Saturday, March 29, 2014

நடந்தது என்ன? (பார்வையின் தொடர்ச்சி)

பொதுவா பல் மருத்துவம் பார்த்துக்கப் போவோமில்லையா, அப்போ   வலி தெரியாமல் இருக்க ஒரு ஊசியை  எந்தப்பல்லோ அந்தப்பல்லுக்கிட்டே போடுவாங்க.  வாயிலே ஊசியான்னு பயப்படவேணாம். அதுக்கு முன்னால் ஊசி குத்தும் வலி தெரியாமல் இருக்க  ஒரு மருந்தை  தடவி விடுவாங்க நம்ம பல் மருத்துவர். (இவுங்களும் இந்தியர்.  பம்பாய் பஞ்சாபி!)

அப்ப கண்ணுக்கு?  கண்ணூசி இருக்குமோன்னு உள்ளூர ஒரு சின்ன (!) நடுக்கம். சிகிச்சைக்கு மூணு நாள் இருக்கும்போது  ஆஸ்பத்திரியில் இருந்து  ஃபோன் செஞ்சு, எத்தனை மணிக்கு நாம் அங்கே இருக்கணுமுன்னு  சொன்னாங்க. பகல் ஒன்னரைக்கு.  மயக்கமருந்து  நினைப்பால்   லஞ்ச் சாப்பிடலாமான்னு கேட்டேன். அது ஒன்னும் பிரச்சனை இல்லையாம்.

எதுக்கும் இருக்கட்டுமுன்னு   பனிரெண்டு மணிக்கு முன்னாலேயே  சாப்பாட்டை லைட்டா முடிச்சுக்கிட்டேன். வழக்கமா , கோபால்  பகல் சாப்பாட்டுக்கு  வரும் பனிரெண்டரைக்கு  வந்து சாப்பிட்டதும் மருத்துவமனைக்குப்போய்ச் சேர்ந்தோம்.

எல்லா விவரமும்  ( நம்மிடம் இருந்து  முந்தி வாங்கின படிமத்தில் இருந்தவைகளையும் சேர்த்துத்தான்) நம்ம பெயர் ,விலாசம், தொலைபேசி எண், நம்ம குடும்ப வைத்தியர், என்ன சிகிச்சைக்காக வந்திருக்கோம்,  எந்தக் கண், நம்ம நேஷனல் ஹெல்த் இன்டெக்ஸ் நம்பர்  எல்லாம் சரிபார்த்துட்டு, ஃபைலை நம்மிடம் கொடுத்து  முதல்மாடியில் இருக்கும்  டே சர்ஜரி யூனிட் ரிசப்ஷனுக்கு  அனுப்பினாங்க.

அங்கே போனதும்   எந்தக் கண்ணுன்னு கேட்டுட்டு,  உக்காரச் சொன்னாங்க.  அடுத்த ரெண்டு நிமிசத்தில் நமக்கு சேவை செய்யும் நர்ஸம்மா தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டு இன்னொரு அறைக்குக் கூட்டிப்போனாங்க.  இன்னொருக்கா நம்ம  முழு ஜாதகத்தையும் கிரக பலன்களையும்  சரிபார்த்துட்டு  'என்ன சிகிச்சைக்கு வந்துருக்கீங்க'ன்னு தெரியுமா?ன்னு கேட்டாங்க.

  "காடராக்ட் கண் லென்ஸை எடுத்துட்டு புது  ஐ ஓ எல் இம்ப்ளாண்ட்க்கு வந்துருக்கேன்."

உண்மையைச் சொன்னால்   எனக்கு இந்த  காடராக்ட் என்னும் சொல் மீது  ஒரு ஒவ்வாமை . யக்:( சொல்றதுக்கே ஒரு கூச்சம்:-)

"  எந்தக் கண்ணு?"

" வலது."

"கையால் சுட்டிக் காட்டி விளக்குக!"

வலது கை சுட்டு விரலால் வலது கண்ணைத் தொட்டுக் காமிச்சேன்.

அடுத்து  நம்முடைய நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை எல்லாம் அளந்தாங்க. பிபி மட்டும் அதிகமா இருக்கு. இருக்காதா பின்னே?

"மருந்து சாப்பிடலையா?"

