Wednesday, May 14, 2014

கோட்டைக்கு(ம்) ஒரு கும்பிடு. கங்கைக்கும் ஒரு கும்பிடு.


சாரநாத்தில் இன்னும் சில புத்தர் கோவில்கள் இருந்தாலும், எனக்காக காசி ராஜா அரண்மனையில் ஒரு முக்கிய சமாச்சாரம் காத்திருக்குன்னு  தெரியாமலேயே,   திரும்ப வாரணாசி நோக்கிப் பயணப்பட்டு முக்கால் மணி நேரத்தில் அங்கெ போய்ச் சேர்ந்தோம்.

காசி அரண்மனையும் கோட்டையும் கங்கையின் மறுகரையில் இருக்கு. பனாரஸ் மகாராஜா பல்வந்த் சிங் ( இது பஞ்சாப் சிங்குகள் இல்லையாக்கும்)  பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டுனது.  ராம்நகர் கோட்டைன்னா எல்லாருக்கும் சட்னு  புரியுது.  அரண்மனையின் ஒரு பகுதி கங்கைக்கரையில்  முடியுதுன்னு எங்கோ வாசிச்ச நினைவு. உள்ளே ஒரு கோவில், நம்ம வேத வ்யாஸருக்குக் கட்டி இருக்கார் ராஜா.  வேத வ்யாஸர் யாருன்னு  தெரியாதவங்களுக்கு.........  மஹாபாரதம் எழுதுன  எழுத்தாளர்!!! (எல்லாம் நம்ம 'எழுத்தாளர் ஜாதி'தான் கேட்டோ:-))))

துர்கையம்மனுக்கும் ஒரு கோவில் இதுக்குள்ளே இருக்கு. நம்ம கோபால், கோட்டையைப் பார்த்தா விடமாட்டார். அப்படி என்னதான் இருக்கோன்னு  சலிச்சுக்கிட்டாலும்  நானும் கூடவே போய் பதிவுக்கு மேட்டர் இருக்கான்னு  கவனிச்சுக்குவேன்.

இங்கேயும் பதிவுக்கு மேட்டர் கிடைச்சது:-)  மஹாராஜாவின் கோட்டைக்குள்  'தண்டனிட்டு ' வணங்கினேன்!  உள்ளே இருக்கும்  ம்யூஸியம் மற்ற சமாச்சாரங்களைப் பார்க்க  ஆளுக்குப் பதினைஞ்சு ரூ டிக்கெட் எடுத்துக்கணும்.  கோட்டை வாசலில் பக்கத்துக்கொன்னா ரெண்டு பீரங்கிகள். ஸ்மால் சைஸ்.

உள்ளே  பெரிய வளாகம்தான். பராமரிப்பு அவ்வளவா இல்லாத புல்வெளியைச் சுத்தி  பழங்கால தினுசில் கட்டடங்கள்.   ம்யூஸியம் போக இடது பக்க மூலையில் இருந்து ஆரம்பிக்கணும் .  முதல் ஹால் முழுக்க  பல்லக்குகள், சாரட் வண்டி,  விண்டேஜ் கார்கள்  இப்படி. படம் எடுக்கத் தடை என்பதால் கேமெராவைக் கைப்பைக்குள்  வச்சுக்கிட்டேன்.

இந்த ஹாலைக் கடந்து அடுத்த பகுதிக்குப்போக  இடப்பக்கம் மூணு படிகள்  ஏறணும். வழக்கம்போல் கோபால் விடுவிடுன்னு முன்னால் வேகநடை.  அக்கம்பக்கம் கண்களை ஓட்டியபடியே படி ஏறிப்போறேன்.  லேசா தலை சுத்தறமாதிரி இருக்கேன்னு   கோபாலைக் கூப்பிட நினைக்குமுன் 'தொபுக்கடீர்'!!!!  ஏற்கெனவே முழங்கால் வலி, பாத வீக்கம் எல்லாம் சேர்ந்து ஆளைக் குப்புறத் தள்ளிருச்சு:(

'குண்டு விழுந்த சப்தம்'  கேட்டுத் திரும்பிப் பார்த்த இவர் ஓடி வர்றார். அதுக்குள்ளே சுதாரிச்சு எழுந்து உக்கார்ந்துட்டேன்.   சட்னு எழுந்திரிக்க முடியலை.  ரெண்டு நிமிசம் கழிச்சு  நிதானமா எழுந்தேன். அப்பவும் நல்லவேளை, கேமெரா பத்திரமா பைக்குள்ளே இருக்கு என்ற நினைப்பு.

