Monday, June 30, 2014

என்ன பூ?????


மக்கள்ஸ்,

சின்னதா ஒரு புதிர்!  இது என்ன பூ........ சொல்லுங்க!





எலுமிச்சை பழம் பத்திரம்:-)








Friday, June 27, 2014

அட ராமா.... ஆறு மாசமா !!!!!


செக்கவுட் டைம்  பகல்  ஒரு மணி.   நேத்து ராத்திரியில் இருந்தே தைப்பூசம் விழா ஆரம்பிச்சு  நடந்துக்கிட்டே இருக்கு.  காலையில்  வேடிக்கை பார்த்தபடியே சிங்கைச் சீனுவை தரிசனம் செஞ்சுட்டு  திருவிழா கொண்டாட்டத்தையெல்லாம் அனுபவிச்சுக்கிட்டே  கை வலிக்க வலிக்க க்ளிக்கிக்கிட்டே இருந்தேன்.   மெதுநடையில் கிளம்பி  ஊர்வலத்தோடு வந்து  வீரமாகாளியம்மன் கோவிலுக்குப்போய்  டாடா பைபை சொல்லிட்டு வரலாமுன்னா.....  அம்மன் நேத்து முதலே தூக்கத்தை விட்டுத் தொலைச்சு  ஆசிகள் வழங்கும் மும்முரத்தில்.

கடந்த நாலுநாளா செரங்கூன் சாலை உணவகங்கள் எல்லாம்  நஷ்டத்துலே இருக்குன்னு நினைக்கிறேன்.  எல்லாக் கோவில்களிலும் சாப்பாடே சாப்பாடு. கூப்புட்டுக் கூப்புட்டு  விருந்து வைக்கிறாங்க.  பகல் 12 ஆகுதே. பேசாம இங்கேயே சாப்பிடலாமுன்னு  கோபால் சொன்னார். அதானே...  கை நனைக்காமப்போய்.... சந்தனக்காப்பில் ஜொலிக்கும் ஆத்தாவுக்குக் கோபம் வந்துருச்சுன்னா?

அதுவும் வடை பாயஸத்தோடு!  சாம்பார் சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் கறி, பழப்பச்சடி, சக்கரைப்பொங்கல்னு அமர்க்களம்!
நல்ல கூட்டம் கோவிலில்.  எல்லோரும் கைக்கும் வாய்க்குமா இருந்தோம்:-)



எல்லா சந்நிதிகளிலும் அலங்காரமோ அலங்காரம்!   வயிறும் மனசும் கண்ணும் நிறைஞ்சே போச்சு.  கோவில்களைப் பொறுத்தமட்டில்  அழகும் சுத்தமும்  ஒன்றையொன்று  போட்டி போடுதே!  பேசாம இந்த கோவில்களுக்காகவே சிங்கையில் ஒரு ஆறுமாசம் தங்கிடலாமான்னு  ஆசைதான்.  இப்படிச் சொல்றேனே தவிர,  இது உண்மையில் நடந்தால்  இல்லாத குறைகளையெல்லாம்  கூட மனசும் கண்ணும் கண்டுபிடிக்கும்,இல்லே?

கோவிலுக்குப் பின்பக்கம்தான் நாம்தங்கி இருக்கும் ஹொட்டேல் என்பதால் அவசரப்படாமல்  நிம்மதியா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். .




ஒரு மணி ஆனதும்  போய் செக்கவுட் செஞ்சு  பொட்டிகளை எல்லாம் கீழே ஒப்படைச்சுட்டு  காலார இன்னும்  கொஞ்சம் நடை. குடை கேண்டீன் வரை போனோம். எங்கே பார்த்தாலும்  மக்கள்ஸ் மக்கள்ஸ்.   வெய்யில்வேற சக்கைப்போடு போடுது. மூணு மணி ஆச்சு, 'போதும் சுத்துனது. ஷாப்பிங் ஒன்னும் இல்லைன்னா  ஏர்ப்போர்ட் போய் ரெஸ்ட் எடுக்கலாமு'ன்னார் இவர். (அதிக நேரம் சுத்துனாலும்...ஆபத்து எப்பவோன்னு  மனசுக்குள்ளே திக் திக் ன்னு இருந்துருக்கும்,பாவம்!)  சரின்னு கட்டக்கடைசியா  ஆளுக்கொரு இளநீரை  'தாகசாந்தி' யா  குடிச்சுட்டு ஹொட்டேலுக்குத் திரும்பி  டாக்ஸிக்குச் சொல்லி கிளம்பிட்டோம்.  (ஏர்ப்போர்ட்டில் இப்ப  'அந்தக் கடை '  வந்துருக்கும் சமாச்சாரத்தை இவர் எப்படி மறந்தார்? )  

