Thursday, September 25, 2014

பொழுதன்னிக்கும், பொடவை என்ன வேண்டிக்கிடக்கு?


சின்ன வயசுக்காரி.......   விதவிதமான, அழகான  உடைகளைப் போடுவதை விட்டுட்டு, எப்பப்பார்த்தாலும் ஒரு பட்டுப் பொடவையைக் கட்டிக்கிட்டு வந்துடறாள். அழகா, அம்சமாத்தான் இருக்கு என்றாலும்,  உடைகளில் ஒரு விதம்  காட்டக்கூடாதா? எனக்கு ஒரே ஆத்தாமைதான். போன சென்னைப் பயணத்துலே , காக்ராச் சோளி வாங்கித்தரலாமுன்னு பார்த்தால்.....   நினைச்சதுபோல் கிடைக்கலை. பட்டுப்பாவாடையும் சட்டையுமா ஒரு செட் கிடைச்சது. சட்டையோ,  ஸ்லீவ்லெஸ். கலாச்சாரக் காவலர்கள் என்ன சொல்வார்களோன்ற பயம்   நம்ம கோபாலுக்கு!  பரவாயில்லை. உடுத்தப்போறது நியூஸியிலேதான் என்றதும்  சரின்னு தலையாட்டினார். எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஒரு பொடவையும் கனகாம்பரக் கலரில் வாங்கினேன்.

நவராத்ரி வந்தே வந்துருச்சு.  என்ன உடுத்திக்கச் சொல்லலாமுன்னு  யோசனையோட  அலமாரியைத் திறந்து பார்த்தால்  பட்டுப்பாவாடை  செட்   முதல்லே கண்ணில் பட்டது. சரி. 'இதுதன்னே ஆய்க்கோட்டே'ன்னு  எடுத்து வெளியில் வச்சேன்.

புடவை கட்டும்போது போட்டுக்கும் நகை நட்டுக்கள் இதுக்குச் சரிப்படாதோன்னு  லேசா ஒரு தோணல்.   இப்பெல்லாம்  மேட்ச்சிங்  ஆக்ஸெஸரீஸ்  முக்கியமாப் போச்சே!  நகைப்பொட்டியில் தேடுனா.....  ஓரளவு  நல்லதாகவே  கிடைச்சது.  கழுத்துக்கு ஒரு சோக்கர். அப்புறம்  பர்ப்பிள்  நிறத்தில் (பாவாடையில்  பார்டர் ,  மஸ்டர்ட் கலரிலும் உடல் அழுத்தமான பர்ப்பிள் கலரிலுமாக இருக்கே!)  ஒரு நெக்லெஸ்ஸூம்,  காதுக்கான  ஆட்டுக்கம்மலும் (ட்ராப்ஸ்) ஒரு செட் .  சின்னப்பெண்ணுக்கு காசு மாலை வேணாமுன்னு முடிவு செஞ்சேன்.  மஸ்டர்ட் ப்ளவுஸில்  அது  எடுப்பாவும் இல்லை :(  சிம்பிளா ஒரு  ஒத்தைக் கல் வரிசை பதிச்ச  ஒரு நெக்லஸ், போட்டுப் பார்த்தால் நல்லாவே இருக்கு.  கல்லு வச்ச நெத்திச் சுட்டி வேணாமேன்னு  கல் இல்லாத ப்ளெய்ன்  நெத்திச் சுட்டி ஓக்கே ஆச்சு.

காலுக்கு ?   வெள்ளை நிற ஷூஸ்.  பழசுதான்.  ஆரஞ்சு ஸ்ப்ரே போட்டு சுத்தம் செஞ்சதும் பளிச்!

வீட்டுலே என்னவோ நடக்குதுன்ற சந்தேகப் பார்வையோடு  ரஜ்ஜூ சுத்திச் சுத்தி வந்து எட்டிப் பார்த்துக்கிட்டே இருந்தா(ள்)ன்.

உடை மாத்தி, அலங்காரம் முடிச்சுப் பளிச்ன்னு வந்து நிக்கறாள் ஜன்னு.   ஓடி வந்தான் ரஜ்ஜு.

"என்ன இவளே..... புது உடுப்பா?  சூப்பரா இருக்கே போ!"

"தேங்க்ஸ் ரஜ்ஜூ"

"அதென்னமோ வீட்டுலே  மூணு  பொண்களிருந்தாலும் அம்மாவுக்கு நீதான் எப்பவும் ஸ்பெஷல்...ஹூம்"

" இல்லையா பின்னே? நாந்தானே அம்மா சொன்ன பேச்சைக் கேட்டு நடந்துக்கறேன்.  அக்காவும் நீயும்   அப்படியா? "

 அமாவாசைக்கு சாஸ்த்திரத்துக்கு  மரப்பாச்சிகளை  எடுத்து வச்சுட்டு, மறுநாள்  கொலுவின் முதல் நாள் என்றில்லாமல் இந்த முறை  இடையில் ஒரு நாள் கூடுதலாக் கிடைச்சிருக்கு. அதான்  ஜனனிக்கு  முதல்லே  ட்ரெஸ் பண்ணி விட்டுட்டேன்.  மகள்,  மாலையில்  அப்பாவுக்கு  பிறந்தநாள் பரிசுகளைக் கொண்டு வந்து கொடுத்து வாழ்த்தினாள்.  கொலு சமாச்சாரம் சொல்லி,  நேத்து அமாவாசைன்னு  ஜஸ்ட் படிக்கொரு பொம்மையை வச்சேன்.  இனி  நாளைக் காலை மற்ற பொம்மைகளை அடுக்கணும் என்றதும்,  இப்ப அடுக்கினால் நான் உதவி செய்வேன் என்றாள்!  நல்லதாப்போச்சுன்னு   நம்ம 'தீம்'  என்னன்னு  சொன்னேன்:-)

விளக்கு அலங்காரம் முதற்கொண்டு, பொம்மை அடுக்க ஆனநேரம் அரைமணிதான்!   இந்த முறை மகள் வச்ச கொலு!

உடனே எடுத்த படங்கள் இத்துடன்.




கும்பவாஹினிக்குப் புது அலங்காரம்  செஞ்சாச்சு.  நம்மூட்டு லக்ஸ்க்குத்தான் புதுப்பட்டுப்பாவடை ஒன்னு தைக்கணும்.

இன்னும் சுண்டலுக்கு ஊறவைக்கலை. தலைக்கு மேல் வேலை கிடக்கு.

 இன்னொருநாள் விஸ்தாரமா  எழுதினால் ஆச்சு.

அன்பு நட்புகள் அனைவரும்  கொலுவுக்கு வந்து போகணுமுன்னு  அன்போடு அழைக்கின்றோம்.




Wednesday, September 24, 2014

பத்து முடிந்து பதினொன்று தொடங்குகிறது.



அன்பு நட்புகளுக்கு, 

துளசி டீச்சர் எழுதிக்கொள்வது.  

நீங்கள் அனைவரும் நலம்தானே?  

உங்கள் அபிமான(? !!) துளசிதளம் தன்னுடைய பத்தாண்டு பயணத்தை முடித்து பதினொன்றாம் ஆண்டில் காலெடுத்து வைத்துள்ளது.  நீங்கள்  இதுவரை அளித்த அன்பும் ஆதரவும் இனி வரும் ஆண்டுகளிலும்  முன்பு போலவே தொடர வேண்டும் என்று எம் பெருமாளை வேண்டுகின்றேன்.

