Wednesday, November 25, 2015

பழம் பழமுன்னு ஏமாத்திட்டாங்களே.....

சிவன் ஃபேமிலி. மாம்பழம், உலகை வலம் வருதல் எபிஸோடு தெரியும்தானே?  சம்பவம் நடந்தது இங்கேதான்!  முருகன் பாட்டுக்கு மயில்மேல் ஏறி உலகம் சுத்தப்போயிட்டார். நம்ம புள்ளையார் தாய்தகப்பனை வலம் வந்து மாம்பழத்துக்குக் கையை நீட்டினார்.  பழமும் கிடைச்சது.  நல்லாத் திருப்பிப் பார்க்கிறார்.  அட...  காய் :-(   இன்னும் முழுசுமாப் பழுக்கலை.  காயைப்போய்......ன்னார்.  ததாஸ்து!  இடத்துக்குப்பேர் காயப்போய் :-)  KAIAPOI.

நம்ம கிறைஸ்ட்சர்ச் நகரில் இருந்து  வடக்கே போகும் மெயின் நார்த் ரோடு பயணம்.  (Waimakariri )வைமாகாரிரி நதிப் பாலத்தைக் கடந்து போகணும். நம்ம நியூஸியின் தெற்குத்தீவின் பெரிய நதிகளில் ஒன்னு இது.  சதர்ன் ஆல்ப்ஸ் மலைகளில் இருந்து உற்பத்தியாகி  151 கிமீ பயணிச்சு நம்ம ஊராண்டை கடலில் கலக்குது!

நம்ம வீட்டில் இருந்தே ஒரு 18 கிமீதூரம்தான் நதியாண்டை போக.  அங்கே பாலத்தையடுத்தே  இன்னொரு  தண்டம் இருக்கு,  நம்ம ஊருக்குத் திரும்பி வரும் பாதைக்கருகில். போறவழி மோட்டர்வே என்பதால் நாம் போகும் வழிக்கு எதிர்சாரியில் தெரியும்.  நல்ல வியூ வேணுமுன்னு  சொன்னேன்.  வேறெங்கும் நிறுத்த முடியாது என்பதால் எக்ஸிட் வருதான்னு பார்த்துக்கிட்டே இருக்கும்போதே....  இவர்  இன்னும் ஒரு நாலைஞ்சு கிமீ போயிட்டு ரைட்டில் பிரியும் சாலைக்குள் போயிட்டார்.  இந்த ஊர் தான் அந்த காய்ப்போய்! ஆத்தோரத்து ஊர் இது.


சின்ன ஊர்தான்.  ஊர் வந்தே நூத்திஅம்பது வருசம்தான் ஆகி இருக்கு. ஆனால்... நியூஸி சரித்திரத்தில்   இடம்பெற்ற ஊர். மவொரி மக்கள் குழுக்கள் குடியிருந்த  இடங்களில்  முக்கியமான ஒன்னு.  இங்கே  போன மக்கள்தொகை கணக்கெடுப்பில் (2006) ஊரில் 10,200 பேர் வசிக்கறதாச் சொல்றாங்க.
  இப்ப எங்கூரில் நிலநடுக்கம் வந்த காரணம், ஊரின் கிழக்குப்பகுதியில் ஒரு பத்தாயிரத்துச் சொச்சம் வீடுகள் வசிக்கமுடியாத நிலமையில் ஆகிப்போச்சு. நிறைய புத்தம்புது வீடுகள் வேற. வீடுகள் அட்டகாசமா இருக்குன்னாலும், வீட்டின் நிலம் சரியில்லையாம். வீடுகள் அப்படியே கீழே  புதைஞ்சு போகும் ஆபத்து.  லிக்யூஃபிகேஷன் என்று சொல்றாங்க. நிலத்தில் இருந்து தண்ணீர் பீறிட்டு வருது.