எங்களுக்கு நியூஸி ஃப்ளைட்  மாலை ஏழே முக்காலுக்குத்தான்.  செக்கின் செஞ்சு  முடிக்கும்வரை லேசா ஒரு  ...... நியூஸி  போகும் ஃப்ளைட்டில் பொதுவா  ஒன்னுரெண்டு கிலோ  அதிகம் ஆனாலும்  அவ்வளவாக் கண்டுக்கமாட்டாங்க என்றாலும்......   ரீடிங் மெட்டீயலா நாலு புத்தகங்களைக் கையில் பிடிச்சுருந்தேன்:-)

கனேடியன் லாக்  கேபின்  ஒன்னு  பனிமூடிய கூரையுடன்  இருந்துச்சு.  வெரி நீட் அண்ட் டைடி!  பக்கத்துலேயே வரப்போகும் சீனப் புது வருசத்துக்கான ராசி பலன்கள். வரப்போவது  குதிரை என்றபடியால் எங்கெங்கும் குதிரைகளே! அதுவும் மரக்குதிரையாமே!



இமிகிரேஷன்  முடிச்சு  உள்ளெ போனால்   இடாலி தேசம்.  Leaning Tower of pisa. பச்சைச் செடிகளால்  பார்க்கவே படு ஜோர்.   அதிர்ஷ்டக் காசுகளும்  பூச்செடிகளும் குதிரைகளுமா  வச்சு அலங்கரிச்சது மட்டுமில்லாமல்  அலங்காரம் பிடிச்சுருக்கான்னு நம்மிடம் கேட்கவும் செய்யறாங்க.  அதெல்லாம் வெரி குட்ன்னு சொன்னேன்:-)))



சும்மாச் சொல்லக்கூடாது....  சாங்கியின் அலங்காரங்கள்   அருமையே! அதுவும்  ஒரு மூணு நாலு வாரங்களில்  சட் சட்ன்னு சீஸனுக்குத் தகுந்தாப்போல் மாறி விடுவதால் ஒவ்வொரு  முறை அங்கு போகும்போதும்  இந்த முறை புதுசா என்ன இருக்குமுன்ற எதிர்பார்ப்பு  இருக்கத்தான் செய்யுது. அவுங்களும் நம்மை ஏமாற்றுவதே இல்லை!   நல்லாத்தான் உக்கார்ந்து யோசிக்கிறாங்க.

நிறைய நேரம் இருக்கேன்னு ஸ்கை ட்ரெய்ன் பிடிச்சு  வெவ்வேற டெர்மினல்களுக்குப் போய் வந்தேன்.   MAC  கடை இருக்கான்னு தேடறேனாம்! பாவம் கோபால்.   புளியமரத்துலே ஏறி வருசம் நாப்பதாகப் போகுதே:-)

சின்ன மனிதர்களுக்கான பொழுதுபோக்கா  படம் வரைஞ்சுக்கும்  ஏற்பாடு  எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. பயணங்களில் ரொம்ப போரடிச்சுக்கிடப்பது பசங்கதான்,இல்லையா?

கடையை 'வேடிக்கை மட்டும்' பார்த்துட்டு  கொஞ்சநேரம் வலை மேய்ஞ்சுட்டு  நம்ம விமானம் புறப்படும் கேட்டுக்குப் போயிட்டோம்.


 விமானத்துக்குள்ளே போய் உக்கார்ந்ததும்  வழக்கம்போல் முதல் வேலையா என்ன சினிமா இருக்குன்னு பார்த்தார் இவர். எக்கச்சக்கமா இருக்குதான்.  உலக சினிமாக்கள்.  தமிழ்ப்படங்கள் புதுசுன்னு பார்த்தால்.....   ப்ச்.  அதிலும் ஒன்லைன் ஸ்டோரி போட்டு வச்சிருக்காங்க பாருங்க இப்படி!  போதுண்டா சாமி.  எனக்கு 'ஃப்ளைட் பாத்' மட்டும்போதும்.


பத்துமணி நேரத்தைக் கடத்திட்டு  வெற்றிகரமா  எங்கூரில் வந்திறங்கினோம்.  விஷ் லிஸ்ட்டில்  காசி அயோத்யாவை  டிக் செஞ்சுட்டு  அடுத்து என்னன்னு   பார்க்கணும்:-)

PIN குறிப்பு:  சரியாச் சொன்னால் க்றிஸ்மஸ் தொடங்கி  இன்றுவரை  24 நாட்கள்தான்  இந்தப் பயணம் என்றாலும்  நடந்தவைகளை எழுதி முடிக்கும்போது   ஆறு மாசங்களும்  அறுவது  பதிவுகளாகவும்  ஆகிப்போச்சு.  பேசாம ஆறும் அறுபதுமுன்னு தலைப்பு வச்சுருக்கலாம்!  கூடவே தொடர்ந்து வந்த நட்புகளுக்கு  என் இனிய நன்றிகளை மனமாரத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  


பயணம் உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!




Wednesday, June 25, 2014

சென்னைக்குள் ஒரு சிற்றூர்!

