Wednesday, January 13, 2016

கற்றதும் பெற்றதும், காலியிடமிருந்து!

சொல்லிக்கிற மாதிரி கோடை இல்லை இந்த வருசம். முதல் பாதி முடியப்போகுது இன்னும் ரெண்டு நாளில். அடுத்த பாதியாவது  உண்மையான கோடையாக இருக்க வேணும். 22 டிகிரியும் கண்ணால் பார்க்கும்படியான சூரியனும் கிடைச்சால்கூடப்  போதும்.

இன்னைக்குக் கூடப் பாருங்க காலையில் நல்ல குளிர். கூடவே  சில்லுன்னு  ஒரு காற்று.  வெறும் பத்து டிகிரி.  பனிரெண்டரைக்கு எட்டிப் பார்க்கிறான் சூரியன்.  ஒன்னும் உறைக்கவே இல்லை. கொஞ்சம் நம்ம தோட்டத்து இன்றைய மலர்களை உங்க கண்ணில் காமிக்கலாமுன்னா எங்கே...........ப்ச்.  குளிர்காற்றுலே போய் நின்னா  தலைவலி வந்துருதே :-(



அதுக்காக விட முடியாதுன்னு  இந்த சீஸனுக்குப் பூத்து என்னை   மகிழ்வித்த மலர்கள் உங்களை மகிழ்விக்கப்போகுது இப்போ :-)





தாமரையும், ரோஜாக்களுமா ஒரு பக்கம் இருந்தாலும்,  நடைப்பயிற்சிக்குப் போனப்ப, தெருவோரத்தில் இருந்து பொறுக்கி வந்த விதைகளை நட்டு வச்ச அதுலே  பூத்த அந்திமந்தாரை மலர்ந்ததும் கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டது  உண்மை. அதிலும் இது பிங்க். ஏற்கெனவே நம்மூட்டில் இருக்கும் மஞ்சள் பூ பூக்கும் அந்திமந்தாரைச் செடிகளுக்கான விதைகளும்,  ஒரு முறை  நண்பர் மனைவி குழந்தை  பெத்தபோது, (அது இருக்கும் ஒரு  பதினெட்டு வருசத்துக்கு முந்தி) அவுங்களையும் பேபியையும் பார்க்க  மகளிர் மருத்துவமனைக்குப்போன சமயம்,  கீழே விழுந்துகிடந்த விதைகளைப் பொறுக்கி வந்து நட்டதுதான்.


போன வருசம் வாங்கி வச்ச  Arum Lily  (Cala lily) செடிகளையே காணோம். நம்மவர்தான்  அங்கே அது  இருந்த இடத்தில் ஒன்னுமே இல்லைன்னு  பீன்ஸ் விதைகளைப் போட்டு வச்சு  அது முளைச்சுக் காய்க்கத் தொடங்கி இருக்கு.  லில்லிக்கு சமாதி கட்டிட்டார்னு  புலம்பிக்கிட்டே இருந்தேன். முந்தாநாள் பார்த்தால்...  பீன்ஸ் கூட்டத்துக்குள்ளில் இருந்து எட்டிப் பார்க்குதொரு லில்லி!

இந்த லில்லி வகைகளில்  வெள்ளை நிறப்பூக்கள் உள்ள செடி  முந்தி வச்சுருந்தேன். அதிலிருந்து இப்படி ஒன்னு வந்துச்சு.  விதைகளோ என்னவோன்னு  பொறுத்துப் பார்க்கலாமுன்னு  நினைச்சுக்கிட்டு இருந்தேன்.  ஆனால் ' யாரோ'  அதை  என்னவோன்னு நம்மைக் கேட்காமலேயே பிடுங்கி வீசிட்டாங்க :-(


அடுக்களை ஜன்னலில் இருக்கும் காக்டஸ், சின்னப்புள்ளை 'அம்மா என்னைத் தூக்கிக்கோ'ன்னு கை  நீட்டுதே!




சமையலுக்கு எடுத்த சக்கரைவள்ளிக் கிழங்கில் ஒரு சின்னத்துண்டு வெட்டி அதே அடுக்களை ஜன்னலில் வச்சிருந்தேன். அடியிலொரு  பாட்டிலில் தண்ணி ரொப்பி. அதுவும் முளைச்சு வந்துச்சுன்னு தோட்டத்தில் நட்டு வச்சுருக்கேன் இப்போ.



தோட்டத்தில் பூசணி  வளர்ந்து பூ விட்டுருக்கு. இன்னும் ஒன்னரை மாசத்துக்குள்ளே காய்ச்சால் உண்டு.