"எப்பவும் பிபி மருந்து ராத்திரிதான் சாப்பிடுவேன்."

"ஏன்? எதாவது காரணமா?உங்க டாக்டர் அப்படியா சொன்னாங்க? காலையில் மருந்து எடுத்துக்கிட்டா நாள்  முழுசும்  அழுத்தம் கூடாமல் இருக்கலாம். ராத்திரின்னா.... உடம்பு ரெஸ்ட் எடுக்கும் நேரம் மாத்திரைக்கு அவ்வளவா வேலை இல்லையே."

"அட! ஆமாம். சரி. நாளை முதல் காலைக்கு மாத்திக்கறேன்."

நம்ம பெயர் ,விலாசம், செல் எண், வீட்டுத் தொலைபேசிஎண், என் ஹெச் ஐ  எண், நம்ம கண்டாக்டர்  பெயர் எழுதுன பட்டை கையில்  வளையலா வந்துச்சு. இன்னொரு சிகப்புப்பட்டையில் நமக்கு அலர்ஜின்னு  நாம் எழுதிக்கொடுத்த மருந்து மாத்திரை விவரங்கள் இன்னொரு வளையல்.

"கண்ணுக்கு  இப்ப சொட்டு மருந்து விடப்போறேன்.  அஞ்சு நிமிசத்துக்கு  ஒன்னுன்னு மொத்தம் ஆறுமுறை விடணும்.  சொட்டு கண்ணில் விழுந்ததும்  கண் ஓரத்தை (மூக்காண்டை இருக்கும்  ஓரம்)  ஆள்காட்டி விரலால்  பத்து செகண்ட் அழுத்திக்கணும்.  இல்லைன்னா மருந்து  கண்ணீர் சுரப்பிக்குப் போயிரும் "

குட்டியா ஆறு ட்யூப்கள் இருந்த ஒரு சின்ன பேக்கைத் திறந்தாங்க. அதை  ஒவ்வொன்னா  பெயரைப் படிச்சுப் பார்த்து என்னவோ வரிசைக் கிரமமாய்  அடுக்கிக்கிட்டாங்க. முதலாவது சொட்டு கண்ணில் விழுந்தது . சொன்னபடி செஞ்சேன். இப்படியே  நாலு முறை   ஆச்சு.  இப்ப வெளியே ரிசப்ஷனில் நாம் உக்கார்ந்திருந்த இருக்கைக்குப் போகச் சொன்னாங்க. சின்னதா ஒரு ட்ராலியைத் தள்ளி வந்து நம்முன்னால் நிறுத்தியாச்சு. அங்கேயும்  ரெண்டு முறை கண் மருந்து போட்டாங்க. நாம் வந்து ஒருமணி நேரம் ஆகி இருந்துச்சு.  நெர்வஸா இருக்குன்னு,  ரெஸ்ட் ரூமுக்குப் போய் வந்தபிறகு  நம்ம உடுப்புக்கு மேலேயே  ஆஸ்பத்ரி கௌன் மாட்டினாங்க.

இன்னொரு   ரெக்கவரி ஹாலுக்கு கோபாலை  கூட்டிப்போவதாக சொல்லிட்டு என்னை மட்டும்  உள்ளே கூட்டிப் போனாங்க. இது ஒரு பத்து படுக்கை உள்ள வார்டு.  அங்கிருந்த நர்ஸம்மாவிடம் நம்மை  ஒப்படைச்சதும் , நம்மை ஒரு நாற்காலியில் உக்காரவச்ச  புது நர்ஸம்மா, எந்தக் கண்ணு என்ற கேள்வியுடன் ஆரம்பிச்சு, நம்ம பெயர், பிறந்த தேதி  முதல் எல்லா ஜாதகத்தையும் சரிபார்த்துட்டு, வளையல் பட்டை விவரத்தையும் சரி பார்த்தாங்க.

