Monday, March 21, 2016

நம்ம ஆஞ்சியின் அப்பாவுக்காக........ ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 10)

பஞ்சபூதங்களில் நாலு பூதத்தை ஏற்கெனவே  தரிசனம் செஞ்சாச்சு. பாக்கி இருப்பதை இந்தப் பயணத்தில் சேர்த்துக்கிட்டோம்.  காளஹஸ்தி. வாயு ஸ்தலம். காற்று ரொம்பவே முக்கியம். அது நின்னா அவ்ளோதான்.  சங்கோ சங்கு.
சுருட்டபள்ளியில் இருந்து  ஒரு 62 கிமீ. ஒன்னேமுக்கால் மணி நேரத்தில் வந்துட்டோம்.  வர்ற வழியில்சில சுவாரசியமான சங்கதிகள்:-)  ஒரு வராகக் கூட்டம் சாலையைக் கடந்து போய்க்கிட்டு இருந்துச்சு. நம்ம சீனிவாசன் வண்டியை நிறுத்திட்டார்.  பெருமாள் எடுத்த அவதாரம் என்ற மரியாதையா?
ஊஹூம்..... இல்லையாம்!  வண்டி ஒருவேளை வராகத்து மேலே மோதிருச்சுன்னா... வராகம் மேலே போயிருச்சுன்னா.........   ட்ராவல் கம்பெனிகளில்  திரும்ப அந்த வண்டியை வச்சுக்கமாட்டாங்களாம். உடனே நஷ்டவிலைன்னாலும் வண்டியை வித்துருவாங்களாம். அது ஒரு பரவலான பழக்கமாம்!
அடுத்து கொஞ்சதூரத்தில்  சாலைப் பராமரிப்பு.  மெஷீன்  வச்சு தார்ஸீல் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. கொதிக்கும் தாரில் சாக்குப் பைகளைக் காலில் கட்டிக்கிட்டு வேலை செய்யும் கொடுமைகள் அழிஞ்சு போனதைப் பார்த்து ரொம்ப மகிழ்ச்சி எனக்கு!

இன்னொரு இடத்துலே ஷேர் ஆட்டோ ஒன்னு, பைக்கை 'டோ' செஞ்சுக்கிட்டு போச்சு இப்படி!  வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!

அண்ணனுக்கும் தம்பிக்குமா சேர்த்து ஒரு கோவில் இது! போறபோக்கில் க்ளிக்கியது .
வழியில் பார்த்த இன்னொரு கோவில். ஹனுமன் அற்புதம்! அழகு!  உங்க அப்பாவைப் பார்க்கத்தான் போய்க்கிட்டு இருக்கோமுன்னு சொன்னேன் நம்ம ஆஞ்சியிடம்:-)

ஊருக்குள் நுழையும்போது மணி  பகல் ஒன்னு. கோவில் மூடி இருப்பாங்க என்பதால் முதலில்  லஞ்ச் முடிச்சுக்கிட்டு வரலாமான்னு யோசனை.  ஆனால் சனம் மட்டும்  படியேறி கோவிலுக்குப் போய்க்கிட்டு இருக்கு.


 கோவில் நேரம் காலை 5 முதல் பகல் 12, மாலை 5 முதல் இரவு 9 வரைதான் என்றாலும், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களிலும் பகலில் கோவிலை மூடுவதே இல்லையாம். காலை 6 முதல் இரவு 9 வரை திறந்தேதான் இருக்குமாம். அட! இன்றைக்கு வியாழன் இல்லையோ!   ஆஹான்னுட்டு  முதலில் கோவில், அப்புறம் சாப்பாடுன்னேன் :-)


நாங்க ஊருக்குள் நுழையும்போதே ஒரு ஆத்துப் பாலத்தைக் கடந்துதான் வந்திருந்தோம். அந்த ஆறு  ஸ்வர்ணமுகி என்ற பெயருடையது. அதைத் தமிழில் பொன்முகலின்னு மொழிபெயர்த்துருக்காங்களாம்.  கோவிலை நெருங்கும்போது  கோபுரம் ஒன்னுலே  வேலை நடந்துக்கிட்டு இருக்கு.  'இதுதான்  பிரதானகோபுரம்.  இதுதான் இடிஞ்சு விழுந்துருச்சுன்னு இப்ப மறுபடி கட்டறாங்க'ன்னார் சீனிவாசன்.  அட... ஆமால்லே... சேதி வாசிச்ச நினைவு இருக்கு எனக்கு. அதனால்   வலப்பக்கம் திரும்பி  இடமாப்போய்  அந்தாண்டை  மீண்டும் இடதுபக்கம் போய் வண்டியை நிறுத்தினார் ட்ரைவர்.
இப்பெல்லாம் கோவில்களுக்குப் போகும்போது  காலணிகளை வண்டியிலேயே விட்டுட்டுப்போறது வழக்கமா இருக்கு.  கீழே இறங்கி  எல்லோரும் போய்க்கிட்டு இருந்த வழியில் போனால் கண்ணெதிரே ஒரு  படிக்கட்டு மேலேறிப்போகுது சனம்.  இந்த வழியில் நமக்கு அறிவிப்பு ஒன்னு.  செல்ஃபோன், கேமெரா, செருப்பு, பை இப்படி எதுவும் உள்ளே அனுமதி இல்லைன்னு தெரிஞ்சது.  எல்லாத்தையும் வண்டியில் வச்சுக்கச் சொல்லி சீனிவாசனிடம் ஒப்படைச்சுட்டு  படிகளேறிப்போனோம். ஒரு இருபது, இருபத்தியஞ்சு படிகள் இருக்கலாம்.
கீழே கோவில்கடைகளில் பூஜைத்தட்டு வாங்கிப்போங்கன்னு  கூப்புடறாங்க. நமக்கு அந்த வழக்கம் இல்லை.  எனக்குத் தானாத் தோணினால்தான் உண்டு. இப்பத் தோணலை. வெயிலுக்கு இதமா பெரிய டம்ப்ளர்களில் மோர் வித்துக்கிட்டு இருக்காங்க சிலர்.
மேலேறிப்போனதும் கோபுரவாசலைக் கடந்து ( இது வடக்கு )உள்ளே காலடி எடுத்து வைக்கும்போதே.... இன்னொரு எச்சரிக்கைத் தகவல் பலகை.

