Wednesday, February 04, 2015

கோட்டையைக் கோட்டைவிடப் பார்த்தோமே!!!! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 19)

காலை  இட்லிவடை காஃபியை முடிச்சுட்டு,   அடுத்த  ரெண்டு வாரம் கழிச்சு  திரும்பி இங்கே வர்றதுக்கான   புக்கிங் இருக்கான்னு சரி பார்த்துட்டு செக்கவுட் செஞ்சு  எட்டேகாலுக்குக் கிளம்பிட்டோம்.  ஃபோர்ட் ஃபியஸ்ட்டா  க்ளாஸிக் கொண்டு வந்துருந்தார் சீனிவாசன்.

நேரா அண்ணன் வீடு. பெரிய பெட்டிகளைப் போட்டுட்டு  அரை டம்ப்ளர் காஃபி மட்டும் குடிச்சுட்டு டாடா பைபை சொல்லும்போது,  'போறவழியில் திருமயம், திருக்கோஷ்டியூர் பார்த்துக்கிட்டு போங்க. 108 லே வர்றதுதான்' என்று அண்ணன் சொல்ல,  'திருமயம் ஆதிசேஷனைக் கவனிச்சுப்பாரு'ன்னு அண்ணி சொல்லி ஒரு கதையும் சொன்னாங்க. (அதை அங்கே போனதும் சொல்றேன்)

சென்னை- திருச்சி (சங்கீதாவில் சாப்பாடு) மதுரை என்று நினைச்சிருந்த திட்டம் மாறியது இப்போ! புதுக்கோட்டை வழியா மதுரை போயிடலாம்.  'அப்படியே புள்ளையார்பட்டி'ன்னு  ஆரம்பிச்ச அண்ணியிடம்,  'வேணாம்.  காரைக்குடிப் பயணத்துலே பார்த்த கோவில்தான்'னு  முந்திக்கிட்டார் நம்மவர்.

கத்திபாரா தாண்டி ஜிஎஸ்டி  சாலையைப் பிடிச்சு நேராப்போய்க்கிட்டு இருக்கோம். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்குக் கொஞ்சம் முன்னால் ஒரு பெரிய அனுமன் சிலை. உயரத்துக்கு ஏத்த  ஆகிருதி இல்லை. ஒல்லிப்பிச்சானா ஏன் இருக்கார்?

சுங்கச்சாவடி கடந்து கொஞ்சதூரம் போனதும்  ஒருசின்ன  இடைவேளைக்காக ப்ரியா ரெஸிடென்ஸி என்ற பெயர் போட்ட கட்டிடத்தில்  இருக்கும் 'நம்மவீடு வசந்தபவன்' . ரெஸ்ட் ரூம் வசதியுடன் உள்ளே சுத்தமாகவே இருக்கு. ஆளுக்கொரு காஃபி.  மழைவேற ஆரம்பிச்சுருந்தது.

திருச்சி மலைக்கோட்டை ரொம்ப தூரத்தில் தெரிஞ்சது. நாம் இப்போ திருச்சிக்குப் போகலை.  புதுக்கோட்டை தாண்டி திருமயம் நோக்கியே போறோம்.

மணி ஒன்னரை ஆனதும் சாப்பிட இடம் தேட ஆரம்பிச்சால்...  ஒரு ஹைவே ரெஸ்ட்டாரண்டில் கொண்டு போய் நிறுத்தினார் சீனிவாசன்.  பரவாயில்லாம சுமாரா இருந்துச்சு.  எதோ ஒரு பழைய சினிமா டிவியில் ஓடிக்கிட்டு இருக்க பரோட்டா வாங்கி உள்ளே தள்ளினோம். வழக்கம் போல தொட்டுக்க ஒன்னும் எடுத்துக்காமல்  ஒரு பரோட்டாவை பிச்சுப் போட்டுக்கிட்டேன்.  இங்கே வாசலில் ஒரு புத்தககக்கடை இருக்கு. எதாவது தேறுமான்னு நோட்டம் விட்டால்  பாலகுமாரனின் உடையார்   ரெண்டு அண்ட் மூன்றாம் பாகம் இருக்கு. முதல் பாகம் இல்லைன்னா எப்படி?  வேணாமுன்னு முடிவாச்சு. கோபால்தான் எதோ வாராந்தரிகளை வாங்கி வண்டியில் போட்டார்.