இப்ப  ஒருத்தர் வந்தார்.  மயக்கமருந்து கொடுக்கும் டாக்டர். தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டு   எந்தக் கண்ணுன்னு ஆரம்பிச்சு எல்லா விவரமும் சரி பார்த்துட்டு, கட்டிலில் ஏறிப் படுக்கச் சொன்னார்.  ரொம்ப அகலம் குறைவான கட்டில், எதோ எனக்கே எனக்குன்னு அளவு எடுத்துச்  செஞ்சதைப்போல் ரொம்ப  இடுக்கமாத்தான் இருக்கு. நம்ம தலை, கட்டிலின் தலைமாட்டில் கடைசி ஓரத்தில் இருக்கும் தலகாணியின்  இறுதியைத் தொடும்படி படுக்கணும்.  காலில் இருக்கும் செருப்பைக் கழட்டினால்  எங்கே வைப்பதுன்னு தெரியாமல் தயங்கினேன். 'அதெல்லாம் பிரச்சனையே இல்லை. அப்படியே செருப்போடு படுத்துக்கோ! '  படுத்தவுடன் செருப்பு காலை விட்டு  மேலே போகுது. இது சரிப்படாது. கழட்டித்தான் வைக்கணும் என்றதும், சட்னு காலில் இருந்து உருவி  கட்டிலின் மேலேயே கால்பக்கத்தில் வச்சுட்டாங்க. அடராமா.............  பேசாம ஷூ போட்டு வந்திருக்கலாம்.

ஐவி கொடுப்பதற்கான குத்திவைப்பு  இப்ப.பொதுவாத் தேவைப்படாதுன்னாலும்........  ஒருவேளை  தேவையானால்.... அப்போ நரம்பு தேடிக்கிட்டு இருக்கமுடியாதுல்லெ? முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்.

அப்புறம் கண்ணில் சொட்டு மருந்து போட்டார்.  அங்கேயும்  நாலு இல்லை அஞ்சு முறை போடணுமாம். ஒவ்வொன்னுக்கும் இடைவெளி அஞ்சு மினிட். நமக்கு ஆறுமுறை போட்டாங்க.

முகமூடியுடன் நம்ம கண் டாக்டர்  வந்து ஹலோ சொல்லிட்டு, எந்தக் கண் என்றார்.  வலதுன்னு தொட்டுக் காமிச்சதும்  ஒரு மார்க்கிங் பேனாவால் நெத்தியில் இருந்து புருவத்துக்கு ஒரு அம்புக்குறி! தவறான கண்ணை யாரும் நோண்டிடக்கூடாது என்பதால் இத்தனை முறை  கேட்டு  உறுதிப்படுத்திக்கறாங்க. இப்போ 'இங்கே'ன்னு  அடையாளமும் வரைஞ்சாச்சு:-)

இதுக்குள்ளே நர்ஸம்மா, கட்டிலுக்கு ரெண்டு பக்கமும் இருக்கும்  கைப்பிடியை மேலே இழுத்து விட்டாங்க. இனி நான் கீழே உருண்டு விழமாட்டேன். தியேட்டருக்குப் போறோமுன்னு சொல்லி  மயக்கமருந்து மருத்துவர் நம்ம கட்டிலை தள்ள  வந்தார்.  ஆளுக்கொரு பக்கமா நின்னு நம்மைத் தள்ளிக்கிட்டுப் போனாங்க.  வளைஞ்சு வளைஞ்சு போகும் பாதையில்  ரைடு:-)

தியேட்டர்  நம்பர் ஒன் நமக்கு.  ஆச்சரியம் தரும்மெஷீன்கள் பக்கத்துக்கு ஒன்னு இருக்க நடுவில் நம்ம கட்டிலைக் கொண்டுபோய் நிறுத்தினாங்க.   திரும்ப அங்கே இருந்த நர்ஸம்மா  கை பட்டை வளையலைச் சரிபார்த்து அது நாந்தான்னு உறுதி செஞ்சுக்கிட்டாங்க.

மோடி மஸ்தான் கேட்பது போல,

"எந்தக் கண்? "

"வலது!"

வச்சிருந்த தலயணையை மாற்றி வேறொன்னு தலைக்கு வந்துச்சு.  டாக்டர் வந்துட்டார். நாடித்துடிப்பு அளக்க கைவிரலுக்கு தொப்பி போட்டபிறகு, சுடச் சுட இருந்த  போர்வை நமக்குப் போர்த்தினாங்க.  அதுக்கு மேலே குட்டியா ஜன்னல் வச்ச  துணியை நம்மீது போர்த்தி, ஜன்னல் நம்ம வலது கண்ணுக்கு வந்துச்சு. ஜன்னலைச் சுத்தி இருந்த  ஒரு ப்ளாஸ்டிக் கண்ணைச் சுத்தி ஓட்டிக்கிச்சு. கையால் நல்லா நீவி விட்டு   கீழ் இமையையும் மேல் இமையையும்  நல்லாப் பிரிச்சு  இன்னொரு  டேப்பால்  மேலேயும் கீழேயுமா  ஒட்டியாச்சு. இமைகளை மூடவே முடியாது இப்போ!