விழுந்த வேகத்தில் மூக்குக் கண்ணாடி  தலையின் வேறபக்கத்துக்கு நழுவி இருக்கு.  அவசர அவசரமா எடுத்துச் சரியாகப் போட்டுக்கிட்டேன். அதுவும் நல்ல வேளை உடையலை. புதுசு. வாங்கி இப்பதான் அஞ்சுநாளாச்சு.  எதாவது ஆகி இருந்தால்  மீதிப்பயணம் மசமசன்னுதான் இருந்துருக்கும்.  போகட்டும். கடவுள் காப்பாத்திட்டார். அப்புறம் அறைக்கு வந்து கழட்டி மேசையின்மேல் வச்சால்  ஃப்ரேம் ஒருபக்கம் கோச்சுக்கிட்டாப்போல் கோணாமாணான்னு இருந்துச்சு:(

இதுக்குள்ளே என்னைச் சுத்திப் பத்துப்பேர். க்யா ஹுவா?  க்யா ஹுவா? ன்னு.  'குச் நை. தோடா ஸே  சக்கர்  ஆயா. ( ஆமாம்.இப்பத்தானே சாரநாத்தில் சக்கரம்சக்கரமா ஏகப்பட்டது பார்த்துட்டு வந்துருக்கோம்!)

வெளியே வந்து  அஞ்சு நிமிசம் நல்ல காத்தில் உக்கார்ந்ததும் தலை தெளிவாச்சு. 'பிபி மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிட்டேயா?'ன்னு  இவர்வேற கேள்விமேல் கேள்வி. கோட்டை இப்ப வேணாமுன்னு கிளம்பி ஹொட்டேலுக்கே வந்துட்டோம்.

மூட் சரியில்லைன்னு  அறைக்கே லஞ்ச் வரவழைச்சுச் சாப்பிட்டோம்.  ஒன்னேகால்மணி நேரம் ரெஸ்ட். நாளைக்கு காசியை விடணும் என்பதால்  வேற எங்காவது பார்க்கணுமான்னு கேட்டார் கோபால். அதுகூடஎப்படி?  "ம். உன் ஆசைப்படி காசியை எல்லாம்(!!??) பார்த்தாச்சும்மா.  நாளைக்குக் காலையில் கிளம்பறோம் என்ன!"

எல்லாம், எல்லாம் னு முணுமுணுத்துட்டு இன்னிக்கு  சாயங்காலம் எங்கே போறோம்? என்றேன். ச்சும்மா இங்கே பக்கத்தில் சுத்தியடிக்கலாம் என்றவர், இன்னும் வேறெதாவது பார்க்கணுமான்னார்.

வருணா படித்துறை முதல் அஸ்ஸி படித்துறை வரை  ஒருக்கா முழுசுமாப் பார்க்கணும். நடக்க முடியாது.  விழுந்து கும்பிட(வும்)  திராணி இல்லை. படகில் இங்கே தொடங்கி அங்கே வரை ஒரு ரைடு போகணும் என்றேன். அதுவும் கொஞ்சம் பகல் வெளிச்சம் இருக்கப்பப் போனால்தான் படங்கள் எடுக்க முடியும். காட்சிகளும் கண்ணுக்கு நல்லாத் தெரியும் என்றேன்.

வருணா அஸ்ஸி பார்க்கக் கிளம்பினோம்.  பாதிவழியிலே பயங்கர ட்ராஃபிக் ஜாம். என்னன்னு பார்த்தால் ஒரு பெரிய ஊர்வலம் போய்க்கிட்டு இருக்கு. எல்லாம் பஞ்சாபிகள் கூட்டம்.  பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் வேற  அவுங்கவுங்க ஸ்கூல் பேனர் பிடிச்சுக்கிட்டு வரிசையில்.