செல்போன்கல்,  கெமெராகல், கொயில்குல்லே அனுமதி இல்ல 


இடதுபக்கம்  பிரகாரம்போல இருக்கேன்னு அதுக்குள்ளே திரும்பினோம். வலம் வரணுமுன்னா இடம்தானே போயாகணும்!  தேங்காய்கள் ஒரு பெரிய குவியலாப் போட்டு வச்சுருக்காங்க. முதல் கட்டிடத்துக்குள்ளே  எட்டிப் பார்த்தேன்.  அங்கங்கே சின்னக்குவியலா மனிதர்கள். அவுங்க  முன்னால் தட்டுகளில் ஏதேதோ பூஜைச் சாமான்கள்.  ஒவ்வொரு குவியலுக்கும் ஒரு   ஐவோரு (புரோகிதர்)

என்ன வேணும்னு கேட்டுக்கிட்டே பாய்ஞ்சு வந்தார் ஒருவர்.  பரிகாரமான்னார். இல்லைன்னு தலையசைச்சுட்டு வெளியே வந்துட்டேன். இந்தக் கோவில் வாயு ஸ்தலம் என்பதைவிட  ராகு கேது திசை நடப்பவர்களுக்குப் பரிகாரஸ்தலமாத்தான்  புகழ்பெற்று இருக்கு.

ஆடைகளை விட ஆகமமில்லை. தரகர் பேச்சை நம்பவேண்டாம் என்று இன்னொரு போர்டு. ரொம்ப நல்லது. இப்படி விவரமாச் சொல்லிட்டா நல்லதுதானே? ஆனாலும் நம்ம சனம் கேட்டுருங்கறீங்க?

இடம்போய் வலம் திரும்பினால் இன்னொரு பெரிய வரிசை கம்பித் தடுப்புக்குள்ளே. என்ன வரிசைன்னு விசாரிச்சேன். அன்னதானத்துக்காம்.  நாங்க எந்தப் பக்கம் போறதுன்னு இல்லாம  இங்கே அங்கேன்னு நுழைஞ்சு போய்  இன்னொரு இடத்துக்குப் போயிருந்தோம்.  அங்கேயும் கம்பித்தடுப்பு வச்சுருக்கு.  மூலவர் சந்நிதின்னு  பக்கத்துலே நின்னவர் சொன்னதால் அதுக்குள்ளே நுழைஞ்சுட்டோம்.
போறவழியெங்கும் நமக்கிடதுபுறம் சிவ லிங்கங்களா ஒரு பெரிய வரிசை. ஒவ்வொன்னும் பெயர் போட்டு வச்சுருக்காங்க. இந்த லிங்க வரிசையில் ஒரு பெருமாளும் இருந்தார்!   வரிசை  ஒரு முழுச் சுற்றுப் போனதும் படிகள் வந்துருச்சு . அதுலே ஏறிப் போறோம். உச்சியில் ஒரு பாலம்.   பிரகாரத்தின் குறுக்கே கடந்து போகணும். ரயில்வே ஸ்டேஷனில் அடுத்த ப்ளாட்ஃபாரத்துக்குப் போறது போல. கீழே இருக்கும் பிரகாரத்தின் ஒரு பக்கம்  ஒரு பெஞ்சு போட்டு  அதில் பாத்திரத்தில் தீர்த்தம் வச்சு சங்கில் எடுத்து  பக்தர்களுக்குத் தர்றாங்க.   அடுத்தபக்கம் போனால்  கட்டம்கட்டமாத் தடுப்புகள். என்ன ஒரு ஆசுவாசமுன்னா...  கம்பிகளையொட்டியே இருக்கைகள் இருக்கு.  கூட்டமான சமயங்களில் கால் கடுக்க நிக்காமல் உக்கார்ந்தவாக்கில் நகர்ந்து போகலாம்.


