Monday, March 16, 2015

தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கணுமாமே!.... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 30)

இன்னும் இந்த ஊரில் நாலு கோவில்கள் பார்க்கணும்.  எல்லாத்தையும்  மதியத்துக்குள்ளே முடிச்சுட்டால்  வேற ஊருக்குப் போயிடலாம். கோவில்கள் எல்லாம் இங்கே அதிகாலை  நாலு நாலரைன்னு திறந்துடறாங்க. நம்மூர் கோவில்கள் பகல் 12க்கு அடைப்பதைப்போல் இல்லாமல்  காலை பத்து, பதினொன்னு இப்படி....

நேத்தே  வலையில் பார்த்து  கோவில் நேரங்களை க் குறிச்சு வச்சுக்கிட்டோம். அதுக்காக காலை நாலு மணிக்குப் போவதெல்லாம் டூ மச். ஆறுமணிக்குக் கிளம்பினாலும் போதும் என்ற கணக்கு.

நான் நாலரைக்கே எழுந்து குளிச்சு முடிச்சுத் தயாராகிட்டேன். கோபாலும் கொஞ்ச நேரத்தில் ரெடி. அஞ்சரைக்கு சீனிவாசனை செல்லில் கூப்பிட்டு ரெடியான்னு கேட்டால்.....  'பாத்ரூம் இருப்பது வெளிப்புறத்தில். ஆனால் சரி இல்லை'ன்னு சொன்னார். இது மூணு நட்சத்திர ஹொட்டேலுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க!  பேசாம மாடியில் நம்ம  அறைக்கு வந்து குளிச்சிருங்கன்னதும் தயக்கத்தோடு வந்தார்.

ஆறேகாலுக்குக் கிளம்பிட்டோம். திருச்சிட்டாறு  என்ற இடத்துக்குப் போறோம்.  எதுக்கும் இருக்கட்டுமுன்னு வழியில்  பார்த்த ஒருவரிடம் வழி கேட்டோம். முதலில்  நாம்கேட்ட திருச்சிட்டாறு அவருக்குப் புரியலை.  கொஞ்சம் விளக்கிச் சொன்னதோடு  தருமன்  என்றதும்,  'ஓ  அதோ? ட்ரிச்சிட்டாட்டு   மஹாவிஷ்ணு அல்லே! வளரே அடுத்தாணு. ஒரு அரை கிலோமீட்டர்  நேராயிட்டு ஈவழி போயிட்டு பின்னே இடத்து வசத்தே ஒரு கிலோ மீட்டர் போயால் மதி ' என்றார்.


அதே போல் ஆச்சு.  இந்தப்  பேட்டைக்குக்கு  முண்டன்காவு என்ற பெயர். அலங்காரதோரண வாசல் கடந்து  இதோ கோவிலுக்கு முன்வாசலில்  நிக்கறோம். நூத்தியெட்டு திவ்யதேசக்கோவில்களின் வரிசையில் இதற்கு  அறுபத்திநாலாவது இடம். கோவிலின் தீர்த்தமா இருப்பது சிற்றாறு என்ற ஆறேதான். கோவில்குளமொன்னும்  இருக்கு. பார்க்கிங் என்று தனியா ஒன்னும் இல்லை. வண்டியை இங்கேயே நிறுத்திக்கிட்டோம், இந்தக் குளத்தையொட்டியே.  இதைக்கடந்து இருக்கும் காம்பவுண்ட்க்குள்ளில் போனால் கோவில்.

ரொம்பவே பழைய கோவிலா இருக்கு. அவ்வளவாக  பராமரிப்பு இல்லைன்னு தோணல். கொடிமரம் பலிபீடம் கடந்து  முன்னால் இருக்கும் சின்ன  உம்மரம் கடந்து உள்ளே போறோம். திண்ணகள் இருபுறமும் இருக்க  ஒரு நடை.  அது கடந்து  சின்னதா ஒரு  திண்ணை மண்டபம்.  அப்புறத்தே கருவறை.  அதே அஞ்சு படிகள் ஏறிப்போகணும், பட்டர்.

உள்ளே நின்ற கோலத்தில் இமயவரப்பன். மேற்கு பார்த்து இருக்கார். சிவனுக்கு தரிசனம் கொடுத்தவர்! தாயார் பெயர்  செங்கமலவல்லி. கோவிலில் பட்டரைத் தவிர வேற யாருமில்லை. அவரும் பிரகாரத்தின் பின்புறமிருக்கும்   கதவுக்கருகில் எதோ வேலையாக இருந்தார். நமக்கு ஏகாந்த தரிசனம் லபிச்சது.  மினுமினுக்கும் நெய் விளக்கில் ஜொலிக்கும் பெருமாள்.  சின்ன திருவுருவம்தான். ரெண்டரை  அடி உசரம் இருந்தால் அதிகம்.