தெருக்கோலத்தைப் பார்த்து (ஐ மீன்  தெருவில் இருந்த கோலங்களைப் பார்த்து)  இதென்னடா....  சிங்காரச் சென்னைக்குள்ளேயே சிற்றூர் ஒன்னு இருக்கேன்னு வியப்புதான்.  அடுக்குமாடிக் கட்டிடங்களும்,  தெருவை அடைச்சு மால்களும்  பெரிய பெரிய நகை மாளிகைகளும்,  கடல்போல் விரிந்த  துணிக் கடைகளும்  பேட்டைக்குப் பேட்டை வந்து நிறைஞ்சு கொடிகட்டிப் பறக்கும் காலமாக இருக்கே இப்போதெல்லாம்! இதுலே வேளச்சேரி என்ன விதி விலக்கா?

சரியா எட்டரைமணிக்கு வந்து சேர்ந்துட்டோம், கடைசி மச்சினர் வீட்டுக்கு.  மெயின் ரோடுலே இருந்து  இடப்பக்கம்  திரும்பியவுடன்   வீட்டு வாசல்களை அடைச்சுப் போட்டுருக்கும் வண்ணக்கோலங்கள், இன்று  'ஹேப்பி பொங்கல்'  என்று கட்டியம் கூறி வரவேற்றன.  அங்கங்கே  பதின்ம வயது இளம் பெண்கள்  கோலம் போடுவதோடு,  வாசல்   சுவரில்  குடும்ப சாமிகளை வரைஞ்சு வச்சுக்கிட்டு இருந்தாங்க.



உண்மையில் இது  ஒரு பாரம்பரிய பழக்கமே!  வாசல்நிலை மஞ்சள் பூச்சு டிசைனை வச்சே அவுங்க வீட்டு குலதெய்வம் எதுன்னு கண்டுபிடிச்சுக்கலாம்.  சிவனா, விஷ்ணுவா, சக்தியான்னு..........  இதைப்பற்றி முன்பு ஒரு முறை விரிவா எழுதுன நினைவு:-) 


பெண்களூரில் இருந்து  மச்சினர் குடும்பம் நேத்தே வந்து இறங்கிட்டாங்க.   இங்கேயே இன்னொரு பகுதியில் இருக்கும் நாத்தனார் குடும்பமும் வந்துட்டாங்க. இன்னிக்குக் குடும்பப் பொங்கல்.

கோபால் அதிகமா, தமிழ்சினிமா பார்க்கிறார்  என்பது இப்போப் புரிஞ்சுருக்குமே!  கடந்த  ரெண்டு வருசங்களுக்கு முன் பெற்றோர்களை  இழந்தபிறகு வீட்டுக்கு மூத்தவரா  இருப்பது இவர்தான்.  அதான்....  பண்டிகை சமயத்தில் எல்லோரும் ஒன்னாக் கூடிக் கொண்டாடலாமுன்னு  செஞ்ச ஏற்பாடு இது.  நான்கு பேரையும்  வரிசையா உக்காரவச்சு நான் க்ளிக்க, பாசமலர்களம்மா.......ன்னு  நாங்க மூணு  சகோதரிகளும்(!!)  கேலி செஞ்சுக்கிட்டு இருந்தோம்:-)

குடும்பப்பாட்டு ஒன்னு இல்லையேன்னு எனக்கு ஏகவருத்தம்:-)  ஆக்ச்சுவலா.....  பதக்கமா  இல்லை பாட்டா என்றுதான் விவாதம். தங்கம் விக்கற விலையில்........  ஊஹூம்.   அதுவும் இப்போதைக்குன்னா  பதினாறு பதக்கங்கள் வாங்கவேண்டி இருக்கும். பாட்டுன்னா.....  காசா பணமா? பாட்டே இருக்கட்டுமே!   இன்னும் தேடிக்கிட்டேஇருக்காங்க சோதரிகள்.  அநேகமா அடுத்த பொங்கலுக்குள் அமைஞ்சுரும்:-)

கோலங்களைப் பார்த்த  மகிழ்ச்சியில்  வாசலில் பொங்கப்பானை வைக்கப்போறாங்கன்னு  நினைச்சால் குக்கரில் பொங்கல் தயாராகிக்கிட்டு இருக்கு:(   சரி அதையும் ஏன் விட்டு வைக்கணுமுன்னு  வரிசையில் போய் கிளறிவிடச் சொல்லி என் கடமையைச் செஞ்சுக்கிட்டு இருந்தேன்.  க்ளிக் க்ளிக் க்ளிக் !