இப்படிக்கு ,
உங்கள் டீச்சர்,
துளசி.

கடிதம் எழுதிக் கனகாலமாச்சேன்னு எழுதிப் பார்த்தேன்.  சரியா வரலை. அதுவும்   எழுத்துக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கு பாருங்க  அந்த மொழி இப்பெல்லாம்  உண்மைக்குமே வரமாட்டேங்குது:(  பத்து வருசம் 'பேசிப்பேசி' உங்களையெல்லாம் படுத்துனதுக்கு  இப்படி ஆகும் போல:-))

இன்றைக்கு நம்ம கோபாலின் பிறந்தநாளும் கூட. அதான் துளசி(தளத்தை)யும்  கோபாலையும் பிரிக்கமுடியாமல்  வச்சுட்டேனே:-)

நம்ம வல்லியம்மா, அன்பின் மிகுதியால் முகநூலில் நம்ம பொறந்தநாளை கடந்த ரெண்டு நாளாக் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. இந்த அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யமுடியும், சொல்லுங்க?

இந்த நட்பும் அன்பும் எல்லாம் இணையமும், தமிழும், தமிழ்மணமும் கொடுத்த கொடையல்லவோ!!!

தன்னுடைய பிறந்தநாளுக்கு  'அங்கே' வாழ்த்திய அனைவருக்கும் கோபால் தன் இனிய நன்றியையும் அன்பையும்  என் மூலம் தெரிவித்துக் கொள்கின்றாராம்.

வாசக அன்பர்கள்  அனைவருக்கும்  என் இதயம் கனிந்த நன்றிகள்.






Tuesday, September 23, 2014

தேர்தல் வந்துட்டுப் போச்சு.

அநேகமா ஓட்டுச்சாவடிக்குப் போவது இதுவே கடைசி முறை என்றே நினைக்கிறேன்.  நாட்டின் பொதுத் தேர்தலுக்கான நாள் வந்துருச்சு.  காலை  9 மணி முதல் மாலை 7 வரை ஓட்டுச்சாவடி திறந்திருக்கும்.  எப்பவும் இது ஒரு சனிக்கிழமையாகவே இருக்கும் என்பதால் தேர்தலுக்குன்னு லீவெல்லாம் விடறதில்லை.

ஒவ்வொரு பேட்டைக்கும்  குறைஞ்சது நாலு இடங்களில் வாக்குச்சாவடி. (பொதுவா  பள்ளிக்கூட ஹால்கள்,  சமூகக்கூடங்கள்.  சர்ச்சுகளில் உள்ள கூடங்கள்  இப்படித்தான் இருக்கும்)  எல்லா இடங்களிலும்  சக்கரநாற்காலிகள் பயன்படுத்தும்விதமான அமைப்புகளும்  இருக்கணும் என்பது விதி.  நடக்கமுடியலைன்னு ஓட்டுப்போடாம இருந்துடக்கூடாது பாருங்க.


எலக்‌ஷன் கமிஷனுக்கு வேற வேலை இல்லையோன்னு சலிச்சுக்கும் வகையில் தகவல்களா அனுப்பிக்கிட்டே இருப்பாங்க.  தேர்தல் வரப்போகும் நாளை அரசு அறிவிச்சவுடன்,  நாட்டின் எல்லா நூலகங்களிலும்   வாக்காளர்கள் பட்டியல்  வந்துரும்.  நாம் அதைப் பார்த்து நம்ம பெயர் விட்டுப்போயிருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம்.  எழுதித்தரச் சோம்பலா இருந்தால்.... இலவசமா ஒரு  தொலைபேசி எண் (0800 நம்பர்) கூப்பிட்டுச் சொன்னால்கூடப் போதும்.  தொலைக்காட்சியிலும்  அறிவிப்புகள் வந்துக்கிட்டே இருக்கும்.  "சீக்கிரம் என்ரோல் பண்ணிக்கோ. உன் உரிமையை விட்டுக்கொடுத்துராதே! "  சூப்பர் மார்கெட், ஷாப்பிங் செண்ட்டர்கள் வாசலில்  மேசை,நாற்காலி போட்டுக்கிட்டு  என்ரோல் பண்ணிக்கோன்னு  கூப்புட்டுக்கிட்டே இருப்பாங்க.


ஏற்கெனவே பதிவு செஞ்சுருக்கும்  நபர்களுக்கு ,  வீட்டுக்குக் கடுதாசி வரும். நம்ம விவரம் எல்லாம் அச்சடிச்சு,  விவரம்சரியா இருக்கான்னு பார்த்துக்கோ. இல்லைன்னால்....  இதுகூடவே வச்சுருக்கும்  தாளில் புதுவிவரம்  (ஊர்விலாசம்  மாறினால்)  எழுதி  தபாலில் போட்டுரு.  ஸ்டாம்ப் கூட ஒட்ட வேணாம். இலவச போஸ்ட்தான் என்று சொல்லும்.  ஒரு முறை வந்தால் போதும்தான். ஆனாலும்  பலமுறை கடுதாசு அனுப்பிக்கிட்டே இருப்பாங்க. இவ்ளோ செஞ்சும், ஓட்டுப்போடாமல் போகும் மக்களும் உண்டு.  நம்ம அண்டை நாட்டில் (அஸ்ட்ராலியா)  வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டுப்போடணும்.  ஓட்டுப்போடத்தவறினால் அபராதம் செலுத்தணும் என்ற சட்டம் இருக்கு, கேட்டோ!   உண்மைக்கும் அப்படி இருப்பது எனக்கு ரொம்பப்பிடிச்சுருக்கு.


தேர்தல் நடக்கும் நாள், நாம் ஊரில் இருக்கமாட்டோம், இல்லை வேறெதாவது (இதைவிட ) முக்கிய அலுவல் இருக்குன்னா தேர்தல் நடக்கும் தேதிக்கு 17 நாட்கள் இருக்கும்போதே   ஏர்லி ஓட்டு போட்டுக்கலாம்.

எப்படி ஓட்டுப்போடணுமுன்னு விளக்கிச் சொல்லும்  குறிப்பு ஒன்னு  25 மொழிகளில்  ஒரே தாளில் அச்சடிச்சு  நம்ம வீட்டுத் தபால்பெட்டிக்கு  அனுப்பி வைக்குது எலக்‌ஷன் கமிஷன். இதுலே தமிழ் மொழியும் இருக்கு!!!!


இதில்லாம,  எத்தனை கட்சிகள் பங்கெடுக்கறாங்க,  தேர்தலில் வேட்பாளர்கள் யார் யார் என்ற விவரமும் அனுப்பி வச்சுடறாங்க. பொதுவா, மேலைநாடுகளில் ரெண்டே கட்சிகள்தான் என்று நினைப்போம் பாருங்க.... அந்த மாயை உடைஞ்சுருது.  இத்துனூண்டு நாடான நியூஸியில்  தேர்தலில் நிக்கும் கட்சிகள் இப்போதைக்கு  14 கட்சிகள்.