அதனால் பல குடும்பங்கள் இடம் மாறி வசிக்க வேண்டியதாப் போயிருக்கு. நம்ம நகரில் இருந்து காய்ப்போய் வெறும் 18 கீமீதான் என்பதால்  காய்ப்போயில் வீடு கட்டிக்கிட்டு குடிபோனவங்களும்,   மத்தபடி இப்ப இருக்கும் லைஃப் ஸ்டைல் மாத்தி அமைச்சுக்கலாமுன்னு  அதுக்குண்டான பெரிய பெரிய மனைகளை வாங்கிப் போனவங்களுமா இப்பக் கூட்டம் அதிகரிச்சுக்கிட்டே இருக்கு.
டவுனுக்குள்ளே போய்  காய்ப்போய் ஆற்றுப் பாலத்துக்கு இந்தாண்டை லெஃப்ட் எடுத்து  வண்டியை நிறுத்தினார் நம்மவர். இங்கேதான் வார் மெமோரியல் இருக்கு!

1899- 1902 நடந்த  ஆஃப்ரிகன் போர்,  அதன்பின் நடந்த முதலிரண்டு உலகப்போர் இவைகளில் கலந்துக்கிட்டு  உயிர்த்தியாகம் செய்த இந்த ஏரியா மக்களின் பெயர்களோடு   கல்வெட்டுகளும், ஞாபகார்த்த  வெண்சிலுவைகளுமா இருப்பதைப் பார்த்தால் சட்னு ஒரு சோகம் வரத்தான் செய்யுது மனசுக்குள்ளே!
  நம்முடன் வந்த நண்பர் ஸ்ரீதர்.




ஒன்னு மட்டும் நிஜமாவே பாராட்டப்படவேண்டிய அம்சம் இங்கே நியூஸியில்னு சொன்னால் அது இந்த வார் மெமோரியல்ஸ்தான். ஒரு ஏரியாவில் சண்டையில் கலந்துக்க ஒரே ஒரு மனிதர்  மட்டுமே போயிருந்தாலும் கூட அங்கே ஒரு  போர் நினைவுச்சின்னம் வச்சுருக்கும் சிற்றூர்கள் இங்கே ஏராளம்!

உள்ளூர் மக்களின் தேவைக்கு ஏற்றபடி நூலகத்தை பெருசுபண்ணிக் கட்டி இருக்காங்க.  அன்றைக்கு ஞாயித்துக்கிழமையாப் போனதால் மூடி இருக்கு. கடைவீதியிலும் ஒரெ டெய்ரி, ஒரு பெட்ரோல் ஸ்டேஷன் தவிர  மற்ற  எல்லாமே  மூடிட்டாங்க.  போகட்டும் நாம் பார்க்க வந்த சமாச்சாரம் இதுவா? வேறொன்னு இல்லையோ?

 நூலக வாசலில் வாஸ்து :-)

 வைமாகரிரி ஆற்றுப் பாலம்
போனவழியாவே திரும்பி வர்றோம். தூரக்கெ அரைக் கோளமாத் தெரிஞ்சது 'அது'.  வைமாகரீரி பாலம் தாண்டுன கையோடு முழு உருவத்தையும் பார்க்கலாம். மோட்டர்வே என்பதால் வண்டியை நிறுத்த முடியாது. அதனால்  பாலம் கடந்தவுடன் இருந்த எக்ஸிட்டில் போய் மார்ஷ்லேண்ட் சாலையில் சேர்ந்துக்கிட்டோம். பின்னால் போக்குவரத்து இல்லை என்பதால் ஒரு  ரெண்டு நிமிட் ஓரங்கட்டினார் நம்மவர். சட்னு இறங்கி க்ளிக்கிட்டேன்.



இது நம்மூரு கலைஞர் Neil Dawson  படைப்பு.  2004 வது வருசம் அண்டை நாட்டு புதுவருச விழாவுக்குச் செஞ்சுருக்கார்.  ஸிட்னி ஹார்பர் ப்ரிட்ஜில் இதை வச்சுருந்தாங்க(ளாம்).  மூணு வருசம் கழிச்சு,  போதும், நாங்கெல்லாம் பார்த்துட்டோம்.  கொண்டு வந்து  வச்சதுக்கு நன்றி.  நீங்க(ளே) எடுத்துக்கிட்டுப் போயிருங்கன்னுட்டாங்க.


சிட்னி  ஹார்பர் ப்ரிட்ஜில்  இப்படி !

ரெண்டு மில்லியன் செலவழிச்சுச் செஞ்சதை பெரியமனசோடு  சொந்த ஊருக்கே  தானம் பண்ணிடலாமுன்னு  தீர்மானிச்சுட்டார். நம்ம சிட்டிக் கவுன்ஸிலும்,  கலை விரும்பிகளும் ச்சும்மா இருப்பாங்களா?

