்டினாங்க. 'கண்ணைத் திறந்து பார்'!

சிகிச்சை ஆரம்பிச்சு இருபத்தியஞ்சு நிமிட் ஆகி இருக்கு. பழைய தலையணை மீண்டும் கழுத்துக்கடியில் வந்ததும் கட்டிலை உருட்ட ஆரம்பிச்சாங்க.  'நல்லா ஆடாமல் அசையாமல் இருந்தாய்' என்று பாராட்டுகள் வேற!  அதான்  அசையமுடியாமல் கட்டிலின் ரெண்டு பக்கமும் ரெய்லிங்ஸ் இருந்துச்சே:-) தியேட்டர் மக்களுக்கு நன்றி சொல்லி  என்று பை பை கை ஆட்டினேன்.

வார்டுக்கே மீண்டும் வந்து சேர்ந்தாச்சு.   கட்டிலின் உயரம் தாழ்ந்தது.  இப்ப கட்டிலில் இருந்து இறங்கலாம். இறங்கி,  நமக்காகக் காத்திருக்கும் சக்கரநாற்காலியில்  உக்காரணும். (ரொம்பநாள் ஆசை நிறைவேறியது!)  உக்கார்ந்ததும் கட்டில் செருப்பு, காலுக்கு வந்துச்சு:-)
மயக்கமா இருக்கான்னு கேட்டதும் 'நோ' ன்னேன்.

நம்மை உருட்டித்தள்ளிக்கிட்டு ரெக்கவரி ரூமுக்குக் கொண்டுபோனாங்க. அன்றைய நியூஸ் பேப்பரும் கையுமா சோஃபாவில் சாஞ்சு  ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கார் நம்மாள்:-) அடுத்த சோஃபா நமக்கு.  அந்த  பெரிய ஹால் முழுக்க  தனித்தனி சோஃபாக்களாய் (Lazy Boys)  வரிசையா  சுவர் ஓரம் முழுக்கப்போட்டுருக்காங்க.  காலை நீட்டி ஓய்வெடுத்துக்கலாம்.


சுத்துமுத்தும் பார்த்தால் சுவர்கள் எல்லாம் பளீர்னு இருக்கு.  என்ன நிறமுன்னு கேட்டேன். வெள்ளைதானாம்.   வலது கண்ணை மூடிக்கிட்டுப் பார்த்தால் நைலான் திரையினூடே தெரியும் காட்சி. லைட்டான க்ரீம்  கலர்.

தன்னுடைய செல்லில் கொஞ்சம் க்ளிக்ஸ் செஞ்சு என்னிடம் காமிச்சார் கோபால். கண்ணுக்கு ஒரு ஷீல்ட் போட்டு ஒட்டி இருக்காங்க.  நாளைக்கு  காலை  ஒன்பதே முக்காலுக்கு  நம்ம கண் டாக்டரைப் போய் பார்க்கணும். போஸ்ட் ஆபரேடிவ் அப்பாய்ண்ட்மெண்ட் டைம் . அதுவரை அந்த ஷீல்ட் அப்படியேதான் இருக்கணும். தொடப்டாது.

கொஞ்ச நேரத்தில்  பிபி, டெம்பரேச்சர் எல்லாம் சரிபார்த்தாங்க. ' குடிக்க என்ன  வேணும்? சாண்ட்விச் ரெடியா இருக்கு'.

'நான் கொண்டுவரேன்'னு கோபால் எழுந்து போனார். பச்சைப்பாலை ஊத்தாமல் பாலைத் தனியா சூடு செஞ்சு   டீ போட்டு எடுத்து வந்தார். கூடவே  வெஜிடபிள் சாண்ட்விச், ஒரு அஸ்பேரகஸ் ரோல் கூட இருந்துச்சு.

கோபாலுக்கு இப்ப  டீ வேணாமாம்.  இங்கே வந்தவுடன்  டீ போட்டு குடிச்சுட்டுத்தான் பேப்பர் வாசிக்க ஆரம்பிச்சாராம். எங்கூர்  ஆஸ்பத்திரியில் எனக்கு பிடிச்ச  விஷயம், நோயாளியின்  கூட வரும் துணை, களைப்படையாமல் இருக்க  காஃபி, டீ சமாச்சாரங்களை  தயாரிச்சுக்க எல்லா ஏற்பாடும் செஞ்சு வச்சிருப்பாங்க என்பதே!

ரெண்டு பேருமா சாப்பிட்டு முடிச்சோம்.