நமக்கு உக்கார வேண்டிய அவசியமில்லாமல் போச்சு.  நடந்தே போய்  மூலவர்சந்நிதிக்கு வந்துருக்கோம். அதோ.... தூரத்தில் லிங்க வடிவில் காளத்திநாதர்.  நல்ல உயரமா தங்கக்கவசம் சார்த்தி இருக்காங்க.  தலைக்குமேல் பளபளன்னு  ஒரு தங்கக் குடை!  மூலவருக்கு முன் ரெட்டை நந்திகள். ஒன்னு வெண்பளிங்கு, மற்றது பித்தளை. இங்குள்ள அதிசயம்,  சந்நிதிக்குள் விளக்கு  ஆடுதுன்னு கேள்வி. அதே கவனத்தில் இருந்தேன்.  மூலவருக்கு  ஏராளமான விளக்குகள் வச்சு ஜொலிப்பாத்தான் இருக்கார்.

ஆடும் விளக்கைத் தேடின கண்களுக்கு சுவரில் வச்சுருந்த விளக்குகள் லேசா ஆடிக்கிட்டு இருப்பது போல  தோணுச்சு. நம்பிக்கைதான் தெய்வம் என்பதால் அதுவாத்தான் இருக்குமுன்னு நம்பினேன்.  குருக்கள் சிலர்  பக்தர்களிடமிருந்து பூஜைத் தட்டுகளை வாங்கிக்கிட்டு உள்ளே போறதும் வாரதுமா இருந்தாங்க. பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் இங்கே குருக்களாக இருக்க முடியுமாம்.  ஏனாம்?  பரத்வாஜர் இங்கே தவம் செய்து பேறு பெற்றாராம். (இப்படி  ஒவ்வொரு கோத்திரத்துக்கும் ஒரு கோவில்னு வச்சால்.... எப்படி எல்லோரும் அர்ச்சகர்கள் ஆவதாம்?)

கண்ணப்ப நாயனார் பூஜித்த சிவலிங்கம் இவர்.  (வேடன்) கண்ணப்பருக்கும்  ஒரு சிலை  கருவறையில் இருக்காம். எதுன்னு சரியாத் தெரியலை.  ஏராளமான பூக்குவியல்களா இருந்த இடமா இருக்கணும். சிவலிங்கத்தின் கண்ணில் இருந்து  ரத்தம் வடிவதைப்பார்த்துத் தன் கண்ணையே தோண்டி லிங்கத்தின் கண்ணில் வச்ச அன்பு மனசு  அவருக்கு!  அடுத்த கண்ணிலும் ரத்தம் வடியத்துடங்கியதும், கொஞ்சமும் யோசிக்காமல்  தன்னுடைய அடுத்த கண்ணையும் தோண்டப்போன  சுயநலமில்லாத அன்பு.  அந்நேரம் சிவபெருமான் எழுந்தருளி அவரை ஆட்கொண்டார்னு புராணங்கள் சொல்லுது.

வைணவ சமயத்தில் எப்படி  திவ்யதேசங்களென்று ஆழ்வார்கள் வந்து பாடிய  தலங்களைச்சொல்றோமோ அதேபடிக்கு, நாயன்மார்கள் வந்து பாடிய திருக்கோவில்களைப் பாடல் பெற்ற தலங்கள்  என்று சொல்கின்றனர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள். வைணவர்களுக்கு  108 ன்னால்,  சைவர்களுக்கு 274 சிவாலயங்கள்.  இருக்காதா பின்னே...இங்கே பன்னிருவர். அங்கேயோ அறுபத்துமூவர்!  அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் மூவரும் இங்கே வந்து தேவாரப்பாடல்களைப் பாடி இருக்காங்க.

ஸ்ரீ காள ஹஸ்தி  என்ற பெயருக்கு விளக்கமும் சொல்றாங்க. எப்படின்னா ஸ்ரீ என்ற  சிலந்தி, காலம் என்ற பாம்பு, ஹஸ்தி என்ற யானை  இந்த மூன்றுமா சேர்ந்து வழிபட்ட சிவலிங்கமே இங்கே மூலவர் என்று  புராணக் கதை. நம்ம  திருவானைக் காவல் கோவிலின் தலபுராணம் சொல்லும் அதே கதைதான்.

சிலந்தி வந்து தினமும் லிங்கத்தின் தலைக்கு மேல் வலை மேய்ந்து வழிபடும். கொஞ்ச நேரத்தில் ஒரு யானை தன் தும்பிக்கையால் நீர் கொண்டுவந்து  சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபடும். அப்ப சிலந்தி வலை அறுந்து போயிரும். சிலந்தி மீண்டும் வலை அமைக்க, யானை அதை அறுத்துவிடன்னே பலகாலம் நடக்குது. பொறுமை இழந்த சிலந்தி ஒருநாள் யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து வேதனைப் படுத்த  வலி தாங்காமல் யானை மூக்கைக்   கசக்கித்துடிக்கக் கடைசியில் ரெண்டு பேருமே உயிரை விட்டுருவாங்க. அப்போ  இறைவன் அவர்கள் இருவருக்கும் மோக்ஷம் கொடுத்து  கைலாயத்தில் தன்னோடு இருத்திக்கொண்டார்னு  ஒரு கதை. இதுலே பாம்பு எப்படி வந்ததுன்னு  யோசித்துப் பார்த்தால்......   ராகுகேது பரிகார ஸ்தலம் என்பதால்  பாம்புத்தலையும்,  பாம்பு உடலும் கொண்ட ராகு கேது முழுப்பாம்பு உருவாகவே வழிபட்ட இடம் என்று தோணுது.


