Wednesday, September 30, 2015

ஜலமா இல்லே ஸ்தலமா ? ...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 82)

இன்றைக்குப் பாண்டிச்சேரியில் இருந்து கிளம்பறோம். நம்ம அறை ஜன்னலுக்கு எதுத்தாப்லே  அம்மன் கோவில் ஒன்னு.  சிம்ஹவாஹினிக்கு இங்கிருந்தே ஒரு கும்பிடு. கடமைகள் முடிச்சு   காலை உணவுக்குப் போனோம்.  எத்தனை ஸ்டாரா இருந்தால் நமக்கென்ன?
இட்லி, வடை கூடவே கொஞ்சம் பொங்கல். ஒன்பது மணிக்கு செக்கவுட் செஞ்சுட்டு நேரா மாமல்லபுரம்.  ஒன்னரை மணி நேரமாச்சு. தூரம்  95 கிமீ.  சாலை அருமையா இருக்கு.




திருக்கடல் மல்லை.  ஸ்தலசயனப் பெருமாள் கோவில்.  இதுவும்  அந்த நூற்றியெட்டில் ஒன்னு!


பலிபீடம், தீபஸ்தம்பம், கொடிமரம், பெரிய திருவடிக்கான சந்நிதி கடந்தால் எதிரில் நூற்றுக்கால் மண்டபம்!

ஒரு சமயம்....  இங்கே தாமரைப்பூக்கள்  ஏராளமாப் பூத்து நிற்கும் பொய்கை இருந்தது. இங்கே ஆசிரமக்குடில் ஒன்னு கட்டி தவம் செஞ்சுக்கிட்டு இருந்தார்  புண்டரீக மகரிஷி.  புண்டரீகம் என்ற சொல்லுக்கே  தாமரை என்றுதான் பொருள்!  தாமரைக் குளத்தாண்டை  குடில் இருந்ததால் கூட இவருக்குப் புண்டரீக மகரிஷி என்ற பெயர் வந்துருக்கலாம்!   தாமரையின் அழகைப் பார்த்தவர், இவையெல்லாம் எம்பெருமாளுக்கேன்னு நினைச்சு  பூக்களைப் பறிச்சு ஒரு கூடையில் எடுத்துக்கிட்டுப் பாற்கடலில் பள்ளிகொண்டவனைத் தேடிப்போறார்.  குறுக்கே வந்தது   வெறுங்கடல். இதைத் தாண்டினால்தான் பாற்கடல் வரும் போல!  எப்படித் தாண்டிப்போறது?  யோசிச்சார். ஐடியா கிடைச்சிருச்சு.

பேசாம, இந்தக்  கடல் தண்ணீரைக் கோரி அப்பாலிக்கா ஊத்திட்டா  கடலின் அடியில் தரை தெரியும். அதன் வழியே நடந்தால் பாற்கடல் போய்ச்  சேர்ந்துடலாமே!  ஆஹான்னு  ஒரு ஓரமா உக்கார்ந்து தன் கைகளால் கடல் தண்ணீரை  அள்ளி இந்தாண்டை ஊத்த ஆரம்பிச்சார்.

பக்தி மனசுக்கு  இது நடக்கற வேலையான்னு கூட  சந்தேகம் துளிகூட வரலை.  நாட்கள், மாதங்கள், வருசங்கள்ன்னு கடந்து போய்க்கிட்டே இருக்கு. வேற ஒரு கவனமும் இல்லை.... இவருக்கு.  ஒருநாள் கை வலி பொறுக்கமுடியாமல் போய் ஒரு  நிமிசம்  தண்ணி அள்ளப்போன கைகள் அப்படியே நின்னுச்சு.

அப்ப அங்கே ஒரு  கிழவர் வந்தார். 'கடலாண்டை உக்காந்துக்கிட்டு என்ன செய்யறீர்'னு  ரிஷியைக் கேட்க,  'கடல்தண்ணியை இறைச்சு  ஊத்திட்டு,  கடல்தரையில் நடந்துபோய்  பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாளை ஸேவிச்சு  இந்தத் தாமரைப் பூக்களை  அவருக்குச் சமர்ப்பிக்கணும். அதான்.......'

"அதுவரைக்கும் இந்த பூக்கள் வாடாம இருக்குமா என்ன?"

"அதெல்லாம் பெருமாள் பார்த்துக்குவார். பறிக்கும்போதே இது பெருமாளுக்குன்னு சொல்லிட்டேன். இனி அவர் பொறுப்பு."

"ஓ....   அதுவும் சரிதான்.  ஆமாம்....தனியா உக்கார்ந்து  சிரமப்படுகின்றீரே  ஐயா. நான் வேணுமுன்னா கூடச்சேர்ந்து தண்ணியை இறைக்கவா?"

"இது என்ன கேள்வி?  கமான் ஹெல்ப் மீ."