நன்றி:  கூகுளாண்டவர் அருளிச்செய்த  திருச்செங்குன்றூர் கருவறைப் படங்கள்.


நிம்மதியாக் கும்பிட்டு முடிச்சு பிரகாரத்தை வலம் வந்தோம். வட்டக் கருவறைதான் இங்கும்.



பாரதப்போர் முடிஞ்சது.  தருமனுக்கு முடி சூட்டியாச்சு. பாண்டவர்கள்   அஸ்தினாபுரியை   ஆண்டு வர்றாங்க.  தருமனுக்கு ஒரே குற்ற உணர்வு. தான் சொன்ன  பொய்யால்தான்   குரு த்ரோணர்   உயிரிழக்க நேர்ந்தது.  என்ன இருந்தாலும் அசுவத்தாமா (என்ற யானை)இறந்தது உண்மை என்று  சொல்லி இருந்துருக்கக்கூடாது. சொல்லிட்டேனே.....  பாவமன்னிப்பு  வேண்டி தல யாத்திரை போனால் மனசுக்கு நிம்மதி கிடைக்கும் என்று கிளம்பறார்.  அண்னனை விட்டுப்பிரிய மனமில்லாமல்  ஐவரும் கூடவே வர்றாங்க.  அப்போதான் ஆளுக்கு ஒரு கோவிலா  இந்தப்பகுதியில் கட்டி இருக்காங்க. கருவறை எல்லாம் ஒரே ஸ்டைல். அதைத்தான்   அவுங்க கட்டி இருப்பாங்க. இப்போ இருக்கும்  முன்பக்க மண்டபங்கள், மற்ற  அமைப்புகள் எல்லாம்  கலிகாலத்தில் கட்டுனதாக இருக்கணும்.   இந்த இமயவரம்பர் கோவிலைக் கட்டுனது   யுதிஷ்ட்டிரர். (தருமர்.)

செய்த தவறுக்கு  மனம் வருந்தி மன்னிப்பு கேட்டாருன்னும் அவருடைய பாவத்தை பெருமாள் மன்னிச்சாருன்னும்  கதை போகுது.  அதனால் பாவமன்னிப்பு  வேணுமுன்னால்  இங்கே வந்து கும்பிடலாமுன்னு  சேதி.  அதான் மன்னிப்பு கிடைக்குதேன்னு  வேணுமுன்னே பாவம் செஞ்சுட்டு வந்தால்  நோ மன்னிப்பாக ஆகிரும் , ஆமா.

நம்மாழ்வார் இவரை தரிசனம் செஞ்சு பதினோரு பாசுரங்கள் பாடி மங்களசாஸனம் செஞ்சுருக்கார். திருச்செங்குன்றூர் என்பது பழைய பெயராம். அவர் பாடலிலேயே  பெருமாள் பெயரையும் ஊரின் பெயரையும், ஆற்றின் பெயரையும்குறிப்பிட்டு இருக்கார் பாருங்களேன்.

எங்கள் செல்சார்வு யாமுடை அமுதம்
இமையவர் அப்பனென் அப்பன்
பொங்குமூ வுலகும் படைத்தளித் தழிக்கும்
 பொருந்துமூ வுருவனெம் அருவன்
 செங்கயல் உகளும் தேம்பனை புடைசூழ்
திருச்செங்குன் றூர்திருச் சிற்றாறு
அங்கமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர்மற்  றெனமர் என் துணையே.
நம்மாழ்வார் ( 3597 )

மேலே ஒரிஜினல். கீழே பதம் பிரிச்சுப் போட்டது. சரியான்னு சொல்லுங்களேன், ப்ளீஸ்.

எங்கள் செல்சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்தளித்தழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயலுகளும் தேம்பனை புடைசூழ்
 திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியானல்லால்
யாவர் மற்று என் அமர்துணையே.


கோவிலுக்குத் தலப்புராணம்  இவ்ளோதான்னு நினைச்சுறாதீங்க. இன்னொரு முக்கியமான  சமாச்சாரம் இங்கே நடந்துருக்கு!

