Monday, March 17, 2014

திருக்கள்வனூர் போகலாமா?

ரொம்ப தூரம் போகணுமோ? ஊஹூம்..... நம்ம உலகளந்தான் கோவிலிலிருந்து, வெறும் முன்னூறுமீட்டர்தான். நடந்தால் நாலே நிமிசம். கோபுரவாசலின் முன் நிக்கறோம். அட! இதென்ன காமாக்ஷி கோவில் என்று போட்டுருக்கு?

 ரொம்பச்சரி. கள்வர்பெருமான் இங்கேதான் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கார்! எத்தனை முறை இந்தக்கோவிலுக்கு வந்துருக்கோம். சங்கதி இதுவரை தெரிஞ்சுக்கலையே:( 

கோபுரவாசலைக் கடந்ததும் கண்முன்னே கொடிமரத்துக்குக்கிட்டே 'சாந்தி' நல்லா குளிச்சு முடிச்சு சிம்பிளா அலங்கரிச்சுக்கிட்டு பக்தர்களை வரவேற்கும் வேளையில் பாகருக்கும் சம்பாதிச்சுக்கொடுத்துக்கிட்டு இருக்காள். அவரோ, 'எல்லாம் அவளே பார்த்துக்கட்டுமு'ன்னு பக்கத்திலே ஜாலியாத் தரையில் சின்ன துண்டு விரிப்பில் அமர்ந்த திருக்கோலம். ரெண்டு பக்கமும் ஒவ்வொரு கூடை. டைரக்ட்டா கூடையில் வருமானத்தை வைக்க , சாந்தியை இன்னும் பழக்கலை :(

அவள், கையில் தருவதை அவரே கஷ்டப்பட்டு வாங்கிக் கூடையில் போடறார்! பாவம் குழந்தை! சோம்பலில்லாமல் பக்தர்களிடம் வாங்கிக் குவிக்குது! கூட்டமே இங்குதான் என்று தோணல்.

 கோபாலுக்கு 'சாந்தியின் ஆசி' வேணுமாம்!

 கொடிமரத்துக்கு நேரா உள்ளே அம்மன் சந்நிதி இருக்கு. ஆனால் கம்பி வலைகள் அடிச்ச சட்டங்களை வெளிப்புறம் முழுசும் போட்டு மூடி வச்சுருக்காங்க. தப்பித்தவறி கூட உள்ளே அரையிருட்டில் இருக்கும் எதுவும் நம்ம கண்ணில் படக்கூடாதுன்னோ? பக்கவாட்டு வழியாக மூலவரை தரிசிக்கப்போறோம். புள்ளையாருக்கு ஒரு கும்பிடு.

 கட்டங்கட்டிப்போட்டுருக்கும் கம்பித்தடுப்பு வழியாக முன்னேறிப்போறோம். உள்ளே அவ்வளவாக் கூட்டம் இல்லை. கருவறையின் உள்ளே கொஞ்சதூரத்தில் காமாக்ஷி அமர்ந்த கோலத்தில்.

 இது ஒரு சக்தி பீடக்கோவில். அம்மனின் உடல்பாகங்கள் அம்பத்தியொன்னா பூவுலகில் தெறித்து விழுந்ததில் ஒட்டியானம் விழுந்த இடம் இது! ஆஹா.... ஒட்டியானம்!! மறந்திருந்ததை நினைக்கும்படி ஆச்சு.

 அம்மனின் உடலைத் துண்டு போட்டது யார்? அண்ணன் தான். விபரம்
வேணுமா?

குடும்பச்சண்டையில் மனைவி தீக்குளிப்பு :( 

 ரொம்பவே கோபாவேசத்தோடு (இருக்காதா பின்னே?) முந்தி இருந்த காமாக்ஷியை எப்படி சாந்தப்படுத்தலாமுன்னு யோசிச்ச ஆதிசங்கரர், அம்மனுக்கு முன்னால் ஒரு ஸ்ரீசக்கரத்தைத் தன் கையால் ப்ரதிஷ்டை செஞ்சுருக்கார். அன்று முதல் அம்மா சாந்த ஸ்வரூபி. கிளி கொஞ்சும் முகம்!

அம்மன் உக்கார்ந்திருக்கும் ஆஸனத்தின் நான்கு கால்களும் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன் என்றும் மேற்பலகை சதாசிவன் என்றும் உருவகப்படுத்திச் சொல்வது இங்கே ஐதீகம். அம்மன் அமர்ந்திருக்கும் கருவறை மண்டபம் காயத்ரி மண்டபமாம்.இருபத்தி நான்கு தூண்களோடு அமைஞ்சுருக்கு.