அரைமணி நேர ஓய்வுக்குப்பின்  ஐவிக்கு குத்திவச்ச ஊசியை எடுத்துட்டு ப்ளாஸ்டர் ஒட்டினவுடன், டிஸ்சார்ஜ்  பேப்பர்  கிடைச்சது. அதில்  டூஸ் அன்ட் டோன்ட்ஸ்  இருக்கு.  சட்னு கீழே தலையை குனியக்கூடாது.  தோட்ட வேலை  செய்யக்கூடாது . டாக்டர் சொல்லும் சொட்டு மருந்துகளைத் தவறாமல் தினம் நாலுவேளைக்கு  கண்ணில்  போட்டுக்கணும்.  இதன் கூடவே நானுமொரு விதி போட்டுக்கிட்டேன்.  நாலு வாரத்துக்கு வெங்காயம் நறுக்கும் வேலை கூடாது:-) சமையல்கூட செய்யக்கூடாதுன்னு சொல்லி இருக்கலாம்.  ஹூம்.......

ஒவ்வொரு முக்கால் மணிக்கும்  கண்ணில் போட்ட ஷீல்டோடு  சக நோயாளிகள்  வந்துக்கிட்டே இருந்தாங்க. எல்லாம் பகல் நாம் ரிசப்ஷனில் பார்த்தவர்கள்தான். 'வெற்றி வெற்றி'ன்னு கூவாமல்....  ஒரு புன்சிரிப்பு எங்களுக்குள் பரிமாறிக்கொண்டோம். கிளம்பும் நபர்கள்  மற்றவர்களுக்கு  தலையை அசைத்து  ஒரு பை பை சொல்லிக்கிட்டோம்.

மறுநாள் காலை  மருத்துவர்  க்ளினிக் போனோம்.  அங்கே முதல்நாள் அறுத்துப்போடப்பட்ட மக்கள்ஸ்  வெயிட்டிங் ரூமில்  இருந்தாங்க.  ஒருவருக்கொருவர் புன்னகையால்  ஒரு ஹலோ!  இங்கத்து  நர்ஸிங் டெக்னீஷியன் நம்மை  ஒவ்வொருவரா அறைக்குள்  கூப்பிட்டு  நேற்று இரவு நல்லா தூங்குனீங்களா என்ற விசாரிப்புடன், கண்ணை இறுக மூடிக்கச்சொல்லி அந்த  பாதுகாப்பு கவசத்தை உரிச்சு எடுத்துட்டு   ஒரு மருந்து போட்டு கண்ணின் சுற்றுப்புறம் இமைகளையெல்லாம் சுத்தம் செஞ்சுட்டு,  எதிரில் கண்ணாடியில் தெரியும் எழுத்துகளை  வாசிக்கச் சொல்லி சின்ன சைஸ் எழுத்துகள் வரை  வந்து வழக்கமான பரிசோதனை  செய்தபின், இன்னொரு மெஷீனை நம்ம முன்னால் கொண்டுவந்து நிறுத்தி, கண்ணுக்குள் அஞ்சுமுறை சுட்டாங்க:-)  படம் எடுக்குதாம்!

ஷீல்டைக் கையில் வாங்கிப்பார்க்கணுமுன்னு நினைச்சால் டபக் னு குப்பைத்தொட்டியில் போட்டுட்டாங்க.  எனக்கு பார்க்கணும் என்று சொன்னதால் புதுசு ஒன்னு கொண்டு வந்து (எனக்கேன்னு)கொடுத்தாங்க.


இன்னும் கொஞ்சம் காத்திருப்பு .  வெளியே காட்சிகள் எல்லாம் பளீர்னு இருக்கு. உண்மையைச் சொன்னால் அவ்ளோ ஒளியில் கண் கூச ஆரம்பிச்சது. கையோடு கொண்டு போயிருந்த கருப்புக் கண்ணாடியை போட்டுக்கிட்டேன்.  மகள் உபயம்:-)

டாக்டர் வந்து  அவர் அறைக்குக் கூப்பிட்டுப் போனார்.( இங்கே இதுதான் முறை.  ) அங்கேயும் கண்மெஷீனில் முகம் பதித்து  இருக்கணும். டாக்டர் பரிசோதனை செய்துட்டு  'எல்லாம் சரியா இருக்கு.  அடுத்த கண் எப்போ செஞ்சுக்கறதா இருக்கீங்க? சீக்கிரமாவா இல்லை கொஞ்சகாலம் கடந்தா'ன்னார்.

இவ்ளோ நல்லா கண் தெரியுமுன்னால் எதுக்கு வீணா காலம் கடத்தணும்?  சுபஸ்ய சீக்ரம் இல்லையோ:-)

சிகிச்சை நடந்த கண்ணுக்கு நாலு வாரம்  மருந்து எழுதிக்கொடுத்த கையோடு  நாலாவது வாரம் நாள் குறிக்கப்பட்டது அடுத்த கண்ணுக்கு:-)

ஒரு மருந்து  முதல் ஒரு வாரத்துக்கு மட்டும். மற்றது  மொத்தமா நாலு வாரத்துக்கு. இங்கே  டாக்டர்கள் அவுங்க க்ளினிக்லே மருந்துக்கடை வச்சுக்கறதில்லை:-)  வெளியே எங்கே வேணுமுன்னாலும் வாங்கிக்கலாம்.

