Monday, June 15, 2015

ரெட்டை இலைக்குச் சான்ஸ் இல்லாமப் போயிருச்சே ... ! (தலைநகரத்தில் ! பகுதி 8)

அஞ்சாவது மாடி முழுசும்  கலைகளுக்காக  ஒதுக்கியாச்சு. ஓவியங்கள், செதுக்குச் சிற்பங்கள், வரிசைகளில்  Quilting & Patchwork கைவேலைகளுக்கும்  ஒரு முக்கிய இடம் உண்டு. கொஞ்சம் வயசான பெரியவங்க, இதை ஒரு ஹாபியா தைக்கறாங்க.  இவுங்களுக்கான க்ளப்கள், ஒன்று கூடல்கள் இதெல்லாம்  நிறைய நடக்குது இந்த நாட்டிலே!  அவுங்களோட இளமைக் காலத்துலே  மனசை அலையவிட டெலிவிஷன், ஸெல்ஃபோன்,  வாட்ஸப், நெட், கம்ப்யூட்டர்  எல்லாம் இல்லை பாருங்க. அதனால் ஆக்கப்பூர்வமா எதாவது  செஞ்சுக்கிட்டு இருந்துருப்பாங்க. இந்தக் கலை ஆரம்பிச்சது 3400 B.C.ன்னு ஒரு சரித்திரக்குறிப்பு இருக்கு!



 திமிங்கிலப்பல்!
 மீனின் எலும்பில் செஞ்ச  தட்டு.  டோஸ்ட் செஞ்ச  ப்ரெட் ஸ்லைஸ்கள் வைக்க!

அங்கங்கே  இப்படி மடிக்கணினிகளும் இருக்கைகளும்  வச்சுருப்பதால்  காட்சிப்பொருட்களின் மேல் விவரம் அங்கேயே தேடிப் பார்த்துக்கலாம்.





  இவுங்களை எப்படியாவது  வலை உலகுக்குள் நுழைச்சே ஆகணுமுன்னு இலவச கணினி வகுப்புகளை  அரசு  பல இடங்களில் நடத்திக்கிட்டு இருக்கு. யார் வேணுமானாலும் போய் கணினி கத்துக்கலாம். நாம் என்ன  ஜாவாவா கத்துக்கப்போறோம். கணினி  இயக்குதல், மற்ற  வேர்டு, ஆஃபீஸ்,  மெயில் அனுப்ப, வலைமேய இப்படிச் சொல்லிக் கொடுக்கறாங்க.  ஆறு வாரம் ட்ரெய்னிங் இருக்கு.  இலவசக் கணினி  வகுப்புன்னதும் நானும் ஒருநாள் போய்ப் பார்த்தேன்.  மேலே சொன்னதெல்லாம்  ஏற்கெனவே(வீட்டுலேயே முட்டி மோதி) தெரிஞ்சுக்கிட்டதால்  முதல் நாள் வகுப்போட நிப்பாட்டிக் கிட்டேன். அந்த நேரத்துக்கு ஒரு பதிவு எழுதிக்கலாம் இல்லெ?  பாருங்க என்னவோ சொல்லவந்து எங்கியோ போயிட்டேன்!





பழங்காலத்துக் கலையை இப்ப மாடர்ன்காலக் கலையா மாத்திக்கிட்டு பலர் புது முறையில்  இந்தக் கைவேலைகளை  தையல்மெஷீன்  வச்சுச் செய்யறாங்க.  கையில் தைச்ச காலம் போயே  போச்.  இதுக்கான துண்டுத் துணிகள் விற்கும் கடைகள்கூட இருக்கு!  துண்டுத்துணிகள்  கேட்டு வாங்கிக்க டெய்லர் கடைகள் என்ற அந்தக் காலத்துச் சமாச்சாரம் கூட  இப்ப இங்கே இந்த நாட்டுலே இல்லவே இல்லை.  வீடுகளில் தன் குடும்பத்துக்குத் தைச்சுக்கறவங்க உண்டு.



இந்தக் கலைகளில் தேர்ந்தவர்களின் கலைப்படைப்பை ஒரு பெரிய ஹாலில் தொங்கவிட்டுருக்காங்க. ஒவ்வொன்னும் ஒரு அழகு!  கண்காட்சி முடிஞ்சதும் படைப்புகள் உரியவர்களுக்குப்போய்ச் சேர்ந்துரும்.  இந்த  மாதிரி கடன் வாங்கி காட்சிக்கு வைப்பது இங்கே பரவலாத்தான் இருக்கு! ரொம்பவே கவனமெடுத்து,  கடன் வாங்கிய பொருட்களைப் பத்திரமாத் திருப்பிக் கொடுப்பதுடன்,  காட்சிக்கு வைக்கும்போது  கடன் கொடுத்தவரை  சரியான முறையில் acknowledge செய்வதாலும்  கடன் கொடுக்க ஆர்வமாக இருப்பவர்களே இங்கு அதிகம்.