கைவிரல்கள் கண்ணைச் சுத்தி நடக்கும் உணர்வு தெரியுதே. கண் இன்னமும் நல்லா  மரத்துப்போகலை போல இருக்கே!  டாக்டரை விசாரிச்சேன்.  கண் விழிப்படலம் மட்டுமே மரத்துப்போகும் மருந்தாம் அது.  ஐ பால் ஒன்லி!  ஓக்கே ஓக்கே:-)

ஹப்பா......பல்லாண்டை ஊசிபோல, கண்ணாண்டை ஊசியோன்னு கதிகலங்கிப் போயிருந்தேனே!

கண்ணுக்கு மேலே பளீர்னு ஒளி வெள்ளம்.  அசையாம அதையே பார்க்கும்படி உத்தரவாச்சு.  ஒரு நிமிசத்தில் கண் அதுக்குப்பழகி அழகான Opal  கல்லின்  இளநீல பால்வெளிச்சமா மாறுச்சு.  பாற்கடலில் பரந்தாமனைத் தேடினேன்.  கிடைச்சானா? ஊஹூம்.......

கண்ணில்  பன்னீர் தெளிச்சுக்கிட்டே இருக்கு மெஷீன்.  வலியே இல்லை.  கண்ணாடிக்குமிழ் ஒன்னு  காத்துலே பறப்பது போல்  ஒரு காட்சி. என்னவோ நடக்குது. மர்மமா இருக்குது:-) தெரிஞ்ச  பகவான் நாமங்களைச் சொல்லிக்கிட்டு இருந்தேன் மனசுக்குள். கேசவா, நாராயணா, கோவிந்தா......

'ஓக்கே. டன் 'என்றார் நம்ம டாக்டர்.  நம்ம மேல்போர்த்தியிருந்த  ஜன்னல் வச்ச போர்வையை கண்ணை விட்டு முதலில் பிரிச்செடுக்கும்போது  சரசரன்னு  ஒரு மெல்லிய சப்தம்.  கண் தானாய் மூடிக்கிச்சு. கண்ணைச் சுற்றி மருந்துப்பஞ்சு ஒன்னு ஓடித் துடைச்சது.  என்னத்தையோ கண் மேல் வச்சு  சரக் சரக்ன்னு  டேப்  இழுத்து ஒட்டினாங்க. 'கண்ணைத் திறந்து பார்'!

சிகிச்சை ஆரம்பிச்சு இருபத்தியஞ்சு நிமிட் ஆகி இருக்கு. பழைய தலையணை மீண்டும் கழுத்துக்கடியில் வந்ததும் கட்டிலை உருட்ட ஆரம்பிச்சாங்க.  'நல்லா ஆடாமல் அசையாமல் இருந்தாய்' என்று பாராட்டுகள் வேற!  அதான்  அசையமுடியாமல் கட்டிலின் ரெண்டு பக்கமும் ரெய்லிங்ஸ் இருந்துச்சே:-) தியேட்டர் மக்களுக்கு நன்றி சொல்லி  என்று பை பை கை ஆட்டினேன்.

வார்டுக்கே மீண்டும் வந்து சேர்ந்தாச்சு.   கட்டிலின் உயரம் தாழ்ந்தது.  இப்ப கட்டிலில் இருந்து இறங்கலாம். இறங்கி,  நமக்காகக் காத்திருக்கும் சக்கரநாற்காலியில்  உக்காரணும். (ரொம்பநாள் ஆசை நிறைவேறியது!)  உக்கார்ந்ததும் கட்டில் செருப்பு, காலுக்கு வந்துச்சு:-)
மயக்கமா இருக்கான்னு கேட்டதும் 'நோ' ன்னேன்.