அந்த நாள்  முந்தாநாள்! பழையபடி எல்லாம் முதலிலிருந்து ரிப்பீட்டுதான்.  இதுக்கிடையில் ஆஸ்பத்திரியில் இருந்து பின்னூட்டம் தரச் சொல்லி படிவம் அனுப்பினாங்க. அதை நிரப்பின கையோடு  முக்கிய குறிப்பு சேர்க்கும்  இடத்தில் 'உங்க சர்வீஸ் நல்லா இருந்துச்சு. இன்னும் நாலே வாரத்தில் மீண்டும் வருவேன். அப்பவும் இதே போன்ற  முதல்தர சிகிச்சையை  எதிர்பார்க்கிறேன்'னு எழுதிப்போட்டேன்.

அடுத்த கண்ணுக்குப்  போனபோது  நர்ஸம்மா மட்டும் வேற ஆள்.  நமக்குதான்  ஆஸ்பத்திரி சமாச்சாரம் அத்துபடி ஆயிருக்கே. அதனால்  பொட்டுத் தங்கமில்லாமல்  உருவி வீட்டுலே வச்சுட்டுப் போயிருந்தேன்.  நோ மெட்டல்:-)

"எதாவது  ஜூவல்லரி  இருக்கா ?"

"இல்லை. இவர் வாங்கித்தந்தால் தானே?"

நர்ஸம்மாவுக்குத் தாங்க முடியாத சிரிப்பு.  நம்ம கோபாலுக்கும்தான். சூழல் இறுக்கம் குறைஞ்சது.

"சொந்தப் பல் தானா?"

அடடா.....  செட் போட்டுருந்தால் இந்தான்னு கழட்டிக்கொடுத்துருக்கலாமே!

மத்தபடி எல்லாம்  வலதுக்குப்போலவே இடதுக்கும்.

மறக்காம ஷூ மாட்டிக்கிட்டுப்போனேன்:-))))



போன வருசம்   காஞ்சி- காசி பயணம் வருவதற்குமுன்  செஞ்சுக்கிட்டு இருந்தால்  காசியை  இன்னும் நல்லாப் பார்த்திருக்கலாம், இல்லே?




வானம் இவ்ளோ நீலமாவா இருக்கு!!!!!!!

இன்னும் ஒவ்வொன்னையும்பார்த்து மகிழ்ந்துக்கிட்டு இருக்கேன். அடடா..... உலகம் இவ்ளோ அழகா!!!!  

மெடிக்கல்டெக்னாலஜி  ஈஸ்  அமேஸிங்க்! 


மங்களம் சுப மங்களம்.




Friday, March 28, 2014

பார்வை ஒன்றே போதுமே............


"ஏங்க  வெயில்தான் இருக்கே... அப்புறம் ஏன் புகைமூட்டமா இருக்கு?"

"அப்படி ஒன்னும் இல்லையேம்மா"

"லேசா ஃபோக் (Fog) இருக்கோ?"

"ஊஹூம். பளிச்சுன்னுதான் இருக்கு."

குறைஞ்சது  ஏழெட்டு முறை இந்த கேள்வியும் பதிலும் தினப்படி வாடிக்கை. அதுவும் வெளியே எங்கியாவது  ட்ரைவ்  பண்ணிப்போனால் இன்னும் அதிகம்.  பாவம்.... பதில் சொல்லியே  நொந்து போயிருப்பார் கோபால்.

எனக்கு உடல்நிலை சரி இல்லைன்னு கொஞ்சநாளா மருந்து  எடுத்துக்கிட்டு இருந்த  சமயம், பக்க விளைவா அது கண்பார்வையை(யும்) பாதிக்கலாம் என்ற காரணத்தால்  கண் சிகிச்சைப் பிரிவில் இருந்து  'வந்து கண்ணை காட்டிட்டுப்போ' ன்னு கடுதாசி வந்துச்சு. போயிட்டு வந்தோம்.அது என்ன 'தோம்'?

இப்பெல்லாம் தனியா வண்டியை எடுத்துப் போக கொஞ்சம் யோசனைதான்.  நோயாளி பாருங்க.......  அதுவும் கண்ணாஸ்பத்திரிக்கு கூட ஒரு துணையோடு(ட்ரைவர்) வான்னுதான் இங்கே சொல்றாங்க.

பரிசோதனை முடிச்சுட்டு  'இப்ப சரியாதான் இருக்கு. எதுக்கும் இன்னும் நாலு மாசம் கழிச்சு  வந்துட்டுப்போங்க.கடுதாசி அனுப்பறோமு'ன்னாங்க.  ஆச்சு நாலு மாசம்.  கடுதாசி வந்ததும் போனோம்.

