Friday, May 30, 2014

சரயுநதி ரொம்பவே ஸ்பெஷலாக்கும், கேட்டோ!

அப்படி என்ன ஸ்பெஷல்? வைகுண்டம் போக இது ஒரு பைபாஸ் வழின்னு சொன்னா நம்பமாட்டீங்களா?

 கனக் பவன் பார்த்த கையோடு சரயு நதியை நோக்கிப் போனோம். போகும்வழியிலேயே அயோத்தி நகர் பரிக்ரமா சாலை(!) வந்துருது. அதுலே கலக்குமுன் ஆஷார்பி ஆஸ்ரமம் (Asharphi Bhawan)ஒன்னு கண்ணில் பட்டது. இங்கே நடக்கும் வேதபாடசாலையே ப்ரதான்யம்.

இந்த மாளிகை(ஆஷ்ரம்) உள்ளே  பிள்ளைகளோடு  ராமனும் சீதையும்.  படம்: கீழே!  ஆனால் உண்மையில் கர்ப்பிணியாகக் காட்டில் கொண்டு விடப்பட்ட சீதை மீண்டும் அயோத்யாவுக்குத் திரும்பவில்லை:( பிள்ளைகள் மட்டுமே  இங்கே வந்தார்கள். நம்ம வல்லியம்மாவுக்காக இந்த  ஸ்பெஷல் படம்! 

திவ்ய ஷீஷ் மஹல் என்னும் கோவிலையும் போறபோக்கில் வண்டியில் இருந்தே பார்த்தோம். கண்ணாடி மாளிகை. வடக்கே ஏற்கெனவே பல இடங்களில் இந்த கண்ணாடித் துண்டுகளை வச்சு கோவிலின் உட்புறங்களை அலங்கரிச்சு இருக்கும் இடங்களைப் பார்த்த அனுபவம் இருப்பதால் நேரம் களைய வேணாமுன்னு இங்கெல்லாம் போகலை.

 இப்பவே மணி அஞ்சடிக்கப்போகுது. ஆறுமணியானால் சட்னு இருட்டிரும். அதுவும் வடக்கே இப்போ குளிர்காலம் என்றபடியால் பகல் வெளிச்சம் குறைவே. திரும்பிப்போக ஒரு நாலு மணி நேரம் பயணத்துக்கு ஒதுக்கணும். எல்லாம் சேர்த்துக் கணக்குப் போட்டுட்டார் கோபால். ம் ம் என்று ஒரே ஓட்டம்தான் இனி:(

 நதிக்கரைக்குப்போய்ச் சேர்ந்தோம். உள்ளெ நுழையும் பகுதியில் அழகான டிஸைன்களா செங்கல் பாவிய பாதை. வலது பக்கம் கோவில்கள் . இடது பக்கம் நதி. ரொம்ப அருமையா படித்துறைகள், அட்டகாசமா இருக்கு. படிகள் இறங்குமுன் இடதுபக்கம் கரை ஓரமா முழுசும் கற்கள் பாவிய தரை படு நீட்! அங்கங்கே இருக்கைகளா சிமெண்ட் பெஞ்சுகள்!


 சரயூவில் இந்தப் பகுதியில் தண்ணீர், படித்துறைக்கு ரொம்ப தூரத்துலே இருக்கு. மணல்பகுதியா இருப்பதால் நடந்து போய் நீரைத் தொடலாம்.


ஒரு இளைஞர் நதிநீரை ஒரு குடத்தில் மொண்டு வந்து, சைக்கிள் கேரியரில் வச்சுக் கட்டினார். கோவிலுக்குப் போகுதாம் தண்ணீர், சாமி அபிஷேகத்துக்கு! தினம் காலையும் மாலையும் இங்கே வந்து தீர்த்தம் கொண்டு போறாராம். நல்லா இருக்கட்டும்!

 ஹிமயமலையில் இருந்து புறப்படும் சரயு நதி முன்னூத்தி அம்பது கிலோமீட்டர் பயணிச்சு ஒரு இடத்தில் கங்கையோடு கலந்து விடுகிறது. கோடையில் இமயமலைப் பனி உருக ஆரம்பிச்சதும் நதியில் தண்ணீர் படித்துறைக்குப் பக்கம் வந்துருமாம்.

 வலக்கைப்பக்கம் கோவில்களுக்குப் போகணுமுன்னால் நிறைய படிகள் ஏறணும். எல்லாமே மேட்டுப் பகுதி. 'எல்லாம் உள்ளே ஒரே மாதிரி சாமி சிலைகள்தான். மாளிகை மாளிகையாத்தான் கட்டிவிட்டுருக்காங்க. இங்கே இருந்தே ஸேவிச்சுக்கோ'ன்னு 'உத்திரவு' ஆச்சு:(

 ( ஆமாம்.... திரவா இல்லை தரவா? உத்திரவு உத்தரவு இதில் எது சரி? கொத்ஸ் வந்து சொல்லுவரை காத்திருப்போம்!)

 சுற்றமெல்லாம் பின்தொடர தொல்கானம் அடைந்தவனே

 அற்றவர்கட் கருமருந்தே அயோத்தி நகர்க் கதிபதியே

 கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே

 சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ

 குலசேகர ஆழ்வார் இப்படிப் பாடிட்டுப் போனாராம்!

 108 திவ்ய தேசக்கோவில்களில் அயோத்யாவும் ஒன்னு என்றாலும், ஆழ்வார்கள் வந்து தரிசனம் செஞ்சு பாடின கோவில் எதுன்னு சரியாத் தெரியலை. இங்கே அம்மாஜி மந்திர்ன்னு தமிழ் நாட்டுக் கலையழகோடு ஒரு கோவில் இருக்கு. அதான் இதுன்னு சிலர் சொன்னாலும்.... இது ஆழ்வார்கள் பாடிய கோவில் இல்லை. இந்தக் கோவிலுக்கு வயசு 109 தான். 1905 இல் கட்டி இருக்காங்க.

 நம்ம திருவல்லிக்கேணியில் இருந்து வட தேசங்களுக்கு யாத்திரை வந்த தம்பதிகளான திரு பார்த்தசாரதி அய்யங்காரும், அவர் மனைவி திருமதி சிங்கம்மாளும் அயோத்யா வந்து சிலநாட்கள் தங்குனப்ப, இங்கே ராமனுக்கு ஒரு கோவில் கட்டச் சொல்லி கனவில் உத்திரவாயிருக்கு. ஆர்டர் போட்டவர் நம்ம தில்லக்கேணி மீசைக்காரரே! ஸோ இது பார்த்தஸாரதி சொல்ல, பார்த்தஸாரதி கட்டுன கோவில். அப்புறம் சில வருசங்கள் கழிச்சு ஐயா பார்த்தஸாரதி சாமிகிட்டே போகவும், அம்மா(ள்) சிங்கம்மாள் கோவிலைப் பொறுப்பேத்து நடத்தறாங்க. அம்மாளின் சேவை பிரபலமாகி,கோவிலுக்கே அம்மாஜி மந்திர்னு பேரு கிடைச்சுருச்சு. வடக்கர்களுக்கு அம்மா அம்மா என்னும் சொல் பழகிப்போயிருக்கு. அம்மான்னா சும்மா இல்லை கேட்டோ!!!

 அம்மாவும் கணவர் மறைவுக்குப்பின் முப்பது வருசம் அயோத்யாவில் தங்கி பூஜைகள் நடத்தி கோவிலை நல்லபடி கவனிச்சப்பிறகு சாமிகிட்டே போயிட்டாங்க.

 ஸோ..... இந்த பூரா அயோத்யாவுமே திவ்யதரிசனக்கோவில்னு எடுத்துக்கிட்டேன். தடுக்கி விழுந்தா எதாவது கோவில்களாத்தான் இருக்கு இங்கே. அதுவும் பெரிய மாளிகைகள், முற்றம், வெராந்தாவை அடுத்து கருவறை இப்படியே பலதும் இருக்கு. சாமிச் சிலைகளும் அநேகமா ஒன்னைப்போலவே ஒன்னு. வெண் பளிங்கு, கரும்பளிங்கு இப்படித்தான் எல்லாமே! அம்மாஜி கோவிலில் மட்டும் நம்ம பக்கம் தரிசனம் செஞ்சுக்கும் கற்சிலைகளின் வகையில். இங்கே ரங்கநாதரின் (பள்ளிகொண்ட ) சிலையும் இருக்காம்.

 நமக்குத்தான் தரிசனம் செஞ்சுக்க அதிர்ஷ்டம் இல்லாமப் போயிருச்சு. இத்தனைக்கும் இது அமைஞ்சுருக்கும் கோலா காட்டில் போய் சரயூவை வேடிக்கைப் பார்த்திருக்கோம். பக்கத்துலேதான் இருக்குன்னு அப்பத் தெரியாமப்போச்சு பாருங்க:(


 இன்னும் பிர்லா மந்திர், வால்மீகி பவன், ஹனுமன்கதி ன்னு முக்கிய கோவில்கள் இருந்தாலுமே நம்மை மாதிரி வெறும் 4 மணி நேரம் போதாது. குறைஞ்சபட்சம் ஒரு நாள் அங்கே அயோத்யாவில் தங்கினால் இன்னும் ஒரு பத்துப்பதினைஞ்சு கோவில்களைப் பார்த்துருக்கலாம்.