நம்மை உருட்டித்தள்ளிக்கிட்டு ரெக்கவரி ரூமுக்குக் கொண்டுபோனாங்க. அன்றைய நியூஸ் பேப்பரும் கையுமா சோஃபாவில் சாஞ்சு  ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கார் நம்மாள்:-) அடுத்த சோஃபா நமக்கு.  அந்த  பெரிய ஹால் முழுக்க  தனித்தனி சோஃபாக்களாய் (Lazy Boys)  வரிசையா  சுவர் ஓரம் முழுக்கப்போட்டுருக்காங்க.  காலை நீட்டி ஓய்வெடுத்துக்கலாம்.


சுத்துமுத்தும் பார்த்தால் சுவர்கள் எல்லாம் பளீர்னு இருக்கு.  என்ன நிறமுன்னு கேட்டேன். வெள்ளைதானாம்.   வலது கண்ணை மூடிக்கிட்டுப் பார்த்தால் நைலான் திரையினூடே தெரியும் காட்சி. லைட்டான க்ரீம்  கலர்.

தன்னுடைய செல்லில் கொஞ்சம் க்ளிக்ஸ் செஞ்சு என்னிடம் காமிச்சார் கோபால். கண்ணுக்கு ஒரு ஷீல்ட் போட்டு ஒட்டி இருக்காங்க.  நாளைக்கு  காலை  ஒன்பதே முக்காலுக்கு  நம்ம கண் டாக்டரைப் போய் பார்க்கணும். போஸ்ட் ஆபரேடிவ் அப்பாய்ண்ட்மெண்ட் டைம் . அதுவரை அந்த ஷீல்ட் அப்படியேதான் இருக்கணும். தொடப்டாது.

கொஞ்ச நேரத்தில்  பிபி, டெம்பரேச்சர் எல்லாம் சரிபார்த்தாங்க. ' குடிக்க என்ன  வேணும்? சாண்ட்விச் ரெடியா இருக்கு'.

'நான் கொண்டுவரேன்'னு கோபால் எழுந்து போனார். பச்சைப்பாலை ஊத்தாமல் பாலைத் தனியா சூடு செஞ்சு   டீ போட்டு எடுத்து வந்தார். கூடவே  வெஜிடபிள் சாண்ட்விச், ஒரு அஸ்பேரகஸ் ரோல் கூட இருந்துச்சு.

கோபாலுக்கு இப்ப  டீ வேணாமாம்.  இங்கே வந்தவுடன்  டீ போட்டு குடிச்சுட்டுத்தான் பேப்பர் வாசிக்க ஆரம்பிச்சாராம். எங்கூர்  ஆஸ்பத்திரியில் எனக்கு பிடிச்ச  விஷயம், நோயாளியின்  கூட வரும் துணை, களைப்படையாமல் இருக்க  காஃபி, டீ சமாச்சாரங்களை  தயாரிச்சுக்க எல்லா ஏற்பாடும் செஞ்சு வச்சிருப்பாங்க என்பதே!

ரெண்டு பேருமா சாப்பிட்டு முடிச்சோம்.

அரைமணி நேர ஓய்வுக்குப்பின்  ஐவிக்கு குத்திவச்ச ஊசியை எடுத்துட்டு ப்ளாஸ்டர் ஒட்டினவுடன், டிஸ்சார்ஜ்  பேப்பர்  கிடைச்சது. அதில்  டூஸ் அன்ட் டோன்ட்ஸ்  இருக்கு.  சட்னு கீழே தலையை குனியக்கூடாது.  தோட்ட வேலை  செய்யக்கூடாது . டாக்டர் சொல்லும் சொட்டு மருந்துகளைத் தவறாமல் தினம் நாலுவேளைக்கு  கண்ணில்  போட்டுக்கணும்.  இதன் கூடவே நானுமொரு விதி போட்டுக்கிட்டேன்.  நாலு வாரத்துக்கு வெங்காயம் நறுக்கும் வேலை கூடாது:-) சமையல்கூட செய்யக்கூடாதுன்னு சொல்லி இருக்கலாம்.  ஹூம்.......