மொத்தம் 121இடங்கள்  என்பதால் பெரிய (!) கட்சிகள்  நிறைய இடங்களில்  குறைஞ்சது  61 இடங்களில் நிக்கறாங்க.  இந்தவாட்டி, தேசியக் கட்சி (நேஷனல்) 65 இடங்களிலும். தொழிற்கட்சி (லேபர்) 64 இடங்களிலும் நின்னாங்க. பசுமைக் கட்சி (க்ரீன் )  நின்னது 59 இடங்களில். மற்றவை எல்லாம்  40, 35, 32,20, 14, 8 இப்படி.  போதை மருந்தை சட்டப்படி  பயன்படுத்த விடணும் என்றுகூட  ஒரு கட்சி இருக்கு( Aotearoa Legalise Cannibis Party) இது ஒரு 13 இடங்களில் நின்னுச்சு.

ஆளுக்கு ரெண்டு ஓட்டு போடலாம்.  ஒன்னு நல்ல ஓட்டு  ஒன்னு கள்ள ஓட்டா?  நோநோ நோநோ.  ஒன்னு உங்க தொகுதியில் நிக்கும் வேட்பாளர்களில் ஒருவருக்கு. இன்னொன்னு  உங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிக்கு.  இதுலே  நாட்டின் மொத்த   வாக்களித்தவர்கள்  எண்ணிக்கையில்  குறைஞ்சது அஞ்சு சதமானம்  ஓட்டு வாங்கிய கட்சிகள், தங்கள் பிரதிநிதியாக ஒருவரை பார்லிமெண்டுக்கு அனுப்பலாம்.   எத்தனை அஞ்சு சதமானமோ அத்தனை அங்கங்கள் அங்கே இடம்பெறும். பார்ட்டி ஓட்டுக்கு பார்ட்டி ஸீட்!  MMP (Mixed-member proportional representation ) System.


எல்லா அரசியல் கட்சிகளும்,  பார்ட்டி ஸீட்டுக்காக அனுப்பப்போறவங்களை,  பட்டியல் போட்டு அதை  சிலபல மாசங்களுக்கு முன்பே வெளியிட்டுருவாங்க.  ( முடிவு தெரிஞ்சபின் கடைசி காலத்துலே பேரம் படிஞ்சு அப்புறம் ஆளை அனுப்பற வேலையெல்லாம் இங்கே இல்லையாக்கும் கேட்டோ!)


இங்கே மவோரி கட்சி ஆரம்பிச்சபோது  Hone Harawira  என்றவர்  அந்தக் கட்சி சார்பில் நின்னு தேர்தலில்  வென்று பார்லிமெண்ட் அங்கமானார்.  ரெண்டு முறை (ஆறு ஆண்டுகள்)  தொடர்ச்சியா  வெற்றிதான்.  அப்புறம் எதோ கருத்து வேறுபாடுன்னு  சுயேச்சையா நிக்கப்போறேன்னு சொல்லி  மானா ( Mana =குடும்பம்)  ஆரம்பிச்சார்.  இங்கேயும் தேர்தலில் ஜெயிச்சு MP பதவியைக் காப்பாத்திக்கிட்டார். அவருடைய கெட்ட நேரம் பாருங்க.......  புதுசா இந்த வருசம் , சரியாச் சொன்னா ஒரு 6 மாசத்துக்கு முன்னால் ஆரம்பிச்ச, இண்டர்நெட் கட்சியோடு கூட்டு சேர்ந்து  Internet Mana Party  உள்ளதும் போச்சுடா என்ற கதைதான், இப்போ.


இந்த இண்ட்டர்நெட்  கட்சியை ஆரம்பிச்சது  கிம் டாட் காம் என்ற நபர்.  ஏற்கெனவே சிலநாடுகளில்  க்ரிமினல் குற்றவாளின்னு பதிவு செய்யப்பட்டவர்.   மெகா அப்லோட் என்று  copyright infringement சட்டத்துக்குப் புறம்பான  pirated contents சமாச்சாரங்களால் கோடிகோடியா சம்பாரிச்சவர்.  இங்கே பிஸினெஸ் மைக்ரேஷன் என்ற வகையில்  காசு கட்டிட்டு,  நாட்டுக்குள்ளே வந்து இடம் பிடிச்சு உக்கார்ந்துருக்கார்.  (இவர் 'கதை' சொல்ல ஆரம்பிச்சா பத்து பதிவு கேரண்டீ!)  அரசு எப்படி இவரை உள்ளே விட்டதுன்னு தெரியலை.  (காசாலே அடிச்சுட்டார்ப்பா மனுஷன்!)  அப்புறம் முழிச்சுக்கிட்டு,  அமெரிக்க அரசு கேட்டுக்கிச்சுன்னு( costing the entertainment industry $500 million through pirated content ) அரெஸ்ட் பண்ணினாலும்.....  சட்டத்திலுள்ள ஓட்டைகளில்  நுழைஞ்சு வெளிவந்துட்டார்.  ஆஹா.... என்னையா கைது பண்ணே?  உன் அரசை என்ன செய்யறேன்பார்ன்னு  அரசியல் கட்சி ஆரம்பிச்சு,  வெகுளியா நின்ன மானா பார்ட்டியை அதே காசு, பணம், துட்டு, மணி  உதவியால்   இழுத்துக்கிட்டு,  இப்போ ஒரேடியா மானாவை கவுத்துட்டு,  'மன்னிக்கணும். மானாவுக்கு விஷம் வச்சது என்னோட தவறு' ன்னு அறிக்கை விட்டுக்கிட்டு இருக்கார்.
 
இந்த முறை ஆளும்கட்சி  அண்ட் எதிர்கட்சித் தலைவர்கள்  ஒரே மேடையில்(!) தொலைக் காட்சியில் தோன்றி வரப்போகும் தேர்தல் வாக்குறுதிகளைச் சொன்னாங்க. ஏற்கெனவே போன தேர்தலில் ஒருக்கா இப்படிச் செஞ்சாங்கன்னாலும், இந்த  முறை  ஒவ்வொரு சேனலும் ஒருநாள்ன்னு ஏற்பாடு பண்ணி இருந்துச்சு.  நாங்களும்  ஒன்னையும் விடாம நாட்டுக்கு இனி என்னதான் செய்யப்போறாங்கன்னு ஆவலோடு பார்த்தோமுன்னு வையுங்க.


இந்த முறை என்ன ஆச்சுன்னா.....தொழிற்கட்சிக்குப் புதுத்தலைவர் வந்துட்டார். தலைவராகி சரியா ஒருவருசம்தானாகி இருக்கு. பிரதமராகணுமுன்னு ஏராளமான கனவுகள். கொஞ்சம் பெரிய வாய்!  (சுருக்கத்துலே சொன்னால் நம்ம  சுப்ரமணிய சுவாமி மாதிரி!)  தொலைக் காட்சியில் நடந்துக்கிட்டு இருக்கும் விவாதங்களில்  தன்னுடைய முறை வரும்போது பேசலாமேன்னு இல்லாமல்  மற்றவரிடம் கேள்விகேட்டு அவர் பதில்சொல்லும்போதே குறுக்கேகுறுக்கே புகுந்து வாய் ஓயாமல் இவருடைய சமாச்சாரத்தைப் பேசிக்கிட்டே இருந்தார்.  உண்மையைச் சொன்னால் இந்தக் குழறுபடியில்  யார் என்ன பேசுனாங்கன்னே விளங்கலை. ஒரே இரைச்சல்தான்.  மூணு  நாட்களும் இதேதான்:(  பார்த்துக்கிட்டு இருக்கும் மக்களுக்கு  எரிச்சல்தான்  கட்டாயம் உண்டாகி இருக்கணும். இது ஒரு பெரிய தவறுன்னு அப்போ அவருக்குத் தெரியலை!)