திருமயம் , புதுக்கோட்டையில் இருந்து  ஒரு  20 KM தொலைவில்தான்.  ஊருக்குள்ளே  நுழையாமல் போனதால்  கால்மணி நேரம்தான் ஆச்சு. சுங்கச்சாவடி ஒன்னு குறுக்கே. லெம்பலக்குடி  டோல் ப்ளாஸா !  எல்லா சுங்கவரிகளையும் சீனிவாசனே கட்டிக்கிட்டு வந்தார். ஒரே கையா இருந்தா  கடைசியில் பில் போடும்போது சுலபம் என்றும் சொன்னார்.


கண்ணுக்கெதிரில் பெரிய பாறைகளா இருக்கேன்னு பார்த்துக்கிட்டெ வந்து வலதுபக்கம் வளையும் சாலைக்குப்போறோம்.  கோட்டை மதில் ஒன்னு. குன்றின் மேலே இருக்கும் கோட்டை!


 சுத்திக்கிட்டுப்போய்  திருமெய்யர் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் வாசலுக்குப்போய்ச்சேர்ந்தோம். குன்றின் சரிவில்தான்  பாறைகளைக் குடைந்து  இந்தக் கோவில்களைக் கட்டி இருக்காங்க.  சாத்திக்கிடந்த கோபுரவாசலுக்குப்  பக்கம் இருந்தஒரு குடிலில் பூக்காரம்மா பூ கட்டிக்கிட்டு இருந்தவங்க, கோவில் திறக்க நாலு மணி ஆகுமுன்னு சொன்னாங்க.  இன்னும் அரைமணிக்கு மேலேயே இருக்கே...அதுவரை  கோட்டையைப் போய்ப்  பார்த்துட்டு வாங்களேன்னு  ஐடியா கொடுத்ததும்  அவுங்கதான்.   ஓக்கே....பார்க்கலாமுன்னு  போனோம்.



தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருக்கு இந்தக் கோட்டையும் கோவிலும். கோட்டைக்குள்ளே போக  ஒரு சிறிய தொகைக்கு டிக்கெட் வாங்கிக்கணும். அஞ்சு ரூபான்னு நினைவு. கீழேயே நாலு   காங்க்ரீட் பெஞ்சுகள் போட்டு வச்சுருக்காங்க.

ஃபொட்டாகிராஃபரா  ஒரு ஜோடிக்கு உதவினேன்.

இயற்கையா அமைஞ்சு இருக்கும் பாறைக்குன்றையே  கோட்டையா ஆக்கி வச்சுருப்பது  அற்புதம்.

கிழவன் சேதுபதி  என்ற விஜய ரகுநாத தேவன் கட்டுனதாம். இவர்   ராமநாதபுரத்தை 1673 முதல் 1708 வரை ஆண்டவர். அதன்பிறகு  புதுக்கோட்டை தொண்டைமான்கள் வசம் போயிருக்கு.

ஒன்னுக்குள் ஒன்னா ஏழு வட்ட மதில்கள் (ஏழு பிரகாரங்கள்?) இருந்துருக்கு. ஆனால் இப்போ நமக்குத்தெரிவது நாலுதான்.  குன்றைச் சுத்தி அங்கங்கே கோவில்கள். எல்லாமே இதே கற்பாறைகளைக் குடைஞ்சு உண்டாக்குனவைகளே.


1799 இல்  ஆங்கிலேயருக்கு எதிராக பாளையக்காரர்கள்  போர் செய்தப்ப,  வீர பாண்டிய கட்டபொம்மனையும் அவர் தம்பி  ஊமைத்துரையையும்  தொண்டைமான் சிறை பிடிச்சு, இந்தக் கோட்டையில்தான் வச்சுருந்து, பிறகு ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார்னு  ஒரு சரித்திரக்குறிப்பு  எழுதி வச்சுருக்காங்க டிக்கெட் கவுண்ட்டரில்.

ஊமையன் கோட்டைன்னு  இன்னொரு பெயர் கூட இருக்காம்  இதுக்கு!

குன்றின் மேலேறி கோட்டையைச் சுற்றிப்பார்க்க சின்னச்சின்னப்  படிக்கட்டுகள்.

தொல்லியல் துறை, இடத்தைச் சுத்தமாகவே பராமரிக்கிறாங்க.  சுற்றிப்பார்க்க வந்த  சனங்கள் அங்கங்கே  இருந்தாங்க.   எங்க நியூஸி கணக்குக்கு  இது கொஞ்சம்  கூட்டம் தான்:-)

அங்கங்கே  பெரிய பெரிய உருண்டைப்பாறைகள் ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டமாதிரி தொக்கி நிற்பது வியப்பே!