"ஆனால் எனக்கு இப்போ பசி அதிகமா இருக்கே. மயக்கம் வர்றது .....  எனக்கு எதாவது  சாப்பாடு கொடுத்தால்  அதை உள்ளே தள்ளிட்டு உமக்கு உதவுவேன்..."

"முதல்லே இந்த வேலை முடியட்டும்...  உமக்கு சோறு  போடறேன்."

"அப்படிச் சட்னு முடியுமா? கொலைப் பசி வேற.  இந்த பாவம் உமக்கு வந்துடப் போகுது...."

"அப்டீங்கறீர்?  சரி. இந்த பூக்கூடையைப் பத்திரமாப் பார்த்துக்கும். நான் போய் உமக்கு எதாவது கொண்டு வரேன்...."

கிளம்பி ஊருக்குள் போய்  கொஞ்சம் சாப்பாடு வாங்கி வர்றார். வந்து பார்த்தால்....  பூக்கூடையையும் கிழவரையும் காணோம். அப்புறம்?  கடலில் தண்ணியைக்கூடக்  காணோம். ஹா....  தரை பளிச்ன்னு  கிடக்கு.
அதுலே இறங்கி விடுவிடுன்னு நடந்து போறார்.  தூரக்கே  பாற்கடல் வெள்ளையாத் தெரிஞ்சது.  அதில்....

அதில்?

கிழவர்  ஒய்யாரமாப் படுத்திருக்க, அவரை அலங்கரிக்கும் கூடைத் தாமரைப் பூக்கள்!

"பெருமாளே.... நீரா?  நீரா?"

இதே போல  அனைவருக்கும் எப்போதும் சிம்பிளாக ஸேவை சாதிக்கணும் என்று கேட்டுக்கிட்டார்.  அதே போல் ஆச்சு.

பாம்புப் படுக்கை இல்லாமல் வெறும் தரையில்  கிழக்கு நோக்கிக் கிடந்த கோலம்!

ஜல சயனப்பெருமாள் என்றுதான்  பெயர்!  எப்போ இப்படி ஸ்தல சயனப்பெருமாள்  ஆனாருன்னே தெரியலை!  உற்சவருக்கு இங்கே உலகுய்யநின்றான்  என்று நாமம்.  கையில் ஒரு தாமரைப்பூவுடன் நிக்கறார். இந்த நூற்றியெட்டு திவ்யதேசங்களில் கையில் தாமரையுடன் நிற்பவர் இவர் மட்டும்தானாம்!   ரொம்ப விசேஷமாச் சொல்றாங்க.  தாயார் நிலமங்கை என்ற பெயருடன்!  பூதேவி!

ஆதியில் ஒன்பதாம் நூற்றாண்டில் கடற்கரையிலேயே பல்லவர்கள் கட்டிய கோவில் இருந்ததாகவும்,  அதன்பின் இப்போ இருக்கும் கோவில் பதினாலாம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் பராங்குசன் என்பவரால் கட்டப்பட்டு, பிள்ளை லோகாச்சாரியார் முன்னிலையில் பெருமாளை இங்கே ப்ரதிஷ்டை  செஞ்சதாயும் கோவில் வரலாறு  சொல்கிறது.

ரொம்பப்பெரிய கோவில்னு சொல்ல முடியாது. மீடியம் சைஸ்தான். கோவிலில் எதோ விசேஷம் நடந்து முடிஞ்சுருக்கு போல .... ஓலைப்பந்தலுக்கான கம்பங்கள் அங்கங்கே...

கதவுகள், நிலைவாசல் இப்படிக் கொஞ்சம்  வுட் ஒர்க் நடந்துருக்கு. தசாவதாரக் கதவு பரவாயில்லை.

இன்றைக்கு இங்கே  உண்டியல்  திறக்கறாங்களாம். பதினொரு மணிக்கு, அறநிலையத் துறை மக்கள்  வந்துருவாங்க.  இன்னும்  ஒரு 20 நிமிசம்தான் இருக்குன்னாலும்....  வேடிக்கை பார்க்கணுமுன்னு தோணலை. அவ்வளவு  வருமானம் வரும் கோவிலாத் தெரியலை.  பாவம்.... பெருமாள். அவருக்குக் கிடைக்கும் கொஞ்சத்தில் அரசு பங்கு போட்டுக்குது :-(

பூதத்தாழ்வார்  அவதாரம் செய்த ஊர் இது. அவரும்,  திருமங்கை ஆழ்வாரும் பாசுரங்கள் பாடி  மங்களாசாஸனம் செஞ்சுருக்காங்க.


தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால், 
தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும் 
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே, 
ஏவல்ல எந்தைக் கிடம். 

இப்படி நம்ம பூதத்தாழ்வார் சிம்பிளா ஒரு பாட்டு பாடி இருக்கார்!



ஆனா  நம்ம திருமங்கை?

பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப்
பாடுகடலி லமுதத்தைப் பரிவாய்கீண்ட
சீரானை, எம்மானைத் தொண்டர்தங்கள்
சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை,
போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப்
புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை,
காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தைக்
கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.....

