Monday, November 30, 2015

இந்தியாவையே தூக்கி சாப்டுட்டாங்கபா!

கடந்த ஒரு சில பல வருசமா கொடி மாத்தம் வேணுமுன்னு  சில சிந்தனாவாதிகள் சிந்திச்சு  அது அப்படியே விரிவடைஞ்சு  அரசாங்கத்தை ஒரு நெருக்கத்துக்குக் கொணாந்துருச்சு. சரின்னு வேறொரு கொடியை டிஸைன் செஞ்சு நாளை முதல் இதுதான் நம்ம கொடின்னு  சொல்லிட்டுப் போகாம........


முதலில் மக்களையே டிஸைன் செய்யச் சொல்லிட்டாங்க.  இருப்பது வெறும்  நாப்பது லட்சம் சனம் தான் என்றாலும்  எல்லோரும் ஒரே மாதிரியா சிந்திப்பாங்க? அவனவன் மூளை தனி டிஸைன்  இல்லையோ?  இதுலே ஆரம்பப்பள்ளி மாணவர்கள் முதல் அத்தனைபேர்கிட்டேயும்  கேட்டுட்டாங்க!


இத்தனாம் தேதிக்குள்ளே உங்க டிஸைனை அனுப்புங்கன்னு சொல்லுச்சு அரசாங்கம். அனுப்புச்சு சனம்.  10,292  வகையில் வரைஞ்சு தள்ளிருச்சு!  அதுலே  சிறப்பான டிஸைன் எதுன்னு  அதுக்குன்னு  Flag Consideration Panel  என்று 12 நபர்கள் அடங்கிய ஒரு நிபுணர் குழு  கூடி  வடிகட்டி வடிகட்டி  ஒரு  40    டிஸைன்களைத் தேர்ந்தெடுத்தாங்க.
அதுக்கு  ஒரு கருத்துக்கணிப்பு போல  அவைகளை வெளியிட்டு, இதுலே எது நல்லா இருக்குன்னு கேட்டு அதுக்கு ஒரு  இலவச ஃபோன் நம்பரும்,  மெயில் ஐடியும் கொடுத்து சொல்றதைச் சொல்லுங்கன்னும் கேட்டாங்க.

அதுக்குப்பிறகு இன்னொரு ரெண்டு மூணு வடிகட்டல். என்னென்ன கருத்துகள் இருக்கணும்? எப்படி வடிகட்டுனோம்,? இப்படியெல்லாம் விவரிச்சு பொதுமக்களுக்கு ஒரு திறந்த மடல் வேற!  கடைசியா தேர்ந்தெடுத்தது 5.



 இந்த அஞ்சும் என்னென்ன சொல்லுது? நியூஸியின் கலாச்சாரத்தை எப்படி பிரதிபலிக்குதுன்னு  விளக்கங்கள்.  அப்புறம் இந்த அஞ்சையும்  பறக்கவிட்டு, பறக்கும் போது பாருங்க. எது  ரொம்பப் பொருத்தமான டிஸைன்னு பார்த்துச் சொல்லுங்கன்னு  படங்களும், யூ ட்யூப் காட்சிகளும் கூட  காமிச்சாங்க.

பறக்கவிட்டாச்!

மூடிமறைச்சுச் செய்யும் வேலை இங்கே எப்பவும் கிடையாது என்பதால்  அரசு எல்லாத்தையும் வலையிலேயே  வெளியிட்டுரும். ஆர்வம் இருக்கறவங்க வலையில் பார்த்துச் சொல்றதைச் சொல்லிடலாம்.

பத்தாயிரத்துச் சொச்சம் (10,000+)டிஸைன்கள்.

ஒரு லக்ஷத்து நாப்பதாயிரத்துச் சொச்சம் பேர்  (140,000+)நியூஸி கொடியின் சரித்திர வீடியோவை பார்த்தவர்கள்.

நாப்பத்து மூணாயிரத்துச் சொச்சம் பேர் (43,000+) ஆன்லைனிலும், தனிமடலுமா  கருத்தை  அனுப்பி இருக்காங்க.

பதினொரு லக்ஷத்துச் சொச்சம் பேர் (1,100,000+) ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் கருத்து சொல்லி இருக்காங்க.