தீபாரதனை நடந்தபோது பார்த்துக் கும்பிட்டுக்கிட்டு கருவறையைச் சுற்றி இருக்கும் உட்பிரகாரத்தில் வலம்வந்து  இன்னொரு படிவழியாக் கீழே வந்துருந்தோம். மேலே மூலவர் தரிசனத்துக்குப் போகும்போதே அங்கங்கே சில பிள்ளையார்கள் இருந்தாங்க.

கீழே பிரகாரத்தின் ஒரு புறம்  நடராஜர்,  தக்ஷிணாமூர்த்தின்னு  பெரிய சைஸ் சிலைகள்.  தீர்த்தம் கொடுத்துக்கிட்டு இருந்தவரின் இடப்பக்கம் அம்பாள் சந்நிதி.   ஸ்ரீ ஞானப்பிரசுனாம்பிகை என்று பெயர்!  51 சக்திபீடங்களில் இதுவும் ஒன்னுன்னு சொல்றாங்க. ஞானபீடமாம்!

 அம்பாளுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த மஹாமேரு இருக்கு.  அஞ்செழுத்து மத்திரத்தை ஓதி  தவம் செய்து  ஞானசித்தி அடைஞ்ச அம்மன்!


பெரிய வளாகத்தில் அங்கங்கே திறந்தவெளி முற்றங்களும்  சந்நிதிகளுமா இருக்கு. எல்லா இடங்களிலும் குடும்பம் குடும்பமா மக்கள் வெள்ளம்.   கோவிலுக்குள்ளே 36 தீர்த்தம் இருக்காம். அதுலே  சரஸ்வதி தீர்த்தக் கிணறு ரொம்ப முக்கியமானது. வாய் பேச முடியாமல், பேசினாலும்  சரிவரப் பேசாமல் திக்கு வாய்  உள்ளவர்கள்  இங்கே பூஜை செய்து இந்தத் தீர்த்தத்தைப் பருகினால் குணமாகிருமாம்.  நமக்கோ.... வாய் ஓயாமல் பேச்சு. அந்தப்பக்கம் போகவேணாம், இல்லையோ?


ரெண்டு கொடிமரம் இருக்கே... ஒன்னுதானே கண்ணில் பட்டதுன்னு  பிரகாரத்தில் அஞ்சு நிமிசம் உக்கார்ந்து எழும்போது பக்கத்தில் இருந்தவரைக் கேட்டால்  அந்தப்பக்கமுன்னு கை காட்டுனார்.  வெளியே வந்து பார்த்தால் அவர் கைகாட்டுனது எந்தப் பக்கமுனு தெரியலை. இப்ப ஒரு  கவுண்ட்டர் மாதிரி இருந்த இடத்தில்  கம்பித்தடுப்புக்குள் மக்கள் போறாங்க. லட்டு விற்பனை. கோவில் பிரசாதம்.  நானும் வாங்கப்போறேன்னு  உள்ளே போனேன். பத்து ரூ ஒரு லட்டு. சீட்டு வாங்கிக்கிட்டு, அடுத்த கவுண்டரில் கொடுத்தால்  லட்டு கிடைக்கும். கிடைச்சது.  எல்லாம் ஒன்னு போதும்.

உள்ளே சுத்தி அலைஞ்சதில்  இன்னொரு ஸ்டால் தெம்பட்டது. அங்கே தலபுராணம் ஒன்னு வாங்கினோம். விலை ஆறு ரூ. 20 பக்கம். ஆங்கிலக் குறிப்புகள்.  படங்களோடு நல்ல பெரிய புத்தகமாப் போட்டுருக்கலாம். ஹூம்.....  கோவிலில் வாங்குன புத்தகத்தில் சிலந்தி சம்பவத்தைப் பாம்பு செஞ்சதாப் போட்டுருக்கு. ரோல் சேஞ்ச் போல! அப்ப சிலந்தி? அதுவும்  'ஸ்ரீ'ன்னு பெயர் வச்சுக்கிட்ட சிலந்திப்பா!!!!
சொல்லவிட்டுப்போச்சே.... காலையில் சுருட்டபள்ளி போனோம் பாருங்க. அது ஒரு மீடியம் சைஸ் கோவில்தான் என்றாலும்  பிரகாரத்திலும் கோஷ்டத்திலும் இருக்கும் சிலைகளின் விவரங்களுடன்  வண்ணப் படங்கள்,  கோவிலின் சந்நிதிகளின் வரை படம், பூஜா விவரங்கள், தலபுராணக்கதைகள் என்றெல்லாம் அடங்கிய 32 பக்கங்களுடன் அழகான சின்னப்புத்தகம் வெளியிட்டுருக்காங்க. நாம் வாங்கியது எட்டாவது பதிப்பு.  
(வரைபடத்தை ஸ்கேன் செஞ்சு  இப்போ தனிப்பதிவா போட்டுருக்கேன்)
இதைப்போல் முக்கியமான பெரிய கோவில்கள்  வரைபடங்களுடன் விளக்கம் தந்தால் எந்த சந்நிதியையும் விட்டுவிடாமல் தரிசனம் செஞ்சுக்கலாம். ஸ்ரீரங்கத்தில்கூட  இப்படி இல்லையேன்னு எனக்கு ஆத்தாமை அதிகம் :-(