 கோவிலுக்கு வயசே கணக்கிடமுடியாது. த்வாபர யுகத்தில் வேதவ்யாசரே , மூலவரை இங்கே ஸ்தாபிச்சதாகச் சொல்வதுண்டு. இப்ப இருக்கும் கோவில் சுமார் நானூறு வருசங்களுக்கு முன் கிருஷ்ணதேவராயர் மன்னரால் கட்டுவிக்கப்பட்டது. முழுசும் தங்கத்தாலான காமாக்ஷி விக்கிரஹம் அப்போ இங்கே இருந்துருக்கு. காஞ்சி காமகோடி பீடமே (சங்கர மடம்) கோவிலின் பொறுப்பை ஏற்று பூஜைகளை நடத்திக்கொண்டு இருந்தார்கள். அந்நியர் படையெடுப்பையொட்டி, சங்கரமடம் இடம் பெயர்ந்தப்ப தங்கக் காமாக்ஷியும் கூடவே போயிருக்காள். மறுபடி சங்கரமடம் காஞ்சிக்குத் திரும்பி வந்த போது, 'தங்கமகள்' அங்கேயே தஞ்சாவூரில் தங்கி விட்டாளாம். அடடா..... தஞ்சைப்பயணத்தில் பார்க்கலையே:( தஞ்சை பங்காரு காமாக்ஷி கோவிலுக்கு ஒருதரம் போகணும். 

காஞ்சி முழுசும் காமாக்ஷியின் அதிகாரமே! இங்கே காஞ்சியில் இருக்கும் சிவன் கோவில்கள் ஏராளம் (ஆயிரத்து எட்டாமே!) என்றாலும் எங்கேயும் அம்மன் சந்நிதிகளே தனியாக இல்லை. எல்லாக் கோவில்களுக்கும் சேர்த்து ஒரே அம்மன் காமாக்ஷி மட்டுமே. அதுவும் இங்கே தனிக்கோவிலில்!

 காமாக்ஷி கோவிலைச் சுற்றியேதான் நகரம் முழுசும் அமைஞ்சுருக்கு. மற்ற கோவில்களின் தெய்வங்கள் திருவுலா வரும்போது காமாக்ஷி கோவிலையும் சுற்றித்தான் ஊர்வலம் போறாங்க.

திருக்கள்வப்பெருமாள் இங்கே இருக்கார். ஆழ்வார்கள் பாடி மங்களசாஸனம் செஞ்சு திவ்யதேசக்கோவில்களில் ஒன்னா இவர் சந்நிதியை ஆக்கி இருக்காங்க என்று தெரிஞ்சதால் கள்ளனைப் பார்க்க ரெண்டு முறை கோவிலுக்குள் வலம் வந்தும் அவர் சந்நிதியைக் கண்டுபிடிக்கமுடியலை:(

 நாம் நுழைஞ்ச கோபுரவாசலுக்கு நேரே பின்பக்கம் இருக்கும் கோபுரவாசல் பகுதியில் என்னவோ விசேஷமுன்னு கூட்டம் பலமா இருந்துச்சு. ஒரு குருக்களிடம் திருக்கள்வன் சந்நிதி எங்கேன்னு கேட்டப்ப, காயத்ரி மண்டபத்தின் (நமக்கு)இடதுபுறம் இருக்குன்னார்.

திரும்பக் கோவிலுக்குள் வந்து அந்த இடப்புறத்துக்குப்போக வழி தேடி கொஞ்சம் அலைஞ்சபிறகு கம்பித்தடுப்பு ஒன்னு கண்ணில் பட அதுக்குள்ளே போய் இடப்பக்கம் சேர்ந்தோம். அங்கே நின்னால் ஒரு கண்ணாடியில் தெரிகிறார் கள்வர். அம்மனின் கருவறைச் சுவர்பக்கம் இருக்கும் தூணில் உள்ளவரை, நமக்குக் காண்பிக்க ஒரு சின்னக் கண்ணாடியில் பிம்பம் தெரிவது போல் அமைச்சுருக்காங்க. (சித்தூர் ராணி பத்மினியை, அலாவுதீன் கில்ஜிக்குக் காட்டுனமாதிரி) முதலில் என் ஊனக்கண்களுக்கு ஒன்னுமே தெரியலை. கோபால்தான் கண்டுபிடிச்சு ச் சொன்னார். கண்ணாடியில் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கிட்டு கும்பிட்டேன். இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனிச்சால் கண்ணாடியில் பெருமாள் பக்கத்தில் மஹாலக்ஷ்மி அவரை வணங்கும் நிலையில் தெரியறாங்க. (கொஞ்சம் பெரிய நிலைக்கண்ணாடியை வச்சுருக்கப்டாதோ? )

திருடனைப்போல் ஒளிஞ்சிருந்து, ஸேவை சாதிப்பதால் கள்வப்பெருமாள் என்று பெயர் வந்துருக்கு போலன்னு நினைச்சேன். ஒட்டியானம் விழுந்த இடத்தில் அதைக் கொண்டு போக கள்வனும் வரத்தானே வேணும்! 