வடை ஒரு பக்கம், குழிப்பணியாரம் ஒரு பக்கமுன்னு  அடுப்பில் வெந்துக்கிட்டு இருக்கு. குடும்பத்து இளைஞிகளின்  கை வரிசை  அபாரம். இதில் கொஞ்சம் மூத்தவள் அடுத்த மாசம் ஜெர்மனிக்கு  மேல் படிப்புக்காகப்  போறாள்.  சின்னவள்  பட்டமேற்படிப்பு இங்கே உள்ளூரில் செய்யப் போறாளாம்.  ப்ளஸ் 2 ஒன்னு   அடுத்த வருசக் கனவில்!   மற்றபடி  சின்னதா ஒரு மூணாங்ளாஸ். கட்டக்கடைசியா  படிக்காதவள்.  பொறந்தே ஏழு மாசம்தானே ஆச்சு:-))

பிரசாதங்கள் தயார் ஆனதும் வீட்டுலே சாமி படங்களுக்கு முன் வச்சு பூஜை செய்துட்டு,  காக்காய்க்கு  கொண்டுபோய்  வச்சார் கோபால்.  காம்பவுண்டு சுவர் மேல் வச்சால் காக்காய்க்குத் தெரியும்போல. ஆனால் அதை வரவிடாமல் ஆளாளுக்கு கா...கா.....கூப்புட்டுக்கிட்டே இருந்தால் அதுக்கு  பயமா இருக்காதா?

ம்ம்ம்ம்ம்.....  சொல்லமறந்துட்டேனே........  தமிழ் கலாச்சார உடையில் ஆண்கள் இருக்கணும் என்பதால் கோபாலுக்கான  வேட்டி தயாரா இருந்துச்சு:-)
கூடத்துலே பந்தி போட்டு  சாப்பாடு விளம்பி எல்லோருமா சாப்பிட்டு முடிச்சோம். கைநீட்டம்  ஆரம்பமாச்சு. பெரியவங்களா லக்ஷணமா  ஆசிகள் வழங்கி  எல்லோருக்கும்  அன்பளிப்பும் வழங்கியாச்சு.  அப்புறமும்  ஒவ்வொரு குடும்ப மூத்தோர், இளையோருக்கு  வழங்கும் நிகழ்ச்சி நடந்துக்கிட்டே இருந்துச்சு.  குட்டிப்பாப்பாதான் யாருக்கும் காசே கொடுக்கலை. ஆனால் பயங்கர கலெக்‌ஷன் அவளுக்குத்தான்:-)))

கோபாலுக்கு மனசில் பொங்கி வழியும் மகிழ்ச்சியை இயல்பா ஏத்துக்கிட்டார். கண்களில் ஒர் பெருமிதம்!   நான் இப்படி குடும்பப்பொங்கல் கொண்டாடுனது எப்போன்னுகூட நினைவில் இல்லை:( அதெல்லாம்  பாட்டி இருந்த காலத்தில்தான்!  அப்புறம் யாருக்கு  நேரமும் மனசும் இருந்துச்சு?  கட்டி அரவணைக்க வீட்டுக்கு ஒரு பெரும் தலை இருந்தால்தான் எல்லாமே!  கோபால் சைடில்  இப்போ  பெற்றோர் போனபிறகு  அவர் தன் கடமையை நல்லா செய்யணுமுன்னு நினைக்கிறார்.  அணில் போல் என்னால் ஆன உதவி.......  முட்டுக்கட்டை போடாமல் இருப்பதுதான்:-))))


அக்கம்பக்கத்துக் கோலங்கள் பார்க்க நான் புறப்பட்டதும்  லேடீஸ் க்ரூப் என்னோடு கிளம்பினாங்க. நாங்களும் வர்றோமுன்னு  ஜெண்ட்ஸ் க்ரூப்  சேர்ந்துக்கிட்டாங்க.  இப்பதான் குடும்பப்பாட்டு இல்லையேன்னு மனசு ரொம்பவே கூவுச்சு:-))  ஜாலியாப் பாடிக்கிட்டே போயிருக்கலாம்!!

  வேடிக்கை  பார்க்கும் வேளச்சேரி மியாவ்:-)

வழியில் ஸ்ரீ சங்கடஹர கணபதி ஆலயம் குறுக்கிட்டது.  புள்ளையாரை அசையவிடாம அவரைச் சுத்தி வீடுகளைக் கட்டிப்போட்டுருக்காங்க. ஆனாலும்  தெருவோரமுன்னு  அவருக்கு ஏதாச்சும் ஆபத்து எதிர்காலத்தில் வர சான்ஸ் இருக்கு.  சங்கடத்தைத் தீர்த்துக்கோன்னு  சொல்லி கும்பிடு போட்டுட்டு ஊர்வலத்தில் சேர்ந்துக்கிட்டேன்.   புது ஃப்ளாட்ஸ் நிறைய வந்துக்கிட்டு இருக்கு. பார்க்க நல்லாவும் இருக்கே!

நமக்கு வரவேண்டியவை வர  ஆரம்பிச்சது. பெண்களூரில் இருந்து  ஒரு புள்ளையார்:-) இளைய மைத்துனர் குடும்பம் ஒரு பொடவை. அதுவும் பச்சை:-)  நல்லவேளை ப்ளவுஸ்  தைச்சுக்கும் வேலை மிச்சம்.  என்னிடம் பச்சைக்கு ஏது பஞ்சம்!