இப்படி திருமங்கை ஆழ்வார் பாடியது,  திருநின்றவூர் பக்தவத்ஸலன் அவரைத் துரத்திக்கொண்டு வந்து, 'அங்கே வாயத்திறக்காமல்  வந்துட்டீரே... இப்ப  பாட்டு வாங்கிண்டு போக வந்துருக்கேன். இல்லைன்னா  மனைவியிடம் பாட்டு  வாங்க வேண்டி இருக்கும்' என்று கெஞ்சியதால்தானாம்!

பக்தவத்ஸலனுக்கு  ஒரு பாட்டைக் கொடுத்து அனுப்பிட்டு, நின்னு நிதானமாக

1
பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப்
பொய்நூலை மெய்நூலென்று மோதி
மாண்டு அவத்தம்போகா தேவம்மின் எந்தை
எண்வணங்கப்படுவானை கணங்களேத்தும்
நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்றவூர் நித்திலத் தொத்தூர் சோலை
காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல் மல்லை தலசயனத்தே'

2
உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய்
உலகுய்ய நின்றானை,அன்றுபேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து
விளையாட வல்லானை வரைமீகானில்,
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில்
தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும்,
கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடன்fமல்லைத் தலசயனத்தே.

3
பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப்
பிணைமருப்பில் கருங்களிற்றைப் பிணைமான்னோக்கின்,
ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை
அந்தணர்தம் அமுதத்தைக் குரவைமுன்னே
கோத்தானை, குடமாடு கூத்தன்றன்னைக்
கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

4

பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப்
பாலகனா யாலிலையில் பள்ளியின்பம்
ஏய்ந்தானை, இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன
ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை,
தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப்
பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக்
காய்த்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

5
கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக்
கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னே
படர்ந்தானைப், படுமதத்த களிற்றின்கொம்பு
பறித்தானைப் பாரிடத்தை எயிறுகீற
இடந்தானை, வளைமருப்பி னேனமாகி
இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம்
கடந்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

6
பேணாத வலியரக்கர் மெலியவன்று
பெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்க்கோனை,
பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனைப்
பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
ஊணாகப் பேய்முலைநஞ் சுண்டான் தன்னை
உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை,
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடன்fமல்லைத் தலசயனத்தே.

7
பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப்
பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை,
தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும்
தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி,
என்ணானை யெண்ணிறந்த புகழினானை
இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட
கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

8
தொண்டாயர் தாம்பரவு மடியினானைப்
படிகடந்த தாளாளற் காளாயுய்தல்
விண்டானை, தென்னிலங்கை யரக்கர்வேந்தை
விலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு,
பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து
வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும்
கண்டானை, தொண்டனேன் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

இப்படிக் கடல்மல்லைத் தலசயனத்தேன்னு முடியும் எட்டுப்பாடல்களுடன், தலசயனத்துப்பெருமாளுக்காக இன்னும் ஒரு பதினோரு பாடல்களுமா மொத்தம் இருபது பாடல்கள் இங்கே பாடி இருக்கார்.

திருமங்கை ஆழ்வாரிடம் பிடிச்ச விஷயமே இதுதான்....   எந்தப்பெருமாளைப் பார்த்து அனுபவிக்கறாரோ.... அங்கே மடை திறந்த வெள்ளம்போல் பாட்டுகளை  பாடித் தீர்த்துருவார்! இங்கிருந்து போனபின்பும்  இந்தப் பெருமாளை நினைச்சு இன்னும் ஆறு பாடல்களும் பாடினார்.  ஆக மொத்தம் ஸ்தலசயனப் பெருமாளுக்கு  இருபத்தியேழு பாசுரங்கள்.


1
படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப்
படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி,
தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்
தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை,
கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க்
கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல்,
திடமாக விவையைந்து மைந்தும்வல்லார்
தீவினையை முதலரிய வல்லார்தாமெ.

2
நண்ணாத வாளவுண
ரிடைப்புக்கு, வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும்
பெருமானார், மருவினிய
தண்ணார்ந்த கடல்மல்லைத்
தலசயனத் துறைவாரை,
எண்ணாதே யிருப்பாரை
யிறைப்பொழுது மெண்ணோமே.

3
பார்வண்ண மடமங்கை
பனிநன்மா மலர்க்கிழத்தி,
நீர்வண்ணன் மார்வகத்தி
லிருக்கையைமுன் நினைந்தவனூர்,
கார்வண்ண முதுமுந்நீர்க்
கடல்மல்லைத் தலசயனம்,
ஆரெண்ணும் நெஞ்சுடையா
ரவரெம்மை யாள்வாரே.