இதுலே நான்வேற  இதே போல் ஒரு விவாதம் நம்ம தமிழ்நாட்டுலே  முன்னாள் & இந்நாள் முதலமைச்சர்கள் பேசுனா நல்லா இருக்குமேன்னு  நினைச்சேன்:-)  நடக்கற சமாச்சாரமா!!!!

போகட்டும்......  இப்ப தேர்தல் முடிவு பார்க்கலாம்.


சரியா  மாலை 7 மணிக்கு ஓட்டுச்சாவடியை மூடுனாங்க.  உடனே  ஓட்டு எண்ணத்தொடங்குனாங்க. நம்ம ஓட்டுச் சீட்டுலே  அடியில் ஒரு பார்கோடு ஒருக்காம். நான் கவனிக்கலை. அதை  ஒரு ரீடருக்குள் நுழைச்சால் போதுமாம். கோபால் சொன்னார்.  தொலைக் காட்சியில்  ஓட்டு  விவரங்கள் உடனே வர ஆரம்பிச்சது.  சரியா  இரவு பத்து  மணிக்கு  மொத்த ஓட்டும் எண்ணி முடிச்சு  வெற்றி தோல்வியை அறிவிச்சுட்டாங்க.

நேஷனல் கட்சி    61 இடம் பிடிச்சது.   நேரடி ஜெயிப்பு  41  பார்ட்டி சீட்டுகள்  20.  முதல்முறையா முழு மெஜாரிட்டி!  யார் தயவும் இல்லாம மந்திரி சபை அமைக்கலாம்.   இது இந்தக் கட்சிக்கு இப்போ மூணாவது டெர்ம் ஜெயிப்பு.  நாங்க நியூஸியில் பொதுவாகவே ஒரு கட்சிக்கு மூணு முறை வாய்ப்புகளைத் தொடர்ந்து கொடுப்போம்.  முதல்முறை சரி இல்லைன்னா, போகட்டும் இன்னொருக்கா இருந்து நல்லா நடத்தட்டுமேன்னு. ரெண்டாம்முறையும் சரி இல்லைன்னா,  கடைசியா ஒரு வாய்ப்புன்னு மூணாம் முறை கொடுப்பதுதான். நியூஸியின் அரசியல் வரலாறு பார்த்தால் இது புரிஞ்சுரும்:-)  ரொம்பத் தாங்க முடியாத அராஜகமுன்னால்தான் சட்னு ஆப்பு  வைப்பது வழக்கம், கேட்டோ!

 ஹிரண்யகசிபுவை, நரசிம்ஹம் வதம் செஞ்சபோது, மெல்ல மெல்ல வயித்தைக் கிழிச்சதாம். இப்போவாவது அவன் திருந்தினால் விட்டுடலாமேன்னு. அவ்ளோ இரக்கமுள்ள அவதாரம்  நரசிம்மர்ன்னு  ஒரு உபன்யாசத்துலே கேட்டேன்!

தொழிற்கட்சி , 27 ஜெயிப்பு,  5 பார்ட்டி சீட்டுன்னு  32 தான்.   போன தேர்தலைவிட  இது ரெண்டு குறைவு.  1922 வது வருசத்துக்குப்பின் இதுதான் அதிக மோசமான தோல்வியாம். இன்னைக்கு தொழிற்கட்சி  அவுங்களுக்குள்ளே கூடி  புதுசா போன வருசம் தெரிவு செய்த தலைவரை போஸ்ட் மார்ட்டம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.   என்ன முடிவுக்கு வந்தாங்கன்னு   ஆறுமணி செய்தியில் தெரியவரும்!

தொழிற்கட்சி , மற்ற இதர கட்சிகளுடன் கூட்டு வச்சுக்கிட்டாவது ஆட்சியைப் பிடிக்கலாமுன்னா அதுக்கும் வழி இல்லை!   இதுலே நியூஸிலாந்து ஃபர்ஸ்ட் என்ற கட்சி கூட்டு சேரவே சேராது. அவுங்களுக்கு 11 இடம்!  நேரடி ஜெயிப்பு ஒன்னும் இல்லை என்றாலுமே, பார்ட்டி ஓட்டுகள் நிறையக் கிடைச்சிருக்கு. அந்தக் கட்சியின் கொள்கைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நியாயமான கொள்கைகள்.  ஆனால்.....  நாட்டுக்கு நல்லதுன்ற  உண்மையை உரக்கச் சொன்னா யார் காது கொடுத்துக் கேட்கப்போறாங்க? பாழும் அரசியல்:(

பசுமைக் கட்சி 13 இடங்கள். இங்கேயும் நேரடி வெற்றி யாருக்கும் இல்லை!

போட்டியிட்ட 14 கட்சிகளில் எட்டுக் கட்சிகள்  ஒன்னுத்துக்கும் லாயக்கில்லாமப் போயிருச்சு. நேரடியா ஜெயிக்க முடியலை என்றாலும்  ஒரு அஞ்சு சதமானம் பார்ட்டி  ஓட்டு கிடைச்சிருந்தால்  ஒரு ஆளாவது  மக்கள் சபை வரை போயிருக்கலாம். இதுலே அந்த இண்ட்டர்நெட் மானா பார்ட்டியும் ஒன்னு.

ஒவ்வொருத்தராக்  கட்சித் தலைவர்கள்   மக்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கும் சடங்கு முழுசும் முடியறதுக்குள்ளே  பார்த்தவரை போதுமுன்னு வேற வேலையைப் பார்க்கப் போயிட்டேன். தொழிற்கட்சித்தலைவர், நாளை முதலே  அடுத்த தேர்தலுக்கான வேலையை ஆரம்பிக்கப்போறாராம்.


ஈஸி ஓட்டு என்று நம்ம முழு விவரம் அடங்கிய  கடுதாசியை எலக்‌ஷன் கமிஷன் நம்ம வீடுகளுக்கு அனுப்பி வைக்குது. அதைக் கொண்டு போனா.... ஸர் நேம் தகராறு ஒன்னுமில்லாமல் போனோமா, ஓட்டைப் போட்டோமா, வந்தோமான்னு இருக்கலாம். எல்லாம் ஒரு ரெண்டு நிமிச வேலைதான்.

நம்மூட்டாண்டை  இருக்கும்  பள்ளிக்கூட ஹாலுக்குப் போனோம்.  நாலு நிமிச நடைதான். நாங்க ஓட்டுப்போடப்போனபோது நமக்கு முன்னால் ரெண்டு பேர் வரிசையில் இருந்தாங்க.  நமக்குப்பின்னே ரெண்டு பேர் வரிசையில் வந்து சேர்ந்துக்கிட்டாங்க. வாக்குச்சாவடி பணியாட்கள் மூணு பேர் என்று பயங்கரக் கூட்டம். ஒன்பது பேர் இருந்தோமே!
(ஆத்தா........  நான் ஓட்டுப் போட்டுட்டேன்!)