ரெட்டை இலை எங்களுக்கில்லை!  ரெட்டைப்பூக்கள்தான்:-)

இன்னொரு இடத்தில் மூன்று பெரிய  மேஜைகளைப்போட்டு ரெண்டுபக்கமும் இருக்கைகளைப்போட்டு வச்சுருந்தாங்க. மேஜைகளில்   Kerry Ann Lee என்ற கலைஞரின்  Knowledge on a beam of starlight என்ற தலைப்பில் உள்ள படங்களை கண்ணாடிக்கு அடியில் வச்சுருந்தாங்க. ஏராளமான வெள்ளைக் காகிதங்களும், பென்ஸில்களுமாக ஒரு பக்கம் குவிச்சு வச்சுருந்தாங்க. நம்முடைய  படம்  வரையும்  ஆர்வத்தை (!)  வளர்க்குறாங்களாம்.


எங்கே அவுங்க மனசு நோகுமோன்னு நானும் ஒரு சின்னப் படத்தை  வரைஞ்சுக்கிட்டேன். அவுட்லைனை  ஜஸ்ட் ட்ரேஸ் எடுக்கும் வகைதான். அதுக்கப்புறம்  நகாசு நாம் செஞ்சுக்கலாம் என்றாலும், வரவர கை நடுக்கம் அதிகமாவது படத்தைப் பார்த்தாலே புரிஞ்சுரும்:-)

ஓவியங்கள்  ஒரு பக்கம்  இருந்தன.  அதில் புது வருசம் பிறக்கும் ஓவியத்தின் கற்பனை அபாரம்! பழைய வருசம்  தண்ணீரில் (!!)மூழ்கவும், புதுவருசம்  பிறந்து வெளிவரவும் சரியாஇருக்கு! The death of  the year (1910-1912)   ஓவியர்  சார்லஸ் ஸிம் வரைஞ்சே  நூறு வருசத்துக்கு மேல் ஆச்சு!


ஹம்மா....  எவ்ளோ பெரிய மரம்!  மனிதக் கால்கள் படாத இடத்தில் எப்படி  முளைச்சு நின்னுருக்கு பாருங்க!!!  வெட்டஎப்படித்தான் மனம் வந்துச்சோ:(

இன்னொரு பகுதியில்  'மென்   மோர் மென் வாண்ட்டட்'னு இருக்கேன்னு விசாரிச்சால்  உலகப்போரில் கலந்துக்க ஆண்கள் தேவையாம்!  சின்ன நாட்டுலே இருந்து  சண்டைக்கு ஆள் சேகரிப்பு. பட்டாளத்துலே சேருங்கன்னதும் போய்ச் சேர்ந்தவங்க, கடைசியில் போயே சேர்ந்துட்டாங்க:(  வீடு திரும்பியவர்களை விரல்விட்டு எண்ணிடலாம்.........





நாங்க  டெ பாபா பார்க்கப் போனது  ஏப்ரல் மாசம் அஞ்சாம் தேதி.  இந்த ஏப்ரல் மாசம் ஒரு புனிதமான(!!?) மாசம் நியூஸியைப் பொறுத்தவரை.  அதுவும் ஏப்ரல் 25 தான் ரொம்பவே புனிதம்.  அரசு விடுமுறை நாள். 'உலகப்போரில் கலந்துக்கக் கிளம்பி வா,ன்னு  பிரிட்டிஷ் அரசு சொன்னதும், என்ன ஏதுன்னு வாயைத் திறந்து கேக்காமல் மஹாராணியின் உண்மைப் பிரஜைகளா  உடனே கிளம்பிப்போய், தவறான இடத்தில் ( Gallipoli  ) ஆப்டுக்கிட்டு  எதிர்பாராத வகையில்  2721 வீரர்களை களப்பலி கொடுத்த நாள்  இந்த ஏப்ரல்  25. நாங்க மட்டுமில்லை, இந்த பலியில்  8709 அண்டைநாட்டு ஆஸித் தலைகளும் உருண்டதே மிச்சம்.