4
ஏனத்தி னுருவாகி
நிலமங்கை யெழில்கொண்டான்,
வானத்தி லவர்முறையால்
மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள,
கானத்தின் கடல்மல்லைத்
தலசயனத் துறைகின்ற,
ஞானத்தி னொளியுருவை
நினைவாரென் நாயகரே.

5
விண்டாரை வென்றாவி
விலங்குண்ண, மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம்
அழலேற வெஞ்சமத்துக்
கண்டாரை, கடல்மல்லைத்
தலசயனத் துறைவாரை,
கொண்டாடும் நெஞ்சுடையா
ரவரெங்கள் குலதெய்வமே.
6
பிச்சச் சிறுபீலிச்
சமண்குண்டர் முதலாயோர்,
விச்சைக் கிறையென்னு
மவ்விறையைப் பணியாதே,
கச்சிக் கிடந்தவனூர்
கடல்மல்லைத் தலசயனம்,
நச்சித் தொழுவாரை
நச்சென்றன் நன்னெஞ்சே

7
புலன்கொள்நிதிக் குவையோடு
புழைக்கைமா களிற்றினமும்
நலங்கொள்நவ மணிக்குவையும்
சுமந்தெக்கும் நான்றொசிந்து,
கலங்களியங் கும்மல்லைக்
கடல்மல்லைத் தலசயனம்,
வலங்கொள்மனத் தாரவரை
வலங்கொள்ளென் மடநெஞ்சே.

8
பஞ்சிச் சிறுகூழை
யுருவாகி, மருவாத
வஞ்சப்பெண் நஞ்சுண்ட
அண்ணல்முன் நண்ணாத,
கஞ்சைக் கடந்தவனூர்
கடல்மல்லைத் தலசயனம்,
நெஞ்சில் தொழுவாரைத்
தொழுவாயென் தூய்நெஞ்சே.

9
செழுநீர் மலர்க்கமலம்
திரையுந்த வன்பகட்டால்,
உழுநீர் வயலுழவ
ருழப்பின்முன் பிழைத்தெழுந்த,
கழுநீர் கடிகமழும்
கடல்மல்லைத் தலசயனம்,
தொழுநீர் மனத்தவரைத்
தொழுவாயென் தூய்நெஞ்சே.

10
பிணங்களிடு காடதனுள்
நடமாடு பிஞ்ஞகனோடு,
இணங்குதிருச் சக்கரத்தெம்
பெருமானார்க் கிடம்,விசும்பில்
கணங்களியங் கும்மல்லைக்
கடல்மல்லைத் தலசயனம்,
வணங்குமனத் தாரவரை
வணங்கென்றன் மடநெஞ்சே.

11
கடிகமழு நெடுமறுகில்
கடல்மல்லைத் தலசயனத்து,
அடிகளடி யேநினையு
மடியவர்கள் தம்மடியான்,
வடிகொள்நெடு வேல்வலவன்
கலிகன்றி யொலிவல்லார்,
முடிகொள்நெடு மன்னவர்தம்
முதல்வர்முத லாவாரே.


இந்தப் பெருமாளை ஸேவித்தால், திருப்பாற்கடல்  ஸ்ரீ வைகுண்டநாதனையே ஸேவித்த பலன் கிடைக்குமாம்!  நமக்கும் கிடைச்சதேன்னு  மகிழ்ச்சிதான்.
அஞ்சு நிலை ராஜகோபுர நுழைவு வாசலில் தொடங்கிருது ,சிற்பங்களின் வரிசைகள்.  சும்மா அப்படியே  கண்ணில் ஒத்திக்கும் வகையில் செதுக்கித்தள்ளி இருக்காங்க அந்தக் கால சிற்பிகள்!


மாசி மகத்துக்கு இங்கே கடல்மல்லையில் தீர்த்தமாடினால் (நான் சொல்றது  கடலில் முங்கிக் குளிப்பதை!)  காசி , ராமேஸ்வரத்தில் நீராடுவதற்குச் சமமாம்.  ச்சும்மாப்போய் கும்மோணத்து மஹாமகக்குளத்தில் கூட்டம் போடவேணாம்னு  பொருள்!

கோவில் திறந்துருக்கும் நேரம் காலை 7 முதல் 12. மாலை  3 முதல் 8 வரை.

இப்படி மூணு மணிக்குத் திறக்குறாங்கன்னு தெரியாம, பலமுறை மகாபலிபுரம் போயிருந்தாலும் கோவில்கள் அஞ்சு மணிக்குத் திறப்பாங்கன்னு நினைச்சுக் கோட்டை விட்டுருக்கேன். அப்புறம்  சிலமுறை  காலை நேரங்களில்  போனதும் உண்டு.  ஊருக்குள்ளே போனதும் முதலில் கோவிலுக்குப் போயிட்டு, அப்புறமா கடற்கரைக் கோவில்களைப் பார்க்கணுமுன்னு இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்.

இன்னும் ஒரு கோவில் (பூஜைகள் நடக்கும் கோவில்தான்) இங்கே இருக்குன்னாலும்  இதுவரை அங்கே போக வாய்க்கலையேன்னு  கிளம்பினோம்.

