Monday, September 14, 2015

தங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். ஆறாம் நாள் )

இன்றைக்கு பக்தி உலா!  புள்ளையாரைப் பார்க்காமல் ப்ரிஸ்பேன் முடிஞ்சதா இதுவரை நம்ம சரித்திரத்திலேயே இல்லை. அதுவும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு  இருக்கும் நம்ம கோவில்.

கோவிலை 11 மணிக்கு மூடிருவாங்க என்பதால்  ஒரு ஒன்பதரைக்காவது கிளம்பணும். ஒரு ஒன்னேகால் மணிநேரப் பயணம் இருக்கு.  83  கிமீதான்.  ஆனால் மோட்டர்வே கிடையாது.  ஸ்டேட் ரோடுதான்.
சட்னு  வெளியே பால்கனிக்குப்போய் வழக்கமான க்ளிக்ஸ்.  ரெண்டுநாளா கவனிச்ச  கேம்ப் ஃபயர் என்னன்னு தெரிஞ்சுபோச்சு. இருட்டோட இருட்டா வந்து மணலைச் சுத்தப்படுத்தும் வண்டிகள்!

கடலுக்குள்ளே இருந்து ஆரஞ்சு வெளிவருது!  அதை ஸ்டேண்ட் போட்டு கெமெரா வச்சு க்ளிக்கும் அசல் ஃபொட்டொக்ராஃபர் மண்ணில்.

காஃபியைக் குடிச்சுட்டுக் கிளம்பினோம், நடக்க.  இவருக்குக் கடல் பக்கம் போனால் தண்ணீரில் நின்னாத்தான் திருப்தி.  நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன்.  இங்கே நியூஸி வந்தபிறகு  ஆசையே போச்.  வெயில்காலமுன்னாலும்  ஐஸ் தண்ணிதான் கடலில்.  போதாக்குறைக்கு எப்பவும் குளிர்காத்து. ஜாக்கெட்டெல்லாம் போட்டுக்கிட்டுத் தண்ணியில் நின்னு ஸல்வாரையெல்லாம் ஈரமாக்கி காலை ஒட்டிப்பிடிக்கும் மணலில் நடக்க என்னால் ஆகாது கேட்டோ!

இவர்போய் தண்ணியில் நின்னு பார்த்துட்டு,  'நல்லா வார்மா இருக்கு, வா வா'ன்னார். நம்பிட்டேன். லேசா ஜில். எங்கூரளவுக்கு இல்லை.  இதுலே  நடக்கற நடையில் பழைய செருப்புகூட என்னைக் கடிச்சு வச்சுருச்சு. ஒரே பாதத்தில் ரெண்டு இடத்தில் ரத்த காயம் :-(


கொஞ்சநேரம் மணலில் உக்கார்ந்து காயத்ரி.  நடக்கும் மக்கள்ஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க. நாங்களும் முக்கால்மணி நேர நடையோடு அபார்ட்மென்ட்க்கு  வந்துட்டோம்.

குளியல் முடிஞ்சு ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு. தீனிகள் நிறையதான் இருக்கு. மூணு நாட்கள் பாக்கி. சீக்கிரம்  தின்னு  முடிக்கணும்.

நேத்து 'கோபால் வாங்கின தர்பூசணியை'  வெட்டி எடுக்கும்போதே வாசனை நல்லா இல்லை. கெட்டுப்போயிருக்கு  சூட்டுலே. எப்ப வெட்டி வச்சாங்களோ மார்கெட்டில். நாம் வேற ஒரு ரெண்டரை மணிநேரம் வண்டியில் வச்சுக்கிட்டு சுத்தி இருக்கோம். டிக்கியில் வைச்சதுதான் தப்பு.  போகட்டும்...  தீனிகளில் ஒன்னு டௌன்:-)
பீக்கன் நட்ஸ் போட்ட பேஸ்ட்ரிஸ், ஜூஸ் போதும். ரெண்டு வாழைப்பழங்கள், கொஞ்சம் பிஸ்கெட்ஸ், தண்ணி பாட்டில் எல்லாம் எடுத்து வழிச்செலவுக்கு வச்சார் கோபால்.

என் கையில் நேவிகேட்டர் இருப்பதால் கேமெரா பைக்குள்ளே போயிருச்சு:-(

ஒன்பதுக்குக் கிளம்பி பத்து இருபதுக்கெல்லாம்  கோவிலுக்குப் போயிட்டோம்.  கோவிலுக்கு வடக்கேதான் ட்ரைவ் வே.  வண்டி உள்ளே போகும்போதே  வடக்கு கோபுரத்தில் எம்பெருமாள் கிழக்குப்பக்கம் காலை நீட்டி, மேற்கில் தலை வைத்து, கிழக்கே பார்த்தபடியே அரவணையில் கிடக்கிறார். தாயார்கள் பாவமா காலுக்கு அந்தாண்டை உக்கார்ந்துருக்காங்க. நாபியில் இருந்து முளைச்சு வந்த தாமரையில் ப்ரம்மா.