 Australian and New Zealand Army Corps (ANZAC) நாள் என்று  படைவீரர்களின் நினைவுநாளாக  நியூஸியிலும் ஆஸியிலும் அனுசரிக்கிறோம்.  இந்த சம்பவம் நடந்து  சரியா 100 வருசம் ஆகப்போகுது இன்னும் இருபதே நாட்களில். அதற்காகப்  பெரிய அளவில்  டெ பாபாவில்  ஒரு  பகுதியில்  கல்லிப்போலி என்று சரித்திர சம்பவங்களைக் காட்சிப்படுத்தப் போறாங்க. அதற்கான ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு இப்ப.

நூறாவது நினைவு நாளுக்கு ஒரு வாரம் முன்பாகவே  ஏப்ரல் 18, 2015 க்கு பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கறாங்க.  மூணு வருசம்வரை (2018)  இதைக் காட்சிக்கு வைக்கப்போறாங்க. (பார்க்கலாம் இன்னொருமுறை வெலிங்ட ன் போக வாய்ப்புக் கிடைக்குமான்னு!) நேரில் காட்சியைக் காண வரமுடியாதவர்களுக்கா   வலையிலே கொஞ்சம் பார்த்துக்கும்படியான ஏற்பாடும் இருக்கு.  ஆர்வம் உள்ளவர்கள் இங்கே எட்டிப் பார்க்கலாம்.

கல்லிப்போலி  டெ பா(ப்)பா


வே(ட்)டா வொர்க்ஷாப் டைரக்டர் ஸர். ரிச்சர்ட் டேலர்  தன்னுடைய  குழுவினரோடு தீவிரமா இதில் ஈடுபட்டு வேலைகள் மளமளன்னு நடக்குது. இப்போதைய  இளையதலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் ரொம்ப நல்லாவே செட் அமைச்சுச்  செஞ்சுக்கிட்டு இருக்காங்க.

கீழே படத்தில் செட்டில் ஸர். ரிச்சர்ட் டேலர் (Sir Richard Taylor)

கடைசியா ஆறாவது தளத்துக்குப் போனால்....  பார்க்க அவ்வளவா அதிகம் ஒன்னுமில்லை.  ஆனால் அத்தனையும் பொக்கிஷம்!  எல்லாமே  நூறு வயசுக்கு மேலான  அரும்பொருட்கள்! கலெக்ட்டர்ஸ் ஐட்டம்ஸ்.



அங்கேயே  கட்டிடத்தின்  வெளியே வியூ பார்க்க ஒரு மொட்டை மாடி! கதவைத் திறந்ததும் காத்து அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது!   இந்த யானையையே  தூக்குதுன்னா பாருங்க!



இதுதான் டெ பா(ப்)பாவின் லோகோ!

டெ பா(ப்)பாவில்  சில கண்காட்சிகள் நிரந்தரமாக வச்சுருந்தாலும், சில  கால மாற்றத்துக்கு ஏத்தமாதிரி தாற்காலிகமாகவும்  இருக்கு. என்னதான் தாற்காலிகம் என்றாலும் அதுவும் குறைஞ்சது 6 மாசமாவது இருக்கும்தான்.  இப்போதைக்கு மொத்தம் 21கண்காட்சிகள்  அங்கே!

 Contraception என்று  குழந்தைப் பிறப்பைக் கட்டுப்படுத்த  இதுவரை  என்னென்ன ஏற்பாடுகள் நடந்ததுன்னு  சொல்லும் பகுதியும் (Discover the hidden history of birth control in New Zealand ) நாலாவது மாடியில் இந்த மே மாசம் ஆரம்பிச்சு இப்போ நடந்துக்கிட்டு இருக்கு!  இதுவும் வரும் ஜனவரி வரை  6 மாசத்துக்கு இருக்கும்.
நமக்குத்தான் நேரம் இருக்கணும் எல்லாத்தையும் ஒன்னுவிடாமல் பார்த்து முடிக்க:-(

நாமும் அங்கே வெறும் அஞ்சு மணி நேரம்தான் இருந்தோம்.  கால் வலி கட்டாயம் வரும் என்று தெரிஞ்சுதான் எல்லா தளங்களிலும்  இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க.  ஆனாலும்...........

கீழே இறங்கி வரும்போது  இன்ஃபோ டெஸ்க்கில்  தினமும் வரும்  பார்வையாளர்கள் எண்ணிக்கையை விசாரிச்சேன். சராசரியா தினமும் மூவாயிரம் பேர் வர்றாங்களாம். ஆனால் இன்றைக்கு ஆறாயிரம் , ஈஸ்ட்டர் ஹாலிடே பாருங்க,  என்றார்!  சின்ன நாட்டுலே ஆறாயிரம் என்பது  பயங்கரக்கூட்டம்தானே! அதுதான் எங்கே பார்த்தாலும்  மக்கள் வெள்ளமா இருந்துச்சா:-)

ஒன்னு  நினைவு வச்சுக்கணும், வருசம் 365  நாட்களும்  டெ பா(ப்)பா  திறந்து இருக்கு!