பேண்டு வாத்தியம் முழக்கம்,   அலங்காரம் செஞ்ச குதிரைகள்,   குரு கோபிந்த் சிங் ஜி அவர்கள் காலத்து சரித்திர சம்பவங்கள் வரைஞ்ச படங்கள் . ஸ்பீக்கர் ஆம்ப்ளிஃபையர், வச்சுக்கவும்,   இப்படி மற்ற எல்லாத்துக்கும்  'சைக்கிள் வண்டிகளே'



 குரு க்ரந்த சாஹிப்  வரப்போகும் வழியைச் சுத்தம் செஞ்சுக்கிட்டே போகும் பக்தர்கள்.


ஒரு பெரிய ட்ரக்கில்  பூஜை மாடத்துக்குள்' குரு க்ரந்த் ஸாஹிப்' இருக்கார். அவரை ஓதும் மூத்தோர் , இந்த வண்டிக்கு  முன்புறம் வீரவாள் ஏந்தியபடி நடக்கும் கல்ஸா  அங்கங்கள்,  இப்படி பவனி.

சீக்கியர்களின் பத்தாவது குரு (இவர்தான்  குருபரம்பரை (மனுச )வரிசையில் கடைசி) கோபிந்த் சிங் அவர்களின் பொறந்தநாள் கொண்டாட்டம்.  இவர் தனக்குப்பின்  மனுஷ குருமார் வேணாமுன்னு  அவர்களின் மதப் புத்தகத்தை (  'க்ரந்தம்' )  நிரந்தர குருவாக ஆகிட்டார்.  அதுவே அவர்களின் வேதம்.  வேதம் சொல்லித் தராத பாடமுண்டோ? ஆக்சுவல்லி, இவர் பிறந்தநாள்  இன்று ( 5 ஜனவரி) தான்.   ஆனால் வருசம்  1666.   இங்கே  காசியில் இருக்கும் குருத்வாராவில் தொடங்கிய ஊர்வலம், ஊரெல்லாம் சுத்தித்  திரும்ப  குருத்வாரா நோக்கிப் போய்க்கிட்டு இருக்கு. பள்ளிக்கூடப் பிள்ளைகளையும் சேர்த்து பெரும்பவனி போக ஏதுவான  நாளா  இன்னிக்கு ஞாயிறாகவும் அமைஞ்சு போயிருக்கு . பாருங்க, நமக்கும் பார்க்கணுமுன்னு இருந்துருக்கே!

சீக்கியர்கள் கொண்டாடும் கல்ஸா என்னும் தற்காப்புப்படையை உண்டாக்குனவரும்  இவரே.  இதைப்பற்றி  நம்ம அம்ரித்ஸர்பயணத்தில் கொஞ்சம் சொல்லி இருக்கேன். அப்பப் பார்க்காதவங்க  , இப்ப ஒரு க்ளிக்கில் பார்த்துக்கலாம். சுட்டி இது.



பிள்ளைகள் ஊர்வல வரிசையில்  ஒரு  மூணு சக்கர வண்டியில்   (சைக்கிள் ரிக்ஷா  போல,  இதுதான் மீன்பாடி வண்டியா?) பசங்களின் பைகளை அடுக்கி வச்சுக்கிட்டு சைக்கிளை மிதிக்கிறார்  ஒருவர். பிள்ளைகள் அனாவசியமா  இன்றும்  மூட்டை தூக்கவேணாம். எனக்கு ரொம்பப்பிடிச்சிருக்கு இந்த  சூப்பர் ஐடியா!

ஊர்வலம் கடந்த பின் மறுபடி காசித்தெருக்களில் கலகலன்னு இருக்கு.  அதே தஸ்ஸஸ்வமேத் காட் பக்கம்  வந்தாச்சு.  சந்துகள் வழியாகப் படித்துறைக்குப் போறோம். மச்சினர்களின் மனைவிகளுக்குக் கங்கை கொண்டு போகணும். அதுலே ஒருத்தர்  'நிறையக் கொண்டு வாங்க. வீடு முழுசும் தெளிக்கணுமு'ன்னாங்க:-)  நதிநீர் இணைப்புத் திட்டம் சீக்கிரம் வந்தாத் தேவலை!