கோவிலின் ட்ரெஸ் கோட், மற்ற  வழி முறைகள் எல்லாம்  போஸ்ட்டர் அடிச்சு வேலி நுழைவில் போட்டுருந்தாங்க. ரொம்ப நல்லது. நாமே புரிஞ்சுக்கிட்டு அதன்படி நடந்துக்கலாம், இல்லையா?
சின்னதா மூணுநிலை கோபுரம்தான். இன்னும் வண்ணம் பூசும் பணி முடியலை. சக்கரத்தாழ்வார்க்கும்,  சிவபூஜை செய்யும் காமாக்ஷிக்கும்  கலர் வந்தாச்சு. மூடிக்கிடந்த வடக்கு வாசல் கதவைத் திறந்து வெளியே வந்த குருக்கள், வண்டியில் இருந்து நாம் இறங்குவதைக் கவனித்தவர், 'வாங்கோ. நான் உள்ளே போய் ஏற்பாடு பண்ணறேன். நீங்க முன்வாசல் ராஜகோபுரம் வழியா உள்ளே வாங்கோ'ன்னார். போனமுறை இவரைப் பார்த்த நினைவு எங்களுக்கு.
ராஜகோபுரத்தைக் க்ளிக்க நேரம் போக்காமல் சட்னு கோவிலுக்குள் நுழைஞ்சேன். கோபுர உயரத்திற்கேற்ற வாசலும் கதவுகளும். குருக்கள்  வந்து இன்னும் பத்து நிமிசத்தில்  பூஜை செய்யலாம் என்றவர், 'நீங்க  முன்பே வந்துருக்கிறீர்கள்தானே?' என்றார்.

"ஆமாம். ஆச்சு மூணு வருசம்.  அன்றைக்குத்தான்  சாமிகள் எல்லாம் பக்கத்து ஷெட்டுக்குப் போனார்கள்"

"ஓம்.  கோவிலுக்கு  ஒரு டொனேஷன் கூட கொடுத்தீர்களே"

"அது சின்னத் தொகைதான்"

அடுத்துள்ள மேசைக்குப் போனவர் அங்கிருந்த ஷெல்ஃபிலிருந்து  மஹாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் என்ற பெயர் போட்ட பையில்  கும்பாபிஷேக வெளியீட்டு சிறப்பு மலர் ஒன்றை வைத்துக் கொடுத்தவர், 'நீங்கதானே துளசிதளம் எழுதுகிறீர்கள்?  போனமுறை கோவில் விவரங்களை அனுப்பி இருந்தீர்கள்தானே?  நாங்கள் பார்த்தோம். மிகவும் நன்றாக எழுதியிருந்தீர்கள்' என்றார்.

எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.  என்னோட ஞாபகசக்தியைச் சொல்றீங்களே.... இவருடைய ஞாபகசக்தி, இந்த  யானையையும் மிஞ்சிருச்சு பாருங்க!!! அது ஆச்சு மூணு வருசம்! க்ளிக்கி உள்ளே போனால் முன் ஜென்மக் கதை ஒன்னும் இருக்கும்:-)



வாசலில் படம் எடுக்க அனுமதி இல்லைன்னு பார்த்தது  சட்னு நினைவுக்கு வந்துச்சு. 'இந்தமுறையும் எழுதத்தான் போறேன். படங்கள் எடுத்துக்கலாமா' என்று கேட்டதும், எடுத்துக்குங்கன்னு சொன்னவர் தானே அங்குள்ள சிற்பங்களைப்பற்றி  விளக்கவும் ஆரம்பிச்சார்!   கள் குடிச்ச யானை ஆனேன்:-)

ஸ்ரீ கங்காதரக் குருக்கள். கனடா நாட்டிலும், வேறு சில  வெளிநாடுகளிலும் வேலை செஞ்சவர், இப்போ கடந்த மூணு வருசமா ப்ரிஸ்பேன், ஸ்ரீசெல்வ விநாயகருக்குச் சேவை செய்யறார். ரொம்பவும் சிரத்தையெடுத்து முழுமனதுடன் கடவுளர்களுக்கு சேவை செய்யும் இவருக்கு எல்லா நலன்களையும்  அந்தப் பிள்ளையார் தரவேணுமுன்னு நாமும் வேண்டிக் கொள்வோம்.




கோவில் மண்டபத்து உள்ளே சுவர்களின் மேல்பக்கம் சுத்து முழுசும்  விதவிதமான பிள்ளையார்களும், மீனாக்ஷி கல்யாணம்,  மார்கண்டேயரை எமனிடம் இருந்து காப்பாற்றுதல்,  காமதேனு (எனக்கென்னமோ அது நந்தினிப் பசுன்னு தோணுச்சு.) தசாவதாரம், அறுபடைவீடுகள், அஷ்டலக்ஷ்மிகள், வள்ளிதேவசேனாவுடன் முருகன், ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம், சீதா கல்யாணம், நடராஜர், சிவகாமி, நால்வர், முனிவர்கள், இடும்பன்,  பெரிய சிறிய திருவடிகள், நந்திதேவர்  கிருஷ்ணன், தகப்பன்சாமி, கஜேந்திர மோட்சம்,  இப்படி  ஏராளமானவர்கள் அணிவகுத்து அழகு செய்யறாங்க.


புள்ளையார் கோவில் என்ற பெயர்தான். சகலருக்கும் தேவையான கடவுளர்களுக்கும்  குறைவில்லை.  தேவிகளுடன் பெருமாள்,  முருகன் இருவருக்கும் தனித்தனியாக் குட்டிக் கருவறைகள். ஐயப்பன், ஸ்ரீ ஷிவ துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி, வெங்கடேஸ்வரர் இவுங்களுக்கு தனியா ஒரு மாடம்.