 காமகோடி பீடத்தின் கைங்கர்யமா , காமாக்ஷிக்கு ஒரு நவரத்தின ஒட்டியாணம் செஞ்சு போட்டுருக்காங்க என்பது உபரித் தகவல்.
மலர்மாலைகளும் பூச்சரங்களுமா இருக்கும் கோலத்தில் ஒட்டியானம் கண்ணுக்குப் புலப்படலை எனக்கு. 

காமாக்ஷியின் கோவிலில் நடக்கும் அமர்க்களங்களையும் விசேஷங்களையும் பார்த்த பெருமாள், அங்கே என்னதான் நடக்குதுன்னு தெரிஞ்சுக்க வந்ததாகவும், அங்கே அவர் மனைவி சாக்ஷாத் மகாலக்ஷ்மியே காமாக்ஷியுடன் இருப்பதைக் கண்டதாகவும், மனைவியின் அழகு இதுவரை அவர் பார்க்காத அளவில் ஜொலிப்பதைப் பார்த்து மயங்கிப்போய் ஒளிஞ்சுருந்து கண்கொட்டாமல் மனைவியின் அழகை ரசித்துக் கொண்டிருப்பதாகவும் ஒரு புராணக்கதை(யும்) இருக்கு இங்கே! ஆமாம்... மனைவியின் அழகை எதுக்கு ஒளிஞ்சு நின்னு பார்க்கணும்? நேரடியாப் பார்த்து நீ அழகாய் இருக்கிறாய் (எனக்குப் பயமாக இருக்கிறது!)என்று சொல்லப்டாதோ?  தேவமனித கணங்களில் இது ஒரு பொதுக்குணம்:( 

கோவில் அஞ்சு ஏக்கர் பரப்பில் அமைஞ்சுருக்கு. அம்மனுக்கு தங்க விமானம் உண்டு. கோவில்குளமும் ரொம்பப்பெருசு. குளத்தையொட்டியே யானைக் கொட்டாரம் . மூணு யானைகள் இருக்கு.

 குளக்கரையில் பெருமாள் நின்றும், இருந்தும், கிடந்த கோலங்களில் படிப்படியா ஒரு மூணடுக்கு மண்டபத்தில் (சின்னது) இருப்பதை தோழியுடன் நாப்பது வருசத்துக்கு முன் கண்டது நினைவில் இப்ப இந்தப்பதிவை எழுதும்போதுதான் நினைவுக்கு வருது. அடடா..... கோட்டை விட்டுட்டோமே.... (நெவர் மைண்ட் நெக்ஸ்ட் டைம்) 

கோவிலுக்குள் படம் எடுக்க அனுமதி இல்லை போல. கெமெரா வகைகளுக்கான கட்டணம் சொல்லும் தகவல் பலகைகளையும் காணோம். ஆனால் பாகர் மட்டும் யானையைப் படமெடுக்கும் பக்தர்களை, படம் எடுக்காதீங்கன்னு ' வாய்ச்சொல் வழியே ஒப்புக்கு வி(மி)ரட்டிக் கொண்டிருந்தார்.

வெளிப்ரகாரம் சுற்றி வந்தப்ப மேடையில் ஒரு மரம். தலவிருட்சமோ என்னவோ? கோவில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்னை வச்சுருந்தது. அடடா.... இன்னும் மக்கள் மனநிலையைப் புரிஞ்சுக்கலையே:( செய்யாதேன்னு சொன்னால் சனம் செஞ்சுட்டுத்தானே மறுவேலை பார்க்கும்!
கீழ்க்கிளைகளைப் பார்த்தாலே தெரியுது:(

கோவில் நிர்வாகமுன்னதும் இன்னொன்னு கூடச் சொல்லத்தோணுது....... கோபுரவாசலைக் கடந்து உள்ளே வரும்போதே அன்னை காமாக்ஷி, ஆதிசங்கரர், காமகோடி மடத்தின் கடைசி மூன்று பீடாதிபதிகள் படங்கள் எவர் பார்வையிலிருந்தும் தப்ப முடியாது. மடம் செய்யும் நல்ல காரியங்களையும் கீழே எழுதிப் போட்டுருக்காங்க. ஆலயங்களின் முக்கிய பணியே சமூகசேவைதான் என்பது புரிகிறது.