நம்ம சிவன் இருக்காரே.... அவருக்கு ரொம்பவே இளகிய மனசு. யாராவது அவரை தியானிச்சு தவம் இருந்தால் போதும். உடனே  அவர்களுக்கு தரிசனம் கொடுத்துருவார். அதோடு நிறுத்திக்கத் தெரியாது. பக்தா...உன் பக்தியை மெச்சினோம். என்ன வரம் வேண்டுமானாலும் கேள் என்ற வழக்கமான டயலாகை எடுத்து விடுவார்.

இப்படித்தான்  சுகன் என்ற அரக்கன் ஒருவனுக்குப் பிறந்த  பத்மாசுரன் என்ற அரக்கன் சிவனைத் தியானிச்சு  தவம் செய்தான்.  சிவனும்  தரிசனம் கொடுத்து வழக்கமான  டயலாகைச் சொன்னார்.  ரொம்பப் பணிவோடு பத்மாசுரன் கேட்ட வரம்.....அவன் யார் தலையில் கை வச்சாலும் அவர்கள் அப்படியே  எரிஞ்சு பஸ்மம் ஆகிறணும் என்பதே!  சிவனும் ஓக்கேன்னு சொல்லிட்டார்.

  (இவன் பத்மாசுரனா இல்லை பஸ்மாசுரனான்னு எனக்கு இப்போ ஒரு சந்தேகம். வரம் கிடைச்சதும் பெயரை மாத்திக்கிட்டானோ?)

இப்போ அந்த வரம் சரியா ஒர்க்கவுட் ஆகுதான்னு பரிசோதிச்சுப் பார்க்கணும் அசுரனுக்கு! கண் எதிரில்  வேற யாருமே இல்லை சிவனைத் தவிர!  சிவன் தலையில் கை வச்சுப் பார்த்தால் ஆச்சுன்னு  கிட்டே போறான்.  சட்னு சிவனுக்கு நடக்கப்போகும் ஆபத்து  தெரிஞ்சதும் ஓடிப்போய் ஒளிஞ்சுக்கிட்டார்.  'பெருமாளே என்னைக் காப்பாத்து' ன்னு மனசில் நினைச்சார்.

மச்சானைக் காப்பாற்ற மஹாவிஷ்ணு  வந்தார்.  என்ன நடந்ததுன்னு  தெரிஞ்சதும், பஸ்மாசுரனை   எப்படி அழிக்கலாமுன்னு  ரொம்ப நேரமெல்லாம் யோசிக்கலை.  மோஹினியா  உருவத்தை மாற்றிக் கொண்டார். ஏற்கெனவே  போட்ட வேஷம்  என்பதால் இன்னும் மெருகேறி எல்லாம் கனக்கச்சிதம்.

பஸ்மாசுரன் முன்னே ஒயிலாக இடுப்பை அசைச்சு   அசைச்சு ஒரு ஒய்யார நடை.   'நிர்பயமா' தன் முன்னே நடந்து போகும்  இளசைப் பார்த்ததும்  அவனுக்குக் காமவெறி ஏறிப்போச்சு.  அவளிடம் தன் இச்சையைச்  சொல்றான்.  அரக்கனா இருந்தாலும் அத்துமீறி நடக்கலை.நேர்மையா தன் விருப்பத்தைச் சொல்றான் பாருங்க.

மோஹினியும் ரொம்ப பிகு பண்ணிக்காமல்,  'பார் ,உன் உடம்பெல்லாம் அழுக்கு நிறைஞ்சும் , தலைமுடி எல்லாம்  சிக்கு பிடிச்சும் கிடக்கு. ஒரே துர்நாற்றம்.  நல்லா எண்ணெய் தேய்ச்சு ஒரு குளியல் போட்டுட்டு வா. நாம் இன்பமா இருக்கலாமு' ன்னு  சிரிச்சமுகத்தோடு சொல்றாள்.

அட இவ்ளோதானா  விஷயம். இதோ போய் குளிக்கறேன்னு  எண்ணெயை எடுத்துத்  தேய்ச்சுக்கத் தன் தலையில்  கை வச்சான்.  ஆட்டம் க்ளோஸ். பஸ்மம் ஆனான். தீக்குளியல் ஆனதும்   சிவன் மெதுவா ஒளிஞ்சிருந்த இடத்தில் இருந்து வெளியில் வந்தார்.  மோஹினியைக் கண்டார்.  முதல்முதலா இப்படி ஒரு    சொல்லமுடியாத பேரழகைப் பார்த்ததும்  கண்கள் விரிஞ்சது. அவருக்கும்  ஆசை!