எல்லாம் சரிதான். மருந்து பாதிப்பு இல்லை. ஆனால் கண் லென்ஸில் காடராக்ட் வந்துருக்கு.  அதை எடுக்கணும். வெய்ட்டிங் லிஸ்டுலே உங்க பெயரை பதிவு செஞ்சு வைக்கிறேன்னு  டாக்டர் சொன்னாங்க. இந்தியர்.  ஹைதராபாத் . ஆஹா.... விடமுடியுமா? கொஞ்சம் தெலுகுலே மாட்லாடினேன்:-)

'எவ்ளோநாள் காத்திருப்பு'ன்னதும்  'அஞ்சு மாசம்' என்றவங்க, 'உங்களுக்கு  மருத்துவக் காப்பீடு இருக்கா'ன்னாங்க.  'இருக்கே! 'அப்ப தனியா சிகிச்சை எடுத்துக்கலாமே. உங்க கண் டாக்டர் யார்?

பெயரைச் சொன்னதும்  அவுங்களுக்கு மகிழ்ச்சி கூடிப்போச்சு . "அட! அவர்தான் என்னுடைய வாத்தியார் . ரொம்பக் கெட்டிக்காரர்.

" நல்லதாப்போச்சு. சிகிச்சை எப்படி? கஷ்டமானதா? "

"ஊஹூம். எல்லாம் ருட்டீன்தான்.  சிம்பிள்."

உடனே நம்ம கண் மருத்துவருக்கு  ஃபோன் செஞ்சு  மறுநாள்  அவரைப்போய்ப் பார்த்தோம்.

"கணினியில்  நம்ம ரெகார்டை எடுத்துப் பார்த்தவர்  ரெண்டு வருசத்துக்கு முன்னேயே இப்படி கண் லென்ஸ் க்ளௌடியா  ஆகிக்கிட்டு இருக்கு மாத்திடலாமுன்னு சொன்னேன்.  தேதியும் குறிச்சேன்.  ஆனால்  நீங்கதான் ( பூம்பூம் மாடு போல தலையாட்டிட்டு அப்புறம் செகண்ட் தாட் வந்து)  வேணாமுன்னு  சொல்லிட்டீங்க.  அப்ப ஒரு கண்ணுலே இருந்தது இப்ப ரெண்டு கண்களுக்குமா இருக்கு. "

அங்கே இருந்த 'ஒரு கண்ணைப் பிரிச்செடுத்து'  டபக்குன்னு அதுக்குள்ளே இருந்த லென்ஸை வெளியில் எடுத்துக் காமிச்சு இதை எடுத்துட்டு வேற ஒன்னு வைக்கணும். அவ்ளோதான். ஈஸி என்றார்.

கேமெராவுலே லென்ஸை மாத்திப் போடறோமே அப்படித்தான் போல!

வழக்கமான  சர்ஜரிதான்.  அனஸ்தீஸியா?  லோக்கலா  மரத்துப்போக மருந்துன்னார்.

புது லென்ஸ்  போடறதால் பொதுவா கண் நல்லாத் தெரியும். படிக்க மட்டும் கண்ணாடி போடவேண்டி வரும் என்றார். அந்த லென்ஸில்  இப்ப  நம்ம கண் கண்ணாடியில் இருப்பதைப்போல  ப்ராக்ரஸிவ் லென்ஸ் போட முடியாதான்னால்.... 'இல்லை. இது IOL (intraocular lens)   இதுலே மல்ட்டி ஃபோகல் கூட இப்ப வருதுன்னாலும் அதுலே கொஞ்சம் ப்ராப்ளம்ஸ் இருக்கு.  100% காரண்டீ இல்லை.  அப்படியாச்சுன்னா, மறுபடி  இன்னொரு சர்ஜரி செஞ்சு  அதை எடுத்துட்டு இதைப்போடும்படி ஆகும்' என்றதும்  ஐயோ.....   வேணாமுன்னு சொன்னேன்.

தேதி குறிச்சதும் நமக்கு சரிவருமான்னு  பார்த்துட்டு ( கோபால் ஊரில் இருக்கணுமே!)  வீட்டுக்கு வந்துட்டோம். மறுநாள்  ஸர்ஜரி அட்மிஷன் பேக் ஒன்னு வீட்டுக்கு வந்துச்சு.

அட்மிஷன் பேக்கைத் திறந்து பார்த்தால்....  ஐயோ!  சுருக்கமாச் சொன்னா, நம்ம பிறந்த நட்சத்திரத்தையும் ராசியையும்மட்டும்தான் கேட்கலை.  இதுவரை ஆன அறுவை சிகிச்சைகள், இப்போ என்னென்ன வியாதி,அதுக்கு என்னென்ன மருந்து எடுக்கறோம், எதெது நமக்கு அலர்ஜி, ஏன்? அது என்ன செய்யும்? இப்படி ஏகப்பட்டவைகளை அந்தப்படிமத்தில் நிரப்பி, திருப்பி   கண் சிகிச்சை நடக்கப்போகும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பணும்.  நம்ம இன்ஷூரன்ஸ் கம்பெனி நடத்துது.  இதுலே மற்ற  இன்ஷூரன்ஸ் கம்பெனிகளில் பாலிஸி எடுத்தவங்களுக்கும் ஆர்கனைஸ்ட்  சர்ஜரி நடத்திக்க  முடியும். தியேட்டர்,  டாக்டர், நர்ஸ், பொதுவான சர்வீஸ்களுக்கு பணம் கட்டிட்டு  சிகிச்சை எடுத்துக்கலாம்.  பாலிஸிக்கு ஏற்ப  அவுங்க இன்ஷூரன்ஸ் கம்பெனி  பணம் திருப்பிக் கொடுக்கும்.