ஆறாயிரத்துச் சொச்சம்பேர் (6,000+)இதுக்காக வண்டியை எடுத்துக்கிட்டு இதுக்கான தகவல், ஒர்க்‌ஷாப்புகளுக்கு விஜயம் செஞ்சுருக்காங்க.

ஒன்பதாயிரத்து ஐநூற்றுச் சொச்சம் கிமீ  (9,500+)பயணம்  செஞ்சு, நாட்டின் பல பகுதிகளில் 25 முறை பொதுமக்களிடம் போய் மீட்டிங் போட்டு இதைப்பற்றி விவரிக்க Flag Consideration Panel  போயிருக்கு.

எட்டு லக்ஷத்து அம்பதினாயிரத்துச் சொச்சம் முறை (850,000+), கொடி சமாச்சாரத்தை   ஆன்லைனில் மக்கள்ஸ் பார்த்துருக்காங்க.

ரெண்டு மில்லியன் சொச்சம் முறை  ( 2,000,000+ )கொடிகளின் டிஸைன் ஆல்பம் பார்வையிடப்பட்டுள்ளது!

புள்ளி விவரம் சொல்றதில்  நம்ம விஜயகாந்தையே கூட மிஞ்சிட்டோம்:-)

ஆமாம்.... இப்ப என்னாத்துக்கு  இந்தக் கொடிமாற்றம் ரொம்ப முக்கியமா ஆகிருச்சுன்னா....  மற்ற சில(!) நாட்டுக் கொடிகளும் ஏறக்கொறைய இதே டிசைனில் இருப்பதால்... 'கன்ஃப்யூஸ்' ஆகுதாம்!   எனக்குத் தெரிஞ்சு  'அங்கே' அஞ்சு நட்சத்திரம். நமக்கு நாலு!   ஆமாம்பா....    அஞ்சுவரை யாராலே எண்ணமுடியுது சொல்லுங்க?

இப்ப இருக்கும் கொடி 112 வருசப் பழசாம்!   அதனாலே?  இப்பவே மாத்திட்டோமுன்னா இன்னும் ஒரு 50, இல்லே 100 வருசத்துக்கு நிம்மதியா இருக்கலாம். (ஆமாமாம். விலைவாசி எப்பவுமே ஏறிக்கிட்டுத்தானே போகுது! அம்பது வருசமுன்னு வச்சுக்கிட்டாலும் ஒரு இருபத்தைஞ்சு மடங்கு செலவு  கூடிடாதா?)
மேலே படம்:  இப்போ இருக்கும் கொடி!


இப்ப எவ்ளோ செலவு ஆகுமுன்னு சொல்லுங்கன்னா....ஏகதேசமா  ஒரு முப்பதுன்னாங்க.  சமீபத்துலே கணக்குப் பார்த்துச் சொன்னது  25.7   இது ஆயிரம் கீயிரம் இல்லையாக்கும்.  நாங்க எப்பவும் மில்லியன் கணக்குலேதான் பேசுவோம்....:-))))

பழைய கொடியே நல்லா இருக்குன்னு ஒரு கூட்டம் சொல்லிக்கிட்டு இருந்தாலும்,    நூறு வருசத்துக்கு மேலேயே ஸில்வர் ஃபெர்ன் டிஸைன், ஆல் ப்ளாக்ஸ் (ரக்பி) ,  நியூஸி  ஸில்வர் ஃபெர்ன்ஸ்(நெட்பால்) இப்படி எல்லாத்திலும்  இடம் பெற்றிருக்கு என்பதால் இதுதான் கொடியில் இருக்கணுமுன்னு  இன்னொரு கூட்டம் சொல்லிக்கிட்டு இருக்கு!  நம்ம நாட்டு மதம் ஸ்போர்ட்ஸ் பாருங்க. அதனாலே .....   இதுக்குத்தான்  முன்னுரிமைன்னு நினைக்கிறேன் :-)

ஆங்.... சொல்ல மறந்துட்டேனே....  நம்ம நியூஸியின் அஃபீஸியல் நிறம் கருப்பு என்பதால்  அதுக்கும் இடமுண்டு:-)