ஏன் பாற்கடலைக் கடைஞ்சு அமுதம் எடுத்தபோது, அதை தேவர்களுக்கு மட்டும் விளம்பணும் என்ற எண்ணத்தோடு மஹாவிஷ்ணு மோஹினி அவதாரம் எடுத்தாரே... அப்ப சிவன் கண்டு மோஹிக்கலையான்னு யாரும் கேக்கப்பிடாது. அப்பதான் அவர் ஆலகால விஷத்தை முழுங்கி மயக்கத்துலே கிடந்தாரே!  அது நினைவிருக்கட்டும், ஆமா!

சிவனும் மோஹினியும்  இணைஞ்சதால்   ஹரிஹர புத்திரனாக  ஐய்யப்பன்  பிறந்தார் என்பது  உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்தானே!   அப்படி ஒரு முக்கியமான சம்பவத்துக்கு அடிக்கல் நாட்டிய இடம் இதுன்னு இப்பத் தெரிஞ்சுக்கிட்டீங்களா!

நம்ம சீனிவாசனை  அப்பப்ப ஒரு ஃபொட்டாக்ராஃபரா மாத்திருவேன்:-) செல்ஃபோன் கேமெரா வந்தபின்  எல்லோருமே படம் எடுக்கும் நிபுணர்களா மாறிட்டாங்கதானே !

கோவிலில் பெருமாள் பெயரைக் கேட்டது முதல் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற அரசனின் பெயர் மனசின் ஒரு மூலையில் ஓடிக்கிட்டே இருக்கு.  வரப்பருக்கும் வரம்பனுக்கும்  சம்பந்தம் இருக்கோ என்னவோ! உள்ளூர் சாமி பெயரை வைப்பதுன்ற ஒரு வழக்கம் இருக்கே... ஒருவேளை அதன்படியோ?

தொடரும்...........:-)




22 comments:

said...

உங்கள் பாணியில் கதை கேட்பதே சுவாரஸ்யம் அம்மா...

said...

துளசிதளம்: தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கணுமாமே!.... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 30)
THULASIDHALAM.BLOGSPOT.COM
=துளசி மேடம் நம்மை முண்டன் காவு (தர்மர் கட்டிய கோவில் - கேரளா) அழைத்துச் செல்கிறார். எனது பக்கம் பகிர்கிறேன். நன்றி மேடம் Tulsi Gopal

said...

படங்கள், ஸ்தல புராண கதைகள் அருமை.

said...

இனிமை நிறைந்த தமிழ் பேராசிரியரிடம் கதை கேட்ட உணர்வு. படங்களும் பேசுகின்றன.

said...

பெருமாளோட பேர் இமையவரப்பன். இமயவரப்பன்னு இருந்திருந்தா இமயவரம்பனோன்னு யோசிக்கலாம். எனக்கு என்ன தோணுதுன்னா இமையவர் அப்பன்னு பிரிக்கனும்னு. அதாவது தேவர்களுக்குத் தலைவன். ஆனா அதான் சரியான பொருளான்னு விவரம் தெரிஞ்சவர்கள் விளக்கலாம்.

கேரளா அழகுதான். கேரளக் கோயில்களும் அழகுதான். ஒருவாரம் கேரளத்துல ஏகாந்தச் சுற்றுலா போனா நல்லாதான் இருக்கும். யார் கூடயும் போனா இந்த மாதிரி இடங்கள்ள போனமா பாத்தமான்னு பொறப்படுவாங்க. தனியாப் போறதுதான் வசதி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அப்டீங்கறீங்க? பேசாம கதாகாலக்ஷேபம் பண்ணலாம் போல இருக்கே!

said...

வாங்க ரத்னவேல்.

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.

said...

வாங்க ரமா ரவி.

நன்றீஸ்ப்பா.

said...

வாங்க செந்தில் குமார்.

சாமி கதையை இப்படி எப்படிச் சொல்லப் போச்சுன்னு யாரும் வந்து மொத்தாம இருக்கணுமே!

said...

வாங்க ஜிரா.

ரொம்பச்சரி. தேவர்கள் எல்லோரும் கூடி பெருமாளை தியானிச்சப்ப அங்கே வந்து தரிசனம் கொடுத்தாராம்.

அதான் இமையவர்களுக்கு அப்பன் என்று பெயர்க் காரணம் உண்டு.