இளைய மச்சினர் கட்டிக்கொண்டு இருக்கும் புது வீட்டுக்கு ஒரு விஸிட்  போனோம்.   பாதிவேலை முடிஞ்சுருக்கு ( இந்தப் பதிவு எழுதும் சமயம் எல்லாம் முடிஞ்சு  கிரகப்பிரவேசமும்  ரெண்டுவாரத்துக்குமுன்  நடந்தாச்சு.)
எல்லோரும் நல்லா இருங்கன்னு  ஆசிகள் வழங்கிட்டுக் கிளம்பினோம்.

 நேரா அண்ணன் வீட்டுக்குத்தான்.  ஜஸ்ட் ஒரு வாய் பொங்கலும் வடைகளையும் உள்ளே தள்ளி  காஃபியையும் குடிச்சுக்கிட்டேன்.  அண்ணி வீட்டில் வேலைக்கு உதவியா இருக்கும் 'ஆயாம்மா' தான்  நான் வரலையா வரலையான்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்களாம்.  ஸ்கைப்புலே அண்ணன் அண்ணியோடு பேசும்போது   அது நான் என்று தெரிஞ்சால் ஓடி வந்து முகம் காட்டும் ஒரு அன்பு.

டாடா பைபை எல்லாம்  ஆச்சு.  மீசையை  ஒருவாட்டி பார்த்துக்கலாமான்னார்  கோபால். ஹைய்யோ!     திரை விலகி இருக்குமே! சலோ அல்லிக்கேணி! ஒருமாசம் எண்ணெய்க் காப்பு முடிச்சு பளபளன்னு ஜொலிக்கிறான்.   தை மாசப்பிறப்பு கூட்டம் இருந்தாலும்....  'சீக்ர' ன்னு ஒன்னு இருக்கே.  போயிட்டு வரேன்னேன்.  சிரிச்சாப்லெ தோணுச்சு.



மெரினா வழியா அறைக்கு வந்தோம்.   கட்டக் கடைசி பேக்கிங் முடிச்சு அறையைக் காலி செஞ்சப்ப மணி சரியா எட்டு.  ஏர்ப்போர்ட்  போகுமுன்  லைட்டா  இரவு  உணவு முடிச்சுக்கலாமுன்னு பாண்டி பஸார்  போனால்....  நிறைய கடைகள் அன்றைக்கு லீவு என்பதால்  கூட்டமே இல்லை.  ரெண்டு நாளைக்கு முன் கண்ணில் பட்ட ருசிரா நினைவுக்கு வர அங்கேயே போனோம். முதல்முறை  கண்ணில் பட்டதுமே கடமையைச் செஞ்சுட்டேன்:-) ஆனால் அப்போ உள்ளே போகவிடாமல் தடுத்தது  முன்னால் ப்ளாட்ஃபாரக் குப்பையே:(




இப்ப மட்டும் எப்படி?  இருட்டில் அழுக்கு கண்ணில் படலை! முன் ஹாலில் யாருமே இல்லை.  ஒரு வேளை விடுமுறையோன்னு பார்த்தால் உள்ளே  நடமாட்டம்.

 தெருவோர முன் ஹால் சும்மாத்தான் போட்டு வச்சுருக்காங்க. நல்லதுதான். குப்பை, நாற்றம் எல்லாம்  உள்ளே  வராது:-)

நம்ம சீனிவாசன்  சட்னு  என்னமோ சாப்பிட்டுட்டு   வண்டிக்குப் போயிட்டார். சாமான்களுக்குக் காவலாம்!

இட்லி வகைகளில் ஆளுக்கு ஒன்னுன்னு ஆர்டர் செஞ்சோம். ஒரே மாவுதான். ஆனால் வெவ்வேற ஷேப் அண்ட் வெவ்வேற வகை சட்னி:-)   ருசி  பரவாயில்லை . எந்த ருசிரா ன்னு  ஆராய்ஞ்சு பார்க்க நமக்கு நேரமில்லை.  நெவர் மைண்ட். நெக்ஸ்ட் டைம்:-)

ட்ராவல்ஸ் வண்டிக்குக் கணக்கு  கொண்டு வந்திருந்த சீனிவாசனுக்கு செட்டில் செஞ்சுட்டு  செக்கின் செய்யப் போனோம்.  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மக்கள்ஸ் எல்லோரும் பட்டு வேட்டியில் பாரம்பரிய லுக் கொடுத்ததை எல்லாம் தொடரின் ஆரம்பத்தில் எழுதியாச்சு. அப்ப பார்க்கலைன்னா இப்போ இங்கே.