நாங்க  நியூஸி வந்த  சமயம் இங்கே  தனியார் மருத்துவமனைகளே கிடையாது.  இப்போ ஒரு இருபது வருசமாகத்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ்  கம்பெனி ஒரு  ஹாஸ்பிட்டல் கட்டி இருக்கு. இங்கே  ஏற்கெனவே முடிவு செய்த அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடக்கும். இந்தக் கம்பெனியில்  அங்கத்தினராக உள்ளவர்களுக்கு மட்டும்  இந்த ஆர்கனைஸ்ட் ஸர்ஜரி. பொது மருத்துவமனை டாக்டர்கள் தான்  இங்கேயும்  வந்து அறுவை சிகிச்சை செய்வார்கள்.


அன்னிக்கு மாலை  நடைப்பயிற்சிக்குக் கடைக்குப்போனோம்.  எங்கூர்லே  வேர்ஹௌஸ் என்னும்  கடைதான் நம்ம நடைப்பயிற்சிக்கான களம். அங்கே இருக்கும் க்ளியரன்ஸ் & ஸேல்  பின் (Bin ) ரொம்ப  சுவாரசியமான சமாச்சாரங்களால்  நிறைஞ்சிருக்கும். பத்து நிமிசம் டைம் பாஸ் எனக்கு அங்கே:-)  பல பொருட்களைப் பார்க்கும் போது இதையெல்லாம் யார் வாங்குவான்னு நினைச்சுக்குவேன்.  குறிப்பிட்ட சில விழாக்களுக்கான பொருட்கள்  அந்த குறிப்பிட்ட நாள் முடிஞ்சதும்  இந்த இடத்துக்கு வந்துரும்.

பத்து டாலர் சமாச்சாரம்  இப்ப  அம்பது செண்ட், இல்லை  சும்மா 99 செண்ட்ன்னு (ஒரு டாலர்னு அர்த்தம்)  போட்டு வச்சுருப்பாங்க.  இப்ப ஏது  ஒருசெண்ட், அஞ்சு செண்ட் காசுகள். எல்லாம் காணாமப்போச்சு குறைஞ்ச காசு இப்போ  பத்து செண்ட்தான்.

கடந்து போன ஹாலோவீன்  சமாச்சாரங்களை ஒழிச்சுப்போட்டு வச்சுருக்காங்க (ஏன் இத்தனை லேட்டு?)  அதுலே ஒரு கொக்கிக்கை பார்த்தேன்.  பெரிய மீசையும் கண் பட்டியும் இருந்துச்சு இன்னொரு செட்லே.

மீசை வேணாம். பேசாம ஒரு கொக்கிக்கை மட்டும்  வாங்கிக்கலாமான்னு  தோணுச்சு.

நான் சின்னவளா இருந்த காலத்தில் எங்க எதுத்த வீட்டுலே  இருந்த தாத்தா ஒருவர், தினம் காலையில்  திண்ணைக்கு வந்து இளவெயில் காய்வார்.  அவருக்குக் கண் சரியாத் தெரியாது.  கிட்டப்போய் குரல் கொடுத்தால் யாருன்னு கண்டு பிடிச்சுருவார்.பேசாம நின்னால்.... நம்ம காலடி சத்தம்  கேட்டு, யாரு? யாரு? ன்னு கேட்டுக்கிட்டே வழக்கமா  அங்கே போகும் பிள்ளைகளின் பெயரை ஒவ்வொன்னா  எடுத்து விடுவார். மெல்லிசான காலடின்னால்... யாரு?தொளசியான்னு  சட்னு கண்டு பிடிச்சுருவார்.

அவருக்கு கண்புரை விழுந்துருச்சாம். இன்னும்  பழுக்கலை. பழுத்தாவுட்டு  சுரண்டி எடுப்பாங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தவர், ஒரு நாள்  பச்சை நிறமான ஒரு கண் பட்டியைப் போட்டுக்கிட்டு திண்ணையில் உக்கார்ந்திருந்தார்.   புரை எடுத்தாச்சாம். இன்னும் ஒரு பத்து நாளைக்கு கண்பட்டி போட்டுக்கணும். அதுக்குப்பிறகு கண் நல்லாத் தெரியுமுன்னு  சந்தோஷப்பட்டுக்கிட்டார்.