தொடரும்.......:-)


Monday, September 28, 2015

தங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். எட்டாம் நாள் )

இன்றே இப்படம் கடைசி:-)  ஆறு மணிக்கெல்லாம் தூக்கம் போச். சூரியன் வர்றதுக்கே  இன்னும் அரைமணி இருக்கு. காஃபியை முடிச்சுக்கிட்டுக் கீழே போனோம். இன்னும் செய்தித்தாள் வரலை. ஆனால் அக்வேரியஸ் ஆஃபீஸிலே  லைட் எரியுது.  ஓனர்  என்னவோ வேலை செஞ்சுக்கிட்டு இருக்கார்.  முதல்நாள் கணக்கு வழக்கையெல்லாம் பார்க்கிறாராம்.  இங்கேயே அவருக்கும் வீடு என்பதால் தினமும் காலையில் ஒரு மணி நேரம் வேலை செஞ்சுருவாராம்.

 மாசக்கணக்குலே வாடகைக்கு  விடறாரான்னு கேட்டு வச்சுக்கிட்டோம்.  அவுங்க ஏஜென்டுகள் மூலம் வர்றதுதான் மலிவாம். கொஞ்சம்  விவரங்களும் கொடுத்தார்.  அப்படியே கடற்கரை வாக்.  இன்றைக்குக் கிளம்பறோம் என்பதால்  எதைப் பார்த்தாலும் ரொம்பவே நல்லா இருப்பதுபோல் ஒரு தோணல்.



யாரும் யாருக்காகவும்  காத்திருப்பதில்லை என்பதைப்போல்  அஞ்சரையில் இருந்து  கடல்மண் சுத்தம், ஆறரைக்கு, சூரியன்,   ஏழே முக்காலுக்கு லைஃப்கார்ட்ன்னு  தானாய் எல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு.  எட்டரைக்கு அறைக்குத் திரும்பினோம்.
கோல்டன் ஸாண்ட் வேணுமுன்னு  வேறெங்கிருந்தோ தங்கமணலைக் கொண்டுவந்து  பீச்சில்  நிரவி வைக்கறாங்க.


பேசாம இன்னிக்கு  திமிங்கிலம் பார்த்துட்டு, ரெண்டு மணிக்குக் கிளம்பலாமான்னார் நம்மவர்.  'இல்லை. என்னுடைய தோழி ஒருவரின் மகளை சந்திக்கறதாச் சொல்லி இருக்கேன்.  அங்கிருந்து ஏர்ப்போர்ட் போகணும்.  எல்லாத்துக்கும் முன்னால் கொஞ்சநேரம் க்வீன் தெரு மாலில் சுத்தணும்' என்றேன்.

குளிச்சு முடிச்சு  ப்ரேக்ஃபாஸ்ட் எடுத்துக்கிட்டு,  அபார்ட்மென்ட் நாம் வந்தபோது எப்படி இருந்துச்சோ அதே போல் ஒழுங்கு படுத்தினோம். மிச்சம்மீதி  சாப்பாட்டுப் பொருட்களையும், குப்பைகளையும் சேகரிச்சு டிஸ்போஸ் செஞ்சோம். பேக்கிங் முடிஞ்சது. புத்தப் பாப்பாக்களை  ஹேண்ட் லக்கேஜில் வச்சாச்சு. உடையாமல் பத்திரமாக் கொண்டு போகணும்.




நம்ம  அபார்ட்மென்ட் பூராவும்  பட்ரீஸியா ஃபிட்ஸராய் என்ற ஓவியர் வரைஞ்ச படங்களால் அலங்கரிச்சு இருந்தாங்க. ஸிம்பிள் ட்ராயிங்ஸ். நல்லா நீட்டா இருக்கு. க்ளிக்ஸ் ஆச்சு.

பத்து மணிக்கு செக்கவுட் செஞ்சுட்டு கிளம்பி இதோ ப்ரிஸ்பேன் நகர் நோக்கிப் போறோம். இங்கே மோட்டர்வே / ஹைவேக்களில் சாலையின் ஓரங்களில்  மரப்பலகைகள் அடிச்சு சுவர் போல ஒரு அமைப்பு.  அதில் அழகழகான ஸீனரிகள், படங்கள் இப்படிக் கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கு!   கண்ட இடங்களில் மக்களும், மாடுகளும், நாய்களும் குறுக்கே போகாததால்.....  நூறு, நூத்திப்பத்துன்னு  வேகத்தில் பாய்ஞ்சு ஓடும் வண்டிகள் அதுபாட்டுக்குப் போகுது.