மறுநாள்  மாட்டுப் பொங்கலுக்கு  சிங்கை வந்து சேர்ந்து தைப்பூச விழாவெல்லாம் பார்த்து முடிச்சு  ஜனவரி 17 மாலை  சாங்கி  ஏர்ப்போர்ட் வந்து  நியூஸி  போகும் விமானத்தில்  ஏறினோம்.  பயணம்  வழக்கம்போல்  போர் என்றாலும்  சாங்கியில்  அலங்காரம்  சூப்பரா இருந்துச்சு.  அதைப்பற்றிக் கொஞ்சமாவது சொல்லலைன்னா.... பயணக்கதை எழுதிய பலன் கிடைக்காது.
தொடரும்.........:-)




Friday, June 20, 2014

இகத்தில் ஒரு 'பரம்'!


தி நகரில் கண்ணுக்குத் தெரிஞ்சவரை எங்கேயும்  டயர் போன்றவைகளை எரிக்கலை. இருந்திருந்தால்  மூக்குக்குத் தெரியாமயா போயிருக்கும்?  காலை உணவுக்குப்போனபோது கீரைவடை காத்திருக்கு. பேஷ் பேஷ்.  இன்றைக்கு ரிலாக்ஸா இருக்கணுமாம். கோபால் சொல்லிப்பிட்டார். போதும் ஓடுனது!  அதென்ன  பெரிய பிரச்சனையா? .எட்டரைக்குப்  பதிலா ஒன்பது மணிக்கு சீனிவாசனை  வரச் சொன்னால் ஆச்சு:-)

போயிட்டுவரேன் சொல்லும் நாள். முதலில்  பதுமன்.  முந்தாநாள் ஏகாதசிக்கு வரமுடியலைன்னு சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கிட்டு வலம் வர்றேன். நோ ஒர்ரீஸ். உனக்காக நான் இங்கே இன்னும் காத்திருக்கேன் என்று,  உற்சவமூர்த்திகள் 'மாளிகை' வாசலுக்கு வெளியில் கருட வாகனத்தில் ஆடாமல் அசையாமல்  இருக்கான்! ஹா.... பெருமாளே!!


தொட்டடுத்து சொர்க்க வாசல்!  ஏண்டாப்பா.... அதைச் சித்தத் திறந்து வச்சுருக்கப்டாதோ?  எத்தனை வருசக் கனவு!  அது வழியா  நீ வர்றதைப் பார்த்து ஸேவிக்கணும். அது வழியா  நானும் உள்ளே போய் வரணுமுன்னு !   போட்டும்போ. அந்தவரைக்கும்  காட்சி கொடுத்தியே!


கண்ணாடித் தடுப்பா இருக்கும் ஃப்ரேம் கழட்டி வச்சுருக்காங்க. தகதகன்னு ஜொலிப்பு. தங்கமாச்சே!  கோவில் அலுவகத்தில் அனுமதி கிடைச்சது, க்ளிக்கிக்கோன்னு:-)

அடுத்துள்ள ஹால் தர்ம பரிபாலன சபை அனந்த மண்டபம்....ஹோ..........ன்னு  கிடக்கு.  ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி பரிபாடி எல்லாம் கழிஞ்ஞு, பெருக்கித் துடைச்சு வ்ருத்தியாக்கி  வச்சுருக்காங்க. சிவன் சந்நிதிக்குப்போகும் வழியில்தான்  இடதுபக்கம் சொர்கவாசல் கதவின் வெளிப்புறம். இந்தக் கதவும் அட்டகாசமாத்தான் இருக்கு.  ஆனால்   உள்ப்பக்கம் இருப்பதைப்போல் தங்கத் தகடு போர்த்தலை. அதுவுஞ்சரி. செஞ்சுட்டு யாராலே  காவல்காத்துக்கிட்டே இருக்கமுடியுது?   சுவர் அலங்காரத் திரைச்சீலைகளை கழற்றி எடுத்து வைக்கும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு.  அழகாத்தான், அழகுபடுத்தி இருந்தாங்க.



எல்லா சந்நிதிகளுக்கும் போய் வணக்கம் சொல்லி விடை வாங்கியாச்சு. பெருமாளுக்கு மட்டும்  ஸ்பெஷலா 'போயிட்டு வரேன். உடம்பைப் பார்த்துக்கோ. விட்டேத்தியா கிடக்காமல் அப்பப்ப  மக்களையும் கவனிச்சு கருணைகாட்டு'ன்னு ஒரு முறைக்கு நாலுமுறையாச் சொல்லிக்கிட்டு  கிளம்பினேன்.

நெருங்கிய தோழி  புது வீட்டுக்குக் குடி வந்தாச்சு. போனவருசம் வீடு  கட்டி முடிக்கும் தருணம் போய்ப் பார்த்துட்டு வந்தாலும்   எப்படி செட்டில் ஆகி இருக்காங்கன்னு பார்க்க வேணாமா? அதுவும் புது வீட்டில் , இட்லி மொளகாய்ப்பொடி இருக்கும் இடம் எங்கேன்னும் பார்த்து வச்சுக்கணும், இல்லையா:-)))

கலைநயத்தோடுள்ள  உள் அலங்காரம்.  பல்லாங்குழி சுண்டி இழுத்தது :-)
சமையல் ரெடி. ஆனால்....  லேட் ப்ரேக்ஃபாஸ்ட் என்பதால் பசி இல்லை:( அதுக்காக சாஸ்த்திரப்படி வச்சுக் கொடுப்பவைகளை விட முடியுமா????  (இந்த ப்ளவுஸ் கலருக்கு மேட்ச்சா புடவை வாங்கிக்கணும்!)