இப்போ நம்ம கேஸ்  இதுதானே.  கொழுப்பு வந்து கண்ணை  மறைச்சிருக்கே!  ப்ரோட்டீன்  கண் லென்ஸ்மேலே படிஞ்சு திக்கா ஒட்டிக்கிட்டு இருக்கும் அதுதான் கண் புரைன்னு நினைப்பு.

நமக்கும் கண் பட்டி போட்டு விட்டுருவாங்க. பேசாம கொக்கிக்கை ஒன்னு வாங்கி மாட்டிக்கிட்டால்  வேஷப்பொருத்தம் இன்னும் நல்லா இருக்குமுல்லே?

அதெல்லாம் ஒன்னும் வேணாம்னு ஆசையில் மண்ணு போட்டுட்டார் நம்மாள்.

தொடரும்............:-)

PINகுறிப்பு: பதிவின் நீளம்கருதி பாக்கி நாளைக்கு:-)


Wednesday, March 26, 2014

நவநாராயணர் ஒரே இடத்தில்!


முப்பத்தியேழு கிலோ மீட்டர் பயணம். முக்கால்மணி நேரத்தில் வந்து சேர்ந்தோம். மணி இப்போ மூணேகால்தான்.கோவில்திறக்க இன்னும் முக்கால்மணி காத்திருக்கணும். அவசரப்பட்டுட்டோமோ? இன்னும் அரைமணி புடவை செலக்‌ஷனில் இருந்துருக்கலாம் இல்லே:-)

ஊருக்குள் நுழைஞ்சு  கலகலன்னு இருக்கும் கடைவீதிகளைக் கடந்து கோவிலை நோக்கிப்போறோம்.  ஏழு நிலைக்கோபுரம்!

தாழ் திறவாய் .......  மணிக்கதவே  தாழ்திறவாய்!

அருமையான கதவு.  புதுக்கருக்கோடு இருக்கு.


கோபுரவாசலுக்கு முன்னால்  குறுக்கே போகும்  ரோடு. வாசலுக்கு   இந்தாண்டை கோபுரவாசலை நேராப் பார்த்தபடி அனுமன் சந்நிதி.சின்னக்கோவில் என்றே சொல்லணும்.


அவரைத் தாண்டி  இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் போக இடம் விட்டு நிக்கிறார்.

கோவில் மதிலை அடுத்த நிழலில் வண்டியை நிறுத்திட்டு  மெள்ள நடந்து  வந்தோம்.  கள்ளிக்கோட்டை ஓடு வேய்ஞ்ச  கூரைகள்  கொசுவத்தி ஏத்துனது உண்மை:-) கிராமத்து மணம் இன்னும் அழியாமல் இருக்கே!

 மூடியிருந்த கம்பிக்கதவு வழியே அனுமனுக்கு ஒரு கும்பிடு.  கொஞ்சம் அந்தாண்டை கோவில் குளம். சந்நிதித்தெருதானே இது? அகலமானதெருவும் ரெண்டு பக்கமும் திண்ணைகள் வச்ச வீடுமா  அருமை!


 கொஞ்சம் பூச்செடிகளையும் (எல்லாம் ரோஜா)  அலங்காரப்பனை வகைகளையும் விற்பனைக்கு  வச்சுருக்காங்க. பக்கத்தில் எதோ இலைத் தண்டை ,ஒரு அடி நீளத்துக்கு வெட்டி வச்சுக்கிட்டு இருக்கும் நர்ஸரி உடமையாளர்.அவரோட ரெண்டு குழந்தைகளும்  அங்கேயே சுத்திச் சுத்தி வந்து விளையாடிக்கிட்டு இருக்காங்க.  பெரிய நகரத்துக்குழந்தைகளுக்கு  இந்த அதிர்ஷ்டமும் சுதந்திரமும் இல்லை:(

 இந்த இலைகள் சர்க்கரை நோய்க்கு  சிறந்த மருந்தாம் .அந்தத் தண்டுகளை  நட்டு அதுக்கு உயிர்வந்து  முளைத்துச் செடியானதும் விற்பனை செய்வாங்களாம். பெயர்தான் தெரியலைன்னு சொன்னாங்க.

அகலமான திண்ணையில்   தோழிகளோடு உக்கார்ந்து  ஜாலியா பல்லாங்குழியோ, தாயக்கட்டமோ  விளையாடினால் எவ்வளவு ஜோரா இருக்கும்!  ஹூம்..........  காலம்,   கடந்த காலம்.

கதவைத் திறந்து வெளியில் வந்த  பெண்மணியிடம், உங்க திண்ணையை ரசிச்சுக்கிட்டு இருக்கோம் என்றேன்.  முகமலர்ச்சியுடன், உள்ளே வந்து உக்காருங்கன்னு உபசரிச்சாங்க. ஆஹா....கரும்பு தின்னக்கூலியா?