 ஏற்கெனவே  இவருடைய படைப்பு ஒன்னு Chalice in Cathedral Square நம்மூர் தேவாலயத்து  வாசலில்  இருக்கு.  மில்லினியம் பொறப்பைக் கொண்டாட இதை  வச்சாங்க. மேலும் அப்போதான் எங்க ஊருக்கும்   150 வயசாகி இருந்துச்சு.  அதுக்கப்புறம் ஆறு வருசம் கழிச்சுத்தான் மாட்சிமை தாங்கிய  மஹாராணி விக்டோரியா அவர்களால் மாநகர அந்தஸ்த்து கிடைச்சு 150 வருசமாச்சுன்னு    2006 லே, 150  மீட்டர் நீளக் கேக் செஞ்சு கொண்டாடினோம்.
மேலே படம்:   இறந்த காலம்! நிலநடுக்கத்துக்கு முன்.


  இந்த சலீஸ்  18  மீட்டர் உயரம். கீழ்ப்பக்கம் 2 மீட்டர் சுற்றளவு.  மேலே 8.5 மீட்டர் சுற்றளவில் செஞ்சுருக்கார் நீல்.  ஐஸ் க்ரீம் கோன் வடிவம்.  நியூஸி செடிகொடிகளின் உருவம்தான் டிஸைனில் இருக்கு. இது நிலநடுக்கத்தில் இருந்து தப்பிச்சுருச்சு! நல்ல ஸ்ட்ராங்கான பேஸ்மென்ட். 

படம்:  இப்போ  அஞ்சு நாட்களுக்கு முன்.


அண்டை நாட்டில் இருந்து பிரிச்செடுத்து,  இங்கே கொண்டு வந்து  (Fan fare is the name!) இதைக் கொஞ்சம் மேம்படுத்தி, தகுந்த  இடம் பார்த்து வச்சுப் பிடிப்பிச்சதுக்கு ஆன செலவு மட்டும் 1.3 மில்லியன் டாலர்.    கலைப்பொருள் ரெண்டு மில்லியன் டாலர் மதிப்பு என்பதால்  செஞ்ச செலவு தகும்னு நியாயம் சொல்லிக்கிட்டு இருக்காங்க கலைப்பிரியர்கள்!

கடல்தாண்டி இதைக் கொண்டுவந்து  பிரதிஷ்டை செய்ய எட்டு வருச காலமும் ஆகிப்போச்சு. இப்பதான் ஒரு  அஞ்சு மாசத்துக்கு முன்னே  மவொரி மூத்தோர்களும், நம்மூரு விஸ்ஸர்ட், இன்னும் சில பாதிரியார்களுமாச் சேர்ந்து  மேயர், கவுன்ஸிலர், கொஞ்சம் பொதுமக்கள் போன்ற முக்கியஸ்த்தர்கள் முன்னிலையில் பூஜை புனஸ்காரங்கள் செஞ்சு ஆசீர்வதிச்சு  திறந்து வச்சுருந்தாங்க.

25 மீட்டர் உயரம்.  ஸ்டீல் கம்பிகளால் செஞ்ச உருண்டைவடிவத்தில் 360  நாலுமூலைக் காத்தாடிகளை வெவ்வேற திசையில் வச்சுருக்கார். எந்தத்  திசையில் காத்தடிச்சாலும் எதாவது சிலபல காத்தாடிகள் சுத்தத் தொடங்கிரும். சரியாச் சொன்னால் பண்டைய நாட்களில் நம்மூர் திருவிழாக்களில் ஒரு  பெரிய மூங்கில் குச்சியில் வண்ணத்தாள்களில் செஞ்ச காத்தாடிகளை சொருகி வச்சு,  தோளில் அந்த மூங்கிலைத் தூக்கிக்கிட்டு வந்து பிள்ளைகள் கூட்டத்துக்குக் காத்தாடிகளை  விற்கும் ஆட்களை நினைவுபடுத்திக்கலாம். என்ன ஒன்னு அது கலர் கலர் பேப்பர். இது  ஸ்டீலில் செஞ்சது. அம்புட்டுதான்.