மக்களிடம் அஃபீஸியலா கருத்து கேக்க எலக்‌ஷன் கமிஷன் நடத்தும்   ரெஃபரண்டமுன்னு  ஒன்னு இருக்கு பாருங்க.  இது போஸ்ட்டல் ஓட்டு.  எல்லா வாக்காளர்களுக்கும் அனுப்பிட்டாங்க. நமக்கும் வந்துருக்கு.  டிசம்பர் 8 ஆம் தேதிக்குள்ளே வாக்குப் பதிவு செஞ்சு அவுங்களுக்கு அனுப்பிடணும். அதுக்குண்டான  என்வலப் எல்லாம் வச்சு, கூடவே எப்படி ஓட்டுப் போடணுமுன்னு விலாவரியா  விவரங்கள் கொடுத்துருக்காங்க.  தவறுதலா வாக்குச்சீட்டை டேமேஜ் பண்ணிட்டா....?   உடனே  இலவச எண்ணுக்குக் கூப்பிட்டுச் சமாச்சாரம் சொன்னா உடனே இன்னொரு வாக்குச்சீட்டை அனுப்பி வைப்பாங்களாம். அதுக்காகக் கள்ள ஓட்டெல்லாம் போட முடியாது கேட்டோ:-))))



இங்லீஷ் உட்பட 26 மொழிகளில்  எப்படி ஓட்டுப்போடணுமுன்னு  சொல்லிட்டாங்க.  அட!  இந்திய ரூபாய் நோட்டுகளிலேயே  ஆங்கிலம் உட்பட 17 மொழிகள்தான் இருக்கு, கேட்டோ!  ஆனா இவுங்க இந்தியாவையே தூக்கிச் சாப்ட்ட மாதிரி!!!!

இந்திய மொழிகளிலேயே நாலு  இதுலே!  ஹிந்தி, குஜராத்தி, பஞ்சாபி மற்றும் தமிழ்!

முருகன் அவ்வையாரிடம் கேட்டாப்லெ... 'ஒன்று இரண்டு மூன்றுன்னு அஞ்சு வரை வரிசைப்படுத்திச் சொல்லுக' தான்!  சொல்லிட்டோம்.  அதுலே ஜெயிக்கிற கொடிக்கும், இப்போ இருக்கும் கொடிக்குமா போட்டி வாக்கெடுப்பு (இதுவும் தபால் ஓட்டுதான்!)  ஒன்னு பாக்கி.


இனி  மார்ச் மாதம் 3 முதல் 24 வரை இன்னொரு ரெஃபரண்டம்  இருக்கும். அதுலே ஜெயிச்சு வரும் கொடியை  எங்கள் கொடி தினமான ஆன்ஸாக் டே அன்னிக்கு  (ஏப்ரல் 25)முதல்முறையா ஏத்திருவோம்!

முதல் கட்டத் தீர்ப்பு என்னன்னு  விடை கிடைச்சதும் சொல்றேன், ஓக்கே?

ஒரு சரித்திர சம்பவத்துலே  நாமும் இருக்கோம் என்பதுதான்  முக்கியம் :-)




Friday, November 27, 2015

கேலண்டர் இல்லாட்டி என்ன? சாங்கிக்குப் போனால் தெரிஞ்சுறாதா ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 97. கடைசிப் பகுதி )

அடுத்து வரப்போகும் பண்டிகை என்னன்னு தெரிஞ்சுக்கணுமுன்னா....  சிங்கை, சாங்கி விமானநிலையத்துக்குப் போனால் போதும்! இப்ப என்ன வரப்போகுது?  கிறிஸ்மஸ். தீபாவளி முடிஞ்ச கையோட அதுக்கான  அலங்காரங்களை எடுத்துட்டு ஏசுப்பாப்பா பர்த் டே கொண்டாட ரெடி ஆகிட்டாங்க.
 விழாக்கால வாழ்த்துகள் என்பதை ஏதுக்கு  ஜெர்மன் மொழியில் சொல்லி வச்சுருக்காங்கன்னுதான் புரியலை :-)

 ச்சும்மாச் சொல்லக்கூடாது....  அலங்காரங்கள் அத்தனையும் அருமை! ஏனோதானோன்னு செஞ்சு வைக்கிறதெல்லாம் இங்கே இல்லை. பார்த்ததும் நமக்கும் உற்சாகம் தொத்திக்குது!  மக்கள்ஸ் கூட்டம் இங்கேதான் நிறைய.  குட்டிப் பசங்களுக்கு லட்டு கொடுத்தாப்லெ ஒரு கொண்டாட்டம் :-)