திருவான்மியூரில்  இருக்கும் லைட்டிங் கடைகளுக்கு  எல்லோருமா ஒரு சுத்து போய்வந்தோம்.  குத்துவிளக்குக்கு  லைட் போட்டுக்கலாமுன்னா எங்கெ தேடியும் கிடைக்கலை.  போகட்டும். நெக்ஸ்ட் டைம் எதுக்கு இருக்கு?   அவுங்களை இறக்கி விட்டுட்டு  அண்ணாசாலை வந்து இன்னும் சில கடைகளில் தேடிட்டு  வெங்கடநாராயணா சாலை சரவணபவனில் பகல் சாப்பாடு.  இந்தப் பயணத்தில் இதுக்குக்  கடைசி விஸிட்.  தினமும் ஒரே மெனு:(  எப்பவாவது  சாப்பிட்டால் தெரியாது.  அல்மோஸ்ட் தினம் தினமுன்னா போரடிக்கத்தான் செய்யுது:(  அறைக்குத் திரும்பி கொஞ்சம் ஓய்வு. வலை மேய்ச்சலுக்கான நேரம் இது.

இசைவிழா முடிஞ்சு நாட்டிய விழா நடக்குதே!  மார்கழியில் உருகி உருகிப் பாடி,தையில் தை தைன்னு ஆடி....  சென்னையின் கோலாகலங்கள் டிசம்பர் அண்ட்  ஜனவரியில்   என்னை ரொம்பவே  ஏங்க வைக்கும் :(

பரத நாட்டியம் ஃபெஸ்டிவல் ஆரம்பிச்சு இது வெள்ளிவிழா ஆண்டு வேற.  ஆர்வம் இருக்கும்  மக்களுக்கு  எல்லாமே இலவசம். நேரம் கண்டுபிடிச்சுக்க வேண்டியது நம்ம கடமை:-) வாணிமஹால் போய்ச் சேர்ந்தோம்.  மாடியில் சின்ன ஹாலில் அக்‌ஷயாவின் நடனம். சரியா  தில்லானா  ஆரம்பிக்குது. அரைமணி  அனுபவம்தான் நமக்கு.   அடுத்து இன்னொரு நடன நிகழ்ச்சி இங்கேயே!   ரக்‌ஷா ஆடப்போறாங்க.  இன்னும் அரைமணி  கழிச்சு  ஆரம்பம். அதுவரை? ஒரு காஃபி!

கீழே ஞானாம்பிகா வந்தால்...  சின்னச் சின்னச் சிறுமிகள்  அலங்காரமா நடன  உடைகளில்  டிஃபன் சாப்புட்டுக்கிட்டு இருக்காங்க.  ஓக்கே.....  என்னன்னு பார்த்துடலாம்!

மஹாபெரியவா ஹாலுக்குள் நுழைஞ்சோம்.   கண்ணுக்கெட்டிய பக்கமெல்லாம்  பளிச்  பளிச்சுன்னு ஒரு திளக்கம்!  எல்லாம் வைரக்கம்மல்களின் ஒளிதான்! மூத்த குடிமக்கள் கூட்டத்தில்  கலந்தோம்.  மேடையில் உபன்னியாசம் செய்பவரை எங்கேயோ பார்த்த நினைவு. ஒருவேளை டிவியில் (சண்டிகர் வாழ்க்கையில்) இருக்கலாம்.

இன்னிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம். கடைசி நாள் என்று அங்கே ஆரம்பிச்ச  சம்பாவனை வரிசைகள் சொல்லுச்சு.  மாலை மரியாதைகளோடு அமர்க்களமான சீர்வரிசை!  சும்மாச் சொல்லக்கூடாது......  அருமையாத்தான்  கதை சொன்னார்.  தினமும் இருந்துச்சு போல....  இதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.  லேசா எங்கியாவது விளம்பரப்படுத்தி இருந்தாங்களோ என்னவோ?  நமக்குத் தெரியாமப்போச்சு, பாருங்களேன்!

நிகழ்ச்சி முடிஞ்சதும் வெளியேறி முன் பக்கம்வந்தால்  ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா (சின்னதா ஒரு குட்டியான  சைஸ் டப்பா) விநியோகம். அதானே.... கல்யாணத்துக்கு வந்துட்டு இனிப்பு எடுக்காமல் போகலாமோ?