ஓட்டுச்சாவடி வரை போகாமல், ஆன் லைனில் ஓட்டுப்போட மக்கள் ஆவலாக இருக்கோம் என்பதால் அதற்கான ஏற்பாடுகள்  அநேகமா வந்துரும்.  அடுத்த தேர்தல்  18 நவம்பர் 2017 .  நாட்டில் உள்ள எல்லாருக்கும்   ஒரு IRD நம்பர் இருக்கு.  இல்லைன்னா வரி கறப்பது எப்படி?  அந்த எண்ணை  நம்ம பாஸ்வேர்டா வச்சுக்கிட்டால் ஓட்டுப்போடுவது சுலபமுன்னு கோபால் சொல்றார்.


மூணாவது முறையா பதவிக்கு வந்த ஜான் கீ அரசு(John Key Govt)   நல்லபடி நடக்கட்டுமுன்னு  வாழ்த்துகின்றேன்.



Friday, September 19, 2014

பனிரெண்டு பெற்றவள்!

பனிரெண்டு பிள்ளைகள், அதுவும் ஒரே  ப்ரசவத்தில்!   தாயைப் பார்த்து மனசு நெகிழ்ந்துதான் போச்சு.  ஓய்வே இல்லாத ஒரு வாழ்க்கை:( பாவம்...........

ஓணத்திருவிழா போயிருந்தோம் பாருங்க.... அப்ப என்னோட கேமெராவின் பிணக்கம் தொடங்கிற்று. அதுக்கு எதாவதுன்னால் எனக்குக் கையும் ஓடாது, காலும் ஓடாது. சுருக்கமாச் சொன்னால் ஒடிஞ்ச கை.  படம் எடுக்குதுன்னாலும்  Zoom மெக்கானிசம்  சரியா  வேலை செய்யலை. கைக்கடக்கமான கேமெரான்னால்....  பொழுதன்னிக்கும் இந்த  Zoom தகராறுதான்.  இது மூணாவது கேமெராவாக்கும்:(

புகைப்படக்கலை நிபுணரான நண்பர் சொல்வார்,  "Zoom  எதுக்கு? எதாவது எடுக்கணுமுன்னாக் கிட்டக்கப்போய் எடுத்தால் ஆச்சு"

எனக்கு அதெல்லாம் வேலைக்காகாது. ஓடற ஓட்டத்துலே, போறபோக்குலே  க்ளிக்கிட்டே போறவ நான். அதுவும் வெளிநாட்டுப் பயணத்துலே  பெரிய கேமெரா கொண்டு போறது கஷ்டமா இருக்கு.

ஏகப்பட்ட லென்ஸ்களோடு ஆரம்பிச்ச ஹாபியை, நண்பர்  நல்லா திறமைகளை வளர்த்துக்கிட்டு, இப்போ  Fujifilm X100S  வாங்கி, சுட்டுத்தள்ளிக்கிட்டு இருக்கார்.  புதுசு, ரொம்ப பல்க்கியா இல்லாம  லேசா இருக்கு!  அப்பப் பழைய கேமெரா?  மகன் எடுத்துக்கிட்டார்!


மேலே படம்:  நண்பரின்  புதுசுலே எடுத்தது:-) 

நேத்து ஓணம் விழாவில் நம்ம  கேமெரா,  பழிவாங்கிருச்சுன்னு மூக்கால் அழுதேன்.  மகள் வந்திருந்தாள்.     கைக்கு அடக்கமா சின்னதா ஒன்னு வாங்கிக்கணும் என்றதும், நானும் கூடவரேன்னு  மகள் சொன்னதால் மூணுபேருமா மாலுக்குப் போனோம்.  ரெண்டு கடைகளில் பார்த்துட்டு  மூணாவதா ஒரு கடைக்குப் போனபோது,   அங்கே ஒன்னு கண்ணில் ஆப்ட்டது.  ஸோனி.   என்னுடைய  ரெண்டாவது  டிஜிட்டல் கேமெராகூட ஸோனிதான்.   வாங்கி  8 வருசங்களாச்சு.   அதுலே படங்கள் எல்லாம் தரமா இருந்த நினைவு.  அதனால்   ஸோனியே வாங்கலாமுன்னு முடிவு செஞ்சேன்.

(முதல் கேமெரா பத்தி ஒன்னும் சொல்லலை பாருங்க.  அது ஒரு மினோல்ட்டா. 2002 லே  வாங்குனது. 2.3 Mega pixel.  memory  16 MB.  2 X Zoom !!!!  அப்புறம் இதுக்கு  பேட்டரி பவர்  6 Volt . சாதாரண 1.5 AA செல் நாலு போட்டுக்கணும். பத்துப்படம் எடுக்கறதுக்குள்ளே  கார்ட் ஃபுல் ஆகிரும், இல்லேன்னா பேட்டரி மண்டையைப் போட்டுரும்:-)  அப்புறம்  சிங்கப்பூர் போனபோது  கூடுதலா  memory  64 MB வாங்குனதெல்லாம் இப்ப நினைச்சாலும்  'ஐயோ' ன்னு இருக்கு) 

அதுக்குப்பிறகு  ஒவ்வொரு  வகையா  சாம்ஸங், ஃப்யூஜிஃபில்ம்  ரெண்டுமுறைன்னு கணக்குப்  பார்த்தால்  இது  கைக்கடக்கமானதுலே ஆறாவது. அப்ப  சராசரியா  ரெண்டுவருசத்துக்குத்தான் தாக்குப்பிடிக்குது அந்த Zoom மெக்கானிஸம்:(

ஆனால்  இவை எல்லாமே இப்பவும் Zoom போடாம ஜஸ்ட் க்ளிக்கினால் நல்ல படங்களையே தருது என்பதும் நிஜம்.  பேசாம இந்த வருசக் கொலுவுலே ஒரு படியில் இடங்கொடுக்கலாமான்னு யோசனை. இதெல்லாம் இல்லாம,  நம்ம ஆதிகாலத்து ஃப்ல்ம் ரோல் போடும் கேமெராக்கள் யாஷிகா வில் தொடங்கி  இன்னும் சிலது கிடக்கே. அதையும் கொலுவில் வச்சுடலாம், இல்லே?  ஆமாம்.... அறுக்கத் தெரியாதவளுக்கு  அம்பத்தெட்டு அரிவாள்!


 (இதுக்கு நடுவிலே ஒரு  Canon DSLR, அதுக்கு நாலு கூடுதல்  லென்ஸுன்னு  தனி ட்ராக்லே ஒரு கதை இருக்கு)


சரி, இப்ப ஸோனிக்கு வரலாம்.  இந்த ஸோனியில் ஒரு தொல்லை அப்பெல்லாம் என்னன்னா,  மெமரி ஸ்டிக்  இதுக்குன்னு தனிரகமா இருப்பதுதான். அதுவும் அப்போ  512 MB தான் அதிகபட்சம்.  விலையும் அப்பெல்லாம் தீ பிடிச்சமாதிரி!

