Wednesday, March 12, 2014

வரதப்பா வரதப்பா...காஞ்சிவரதப்பா......


கையில்  இருக்கும் பட்டியலை சரி பார்த்தப்ப இதுவரை எல்லாம் நல்லாவே  நடந்துருக்கு. அதான் 'அவன்' கீதையிலேயே சொல்லிட்டானே:-) காஞ்சியில் போகவேண்டிய  பதினைஞ்சு திவ்ய தேசங்களில்  எட்டு நேத்து  அவதிஅவதியா  முடிச்சாச்சு.  இன்னும் ஏழு பாக்கி. இதில் ஒன்னைத் தவிர மற்ற ஆறும் ஏற்கெனவே தரிசிச்சு இருந்தபடியால்  இன்னொருமுறை போகணும் என்பதைத் தவிர அவ்வளவான எதிர்பார்ப்பு இல்லை.

காலைக்கடமைகளை(ஜி ஆர் டி ப்ரேக் ஃபாஸ்ட்)  முடிச்சுட்டு  ஏழே முக்காலுக்குக் கிளம்பி  எட்டுமணிக்கு வரதனைப் பார்க்க வந்திறங்கினோம். காஞ்சி தெருக்கள் பரபரப்பில்லாமல்   இருக்கு. பசேல் என்னும் துளசி ரெண்டு முழம் (என் தலைக்கு இல்லை, கேட்டோ!)  கோபாலின் கையில்.

தொன்னுத்தியாறு அடி உசரமான  அழகான கோபுரம். கோபுரவாசலுக்குள் நுழைஞ்சதும்  உசரமான தூண்களுடன் ஊஞ்சல் மண்டபம் ரெண்டு! . அதன் தலையில்  மகுடம் வச்சது போல ஒரு குட்டிக்கோபுரம்  அழகோ அழகு!  நமக்கிடதுபக்கம் நூற்றுக்கால் மண்டபம். மூலையில் தொங்கும் கற்சங்கிலிகள்  எப்பவும் தரும் ஆச்சரியத்தை இப்பவும் தந்தன. இப்பப் புதுசாக்  கம்பிக்கதவு போட்டு பூட்டிவச்ச மண்டபத்துக்குள் இதுவரை போய்ப் பார்க்க ச்சான்ஸே கிடைக்கலை:(

போன முறை 2006 இல் வந்தப்ப வலைத்தடுப்புகள் இல்லை.  மக்கள் பாழாக்க ஆரம்பிச்சதும்  போட்டு வச்சதா இருக்கணும்)


நம்ம ஸ்ரீ, இணையநண்பர்களுக்காக!  பதிவில்  மண்டபத்துக்குள்ளில் இருக்கும் சிற்பத்தூண்களின் படங்கள் போட்டுருக்கார். அட்டகாசமா இருக்கு.




நல்ல பெரிய வளாகம், கொஞ்சம் சுத்தமாகவும் இருக்கு. அங்கங்கே தனித்தனி சந்நிதிகளும், சின்னசின்ன நாற்கால் மண்டபங்களும்,  ப்ரகாரக் கிணறுமா   அருமை! இருபத்திநாலு ஏக்கர் நிலத்தில்  கோவிலாம்.  பெரிய தூண்களுடன்  உசரத் திண்ணை அமைப்பும், நாலஞ்சு படி  இறங்கிப்போகும் படி  பிரகாரமுமா இருக்கு.

பிரகாரம் சுற்றிப் பாதி வழியில் மூலவரை தரிசிக்கப் படியேறினோம். ஒரு பத்துப்படிகள். பிறகு வலப்பக்கம் திரும்பினால்   மாடிக்குப்போகும் வழி இன்னும் 24 படிகளுடன்.  லேசா இருட்டுதான். ஒருவேளை  சாயங்காலம் விளக்கு போட்டு வைப்பாங்க போல.

(படிக்கட்டுகள்  படம் நம்ம மோகன் குமார் (வீடுதிரும்பல்)  பதிவிலிருந்து. அவருக்கு நம் நன்றி. நூற்றுக்கால் மண்டப வீடியோவும் போட்டுருக்கார்!)