ஒரு லிட்டர் கொள்ளும் ப்ளாஸ்டிக் கேன் ஒன்னு வாங்கினார் கோபால். அவருக்கு அதுதான் 'நிறைய'!   கங்கை மாதாவுக்காக நல்லதா இதுவரை   ஒன்னும்  பூஜை  செய்யலையேன்னு  ரெண்டு மலர் தட்டுகள் வாங்கிக்கிட்டேன். ஆளுக்கொன்னு.  நாலைஞ்சு பூவும் சின்னதா ஒரு மெழுகு விளக்கும் இருக்கு.  பத்து பைஸா பெறுமானமுள்ள தீப்பெட்டி இலவசமாத் தரேன்னு  கடைக்காரம்மா சொல்லித் தந்த தீப்பெட்டியில் எண்ணி நாலு தீக்குச்சிகள்.  குச்சி மீந்துபோனால் பொட்டியைத் திரும்பக்கொண்டு வந்து  தரேன்னு  சொன்னதும் அந்தம்மா  சிரியோசிரின்னு சிரிச்சாங்க:-)

இந்த முறை நம்ம 'குகன்' பெயர் அஜய். சின்ன வயசுதான்.  படகும்  துடுப்பு வலிக்க வேணாம். எஞ்சின் பொருத்துனது. சுக்கான் பிடிச்சால் போதும்.  இங்கிருந்து  புறப்பட்டு   வருணா வரை போய் அங்கிருந்து திரும்பி அஸ்ஸி வரை போய் மீண்டும் இதே இடத்துக்கு வரணும்.    போகவரன்னு  மொத்தம் எட்டு மைல் பயணம்.

கங்கையில் படகுப் பயணமா இது மூணாவது முறை. கடந்த மூணுநாட்களா தினம் ஒருக்கான்னு கிடைச்சுக்கிட்டு இருக்கு.

இதே போல் ஒரு படகுப்பயணம்  'நாங்க மட்டுமே'ன்னு  போகணுமுன்னு  வெனீஸ் நகருக்கு ஆசை ஆசையாப் போனேன்.  எங்க சுற்றுலாக் குழுவினர்  மட்டுமில்லாம வேற குழுக்களையும் சேர்த்தே வரிசையில்  நிக்க வச்சுட்டாங்க. ஒவ்வொரு படகா வந்து ஆட்களை ரொப்பிக்கிட்டுப் போகுது.  இதோ அடுத்த படகுக்கு நாங்கள் (கோபால், மகள் & நான்)  வரிசையின் ஆரம்பத்தில்.  படகு வந்து நின்னதும் ஓடிப்போய்  ஏறி தலைப்பக்கம் மூணுபேரும் சேர்ந்தாப்போல உக்கார்ந்தோம்.  படகு நிரம்புனதும் ,கிளம்பாமத் தாமதிக்குது.  படகோட்டி இறங்கிப்போய்   ஆஃபீஸ் உள்ளே என்னமோ பேசிட்டு அப்படியே காணாமப் போயிட்டார். பத்து நிமிசமாச்சு படகு நகரலை.

என்னாச்சுன்னு நாங்க  எல்லோரும் முழிக்கக்குள்ளே.....   இந்தப் படகு போகாது. நீங்க எல்லோரும்  பக்கத்துப் படகுக்கு மாறி உக்காருங்கன்றார்  படகுக் கம்பெனி  ஆள் ஒருவர்.  (சென்னையிலே  பஸ் ஸ்டேண்டுலே  உறுமிக்கிட்டு இருக்கும்  பஸ்ஸில்   ஆட்கள் எல்லோரும் ஏறி உக்கார்ந்த பிறகு, இந்த வண்டி போகாது. அதுலே போய் ஏறிக்குங்கன்னு கண்டக்டர் வந்து சொல்றாப்போல்)  
எல்லோரும் இறங்கும்போது முதலில் ஏறுன நாங்கள் கடைசி ஆட்களா ஆகி இருந்தோம். அங்கே போனா இடமே இல்லை.