நம்மவர் எந்தக்கோவிலுக்குப் போனாலும் தலபுராணம் இருக்கான்னு விசாரிச்சு, இருந்தால் ஒன்னு வாங்கிருவார். எல்லாம் எனக்கு உதவியாக இருக்கட்டுமேன்னுதான். 


பஞ்சபூத ஸ்தலங்களில் இது ஒன்னு, அதுதான் ரொம்பமுக்கியமுன்னு  நம்மவர்கிட்டே சொல்லிக்கிட்டே போனப்ப, எது என்னன்னு  கேட்டவரிடம், நாலு நினைவில் இருக்கே தவிர, பூமிக்கு (ப்ருத்வி) உண்டான இடம் எதுன்றது சட்னு மறந்து போச்சு.  புத்தகம் வாங்குன கவுண்ட்டரில் கேட்டால்....   அதெல்லாம் அப்படி ஒன்னும் இல்லை, இது ராகு கேது பரிஹாரஸ்தலம். அவ்ளோதான் னு சொல்றாங்க!!!!   (அப்புறம் மறுநாள் எனக்கு நினைவுக்கு வந்துருச்சு. திருவாரூர் - பூமி ! )


காளஹஸ்தியில் கால் வைச்சாலே முக்தியாம்!  ஸ்ரீகாளத்தி ப்ரவேச முக்தி!  ஒரு குன்றையொட்டின மலைப்பாங்கான இடம். கைலாசகிரின்னும் சொல்றாங்க. தக்ஷிணக் கைலாசம்.  ஒரிஜினல் கைலாசத்தில் இருந்து தெறித்து விழுந்த மூன்று சிகரங்களில் இதுவும் ஒன்னு. வாங்க... கதையைக் கேக்கலாம்.

ஒரு காலத்தில் ஆதி சேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தம்மில் பெரியவர் யார்ன்னு ஒரு  கேள்வி. வயசில் இல்லையாக்கும். பலத்தில்......  ஆதிசேஷன் கயிலையை வளைத்து இறுகக் கட்டிக்கிட்டு படுத்துட்டார். வாயு  தன் முழு பலத்தையும் காட்டி  வீசின்னாலும்  இம்மியளவும் அசைக்க முடியலை. இப்படியே பலகாலங்கள் கடந்து போயிருக்கு. ஒரு சமயம்  சேஷன் தன் உடலைத் தளர்த்திக் கொஞ்சம் சோம்பல் முறிக்கும் சமயம், பார்த்துக்கிட்டே இருந்த  வாயு வெகு பலமாக   பாய்ஞ்சு வர, மூணு சிகரங்கள் தெறித்து விழ, அதில் ஒன்றுதான்  இங்கே  வந்து விழுந்த காளத்தி மலை.

மலையில் ஏறிப்போனால் அங்கங்கே இன்னும் சில சந்நிதிகள் இருக்காம். ஆனால்  என்ன இருந்தென்ன?  முக்கியத்வம் எல்லாம் பாம்புக்கே!


திரும்பி வர வழி தெரியாமல்  அங்கே இங்கேன்னு கொஞ்சம் அலைஞ்சு, ஒரு கம்பித்தடையின்  அடியில் குனிஞ்சு இந்தப்பக்கம் வந்ததும்   முதலில் பார்த்த  தேங்காய்க்குவியல் கண்ணில் பட்டது.   ஆஹான்னு  கோபுரவாசலைக் கண்டுபிடிச்சுப் படிகள் இறங்கி  வெளியே வந்து சேர்ந்தோம். கீழே இடதுபக்கம்  கடைகளுக்குப்பின்புறம் கொஞ்சம்  உள்ளே தள்ளி  ஏராளமான நாகர்கள்!  பரிஹாரம், நேர்ந்துக்கிட்டுக் கொண்டுவந்து வச்சவைகள் போல! எக்கச் சக்கம்.  சுவர்களில் எல்லாம் ஏறி உக்கார்ந்துருக்குப்பா!  ஸர்ப்பக்காவு !!!!




'இங்கே ஒரு பிள்ளையார் இருக்கார்'ன்ற தகவலோடு  வெளியே நமக்காகக் காத்திருந்தார் சீனிவாசன்.  பாதாள விநாயகர். தரை மட்டத்தில் இருந்து  கீழே இறங்கிப்போக படிகள், ஒரு இருபது இருக்கும்.  35 அடி ஆழத்தில் புள்ளையார் சந்நிதி.  இது  ஸ்வர்ணமுகி ஆற்று மட்டத்துக்கு சரியா இருக்காம்.