கோட்டையின்  மேல் தளத்தின் நடுவில்  இதே பாறைகளில் வெட்டி எடுத்த கற்களால் ஆன கட்டுமானம் ஒன்னு.  அதிலே ஒரு பீரங்கி!  பார்வையில்  இருந்து  எதிரிகள் தப்ப முடியாது. எங்கும் பரந்த மொட்டை வெளிதான்.  படிகள் இருந்தாலும், பிடிமானம் ஒன்னும் இல்லாததால் ஏறிப்போக யோசனையா இருந்துச்சு எனக்கு. நம்ம சீனிவாசன்  மடமடன்னு மேலேறிப்போய்ப் பார்த்துட்டு  வந்தார்.  சின்ன உடம்பு,  சொன்ன பேச்சைக் கேக்குது.


கீழே பார்க்கும்போது  ஒரு இடத்தில் இரும்பு ஏணி வச்சுருக்காங்க. அதுலே ஏறிப்போனால்  கட்டபொம்மன் இருந்த சிறை வரும்போல!  நாம் போய்ப் பார்க்கலை:(

ரொம்பப்பெரிய கோட்டை இல்லைதான்.  ஒரு அரைமணி போதும் நிதானமாய்ப் பார்க்க.


பிக்னிக் வந்த சனம் ஓய்வா அங்கங்கே  இருந்து  பின்னிஎடுத்துக்கிட்டு இருந்தாங்க:-)



நாலுமணி ஆகுதேன்னு  கோட்டையை விட்டு வந்து கோவிலுக்குப் போனோம். திருமயமுன்னு அண்ணன்  சொல்லி இருக்கலைன்னா இந்தக் கோட்டையைக் கோட்டை விட்டுருப்போம்தான்:-)

நம்ம கோபாலுக்கு கோட்டை என்றாலே கொள்ளை ப்ரியம் உண்டு கேட்டோ:-)

நம்பாதவர்கள் இங்கே பார்க்கலாம்:-) 


தொடரும்..............:-)



25 comments:

said...

திருமயம் கோட்டைக்குப் பல முறை குடும்பத்துடன் சென்றுள்ளேன். தற்போது தங்களது பதிவின்மூலமாக மறுபடியும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

said...

படங்களைப் பார்த்ததுமே, நேரில் சென்று வந்த அனுபவம் எனக்கும் வந்து விட்டது மேடம்

said...

ஒருமுறை சென்று வர வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது அம்மா...

said...

புதுக் கோட்டைப்பக்கம் அதிகம் பயணித்ததில்லை. ரொம்ப நாட்களுக்கு முன் சித்தண்ண வாசல் சென்ற நினைவு. திருமயம் கோட்டைதான் ஊமையன் கோட்டையா.?

said...

திருமயம் கோட்டையப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். உங்க பதிவு வழியாப் பாத்தாச்சு. அந்தப் பக்கம் போனா எட்டிப் பாக்கனும். துப்புரவா இருந்தாலே ஒரு எடம் அழகாயிருது. நம்ம மக்களுக்கு அதுதானே புரிய மாட்டேங்குது.

அந்தக் கம்பி ஏணியில் நீங்க ஏறாதது நல்லதுதான்.

பிக்னிக் போகச் சிறந்த இடம் திருமயம் கோட்டைன்னு நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன். அத அப்படியே எடுத்து சென்னை பக்கத்துல திருப்போரூர் கிட்டக்க வெச்சிட்டா எவ்வளவு நல்லாயிருக்கும் :)

said...

எப்பவோ பார்த்த திருமயத்தை மீண்டும் உங்கள் பதிவின் மூலம் கண்டேன்..

said...

புதுக்கோட்டையிலிருந்து பத்து தடவையாவது இது வழியாப் போயிருப்போம். ஐய்யா காரை நிறுத்த மாட்டார். இப்ப உங்க வழியா இந்தக் கோட்டையைப் பார்க்கணும்னு இருக்கு. பின்னலழகிகள் வெகு ஜோர்.
கோட்டையின் பனோரமா வியு சூப்பர் . கிழவன் சேதுபதியா. ஏதோ நம்பியார் பெயர் மாதிரி இருக்கு.

said...