விசேஷம் என்னன்னா,  நம்ம வெலிங்டன் கோவிலில் எல்லாம் ஃபைபர் சிற்பங்கள். இந்தியாவிலிருந்து  முழுச்சிற்பங்களும்,  விமானங்களுமா  வந்திறங்கி  இங்கே  பொருத்தி இருக்காங்கன்னா....   இங்கே  உள்ள எல்லாச் சிலைகளையும் வெளி உள் அலங்காரங்கள்  உட்பட  கோவிலிலேயே வச்சு  சிமெண்ட், காங்க்ரீட் பயன்படுத்திக் கையாலேயே செஞ்சு பொருத்தி இருப்பதுதான்!  அற்புதம்!

உற்சவர்களுக்குத் தனி மாடம். சூப்பர் டிஸைன்.  நவக்ரக மண்டபம் வாஸ்து சொல்லும் திசையில். இதுக்கான கதவு 12 ராசிகளுடன் சூப்பரா இருக்கு.  இன்னும்  பாலீஷ் வேலை பாக்கி .

உள்வேலைகள் மட்டுமே ஓரளவு முடிஞ்சுருக்கு. கும்பாபிஷேகம் நடத்திக்கலாம். எவ்ளோ காலம்தான் சாமிகள் எல்லோரும் வெளிப்புற ஷெட்டிலேயே  வாசம் செய்வது?


16 அடி உசரமான ராஜகோபுர வாசல் கதவுகள் , புது மர மினுப்புடன் தாமரை யாளி, புள்ளையார், அம்மன் என்ற அம்சங்களோடு இருக்கு.

நீள்சதுர மண்டபத்துக்கு நடுவில்  மூணு வாசல்களுடன்  கருவறைகள். நடுவில்  நம்ம செல்வ விநாயகர். இவருக்கு அஞ்சு படிகள். அவருக்கு வலப்பக்கம்  தந்தை  அமிர்தகடேஸ்வரர், இடப்பக்கம் அபிராமி அம்மன்.  இவுங்களுக்கு மூணு படிகள். கருவறை விமானங்களும்,  பலிபீடங்களும், மின்னும் கொடிமரமும்  அட்டகாசம்.

மூலவர் விமானம் கூரைக்கு  மேலே எழும்பி நிக்குது. மழைத்தண்ணீர் உள்ளே வராமல் இருக்கக் கண்ணாடி பதிச்சுருக்காங்க.  அன்றைக்கு நல்ல வெயில் இருந்ததால் ஒரே ஜொலிப்பு.  24 காரட் தங்கத்தை உருக்கி பெயின்ட் போல் பூசி இருக்காங்களாம். அதுக்குன்னு ஒரு டெக்னாலஜி இருக்காமே!

 செல்வ விநாயகர், உண்மையிலேயே பெருஞ்செல்வ விநாயகர் ஆகிட்டார்.
இதுக்குள்ளே அர்ச்சனைக்கு ரெடி ஆன குருக்கள்  வாங்கன்னு கூப்புட்டதும் சந்நிதிக்கு முன் போய் நின்றோம். அப்பப் பார்த்து ஒரு இளஞ்ஜோடி வந்து நம்மோடு நின்னாங்க. குருக்கள் யார் பெயருக்கு அர்ச்சனைன்னு பெயரைக் கேட்டதும், நான் பொதுவான என் வழக்கபடி  ஸ்வாமி பெயருக்குன்னேன். பக்கத்து ஜோடி,  ராஜ்குமார், ஜெயந்தின்னு சொல்லி நக்ஷத்திரம், கோத்திரம் சொன்னதும்,  கோபாலைத் திரும்பிப் பார்த்தேன்.  இது  நம்ம இவரோட கோத்திரப்பெயர்.

விஸ்த்தாரமா பூஜை முடிச்சுப் பிரஸாதமா பெரிய ஆரஞ்சு கொடுத்தார் குருக்கள். எல்லாம் சுபம். அப்புறம் அவுங்களோடு பேச்சு கொடுத்தப்ப  இங்கிருந்து ஒரு 400 கிமீ தூரத்துலே இருக்காங்களாம். கல்யாணமாகி ரெண்டு வருசம் ஆகி இருக்கு. ராஜ்குமாருக்கு ப்ரிஸ்பேனிலொரு ஆஃபீஸ் வேலை நிமித்தம் வரவேண்டி இருந்ததால் மனைவியையும் கூடவே கூட்டி வந்துருக்கார்.  ஜெயந்திக்கு  ப்ரிஸ்பேனில் ஒரு முக்கிய வேலை  இருந்ததாம்....  மளிகை சாமான்கள் வாங்குவது.  அதை முடிச்சுக்கிட்டு, புள்ளையார் கோவிலைப்பத்திக் கேள்விப்பட்டு வந்துருந்தாங்க. 'நாங்க இருக்கும் ஊர் ரொம்பச் சின்னது. இண்டியன் கடையே இல்லை'ன்னு  சொன்னதைக் கேட்டு  நாங்க வந்த புதிதில் இருந்த கிறைஸ்ட்சர்ச் மாநகர் நினைப்பு வந்தது உண்மை.
அப்புறம் பார்த்தால்  அல்மோஸ்ட் ஒரே ஊர்க்காரங்க, நம்ம கோபாலுக்கு. அப்பாக்கள், தாத்தாக்கள்னு பெரியவங்க பெயரைச் சொல்லி  தூரத்து சொந்தமா இருக்கணுமுன்னு  முடிவு செஞ்சோம். 'நியூஸி வந்தா வாங்க'ன்னு சொல்லி,  விவரம் கொடுத்தோம்.