மேலே: ஹனுமன் கதி கோவில். எழுபத்தியாறு படிகள் ஏறணும்.  மிஸ் பண்ணின கோவில்களில் இதுவும் ஒன்னு:(


பதினோராயிரம் ஆண்டுகள்( !!??) அரசாண்ட ராமர் தன் பிள்ளைகளுக்குப் பட்டம் கட்டிட்டு பூலோகத்துக்கு வந்த வேலை முடிஞ்சதுன்னு திரும்பிப்போன இடம் குப்தர் காட். அதுவும் காலதேவன் வந்துதான் ஞாபகப்படுத்தினாராம். 'ராமா, நீ வந்த வேலை முடிஞ்சது. வைகுண்டத்துக்குத் திரும்பி வரணுமு'ன்னு. மனுசனா அவதாரம் செஞ்சு மனுச வாழ்க்கையையே வாழ்ந்துக்கிட்டு இருந்த ராமருக்கு அப்பதான் தன் அவதார ரகசியம் புரிஞ்சுருக்கு.

 'உடனேவா? அப்புறம், கொஞ்சநாள்' இப்படி சாக்கு போக்கு ஒன்னும் சொல்லாம சட்னு கிளம்பிடறார். அவர் ரெடியானதும் தம்பி லக்ஷ்மணர் முதலில் போய் சரயு நதிக்குள் இறங்கி தன் பூலோக வாழ்க்கையை முடிச்சுக்கறார். இந்த இடத்தை லக்ஷ்மணா காட் என்றுதான் சொல்றாங்க. (இதுக்கு வேறொரு வெர்ஷன் கூட இருக்கு. )

 தமையன் உத்திரவை மீறினபடியால் தானே தவத்தில் இருந்து சமாதி ஆகிட்டாராம். என்ன உத்திரவு? ஏன் மீறணும்? காலதேவன், ராமரை சந்திக்க வந்தப்ப, நாங்க உள்ளே பேசி முடிக்கும்வரை யாரையும் அனுப்பாதேன்னு லக்ஷ்மணனைக் காவல் வச்சுருக்கார் ராமர். அப்போ பார்த்து துர்வாஸர் ராமனை சந்திக்க வந்துருக்கார். உள்ளே இப்போ போக அனுமதி இல்லைன்னு லக்ஷ்மணன் மறுக்க துர்வாஸருக்குக் கோபம் தலைக்கேறி இருக்கு. எங்கே ராமரை சபிச்சுடப்போறாரோன்ற பயத்தில் சட்னு கதவைத் திறந்து அங்கே நடந்து கொண்டிருந்த ஒன் டு ஒன் மீட்டிங்கில் போய் துர்வாஸர் வந்த சமாச்சாரத்தைச் சொன்னாராம். அண்ணன் சொல்லை மீறிட்டார்:( அதுவே அவருக்கு குற்ற உணர்ச்சியைத் தந்ததால் எல்லா பந்தங்களையும் விட்டுட்டு, தவம் இருந்து சமாதி ஆனார் !

 கதை எப்படியானாலும், ராமனுக்கு முன் பூலோகம் விட்டுப்புறப்பட்டவர் லக்ஷ்மணர்தான். தேவலோகக் கணக்குப்படி இவரும் வைகுண்டவாசிதான். ராமர் மகாவிஷ்ணு என்றால் லக்ஷ்மணர் ஆதிசேஷன். அதான் ராமவதாரம் எடுத்த மஹாவிஷ்ணு, திரும்ப பாற்கடல் வருமுன் (பாம்பு) படுக்கை விரிக்க ஜல்தியாப் புறப்பட்டுட்டார். பரதனும் சத்ருக்னனும் கூட பெருமாளின் சங்கு சக்கரங்களே. சீதை? சாக்ஷாத் மஹாலக்ஷ்மி. அவள் மண் மகளாப்பிறந்து, மண்ணுக்குள்ளேயே இறங்கி மறைஞ்சாள். பாருங்க எல்லோருமெப்படி ஒரு பெரிய க்ரூப்பா வந்து அவதரிச்சு இருக்காங்க.

 ராமர் மேல் அதிக அன்பு கொண்ட அயோத்தி மக்கள் நாங்களும் கூடவே வரோமுன்னுட்டு ராமர் சரயுவில் இறங்குனதும் கூடவே அவுங்களும் நதியில் இறங்கி வாழ்வை முடிச்சுக்கிட்டாங்களாம். ராமரின் கூடவே பரதனும் சத்ருக்னனும் பூத உடலை விட்டாங்க. ராமரின் உடலை தகனம் செஞ்ச இடம் ஸ்வர்க் த்வார் என்னும் படித்துறையாம்.சொல்லக் கேள்வி.

 கூடப்போன கூட்டத்தில் நம்ம ஆஞ்சி இல்லையாக்கும் !!! 'ராமநாமம் கேட்டபடி பூலோகத்தில் இருப்பேன். எனக்கு வைகுண்டம் வேணாமு'ன்னுட்டாராம் சிரஞ்சீவி!

 குப்தர்காட் போக எனக்கு ஆசையா இருந்துச்சுன்னாலும், ஆனந்த , 'வோ த்தோ பஹூத் தூர் ஹை'னு சொல்லிக் கையை நீட்டி எதோ ஒரு திக்கைக் காமிச்சதும் 'சரி சரி. அதெல்லாம் வேணாமுன்'னுட்டார் நம்மாள்.

 (கடைசியில் பார்த்தால் இங்கிருந்து சுமார் 11 KM தூரம் தான். அதுவும் நாம் திரும்பிப்போகும் வழியிலிருந்தேதான். ஃபைஸாபாத் கண்டோன்மெண்ட் அருகில் சரயு நதி ஓடுதே அங்கெதான்னு அப்புறம் எனக்குத் தெரியவந்ததும் 'இப்படிக் கோட்டை விடுவளோ ஒருத்தி'ன்னு மனசு கிடந்து அடிச்சுக்கிட்டது நிஜம்)

அயோத்யாவில் பெரும் மாளிகைகள் எல்லாம் கோவில்களே. மத்தபடி சாதாரண மக்கள்,  சாதாரண வீடுகளில்தான் இருக்காங்க. அடுக்கு மாடிக் குடி இருப்புகள் பல. எல்லாம் பழைய லுக் கொடுக்குது. கூரை வீடுகளும் ஓட்டு வீடுகளும்தான் ஏராளம். அங்கங்கே எருமை மாடுகளைக் கட்டி வச்சுருக்காங்க. ஒரே ஒரு பசுதான் கண்ணில்பட்டது:-)



நாமும் பரிக்ரமா ரூட்டிலேயே வந்து மீண்டும் ஆனந்தை பிக்கப் பண்ண இடத்துக்கே வந்துருந்தோம்.நாட்டாமை சொல்லி வச்சது போல 'சௌ ருப்யா' கொடுத்துட்டு, ஆனந்துக்குத் தனியாக் கொஞ்சம் காசு கொடுத்தார் கோபால். வண்டிவந்து நின்னதும் நாட்டாமை உட்பட எல்லோரும் ஓடி வந்தாங்க. 'நூறுதானே கொடுத்தீங்க? அதிகம் ஒன்னும் அவன் கேக்கலை இல்லையா?' ன்னு நாட்டாமை கேட்டதுக்கு , 'ஆமாம் நூறுதான்கொடுத்தேன்' என்றார் நம்மவர்.

 வந்த வழியிலேயே திரும்பி ஃபைஸாபாத் பெட்ரோல் பங்கில் அஞ்சு மினிட் ஸ்டாப். இப்போ (டாய்லெட்) சாவி இருக்குமிடம்தான் நமக்கே தெரியுமே:-)))

 வரும்வழியில் ஒரு இடத்தில் (சுல்தான்பூர் ) சாய் குடிக்க நிறுத்துனோம். ட்ரைவர் சாயா குடிக்கும்வரை, நாம் வண்டி நிறுத்தின இடத்தில் இருந்த மிட்டாய்க்கடையை வேடிக்கை பார்த்தேன். சுடச்சுட குலோப்ஜாமூன் தயாராகிக்கிட்டு இருக்கு. பக்கத்துலேயே கடாயில் சுண்டக் காய்ச்சும் பால். கேமெராக் கண்ணால் தின்னேன்.

 என்னதான் விரட்டிக்கிட்டு வந்தாலும் ஹொட்டேலுக்கு வந்து சேர ராத்ரி பத்தரை ஆகிப்போச்சு.

 'நல்ல நல்ல கோவில்கள் நிறைய இருக்கு ..... ப்ச்.... விட்டுட்டோமு'ன்னு முணங்கினேன். 'இவ்வளவாவது கிடைச்சதே சந்தோஷப்படும்மா. நீ முதல்லே என்ன சொன்னே? ராமன் பிறந்த இடத்தை அட்லீஸ்ட் தரிசனம் செஞ்சுக்கிட்டு அயோத்யா மண்ணில் ஜஸ்ட் கால் வச்சுட்டு வந்தாப்போதும்னு தானே?'