இந்தச் சுட்டியில் நம்மாளுங்களைக் குளிப்பாட்டறாங்க. அஞ்சரை மினிட் ஆனந்தம்!   

'யானையைப் பார்க்கலையா ? ஒரு யானை கூடவா இல்லை?'ன்னு கேட்டுக்கிட்டே இருந்த சசிகலாவுக்கு இப்போ திருப்தியாக இருக்கட்டும்:-)

 தொடரும்..........:-)


10 comments:

said...

திருக்கள்வனூர்......

சிறப்பான படங்கள் மற்றும் தகவல்கள். காஞ்சி செல்லும் ஆசை வலுத்துக் கொண்டே இருக்கிறது.....

அடுத்த பயணத்தில் சென்று விடுவது என முடிவு செய்துவிட்டேன். :)

said...

நீ அழகாய் இருக்கிறாய்... எனக்குப் பயமாக இருக்கிறது... ஹா.. ஹா... ரசித்தேன் அம்மா... வாழ்த்துக்கள்...

படங்கள் அனைத்தும் அருமை...

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நல்ல முடிவு. குறைஞ்சபட்சம் ரெண்டு நாள் தங்குவது போல பயணம் அமையட்டும் என வாழ்த்துகின்றேன்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஆஹா.... கவனிப்புக்கு நன்றி:-)

said...

அடடா.... இன்னும் மக்கள் மனநிலையைப் புரிஞ்சுக்கலையே:( செய்யாதேன்னு சொன்னால் சனம் செஞ்சுட்டுத்தானே மறுவேலை பார்க்கும்!//



அது தானே!

கோவில் யானைகள் மிக அழகு.

said...

:)) இப்போ தான் திருப்தியா இருக்கு . ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மூணு யானை !!! குளியலும் அழகு !! ஒவ்வொரு கோவிலா எங்களுக்கும் தரிசனம்.
வல்லிஅம்மா சொன்னது போல் உங்களுக்கு கோடி புண்ணியம் . நன்றி துளசி :))

said...

யானைகள்,காமாட்சி அருமை. மீன்களுக்குப் பொரி போடவில்லையா.பெரிய பெரிய மீன்கள் பார்த்த நினைவு. திருக்கள்வன் யார் இங்கே. அழகர் பெருமானா இல்லை வேறு ஒருவரா. இவ்வளவு பிரம்மாண்டமான கோவிலை இத்தனூண்டு நேரத்தில் பார்த்தது ஆச்சரியமே. துளசி.

said...

வர வர தலைப்பு வைப்பதில் புதிய பாணியை கடைபிடிக்கத் தொடங்கி விட்டீங்க. மறுபடியும் சொல்கின்றேன். தயவு செய்து பாதி பதிவுகளையாவது பிடிஎப் ஆக மாற்றி விடவும்.

said...

திருக்கள்வனூர் அருமை.

said...

துளசியம்மா, பதிவு மிகவும் அருமை. காஞ்சிபுரம் எங்கள் ஊர். மேலும் காமாக்ஷி என் இஷ்ட்ட தெய்வம் :)

கள்ளர் பெருமான் பெயர்க்கான கதை இதோ:

ஒரு முறை தன் அழகில் கர்வம் கொண்ட லக்ஷ்மி மேல் கோபம் கொண்ட மகாவிஷ்ணு, அவளை அரூபமாகப் போகும் படி சாபமிட்டார். மகாலட்சுமி, இவ்விடம் வந்து காமாட்சியை நோக்கி தவமிருந்து, தன அழகிய ரூபத்தை மீண்டும் பெற்றார். மேலும் அழகு பெற்ற தன மனைவியை கள்ளத்தனமாக பார்க்க வந்தாராம் பெருமாள். அதனாலேயே அவர் கள்ளர் பெருமான்! காமாட்சி சன்னதியின் இடப்புறம் அரூப லக்ஷ்மி சன்னதி உண்டு. காமாக்ஷியின் குங்குமத்தைப் பெற்று அதை அரூப லக்ஷ்மியின் மேல் சாற்றி பின் அதை இட்டுக்கொண்டால் நினைப்பது நிறைவேறும் என்பது ஐதீகம்.