ரொம்பவே வயசான வீடு. பராமரிப்பு அறவே இல்லை:(

வாடகைக்குத்தான்  இவுங்க இருக்காங்களாம்.  கோவில் பட்டர்களின்  குடும்பம்.  கணவர்கள்  இப்போ  பூவுலகில் இல்லையாம். கோவில்நிர்வாகம் புதுசாக் கட்டி இருக்கும் இடத்தில்  இவுங்களுக்கு  வசிக்க இடம் தருவதாச் சொல்லி இருக்காம். ஆனால் அங்கே இன்னும் தண்ணீர் வசதி வரலை. வேலை முடிக்க  இன்னும்  நிதி தேவை என்பதால் தள்ளிப்போய்க்கிட்டே இருக்குன்னு  கவலையோடு சொன்னாங்க.

திண்ணைக்கெதிரில் போட்டுருக்கும் ஆட்டுக்கல் 'அந்தக்காலத்து  எக்ஸஸைஸ் மெஷீன்'  குழவியை  வீட்டுக்குள்ளே கொண்டு போய் வச்சுருக்காங்களாம். இல்லைன்னா குழவியோடு கல்லும் அபேஸ் ஆகிருமாம்:(

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊர் இது.  பல்லவன் நந்திவர்மன் காலத்தில் கட்டி எழுப்பப்பட்டதாம். அப்புறம் சோழர் ,பாண்டியர், சம்புவராயர்கள் (பொன்னியின் செல்வனை ஞாபகப்படுத்திக்குங்க)ஆட்சி  எல்லாம்  நடந்துருக்கு. குடவோலை முறையில்  கிராமத்  தலைவனைத் தேர்ந்தெடுக்கும் முறைகள், விதிகள்  பற்றிய கல்வெட்டு இங்கேதான்  கிடைச்சதுன்னு சரித்திரக்காரர்கள் சொல்றாங்க.

அது என்ன முறையும் விதியும்? தேர்தலில் நிற்பவரின் தகுதிகளாச் சொல்லி இருப்பது  ரொம்பவே சிம்பிளா ஆறே ஆறு சமாச்சாரம்தான்.
 இந்தக் காலத்துக்குப் பொருந்தி வருமா? வரவிடமாட்டாங்க நம்ம அரசியல் வியாதிகள் !

1 சொந்தமா கால் வேலி நிலம் வச்சுருக்கணும். ( இக்கால அளவில் சொன்னால்  கிட்டத்தட்ட  ஒன்னரை ஏக்கர்)


2  தன்னுடைய மனையிலேயே சொந்த வீடு(ம்) இருக்கணும்

3  வயசு 35 க்கு மேல் 70 வரை தான்.  (எழுபத்தியோரு வயசு தாத்தா தலைவனாக முடியாது!)

4  வேதபாஷ்யங்கள், மந்திரப்ரமாணங்கள் எல்லாம் விளக்கி எடுத்துச்சொல்லும் புலமை வேணும்.

5  ஆச்சாரமா இருக்கணும்.

6  முக்கியமா முதல் மூணுவருசம் இந்தப்பதவியில்  இருந்திருக்கக் கூடாது

ஹைய்யோ.....  எல்லாம் அடிபட்டுப்போச்சு!

இப்போதைய  தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரா இருக்கும்  கணேசன் அவர்கள்  அருமையான வலைப்பக்கம் வச்சுருக்கார். அதில் இருந்து கிடைத்த தகவலின் ஒரு பகுதியே மேலே  சொல்லி இருப்பது.   அழகழகான படங்களும் சேதிகளும் நிறைஞ்சிருக்கு. தன்னுடைய ஊரைப்பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லும்  நல்ல மனிதராக(!)  எனக்குத் தெரிகிறார். (அம்மா கட்சி!)
அவரை வாசிக்க இங்கே க்ளிக்கலாம்


ஒவ்வொரு சட்டமன்ற அங்கமும் இவருடைய முறையைப் பின்பற்றினால்  மக்களுக்கு  நன்மையா இருக்கும். செய்வாங்களான்னு தெரியலை. அதான் அம்மா எல்லா எம் எல் ஏக்களுக்கும் லேப்டாப் கொடுத்துருக்காங்கல்லெ!


ஊர்க்கதைகள் பேசிக்கிட்டு  மணியைப் பார்த்தபடி இருந்தோம். நாலு மணிக்கு இல்லை நாலரைக்குக் கோவில் திறந்துருவாங்களாம். அதென்ன ன்னு  கேட்டால் மூணாவது வீடு பட்டர் வீடுதான்.  அவரே சுத்துபட்ட பதினெட்டு பட்டிக்கும் பத்திரம் எழுதும் 'கைங்கர்யமும்' செய்வதால்  கோவில் திறப்பது கொஞ்சம் ஏறத்தாழத்தான் இருக்குமாம்.  போகட்டும்..........மக்கள் சேவை மகேசன் சேவை இல்லையோ!