 அட.... ஆமாம்லெ!  

 தொடரும்...........:-)

Wednesday, May 28, 2014

தங்க மாளிகை

முழுக்க முழுக்கத் தங்கத்தால் மாளிகை கட்டுனா எப்படி இருக்கும்? தசரத மகாராஜாவின் நாலு மகன்களில் நம்ம கைகேயிக்கு ரொம்பவே ஃபேவரிட்டான மகன் ராமன் தான். தன்னுடைய சொந்த மகன் பரதன் கூட ரெண்டாம் பட்சமே!

 'எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்'னு நம்ம கம்பர் விவரிச்சுச் சொன்னபடி சிவதனுசை ஒடித்து சீதையைக் கல்யாணம் கட்டுனபின் ராமன் அயோத்திக்கு திரும்பி வர்றான். புதுக் கல்யாணப்பொண் புருசன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறாள். இங்கே அப்ப இருந்த வழக்கப்படி, புதுப்பொண் சமைச்சு மாமானார் மாமியார்களுக்கு அன்னம் கொடுக்கணும். பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் புழக்கத்துக்கு வரலை என்பதால் பொண்ணின் சமையல் திறன் யாருக்கும் தெரியாது அப்பெல்லாம்:-)

 (வால்மீகியார் சொல்படி அப்போ சீதைக்கு வயசு ஆறு. ஆனால் நம்ம கம்பன் என்ன சொல்றார்? 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்' நினைவிருக்கோ? ஆறு வயசுக் குழந்தை கண்ணில் காதலுடன்...... ஊஹூம்..... இருக்குங்கறீங்க? நோ சான்ஸ். அப்ப நம்ம கம்பனின் கணக்குப்படி இவளுக்குப் பதின்ம வயதாகி இருக்கணும்,இல்லே? ) 

 ஒவ்வொருத்தருக்கா தட்டில் சாப்பாட்டுவகைகள் வச்சு விளம்புறாள் சீதை. லேடீஸ் ஃபர்ஸ்ட் என்றாலும் இங்கே 'மாமியார்கள்' இருப்பதால் மூவரில் வயதில் குறைஞ்ச கடைசி மாமியாருக்கு முதல் தட்டு! தட்டைக் கையில் வாங்குன கையோடு புது மருமகளுக்கு எதாவது பரிசு கொடுப்பது வழக்கமாச்சேன்னு , (கை நீட்டம்?) சட்ன்னு இடுப்பில் இருந்து ஒரு சாவியை எடுத்துச் சீதையின் கையில் வச்சாங்க சின்ன மாமியார். அது..... ஒரு மாளிகையின் சாவி!!   தான் ஆசை ஆசையாக் கட்டுன புது வீட்டையே   மருமகளுக்குப் பரிசாக் கொடுத்த பெரிய மனசு கைகேயிக்கு! தங்க மனசுக்காரியின் தங்க மாளிகை. ஹிந்தியில் கனக் பவன்!

 மற்ற மாமியார்களான சுமித்ரை, கௌஸல்யா , நவமணிகள் பதிச்ச பொன் ஆபரணங்களைக் கொடுத்தாங்களாம். மாமனார் என்ன கொடுத்தார்? வரும் யுகங்களில் என் மகனை சீதாராமன் என்றே உன்பெயரோடு சேர்த்தே மக்கள் அழைப்பார்கள். நீதான் முன்னில் இடம் வகிப்பாய்ன்னு சொல்லி வரம் அருளினாராம். (மதுரைக்காரரா இருந்திருப்பாரோ:-))))))

 சீதையும் ராமனுமா இந்தத் தங்கமாளிகையில் ரொம்ப 'ஆனந்த'மா 12 வருசம் வாழ்ந்துருக்காங்க. அப்புறம்? அதான் மாளிகையைப் பரிசளித்த 'அதே கைகேயி' கேட்ட வரத்தால் பதினாலு வருச வனவாசம்
போக வேண்டியதாகிப் போச்சே!

 மேற்படிக் கதை நம்ம வேளுக்குடியார், போனவருசம் விஜய் டிவியில் வந்த 'ஸ்ரீ ராமனின் பாதையில்' என்ற தொலைக் காட்சித் தொடரில் சொல்லி இருந்தார். நான் ஜஸ்ட் கொஞ்சமே கொஞ்சம் துள்ஸீ'ஸ் மசாலா  தூவினேன். அம்புட்டுதான்:-)

 போனவருசம் (2013)இல் தொடர் வந்தபோதே மறக்காமல் ஒவ்வொரு வாரமும் (வலை வழியாக) பார்த்து வந்தேன். அதிலும் 'நாமெங்கே அயோத்யாவுக்குப் போகப்போறோம்' என்ற எண்ணம் இருந்ததால் கூடுதல் கவனம் செலுத்தித் தொடரை ரசித்துப் பார்த்தேன்:-) அறுநூறு பக்தர்களுடன் 15, 16 பேருந்துகளில் பயணம் போயிருக்கார். அந்தத் தங்கமாளிகையின் முன்புதான் இப்போ நிக்கறோம்.

ராம்ஜென்மபூமி தரிசனம் முடிச்சபின் பார்லிமெண்ட் அங்கங்களின் கூட்டம் நேரா இங்கேதான் வந்துருக்காங்க போல! வாசலில் நிறைய ஏகே 47 களின் தரிசனம். நாம் வண்டியை விட்டிறங்கி வாசலை சமீபிக்கும்போது அவர்கள் திரும்பி வெளியேவரத்தொடங்கி இருந்தார்கள். ஒரு இருபது பேர் இருக்கலாம். அவர்களுடைய உதவியாளர்கள் கூட்டம் அதைவிடப் பெருசு:-)))

அங்கங்கள்  பத்திரமாத் திரும்பிப்போறவரை ராணுவத்துக்கும் தலைவலிதான் இல்லே?


பத்தொன்பது படிகள் மேலேறிப்போகணும். (அதெல்லாம் எண்ணிட்டேன்:-) எப்போ இந்த 'எண்ணும்'குணம் விடுமோ தெரியலை!) நல்ல அகலம்தான். நடுவில் கம்பித் தடுப்பு வச்சு பிடிச்சுக்கிட்டு ஏற வசதியா இருக்கு. வயசானவர்களுக்கும் என்னை மாதிரி முட்டிக்கேஸ்களுக்கும் சிரமம் குறைவு. அஞ்சடுக்கு மாளிகை. அந்தக் காலத்தில் மாளிகை முழுசுமே தங்கமா இருந்துச்சாம். இப்போ தங்கக்கலர் பெயிண்ட்:-)

 படிகள் போய் ரெண்டாம் நிலையில் முடியுது. முன்னுள்ள பெரிய ஹாலைக் கடந்தால் ப்ரமாண்டமான முற்றம். பளபளக்கும் பளிங்குத்தரைகள். படு சுத்தம்! வலது கைப்பக்கம் பளிங்கினால் ஆன சின்ன மண்டபம். அழகோ அழகு! அதில் ஒரு மேடையில் ராமனின் பாத அடையாளம். மண்டபத்தைச் சுற்றிவந்து வணங்கும் பக்தர்கள். பரிக்ரமா என்பது இந்தப் பக்கங்களில் ரொம்பவே முக்கியம். 




முற்றம் கடந்து அடுத்த பகுதிக்குப் போறோம். இன்னொரு ப்ரமாண்டமான கூடம். அதுலே ஒரு பக்கம் கருவறை! இங்கேயும் மூணு வளைவு வாசல். நடுவாசல் வழியாக அர்த்தமண்டபத்தில் போய் நின்னு சேவிக்கலாம். சாமி அலங்காரம், மண்டபம் எல்லாம் தங்கமே தங்கம் என்று நினைச்சால்....

அவை மட்டும்  இல்லையாம்! அங்கிருக்கும் மூணு செட் ராமர் சீதா சிலைகள் கூடத் தங்கம்தானாம்! தங்கக் க்ரீடம், நகை நட்டுக்களோடு த்ரீ டைம்ஸ் டு ன்னு ஆறு பேரும் மேலே குமிஞ்சுருக்கும் பூக்குவியல்களையும் மீறி ஜொலிக்கறாங்க!

 சிலைகளின் அளவு கூட லார்ஜ், மீடியம் அண்ட் ஸ்மால் இப்படி:-)

 நமக்கு நல்ல தரிசனம் கிடைச்சது. தீப ஹாரத்தியும் ஆச்சு. சந்நிதி முன் தரையில் நாடாளுமன்ற அங்கங்கள் பலர் நெருக்கியடிச்சு உக்கார்ந்துருந்தாங்க என்பதால் ஸ்பெஷல் ஆரத்தி கேட்டோ:-)

ராமனும் சீதையும்  வனவாசம் முடிஞ்சு மீண்டும் இங்கே வந்து வசிச்சு இருப்பார்கள் என்றுதான் நம்பறேன். இந்த கனக் பவனத்தை பலமுறை புனரமைச்சு பராமரிப்பு செஞ்சுக்கிட்டே இருந்துருக்காங்க. ஸ்ரீராமரின் மூத்த மகன் குசன் முதல்முறையா ரிப்பேர் பண்ணாராம். இது த்ரேதாயுகம் முடிஞ்சு த்வாபர யுகம் ஜஸ்ட் ஆரம்பிச்ச காலத்தில்.