மாடி மண்டபம்  முழுசும்  கற்றூண்கள் எண்ணிக்கைக்கு இணையா  கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வரிசையில் போகவிட,   இடுப்புயரக் கம்பித்தடுப்புகள் வரிசை, மண்டபத்தின் அழகைச் சுத்தமாக் கெடுத்து வச்சுருக்கு:(  தூணில் இருக்கும் அழகிய சிற்பங்களை ஏறெடுத்தும்  பார்க்க இடம் கொடுக்கலை:(  ப்ச்........



கோபால் விடுவிடுன்னு  பல்லி பார்க்க  ஓடறார்.  வேணாம் எதுக்குன்னால் கேட்டால்தானே?  பல்லிக்கப்புறம்தான் பெருமாளாம்!  பல்லி தரிசனத்துக்குத் தனிக் கட்டணம். முந்தி ஒன்னு,  இப்போ மூணு ரூபாய். தனியா அங்கே இதுக்குன்னு ஒரு கவுண்ட்டர் வேற! பெருமாளுக்கு  எப்பவும்போல்  இலவச ஸேவைதான். பல்லிக்கு இருக்கும் வருமானம் பெருமாளுக்கு இல்லை, கேட்டோ!

போன முறை பல்லி:-)

அப்போ திறந்த மண்டபமா இருந்ததை இப்போ ப்ளைவுட் போட்டுத் தடுத்து 'பல்லியறை'  ஆக்கிட்டாங்க!  சீட்டுக்கிழிச்சுக்கொடுக்க  ரெண்டு நபர்கள் வேற! வரிசையா உள்ளே அனுப்புனதும்  நேரே ஏணிதான். ரெண்டடி தள்ளி நிக்கவும் இடமில்லை. ஏணியிலேறி மேலே விதானத்தில் ஒட்டிக்கிடக்கும் தங்கவெள்ளி பல்லிகளைத் தொட்டுக்கிட்டே  அடுத்த பக்கத்தில் இறங்கிடணும்.  ஜஸ்ட் ஒன் வே!

நம்ம பெருமாள் நின்ற திருக்கோலத்தில்  அபய ஹஸ்தரா ஸேவை சாதிக்கிறார் . இவன் பேரருளாளன். தேவராஜன், அத்திகிரி வரதர். இந்த  அத்திகிரியாரின் கதையும்  நம்ம ப்ரம்மா X சரஸ்வதி சமாச்சாரத்தின் தொடர்ச்சிதான். சரஸ்வதி அனுப்பி வச்ச அசுரர்களை  விஷ்ணு முடிச்சு மேலே அனுப்பியதும்,  ப்ரம்மா நிம்மதியாகத் தன் வேள்வியை முடிச்சார். யாக குண்டத்தில் இருந்து  பெருமாள் தோன்றி வரம் அருளினார்.

மனமகிழ்ந்துபோன ப்ரம்மா அத்திமரத்தால் ஆன  பெருமாளின் திருவுருவம் ஒன்றை இங்கே ப்ரதிஷ்டை செஞ்சார்.  அத்திகிரியாரும்  அவரை தரிசிக்க வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருள்கிறார் என்பது ஐதீகம். வரதராஜனல்லவா!

ப்ரம்மா செஞ்ச அத்திமர வரதர் திருவுருவம், இங்கே உள்ள கோவில்குளமான அனந்த சரஸில்   இருக்கும் ரெண்டு  நீராழி மண்டபத்தில், ஒரு நீராழி மண்டபத்தின் அடியில் உள்ள அறையில் வைக்கப்பட்டிருக்கு.  நாப்பது வருசத்துக்கு ஒரு முறை அவரை வெளியே  கொண்டுவந்து  கோவில் மண்டபத்தில் இருத்தி  நாப்பத்தியெட்டு நாட்களுக்கு (ஒரு மண்டலம்)  பூஜை செய்து அற்புதமான விழா கொண்டாடி,  திரும்பவும் தண்ணீருக்கடியில் இருக்கும் அறையில் கொண்டு போய் வச்சுடறாங்க.  போன 1979 இல்  பூஜையை ஏத்துக்கிட்டுப் போன  இவர்  இன்னும் அஞ்சு வருசத்தில் (2019 )திரும்ப வர்றார்.