பதினொரு மணிக்கெல்லாம்  ப்ரிஸ்பேன் சிட்டியின் உயரக்கட்டடங்கள் கண்ணில் பட்டன. சௌத் பேங் ஜெயண்ட் வீல் இதோ!.   அங்கெல்லாம் போகப்போவதில்லை. நேரா க்வீன் தெரு மால்தான். மாலுக்குப் பக்கத்திலேயே பார்க்கிங் தேடி அலைஞ்சு  ஒரு வழியா அடுக்குமாடி பார்க்கிங்கில் இடம் கிடைச்சது.


ச்சும்மா ஒரு சுத்து.  இப்பெல்லாம் மார்கெட்  என்ற சமாச்சாரத்துக்கு மதிப்பு உயர்ந்துக்கிட்டுப் போகுது.  உழவர் சந்தை!  இங்கேயும்  கஸினோவுக்கு வெளியே இருக்கும் சதுக்கத்தில் இன்றைக்கு மார்கெட். நமக்கு வேண்டாத அத்தனை பொருட்களும் விற்பனைக்கு இருக்கு!  விதவிதமான வாழைப்பழங்கள்.  உள்நாட்டு சரக்குதான்.  இங்கே ஆஸியில் வாழைப்பழ இறக்குமதிக்குத் தடை உண்டு.

 இஞ்சி உடம்புக்கு நல்லதுன்னு  விளம்பரப்படம் எடுத்துக்கிட்டு இருந்தாங்க.

ஆர்ட்டிச்சோக், குடைமிளகாய், பூக்கள், பழங்கள் குறிப்பாக பப்பாளி இப்படி......

சாலையைக் கடந்து திரும்ப மாலுக்கு வந்தோம். டிஃபன்னீஸ்லே  வைரம் ஸேலில் இருக்கு. ச்சீச்சீ.....  ஒரே புளிப்பு  !


பகல் சாப்பாடு ஜோ ஜோவில் இருக்கட்டுமேன்னு போனோம்.  வியாபாரம் கைமாறி இருக்கு போல.  சமையல்கட்டில் எட்டிப்பார்க்கும் நாயைக் காணோம்.  கருப்பு சிறுத்தைகள் மட்டும்  இடம் மாறி உக்கார்ந்துருந்தாங்க. நாயைப் பற்றி விசாரிச்சால், 'நான் புதுசு. வேலைக்குச் சேர்ந்து ஒரு வருசம்தான் ஆகுது. நான் நாயையே பார்க்கலை'ன்னு சத்தியம் செய்யறாங்க டூட்டி மேனேஜர் அம்மிணி.
சாப்பாடும் நல்லாவே இல்லை. டோஃபுவை  அள்ளிப்போட்ட சமையல். பிஸினெஸை  சீனர்கள் வாங்கிட்டாங்க போல!



 புதன் கிழமைதான். ஆனாலும் மாலில் நல்ல கூட்டம்.   கிளம்பி கார்பார்க்கிங் வந்தோம். ரெண்டு மணி நேரத்துக்கு  45 டாலர் சார்ஜ்.  வயிறு எரிஞ்சு போச்சு.  ஒரு கார்பார்க் இருந்தால்  ஒரே வருசத்துலே பில்லியனர் ஆகிடலாம் இங்கே!

முகநூல் சகோவின் மகளைத் தேடிப் போனோம். மெடிக்கல் காலேஜ் மாணவி. செல்லம் போல் இருக்காங்க.  கந்த சஷ்டி கவசம், விஷ்ணு சகஸ்ரநாமம் எல்லாம் சொல்றாங்க. புள்ளையார் தான்  பிடிச்சவராம்.  என் மகளாகத்தான் நினைக்கத் தோணுச்சு.   ஒரு முக்கால்மணி நேரம்தான் சந்திப்பு.  ஆனால் எதோ பூர்வ ஜென்மத் தொடர்பா நினைக்கும்படி அமைஞ்சது. எனக்காக ஒரு பரிசுப்பொருள் கூட எடுத்து வச்சுக்கொடுத்த அன்பை மறக்க இயலாது.  இதேபோலத்தான் கோபாலும் நினைச்சாராம்.
கார் வரைக்கும் வந்து வழிஅனுப்பிய மகளைப் பிரியும்போது மனசுக்கு வலிச்சது உண்மை.
நேரா ஏர்ப்போர்ட்டுக்கே போயிடலாமுன்னு முடிவாச்சு.  20 கிமீ பயணம். டன்னல் வழியாகப் போகணும். டோல் ரோடுதான்.  ஏர்ப்போர்ட் உள்ளே பெட்ரோல் பங்க் இருக்குமுன்னு பார்த்தால்  இல்லை. வண்டியில் பெட்ரோலை நாமே நிரப்பிக் கொடுத்தால் நல்லது. இல்லைன்னா  அதுக்கு நிறைய சார்ஜ் செஞ்சுருவாங்கன்னார்  நம்மவர்.  பெட்ரோல் பங்கைத் தேடிக் கொஞ்சமா அலைஞ்சோம். நேவிகேட்டர்  இருந்ததால் தப்பிச்சோமுன்னு சொல்லணும்.