லாங்க் வீக் எண்டு வந்தால்  ஏர்நியூஸிலாந்து  நல்ல சலுகை விலையில் டிக்கெட்டுகளை அள்ளி விடுது. என்ன ஒன்னு, ரெண்டு மூணு மாசத்துக்கு முன் புக் பண்ணிக்கணும். மக்கள்ஸ் இங்கே அங்கேன்னு உள்நாட்டுக்குள் பயணம் போக ரொம்பவே வசதி. இதே சலுகையில் ஹொட்டேல்ஸ் கிடைச்சால்.......   கனவு காணலாம்:(


மணிக்கு 4 என்னும் கணக்கில்  20 டாலர்  கார் பார்க்கிங்  காசு கட்டுன்னு மெஷீன் சொல்லுச்சு. கட்டிட்டு வெளியே வந்தோம்.

டெ பா(ப்)பாவை ஓரளவாவது பார்க்க முடிஞ்சதே என்ற திருப்தியும்,  இன்னொருக்கில் ஆகட்டே என்ற நம்பிக்கையும் ஒரே சமயம் வந்துச்சு:-)

தொடரும்............:-)

18 comments:

said...

தானே கற்றுக் கொள்ள திறமை இருக்கும் போது வகுப்பு எதற்கு அம்மா...

அழகான ஓவியங்கள் + படங்கள் அனைத்தும் அசத்தல்...

said...

படங்கள் அத்தனையும் அருமை! நீங்களும் நன்றாகத்தானே வரைந்திருக்கின்றீர்கள் சகோதரி! நகாசு வேலை செஞ்சு ஃபோட்டோ புடிச்சு போடுங்க.....விளக்கங்களும் வழக்கம் போல செம! அந்த ஓவியங்கள், ஆர்ட் படங்கள் மனசை அள்ளுது......

கடல்படங்களும் ரொம்ப அழகா இருக்குங்க.....இப்படி நீங்கள் எழுதுவது பல ஊர்களை வெளிநாட்டைப் பார்க்க முடியுது உங்கள் மூலம்.....

said...

கலை, வரலாறு, தொழில்நுட்பம் அனைத்தையும் கலந்த ஒரு சுற்றுலாப் பதிவு. நன்றி.

Anonymous said...

நியூசிலாந்து பத்தியும் டெ பாபா பத்தியும் இந்த பாப்பாவுக்கு (நாந்தேன்)புரிய வச்சதுக்கு நன்றி.

said...

”இன்னொருக்கில் ஆகட்டே”....

நமக்கு எவ்வளவு பார்த்தாலும், இன்னும் கொஞ்சம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் எப்போதுமே..... இல்லையா டீச்சர்! :)

சமீபத்தில் ஒரு பயணத்தில் ஒரு தொல்பொருள் காட்சியகத்திற்கு போனபோது மூன்று மணி நேரம் சுற்றிப் பார்த்தும் மனதில் திருப்தி இல்லை இன்னுமொரு முறை போக வேண்டும் என்று எண்ணியபடியே திரும்பினேன்!

அருமையான தகவல்கள் மற்றும் படங்கள்!

said...

அற்புதம் !!!

said...

எவ்வளவு பெரிய பில்டிங். சுத்திப் பாத்தாலே தலை சுத்திரும் போல.

அந்தத் துணி டிசைன்கள் மிக அழகு.

Gallipoliக்கு நான் போயிருக்கேன். துருக்கியில் இருக்கு. வேலை விஷயமா இஸ்தான்புல் போயிருந்த சமயம் அங்க எட்டிப் பாத்திருக்கேன். அங்க இறந்த வீரர்களுக்கான கல்லறை, நினைவுச்சின்னம் எல்லாம் வெச்சிருக்காங்க. அதுல சில இந்தியப் பெயர்களும் இருந்தது. அது பக்கத்துல தான் டிராய் இருக்கு.

அந்த ஓவியத்துல மாதுளம்பழம் மிக அழகு. மிக இயல்பு. நேர்ல பாக்குற மாதிரியே இருக்கு.

said...

காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் துணி வேலைப்பாடுகள் ஒவ்வொன்றும் அற்புதம். பகிர்வுக்கு நன்றி.

said...


அடேங்கப்பா அருமையான புகைப்படங்கள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

என்ன திறமை இருக்குங்கறீங்க? ஒவ்வொன்னும் கற்றுக்கொள்ள முட்டிமோதி தலையாலே தண்ணீர் குடிச்சாறதே இந்த ககைநாவுக்கு!