நம்மூர் இரவில்  இப்படி
வழக்கம்போல்  பாராட்டுபவர்களொரு பக்கமும்,  தண்டச்செலவுன்னு கூவும் மக்கள் ஒரு பக்கமுமா இருக்க, நடக்கணும் என்பது நடக்காமப் போகாதுன்னு, நடந்தே போச்சு.  கொஞ்சம் கூடுதலா எதிர்ப்புகள்  அதிவேக மோட்டர்வே பயணிகளால்தான்.  வேகமான சாலையில்  வரும்போது,  மாலைச்சூரியனின் ஒளி இதில் பட்டுத்தெறிச்சுக் கண்களைக் குருடாக்குதுன்னு சொல்லிச்சொல்லி,  இப்பக் கொஞ்சம்  அடங்கிட்டாங்க.

காசை தண்டம் பண்ணிட்டாங்கன்னு புலம்பறேனே...  இது  ஒரு குறிப்பிட்ட   நாட்டைப்போல  ஆட்டையைப் போடும் சமாச்சாரமில்லை. அவ்வளவா  சயின்டிஃபிக்கா கொள்ளை அடிக்க இன்னும் கத்துக்கலை.  காசோட அருமை தெரியாம  தூம்தாம்னு  அசட்டையா செலவு பண்ணும் அரசியல்தான் இங்கே. வரி போட்டுட்டால் மக்கள்ஸ் கட்டிருவாங்க.  ஏமாத்த இன்னும் நாங்க கத்துக்கலைன்றது இன்னொரு சமாச்சாரம்.  வர்ற காசை  'அழகு பண்ணறேன், கலையை வளர்க்கறேன்'னு காலி பண்ணும் குணம்.  வேறென்ன சொல்ல?


இப்ப நாம் நிக்கும் மார்ஷ்லேண்ட் ரோட் வழியாகவே வீட்டுக்குத் திரும்பலாம். இங்கே இடம் மாறி வந்த புதுசில் இந்த  சாலையில் வாரம் தப்பாமல் பயணிச்சது  ஒரு காலம். அதெல்லாமொரு 28 வருசத்துக்கு முந்தின சமாச்சாரம்.

இப்ப இன்னுமொரு கூடுதல் அட்ராக்‌ஷன் இந்த சாலையில் இருக்கேன்னு நினைவுக்கு வந்ததும்,  நம்முடன் பயணிக்கும் நண்பருக்கும்  காமிக்கலாமுன்னு அங்கே(யும்) போனோம்.  அது பின்னொரு நாளில் சொல்வேன்:-)


இப்போதைக்குப் புலம்பல்ஸ்  எழுதி முடிச்சாச்.  எப்படியும் சிஸ்ட்டத்திலிருந்து  துரத்த இதைவிட வேறவழி இல்லை, கேட்டோ!

எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசி பாருங்க நான்!  நாலு வருசத்துக்கு முன்னேயே காத்தாடி செஞ்சு தோட்டத்தில் வச்சுப் பார்க்கலாமுன்னு  செஞ்சு பார்த்துருக்கேன்:-))))))

அனைவருக்கும் கார்த்திகைப்  பெருநாள் வாழ்த்து(க்)கள். விளக்கு வச்சுருவோம், ஓக்கே!


18 comments:

said...

கார்த்திகைத் திருநாளில் பல இடங்களுக்கு எங்களை அழைத்துச் சென்றமைக்கு நன்றி. வழக்கம்போல் புகைப்படங்கள் அருமை.

said...

பிரமிக்க வைக்கிறது அம்மா...

said...

KAIAPOI .... சூப்பர் விளக்கம்


அழகான இடங்கள்...

said...

ஒரு இயற்கைப் பேரழிவோட விளைவுகளும் தாக்கங்களும் எவ்வளவு தூரத்துக்குத் தொடர்ந்து வருது பாருங்க. இந்த வருடம் சென்னைல பெஞ்ச மழையோட விளைவுகள் எவ்வளவு தூரத்துக்குப் போகும்னு தெரியல. நல்ல விளைவுகளை உண்டாக்குனாச் சரி.

பொதுவாகவே மேற்கத்தியர்கள் பெருசாச் சேத்து வைக்காம செலவு செய்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதான் அரசாங்கமும் அப்படிப் பண்ணுது போல.

said...