இன்றைக்குப் பார்த்ததில்  எல்லா கேமெராக்களுக்கும் பயன்படுத்தும்  SD கார்டையே இதுக்கும் பயன்படுத்தலாமுன்னதும்  நிம்மதி ஆச்சு:-)  இதே போல  யுனிவர்சலா  பேட்டரியும் வந்துட்டா....  நாம்  வாங்கி வச்சுருக்கும் எக்ஸ்ட்ராக்களுக்கும்  வாழ்வு கிடைக்கும்.  ஆனால்...   இப்பப் பார்த்துக்கிட்டு இருக்கும் ஸோனி, உலகத்துலே சின்னக் கேமெரான்னு  சொல்லிக்குதே!  அதுக்கேத்தவகையில்  பேட்டரி சைஸும்சின்னதாத்தானே இருக்கணும்?  அப்படித்தான். இதுலே 20  X   zoom  இருக்காம்,   இந்த  DSC  WX350 மாடலில்.   டிஸ்ப்ளே யில் இருந்ததை  எடுத்துப் பயன்படுத்திப் பார்த்தால்  தெளிவாகத்தான்  படங்கள் வந்தன.   விலையும் பரவாயில்லைன்னு  நினைச்சுக்கிட்டே,  (கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையில்) ஃபர்தர் டிஸ்கௌண்ட் உண்டான்னு  கேட்டால்....  உள்ளே போன விற்பனைப் பையர்,  ஸேல்  வருதுன்னார். கிட்டத்தட்ட  40 சதம் தள்ளுபடி.

வாங்கியாச்சு.  வீடு திரும்பலாமுன்னா...  மகள் சொல்கிறாள், கன்னிங்ஹாம் ஹௌஸ் திறந்தாச்சு.  எப்பவாம்?  தெரியலை....ஃபேஸ்புக்லே யாரோ போட்டுருந்தாங்க. நம்மூர்  ஹேக்ளி பார்க் இருக்கு பாருங்க... அங்கே இருக்கும்  ஹாட் ஹௌஸ் இது. என்னோட ஃபேவரிட் ப்ளேஸ்.  ஊருக்குள் வந்து போன நிலநடுக்கத்தால்  உள்ளே  கொஞ்சம் சீரழிவுன்னு   பொதுமக்கள் பார்வையிட முடியாமல் மூடி வச்சுருந்தாங்க.  அந்தப்பக்கம் போகும்போதெல்லாம் மூடிக்கிடக்கும் கதவுகளைப் பார்த்து பெருமூச்சு விடுவேன்.  வாழை, காஃபி,  பர்ட் ஆஃப் பாரடைஸ் இப்படி இஷ்டமுள்ள சமாச்சாரங்கள் எல்லாம் உள்ளே, என்ன ஆச்சோ? எப்படி இருக்கோ?  நம்ம கள்ளித்தோட்டம்  போகவும்  வழி இதுக்குள்ளேதான்.

இப்ப திறந்துட்டாங்கன்னதும்,  மகளை நீ போய் பார்த்தாயான்னு கேட்டால்  இன்னும் போகலை.   நீங்க இப்போ போறதுன்னால் நானும் கூட வரேன்னு (அபூர்வமா)  சொன்னதும்,  சான்ஸை விடவேணாமுன்னு   மாலில் இருந்து நேரா கிளம்பிப்போனோம்.  மனக்குறை....  கேமெரா கொண்டு வரலை:(    புதுசின் பேட்டரியை குறைஞ்சது  நாலைஞ்சு மணி நேரம் சார்ஜ் செஞ்சுக்கணும்.  முகவாட்டம் பார்த்து,  நோ ஒர்ரீஸ். செல்போனில் படம் எடுத்துத்தரேன்னாள், என் செல்லம்:-)


இது புதுசு. பதிவர் வட்டம் சந்திப்புக்காகப்போட்டு வச்சது போல இருக்கே! 

அரக்கப் பரக்கக் கன்னிங்ஹாம் ஹௌஸ் போகும்போது மணி நாலடிக்க அஞ்சே நிமிசம்.   நாலுமணிக்கு  இதை மூடிருவாங்க.  நம்ம சமாச்சாரம் இருக்கான்னு ஓடிப்போய்ப் பார்த்தேன். வாழை மரங்கள், இப்போ ஏழெட்டு நிக்குது.  அதுலே நாலைஞ்சு குலை தள்ளி இருக்கு!  காஃபியிலும் நிறைய பழங்கள். செயற்கை நீர்வீழ்ச்சி  அப்படிக்கப்படியே! சுத்திவர  இருந்த செடிகள் எல்லாமே நல்லா, செழிப்பாவே வளர்ந்துருக்கு.  மாடி ஏறிப்போய்ப் பார்க்க நேரம் இல்லை. பொறுப்பாளர் வந்து மணி நாலுன்னு  நாசூக்காய் நினைவூட்டினார்.

1923 வருசம் கட்டுன ரெண்டு நிலைக் கட்டிடம்.  ஆச்சு வயசு இப்போ  91!  New Zealand Historic Places Trust  இதை தன் பொறுப்பில் எடுத்துக்கிட்டு இருக்கு.  நிலநடுக்கத்தில் தப்பிப்பிழைச்ச பாரம்பரியக் கட்டிடங்களில்  இதுவாச்சும் மிஞ்சியதேன்னு எங்களுக்கு பரம திருப்தி.


இந்த பிரமாண்டமான  கண்ணாடிவீட்டுக்குள்ளேஅடுத்தபக்கம் இணைப்புப்பகுதியா இன்னுமொரு கன்ஸர்வேட்டரி  (Townsend conservatory. இதுவும் பெருசுதான்)இருக்கு.இங்கே  அவ்வப்போது உள்ள சீஸனை அனுசரிச்சு மலரும் பூச்செடிகளை வச்சுருப்பாங்க.  ஒரே இனம், வெவ்வேறு நிறம் இப்படிப்  பார்க்க  அட்டகாசமா இருக்கும்.  இப்போ வசந்தகால மலர்களிடம்பிடிச்சு உக்கார்ந்துருக்கு. எல்லாம் தொட்டியிலுள்ளவையே. வேற எங்கோ வளர்த்தி எடுத்து இங்கே கொண்டு வந்து அடுக்கி வச்சுடறாங்க.  இதுவும் எனக்கு  ரொம்பவே  பிடிச்ச இடம்தான்.


இது எல்லாத்தையும்விட இன்னும்  அதிகமா பிடிச்சது  நம்ம கள்ளித் தோட்டம்தான். இதுக்கு  காரிக் ஹௌஸ் என்று பெயர்(Garrick House). அங்கே இன்னும் பழுதுபார்க்கும் வேலை முடியலைன்னு மூடிக்கிடக்கு:( அநேகமா அங்கே ஒன்னும் ரொம்பப் பழுது ஆகி இருக்காதுன்ற நம்பிக்கையுடன் கிளம்பி கார்பார்க் வந்தபோதுதான்....  அந்தப் பனிரெண்டு பெத்தவளைப் பார்த்தேன்.   வழியில் குளக்கரையாண்டை இருக்கும்  இருக்கைகளில் உட்கார்ந்தப்ப  குவாட்டர் க்ரோனா ரெண்டு பேர்.  ஆமாம்.... வசந்தம் வந்துருச்சே...பாப்பாக்கள்  கண்ணில் படலையேன்னு சொன்ன மகள்,   சட்னு அதோன்னு கை நீட்டிக் காமிச்சாள்.