த்ரிஃப்டி  பார்க்கிங்லே வண்டியை விட்டுட்டு உள்ளே போய் சாவியைக் கொடுத்துட்டு நேராப்போய் செக்கின் செஞ்சுக்கிட்டு  செக்யூரிட்டி செக்கப்  போயிட்டோம்.  ஹேண்ட் லக்கேஜ்களை ஸ்கேன் பண்ணியதும், கோபால் பிரச்சனை இல்லாமப் போயிட்டார்.

நாந்தான் மாட்டிக்கிட்டேன். கையில் உள்ள வளையல்கள்......  கழட்டு கழட்டுன்னு கத்திக்கிட்டே ஆப்பீஸர் வர்றார்.  சட்னு கழட்டக்கூடிய சமாச்சாரமா?

அந்தாண்டை வரச்சொல்லி சைகை காமிச்சதும், அதேபோல் போனால் ஃபுல் பாடி ஸ்கேன் மெஷீன்.  சொன்னபேச்சைக் கேட்கவேண்டிய நிலை :-(
மேலே....சுட்ட படம்!

 ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள்ளே நிக்கறேன். நம்ம டென்டிஸ்ட்கிட்டே ஒரு எக்ஸ்ரே மெஷீன் இருக்கு. நாம் நின்னுக்கிட்டு இருக்கும்போதே நம்மைச் சுத்திக் கர்கர்ன்னுகிட்டே 360 டிகிரியில் படம் புடிச்சுரும். அதே போல இதுவும் கர்கர்.

 வெளியே அந்தப்பக்கம்  வந்ததும்,  ஸ்க்ரீனில்   ரெண்டு உருவங்கள்.  முன்னாலும் பின்னாலும் !  ஒரு உருவத்துக்கு  முழங்கை, தொடைகள், பாதம் எல்லாம்  மஞ்சள் பெயிண்ட் அடிச்சு வச்சுருக்கு.  இன்னொன்னு  கழுத்து, முதுகு, இடுப்புப்பக்களில் மஞ்சள் அழகியாக!


'கொஞ்சம்  இருங்க. ஒரு பொம்நாட்டி ஆப்பீஸர்  வந்து உங்களைப் பரிசோதிக்கணுமு'ன்னு  உத்தரவாச்சு.  கோபால் வேற முகத்தில் பீதியோடு எங்க  கேபின் பைகளை எடுத்துக்கிட்டு அந்தாண்டை நிக்கறார்.

 எலெக்ட்ரானிக் கட்டையோடு   ஆப்பீஸரம்மிணி  ஓடி  வந்தாங்க.  கட்டையை  உடம்பில் ஓட்டுனதும்  ஊஹூம்....  ஒன்னுமில்லை!

"ஸ்ட்ரேஞ்ச்!  ஒன்னுமே இல்லையே.... ஏன் இப்படி மஞ்சள் காமிக்குது?"

அப்பதான் எனக்கு விஷயம் விளங்குச்சு.  ஆஸ்பத்திரியில் வைக்க வேண்டிய மெஷீனை  இங்கே  கொண்டு வந்து வச்சுட்டாங்க. எனக்குச் சரியா உடம்பில் எங்கெங்கே  வலியோ, அதைக் காமிச்சிருக்கு!

இதை ஆப்பீஸரம்மணிகிட்டே சொன்னதும்,  தாங்கமுடியாமல் சிரிச்சுட்டாங்க. நாங்க எல்லோரும் ஈன்னு சிரிப்பதைப் பார்த்து நம்ம கோபாலுக்குப் போன உயிர் வந்துருச்சு:-))))


அடுத்து இமிகிரேஷன். எங்கூர்லே எல்லாம் மாடர்னா  ஆட்டோ சிஸ்டத்தில் இருக்குன்னா....  இங்கே  டொக் டொக்குன்னு  ஸ்டாம்ப் அடிச்சுக் கொடுக்கறாங்க.  இன்னுமா ப்ரிஸ்பேன் பழைய பஞ்சாங்கமா இருக்கு!  டூரிஸ்ட் குவியும் இடத்தில் இப்படியா?


அடுத்து டூட்டி ஃப்ரீ ஏரியா.  கொஞ்சநேரம் கரடியை வேடிக்கை பார்த்துட்டுத் திரும்பினால் இவரைக் காணோம். தேடிக்கிட்டு இருந்தப்ப, அந்த ஏரியாவில் உதவிக்காக இருக்கும் பெண், 'என்ன தேடறீங்க. நான் உதவி செய்யட்டுமா?' ன்னு கேட்டாங்க.

"என்னத்தன்னு சொல்வேன் யம்மாடி.... புருசனைக் காணோம்!"

"  ஐய்யய்யோ....  எப்படி இருப்பார்?"

"  எதையாவது வாங்கித் தொலைச்சுருவேனோன்னு பயந்த முகத்தோட இருப்பாரு...."