நோ ஃபொட்டொக்ராஃபி ஸைனையும், என்  கேமெராவையும் பார்த்து  சின்னதா  ஒரு அதிர்ச்சி ஜெயந்தி முகத்தில். கிடைச்ச சந்தர்ப்பத்தை நழுவவிடாமல், நமக்கு ஸ்பெஷல் பர்மிஷன் 'எழுத்தாளர்' என்ற வகையில் கிடைச்சுருக்குன்னு மனைவியின் மஹாத்மியத்தை சொல்லி  துளசிதளத்துக்கு  ரெண்டு வாசகர்களையும் பிடிச்சுப் போட்டார் நம்ம கொபசெ கோபால்:-)
கோவிலுக்கு ஒரு தொகையை டொனேஷன் கொடுத்தோம். இன்னும் நிறைய வேலை பாக்கி இருக்கு.  குருவி சேர்ப்பது போல் புள்ளையார் சேர்த்துக்கிட்டு இருக்கார்.

நான் வெளியே படங்கள் எடுக்கப்போகுமுன், மயில்கள் இருக்கான்னு குருக்களிடம் கேட்டுக்கிட்டேன்.  இருக்கு!  கோசாலை?  ஷெட்டுக்கு அந்தப்பக்கம்  என்று சொல்லிட்டு அவருடைய க்வாட்டர்ஸ்க்கு கிளம்பினார்.

 இதே காம்பவுண்டில்தான்  வீடு.  இதை அடுத்து  அங்கே  வெளியே இன்னொரு கட்டடத்துக்குப் பக்கம் ஒரு சின்னக் குடும்பம் இவருக்காகக் காத்திருந்தாங்க.  இந்தக் கட்டிடம்தான் சண்டே கேண்டீன் நடத்துமிடம்.
குழந்தைக்கு  31 என்று கோவிலுக்குக் கொண்டு வந்துருந்தாங்க. மாமியார் சொல்லச்சொல்ல அதைக் கேட்டு அனுசரித்த மருமகள். நம்ம மயிலார்தான்  சடங்கில் முக்கிய பார்வையாளரா குறுக்கும் நெடுக்குமா போய்க்கிட்டு இருந்தார்.

மூணு வருசம் முந்தி வந்தப்பவும், ஒரு புதுக்குழந்தையை வேறொரு குடும்பம் (கோவில்பட்டிக்காரங்க)கோவிலுக்கு முதல்முறையாக் கொண்டு வந்துருந்தாங்க.

போனமுறை பார்த்ததை விட ஏராளமாப் பெருகி இருக்கு மயில்களாரின் குடும்பங்கள். குருக்கள் வீட்டு வாசல்தான்  பிடிச்சிருக்கு போல. அங்கே நின்னது எனக்கு ஆடிக் காமிச்சது. மயிலுக்கு ரொம்பப் பொறுமை. நீட்டிய கேமெராவைக் கீழே இறக்கும் வரை ஆட்டம்.  பாவம் கால்கள் வலிச்சிருக்கும்!  முன்னழகு பார்த்துருப்பே... இப்பப் பின்னழகைப் பார், நன்றாகப்பார்ன்னு.....

கோவிலின் நாலு பக்கங்களிலும்  அற்புதமான சிற்ப அலங்காரம்.  கெமெராவுக்குப் பயங்கரத் தீனி!  உள்ளும் புறமுமா 303 க்ளிக்ஸ். (223 படங்களை ஃபேஸ்புக் ஆல்பத்தில் போட்டு லிங்க் கொடுத்துருக்கிறேன்)

வேலை செய்யுதான்னு நண்பர்கள் சொன்னால் தேவலை.

எனக்கும் ஆடவருது பார்னு ஒரு சின்னப்பையன் சொன்னான்.  இன்னும் சாமி இவனுக்கு வண்ணம் முழுசாப் பூசிவிடலை :-)




வடக்கு வாசலில் பெருமாள் சயனம் என்றால் தெற்கு வாசலில்  ஆலகால விஷம் உண்ட மயக்கத்தில்  கிடக்கிறார் நீலகண்டர்!
நாலு திசைகளிலும்  கோபுரங்கள். ராஜகோபுரம் ஐந்து நிலை, மற்ற மூணு கோபுரங்களும் மூணு நிலை.  மூணு பக்கங்களிலும் வாசல். நாலாவது மேற்கில் வாசல் கிடையாது. அங்கே ஒரு கயிலை ஸீன்!  வடக்கு வாசல் சொர்க வாசல், தெற்கு வாசல் கைலாய வாசல், மேற்கே  உள்ளது சக்தி வாசல்னு சொன்னார். இதுக்குத்தான் கதவுகள் வைக்கலை.

அதுக்கு நேரா கோவில் தோட்டம், நர்ஸரி.  செடிகள் பார்க்க ஆசையா இருந்தாலும்... இங்கே நியூஸிக்குக் கொண்டு வரமுடியாதே:-(

தோட்டத்தில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தவரிடம் நம்மை அறிமுகப்படுத்தினார் நம்ம குருக்கள்.  கோவில் கமிட்டியின் வைஸ் ப்ரஸிடெண்ட் செல்வமாணிக்கம்தான் அவர்.  மலேசியாக்காரர்.  ஆஸிக்கு வந்து ஆச்சு நாப்பது வருசம் என்றார்.  தமிழ் பேசறார்.  பல ஆண்டுகளா கோவில் கமிட்டியில் இருக்கார். ஒன்பது பேர் உள்ள கமிட்டி இது.

 பிரஸிடெண்ட்டாகவும் இருந்துருக்கார்.  தனக்கு  சேவை செய்யும் ஆட்களை எப்படி  நம்ம புள்ளையார் பிடிச்சு வச்சுருக்கார் பாருங்க.