பாவம், அந்தத் தாய்:(  ஒருவிநாடி நிக்க நேரமில்லை!  ஒவ்வொரு பிஞ்சும் ஒவ்வொரு திசையில்  ஓடுனால், அவள்தான் என்ன செய்வா சொல்லுங்க!   கனமான அடிக்குரலில்

 ' ஏய்.....  அங்கே இங்கே ஓடாமல் ஒழுங்கா என்னாண்டை வாங்க'

கொடுத்த குரலுக்கு  சட்னு கீழ்ப்படிஞ்சு சிலதுகள் வந்துருதுன்னாலும், குடும்பத்துக்கு ஒன்னுரெண்டு அடங்காப்பிடாரிகளும் இருக்குமில்லே?  பத்து அங்கே அம்மாவிடம் போக , ரெண்டு கொஞ்ச தூரத்தில் நின்னு திரும்பிப் பார்க்குதுகள்.  இவுங்க இனத்துலே மற்ற பெரியவர்களும் குழந்தை வளர்ப்பில்  உதவி செய்றாங்க போல்.

 ' பாவம்.... அவ கூப்புடறால்லே.... போ போய் அம்மாகிட்டேயே இரு'


மிரட்டல் குரல் கொடுக்கும் வெள்ளையன்.  ஓசைப்படாமல் நீந்தி அம்மாவிடம் வந்து சேர்ந்தன அந்த ரெண்டும்.

பார்க்கப்பார்க்க அலுக்காத சமாச்சாரம்.  சீனக்குழந்தை ஒன்னு  (ஒன்னரை வயசு இருக்கும்) கோபாலைப் பார்த்து அங்கே 'டக்'னு சொன்னான். இவர், உனக்கு டக் பிடிக்குமான்னார்.  ஆமாம்னு வேகமாத் தலையாட்டல்.  சாப்பிடவா?ன்னு  கேட்டேன். பாவம் குழந்தைக்குத் தமிழ் தெரியாது:-)

பெயரென்ன என்று கேட்டதுக்கு எய்டன் என்றான். கன்னத்துலே சிரிக்கும்போது குழி விழுது. அதிர்ஷ்டக்காரப்பிள்ளைன்னு அம்மாவிடம் சொன்னேன். பூரிப்பு அவுங்க முகத்தில்.

PIN குறிப்பு:  மகள் எடுத்த படங்களில் சில இத்துடன்:-)


Monday, September 15, 2014

தாமதம் ஏன் ஸ்வாமி?


ஈ கொல்லம் இத்தரயும் வைகிப்போயல்லோ!  மாவேலி, சட்னு பதில் சொன்னார். என்ன துளசி.... இப்படிக் கேட்டுட்டே?  என் காலத்தில் பரசுராம க்ஷேத்ரமா  இருந்தப்ப, மலையாளிகள்  அங்கே மட்டும்தானே இருந்தார்கள். அதனால் ஓணதிவசம், ஒரு நடை வந்து எல்லோரையும் பார்த்துப்போக எளுப்பமாயிருந்நு.  இப்போ  சரிக்கும் பறஞ்ஞால்.....   ஆர்ட்டிக் முதல் அண்டார்ட்டிக் வரை பரவிக்கிடக்கும் மலையாளிகளைக் கண்டு வரான்.... எத்ர நேரம் வேண்டி வருமுன்னு  உனக்குத் தெரியாதா?

ஓக்கே, தம்புரானே! லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர்றது  இப்படித்தானா? ஆஹா..:-)


எங்கூரில் ஓணம்விழாவை,  முந்தாநேத்து சனிக்கிழமை செப்டம்பர் 13 தான் கொண்டாட முடிஞ்சது.  போன சனிக்கிழமைதான் ஓணம் பண்டிகை என்றாலும்  அன்றைக்குப் பல்வேறு காரணங்களால்  ஒரு வாரம் கழிச்சு ஆய்க்கோட்டேன்னு   முடிவெடுத்தோம்.  ஹால் கிடைக்கலை என்பதைவிட,  அன்றைக்குத்தான் நம்ம இண்டியன் சோஸியல் & கல்ச்சுரல் க்ளப், அவுங்க மிட்விண்ட்டர் திருவிழாவை வச்சுருந்தாங்க.  கிறைஸ்ட்சர்ச் கேரளா அசோஸியேஷன் மக்களும் இந்தியர்களில்லையோ?  நாம்தானே இங்கும் அங்குமாய்ப்போகவேண்டி இருக்கு.

அந்த இண்டியன் க்ளப்பை ஆரம்பிச்சது நம்ம கோபால்தான் என்பது  புதியவர்களுக்கான தகவல்:-) ஆரம்பிச்சப்போது   உலக இந்தியர்கள் க்ளப்பாக இருந்தது,   ஒவ்வொரு ஆட்சியும்  மாறமாற  குஜராத்தி க்ளப்,  ஃபிஜி இண்டியர் க்ளப் இப்படி பலவேசம் கட்டுன பிறகு இப்போ கடந்த மூணு வருசமா பஞ்சாபி க்ளப்பாகி வருது. அதுவும் இந்த வருசம்  97 சதமானம் அஸ்லி பஞ்சாபி!  நல்லதுக்கில்லே:(  எப்போ மறுபடி  உலக இந்தியர் க்ளப்பா  ஆகப்போகுதோ?   புலம்பல் கச்சேரியை பின்னொருநாளில் வச்சுக்கலா. இப்போ... நம்ம மாவேலித் தம்புரானை  இன்னும் காக்க வைக்கவேணாம், கேட்டோ!


இந்த முறை நம்ம  விழாவை, நமக்கு மட்டுமில்லாமல்  கிறைஸ்ட்சர்ச் மாநகர  மக்களுக்கான  விழாவாக  செய்தோம்.  அவுங்களுக்கும்  நம்ம பாரம்பரிய  ஓண சத்ய சாப்பிட ஒரு ச்சான்ஸ் கொடுக்கலாமேன்னுதான்.  பொதுவா, நாங்கள் , விழாவுக்கு முதல்நாள் இரவு  ஹாலுக்குப்போய் சமையலுக்குண்டான எல்லா ஏற்பாடுகளையும் செய்வோம்.  வீடுகளில் தனிப்பட்ட முறையில் சமைச்சுக்கொண்டு வரும் சில ஐட்டங்களைத் தவிர்த்து,முக்கால் சமையல் முதல்நாளிரவே முடிச்சுருவோம். பெரியகூட்டமா  வந்து காய்கறிகள் நறுக்குவதும்,  பூக்களம் ஒருக்குவது, ஹால் அலங்காரம் என்று  பரபரப்பா வேலைகள் நடக்கும்.  கூடியிருந்து குளிர்ந்தேலோதான்.
  நடுவில் இருப்பவர்தான்  செஃப்  பினய் 

இந்த முறை  சமையல் பொறுப்பை ஏற்றுநடத்த ஒரு   செஃப் கிடைச்சார். அவருடைய உதவியாளர்கள் ரெண்டு பேர் இருந்தாங்க என்பதால்  தனிப்பட்ட சமையல் வேணாமுன்னு முடிவாச்சு.  எனக்கு எப்பப் பார்த்தாலும் ரசம்தான்.  இதிலிருந்து விடுதலை வேணுமுன்னு மனசு ஏங்குனது நிஜம். வேற எதாவது கிடைச்சால் கொள்ளாமுன்னு இருந்தேன்.  120 நபர்களுக்கு ரசம் செய்வது பிரச்சனை இல்லை.  அதை  கொட்டிக் கவிழ்க்காமல் வீட்டில் இருந்து ஹாலுக்குக் கொண்டுபோவது, ஒரு சவால்!