நாலரை மணிக்குச் சமீபம் கோவிலை நோக்கி வேகமா நடந்து போன ஒருவரைக் காமிச்சு அதோ பட்டர் போறார் என்றார்கள். இருக்க இடம் கொடுத்தவங்களுக்கு நன்றி சொல்லிட்டுப் பின்னாலேயே நாங்களும் ஓடுனோம்.


சுந்தரவரதராஜப்பெருமாள்.  உத்திரமேரூர்.






அழகான கோபுரவாசல் கதவைக் கடந்து உள்ளே அடியெடுத்து வச்சால் பரந்த வெளிப்ரகாரம். எதிரில் கொடிமரமும் பலிபீடமும்.  ஒரு ஏழெட்டுப்படிகள் மேலேறி முன்புற மேடையின் வழியாக் கருவறை முன்மண்டபத்துக்குப் போறோம். மேடையின் ஒருபக்கம் கொடிமரத்தையொட்டிய சின்ன சந்நிதியில் பெரிய திருவடி.


கருவறைக்கு முன் இருக்கும் திரைக்குள் பட்டர் நுழைஞ்சார்.  'இது நம்ம   பெஸண்ட் நகர் மஹாலக்ஷ்மி கோவில் டிஸைன் மாதிரியே  இருக்குமு'ன்னு  கோபாலிடம் சொல்லிக்கிட்டு இருந்தேன்.  சத்தமாச் சொல்லிட்டேனோ என்னவோ?   சட்னு திரையைத் திறந்து  முகம் நீட்டிய பட்டர்,  'இந்தக்கோவில் கட்டி 1250 வருசமாச்சும்மா. உங்க கோவில்(?!) கட்டி இப்பதான்  25 வருசமாச்சு. இதைப் பார்த்துதான் அதைக் கட்டுனாங்க'ன்னார்.

உண்மைதான்.  இந்த மாடக்கோவில் டிஸைன்தான்  அந்த மாடக்கோவில்.

ஒன்பது பெருமாள். 'உலகத்துலேயே  இப்படி ஒன்பது பெருமாள்  ஒரே இடத்தில் இருப்பது இங்கே மட்டும்தான்'னு உபரித்தகவல் கொடுத்தார் பட்டர்.

மூலவர் சுந்தரவரதர். தாயார் ஆனந்தவல்லி.

உட்ப்ரகாரத்துக்கு  நாலு படி இறங்கணும்.  மூலவரைச் சுற்றி கருவறைக்கு வெளியே மூணு பக்கங்களிலும்  அச்சுதவரதர், அநிருத்தவரதர்  கல்யாணவரதர் என்று தனிச்சந்நிதிகள் . அஞ்சாறுபடி மேலேறி ஒவ்வொருவரையும் கம்பிக் கதவின் வழியா  தரிசிச்சுக்கலாம்.



கருவறையை ஒட்டி மாடிக்குப்போய் கருவறை விமானத்தின் மேல் நாலு புறமும்  இருக்கும் நர நாராயணர் (கிருஷ்ணனும் அர்ஜுனனும்)  வைகுண்ட வரதர், யோக நரசிம்மர்,  லக்ஷ்மிவராஹர்  சந்நிதிகளைச் சுத்தி வந்து ஸேவிச்சுக்கிட்டு  இன்னுமொரு மாடி ஏறிப்போனால்  ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்ட  ரங்கநாதரை தரிசிக்கலாம்.  எங்களுக்கு ரங்கனை ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கலை:(  மார்கழி எண்ணெய்க்காப்பில் இருக்காராம்.




 மேலே:  எம் எல் ஏ விடம்  சுட்ட  இரண்டு  படங்கள். திரு.கணேசனுக்கு நன்றி..

போகட்டும்.  நின்றும் இருந்தும்  கிடந்தும்  அருள்புரியும் ஒன்பதில், எட்டு தரிசிக்க முடிஞ்சதே,  அதிர்ஷ்டம் இல்லையோ?

இனி மார்கழியில் நோ பெருமாள் என்பதை நினைவு வச்சுக்கணும். நமக்கு  விடுமுறைகாலம் மார்கழி என்பதால்........... அப்பதானே  ஊருக்கு வரமுடியுது:(

வெளிப்ரகாரத்தில் அழகான மண்டபங்கள். ஆனால் பராமரிப்பு போதாது:(

ஆழ்வார்கள் வந்து தரிசனம் செஞ்சு, பெருமாளை வாழ்த்திப்பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கும் இந்தக்கோவில் ஏன் 'அந்த நூற்றியெட்டில் ' வரலைன்னு எனக்கு ஒரேகுழப்பம் கேட்டோ!!!!

தரிசனம் முடிச்ச கையோடு கிளம்பி நேராச் சென்னைதான்.