ப்ரிஸ்பேனில் முதல்முதலா புள்ளையார் பூஜை ஆரம்பிச்சது 1983 வது வருசம். வீடுகளில் குழுமி நடந்துக்கிட்டு இருந்துச்சு. அப்புறம் கமிட்டி ஒன்னு போட்டு, நிதி சேகரிச்சு, 1993 இல் அடிக்கல் நாட்டி ஒரு ஃபார்ம் ஹவுஸ் போல கோவில் வந்தது 1995 ஃபிப்ரவரி அஞ்சு!


இப்ப  அடுத்த இருபதே ஆண்டுகளில் ஜொலிக்கும் கோவில்!  போனமுறை இங்கே 2012 இல் வந்திருந்தோம். அப்பதான் புதுக்கோவில் கட்ட ஸ்தபதிகளும், அவர் குழுவும் வந்துருந்தாங்க. 'ஒரு வருசத்துலே முடிச்சுருவோம்.  அடுத்த வருசம்  இதே சமயம் கும்பாபிஷேகம். கட்டாயம் வந்துருங்க ' என்றார்கள்.  வரமுடியுமான்னு தெரியலைன்னேன்.

கோவில் வேலைகளை  இங்கெல்லாம் அவ்வளவு பரபரப்பா செஞ்சு முடிக்க முடியாது. குழுவும் சின்னதுதான். மேலும் புது இடங்களில் சீஸன் மாறும்போது உடல்நலக் குறைவு, ஊருலே குடும்பத்தை விட்டு வந்துட்டு, அங்கே எதாவது  கடமைன்னா ஓடிப்போய் வருவது இப்படி பல பிரச்சினைகள் இருக்குல்லையா?   இதுலே இவுங்களே சமைச்சுச் சாப்பிட்டுக்கணும். அதுக்குன்னு ஒரு உதவியாளரை இந்தக் குழுவில் கொண்டு வந்துடறாங்க.


ஒரு வருசமுன்னு சொன்னது மூணு வருசமா ஆகிப்போய் இந்த மே மாதம்  முதல் தேதிதான்  கும்பாபிஷேகம் நடந்துருக்கு. அநேகமா  வெளி வேலைகள் முடிய இன்னும் ஒரு வருசம் ஆகலாம்.  கட்டிடவேலையில் மும்முரமாக இருந்தவர்களிடம், ஊர், குடும்பமுன்னு  நாலு வார்த்தை விசாரிச்சு, நம்ம பாராட்டுகளையும் சொல்லிட்டு  வேலி வாசலுக்கு வந்ததும் அங்கிருந்த ஒரு பெஞ்சில் இவர்  கொஞ்சநேரம் உட்கார்ந்தார்.  நான் விட்டுப்போன க்ளிக்ஸை எடுத்துட்டு வந்ததும், புள்ளையாரை மனசில் நினைச்சு, இனி எப்பவோன்னு.. கோவிலுக்கு 'பை பை' சொல்லிக் கிளம்பினோம்.

ஒரு மூணு கிமீ வந்தபிறகு, அந்த  கும்பாபிஷேக மலரைப் பார்க்கலாமுன்னு  வண்டியின் பின் ஸீட்டில் எட்டிப் பார்த்தால்.....   இல்லை. அங்கே பெஞ்சுலேயே வச்சுட்டு மறந்துட்டாராம். நல்லவேளை  அதிகதூரம் போகலைன்னு வண்டியைத் திருப்பிக் கோவிலுக்கே விட்டோம்.

" எப்பவோன்னு நினைச்சேயே... இப்பவே வரவச்சேன் பார்த்தியா?"

"புள்ளையாரே....  ஆனாலும் உமக்குக் குறும்பு அதிகம்தான்!"

உக்கார்ந்து ஷூக்களைக் கழட்டிப்போட வசதியாப் போட்டு வச்ச பெஞ்சில் பை சமர்த்தா உக்காந்துருக்கு:-)

மணி அப்படி ஒன்னும் அதிகமாகலை.  உச்சி நேரத்துக்குப் பத்து நிமிட் பாக்கி. 'கோவிலை உச்சிக்கு மூடணும். தரிசனம் செஞ்சுக்கணுமுன்னா வாங்க'ன்னார்  குருக்கள். புதுக் குழந்தைக்கு இன்னும் 41 நாட்கள் ஆகாததால்..... மருமகளைக் குழந்தையோடு வண்டியில் விட்டுட்டு மத்தவங்க உள்ளே போனாங்க. எனக்குக் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.  குழந்தையும் தெய்வமும் ஒன்னு இல்லையோ? என்னென்ன சாஸ்த்திரங்கள், என்னென்ன சம்ப்ரதாயங்கள் பாருங்க......  குழந்தையை என்னிடம் கொடுத்துட்டு, நீங்க போய் கும்பிட்டு வாங்கன்னு சொல்லி இருக்கலாமோன்னு  தோணுச்சு.  வேணாம்....  இங்கெல்லாம் இது  நல்லது இல்லை.
ப்ரிஸ்பேன் நகரில் இருந்து வரணுமுன்னா,  35 கிமீ பயணம் செஞ்சு  சவுத் மக்ளீன் வந்தால், லோகன் ஆற்றுப் பாலத்தைத் தாண்டினதும் நமக்கு  வலதுகைப் பக்கம்  கோவில் ஒரு ஆங்கிளில்.  கோபுரம் இப்போ உசரமாகத் தெரிவதால் மிஸ் பண்ணிடமாட்டோம்:-)


PINகுறிப்பு:  பதிவின் நீளம் கருதி  பாக்கி  இருக்கும் அரைநாள் சமாச்சாரங்கள் இன்னும் சிலமணி நேரங்களில்:-)


நண்பர்கள் அனைவருக்கும்  இனிய பிள்ளையார் சதுர்த்திக்கான  வாழ்த்து(க்)கள்.  பதிவு நம்ம புள்ளையாருக்கே சமர்ப்பணம்!

ௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐ

16 comments:

said...

உங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் துளசிம்மா.....!!!

said...

படங்கள் அனைத்தும் அற்புதம்...

மயில்... ஆகா...!

said...

இங்கே கொடுத்திருக்கும் படங்கள் அனைத்துமே அருமை.

சில ஆகம விதிகள் எதற்கென்று புரிவது இல்லை. குழந்தையை உள்ளே விடாத விதியும் எதற்கு என்று எனக்கும் தோன்றுகிறது....

நடுவில் சில பதிவுகளை படிக்க இயலவில்லை. விரைவில் படிக்கிறேன்.

said...

நம்ம கோபாலுக்கு. அப்பாக்கள், தாத்தாக்கள்னு பெரியவங்க பெயரைச் சொல்லி தூரத்து சொந்தமா இருக்கணுமுன்னு//

என்ன அப்படி தூரத்து உறவு ன்னு சொல்லிப்போட்டீக ?

கோபாலோட ஒண்ணுவிட்ட சித்தப்பா இருக்கார் இல்ல.
அவங்க மச்சினருக்கு சகலயோட
சொந்த மாமா பையன் தாங்க இவரு !!

இவங்களை நாங்களும் எங்கயோ பார்த்தாபோல தான் கீது.

சுப்பு தாத்தா.
மீனாட்சி பாட்டி.
www.subbuthathacomments.blogspot.com
www.subbuthatha72.blogspot.com

said...

வணக்கம் டீச்சர்..
விடுப்புக் கடிதம் குடுக்காம, விடுப்பில் சென்றமைக்கு மன்னிக்கவும்:) விடுப்பு அல்ல, படுப்பு; மருத்துவமனையில் படுப்பு:)
இப்போ இல்லம் வந்து தேறி வருகிறேன்.. பழைய பதிவுகளும் படிச்சாச்:) ஒங்க தோழி சாவிக்குப் பதிவின் நகலை அனுப்பி வச்சிட்டீயளா?

நீங்க ஏன் காவிரி ஆத்துலயும் கால் நனைக்க மாட்டேங்குறீக? பிரிஸ்பேன் கடலிலும் கால் நனைக்க மாட்டேங்குறீக?:)
புராணக் கதைகளில், கங்கா யமுனா-ல்லாம், வருசத்துக்கு ஒரு நாள், நம்மூரு குளத்துக்கு வந்து பாவத்தைக் கழுவிப்பாங்களாம்; அது போல, வருசத்துக்கு ஒரு நாள், ஒங்க பாதத்தைப் பிரிஸ்பேன் நியூசி கடலுக்கு-ல்லாம் தந்து அருள் புரியுங்கள்:)

அந்த இளம் தம்பதிகள் (இணைகள்) பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு; இரண்டு ஆண்டுகள் ஆனாலும், ஒரு வித நாணத்துடன் ஒட்டி நிற்கும் அழகு! முருகா, அவுங்களை நல்லபடியா வச்சிரு!

துளசிதளம் ”கொ.ப.செ” கோபால் சாருக்கும் என் வணக்கம்:)

said...

வாங்க அபிநயா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

என்ன ஆட்டங்கறீங்க!!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எனக்கும் புரியாத புதிரிது!

டேக் யுவர் ஓன் டைம்.

said...

வாங்க மீனாட்சி அக்கா & சூரி அத்திம்பேர்.

அடடா.... உறவுச்சிக்கலை இப்படிச்சட்னு தீர்த்துட்டீங்களே!!!!

said...

வாங்க கே ஆர் எஸ்.

என்ன எப்பப் பார்த்தாலும் உடம்பு இவ்ளோ படுத்துது? நல்லபடியா சிகிச்சை எடுத்துக்கிட்டு, உடம்பைப் பார்த்துக்குங்க. அடிக்கடி ஆஸ்பத்ரி நல்லதில்லையேப்பா:-(

இப்போதைக்கு நாங்களும் இங்கே நலமில்லை. மைல்ட் விண்டர்னு மகிழ்ந்து போனதுக்கு இப்போ ஸ்ப்ரிங் சீஸன் கல்லைத் தூக்கித் தலையில் போட்டுருச்சு.

காய்ச்சலும், ஆஸ்த்மாவுமா இருந்து இருமல்பிடிச்சி தொண்டையில் சப்தம் போச். நானும் ஒரு ஸைலண்ட் ம்யாவ்! நம்ம ரஜ்ஜுதான் லிப் ரீடிங் படிக்க முடியாமல் முழிச்சுப் பார்க்கிறான்:-(

சாவிக்கு இன்னும் அனுப்பலை. உடம்பு தேறணும், முதலில்.

டேக் கேர்.

said...

அப்பறம்.. அது நந்தினி இல்ல டீச்சர்; காமதேனு தான்:)

//எனக்கென்னமோ அது நந்தினிப் பசுன்னு தோணுச்சு// இல்லை.. நல்லாப் பாருங்க!
முன்பக்கம் உடம்பில் வேறொரு இறகு இருந்தாலும்,
பின்பக்கம் மயில் இறகும் இருக்கும் காமதேனுக்கு! நந்தினிக்கு= மயிலிறகு இல்லை!