ஒவ்வொரு முக்கால் மணிக்கும்  கண்ணில் போட்ட ஷீல்டோடு  சக நோயாளிகள்  வந்துக்கிட்டே இருந்தாங்க. எல்லாம் பகல் நாம் ரிசப்ஷனில் பார்த்தவர்கள்தான். 'வெற்றி வெற்றி'ன்னு கூவாமல்....  ஒரு புன்சிரிப்பு எங்களுக்குள் பரிமாறிக்கொண்டோம். கிளம்பும் நபர்கள்  மற்றவர்களுக்கு  தலையை அசைத்து  ஒரு பை பை சொல்லிக்கிட்டோம்.

மறுநாள் காலை  மருத்துவர்  க்ளினிக் போனோம்.  அங்கே முதல்நாள் அறுத்துப்போடப்பட்ட மக்கள்ஸ்  வெயிட்டிங் ரூமில்  இருந்தாங்க.  ஒருவருக்கொருவர் புன்னகையால்  ஒரு ஹலோ!  இங்கத்து  நர்ஸிங் டெக்னீஷியன் நம்மை  ஒவ்வொருவரா அறைக்குள்  கூப்பிட்டு  நேற்று இரவு நல்லா தூங்குனீங்களா என்ற விசாரிப்புடன், கண்ணை இறுக மூடிக்கச்சொல்லி அந்த  பாதுகாப்பு கவசத்தை உரிச்சு எடுத்துட்டு   ஒரு மருந்து போட்டு கண்ணின் சுற்றுப்புறம் இமைகளையெல்லாம் சுத்தம் செஞ்சுட்டு,  எதிரில் கண்ணாடியில் தெரியும் எழுத்துகளை  வாசிக்கச் சொல்லி சின்ன சைஸ் எழுத்துகள் வரை  வந்து வழக்கமான பரிசோதனை  செய்தபின், இன்னொரு மெஷீனை நம்ம முன்னால் கொண்டுவந்து நிறுத்தி, கண்ணுக்குள் அஞ்சுமுறை சுட்டாங்க:-)  படம் எடுக்குதாம்!

ஷீல்டைக் கையில் வாங்கிப்பார்க்கணுமுன்னு நினைச்சால் டபக் னு குப்பைத்தொட்டியில் போட்டுட்டாங்க.  எனக்கு பார்க்கணும் என்று சொன்னதால் புதுசு ஒன்னு கொண்டு வந்து (எனக்கேன்னு)கொடுத்தாங்க.


இன்னும் கொஞ்சம் காத்திருப்பு .  வெளியே காட்சிகள் எல்லாம் பளீர்னு இருக்கு. உண்மையைச் சொன்னால் அவ்ளோ ஒளியில் கண் கூச ஆரம்பிச்சது. கையோடு கொண்டு போயிருந்த கருப்புக் கண்ணாடியை போட்டுக்கிட்டேன்.  மகள் உபயம்:-)

டாக்டர் வந்து  அவர் அறைக்குக் கூப்பிட்டுப் போனார்.( இங்கே இதுதான் முறை.  ) அங்கேயும் கண்மெஷீனில் முகம் பதித்து  இருக்கணும். டாக்டர் பரிசோதனை செய்துட்டு  'எல்லாம் சரியா இருக்கு.  அடுத்த கண் எப்போ செஞ்சுக்கறதா இருக்கீங்க? சீக்கிரமாவா இல்லை கொஞ்சகாலம் கடந்தா'ன்னார்.

இவ்ளோ நல்லா கண் தெரியுமுன்னால் எதுக்கு வீணா காலம் கடத்தணும்?  சுபஸ்ய சீக்ரம் இல்லையோ:-)

சிகிச்சை நடந்த கண்ணுக்கு நாலு வாரம்  மருந்து எழுதிக்கொடுத்த கையோடு  நாலாவது வாரம் நாள் குறிக்கப்பட்டது அடுத்த கண்ணுக்கு:-)

ஒரு மருந்து  முதல் ஒரு வாரத்துக்கு மட்டும். மற்றது  மொத்தமா நாலு வாரத்துக்கு. இங்கே  டாக்டர்கள் அவுங்க க்ளினிக்லே மருந்துக்கடை வச்சுக்கறதில்லை:-)  வெளியே எங்கே வேணுமுன்னாலும் வாங்கிக்கலாம்.