கொஞ்சநேரம் ரசிச்சு, க்ளிக்கிட்டு உள்ளே போயிட்டோம். மகளுக்கான சில அலங்காரப்பொருட்கள் வாங்கிக்கணும். சென்னைக்கிளையில் கிடைக்கலையேன்னு ரெண்டாவது டெர்மினலுக்குப்போய் வாங்கிக்கிட்டு, அங்கேயும் கொஞ்சமாச் சுத்திப் பார்த்துட்டு மூணாவதுக்குப் போனோம். ஸ்கை ட்ரெயின் தான் இருக்கே! நமக்கென்ன கவலை!


 போகும்போது கையில் இருந்த சிங்கைச் சில்லறைகளை  (பல பயணங்களில் சேர்ந்துபோனவை) நோட்டாக மாற்றியதில் கொஞ்சம்  எடுத்து  ஒரு கிளி வாங்கினேன்:-)   நெஞ்சிலும் , தலையிலும் கல்லு வச்ச து! கொலுவுக்கு ஆகுமுல்லே :-)


மூணாவது டெர்மினலில் இருக்கும் லவுஞ்சுப் போய் ஒரு கப்புச்சீனோ குடிச்சுட்டு  தூங்கிட்டார் நம்மவர். நான் வலை மேய்ஞ்சுக்கிட்டு இருந்தேன்.

  'போதும் தூங்குனது. கிளம்பி கொஞ்சம் ஆறுமணி வரை சரியான தூக்கம்.வேடிக்கை பார்த்துட்டுக் கேட்டுக்குப் போனால் சரியா இருக்கும்' என்றதால் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டுக் கிளம்பிப்போய் குறித்த நேரத்தில்  விமானத்துக்குள் போயாச். வழித்துணைக்கு மோகமுள் கையில்.

சாப்பாடு வரும்வரை நேரம் போக்கிட்டுத் தூங்குனவள்தான் பொழுது விடியும் போதுதான் எழுந்தேன். நியூஸியை நெருங்குது விமானம்.  சதர்ன் ஆல்ப்ஸ் பார்த்ததும்  இன்னும் கொஞ்ச நேரம்தான்னு  மகிழ்ச்சி வரும். ராத்திரி ஃப்ளைட் என்பதால்  வேடிக்கை ஒன்னும் இல்லாமல் போரிங்காத்தான் இருக்கும் எப்பவும்.

இன்னும்  ரெண்டே வாரத்தில் சம்மர் எங்களுக்கு. ஆனாலும்  மலைகள் இன்னும் பனிப்போர்வைக்குள்ளேதான். இது ஒரு பயங்கர அழகு!

 அப்புறம் கேன்டர்பரி ப்ளெய்ன்ஸ், சதுரவயல்கள்... ஊரு வந்தே வந்துருச்சு.



ஸ்மார்ட்கேட் வழியாப் போவது சுலபமா இருக்கு. பெட்டிகளுக்குத்தான் கொஞ்சநேரம் காத்திருக்க வேண்டியதாப் போச்சு. டிக்ளேர் பண்ண வேண்டிய ஐட்டங்களைத் தனிப்பையில் வச்சுக்குவார் நம்மவர் என்பதால் மற்ற பொட்டிகளைக் குடைய வேண்டிய வேலை நமக்கில்லை.


போனமுறை நாட்டுக்குள்ளேயும் வீட்டுக்குள்ளேயும்  வந்த  நார்த்தங்காய் உப்பு ஊறுகாய்க்கு, இந்தமுறை  நாட்டுக்குள் வர அனுமதி கிடைக்கலை. ப்ச்.....


டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு வந்தோம். பெருமாள்  காத்திருந்தார்.  இப்ப மணி காலை பத்தே முக்கால். மாலை 4 மணி ஆனதும் போய் ஹாஸ்ட்டலில் இருந்து  நம்ம ரஜ்ஜூவைக் கூட்டி வந்தோம். மகள் 6 மணிக்கு வர்றேன்னு சொன்னாள்.
போனவருசம் போய்வந்த  இந்தியப்பயணம் 97 பகுதிகளா நீண்டுதான் போச்சு. இனி  ஒரு ரெண்டு மாசத்துக்கு  வெளியூர் பயணம் இல்லையாக்கும், கேட்டோ!