கம்பெனி ஆள், ஆட்களை நெருக்கி உக்காருங்கன்னு விரட்டிட்டு, எங்களுக்கு இடம் உண்டாக்கித் தந்தார்.   ஒன்னா உக்காரக்கூட இடம் இல்லாமல் மூணு பேரும் சிதறிப்போய்  மூலைக்கு ஒருத்தரா ஆனோம்:(  வெனிஸ் நகரில் உல்லாசமாப் படகில் போகும் ஆசையில்  மண் விழுந்துச்சேன்னு மனசில் ஒரு குமுறல்.  அந்த ஒருமணி நேரப்பயணம் பூராவும் மூஞ்சைத் தூக்கிக்கிட்டே உர்ன்னு உக்கார்ந்திருந்தேன்.  அது எங்கள்  மணநாளுக்குண்டான (வெள்ளிவிழா ஆண்டு வேற) நிகழ்ச்சின்னு ஏகப்பட்ட கனவுகளோடு  போன  யூரோப் பயணம்.

அப்புறமும் என் மனசு சமாதானமாகலையேன்னு  தனியா ஒரு படகு எடுத்துக்கிட்டுப் போய்வரலாமுன்னு  வேற ஒரு சின்னப்படகாண்டை விசாரிச்சால், புண்ணியவான் படகோட்டி, அதுக்கு ஆயிரம் டாலர் கொடுன்னு கனவில்  பெரும்கல்லை  சீச்சீ.... பாறையைத் தூக்கிப்போட்டார்.

இத்தனைக்கும் வெனிஸ் நகரத் தண்ணியில்  கெட்ட நாத்தமான நாத்தம்.  ஆயிரம் கொடுத்து  நாத்தம் பிடிக்கவேணாமுன்னு  மற்ற இடங்களைச் சுத்திப் பார்க்கப்போயிட்டோம் அப்போ.

இப்போப் பாருங்க எந்தவிதமான  கனவுகளுமே இல்லாமக் கங்கையில்   மூணுநாளா படகுச் சவாரி. அதுவும் ஏகாந்தமா!

மணி இப்போ மாலை அஞ்சுதான்.  சூரிய வெளிச்சம் இருக்குன்னாலும் லேசா ஒரு குளிர் வேற.  படகில் இருந்தே  படித்துறைகளை வேடிக்கை பார்த்துக்கிட்டே போறோம். க்ளிக் க்ளிக் க்ளிக். பல்வேறு மாநில மக்கள். ஏதோ நம்பிக்கையோடு கங்கைக்கரையில் வந்து கூடறாங்க.  சாஸ்த்திரம் சம்ப்ரதாயம் இழுத்து வந்துருக்கு.  நிதி வசதி  உள்ளவர்களைவிட ,நிதி குறைஞ்ச ஏழை மக்களின்  பயபக்தி  அதிகம்தான்.  குடும்பங்குடும்பமா பண்டாக்களைச் சுத்தி  உக்கார்ந்து  கண்களில் பக்தி மின்ன   கவனமா அவர் சொல்றதைக் கேட்டு  அப்படியே  நதியில் முங்கி வந்து ஈரத்துணியோடு கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க.

மணிக்கர்ணிகாவில்  எரியும் சிதைகள் வழக்கம்போல்!   இதுவரையிலும் நேத்துதான் வந்து போனோம். இனி மீதி இடங்களைக் கவனிக்கணும். சில படித்துறையின் கடைசிப்படிகளையொட்டி குட்டிக்குட்டி மாடங்கள், சாமிகள் இப்படி எக்கசக்கமா இருக்கு. சிலவற்றில் இப்படி இல்லாமல்  படிவரிசைகள் மட்டும்.