இங்கே பட்டர்கள் இன்னும்   மனுஷத்தன்மையை இழக்கலை.(டச் வுட்!) நாம் கொண்டு போகும் துளசியை  வாங்கி பெருமாளுக்குச் சாத்தறாங்க.  அவர் காலடியில்  இருக்கும் சரம் சிலசமயம் நமக்குப் ப்ரசாதமாக் கிடைக்குது.  தாயாருக்கு இங்கே பெருந்தேவி என்றபெயர்.

அதென்ன  ரெவ்வெண்டாய்  எல்லாமே!  ரெண்டு கொடிமரங்கள்  ஒரே இடத்தில் இருக்கே!



திரும்ப வெளிப்ரகாரத்திற்கு  வந்தோம். சேஷ தீர்த்தம் கோவில்குளம்.  அங்கே மேல்மருவத்தூர் பக்தர்களின் கூட்டம். துணிகள் துவைத்துக் காயவைப்பதும், குளத்தில் குளிப்பதுமா  இருக்காங்க. எல்லாத்துக்கும் மேலே சிலர் குளக்கரை மண்டபத்தில், ஆற அமர உக்கார்ந்து  பேசிக்கிட்டே  பேஸ்ட்டை அமுக்கி  டூத் ப்ரஷில் வச்சுப் பல்தேய்ச்சு கீழே துப்பிக்கிட்டு இருக்காங்க.  இது கோவிலுக்குள் இருக்கும் திருக்குளம் என்பதுகூட  மறந்து போச்சோ என்னமோ:(    ப்ச்....எனக்கு மனசுக்குக் கஷ்டமா போச்சு..........  பெருமாளே!!!!

எப்படியோ நாப்பது வருசத்துக்கு ஒரு முறை குளத்து அழுக்கெல்லாம் வெளியே போவது கேரண்டீ.  அத்திகிரி வரதரை வெளியே கொண்டு வர, குளத்துத் தண்ணீரை பம்ப் வச்சி  இறைச்சு வெளியே விடுவாங்களாம். பூஜை முடிஞ்சு அவர் அறைக்குப்போனதும் புதுத்தண்ணீர் ரொப்புவாங்க.

குளத்துக்கு அந்தப்பக்கம்  சக்கரத்தாழ்வார் சந்நிதி.  புதுக்கட்டிடம். காங்க்ரீட்.  இதுவரை  வரதனின்  கற்கோவிலை பார்த்த கண்களுக்குக் கொஞ்சம் ...... கரிப்பு:(  பதினாறு கைகளுடன் பெரிய சுதர்ஸனர். மக்கள் விளக்கேற்றிக் கொள்ள  சந்நிதிக்கு வெளியே  ஸ்டேண்டு அமைச்சுருக்காங்க.  ரொம்பவே நல்லது. புகையால்  உள்ளே சந்நிதி பாழாகாமல் இருக்கும்!

கோவில் நந்தவனம் இதைச் சுற்றித்தான். செடிகளின் தேவைக்கு  புதுக்கிணறும்  ஒன்னு இருக்கு.



தலவிருட்சமான அரசமரத்தடியில் நாகர்கள் இருக்காங்க.

ஒருமணி நேரம்  போனதே தெரியலை. திவ்யதேச தரிசனம்  மனசுக்கு  நிறைவுதான்.  இந்தக் கோவிலும் அந்த  நூற்றியெட்டில் ஒன்னுன்னு தனியாச் சொல்லணுமா என்ன:-)

சலோ..... அடுத்த  திவ்ய தேசத்துக்கு!