அப்ப அதுவரை?  உள்ளூர் சமாச்சாரம் ஏராளமா இருக்குல்லே :-))))

உடல் அலுப்பு இருந்தாலும் ஊர் போய் வந்தது  மனசுக்கு மகிழ்ச்சிதான்.

பொறுமையாக தொடர்ந்துவந்த வாசகப் பெருமக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்! 


எத்தனை மனிதர்கள்! எத்தனை சம்பவங்கள்! எத்தனைஅனுபவங்கள்! எத்தனை கோவில்கள்!


பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!!!


Wednesday, November 25, 2015

பழம் பழமுன்னு ஏமாத்திட்டாங்களே.....

சிவன் ஃபேமிலி. மாம்பழம், உலகை வலம் வருதல் எபிஸோடு தெரியும்தானே?  சம்பவம் நடந்தது இங்கேதான்!  முருகன் பாட்டுக்கு மயில்மேல் ஏறி உலகம் சுத்தப்போயிட்டார். நம்ம புள்ளையார் தாய்தகப்பனை வலம் வந்து மாம்பழத்துக்குக் கையை நீட்டினார்.  பழமும் கிடைச்சது.  நல்லாத் திருப்பிப் பார்க்கிறார்.  அட...  காய் :-(   இன்னும் முழுசுமாப் பழுக்கலை.  காயைப்போய்......ன்னார்.  ததாஸ்து!  இடத்துக்குப்பேர் காயப்போய் :-)  KAIAPOI.

நம்ம கிறைஸ்ட்சர்ச் நகரில் இருந்து  வடக்கே போகும் மெயின் நார்த் ரோடு பயணம்.  (Waimakariri )வைமாகாரிரி நதிப் பாலத்தைக் கடந்து போகணும். நம்ம நியூஸியின் தெற்குத்தீவின் பெரிய நதிகளில் ஒன்னு இது.  சதர்ன் ஆல்ப்ஸ் மலைகளில் இருந்து உற்பத்தியாகி  151 கிமீ பயணிச்சு நம்ம ஊராண்டை கடலில் கலக்குது!

நம்ம வீட்டில் இருந்தே ஒரு 18 கிமீதூரம்தான் நதியாண்டை போக.  அங்கே பாலத்தையடுத்தே  இன்னொரு  தண்டம் இருக்கு,  நம்ம ஊருக்குத் திரும்பி வரும் பாதைக்கருகில். போறவழி மோட்டர்வே என்பதால் நாம் போகும் வழிக்கு எதிர்சாரியில் தெரியும்.  நல்ல வியூ வேணுமுன்னு  சொன்னேன்.  வேறெங்கும் நிறுத்த முடியாது என்பதால் எக்ஸிட் வருதான்னு பார்த்துக்கிட்டே இருக்கும்போதே....  இவர்  இன்னும் ஒரு நாலைஞ்சு கிமீ போயிட்டு ரைட்டில் பிரியும் சாலைக்குள் போயிட்டார்.  இந்த ஊர் தான் அந்த காய்ப்போய்! ஆத்தோரத்து ஊர் இது.


சின்ன ஊர்தான்.  ஊர் வந்தே நூத்திஅம்பது வருசம்தான் ஆகி இருக்கு. ஆனால்... நியூஸி சரித்திரத்தில்   இடம்பெற்ற ஊர். மவொரி மக்கள் குழுக்கள் குடியிருந்த  இடங்களில்  முக்கியமான ஒன்னு.  இங்கே  போன மக்கள்தொகை கணக்கெடுப்பில் (2006) ஊரில் 10,200 பேர் வசிக்கறதாச் சொல்றாங்க.
  இப்ப எங்கூரில் நிலநடுக்கம் வந்த காரணம், ஊரின் கிழக்குப்பகுதியில் ஒரு பத்தாயிரத்துச் சொச்சம் வீடுகள் வசிக்கமுடியாத நிலமையில் ஆகிப்போச்சு. நிறைய புத்தம்புது வீடுகள் வேற. வீடுகள் அட்டகாசமா இருக்குன்னாலும், வீட்டின் நிலம் சரியில்லையாம். வீடுகள் அப்படியே கீழே  புதைஞ்சு போகும் ஆபத்து.  லிக்யூஃபிகேஷன் என்று சொல்றாங்க. நிலத்தில் இருந்து தண்ணீர் பீறிட்டு வருது.