 மகாராஜா ரிஷபதேவ் காலத்தில் த்வாபரயுகத்தின் மத்திய காலத்தில் ஒரு முறை புனரமைப்பு நடந்துருக்கு. நம்ம ஸ்ரீ க்ருஷ்ணர் கூட த்வாபரயுகம் முடிஞ்சு கலியுகம் பிறக்கப்போகும் காலக்கட்டத்தில் இங்கே விஜயம் செஞ்சுருக்காராம்.

 கலியுகம் பிறந்த பிறகு மாளிகையை முதல்முதலாக புனரமைச்சுக் கட்டியவர் குப்த சாம்ராஜ்யத்தின் சமுத்திர குப்தர். காலம் 387 கி.பி. முகலாயர் படையெடுப்பால் (1027 கி பி) அழிஞ்சு போன மாளிகையை, சமீபத்தில் 1891 இல் மீண்டும் கட்டி எழுப்பியவர்கள் மஹாராஜா ப்ரதாப் சிங் அண்ட் மஹாராணி வ்ருஷ்பான் குமாரி அவர்கள். ( நாம் அலஹாபாதில் இருந்து இங்கே அயோத்தி வரும் வழியில் ப்ரதாப்கட் என்று ஒரு ஊர் வருது.அங்கே குதிரை மீது அமர்ந்த கோலத்தில் மஹாராஜா ப்ரதாப்சிங் அவர்களின் செப்புச் சிலையைப் பார்த்தேன். சட்னு க்ளிக்கினாலும் சிலையின் சைட் போஸ்தான்        கிடைச்சது .....)

 அதிலிருந்து மஹாராஜா குடும்பத்தினர்தான் பரம்பரையாக கோவில் நிர்வாகம் செய்யறாங்க. நாலு தலைமுறை கடந்து போயிருக்கு இதுவரை. ஆரம்பத்துலேயே ஒரு ட்ரஸ்ட் அமைச்சு இன்றுவரை நல்ல பராமரிப்புடன் கோவிலை கவனிச்சுக்கறாங்க என்பது மிகவும் மகிழ்ச்சியான சமாச்சாரமே!

 கருவறையில் பார்த்தோம் பாருங்க மூணு செட் சிலைகள், அதுக்கும் சின்னதா ஒரு வரலாறு இருக்கு! பெரிய சிலைகள் ரெண்டும் குப்த சாம்ராஜ்ய காலத்தில் சந்திரகுப்த விக்ரமாதித்யர் செய்து கொடுத்தவை. முகலாயப் படையெடுப்பு காலத்தில் ரகசியமா பூமியில் புதைச்சு வச்சுக் காப்பாற்றப் பட்டதாம். இது நம்ம ப்ரதாப் சிங் மஹாராஜாவுக்குத் தெரியாது போல:( மஹாராணி, பூஜைக்குச் சிலை வேணுமேன்னு செஞ்சு கொடுத்த சிலைகள்தான் மீடியம் சைஸ்.

 ரொம்பச் சின்னதா இன்னொரு ஜோடி இருக்கு பாருங்க, அதை ஸ்ரீ க்ருஷ்ணர், ஒரு ராம பக்தைக்குத் தந்தாராம். பூவுலகை விட்டு நீங்கும்போது, மண்ணில் புதைச்சு வச்சுட்டுப்போகும்படி உத்தரவாகி இருக்கு. அந்த சாமியாரிணியும் அதே போல் செஞ்சுருக்காங்க. விக்ரமாதித்தன் காலத்தில் கனக் பவனை புனரமைக்க அந்த இடத்தைத் தோண்டியபோது குட்டிச்சிலைகள் கிடைச்சதாம். ஆகக்கூடி இந்த மூணு ஜோடி சிலைகளில் மூத்தது ஸ்ரீ க்ருஷ்ணர் கொடுத்த சிலைகளே! ஆஹா....அதான் போல மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது என்பது!!!

குட்டிச்சிலைகள் கிடைச்சதுமே...  'ஆஹா...இதுதான் அந்தக் காலத்து கருவறை, சரியான இடத்தில்தான்  தோண்டிக்கிட்டு  இருக்கோம்' என்பது கன்ஃபர்ம் ஆச்சாம். அதேஇடத்தில் இப்போதைய கர்ப்பக்ரஹம் கட்டிட்டாங்க!

 சொல்லி வச்சது போல் இந்த மூன்று ஜோடிகளுமே சொக்கத் தங்கம்! கனக் பவனின் பெயருக்கேற்றமாதிரி கனக் சாமிகள்! (கனக் = ஸ்வர்ணம். ஹிந்தி)

 கருவறை முன்னால் இருக்கும் பெரிய ஹாலில் பக்தர்கள் கூட்டமா உக்கார்ந்து பஜனைப்பாடல்கள் பாடிக்கிட்டு இருக்காங்க.


நாங்கதான் சாமியைப் பார்க்கணுமுன்னு ராமர்கள் முகத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கோமே தவிர, அவுங்களுக்கெல்லாம் அந்த சந்நிதியில் உக்கார்ந்து ராமநாமம் பஜனை செய்வதே பேரானந்தமா இருக்கு.

 அவுங்க பாட்டுக்கு பஜனையைப் பாடியபடியே இருக்க, தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் சந்நிதியை மொய்ச்சுக்கிட்டே இருக்காங்க. கூட்டம் வந்துக்கிட்டே இருக்கு இங்கே!

 அடுத்த இடம் பார்க்கணுமே என்ற வேகத்தில் அங்கிருந்து கிளம்பினோம். வெளியே கனக் பவனுக்கு இடப்புறம் இன்னொரு பெரிய மாளிகை இருக்கு. ராம் தர்பார்னு இதையும் சொல்றாங்க. இங்கேயே சுத்திக்கிட்டு இருந்தால் எப்படின்னு உள்ளே போகாமல் வெளியே இருந்தே ஒரு க்ளிக்.

 தொடரும்..............:-)



Monday, May 26, 2014

சாமி எங்கெருக்கு? ஆ(ர்)மிதான் இருக்கு!

எப்பவோ ராமர் கோவிலை இடிச்சு மசூதி கட்டிட்டாங்கன்னு...   அது ஆச்சு  வருசம்  கிபி 1528  லே பாபரின் அரசவையில் இருந்த ஒரு மந்திரியால். பாபருக்கே தெரிஞ்சுருக்குமான்னு  எனக்கொரு சந்தேகம். இந்த பாபர்தான்  முகலாய சாம்ராஜ்யம் இங்கே,  நம்ம நாட்டில் உருவாகக் காரணமா இருந்தவர்.

எப்படியோ  தில்லியில் இடம்பிடிச்சு உக்கார்ந்தவங்களுக்கு   ஹிந்துக்கோவில்களில் இருக்கும் செல்வங்கள் கண்ணை உறுத்தி இருக்கலாம்.

கோவில்கோவிலாக் கொள்ளை அடிக்க ஆரம்பிச்சுருக்காங்க.  நமக்குத்தான்  சிறப்பானதை சாமிக்குக் கொடுக்கணும் என்ற எண்ணம் இருக்கே. (இப்ப அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு இருக்கோன்னு சம்ஸயம்.  கோவில்நகைகளை நம்மாட்களே  ஓசைப்படாம அபேஸ் பண்ண ஆரம்பிச்சுருக்காங்க.  சமீபத்துச் செய்திகள் (திருப்பதி, திருவனந்தபுரம்) இதை உறுதிப்படுத்துதே!... .)     ஆனாலும்  இப்பவும் கோவில்களில் சாமிச்சிலைகளை, நகை நட்டால் அலங்கரிச்சு வழிபட்டுக்கிட்டுத்தானே இருக்கோம்.

ஆனாலும் தில்லி எங்கே... அயோத்யா எங்கே? இத்தனாம் தூரம் வந்து  ராமர் கோவிலை இடிச்சுட்டு அந்த இடத்தில் மசூதி கட்டி இருக்காங்கன்னா.....  ஹிந்துக்களுக்கு புகைஞ்சுக்கிட்டே இருந்துருக்கு.  ஒரு முன்னூத்தி இருபத்தியேழு (327) வருசம் கழிச்சு  1855லே  ஹனுமன்கட் என்ற ஊரிலிருக்கும் கோவிலில் இருந்து  பைராகிகள் (சாமியார்கள்) பலர் கூட்டமா வந்து, எங்க கோவிலை எப்படி இடிக்கப்போச்சுன்னு  மசூதியின் பொறுப்பில் இருந்தவங்களோடு  சண்டை போட்டு ஜெயிச்சுருக்காங்க(??!!)

அதுக்குப்பின் ரெண்டு வருசம் கழிச்சு அங்கே ஒரு ஓரமா   மேடைபோட்டுக் கூரை கட்டி ராமர் சிலையை ப்ரதிஷ்டை பண்ணிக் கும்பிட ஆரம்பிச்சு இருக்காங்க.