சுவாரஸ்யமான இடம்.

ம்ம்... போகோணும் ஒரு வாட்டி!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வாழ்க நலமுடன்.

said...

'டேஷ்' அசத்தல் அழகுடன் இருக்கு :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பலமுறை சென்றுவந்தீர்களா!!!!

பதிவில் ஏதேனும் தகவல் பிழை இருந்தால் சொல்லுங்க. திருத்திக் கொள்வேன்.

said...

வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.

நேரில்போக ஒரு வாய்ப்பு கிடைத்தால் தவறவிடாதீங்க. எழுதியது சரியான்னும் அப்படியே செக் பண்ணிக்கலாம்:-)))

நாள் முழுவதும் திறந்திருக்கும் என்பதால் போறபோக்குலே பார்த்துக்கலாம்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அடுத்த மாநாடு புதுக்கோட்டைதானே! அப்படியே திருமயமும் போய் கோட்டையைப் பார்த்துட்டு வந்துருங்க.

இல்லேன்னா.... மாநாட்டையே கோட்டையில் நடத்திருங்களேன்!

கோட்டையில் மாநாடுன்னா கேக்கவே நல்லா இருக்குல்லே:-))))

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஆமாங்க... இதுக்கு ஊமையன் கோட்டை என்றும் ஒரு பெயர் உண்டு.

ஊமைத்துரை இங்கே இருந்து போர் புரிந்தாராம்.

சித்தன்னவாசல்.... சமணர்கள் இருந்த இடமில்லையா? அங்கே ஓவியங்கள் அழகோ அழகுன்னு சொல்லக் கேள்வி.

நான் பார்த்ததில்லை:(

said...

வாங்க ஜிரா.

கட்டாயம் ஒருமுறை பார்க்க வேண்டிய இடம்தான். சந்தர்ப்பம் அமைஞ்சால் விட்டுறாதீங்க. தொல்லியல் துறை பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதால் சுத்தமாக இருக்கு.

கோட்டையைத் தூக்கி சென்னையில் வைக்கணுமா?

ஐயோ.... இதாவது உருப்படியா இருந்துட்டுப் போகட்டுமே!

பாறைகளை எல்லாம் உருட்டிக்கிட்டுப் போயிருவாங்களேப்பா:(

said...

வாங்க மோகன் ஜி.

பழைய நினைவுகள்தரும் மகிழ்ச்சியே தனி ரகம் அல்லவா!

said...

வாங்க வல்லி.

அடடா..... இப்படிக் கோட்டை விட்டுட்டீங்களே:(

இன்னொரு அபூர்வ சமாச்சாரம் திருமயத்தில் உண்டு. பெரிய பெருமாள்.

திங்கள் பதிவில் தரிசிக்கலாம். ஓக்கேவா?

said...

வாங்க ஸ்ரீராம்.

கட்டாயம் ஒருமுறை போய் வாங்க. அடுத்த பதிவர் மாநாடு புதுக்கோட்டையில்தான். அப்படியே இங்கேயும் விஸிட் அடிச்சால் ஆச்சு!

said...

வாங்க மாதேவி.

விடுப்பில் இருந்து வந்துட்டீங்களா?

வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க சாந்தி.

கத்தியோ துப்பாக்கியோ கொண்டு போக விட்டுப் போச்சு. பிழைச்சுக்கிட்டார் உங்க அண்ணன்:-)))

சிம்பிள் அண்ட் ஸ்வீட்டா இருக்கு இது!

said...

நல்லகாலம் நீங்கள் பார்த்துவிட்டு வந்தீர்கள் கோட்டை விடாமல் கோட்டையை. இல்லையென்றால் நாங்களும் கோட்டை விட்டிருப்போமே!

said...

வாங்க ரஞ்ஜனி.

திங்கள் வரப்போகும் பதிவில் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சமாச்சாரம் இருக்கு. மறக்காமல் வருகை தரணும்:-)

said...

நிச்சயம் வருகை தருகிறேன். துளசி கூப்பிட்டு வராமலிருப்பேனா? சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லையே!

said...

சென்னையில்தான் இருக்கேன். சென்னை வந்தாக்க சொல்லுங்க.

said...

பலமுறை புதுக்கோட்டை சென்றிருந்தாலும் திருமயம் சென்றதில்லை. உங்கள் மூலம் கோட்டையைக் கண்டேன்.....

கோவிலுக்கும் வந்துடணும்! :)