அதனால் பல குடும்பங்கள் இடம் மாறி வசிக்க வேண்டியதாப் போயிருக்கு. நம்ம நகரில் இருந்து காய்ப்போய் வெறும் 18 கீமீதான் என்பதால்  காய்ப்போயில் வீடு கட்டிக்கிட்டு குடிபோனவங்களும்,   மத்தபடி இப்ப இருக்கும் லைஃப் ஸ்டைல் மாத்தி அமைச்சுக்கலாமுன்னு  அதுக்குண்டான பெரிய பெரிய மனைகளை வாங்கிப் போனவங்களுமா இப்பக் கூட்டம் அதிகரிச்சுக்கிட்டே இருக்கு.
டவுனுக்குள்ளே போய்  காய்ப்போய் ஆற்றுப் பாலத்துக்கு இந்தாண்டை லெஃப்ட் எடுத்து  வண்டியை நிறுத்தினார் நம்மவர். இங்கேதான் வார் மெமோரியல் இருக்கு!

1899- 1902 நடந்த  ஆஃப்ரிகன் போர்,  அதன்பின் நடந்த முதலிரண்டு உலகப்போர் இவைகளில் கலந்துக்கிட்டு  உயிர்த்தியாகம் செய்த இந்த ஏரியா மக்களின் பெயர்களோடு   கல்வெட்டுகளும், ஞாபகார்த்த  வெண்சிலுவைகளுமா இருப்பதைப் பார்த்தால் சட்னு ஒரு சோகம் வரத்தான் செய்யுது மனசுக்குள்ளே!
  நம்முடன் வந்த நண்பர் ஸ்ரீதர்.




ஒன்னு மட்டும் நிஜமாவே பாராட்டப்படவேண்டிய அம்சம் இங்கே நியூஸியில்னு சொன்னால் அது இந்த வார் மெமோரியல்ஸ்தான். ஒரு ஏரியாவில் சண்டையில் கலந்துக்க ஒரே ஒரு மனிதர்  மட்டுமே போயிருந்தாலும் கூட அங்கே ஒரு  போர் நினைவுச்சின்னம் வச்சுருக்கும் சிற்றூர்கள் இங்கே ஏராளம்!

உள்ளூர் மக்களின் தேவைக்கு ஏற்றபடி நூலகத்தை பெருசுபண்ணிக் கட்டி இருக்காங்க.  அன்றைக்கு ஞாயித்துக்கிழமையாப் போனதால் மூடி இருக்கு. கடைவீதியிலும் ஒரெ டெய்ரி, ஒரு பெட்ரோல் ஸ்டேஷன் தவிர  மற்ற  எல்லாமே  மூடிட்டாங்க.  போகட்டும் நாம் பார்க்க வந்த சமாச்சாரம் இதுவா? வேறொன்னு இல்லையோ?

 நூலக வாசலில் வாஸ்து :-)

 வைமாகரிரி ஆற்றுப் பாலம்
போனவழியாவே திரும்பி வர்றோம். தூரக்கெ அரைக் கோளமாத் தெரிஞ்சது 'அது'.  வைமாகரீரி பாலம் தாண்டுன கையோடு முழு உருவத்தையும் பார்க்கலாம். மோட்டர்வே என்பதால் வண்டியை நிறுத்த முடியாது. அதனால்  பாலம் கடந்தவுடன் இருந்த எக்ஸிட்டில் போய் மார்ஷ்லேண்ட் சாலையில் சேர்ந்துக்கிட்டோம். பின்னால் போக்குவரத்து இல்லை என்பதால் ஒரு  ரெண்டு நிமிட் ஓரங்கட்டினார் நம்மவர். சட்னு இறங்கி க்ளிக்கிட்டேன்.