தக்காளிவகையில் ஒன்னு இந்த  ரோவல்லா டொமாட்டோ.  செர்ரி டொமாட்டொ போல சின்னது. ஆனால்  இத்தாலியன் வகை(யாம்)


வெண்டையில் மொட்டு வந்துருக்கு.  பரிசோதனைக்காக நட்டுவச்ச மஞ்சள்  லேசா தலையைக் காமிக்குது.  இந்தப் பொங்கலுக்கு  மஞ்சக்கொத்து இல்லைதான். ஆனால் மஞ்சள் செடிக்கு உயிர் இருக்கே!

 வெள்ளரிக்காய்  ஏகப்பட்டது.  தினமும் ஃப்ரெஷ் ஸாலட்!
கொய்யாச்செடியில்  பிஞ்சுகள் ஏராளம்!







இப்படி சந்தோஷமாக இருக்கும் நேரம் காலியைப் பற்றியும் சொல்ல வேண்டி இருக்கே!

செடிகளை நட்ட ரெண்டாம் மாசம் குட்டியாப் பூ விட்டதைக்  கொண்டாடி பதிவெல்லாம் போட்டு கௌரவப்படுத்தினால்.....


அப்பப்ப  படம் எடுக்க வாகாய்  பூக்கள் வெளியே காட்சி கொடுக்கட்டுமேன்னு  வச்சது தப்பாப் போச்சு.


திறந்திடு சிஸேம்னு வச்சதால், ஒரு செடிக்கு ஒரு பூ என்று இருக்கவேண்டியது   கிளைகள் விட்டு  பக்கவாட்டில் எல்லாம் பூக்களா மாறி,  அதுவும் கருத்துப்போய் எல்லாம் கோவிந்தா, கோவிந்தா!!!!


பொத்தி வளர்க்கணுமாம்!  நேரடி வெயில் கூடவே கூடாதாம்.  வலையில்  கிடைச்ச  விவரங்கள்.  உபதேசம் எங்கிருந்தெல்லாம் கிடைக்குது பாருங்க.

PINகுறிப்பு:   வாசக  நண்பர்கள் அனைவருக்கும்  மனம் நிறைந்த இனிய  போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துகளை சொல்வதில்  மகிழ்ச்சி அடைகின்றது உங்கள் துளசிதளம்!

ஜல்லிக்கட்டு உண்டா இல்லையா?


13 comments:

said...

அழகோ அழகு. மார்கழிக்கோலத்துக்கு வசதியா பூசணியும் பூத்துருச்சு. ஆனா எல்லாப்பூவையும் விட பீச்சில் பூத்திருக்கும் ராசலச்சுப்பூதான் அழகாயிருக்கு :-))

ஏகத்துக்கும் இலை விட்டு வளந்துருச்சு, அதிகப்படியான இலைகளை வெட்டறேன்னு எங்க வீட்டுல "யாரோ" சம்மர் கட் அடிச்சு விட்டதில், வருஷாவருஷம் பூத்துட்டிருந்த எங்க வீட்டு பிரம்மகமல் கடந்த நாலைஞ்சு வருஷங்களாப் பூப்பதில்லை. இலைகள் வருதே தவிர மொட்டு வைக்க மாட்டேங்குது :-(

said...

ஆகா... என்ன அழகு... என்ன அழகு...!

said...

ஏகப்பட்ட அழகைப் பார்த்து தலையே சுத்துது. ரஜ்ஜுவைப் பற்றி ஒரு வார்த்தை காணோம்:)

said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா !!!!!

said...

உங்கள் வீட்டு மலர்களைக் காண மனம் மகிழுதே. இனிய எல்லாப் பொங்கல் வாழ்த்துக்களும்

said...

ஆகா! அருமை.
ப்ரஸ் வெண்டக்காய் சுவைத்திடுங்கள்.

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

said...

பொங்கல் வாழ்த்துக்கள்...

said...

ஆகா....அழகு...!தாமரையும்....காக்டஸ்யும்...super...


இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா....

said...

நம்ம வீட்டுத் தோட்டத்துல பூவோ காயோ கிடைத்தால் எப்படி இருக்கும். ம்ம்ம். எல்லாம் நல்லா இருக்கு. அவருக்குத்தான் காலிஃப்ளவர் ஃப்ரையோ குருமாவோ (வீட்டுத்தோட்டத்தில் விளைந்தது) குடுத்துவைக்கலை.

உங்கள் இருவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். (குளிர் காலத்தில் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டு ஜீரணமாகாமல் இருந்துடப்போகிறது. இதுக்குத்தானா, ஜல்லிக்கட்டு இன்ன பிற வைத்தது?)

said...

2016 தைப்பொங்கல் நாளில்
கோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

said...

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

said...

அன்புடையீர் வணக்கம்! தங்களை தொடர் பதிவு ஒன்று எழுதிட அன்புடன் அழைத்துள்ளேன். காண்க : பயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html

said...

அழகோ அழகு!!!