தமிழ்நாட்டுக்கோவில்கள் போல கோபுரங்களோ, தூண்களில் சிற்பக்கலையோ , விமானம் அழகோன்னும் கிடையாது இந்தக் கோவில்களில்.

எல்லாம் ரொம்பவே ப்ளெயின்.
அதனால் போனோமா பார்த்தோமான்னுதான் வரவேண்டி இருக்கு.

ஒரு வாரத்தில் முழுக்கேரளாவும் கூடப் பார்த்துடலாம்.

துரியோதனனுக்குக்கூட அங்கே கோவில் இருக்காமே!

said...

கொறச்சு கொறச்சு மலையாளம் படிச்சோ.? கேரள முண்டில் அசலாயிட்டுண்டு.
கேரளத்தில் மங்களாசானம் பாடிய கோவில்கள் வரிசையில் குருவாயூரப்பன் கோவில் இல்லையே.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

எனக்கு மலையாளம் பேசவும் படிக்கவும் எழுதவும் கூட வரும்.

நாங்க கேரளத்தில் ஒரு ஒன்னரைக் கொல்லம் இருந்தோம். சின்னவயசு. அதனால் சட்னு படிக்கக் கற்றுக் கொண்டேன்.

ஆழ்வார்கள் போய் தரிசனம் செஞ்சு மங்களாசாசனம் செய்த கோவில்கள் மட்டுமே 108 வரிசையில் உண்டு. குருவாயூர் மட்டுமல்ல, ஆலப்புழை ஸ்ரீ க்ருஷ்ணனும் 108 இல் இல்லையாக்கும்!

said...

தேவாதி தேவன் இமையவரப்பன். கோவிலும்,கதையும்,படங்களும் ஜோடியும் ம்ம்ம்ம்ம்ம்
நன்னாயி துளசி.@ டிடி, துளசி பேசினாலே கதை கேட்பது போலத்தான்.

said...

Borrowed your book "En Chella Chellangal" from Bothell Public Library , Washington, USA. Interesting books on Pets and their behavior and your ties with them. Well done

said...

கோவில் பழசானாலும் அமைதியா சுத்தமாவும் , இருக்கு. . உங்களிருவரின் போட்டோ அழகு . உங்க கேரளா புடவை சூப்பர் !!

said...

வாங்க வல்லி.

ஆஹா....
ராரா தேவாதி தேவா,
ராரா மஹானுபாவா....

டேங்கீஸ்ப்பா.

said...

வாங்க தெய்வா,

மனசு மகிழ்ச்சியில் துள்ளுகிறது என்பதே மெய்.

நன்றிகள்.

said...

வாங்க சசி கலா.

ஒரு சில பெரிய கோவில்களைத்தவிர, கேரளாக் கோவில்கள் எல்லாம் அமைதியான சூழலில்தான் இருக்கு.

பட்டர்கள் யாரும் பணவசூலை எதிர்பார்ப்பதில்லை. நாமாக எதாவது கொடுக்கவேணுமுன்னு விரும்பினால் உண்டியலைத் 'தேடிப்பிடிச்சு' போடணும்!

அந்த உடை செட்டு முண்டு.

said...

எத்ற சுந்தரம்!!!! ஈ கேரளமும் கதயும் பறயுந்ந சேச்சியும் :-))

said...

ஆகா! படங்கள் அழகு:) கோயிலும்தான்.

said...

dharmar kattiya kovilum, kerala jodiyum super...:))

said...

இமையவரப்பன், இமையவரம்பன் கேள்வியைப் படிச்சுட்டு சொல்ல வந்தேன். இராகவனும் வல்லியம்மாவும் ஏற்கனவே சொல்லியிருக்காங்க. இருந்தாலும்....

அக்கா, நீங்க குடுத்த நம்மாழ்வார் பாசுரத்துலயே இமையவர் அப்பன் இருக்காரே?! அவர் பாடுனதே பெருமாளுக்குப் பேரா வச்சுட்டாங்க போல.

எங்கள் செல்சார்வு (கதி) யாம் உடை(ய) அமுதம்
இமையவர் அப்பன் என் அப்பன்
பொங்கு(ம்) மூவுலகும் படைத்து அளித்து (காத்து) அழிக்கும்
பொருந்து மூவுருவன் (மும்மூர்த்தி உருவன்) எம் அருவன்
செங்கயல் உகளும் தேன் பனை புடை சூழ்
திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்று எனமர்? என் துணையே!