இது நம்மூரு கலைஞர் Neil Dawson  படைப்பு.  2004 வது வருசம் அண்டை நாட்டு புதுவருச விழாவுக்குச் செஞ்சுருக்கார்.  ஸிட்னி ஹார்பர் ப்ரிட்ஜில் இதை வச்சுருந்தாங்க(ளாம்).  மூணு வருசம் கழிச்சு,  போதும், நாங்கெல்லாம் பார்த்துட்டோம்.  கொண்டு வந்து  வச்சதுக்கு நன்றி.  நீங்க(ளே) எடுத்துக்கிட்டுப் போயிருங்கன்னுட்டாங்க.


சிட்னி  ஹார்பர் ப்ரிட்ஜில்  இப்படி !

ரெண்டு மில்லியன் செலவழிச்சுச் செஞ்சதை பெரியமனசோடு  சொந்த ஊருக்கே  தானம் பண்ணிடலாமுன்னு  தீர்மானிச்சுட்டார். நம்ம சிட்டிக் கவுன்ஸிலும்,  கலை விரும்பிகளும் ச்சும்மா இருப்பாங்களா?

 ஏற்கெனவே  இவருடைய படைப்பு ஒன்னு Chalice in Cathedral Square நம்மூர் தேவாலயத்து  வாசலில்  இருக்கு.  மில்லினியம் பொறப்பைக் கொண்டாட இதை  வச்சாங்க. மேலும் அப்போதான் எங்க ஊருக்கும்   150 வயசாகி இருந்துச்சு.  அதுக்கப்புறம் ஆறு வருசம் கழிச்சுத்தான் மாட்சிமை தாங்கிய  மஹாராணி விக்டோரியா அவர்களால் மாநகர அந்தஸ்த்து கிடைச்சு 150 வருசமாச்சுன்னு    2006 லே, 150  மீட்டர் நீளக் கேக் செஞ்சு கொண்டாடினோம்.
மேலே படம்:   இறந்த காலம்! நிலநடுக்கத்துக்கு முன்.


  இந்த சலீஸ்  18  மீட்டர் உயரம். கீழ்ப்பக்கம் 2 மீட்டர் சுற்றளவு.  மேலே 8.5 மீட்டர் சுற்றளவில் செஞ்சுருக்கார் நீல்.  ஐஸ் க்ரீம் கோன் வடிவம்.  நியூஸி செடிகொடிகளின் உருவம்தான் டிஸைனில் இருக்கு. இது நிலநடுக்கத்தில் இருந்து தப்பிச்சுருச்சு! நல்ல ஸ்ட்ராங்கான பேஸ்மென்ட். 

படம்:  இப்போ  அஞ்சு நாட்களுக்கு முன்.


அண்டை நாட்டில் இருந்து பிரிச்செடுத்து,  இங்கே கொண்டு வந்து  (Fan fare is the name!) இதைக் கொஞ்சம் மேம்படுத்தி, தகுந்த  இடம் பார்த்து வச்சுப் பிடிப்பிச்சதுக்கு ஆன செலவு மட்டும் 1.3 மில்லியன் டாலர்.    கலைப்பொருள் ரெண்டு மில்லியன் டாலர் மதிப்பு என்பதால்  செஞ்ச செலவு தகும்னு நியாயம் சொல்லிக்கிட்டு இருக்காங்க கலைப்பிரியர்கள்!

கடல்தாண்டி இதைக் கொண்டுவந்து  பிரதிஷ்டை செய்ய எட்டு வருச காலமும் ஆகிப்போச்சு. இப்பதான் ஒரு  அஞ்சு மாசத்துக்கு முன்னே  மவொரி மூத்தோர்களும், நம்மூரு விஸ்ஸர்ட், இன்னும் சில பாதிரியார்களுமாச் சேர்ந்து  மேயர், கவுன்ஸிலர், கொஞ்சம் பொதுமக்கள் போன்ற முக்கியஸ்த்தர்கள் முன்னிலையில் பூஜை புனஸ்காரங்கள் செஞ்சு ஆசீர்வதிச்சு  திறந்து வச்சுருந்தாங்க.