காமதேனு= அம்மா; நந்தினி= பொண்ணு
ரெண்டு பேருக்கும் same powers, same appearance, but only mother has peacock feathers as per Puranams!
பொம்பளை பசுவுக்கு எப்படி ஆம்பளைத் தோகை? -ன்னுல்லாம் கேட்டுறாதீக; அதான் “புராணம்”-ன்னு சொல்லீட்டேன்ல்ல?:))
--

மயில் படங்கள் அழகோ அழகு!
சில மாசம் கழிச்சு ஒங்க பதிவுக்கு வந்தாலும், வந்தவுடனேயே ஒரு நிறைவு.. மயிலைப் பார்த்து!

ஆண்மையில் ஆண்மயில்!

தோகை விரிச்சாத் தான் அழகு-ன்னு பலர் நினைக்குறாங்க!
ஆனா, அது தத்தித் தத்தி நடப்பதே ஒரு அழகு தான்.. குறுகுறு-ன்னு ஓடுவதும் அப்படியே! கவனிச்சிப் பார்த்தால் தெரியும்!
அதுவும் மயிலுக்குச் சோறூட்டும் போது, ஆசையா தத்தி வந்து, கையில் தின்னும் பாருங்க, அழகோ அழகு!

”கொறிக்குற” பண்டமா இருந்தாத் தான், மயிலுக்குப் புடிக்கும்!
வெறும் சோளத்தை விட, வறுத்த சோளம் புடிக்கும்:)
அதே போல் வெள்ளரிக்காயும் அதுங்களே துளையிட்டு உண்ணும்; அப்பறம் போய்ப் பார்த்தால், தோலோடு உள்ளாற குழிவா இருக்கும்!

மத்தபடி மயில்= அசைவம் தான்:) முருகனும் = அசைவமே!:)
புல்லை வெட்டும் போதோ, நிலத்துல களையெடுக்கும் போதோ.. மயில் ஆசை ஆசையா ஓடியாந்து, பூச்சி/புழு எல்லாம் தின்னும்!
பழமுதிர்சோலை முருகனுக்கு ”அசைவப் படையல்” என்பது தமிழ்த் திருமுருகாற்றுப்படை - ”கொழு விடைக் குருதியொடு விரைஇய தூவெள் அரிசி, சில்பலிச் செய்து”
Like Captain, like Team!
Like Murugan, like Mayil:)

எங்கூரு / திருவண்ணாமலை பக்கம் மயில்கள் அதிகம், குறிப்பா ரமணரின் ஆசிரமத்தில்; முருகன் கோயில்களை விட, இங்கு ரமணாசிரம மயில்கள் அதிகமோ அதிகம்!
அண்ணாமலை எல்லையில் உள்ள, (மறைந்த) அத்தையின் வயல்களில், அதுங்க உலாவுங்க.. அழகாப் பாத்துக்கிட்டே இருப்பேன்.

மயிலுக்கு வெறுமனே சோறு வச்சிட்டுப் போனா, நம்மிடம் ஒட்டாது; நாம பரிமாறணும்:)
At least, you have to spread the corns in front of them.
ஆடுகளைப் போல் தான் மயில்களும்; கொறித் தீனி தான் புடிக்கும்:)

மயிலின் ”பின்னழகு” காட்டியதற்கும் நன்றி டீச்சர்;
அந்த Brown Color பின்னிறகு பார்த்தாலே கூடச் சொல்லீறலாம் ஆண்மயில்-ன்னு; பெண் மயிலுக்குச் சாம்பல் நிறப் பின்னிறகு தான்!
அந்தக் குட்டிப் பய மயிலுக்கு, தோகை வண்ணம் இன்னும் வரலை போல.. மீசை முளைக்கும் வரை காத்திருக்கச் சொல்லவும் ‘சைட்’ அடிப்பதற்கு:)

said...

*ஆண் மயில் = போத்து
*பெண் மயில் = அளகு

பொதுவா, ஆண்களைத் தான்= ”மயில் போல் அழகன்” -ன்னு சொல்லோணும்!:)
ஆனா, நம் இலக்கியங்களில் பெண்களையே= ”மாதவிப் பொன் மயிலாள்” -ன்னு சொல்லீடறாங்க, தோகை இல்லாவிட்டாலும்! இது ரொம்ப ரொம்ப அநியாயம்:)

நம்ம ஆதித் தமிழ்த் தந்தை தொல்காப்பியர் என்ன சொல்லுறாருன்னா..
சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும்
மா இருந் தூவி மயில் அலங்கடையே!

எல்லாப் பறவைகளின் ஆண்பாலுக்கும்= “சேவல்” -ன்னு முன்னொட்டு (prefix) சொல்லலாம்; "சேவற்கழுகு" -ன்னா ஆண் கழுகு!
ஆனா மயிலுக்கு மட்டும் அலங்கடை (exception); ஆண் மயிலை= "சேவல்மயில்" -ன்னு சொல்லக் கூடாது; ஏன்?