அந்த நாள்  முந்தாநாள்! பழையபடி எல்லாம் முதலிலிருந்து ரிப்பீட்டுதான்.  இதுக்கிடையில் ஆஸ்பத்திரியில் இருந்து பின்னூட்டம் தரச் சொல்லி படிவம் அனுப்பினாங்க. அதை நிரப்பின கையோடு  முக்கிய குறிப்பு சேர்க்கும்  இடத்தில் 'உங்க சர்வீஸ் நல்லா இருந்துச்சு. இன்னும் நாலே வாரத்தில் மீண்டும் வருவேன். அப்பவும் இதே போன்ற  முதல்தர சிகிச்சையை  எதிர்பார்க்கிறேன்'னு எழுதிப்போட்டேன்.

அடுத்த கண்ணுக்குப்  போனபோது  நர்ஸம்மா மட்டும் வேற ஆள்.  நமக்குதான்  ஆஸ்பத்திரி சமாச்சாரம் அத்துபடி ஆயிருக்கே. அதனால்  பொட்டுத் தங்கமில்லாமல்  உருவி வீட்டுலே வச்சுட்டுப் போயிருந்தேன்.  நோ மெட்டல்:-)

"எதாவது  ஜூவல்லரி  இருக்கா ?"

"இல்லை. இவர் வாங்கித்தந்தால் தானே?"

நர்ஸம்மாவுக்குத் தாங்க முடியாத சிரிப்பு.  நம்ம கோபாலுக்கும்தான். சூழல் இறுக்கம் குறைஞ்சது.

"சொந்தப் பல் தானா?"

அடடா.....  செட் போட்டுருந்தால் இந்தான்னு கழட்டிக்கொடுத்துருக்கலாமே!

மத்தபடி எல்லாம்  வலதுக்குப்போலவே இடதுக்கும்.

மறக்காம ஷூ மாட்டிக்கிட்டுப்போனேன்:-))))



போன வருசம்   காஞ்சி- காசி பயணம் வருவதற்குமுன்  செஞ்சுக்கிட்டு இருந்தால்  காசியை  இன்னும் நல்லாப் பார்த்திருக்கலாம், இல்லே?




வானம் இவ்ளோ நீலமாவா இருக்கு!!!!!!!

இன்னும் ஒவ்வொன்னையும்பார்த்து மகிழ்ந்துக்கிட்டு இருக்கேன். அடடா..... உலகம் இவ்ளோ அழகா!!!!  

மெடிக்கல்டெக்னாலஜி  ஈஸ்  அமேஸிங்க்! 


மங்களம் சுப மங்களம்.




25 comments:

said...

cCONGRATULATIONS. AND WELCOME TO THE NEW WORLD. THUlASI.

said...

நானும் பண்ணிக்கப் போறேனே !

said...

நல்லபடியாக முடிந்தது... வாழ்த்துக்கள் அம்மா...

said...

கண் புரை கொஞ்சம் கஷ்டமான விஷயம்னு நினைச்சிருந்தேன், சூப்பர். இவ்வளவு சிம்பிளா முடிஞ்சதே... அழகிய வர்ணனை, உங்க கூட இருந்து அறுவை சிகிச்சையைப் பார்த்த உணர்வு...

said...

எல்லாவற்றையும் சிரிப்புடனே எடுத்துக்கொள்ளும் பக்குவம் , amazing !! கோபால் அவர்களுக்கு அந்த சிரிப்பே பாதி தைர்யத்தை கொடுக்கும் . நானும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்கிறேன் .எல்லாம் நல்லபடியா முடிந்தது . take care Thulasi .

said...

உங்களுக்கு இருக்கும் இந்தப் பக்குவம் நிறைய பேருக்கு இருப்பதில்லை... மருத்துவமனை என்றாலே பயம் தான். இந்திய மருத்த்துவ மனைகளில் பணம் சம்பாதிக்க தெரிவது போல, அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய அதிகம் தெரிவதில்லை! :(

said...

கண் அறுவை சிகிட்சைப்பற்றி நன்றாக விளக்கமாய் எல்லாம் சொன்னீர்கள். புதிதாக செய்து கொள்பவர்கள் பயமில்லாமல் எதிர் கொள்வார்கள் இனி.
இப்போது கண் ஓரத்தில் ஊசி இல்லை என்பதே ஒரு ஆறுதலான செய்தி.

said...