ககைநா= கணினி கை நாட்டு (இதுக்குக் காபிரைட் என்னிடம்தான்:-)

said...

வாங்க துளசிதரன்.

ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

அவரவர் தங்கள் நாடுகளில் இருக்கும் விசேஷங்களைப் பகிர்ந்துகொள்வதால் எல்லா நாடுகளையும் ஓரளவாவது தெரிந்து கொள்ள முடியும் என்பதால்தான்.....இணையத்தில் உலாவத் தெரிந்துகொண்ட ஆரம்ப காலத்தில் (ஆச்சு பதினோரு வருடங்கள்) மரத்தடித் தோழி ஒருவர்தான் இந்த ஐடியாவையே கொடுத்தாங்க.நீங்கள் வசிக்கும் ஊரைப்பற்றி எழுதுங்கன்னு. உண்மையில் எல்லாப் புகழும் 'மதி கந்தசாமி' அவர்களுக்குத்தான் போய்ச் சேரணும்!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசித்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

said...

வாங்க உமா கணேஷ்.

வணக்கம். நலமா? முதல் வருகைக்கு நன்றி.

பாப்பாவைப் பத்திப் பாப்பாவுக்கே விளக்கும்படி ஆச்சு பாருங்க:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

என்னதான் திட்டம் போட்டுப் பயணம் செஞ்சாலும், இன்னொருக்காப் பார்க்க கொஞ்சம் விட்டுவைக்கத்தான் வேண்டி இருக்கு:-)))

இதுலே மட்டும் திருப்தி என்பதே இல்லையாக்கும்,கேட்டோ!

said...

வாங்க சசி கலா.

ரசிச்சு வாசிச்சீங்கதானே!

நன்றீஸ்.

said...

வாங்க ஜிரா.

நாங்க இன்னும் அந்தப் பக்கம் போகலை. கோபாலும் எப்பவும் இஸ்த்தான்புல் ஜெபம் பண்ணிக்கிட்டே இருக்கார். போகணும்தான். பார்க்கலாம்.

இங்கே ஒவ்வொரு வருசமும் ஆன்ஸாக் தினத்தன்று கல்லிபோலியில் தங்கி மெமோரியல் சர்வீஸில் கலந்துகொள்ள ஒரு சுற்றுலாப் பயணம் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. அதுலே போகலாமான்னு கூடத் தோணும். பார்க்கலாம்.

நான் காசி காசின்னு ஜெபிச்சுக்கிட்டு இருந்த நாட்களில், இங்கே பல நியூஸி மக்கள் வாரணாசி போய் வந்ததைப் பற்றிச் சொல்லக் கேட்டுருக்கேன். அப்ப நினைச்சுக்குவேன்.... நமக்கு அவ்ளவோ புண்ணியம் இல்லை போல கங்கையைப் பார்க்கன்னு.

அதைப்போலத்தான் இப்பவும் நினைப்பு வருது.... நீங்க போயிருக்கீங்க கல்லிபோலிக்கு. எனக்கு அந்த பாக்கியம் இல்லை போல!

உலகப்போர்களில் ஏராளமான இந்தியமக்களும் உயிர் இழந்தாங்கதான். அவர்களின் விவரங்கள் சரியா தொகுக்கப்பட்டு இருக்குமான்னு லேசா ஒரு சம்ஸயம் வருதே:(

said...

வாங்க ராமலக்ஷ்மி.

எவ்ளோ பொறுமையா அந்தத் தையல் வேலைகள் செஞ்சுருக்காங்கன்னு பார்த்தால் பிரமிப்புதான் எனக்கும்!

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க கில்லர்ஜி.

ரசனைக்கு நன்றிகள்.

இந்த 'அடேங்கப்பா' என்ற சொல்லைக் கேட்டதும் கணேச மாமா (நண்பரின் தந்தை) நினைவு வந்துருச்சு. அவர்தான் பூனாவுக்கு வந்த புதிதில் எதுக்கெடுத்தாலும் அடேங்கப்பான்னு வியப்பில் சொல்வார். ஹிந்தி தெரியாத அவருக்கு நாந்தான் மொழிபெயர்ப்பாளர் அப்போ! நான் முட்டிமோதி ஹிந்தி 'பேச' கற்றுக்கொண்டதே ஒரு வரலாறுதான்:-))) ஹிந்தி எழுதவும் எழுத்துக்கூட்டிப் படிக்கவும் மட்டும் தெரியுமே தவிர பேசத்தெரியாத ஒரு வகையில் இருந்தேன்:-)