25 மீட்டர் உயரம்.  ஸ்டீல் கம்பிகளால் செஞ்ச உருண்டைவடிவத்தில் 360  நாலுமூலைக் காத்தாடிகளை வெவ்வேற திசையில் வச்சுருக்கார். எந்தத்  திசையில் காத்தடிச்சாலும் எதாவது சிலபல காத்தாடிகள் சுத்தத் தொடங்கிரும். சரியாச் சொன்னால் பண்டைய நாட்களில் நம்மூர் திருவிழாக்களில் ஒரு  பெரிய மூங்கில் குச்சியில் வண்ணத்தாள்களில் செஞ்ச காத்தாடிகளை சொருகி வச்சு,  தோளில் அந்த மூங்கிலைத் தூக்கிக்கிட்டு வந்து பிள்ளைகள் கூட்டத்துக்குக் காத்தாடிகளை  விற்கும் ஆட்களை நினைவுபடுத்திக்கலாம். என்ன ஒன்னு அது கலர் கலர் பேப்பர். இது  ஸ்டீலில் செஞ்சது. அம்புட்டுதான்.

நம்மூர் இரவில்  இப்படி
வழக்கம்போல்  பாராட்டுபவர்களொரு பக்கமும்,  தண்டச்செலவுன்னு கூவும் மக்கள் ஒரு பக்கமுமா இருக்க, நடக்கணும் என்பது நடக்காமப் போகாதுன்னு, நடந்தே போச்சு.  கொஞ்சம் கூடுதலா எதிர்ப்புகள்  அதிவேக மோட்டர்வே பயணிகளால்தான்.  வேகமான சாலையில்  வரும்போது,  மாலைச்சூரியனின் ஒளி இதில் பட்டுத்தெறிச்சுக் கண்களைக் குருடாக்குதுன்னு சொல்லிச்சொல்லி,  இப்பக் கொஞ்சம்  அடங்கிட்டாங்க.

காசை தண்டம் பண்ணிட்டாங்கன்னு புலம்பறேனே...  இது  ஒரு குறிப்பிட்ட   நாட்டைப்போல  ஆட்டையைப் போடும் சமாச்சாரமில்லை. அவ்வளவா  சயின்டிஃபிக்கா கொள்ளை அடிக்க இன்னும் கத்துக்கலை.  காசோட அருமை தெரியாம  தூம்தாம்னு  அசட்டையா செலவு பண்ணும் அரசியல்தான் இங்கே. வரி போட்டுட்டால் மக்கள்ஸ் கட்டிருவாங்க.  ஏமாத்த இன்னும் நாங்க கத்துக்கலைன்றது இன்னொரு சமாச்சாரம்.  வர்ற காசை  'அழகு பண்ணறேன், கலையை வளர்க்கறேன்'னு காலி பண்ணும் குணம்.  வேறென்ன சொல்ல?


இப்ப நாம் நிக்கும் மார்ஷ்லேண்ட் ரோட் வழியாகவே வீட்டுக்குத் திரும்பலாம். இங்கே இடம் மாறி வந்த புதுசில் இந்த  சாலையில் வாரம் தப்பாமல் பயணிச்சது  ஒரு காலம். அதெல்லாமொரு 28 வருசத்துக்கு முந்தின சமாச்சாரம்.

இப்ப இன்னுமொரு கூடுதல் அட்ராக்‌ஷன் இந்த சாலையில் இருக்கேன்னு நினைவுக்கு வந்ததும்,  நம்முடன் பயணிக்கும் நண்பருக்கும்  காமிக்கலாமுன்னு அங்கே(யும்) போனோம்.  அது பின்னொரு நாளில் சொல்வேன்:-)


இப்போதைக்குப் புலம்பல்ஸ்  எழுதி முடிச்சாச்.  எப்படியும் சிஸ்ட்டத்திலிருந்து  துரத்த இதைவிட வேறவழி இல்லை, கேட்டோ!

எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசி பாருங்க நான்!  நாலு வருசத்துக்கு முன்னேயே காத்தாடி செஞ்சு தோட்டத்தில் வச்சுப் பார்க்கலாமுன்னு  செஞ்சு பார்த்துருக்கேன்:-))))))

அனைவருக்கும் கார்த்திகைப்  பெருநாள் வாழ்த்து(க்)கள். விளக்கு வச்சுருவோம், ஓக்கே!