இதுக்கிடையில்தான்   குறுமிளகு, மசாலாச் சாமான் வாங்க வந்து அப்படியே கம்பெனி ஆரம்பிச்சு  (1757 )  மெள்ள மெள்ள நாட்டைப்பிடிச்சுக்கிட்ட  ப்ரிட்டிஷ்காரர்கள்  1858 முதல் ராஜாங்கம் பண்ணவும் ஆரம்பிச்சுட்டாங்க.   அப்போ  சின்னசின்ன  சமஸ்தானமா  பாரதம் முழுசும் இருந்த ராஜாக்களுக்கு   ஒற்றுமை என்பதே இல்லாமப் போயிருந்த  காரணத்தால்   வெள்ளையருக்குக் கொண்டாட்டம்.  குரங்கு அப்பம் பிட்ட கதையா ஆகிப்போச்சு.

'எங்க இடத்துலே ஹிந்துக்கள்  கோவிலைக் கட்டுறாங்க'ன்னு   மசூதிக்காரர்கள் புகார் கொடுக்கறாங்க, வெள்ளையர்களுக்கு.  'இல்லே,  இது ஆரம்பத்துலே எங்க இடம்தான்.  எங்க கோவிலை இடிச்சுத் தரைமட்டம் ஆக்கிட்டுத்தான் மசூதி கட்டுனாங்க'ன்னு  இவுங்க சொல்ல....

இது என்னடா புதுத் தலைவலி.........  இந்தியாவுலே நாம்  இன்னும் முழுசா கொள்ளையடிச்சு முடிக்கலையே,  அதுக்குள்ளே இவுங்களுக்கு  நாட்டாமை பண்ணும் வேலை வேற எக்ஸ்ட்ராவா வந்துருச்சேன்னு  கோவிலுக்கும் மசூதிக்கும் இடையில்  ஒரு வேலியைப்போட்டு பாகம் பிரிச்சுட்டாங்க வெள்ளைக்கார மாஜிஸ்ட்ரேட்  ஐயா சொல்படி . இது 1859 லே.

மொத்த வளாகத்துலே  கிழக்குப்பக்கமா கோவிலுக்கு  வழி. வடக்காலே மசூதிக்கு.  இப்படி ஒரு 26 வருசம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துருக்கு. அவுங்கவுங்களுக்குத் தனி வழின்னு.  கோவிலை பக்காவாக் கட்டிக்கலாமுன்னு   அனுமதி கேட்டுருக்காங்க.    பத்துமாசம் யோசிச்சுப் பார்த்த வெள்ளையர் அரசு, மனுவை  தள்ளிருச்சு. திரும்பத்திரும்ப கோர்ட் கேஸ்ன்னு  நடக்குது. அவுங்களும் விடாம  நிராகரிச்சுக்கிட்டே இருந்துருக்காங்க.

இதுக்கிடையில் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிச்சு  (1947) வெள்ளையர்களை ஆட்சியில் இருந்து வெளியேத்துனாங்க இந்தியர்கள். சுதந்திரம் கிடைச்சது. ஆனாலும்  கவர்னர் ஜெனரல் தலைமையில்தான் ஆட்சி.

அடுத்த ரெண்டாம் வருசம்......... 1949 லே யாரோட   துர்போதனையோ...........  மசூதிப்பகுதிக்குள்ளே போய் ராமர் சிலையை வச்சாங்க ஹிந்துக்கள். தேவையா இது?  மதக்கலவரம் ஆகப்போகுதேன்னு  ரெண்டு பக்க வாசலையும் மூடி ஸீல் வச்சது அரசு.

அதுக்குப்பிறகும்  மக்கள்ஸ் சும்மா இல்லை:(   எங்களுக்கு சாமி கும்பிட அனுமதி வேணுமுன்னு  கேஸ் போடறதும் அதுவும் இதுவுமா கலகத்தீயை அணைக்காமப் பார்த்துக்கிட்டாங்க:(  இதுலே அரசியல் நிறையப்புகுந்து போய்   தீயில் குளிர்காயும் கூட்டமும் பெருகி என்னென்னவோ நடந்து போயிருக்கு.  சரித்திரத்துக்குள்ளே போனால் வியப்பும் வன்மமும் ரத்தமும் பகையும் பார்க்கப்பார்க்க  விநோதம்தான்.

1992  டிசம்பர் 6.  நாட்டுக்கே  தலையிடி நாள்.   சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த நாள் என்றே சொல்லலாம்.   ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்  வேலிதாண்டிப்போய்  மசூதிக்கு மேலே  இந்துமதக்கொடி(??!!)ன்னு ஏத்திவச்சு, கொஞ்சம் மசூதியையும் இடிச்சுருக்காங்க.


பழிக்குப்பழின்னு மசூதி மதக்காரர்களும்  அங்கே இங்கேன்னு குண்டு வைக்கப்போய் இப்ப என்னன்னா வருசாவருசம்  டிசம்பர் 6 திவசம் நடக்குது:(  முடிவில்லாத ஒரு பகை:(

(ஆமாம். எனக்கொரு சந்தேகம். குண்டு வச்சு நாசம் ஏற்படுத்தணுமுன்னு நினைக்கிறவங்க, எப்ப  சரியான டைம் கிடைக்குதோ அப்ப வைப்பாங்களா, இல்லே   தீவுளிக்குத் தீவுளி போல டிசம்பர்  ஆறுக்குத்தான் வைப்பாங்களா? )

இந்த ஊரில்  ராமர் பிறந்த  எக்ஸாக்ட் இடம்   இதுதான்னு   சின்னதா ஒரு சிலையை வச்சுக் கும்பிடுது சனம்.  மசூதியில் சில நூற்றாண்டுகளாகவே அவுங்க பூஜை புனஸ்காரம் ஒன்னும் இல்லாமச் சும்மாத்தான்  இருக்குதுன்றாக.  ஆனாலும் இது எங்க இடமுன்னு அவுங்களும் விட்டுக்கொடுக்கலை.

நமக்குத்தான் சாமி தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்.அவன் சர்வவியாபின்னு இருக்கும்போது  தகராறு வேணாம். பேசாம ஒரு கோவில் புதுசாக் கட்டிக்கிட்டாப் போதாதா?  இல்லே 'அங்கேயும்' அவனே அருவமா இருந்து 'அவுங்க' பூஜையையும் ஏத்துக்குவான் தானேன்னு நினைக்கப்டாதா?

எனெக்கென்னவோ   மேலுலகில்  மஹாவிஷ்ணு என்று நாம் கும்பிடுபவரும்,  அல்லா(ஹ்) என்று  அவர்கள் கும்பிடுபவரும்  ஜாலியா ஒன்னாவே இருப்பாங்கன்னு தோணுது. அவரவர் கண்களுக்கு அவரவர் வழிபடும் தெய்வம்:-)

பேசாம ரெண்டு பேருக்கும் இந்த இடம் இல்லைன்னு  வெவ்வேற இடத்துலே ஆளுக்கு ரெண்டு ஏக்கர் ஒதுக்கிட்டு எப்படியோ கட்டிக்குங்கன்னு அரசு சொல்லப்டாதா?   அப்ப  அந்த இடம்?  அதைக் குழந்தைகளுக்கான  தோட்டம்/பார்க் அமைச்சுட்டால் ஆச்சு. குழந்தையும் தெய்வமும் ஒன்றில்லையோ!!!!
(புதுசாக் கட்டப்போகும் ராமர் கோவில் இப்படிடிதான்  இருக்குமாம்)

இப்படியெல்லாம் மனசுலே எண்ணங்கள் சுழன்று சுழன்று பெரும் புயலா உருவாகிக்கிட்டே இருக்கு.

இவ்வளோ  கலாட்டா ஆன கோவிலான ராமஜென்மபூமியை தரிசனம் செய்யலாமுன்னு இப்போ போய்க்கிட்டு இருக்கோம்.  ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தச் சொன்ன ஆனந்த், இதுக்குமேல் அங்கே வண்டிகள் போக அனுமதி இல்லை. நடந்துதான் போகணும் என்றதுடன்,  கேமெரா, கைப்பை, செல்ஃபோன் இப்படி எதுவும் கூடாது. வெறுமனே கை வீசிக்கிட்டுத்தான்  போகணும் என்றதும்,  பைப்பொருட்களை  வண்டியிலே வச்சுட்டு ட்ரைவரிடம் ஒப்படைச்சோம்.

 பொட்டல் காடா இருந்த  இடைவெளியில் நடந்து போறோம். அக்கம்பக்கம் ஒன்னுமே இல்லை. ஒரு பத்து நிமிச நடை இருக்கும்.  திடீர்னு முளைச்சமாதிரி ஒரு வரிசைக் கடைகள். அதைக் கடந்து போய் ஒரு   வேலிக்குள் உள்ள இடைவெளியில்  'இந்தப்பக்கம்  லேடீஸ், அந்தப்பக்கம்  ஆத்மி' ன்ன ஆனந்திடம், 'நீ வரலையான்னா....' இல்லே,    நான் இங்கே தான் இருப்பேன். நீங்க வெளிவரும் வழி   வேற பக்கம். அங்கே  அந்தப்பக்கம்'னு இடப்பக்கம் காமிச்சதும்  சரின்னு  அவரவர் வாசலுக்குள் நுழைஞ்சோம்.  ஒரு ஏழெட்டுபெண்கள் பாதுகாப்புப்பணியில். ஜாலியாச்  சிரிச்சுப்பேசிக்கிட்டு இருந்தாங்க. எந்த  ஊர் என்னன்னு விசாரிச்சுக்கிட்டே  அடுத்த பக்கத் திரையைக் காமிச்சு அது வழியா உள்ளே போங்கன்னு உத்தரவாச்சு.  ஹிந்தி பேசத் தெரிஞ்சால்  வடக்கே  போகும்போது கொஞ்சம்  நல்லதே.