வாங்க வல்லி.

தேங்க்ஸ்ப்பா.

உண்மையில் புது உலகமாத்தான் தெரியுது!

பளிச் பளிச் :-))))

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ஆஹா..... வெல்கம் டு த நியூ வொர்ல்ட்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

எல்லாம் நல்லபடின்னாலும் ரெண்டு சதம் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கும் சிகிச்சைதானாம்.

அதுவும் போய், அனைவருக்கும் நலம்கிடைக்கணும். 100%

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க ஸ்கூல் பையன்.

'பயம் அற' என்பதுக்குத்தான் ரெண்டு இடுகை கேட்டோ:-)))

said...

வாங்க சசி கலா.

நம்ம பொழைப்பு இப்படிச் சிரிப்பாச் சிரிக்குதுப்பா:-))))

கவனமா இருப்பேன்.நன்றிப்பா.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இந்திய மருத்துவமனைகளில் கொஞ்சம் மனிதாபிமானமும் இருந்தால் நல்லது என்ற பேராசை எனக்கும் இருக்கு.

said...

வாங்க கோமதி அரசு.


இந்தக் கண்ணூசி பயம் வேணாமுன்னுதான் கொஞ்சம்(?) விளக்கமா எழுதிப்பேன்.

யாருக்காவது பயன் ஆகாமல் போகாது இல்லையா?

said...

நல்லபடியா முடிஞ்சதுக்கு ஆண்டவனுக்கு நன்றி.

நீங்களும் எங்க கோபால் சாரும் இருக்கும் படம் - ப்யூட்டிபுல்!

said...

வாழ்த்துக்கள் டீச்சர்.
மகிழ்ச்சியாக இருக்கிறது.
இனி ஏதும் இன்னலில்லை :)

பாரம் தூக்க வேண்டாம். வீட்டு வேலைகளில் அதிகம் ஈடுபட வேண்டாம். அதிக வெளிச்சத்தைக் கூர்ந்து நோக்க வேண்டாம். கவனமாக இருங்கள் டீச்சர்.

said...

யாராக இருந்தாலும் அறுவை சிகிச்சை, ஆஸ்பத்திரி, ஊசி என்று கொஞ்சம் பதட்டமாகத் தான் இருக்கும். இப்போ சுலபமாகத் தோன்றினாலும் தைரியமாக இருந்திருக்கீங்க. வாழ்த்துகள் டீச்சர்.

நல்லா ஓய்வு எடுத்துக்கோங்க டீச்சர். புது உலகத்தை எஞ்சாய் பண்ணுங்க.

said...

i will uhdergo enough the same operation in the month of may
this blog gave me
enough encouragement
thankyou

said...

வாங்க கொத்ஸ்.

'உங்க'கோபால் சார் நன்றின்னு சொல்லச் சொன்னார்:-) நானும்தான் ஆக்கும், கேட்டோ!

said...

வானக ரிஷான்.

உங்க பின்னூட்டத்தை உங்க அண்ணனிடம் கொடுத்து மனப்பாடம் செய்யச் சொல்லி இருக்கேன்:-)

இனி ஓடியோடி வீட்டு வேலைகள் செய்யும் உரிமையும் கொடுத்தாச்சு!!!!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

உண்மைதான். பதட்டம் வருவது இயல்பே. நம்ம பிபியே, மேட்டரைச் சொல்லிருச்சே:-)

said...

வாங்க சிஜி.

சிகிச்சை வெற்றி பெற மனமாற வாழ்த்துகின்றேன்.

புதிய உலகம் சூப்பராக்கும்!

அடடா....இவ்வளவு நாள் செஞ்சுக்காம இருந்துட்டோமேன்னு தோணும், பாருங்க!

said...

All is well.
Welcome to the crystal clear world :-)

said...

நீங்கள் எழுதியிருப்பது போலத்தான் இங்கேயும் நடந்தது. முதல் கண்ணிற்கு நடந்த இரண்டு நாட்கள் கழித்து இன்னொரு கண்ணிற்கும் பண்ணிக்கொண்டு விட்டேன்.

எல்லாம் நல்லபடியாக நடந்தது என்று கேட்க வெகு ஆறுதல்!

said...

வானம் வசப்பட்டது வாழ்த்துகள்.