ஏன்னா அந்தத் தோகை அழகு! மா இருந் தூவி..
அது ஒரு விதமான நளினத்தை (பெண்மைச் சாயலை), ஆணுக்குக் குடுத்து விடுகிறது!
அதுக்காக ஆண் மயில் எல்லாம் Gay -ன்னு கெளம்பீறக் கூடாது:))

அப்படீன்னா, ஆண் மயில்களை என்ன தான் சொல்வது?
சேவல்மயில்-ன்னு சொல்லக்கூடாது, சரி! ஆனா அதுங்களுக்கும் ஒரு பேரு இருக்கணும்ல்ல? களிறு= ஆண் யானை, பிடி= பெண் யானை என்பது போல்?

தொல்காப்பியத்தை மேலும் வாசித்தால் தெரியும்..
*ஆண் மயில்= போத்து
*பெண் மயில்= அளகு

”மயிலும்” எழாலும் பயிலத் தோன்றும்
மற்று இவை எல்லாம் 'போத்து' எனப்படுமே

கோழி, கூகை, ஆயிரண்டு அல்லவை
சூழும் காலை 'அளகு' எனல் அமையா
அப் பெயர்க் கிழமை ”மயிற்கும்” உரித்தே!

இதான் ”தொல்காப்பிய மயில்”!
மயிலுக்குன்னு இம்புட்டு நேரம் ஒதுக்குறாரு தொல்காப்பியர்; என் முருகன் சார்பாக ஆதித் தமிழ்த் தந்தைக்கு நன்றி!
முருகா... மயிலும் ஆடி, நீயும் ஆடி, எனது முன் ஓடி வரவேணும்!

ஆண்மையில் ஆண் மயில், வாழ்க!

said...

சொல்ல மறந்துட்டேனே.. அந்தச் செல்வ-விநாயகர் கோயில் சிற்பங்கள் எல்லாமே நல்ல வண்ண அழகு!
உங்க donation -உம் அதிலொரு பங்கு அல்லவா? அதனால் கோபால-துளசிக்கும் நன்றி:)
--

ஆலயத்துக்குள் நுழையும் போதே Dress Code வைத்தது நல்லது தான், but no comments:)

ஆண்கள் Banian/Tanks போட்டுக் கொண்டு, பாதி மார்பு தெரிவது போல் உள்ளே வரக் கூடாது.. சரி தான்;
ஆனா அர்ச்சகர்களே மார்பு தெரிவது போல் இருப்பது ஏனோ? Dress Code என்பது பொது நீதி இல்லையோ?:)

அது கூடப் பரவாயில்லை.. ஆனா ”பச்சிளங் குழந்தைகள்” 41 நாள் கழிச்சித் தான் உள்ளே வரணும் என்பது ஏனோ மனசுக்கு வலிக்கிறது:(
”குழந்தையும் தெய்வமும்” என்பார்கள்.. அதுங்களுக்கா தடை, தீட்டு என்கிற பேரில்?:(

*41 நாள் ஆகாத/ பிறந்த ”ஆண்டாள் குழந்தை”, எப்படி வடபெருங்கோயிலுடையான் கோயிலுக்குள் போனாள், துளசிச் செடியின் கீழே?
*41 நாள் ஆகாத/ அப்போதே பிறந்த “நம்மாழ்வார் குழந்தை”, ஐயோ அழுவ மாட்டேங்குதே-ன்னு, எப்படிக் கருவறை வாசல்படியில் கொண்டு போய் கிடத்தினார்கள், அவுங்க அம்மா-அப்பா?
*41 நாள் ஆகாத “மீனாட்சிக் குழந்தை”, எப்படி ஈசன் காலடியில் கொண்டு போய் கிடத்தினான் மலையத்துவஜ பாண்டியன்?

”ஆகமம்” -ன்னு சொல்லுறவங்க..
மகுடாகமமா? சிவாகமமா? வைகானஸ ஆகமமா? எந்த ஆகமம்? என்ன வரி? -ன்னு தரவு கேட்டா, என்னை ஒதைப்பாங்களோ?:) நமக்கேன் வம்பு? நாஸ்திகப் பையன்னு முத்திரை குத்தவா? பெருமாளே!:)

ஆனா அயல்நாட்டு ஆலயங்களிலாச்சும், ஆகமம்= ”மனிதம்” சார்ந்து அமைய வேண்டுகிறேன்! முருகா!

said...

ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா ஆரியக்கோனே என்றபடி போன இடங்களில் எல்லாம் வாசகர்களைச் சேர்க்கறீங்க.

said...

@ கே ஆர் எஸ்,

ஆஹா.... இந்த மயிலிறகு காமதேனு சமாச்சாரம் இதுவரை கவனிக்கலையே:-( அதென்ன அம்மா மட்டும் அலங்காரம். பொண்ணு பாவம் வெரி சிம்பிள்!

மயில் விளக்கங்கள் எல்லாம் சூப்பர்!

ஆமாம்... பெரிய டொனேஷன் கொடுத்தாச்சு, ராமர் பாலம் கட்ட அணில் உதவுனது போலதான் :-(

அர்ச்சகர்கள் உத்தரீயம் போட்டுக்கறதுதான். ஆனால் பொம்நாட்டிகளுக்கு இருக்கும் சட்டம் இல்லையே! அதும்பாட்டுக்கு நழுவிப்போறது பாவம்:-)

பேசாம நாம் ஒரு கோவில் கட்டி ஆகமவிதிகளில் மாற்றம் செய்யலாம். நம்ம வீட்டு சாமி அறைக்கு நம்ம ம்யூஸ் எல்லாம் வந்து உக்கார்ந்து கும்பிட்டுப்போகும்.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

கொபசெ வேலையைச் சரியாச் செய்யறார்னு பெருமைப்பட்டுக்கலாம். ரெண்டுன்னா ரெண்டு!