சமையல் அவுங்க மூணுபேர் செய்வாங்கன்னாலும்  காய்கறிகள் நறுக்கிக் கொடுக்க எங்க உதவி தேவைன்னதால் முதல்நாள் போய் உதவிட்டு வந்தாங்க பலர்.  அப்படியே பூக்களம், அலங்கார வேலைகள்  எல்லாமும் ஆச்சு.  எனக்குக் கொஞ்சம் உடல்நலமில்லை என்பதால் நானும் கோபாலும் போகலை:(


 என்  மகன் ஷான்!
 நம்ம  எக்ஸ்டெண்டட் ஃபேமிலி! 


மறுநாள் விழாவுக்குப்போய்ச் சேர்ந்தோம். அருமையான பூக்களம்.  எப்பவும் இதுக்குப் பொறுப்பேற்று  நடத்துபவர், வேற ஊருக்கு  இடம் பெயர்ந்துட்டார். ஆனால் புதுசா வந்துருக்கும் இளைஞர் படை ஜோரா  அலங்கரிச்சுட்டாங்க. மேடைக்கு முன்னாலும்  இந்த வருச அலங்காரங்கள் சூப்பர். முதல்முறையா ஓணத்தப்பன் கூட  இருந்தார்!




வழக்கம்போல்  ஒரு மணி லேட்டா விழா ஆரம்பிச்சு நடனம், பாட்டு, ஓண விழா விவரம் சொல்லும் மேடைப்பேச்சு இப்படி நடந்துக்கிட்டு  இருந்த சமயம்,  மாவேலி வந்தார். அஞ்சு நிமிட் கழிச்சு சீஃப் கெஸ்ட் (உள்ளூர்   பார்லிமெண்ட் அங்கம்)  வந்து சேர்ந்தாங்க.  இன்னும் அஞ்சு நாளில் எங்க நியூஸி பொதுத்தேர்தல் நடக்கப்போகுது. எல்லா அரசியல்வியாதிகளும் தலைக்கு மேல் வேலை இருக்குன்னு பயங்கர பிஸி. ஆனாலும்  இப்படி ஒரு மாபெரும்  மக்கள் கூட்டத்தையும்,  எங்கள் ஓட்டுகளையும் புறக்கணிக்க தைரியம் வருமா என்ன?  கொஞ்சம் லேட்டாதான் வரமுடியும். ஆனாலும்  கட்டாயம் வந்துருவேன்னு சொல்லி இருந்தாங்க.அதே போல வந்து விளக்கேத்தி வச்சாங்க.  ஒரு மரியாதைக்கு அரைமணி நேரம் இருந்துட்டுக் கிளம்பிப்போகவும்  செஞ்சாங்க.

பாரம்பரிய நடனமான திருவாதிரைக்களி, மகளிரணியின் மாடர்ன் டான்ஸ்,  அப்புறம் பெயரில்லாத ஒரு நடனம்( ஆடியது  நாலு ஜோடித் தம்பதிகள்!)


 இடைவெளியிட்டு நிரப்ப, சின்னதா ஒரு க்விஸ், அப்புறம்  பார்வையாளர்களின்  மலையாளமொழி  ஆற்றலை பரிசோதிப்பதுன்னு சில சின்னச்சின்ன கலாட்டாக்கள்.  'முண்டு ச்சளியில் புரளரது' ( வேகமா பத்து முறை சொல்லிப்பாருங்க)  வடக்கருக்காக , ப்ளூபல்ப் ரெட் பல்ப்  :-)


நல்ல கூட்டம்.   வடக்கர்களும்( இதில் சிலபல பஞ்சாபிகளும் சேர்த்தி) வெள்ளையர்களும்,  திராவிட மக்களும்,  இண்டியன் க்ளப் அங்கங்களும், ஃபிஜி இந்தியர்களுமா  200 பேருக்கும் அதிகமா இருந்தாங்க.




எல்லோரும் ஆவலுடன் காத்திருந்த  ஓணசத்ய, சரிக்கும்  1.10க்கு  ஆரம்பிச்சது.  21 ஐட்டங்களுடன் சாப்பாடு. ரெண்டு வகைப் பாயஸம், அடைப்ரதமனும், பால்பாயஸமுமாய். ரசம் & மோர் மட்டும் மிஸ்ஸிங்.
நம்ம நண்பர் சுரிந்தர் டாண்டன், மனைவியுடன் வந்துருந்தார்.

இவர் ஏகப்பட்ட அவார்ட் வாங்குனவர். லேட்டஸ்ட்டா  வாங்குனது, மாட்சிமைதாங்கிய  மஹாராணியம்மாவிடமிருந்து. MNZM (Member of the New Zealand Order of Merit), Queen's Birthday Honours, June 2014  இவர் மனைவி, சமீபத்தில்  ஜஸ்டிஸ் ஆஃப் பீஸ் (J P )ஆக தெரிவு செய்யப்பட்டாங்க. இப்போ போனமாசம் முதல் நியூஸி கல்யாணங்கள் நடத்தி வைக்கும் அரசாங்கபுரோகிதர் ஆகவும். இன்னும் முதல் கல்யாணம் நடக்கலை. நடத்தி வைக்கலாமுன்னா.... யாராவது   நம்ம கம்யூனிட்டியில்  இந்த ஊரில் கல்யாணம் பண்ணனுமே!  எல்லாம் ஊருக்குல்லே கிளம்பிப்போயிடறாங்க.


சாம்பாரையும், சாப்பாடையும்   அந்நியர்கள்  உண்மையாகவே  ரசிச்சு ருசித்தது  மனசுக்கு மகிழ்ச்சியாத்தான் இருந்தது.  கோபால் ஒரு பந்திக்கு  பரிமாறி சந்தோஷப்பட்டார்.  இவருக்கு  ரொம்பப்பிடிச்ச சமாச்சாரம் பந்தி விசாரிப்பு:-)

அப்புறம் அதிகநேரம் நிக்காமல் சீக்கிரமா  கிளம்பிட்டோம். க்ரூப் போட்டோதான் இந்த முறை நமக்கு மிஸ்ஸாகிப்போச்சு:(  கூட்டம் அதிகம் என்பதால்  நாலு பந்தி போடவேண்டியதா ஆகிருச்சு.


 மகளிரணி!


மும்பை மலையாளிப் பெண் ஒருவர், புதுசா சல்வார்கமீஸ்  வியாபாரம் ஆரம்பிச்சுருக்கார்.  அங்கே கொஞ்சம் டிஸ்ப்ளே  செஞ்சுருந்தாங்க.  குட்லக் சொல்லிட்டு வந்தோம்.

மத்தபடி   நம்மாட்களைக் கண்டு, பேசி, உண்டு, மகிழ்ந்து  விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.



வருங்கால  நடனமணிகள், பாடகிகள் மேடையைப் பிடிச்சுக்கிட்டாங்க.


அனைவருக்கும்  'அடுத்த'  ஓணம் பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.