ஆறேமுக்காலுக்கு இந்த ' பரம்'  நிகழ்ச்சி. ஸ்ரீதேவி ந்ரித்யாலயா வழங்கும் .....?வாட்? A thematic presentation.  Choreography  ஸ்ரீமதி ஷீலா உன்னிக்ரிஷ்ணன்.

  வெறும் நாட்டியம் சொல்லிக்கொடுத்து அரங்கேற்றம் செஞ்சு வைப்பதுன்னு எங்க காலம்போல் இல்லாம பரதநாட்டிய பள்ளிகள் எல்லாம் இப்போ, புதுவிதமான முறையில் நிகழ்ச்சிகளைத் தயாரிச்சு வழங்க ஆரம்பிச்சுருக்காங்க. இந்த ஸ்டைல்  ஆரம்பிச்சு ஒரு முப்பது வருசம் இருக்கலாம்.  நாட்டிய நாடகம்! (நாடகத்தில் நடிப்பவர்கள் நாட்டியம் ஆட முடியாது.  ஆனால் நாட்டியம் ஆடுபவர்கள் நாடகம் போடலாம்!!!) சூப்பர் ஐடியா இல்லே!!!

அரங்கு காலியா இருக்கேன்னு  பின்வரிசையில் இருந்து முன் வரிசையில் மூணாவதுக்கு  இடம்பெயர்ந்தோம்.  பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணியிடம்,  இதுக்கு டிக்கெட்  உண்டான்னு கேட்டால் ஆமான்னு சொன்னாங்க. (இவுங்கதான்  நடன ஆசிரியை ஷீலாவின்  அம்மான்னு அப்புறம் தெரியவந்துச்சு)  நான் இடம்பிடிச்சு உக்கார, கோபால் டிக்கெட் வாங்கிவரப் போனார். 250, 500 ,1000 என்று மூணுவகை  இருக்காம்.  ஆனால் 250 வாங்கினாலும் எங்கெ வேணா உக்காரலாமாம் .  ஓக்கே இருக்குமிடம் சரின்னு  இருந்தோம்.   அவ்ளோ பெரிய ஹாலில்  கால்வாசி கூட நிரம்பலை:(   உபன்னியாசத்துக்கு  இதைவிட  மும்மடங்கு மக்கள்ஸ்  வந்துருந்தாங்களே!

ஆறேமுக்காலுன்னு சொல்லி ஏழு மணிக்கு ஆரம்பிச்சது.  மதுரை ஸ்ரீ மீனாட்சியின் கதை!    தேவியின் அவதாரம் தொடங்கி,  மீனாட்சி கல்யாணம், அர்த்தநாரீஸ்வரர் தத்துவம்,  சம்பந்தர், சுந்தரர், சிறு தொண்டர் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள்,  சிவபெருமான், வானில் இருந்து இறங்கிவரும் கங்கையைத் தன் தலையால் தாங்கிய புராண நிகழ்ச்சி  இப்படி  எல்லாமே நாட்டியமா ஆடித் தீர்த்துட்டாங்க பிள்ளைகள்.


அதிலும்  ஒரு பாட்டிலேயே  குழந்தை, சிறுமி, இளம்பெண்ணாக  மூணு மீனாட்சிகள்  வளர்ந்து நின்னது ரொம்ப அழகா இருந்துச்சு.  எல்லோரும் பரதநாட்டிய உடைகளில்தான். ஆனாலும் அந்தந்த பாத்திரத்தைக் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்திட்டாங்க.  கடைசி சிவசக்தி நடனம் சூப்பர்!





ரெண்டு மணி நேரத்துக்கும் குறைவான நிகழ்ச்சிதான். கொஞ்சம் கூட  தொய்வே இல்லாமல்  அருமையா நடனக்கோர்வைகளை அமைச்ச திருமதி ஷீலா உன்னிகிரிஷ்ணனுக்கு மனம் நிறைந்த பாராட்டுகளைச் சொல்லத்தான் வேணும். அம்மாவிடம்சொல்லிட்டு வந்தோம். பாடல்களுக்கு இசை அமைத்தவர்   Kuldeep M Pai .

நிகழ்ச்சியின் முடிவில் நடன ஆசிரியை நடனமணிகளை  ஒவ்வொருத்தராகப் பெயர் சொல்லி  அறிமுகப்படுத்தனது  அழகு!  ஒரு நாற்பது பேர் இருக்கலாம். ஆறு வயசு முதல்  பதினாறு வயசுவரை! எல்லோருமா எப்படி ஒருங்கிணைஞ்சு  அற்புதமா ஆடுனாங்கன்னு வியப்போ வியப்பு எனக்கு! நல்ல நிகழ்ச்சியைப் பார்த்தோம் என்ற மனத்திருப்தியுடன் அறைக்கு வந்தோம். மார்கழி  முடிவுக்கு வந்துருச்சு.


 நாளை இந்த நேரம் ஏர்ப்போர்ட்டில் இருக்கணும். கவுண்ட் டௌன் ஸ்டார்ட்ஸ்!

தொடரும்...........:-)