"அடடா....  இண்டியனா?  "

" ஆமாம்.... அம்மிணி"

கடைசியில் ஒரு பெஞ்சுலே உக்கார்ந்து  பையில் உள்ள சாமான்களை  திருப்பி அடுக்கிட்டு இருந்ததை, நாந்தான் கண்டுபிடிச்சேன்.


MAC கடையில் மகளுக்கு  வாங்க வேண்டியதை வாங்கிக்கிட்டோம். விற்பனைப்பெண், மூக்குலே புல்லாக்கு போட்டுருந்தாங்க.

அந்த ஏரியாவில் இருந்து வெளிவரும்போது, 'கிடைச்சுட்டாரா?' னு கேட்ட உதவியாளருக்கு, 'கிடைச்சுட்டாரே'ன்னேன்.  தேடிக்கிட்டே இருந்தாங்களாமே:-))))


'வாங்க ஒன்னும் இல்லைன்னா  லவுஞ்சுக்குப் போயிடலாமா'ன்னார் நம்மவர்.

நமக்கு  மாலை ஆறரைக்குத்தான் ஃப்ளைட். கால் வலி இருக்கும்போது  வீணா எதுக்கு சுத்தணும்? இப்பத் தலைவலி வேற லேசா ஆரம்பிக்குது. லவுஞ்சுக்குப் போனால்  காஃபி குடிக்கலாம்.

லவுஞ்சில் நல்ல கூட்டம். பாடாவதியான உள் அலங்காரம்.  எங்க ஊர் பளபளால்லாம் இல்லை.  ஆளுக்கொரு கப்புச்சீனோ, கொஞ்சம் ஸ்நாக்ஸ். வலை மேய்ஞ்சுக்கிட்டு இருந்தோம். நெட்லே உக்கார்ந்தா  நேரம் ஓடிருது!



ஆறுமணிக்கு  ராச்சாப்பாடு  இங்கேயே ஆச்சு.  நமக்கு வேண்டாத சமாச்சாரங்கள் தான்.....  அதிகம்.  ஸாலட், மஃபின், டோநட் ....  பயமில்லாமல் சாப்பிடலாம்.

ஃப்ளைட் ஏறி மகா போரடிக்கும்  மணிகள்  கடந்து போச்சு.  நமக்கும் ப்ரிஸ்பேனுக்கும் ரெண்டு மணி நேர வித்தியாசம் இருக்கு.  கிறைஸ்ட்சர்ச் வந்து இறங்கும்போது  மறுநாள் வந்துருச்சு.  சரியா நடுராத்ரி  பனிரெண்டு அடிச்சது.

நம்மகிட்டேதான் சாப்பாடு ஐட்டங்கள் ஒன்னும் இல்லையேன்னு  பார்த்தால்....  வாத்து பழி வாங்கிருச்சு. அதை ஸ்கேன் செஞ்சப்ப ஆரஞ்சு  காமிச்சதுன்னு  ஒரு பத்துப்பேர் கொண்ட குழு அதை ஆராய்ஞ்சுக்கிட்டு நின்னாங்க. நம்ம அதிர்ஷ்டம்.... நாய்கள் இல்லை :-(  முக்கால் மணி நேரம் தண்டம்.  இந்நேரம் வீட்டுக்குப் போய் படுக்கையில் விழுந்திருக்கலாம்.  பத்து நிமிஷ ட்ரைவ்தான் வீட்டுக்கு.


கண்ணாடி வாத்து கைக்கு வந்ததும், டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு வந்தோம்.  சரியா  இரவு மணி ஒன்னு.

மறுநாள்  மாலை நாலுமணிக்குப்போய் நம்ம ரஜ்ஜுவைக் கூட்டி வந்ததும் வீட்டில் எல்லாம் வழக்கம் போல்:-)

ஆஸியின் ட்ராப்பிக்கல் நினைவுகளை விட்டுற வேணாமேன்னு  உள்ளூரில் இருக்கும்  ஆஸி கடையான கே மார்ட் போய்,  கோல்ட் கோஸ்டில் பார்த்து வச்ச செடிகளை  வாங்கியாந்தேன்.

எனக்கு ஆஸியிலேயே   க்வீன்ஸ்லேண்ட் மாநிலம்தான் ரொம்பவே பிடிக்கும்.  காரணம், இந்த  டே லைட் ஸேவிங்ஸ் என்ற அராஜகம் இல்லவே இல்லை.

பயணம் முடிஞ்சது.  அதன் நினைவுகள் மனசின் ஓரம்! ஒரு எட்டுநாள் பயணம்தான் என்றாலும், வழக்கமான இடத்தில் இருந்து புது இடத்துக்குப்போனால் வரும் மாற்றம் நல்லாத்தான் இருக்கு.  போற இடத்திலும் இன்னொரு வழக்கத்தை ஆரம்பிச்சுருவோம் என்பது வேற கதை:-)

பொதுவாகவே பயணம் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தரும்.

  ஆதலினால் பயணம் செய்வீர்!