வெளியே போய்ப் பார்த்தால் யாருமே இல்லாமல் பாதை ஜிலோன்னு இருக்கு.  பக்கத்து திரையைப் பார்த்தால் அனக்கம் இல்லை. வழக்கம்போல் விடுவிடுன்னு முன்னாலே போயிட்டாரோன்னு  நடக்க ஆரம்பிச்சேன். ஒரு நூறு மீட்டர் தாண்டினதும்  இடப்பக்கம் வலைக்கம்பி போட்ட ஃபென்ஸ். பக்கத்துலே ஒரு  பாதுகாப்பு ஆசாமி.  ராணுவம்.

இந்தப்பக்கம்  ஒருத்தர் போனாரான்னு கேட்டால் இல்லைன்னார். அப்ப கோபால் வர்றவரை அங்கேயே நிக்கலாம்.  இவர்பாட்டுக்கு நம்மைத்தேடி அலையப் போறாரேன்னு நின்னு, ராணுவத்திடம்  பேச்சு கொடுத்தேன்.

கம்பி வலைக்கு அந்தப் பக்கமிருக்கும் வெட்டவெளியில் ரெண்டு மாடுகள் நின்னு மேய்ஞ்சுக்கிட்டு இருப்பதைக் காட்டி அவை இரண்டும் ரொம்ப 'பக்தி மாடுகள்' என்றார். தினமும் காலை  கோவில் வளாகம் முழுசையும்  மூணு சுத்து சுத்தி வந்துதான் காலை புல்மேயவே ஆரம்பிக்குமாம்.  (பரிக்ரமா தீன்  தஃபா)  ஆஹா....  இன்னும் கொஞ்சநாளில்  'ராமா ராமா' ன்னு சொல்லிக்கிட்டே பரிக்ரமா  வரும் பாருங்க!! அதுகளுக்கு  'மா.........  மா...........'ன்னு சொல்லத்தெரியாதா என்ன?:-))))

இன்னிக்கு  அவ்வளவா கூட்டம் இல்லை போலிருக்கேன்னேன். ஆமாம்.  தில்லியில் இருந்து பார்லிமெண்ட் அங்கங்கள் வந்துருக்காங்க.  அதான்.....   ( பொதுமக்கள் கூட்டத்தை வரவிடலை என்று அவர் தன் வாயால் சொல்லலை !!!) அபி த்தோ வோ லோக்  நிக்கல் கயா.

அதுக்குள்ளே நம்ம கோபால் ஓட்டமும் நடையுமா வந்து சேர்ந்தார்.  ஏன் இவ்ளோ நேரம்? அப்படியா  செக் பண்ணாங்க?   'கைக்கடிகாரத்துக்கு  அனுமதி இல்லை.  வெளியே போய்  எங்கியாவது லாக்கரில் வச்சுட்டு வா'ன்னுட்டாங்கன்னார்.

அட ராமா.........

தோசைக்கல் வாட்ச் வாங்கிக்குங்கன்னு நான் எவ்ளோ சொன்னாலும் அதெல்லாம் தனக்குச் சரிப்படாதுன்னு  எப்பவும் சாதாரணமா ஒரு ஸீக்கோ வாட்ச்தான் வாங்கிப்பார். அதுக்கே இப்படியா?

'அதான் வெளியே போய்  லாக்கர் இருக்குமிடத்தை விசாரிச்சுத் தேடிக் கண்டுபிடிச்சு,  ஒரு கடையில் வச்சுட்டு வந்தேன். இதோ  சாவி'ன்னார். நம்பகத்தன்மைக்காக பூட்டிட்டு சாவியை நீங்களே வச்சுக்குங்கன்னு சொல்லிடறாங்க:-)

என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். கணிசமா இருவது மினிட் கடந்து போயிருந்தது:(

இன்னும் கொஞ்சதூரம் நடந்து வலப்பக்கம் இருக்கும்  இன்னொரு செக்யூரிட்டி செக்கப்பைக் கடந்து  கட்டங்கட்டமா கம்பித் தடுப்புகளுக்கிடையில்  நடந்து போறோம். ஜஸ்ட் ஒரு ஆள் போகும் அகலம்தான். ரெண்டு பக்கமும் கம்பிவலைவேற அடிச்சு வச்சுருக்காங்க. நமக்கு முன்னும் யாருமில்லை. பின்னும் யாருமில்லை!    எஸெஸ்ஸா வளைஞ்சு போகுது கம்பித்தடுப்புப் பாதை. விறுவிறுன்னு போய்ப்போய்   ஒரு இடத்தில்  சட்னு நின்னார் கோபால்.  எதுக்கு  நிக்கறார்னு பார்த்தால் அங்கே   வலதுபக்கக் கம்பி வலையில் பெரிய ஜன்னல் மாதிரி கட் பண்ண இடத்தில்  குட்டியூண்டு  மேடையில் ஒரு பண்டிட் உக்கார்ந்துருக்கார்.  பக்கத்தில் கொஞ்சம் பூக்கள், ஒரு பெரிய கிண்ணத்தில் சக்கரை மிட்டாய். (வடக்கே இதுதான் கோவில் ப்ரசாதம்)

'வோ ஹே ராம் லாலா.சியா ராம் கா ஜனம் இதரி ஹுவா ' ன்னார்.  எங்கே? கை காட்டிய திக்கில் பார்த்தால்  ஒருமுப்பது மீட்டர் தொலைவில்   ஒருமேடை போன்ற  அமைப்பில்  பூக்குவியல். குவியலின் மேல் ஒரு  உலோகக் குடை. (வெள்ளியா இருக்கலாம்!)  'குச் நை திக்தா ' ன்னேன்.   ஃபூல் கே அந்தர், ஃபூல் கே அந்தர் என்றார்.

கண்ணு வேற சரியாத் தெரியலை.  அங்கே பாரும்மா அங்கேன்னு  கோபாலும் கையை நீட்டிக் காமிக்கிறார்.  சின்னதா ஒரு ஒன்னரை ரெண்டடி உசரத்துலே  குட்டியா ஒரு சிலை  லேசாத் தெரிஞ்சது.

அட ராமா...................

கை கூப்பி வணங்கிக்கிட்டேன்.  அள்ளியெடுத்த கொஞ்சூண்டு சக்கரை மிட்டாய்களைக் கையில் தந்தார் பண்டிட்.  வாங்கின கையோடு திரும்பினால்  கம்பி வலையில் கீழ் பாகத்தில் சின்னக் கையொன்னு!  மெள்ள நீட்டின கையில் முட்டாய்களை வச்சதும் சரேல்னு கையை இழுத்துக்கிச்சு ஒரு பாப்பா நேயுடு. குழந்தை ராமனுக்கேத்த சைஸில் குழந்தை அனுமன் !!!

எப்படி இங்கே நமக்கு ஏகாந்த ஸேவை கிடைச்சதுன்னு மனசு விம்மியது  நெஜம்!   யாரும் இல்லை. நின்னு நிதானமா இன்னும்கூடப்  பார்க்கலாம்.  அட்லீஸ்ட் பண்டிட்டுக்குப் பேச்சுத்துணை:-)

இன்னொருக்காப் பார்வையை விரட்டி ராம் லாலாவை ( குழந்தை ராமன்)   ஸேவிச்சுக்கிட்டு  நடையைக் கட்டினோம்.

போனவழியே திரும்பமுடியாது. மறுபடியும் இடம் வலம் என்று கம்பிப்பாதையில் போய்  கடைசியில்  ஒரு தடுப்பில் இருந்த  வாசலுக்கு வந்தால்  ரெண்டு  ஆர்மி ஆட்கள்  இருந்தாங்க.  இடது பக்கம் போகச் சொல்லி கை காமிச்சாங்க.

 வலது பக்கம் திரும்பிப் பார்த்தால்  அந்தத் தடுப்புக்குப் பின்னால்  ஏராளமான கூடாரங்கள்.  கொஞ்ச தூரத்தில்  கல்யாண வீட்டுச் சமையல் போல்   பெரிய பாத்திரங்களும் கோட்டை அடுப்புமா இருக்கு.  ஆர்மி கா ரஸோயி:-)

சாமியைப் பார்த்தீங்களான்னு கோபாலிடம் கேட்டதுக்கு, சாமி எங்கெருக்கு? ஆர்மிதான் இருக்குன்னார்.  (பதிவின் தலைப்பு :  உதவியவர்,  நம்ம கோபால் !!!)