உங்களுக்கும் வார்த்தை விளையாட்டு நன்றாக வருகிறது பாராட்டுக்கள்.

said...

//வர்ற காசை 'அழகு பண்ணறேன், கலையை வளர்க்கறேன்'னு காலி பண்ணும் குணம். //
ஆமாம்க்கா சரியா சொன்னீங்க ,,இங்கயும் அப்படிதான் எதற்கு செலவு பண்ணனும்னு வகைதொகை இல்லை ..simple information leaflets க்கே வேஸ்டா பணத்தை செலவு பண்ணுவாங்க இங்க ..
..இறந்த கால படங்கள் !!எவ்வளவு அழகு :( உங்களுக்கு பார்க்க கஷ்டமா இருக்கும்ல எனக்கே அவ்ளோ கஷ்டமா இருக்கு .
அந்த சாலிஸ் செம அழகு !!!

said...

எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசி பாருங்க நான்! நாலு வருசத்துக்கு முன்னேயே காத்தாடி செஞ்சு தோட்டத்தில் வச்சுப் பார்க்கலாமுன்னு செஞ்சு பார்த்துருக்கேன்:-))))))//

குழந்தை உள்ளம் வாழ்க!

பதிவும், படங்களும் அருமை.

said...

கைய போ ய் நல்ல விளக்கம் .:)))) எப்பிடி இந்த கதை சட்டுன்னு தோணிச்சு ?




//வர்ற காசை 'அழகு பண்ணறேன், கலையை வளர்க்கறேன்'னு காலி பண்ணும் குணம். வேறென்ன சொல்ல?//


மனசார பொலம்பி இருக்கீங்க . படங்கள், விளக்கங்கள் அருமை .உங்க வெள்ளை காத்தாடி அழகு .

said...

மேலைநாடுகளில் குறிப்பிட்டுச் சொன்னால் ஐரோப்பாவில் பழைய விசயங்களுக்கு மக்கள் மற்றும் அரசாங்கம் கொடுக்கும் ஆதரவும்,ஒத்துழைப்பும் வியப்பாகவே உள்ளது.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ஊக்கமூட்டும் பின்னூட்டங்களுக்கு நன்றிகள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நன்றீஸ்!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

நகரங்களை விட கிராமங்கள் அழகுதான்!

said...

வாங்க ஜிரா.

பத்துத் தலைமுறைக்கு சேர்த்து வைக்கும் எண்ணமெல்லாம் நமக்குத்தான். நாளை நாளைன்னு நினைச்சுக்கிட்டே இன்று என்பதை அனுபவிக்கத் தவறிட்டோம் :-(
இயற்கை அழிவுக்கு முன் மனிதர்கள் வெறும் தூசு. எதிர்த்து ஒன்னும் செய்ய முடியாது. ஆனால் தலையில் கை வச்சு உக்காராமல் மேற்கொண்டு நடக்கவேண்டியதைக் கவனிக்கும் சுறுசுறுப்பு இவுங்களுக்குக் கொஞ்சம் அதிகம்தான்னு நினைக்கிறேன்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நெசமாவா? பாராட்டுகளுக்கு நன்றி.

said...

வாங்க ஏஞ்ஜலீன்.

இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்ன்னு எக்கச்சக்கமா அதுக்குத்தான் போகுது!
நல்லவேளை.... தனக்குன்னு கொள்ளையடிச்சுக்கும் குணம் இல்லை!

said...

வாங்க கோமதி அரசு.

மனம் நிறைந்த நன்றிகள்!


said...

வாங்க சசி கலா.

அதான் எனக்கும் தெரியலை. காயைப்போய்ன்னு சொல்லிப் பார்த்தப்பத் தானே தோணிப்போச்சு :-)

said...

வாங்க ஜோதிஜி.

பழைய விஷயமுன்னு பராமரிப்பு இல்லாமத் தூக்கிப் போட்டுட மாட்டாங்க. கட்டிடங்களும் இந்த வகையில்தான்! ஆண்டீக் ஆண்டீக்னு அலையும் கூட்டம் ஒன்னும் இருக்கே! த மோர் பழசு இஸ் மோர் வேல்யபிள்!