தொடரும்..............:-)



PIN குறிப்பு:  நம்ம கலெக்‌ஷனில் இருக்கும் படங்களில் சில  இந்தப்பதிவில் இருக்கு. ஏழே வருசத்தில் எத்தனை மாற்றங்கள்!



13 comments:

said...

உறவினர்கள் அங்கு இருப்பதால்... பலமுறை தரிசனம் செய்ய வாய்ப்பு கிட்டியது... படங்கள் அருமை அம்மா...

வாழ்த்துக்கள்...

said...

படங்கள் அருமை
நன்றி

said...

அருமையான படங்கள்.....

பணி நிமித்தம் காஞ்சிபுரம் சென்றது. பல கோவில்களை பார்க்க முடியவில்லை அப்போது.......

மீண்டும் ஒரு முறை விஸ்ராந்தியாக இரண்டு நாட்கள் தங்கி பார்த்து வர வேண்டும்..... அடுத்த பயணத்தின் போது முயற்சிக்கிறேன்!

said...

வரதனைப் பார்த்து ஆகின நாட்கள் ,வருடங்கள் பதினெட்டு. படங்கள் அவனை மீண்டும் கொண்டுவந்து அருகில் விட்டன. கண்ணாடி அறைப் பார்க்கவில்லையா. எவ்வளவு பெரிய கோவில் துளசி. மாமியாருக்கு வரதன் அழகில் மயக்கம் உண்டு. கேட்டதும் கொடுப்பவனாமே.அத்தனை புண்ணியமும் உங்களுக்கு வரட்டும்பா.

said...

நேரே போய் வந்தது போல
உணரச் செய்துவிட்டீர்கள்
புகைப்படங்களும் வர்ணணைகளும்

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஆஹா... கொடுத்து வச்சவர் நீங்க!

said...

வாங்க கரந்தை ஜெயக்குமார்.

ரசனைக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தடுக்கி விழுந்தால் கோவில்தான் காஞ்சியில்.

நான் கண்டது இதுவரை ஒரு கால்வாசிதான்.

நல்லதா ஒரு கைடு சர்வீஸ் இருந்தால்
அட்டகாசமான பயணமாக இருக்கும்.

தொழில்முறையில் ஏன் இதை பிரபலமாக்கலை?:(

said...

வாங்க வல்லி.

அத்தனை பெரிய கோவிலில் சந்நிதிகள் எங்கெங்கேன்னு கூடத் தெரிவதில்லைப்பா:( எல்லாம் மூடிவேற இருக்கு!

இதே ஸ்ரீரங்கத்தில் பாருங்க. அல்மோஸ்ட் எல்லா சந்நிதிகளையும் திறந்து வச்சதுமில்லாமல், வெளியே வந்து நின்னே நம்மை தரிசனத்துக்கு வாங்க வாங்கன்னு கூப்பிட்டு தரிசனம் செஞ்சு வைக்கிறாங்க.

தக்ஷணை என்ற கொக்கி இருக்குன்னாலுமே... பத்து ரூபாயில் என்ன கோட்டையா கட்டிடப்போறோம்?

எல்லாத்தையும் விட்டுவிடாமல் பார்த்தோம் என்ற திருப்தி கிடைக்குதே!

கிடைத்த, கிடைக்கும் புண்ணியங்கள் அனைத்தையும் தமிழ்பதிவுலகத்துக்கும் நட்புகளுக்கும் பங்கு வச்சாச்சுப்பா:-)

said...

வாங்க டொக்டர் ஐயா.

வருகைக்கும் ரசனைக்கும் மனமார்ந்த நன்றி.

said...

இந்தியப்பயணத்தில் தர்சித்திருந்தேன். மீண்டும் தர்சித்துக்கொண்டோம் அழகியபடங்களுடன். நன்றி.

said...

வாங்க மாதேவி.

கோவில் இல்லாத பயணங்களே நமக்கில்லையேப்பா:-)

said...

கடைசியில் நீங்க சொல்ற இந்த பதிவு(7 வருஷத்துக்கு முந்திய படம்) லிங்க் வரலையே ?