மூணாயிரம்  ராணுவ வீரர்கள் இங்கே  டேராப் போட்டுருக்காங்களாம்.  ( ஓ ...ஆர்மி குவிக்கப்பட்டதுன்னு அடிக்கடி  தினசரியில்  வாசிக்கிறோமே... இப்படியா!!!)

சுத்திமுத்தும் கண்ணை ஓட்டினாலும் மசூதியின் ஒரு  சின்ன பாகம் கூடக் கண்ணுக்குப் புலனாகலை. அப்படி பாதையை அமைச்சுருக்காங்க போல! அப்புறம்  என்ன ப்ரச்சனையாம்?  க்ருஷ்ணஜென்ம பூமி மதுராவிலும் சரி, நம்ம காசி விச்சு கோவிலிலும் சரி ,  கோவிலையொட்டியே மசூதி பளிச்ன்னு கண்ணுக்குத் தெரியும்விதமாத்தானே இருக்கு.  காஞ்சியிலும்  பரமபதநாதன் கோவிலுக்கு அடுத்து மசூதிதானே? அங்கெல்லாம் மக்கள்ஸ் ஒத்துமையாத்தானே இருக்காங்க.  என்னமோ போங்க:(

இன்னும் கொஞ்சதூரம் போய் ரெண்டு திருப்பத்தில்  'ராம்ஜென்ம பூமி' வேலிக்கு வெளியே  வந்து சேர்ந்தோம். நம்ம ஆனந்த்  அங்கே!   இன்னொரு பையனுடன் பேசிக்கிட்டு இருந்தவன், நம்மைப் பார்த்ததும் ஓடி வந்தான்.  வாட்ச் எடுக்கப்போனோம். எந்தக் கடைன்னு தெரியாமல் ரெண்டு நிமிசம் முழிச்சுட்டுக்  கடையைக் கண்டு பிடிச்சார் கோபால்.  வாட்ச் திரும்பக் கிடைச்சது. இருவது ரூபாய் வாடகை.

மறுபடி கார் நிறுத்தம் வரை நடையோ நடை.  உள்ளே சுத்துனது, வெளியே நடந்ததுன்னு  கணக்கு  வச்சால் ஒரு  ஏழெட்டு கிலோ மீட்டர் இருக்கும் போல!

தொடரும்.............:-)

PINகுறிப்பு:  கையிலே கேமெரா இல்லையேன்னு நான் துடிச்சது  எனக்குத்தான் தெரியும்!  அதுக்காகப் பதிவை மொட்டையா விடமுடியுமா?

சுட்டபடங்கள் சில போட்டுருக்கேன் (குறிப்பா நம்ம ரிஷானுக்காக!)

2.  அயோத்யான்னதும் ராமனின் நினைவு  கட்டாயம் வரத்தானே செய்யுது. இது ஒரு காலத்தில் ராமனின் கால் பட்ட பூமி என்பது  மனசுக்குப் பரவசம் ஊட்டுது இல்லையா?  அப்ப ஊரில் எங்கே  ராமனுக்கான சிறப்புக்கோவில் கட்டுனா என்ன?  சண்டை சச்சரவு, மதக்கலவரம் எல்லாம்வேணாமே:(

எப்படியோ இந்தப் பதிவு வரும்நாள், இந்தியாவில் புது ஆட்சி பதவிக்கு  வர்றநாளா அமைஞ்சு போச்சு.  மதத்தைப் பின் தள்ளிட்டு, மனுசருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்  நல்ல அரசாக அமையணும். மனுசனா அவதரிச்சு வாழ்ந்து மறைந்த ஸ்ரீராமர், கோச்சுக்க மாட்டாருன்னு உறுதியா நம்பறேன்! 

புது  அரசுக்கு நம் நல்வாழ்த்து(க்)கள்.  





Friday, May 23, 2014

ப்ராச்சீன், ப்ராச்சீன், ஊரே ப்ராச்சீன் !!!


அங்கெ ஒன்னும்தான் இல்லைன்னு  படிச்சுப்படிச்சு  நம்ம கீதா, சுப்பைய்யா வாத்தியார் போன்ற  நண்பர்கள் சொல்லி இருந்தாலும்...............  எப்படி? எப்படின்னு பார்க்கணுமுன்னு மனசுக்குள் ஒரு தவிப்பு.   இது ஒரு நாப்பது வருசக் கனவு.  போதாக்குறைக்கு  இது அந்த ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்னு.  ஒன்னுமில்லைன்னாலும் குறைஞ்ச பட்சம்  மோக்ஷமாவது கிடைக்கட்டுமேன்னு துணிஞ்சேன்.   இதோடு ஆறு டௌன். ஒன் மோர் டு கோ:-)

அலஹாபாத்தில் இருந்து 167 கிமீ தொலைவு.  எப்படியும் மூணரை மணி நேரத்துலே போயிடலாம் என்றார்  ட்ராவல் டெஸ்க்காரர்.  நல்ல வண்டியா  ஒன்னு வேணும். இன்னோவா கொடுங்கன்னு நேத்தே சொல்லி வச்சுருந்தோம்.

பொழுது விடிஞ்சதும் நான் பயணத்துக்குச் சீக்கிரமாத் தயார்.  மூணரை மணி நேரமுன்னா எப்படியும் பகல் கோவில் மூடும் நேரத்துக்குக் கொஞ்சம் முந்தி போவோம். அப்புறம்  சாயங்காலம் நாலுவரை கோவில் திறக்கணுமேன்னு தேவுடு காக்க வேண்டி இருக்கும்.  கொஞ்சம் நிதானமாக் கிளம்பினால்  சரியா இருக்குமுன்னு நம்ம  இவர் வலைமேய ஆரம்பிச்சார்.   ப்ச்...உண்மைதான். அப்ப நமக்கு மட்டும் வலை வேலை இல்லையா என்ன?

அப்படி இப்படின்னு ஒன்பதரைக்குக் கிளம்பிட்டோம்.  சுல்த்தான்பூர், ஃபைஸாபாத் மெயின் ரோடு. வழியில் சின்னச்சின்ன ஊர்கள்.  பழவண்டிகள், கடைத்தெருக்கள், கரும்பு லோடு ஏத்திப்போகும் ட்ரக்குகள், ட்ராக்ட்டர்கள், கடுகுப்பூ பூத்திருக்கும் வயல்கள் இப்படிப் பலதையும் கடந்து போறோம். அங்கங்கே கோவில்களும் திடீர் திடீர்னு கண்ணில் படுது.  சாலைகள் அழகைச் சொல்லவே வேணாம்:(

ஃபைஸாபாத் பெட்ரோல் பங்கில் ஒரு சின்ன ஸ்டாப். பாத்ரூம் இருக்கான்னு விசாரிச்சால்,  ஒரு தூணுக்கு மேல்  கையைக்கொண்டு தடவி சாவி எடுத்துக் கொடுத்தார்   ஊழியர்.   நாட் பேட்.   அங்கிருந்து கிளம்பி கொஞ்சதூரத்தில் வலக்கைப்பக்கம் பிரியும் சாலையில்  எட்டரை  கிமீ தொலைவில்  இடது பக்கம் அயோத்யாவுக்குள் போகும்  சாலை  பிரியுது.

வண்டி நுழைஞ்ச  அதே நொடி, பறந்து வந்தது ஒரு பட்டாளம். ஷ்டாப் ஷ்டாப்..........

ஏழெட்டுப்பேர். எல்லாம்  சின்னபசங்கதான் பதினைஞ்சு பதினாறு. ஒரே ஒரு நாட்டாமை.  இளைஞன், வயசு ஒரு  இருபத்திநாலு.........  ம்ம்ம்ம்ம்ம்

"எல்லாக் கோவிலையும்  சுத்திக் காட்ட  100 ரூ மட்டும் கொடுத்தால் போதும்.  அதுக்கு மேலே கேட்டா.... இந்த 'வேலை'யை  விட்டுருவேன். தாய் மேல் ஆணை. மா கஸம்!!!! "

நமக்கும் முன்பின் தெரியாத ஊரில் ஒரு ஆள் இருந்தாத் தேவலைதானே!   'ஸாத் மே ஆவ்' என்றதும்  ஒரு பையன் வண்டிக்குள்  ஏறிக்கிட்டான். 16. பெயர்... ஆனந்த்.  இனி அவனே கைடு பண்ணட்டுமுன்னு  நம்ம ட்ரைவருக்குச் சொல்லிட்டோம். அவருக்கும் நிம்மதி ஆச்சு:-)

அலஹாபாதில் இருந்து ஒன்பதரைக்குக் கிளம்பி இங்கே  அயோத்யா வந்து சேரும்போது மணி ரெண்டேகால்!   முதலில்  லஞ்ச் முடிச்சுக்கணும்.  கோபால் முகம் வாடி இருக்கு.  பரபரப்பா இருக்கும் கடைத்தெருவில் சாப்பிட நல்ல இடம் எதுன்னு  ரெண்டு பக்கமும் பார்த்துக்கிட்டே மெள்ள ஊர்ந்து போறோம். மணிக்கூண்டு  இருக்கும் இடத்தில் (ஓடாத கடிகாரம்)  வண்டியை நிறுத்தினோம்,  ஆனந்த சொல்படி. அட்டகாசமான கட்டிடம்!!!!