படம்: ஆதி கேசவ் காட்

ஹனுமான் கதி காட்  படு நீட்!  தொட்டடுத்த   த்ரிலோசன் காட்டில்  முன்னோர் நடமாட்டம் . இப்பதான் பார்க்கிறேன். மற்ற படித்துறைகளில் காணோம்.  ஹனுமானை சேவிக்கும் கூட்டமா இருக்கணும். படித்துறை மக்கள் கூட்டம் வரவரக் குறைஞ்சுக்கிட்டே போகுது.  கொஞ்சம் பெரிய படகுகளில்  சுற்றுலாப்பயணிகளை  பெரிய அளவில்  ஏத்திக்கிட்டுக்கிளம்பறாங்க.  குழுக்களா வந்திருக்காங்களோ என்னவோ!

நிஷாத் காட்டில் ஒரு கோவில் நல்லா பெருசா அம்சமா இருக்கு.

ரயில் பாலத்தைச் சமீபிக்கிறோம். கூட்ஸ் வண்டிஒன்னு நிதானிச்சுப்போய்க்கிட்டு இருக்கு. பாலம் கடந்து அந்தப்பக்கம் கொஞ்சதூரம் போனதும், ஐயோ...... நரகத்துக்குள் நுழைஞ்சாப்போல கொடூரமான  துர்கந்தம்:  காசி நகரக் கழிவுகள் கங்கையில் கலக்குமிடம்.   அட ராமா............  அழுக்கையெல்லாம்  நதி  நகருக்குள் புகும் ஆரம்பநிலையிலேயே கலந்து விட்டுடறாங்களா:(


பொதுவா  அழுக்கை நதியில் கலப்பதே  தப்பு.  சுத்திகரிச்ச கழிவு நீரா இருக்காதுன்னு நினைக்கிறேன். நாளுக்கு 2000 மில்லியன் லிட்டர்   கழிவு நீர் கலக்குதாமே:(

வேற வழி  இல்லை. நகரின் அழுக்கு நதியில்தான் என்றாகினாலும்.... வாருணா வில் கலக்காமல் அஸ்ஸிக்கு அப்புறம்  கலக்கக்கூடாதா?
பெருமாளே... சீக்கிரம் கங்கையைச் சுத்தம் செய்னு  அப்பீல் செஞ்சுக்கிட்டேன். 'ஆமாம்... நீ செய்வதையெல்லாம் செஞ்சுட்டு  என்னை க்ளீன் செய்யச் சொல்றேயா?  முதல்லே  நீங்க எல்லாம் நிறுத்துங்க. அப்புறம் நான்....    கட்டாயம் சொல்வான்!

இன்னும் கொஞ்சம் போனதும்   துர்நாற்றம் விலகின நிலையில்  வாருணா  காட் கோவிலும்  அமைதியாக் கூட்டமே இல்லாத  படித்துறையுமா  இருக்கு.  படகில் இருந்தே கும்பிட்டோம். திரும்பலாமுன்னு  அஜய் கேட்டார்.   துர்கந்தம்,  ரயில்பாலம் எல்லாம்  கடக்கிறோம்.  மணிகர்ணிகா வந்ததும்  கவனிச்சேன். பிணம் எரியும்  நாற்றம் வரலை. ஒரே புகை மணம்தான். காசியில் பிணம் நாறாதுன்னு சொல்றது உண்மைதான் போல.

மணி ஆறடிக்கப்போகுது. அங்கொன்னும் இங்கொன்னுமா  கரையோரங்களில் விளக்குகளின் ஒளி. சட்னு  இருட்டு கவ்வுது. ஆரத்தி எடுக்கும் படித்துறைகளில்   மாலை நிகழ்ச்சிக்குத் தயாராகறாங்க.