அகத்தியமுனிவர்  இங்கே சிவனை வழிபடவந்தப்ப, புள்ளையாரைக் கண்டுக்காம குன்றின்மேல் இருக்கும் கோவிலுக்குப் போயிட்டாராம்.  உடனே ஸ்வர்ணமுகி ஆறு தண்ணீர் இல்லாமல் வத்திப் போயிருக்கு.  சிவனுக்கு அபிஷேகம் செய்யத் தண்ணி இல்லைன்னு உணர்ந்த அகத்தியர்,  கொஞ்சநேரத்துக்குமுன்னே ஆற்றில் இருந்த நீரெல்லாம் என்னவாச்சுன்னு திகைச்சுப்போய்  சுத்துமுத்தும் பார்த்தப்பப் பள்ளத்தில் இருக்கும் புள்ளையார் கண்ணுலே பட்டுருக்கார். உடனே  அவரைக் கும்பிட்டதும்,  ஆற்றில் தண்ணீர் திரும்ப வந்துருச்சாம்.

அடடா... அப்படியா? நாமும் முதலில் இவரைக் கும்பிட்டு இருக்கணும், இல்லையோ?  உடனே அவரைக் கும்பிட்டுக்கிட்டு நாகர்களை இந்தப்பக்க இடைவெளியில் க்ளிக்கிட்டுத் திரும்பும்போது  ஒரு பாத்திரத்தில் ஓடும் மீன்களைக் கண்டேன். 20 ரூ. இருக்கட்டுமுன்னு  ஒரு சின்ன பாக்கெட் மீன்களை வாங்கினேன்.

வீடு திரும்பினபிறகு ஒரு நாள்  நீருள்ள பாத்திரத்தில்  போட்டால் மூழ்கிப்போயிருச்சு. என்னடான்னு பார்த்தால்  வாலில் கற்பூரம் வைக்கணுமாம். பாக்கெட்டில் எழுதி இருக்கு. தக்குனூண்டு வாலில் கற்பூரம் எப்படி வைக்கணும்? இண்டியன் கடைக்குப் போனபோது மறக்காமல் ஒரு பாக்கெட் கற்பூரம் (3 $) வாங்கிவந்து  துளி கிள்ளி வாலில் வச்சேன். கப்சுப்! கடப்பாறை நீச்சல் :-)




இந்த ஊரிலேயே பகல் சாப்பாடு ஆகட்டுமேன்னு  இடம் தேடுனதில்  MGM Grand Hotel கண்ணில் பட்டுச்சு. போனோம்.  கொஞ்சம் பெரிய நிறுவனங்களைத் தேடிப்போவது  உணவின் ருசிக்காக இல்லை.  மற்ற ரெஸ்ட்ரூம் வசதிகள்  நல்லா இருக்கணும் என்பது முக்கியம்.  பரவாயில்லை  என்ற அளவில் சுத்தமாகத்தான் இருந்துச்சு.  அவ்வப்போது சுத்தம் செஞ்சு வைக்க பணியாளர் ஒருவரும்  இருந்தார்.  இவ்ளோ பெரிய  ஹால் போன்ற இடத்தை இன்னும் நல்லா வைக்கலாம். ஆனால்  வேண்டாத மேஜை நாற்காலின்னு மரச்சாமான்களை க் குவிச்சு வச்சுருக்காங்க ஒரு பக்கத்தில்  :-(

சாப்பாடும் பரவாயில்லை. ஆனாலும் வரவேற்பில் இருக்கும் கவனம் மற்ற இடங்களிலும் இருந்தால் தேவலை.
காளாஸ்த்ரீ என்னும் காளஹஸ்தி தரிசனம் ஆச்சு என்ற நிறைவோடு ஊரைவிட்டுப் புறப்பட்டோம்.

தொடரும்.............:-)




28 comments:

said...

திருப்பதிக்குப் போகும்போதெல்லாம் இங்கேயும் போகாம வரதில்லை. பாதாள விநாயகர் சன்னிதியை கோயிலுக்குள்ளே பார்த்த ஞாபகம். கோயிலுக்குள்ளே வரிசையா பத்துப்பத்துப் பேரா உள்ளே தரிசனத்துக்கு விட்டுட்டிருந்தாங்க. வெளியே எப்படி வந்தார்ன்னு தலையைப் பிச்சிட்டிருக்கேன். ஒருவேளை ரெண்டு பாதாள வினாயகர்களோ!!.

said...

Good Dharshan.

said...

//ஒரு வராகக் கூட்டம் சாலையைக் கடந்து போய்க்கிட்டு இருந்துச்சு. //

வராக நதிக்கரை ஓரம்
ஒரே ஒரு பார்வை பார்த்தேன்.
புறாவே நின்னு ன்னு சொன்னேன்.

அப்படின்னு பாடலாம் . ஆனா
புறாவுக்கு பதிலா...

வோணாம். விஷ்ணு பகவான் கோவிச்சுப்பார்.

சுப்பு தாத்தா.

said...