கண்ணெதிரே  நாலைஞ்சு  கடைகள்.   அதில்  பார்க்க சுத்தமா இருந்த ஒன்னில் போய் உக்கார்ந்தோம். நம்ம டிரைவரை ஏற்கெனவே சாப்பிட அனுப்பியாச்சு. ஆனந்தையும் நம்மகூடவே கூட்டிப் போனோம். அவன்  விடுவிடுன்னு கடைசி மேஜைக்குப் போயிட்டான். ( சின்னப்பையன் என்பதால் இந்த'ன்')

கடையின் முன்பக்கம் தவா ரொட்டி செஞ்சுக்கிட்டு இருக்காங்க ரெண்டு பேர்.  ரெண்டு விநாடி  தோசைக்கல்லில் போட்டு திருப்பின சப்பாத்தியை  அடுத்தவர் கேஸ் அடுப்பில் நேரடியாக் காமிச்சு உப்ப வச்சுக்கிட்டு இருக்கார்.  ஆளுக்கு ரெண்டு ரொட்டி,  கோபாலுக்கு ஒரு தால் சொல்லியாச்சு.

அடுத்த நிமிசமே சாப்பாடு வந்தாச்சு. கூடவே ஓரத்தில்,  நறுக்கிய கேரட் வில்லைகளும்  ஊறுகாய் போல ஒன்னும்.  இது சந்த்ரா மார்வாடி போஜனாலய். ஸோ... நோ வெங்காயம்:-)   (ஆமாம்.மார்வாரிங்க பூமிக்கு அடியில் விளைஞ்சதைச் சாப்பாட்டில் சேர்த்துக்கமாட்டாங்களே.... அப்ப எப்படி கேரட்? ) எங்க சாப்பாடு ஆனதும்  திரும்பிப் பார்த்தால் இன்னும்   நம்ம ஆனந்த் ஒன்னும் சாப்பிடாமல் சும்மா  உக்கார்ந்திருப்பது தெரிஞ்சது.

பில் என்ன ஆச்சுன்னா.........  கடை முதலாளி, நம்மை ஒரு விநாடி ஏற இறங்கப் பார்த்துட்டு, அதான் நீங்க ஒன்னுமே சாப்பிடலையே....   என்னான்னு பில் போட ?  என்றார்.  மெனு கார்டு பார்க்க நல்லாவே இருந்துச்சுதான்.  அதுக்காக........?     சொல்லுங்கன்னதும்  தயக்கதோடு முப்பது ரூபாய்ன்னார்.

இருநூறை நீட்டி, ஆனந்துக்கு என்ன வேணுமோ அதைக் கொடுங்க. மீதிக்காசை  ஆனந்திடம் கொடுத்துருங்கன்னு சொன்னோம்.    சாப்பிட ஆரம்பிச்ச  ஆனந்த், அடுத்த அஞ்சாவது நிமிட்    ஆஜர்.


சின்னச்சின்ன  வீடுகளும், திண்ணைகளும், கயித்துக் கட்டில்களுமா மக்கள் எளிய வாழ்க்கை. வீதிகள்  சந்து சந்தா இல்லாமல் கொஞ்சம் அகலமாவே இருக்கு. சுத்தம்தான் போதாது:(  இதுலே அங்கங்கே குரங்கன்மாரின் நடமாட்டமும்.


கண்ணைத் திருப்பிய இடமெல்லாம் குப்பைமேடுகளும்,  கோபுரங்களுமாக....

முதல் விஸிட். சரயு நதிக்கரை.  இதையொட்டிய ஒரு சின்னக் கோவிலில் கும்பிடு. மணற்பரப்பில்   ஓலைத்தட்டிகளால்  கூரையும் சுவருமா அமைப்புகள். நதிக்கரையில் கொஞ்சம் மக்கள்ஸ். படகுப்பயணம்  கூட இருக்கு.


அலங்காரமா இருந்த ஒரு'  கேட் 'போட்ட வாசல்.  உள்ளே   ராம்லீலா நடக்கும்  மைதானமாம்.   நம்ம ஆனந்த் கூட  ராம்லீலா நாடகத்தில் நடிப்பதுண்டாம்.   ஓக்கே ஓக்கே.... நடிகன்!!!

ஸ்ரீ ராம் தர்பாருக்குள் போறோம். உள்ளே முற்றத்தில் போய் செருப்பைக் கழட்டலாம். முற்றத்தைச் சுத்தி இருக்கும் வெராந்தாக்களும்  வளைவுகளுடன் அலங்காரத்தூண்களும், அங்கங்கே சில சந்நிதிகளுமா   இருக்க ரெண்டு மாடிக் கட்டிடம்.   முற்றத்தின் மேல்பாகம் வலை அடிச்சு வச்சுருக்காங்க.  நேயுடூஸின் நடமாட்டம் அதிகம் பாருங்க:-))))



நம்ம ஆனந்த:-)


முற்றத்தின்  அடுத்த பக்கம்  வராந்தா சுவரோர மண்டபம். மூணு வாசல். நடுவில் ராமரும் சீதையும் உக்கார்ந்திருக்க, பின்னால்  மூணு தம்பிகள் நிக்கறாங்க. அடுத்த ரெண்டு பக்கங்களிலும் இதே ஐவர் வெவ்வேற போஸில்.  மஞ்சளும் ஆரஞ்சுமாய் சாமந்திப்பூ மாலைகள்.  எல்லோருக்கும், பேக் ட்ராப் உட்பட ஒரே  யூனிஃபாரம்.



ஏற்கெனவே நாம்  பல வட இந்தியக் கோவில்களுக்குப் போயிருப்பதால்  இந்தவகைச் சாமிச்சிலைகள்  கண்ணுக்குப் பழகி இருக்கு . நோ அதிர்ச்சி. (ஆனால் சட்னு மனசில்  ஒரு பக்திப் பரவசம் வர்றது மிஸ்ஸிங்தான் கேட்டோ!)

அடுத்த ஹாலுக்குள் போனால்  சீதாவின் சமையலறை. ஒரு பக்கம் பெரிய பாத்திரங்களும் கடாய்களுமா.  பாவம் சீதை. இவ்ளோ சமைக்கணுமா?  த்ரௌபதிக்குக் கிடைச்ச அக்ஷயபாத்ரம் இவளுக்குக் கிடைக்கலை பாருங்க:(

ஒரு மேடையில் வனவாசம் போன கோலத்தில் ராமனும் சீதையும். (நீளமுடி ராமனும் பாப் கட் சீதையும்) கூடவே சில  சாமியார்களின் படங்கள், ஒரு Gகதை!

தனிப்பட்ட மடத்தின் கோவிலாக இருக்கணும். இதுக்குள் ஆனந்த்  வந்து, அடுத்த பகுதியில் ஒரு  பாபா (சாமியார் ) இருக்கார். நான் போய் அனுமதி வாங்கிட்டு வந்துட்டேன். அவரை தரிசிக்கலாமுன்னு  சொன்னதும் அங்கே போனோம்.

ராமர் கோவிலைக் கட்டியே ஆகணுமுன்னு  கடந்த 20 வருசமா  ஒரு பொழுது  விரதம் இருக்காராம், பாபா. அதுவும் அன்னம்,ரோட்டி எல்லாம்  உபேக்ஷிச்சு!  தினமும்  ஒருமுறை இரவில் பாலும் பழமும் மட்டும். மேடையில்  காவி போர்த்தி அமர்ந்திருக்கார் பாபா.  சுத்திவர சாமி படங்கள். தலைக்குப் பின்புறச் சுவரில் வரப்போகும் ராம் மந்திர்  படம் ஒன்னு இருக்கு.   காலை முதல் இரவு வரை அசையாமல் இப்படி உக்காரணுமுன்னா......   பாவம்,இல்லையோ?

பெரியவருக்கு வணக்கம் சொல்லிக்கிட்டோம். லேசா தலை ஆட்டினார்.   பக்கத்தில் இருந்த சிஷ்யர், ஒரு  நோட்டுப்புத்தகம் நீட்டி, இதுலே கோவில் கட்ட எவ்வளவு கொடுக்கப்போறீங்கன்னு  எழுதுங்கன்னார்.   நோட்டை வாங்கிப் பார்த்தால் எல்லாம்  அஞ்சிலக்கமா இருக்கு.  கோபால் ஒரு மூணு இலக்கம் எழுதிட்டு காசை நீட்டினார்.


சிஷ்யரின் ஏமாற்றம் முகத்தில் தெரிஞ்சது. ஆனந்தின் பக்கம்  பார்வையை வீசினாருன்னு நினைக்கிறேன்.
 சக்கரத்துலே காத்து சரியா இருக்கான்னு  செக் பண்ணினார் ஒருத்தர்:-)



 அடுத்து ஒரு ஹனுமன் கோவில் வழியாப் போனோம். வாசலுக்கு ரெண்டு பக்கமும் பக்கத்துக்கொரு காலா வச்சு நிக்கறார்.   கோவில் மூடி இருக்குன்னு ஆனந்த் சொன்னதை நம்பினேன்.

தொடரும்...:-)