 ஒரு பக்கம்  குனிஞ்சு  தண்ணீரைத் தொட்டு, வாங்கிப்போன கேனில் தண்ணீர் ரொப்பிக்கிட்டார் கோபால்.   மலர்த்தட்டில் விளக்கு ஏற்றி,  கங்கையில் மெதுவா விடச் சொன்னேன்.  'தட்'  குப்புற விழுந்து அணைஞ்சு போச்சு.  அடுத்த விளக்கையாவது  மெதுவா தண்ணீரைத் தொட்டபடி  வையுங்கன்னேன்.  ஆனால் அது முன்னதையே பின்பற்றுச்சு.  பேசாம அஜய் கிட்டே கொடுத்திருந்தால்  கொஞ்சநேரமாவது  எரிஞ்சுருக்கும். நதியில்போகும் அழகையும் பார்த்திருக்கலாம்.  (நெவர் மைண்ட். நெக்ஸ்ட் டைம். இது எங்க கிவி ஆட்டிட்யூட்)


இருட்டும் அமைதியும்  சேர்ந்துவர, ஒன்னும் பேசாமல்  மௌனமா  அஸ்ஸிவரை போனோம்.  படகைத் திருப்பி  தஸ்ஸஸ்வமேத் படித்துறையில் கொண்டு வந்து நிறுத்தின  அஜய்க்கு நன்றி சொல்லி, கணக்கை முடிச்சுட்டு மெல்லப்படியேறி தெருவோடு  போகும் மக்கள் கூட்டத்தில் கலந்தோம்.  தொடர்ந்து மூணாவது முறையா  வந்ததில் சாலை பரிச்சயமாகி  இருக்கு. ஆரத்தி நிகழ்ச்சி ஆரம்பிச்சு நடந்துக்கிட்டு இருப்பதால்  இங்கேசாலையில்  கூட்டம் கொஞ்சம் குறைவுன்னு தோணல்.

நாம் கேட்கலைன்னாலும்  நமக்கு நாலடி முன்னால் நடந்து வழி காட்டியபடி  கார்வரை கொண்டு வந்து விட்டார் அஜய். மீண்டும் நன்றி.

படம்:   நம்ம அஜய்

ட்ராவல் டெஸ்க்கில் மறுநாளைக்கு  வண்டி வேணுமுன்னு சொன்னோம்.
இதுவரை ஆனதுக்குக் கணக்குப்போட்டு அறைக்கு  பில் அனுப்பச் சொல்லிட்டு அறைக்குப்போனோம்.

தொடரும்..............  :-)








15 comments:

said...

படங்கள் அனைத்தும் பிரமாதம்...

200 மில்லியன் லிட்டர் கழிவு நீர்...? மகேஸ்வரா....!

said...

//தோடா ஸே சக்கர் ஆயா//

ஏன் தலை சுத்தல் .உடம்பை பாத்துக்கணும் tour ல இருக்கும் போது தான் இன்னும் கவனமா மாத்திரை எல்லாம் போட்டுக்கணும் .
வெனிஸ் நகர அனுபவம் சரியான எரிச்சல் தான் .
அதற்கு காசியில் ஈடுகட்டியாச்சு :))
படங்களும் விளக்கங்களும் மிக அருமை.
200million litre ..... shocking .

said...

Wஅமக்கெல்லாம் தள்ளிவிட ஆளே வேணாம். நாமே போதும். என்னப்பா ரொம்ப வலிச்சுதா. கண்ணாடி சரி செய்து கொண்டீர்களா. கங்கைக் காட்சிகள் அற்புதம். இவ்வளவு சுத்தினதுக்கு திருஷ்டிப் பரிகாரம். நானும் வெனிஸ் போக நினைத்திருந்தேன். போதுமே என்று தோன்றிவிட்டது.

said...

//தோடா ஸே சக்கர் ஆயா//

தாய்க்குலமே ஜாக்கிரதை.

said...

எதையும் சுவைபட எழுதும் நீங்கள், மயக்கம் வந்து விழுந்ததைக்கூட சாரநாத்தின் சக்கரங்களோடு இணைத்து ரசிக்கும் விதத்தில் சொல்லியிருப்பது உங்கள் எழுத்தின் தனித்துவச் சிறப்பு. உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள் டீச்சர். கங்கையில் கழிவு... வேதனை தரும் செய்தி.

said...

குரங்குகள் இருக்குமிடம் தூய்மையா இருக்கு. மனிதர்கள் இருக்குமிடம் அசுத்தமா இருக்கு. இது என்ன மாதிரி டிசைன் மிஸ்டர் காட்?