படித்தேன்; பார்த்தேன்; நன்றி;

said...

நம்ம ஊருக்குப் போன திருப்தி. வராஹக் கூட்டத்தைப் பார்த்ததைச் சொல்கிறேன்..]]]]]]
ஒரே ஒரு தரம் மகள் கல்யாணம் நடக்க வேண்டிக்கொண்டு வெள்ளி நாகர் வாங்கிப் போட்ட நினைவு இருக்கு. ஸ்ட்ரெயிட்டா காளஹஸ்தீஸ்வரர் பார்த்துட்டு வெளிய வந்துட்டோம்.

மகன்கள் திருமணத்துக்குத் திருவண்ணாமலை.
தீபங்கள் ஏற்றிவிட்டு வந்தோம்.

புத்தகம் போட்டு இருப்பதைப் பாராட்டணும். வாங்கவும் செய்யணும்.
இல்லாவிட்டால் மறந்துதான் போகும்.

படங்கள் பாதிக் கதைகளைச் சொல்லி,கம்பிகள் மீதிக் கதைகளைச் சொல்கின்றன.
பாதிப்பைக் கொடுப்பது வயதான அம்மாக்கள் கை நீட்டுவதுதான். என்ன பாவமோ .
வருத்தம். மிக நன்றி.துளசி மா.

said...

Oru oru kovilukkum ethanai kadhai ethanai characters!!! Paaah unreal! Thank you for the write up!!

said...

சிறு வயதில் இங்கே சென்றது. எதுவும் நினைவில் இல்லை..... உங்கள் பதிவின் மூலம் மீண்டும் ஒரு முறை சென்று வந்த உணர்வு.

said...

ஏற்கெனவே சென்று வந்த கோவில்தான் என்றாலும்
தங்கள் படங்களுடன் விளக்கங்களுடன் படிக்க
நாமின்னும் மிகச் சரியாக கோவிலைப் பார்க்கவில்லை
என்கிற எண்ணத்தினை உண்டாக்கிப் போனது
இனியெனும் கற்றுக் கொள்ள வேண்டும்
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

said...

/அப்புறம் மறுநாள் எனக்கு நினைவுக்கு வந்துருச்சு. திருவாரூர் - பூமி !/

நோ நோ நோ நோ நோ நோ!! பார்த்துக்கிட்டே இருக்கும் பொழுது இப்படி எல்லாம் அடிச்சு விடக்கூடாது! :))

நிலம் - ப்ரித்வி லிங்கம் - ஏகாம்பரேஸ்வரர் கோயில் - காஞ்சிபுரம் (அடுத்ததபா புடைவை வாங்கும் பொழுது ஒரு எட்டு போயிட்டு வாங்க)

அது வரை முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பஞ்சபூத க்ருதிகளைக் கேளுங்க.

https://www.youtube.com/playlist?list=PLK5feeUc2efzL4zeXYb5W5WhCytOIknxu

மத்த நாலும்

நீர் - அப்பு லிங்கம் - ஜம்புகேஸ்வரர் ஆலயம் - திருவானைக்காவல்
நெருப்பு - ஜ்யோதி லிங்கம் - அருணாசலேஸ்வரர் ஆலயம் - திருவண்ணாமலை
காற்று - வாயு லிங்கம் - ஶ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் - காளஹஸ்தி
ஆகாயம் - ஆகாஷ லிங்கம் - தில்லை நடராஜர் ஆலயம் - சிதம்பரம்

said...

வாங்க சாந்தி.

நான் முதல்முறையாத்தான் இங்கே போனேன். பாதாளம் வெளியில்தான் இருக்கு!ஆளில்லாமக் காலியாக்கிடக்கும் சந்நிதியில் இருக்கும் குருக்கள், மக்கள் தலையைப் பார்த்ததும் வாங்க வாங்கன்னு கூப்பிட்டு தீபாராதனை காமிக்கிறாரேப்பா!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

said...

வாங்க அத்திம்பேர்.

அதெல்லாம் விஷ்ணு கோச்சுக்கமாட்டார். அவர் நம்மாளு!

said...

வாங்க விஸ்வநாத்.

படித்ததற்கும் பார்த்ததற்கும் நன்றீஸ்.

said...

வாங்க வல்லி.

அந்தப் பெண்கள் ஏழெட்டுப்பேர் கூட்டமாநம்மை முற்றுகை இட்டப்பத் தமிழ்க்குரலா இருக்கேன்னு அவுங்ககிட்டே நூறைக்கொடுத்து நீங்க பிரிச்சு எடுத்துக்குங்கன்னு கோபால் சொன்னார்.

பங்கு போட்டுக்க அந்தம்மாவுக்கு விருப்பமில்லை. மற்ற பெண்களோடு பிரிவினையில் தகராறு. அவுங்க வாயிலிருந்து விழுந்த வார்த்தைகளை........... ஐயோ..... அசிங்கமாப் போச்சு:-(

said...

வாங்க பொற்கொடி.

ஒவ்வொரு சம்பவங்களும் அதுக்குப் பொருத்தமான கதைகளுமா அந்தக் காலத்தில் அநேகமா எல்லா ஊர்களிலும் ஒன்னுபோலவே பரவி இருக்கும் அதிசயம்தான் எனக்கு! நெட்டா, ஃபோனா, பத்திரிகையா, டிவியா? ஒன்னுமே இல்லாத காலக்கட்டமாச்சேப்பா!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இப்பப்போய் வந்த எனக்குமே உள்ளே பார்த்த சிலைகள் சரியா நினைவில் இல்லை :-(

said...

வாங்க ரமணி.

பெரிய கோவில்கள் என்றால் எததனை முறை பார்த்தாலுமே சரியாப் பார்க்காத உணர்வுதான் வருது :-(

said...

வாங்க கொத்ஸ்.

அச்சோ... இன்னொருமுறை தகவல் பிழையில் மாட்டிக்கிட்டேனோன்னு பயந்துட்டேன். நல்லவேளை நம்ம விக்கி அண்ணன் ரெண்டு ஊரையுமே ப்ருத்வின்னு சொல்றார்.

என்ன ஒரு மகிழ்ச்சினா, ரெண்டு இடங்களுமே ஏற்கெனவே போய்வந்தவைதான்.

உங்க மனம் வருந்தக்கூடாதேன்னு... அடுத்த முறை புடவையை உங்க கணக்கில் வாங்கிக்கிட்டு, ஏகாம்பரேஸ்வரரையும் தரிசனம் செஞ்சால் ஆச்சு:-)

said...

மேடம் !
இலவச கொத்தனார் அவர்களுக்கு என் நன்றியை சொல்லுங்க.

டி .எம். கிருஷ்ணா அவர்கள் பாடிய பஞ்ச பூத கிருதிகளுக்கு ஒரு தொடர்பு லிங்க் அனுப்பி இருந்தார் இல்லையா
கேட்டேன். சுகம். சுகம்.
என்ன ஒரு லிரிகல் எக்ஸ்டசி !!
தீட்சிதர் கம்போசிஷன் அப்படின்னா சும்மாவா?
தாங்க்ஸ் கொத்தனார் சார்.
அது என்ன இலவசம்?

சுப்பு தாத்தா.
பின் குறிப்பு: எடிசன் ஆ ?
ரொம்ப பக்கம் தான்.

said...

வழியில் நின்ன ஆன்ஜிநேயர் அழகு...

அடுத்த முறை உங்க குறிப்போட கோவிலுக்கு போகணும் .

said...

தகவல்கள் பல கிடைக்கப்பெற்றேன்.வல்லியம்மா சொ.ன்னது போல் பிச்சை எடுப்பவர்கள் மனதை உறுத்தினதுஉண்மை.ஆனால் அவரின் வார்த்தைகள் கேட்டதும் ஏண்டா பணம் கொடுத்தோம்னு ஆகியிருக்கும்.கோவில் வாசலில் பிிச்சை எடுப்பதை தடுக்க சட்டம் இயற்றணும்.

said...

@ அத்திம்பேர்.

அவருக்கு நான் போய்ச் சொல்லவேண்டாம். நம்ம வகுப்பில்தான் வெவ்வேற பெஞ்சுகள் வரிசையில் இருப்பார். க்ளாஸ் லீடர் இல்லையோ!!!! இந்நேரம் அவரே பார்த்திருப்பார்:-)

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

குறிப்புகள் சரியா இருக்கான்னும் செக் பண்ணிட்டுச் சொல்லுங்க:-)

said...

வாங்க சசிகலா.

இன்னும் நீங்க இந்திய சட்டங்களை நம்பறீங்களா? சட்டம் போட்டதும் அதுலே ஒரு ஓட்டையைக் கண்டுபிடிச்சு ஸ்டே வாங்கிட்டாங்கன்னா........... ஆயுஸு முடியும்வரை கிடப்பில்தான்:-(

said...

இதுவரைக்கும் காளத்தி போக முடியாம இருந்துச்சு. இன்னைக்கு ஒங்களால போயாச்சு.

மூவரும் பாடியது பொன்முகலியைத்தான். திருத்தொண்டர் புராணமும் சொல்வது பொன்முகலிதான். அதுனால பொன்முகலியைத்தான் சொர்ணமுகின்னு மொழிபெயர்த்திருக்காங்கன்னு நான் நம்புறேன். :)

அந்த மீன் எனக்கும் பிடிக்கும். ஆனா வாங்கிக் கொடுக்க மாட்டாங்க. நீங்க வாங்கி விளையாண்டுதல சந்தோஷம். :)

said...

வாங்க ஜிரா.

நானும் பலவருசங்களா நினைச்சு இந்த முறைதான் காளத்தி போய் வந்தேன்.

அந்த மீன் கடப்பாரை நீச்சல்தான் போட்டுச்சு நம்மவீட்டுலே. கற்பூரம் வைக்கணுமாமே.... ஊஹூம்.... வச்சு பயன் இல்லை :-(

said...

After a long long time, I got to enjoy your wonderful travelogue. Thanks for the lovely pictures and witty remarks. loved it.

said...

வாங்க பட்டு ராஜ்.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்!