வெனிசு பாதிச் சாக்கடைதான். டவுன்போட்டுல (டவுன்பஸ் மாதிரி) நானும் ஏறிப் போயிருக்கேன். நாத்தமோ கொடூர நாத்தம். எல்லா வீட்டுக் கழிவுகளும் அப்படியே கீழதான எறங்குது.

எப்பவும் ஒரு துணைக்கண்ணாடி வெச்சுக்கோங்க. நம்மளைப் போன்ற தாமரைக் கண்ணால் (தாம் அரைக் கண்ணால்) நோக்குறவங்களுக்கு மனைவி துணைவி மாதிரி ரெண்டு கண்ணாடி உதவும்.

பயணத் திட்டம் போடுறப்போ அப்பத்தைய உடல் நலத்தைக் கருத்தில் வெச்சுக்கிறது நல்லது. பாத்துக்கோங்க டீச்சர்.

said...

2000 மில்லியன் லிட்டர் கழிவு நீர் :(((((

தில்லியில் யமுனாவினை பார்க்கும்போதெல்லாம் மனதில் வருத்தம் பொங்கி வரும்.....

படங்கள் நன்று.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

மூக்கைப் பிடிச்சுக்கிட்டு எழுதுனதில் ஸீரோ ஒன்னு விட்டுப்போச்சு:(

ரெண்டாயிரம் அது !

said...

வாங்க சசி கலா.

அப்பப்ப உடல்விடும் எச்சரிக்கை இது.

'ஏய்.....வயசாகிருச்சு'

மிரட்டல்தான்:-)

ஊர் அழுக்கு மொத்தமும் என்றால்.... இப்படித்தான்.

ரெண்டாயிரம் என்று திருத்தணும்.
இன்னொருவாட்டி ஷாக்குங்க!

said...

வாங்க வல்லி.

சென்னை திரும்புனது முதல் வேலை கண்ணாடி சரி செஞ்சதுதான்.

வலி....... அதுபாட்டுக்கு ஒரு மூலையில் இருக்கட்டுமேன்னு விட்டதுதான்:-)

வெனிஸ், ஒரே அழுக்குப்பா:(

said...

வாங்க குட்டிபிசாசு.

நன்றிப்பா. கவனமாத்தான் இருக்கேன். ஆனாலும்...... இப்படி எதாச்சும்... ப்ச்

போயிட்டுப்போகுதுன்னு விடவேண்டியதுதான்.

said...

வாங்க கீத மஞ்சரி.

கங்கையைச் சுத்தம் செஞ்சுருவோமுன்னு சொல்றாங்க. புதிய அரசு கவனிக்கும் என்ற நம்பிக்கை இருக்கு.


உடல்நலம் இப்போ பரவாயில்லைப்பா.

விசாரிப்புகளுக்கு மனம் நிறைந்த நன்றீஸ்.

said...

வாங்க ஜிரா.

துணைக் கண்ணாடி இப்பெல்லாம் வச்சுக்கணும்தான். ஆனால் ஒவ்வொருமுறையும் பார்வைக்குறைபாட்டின் அளவு மாறிக்கிட்டே இருக்கு பாருங்க.

நல்லவேளை... ரெண்டு கண்களுக்கும் புது லென்ஸ் இம்ப்ளாண்ட் செஞ்சுட்டதால் இனி வெறும் ரீடிங் க்ளாஸ் மட்டும் போதும். அது இங்கே கடைகளிலேயே மலிவாக் கிடைக்குது. ஒரு நாலைஞ்சு கூட வாங்கிக்கலாம்:-)

குரங்கிலிருந்து பிறந்த மனிதன் சுத்தம் பற்றிமட்டும் தெரிஞ்சுக்காம அதைக் குரங்குகளிடமே விட்டுட்டான் போல:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தில்லியின் யமுனா...... எனக்கும் ரத்தக் கண்ணீர்தான்.

சாக்கடையா ஆக்கி வச்சுருக்காங்க:(

said...

கங்கைநதியில் பயணித்தோம்.