Monday, March 28, 2016

கறிவேப்பிலை இல்லைன்னா...... அது ஒரு குத்தமாய்யா? ? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 13)

தாயார் கோவிலாண்டை வண்டி நின்னதும் இறங்கி  டிக்கெட் கவுண்டரை நோக்கி ஓடறார் நம்மவர்.  நல்லவேளை திறந்துருக்கு. சீக்ர தரிசனத்துக்கு  ரெண்டு டிக்கெட்.  ஆளுக்கு அம்பதுன்னு நினைக்கிறேன். அவசரத்துலே எவ்ளவுன்னு கேக்கத்தோணலை.  இது தேவலைன்னு படுது. எது? அந்தப் பேருதான்.

ஸ்பெஷல் தரிசனமுன்னு  முந்தி சொல்வாங்க பாருங்க, அதுதான் சீக்ரன்னு ஆகி இருக்கு.  நாமென்ன அப்படி ஸ்பெஷலா, இப்படிச் சொல்லிக்கறதுக்கு? சீக்ர என்பதில் பொருளும் இருக்கே!  நேரக்குறைவானதால்  காசு கட்டி கடவுளை ஸேவித்தாறது.

டிக்கெட்டைக் கையில் ஏந்தி, மீண்டும் காக்கிச்சட்டைகளிடம்  உள்ளே போகும் வழி எதுன்னு விசாரிச்சதில்  கோவில் முன்வாசல் வழியா வாங்கன்னாங்க.  அங்கிருந்து  இடப்பக்கம் உள்ளே நுழைஞ்சதும் ஏற்கெனவே மக்கள்ஸ் தடுப்புக் கம்பி வரிசைகளின் வழியாக   உள்ளே வரும் கடைசி கட்டத்தில் நம்மை சேர்த்துவிட்டாங்க.

நமக்குமுன் ஒரு ஒருபத்து இருபத்தியஞ்சு பேர் நிக்க, செக்யூரிட்டிச் செக்கிங் செஞ்சு  ஒவ்வொருத்தரையா உள்ளே அனுப்பும் இடத்தில் திடீர்னு ஒரு கசமுச.  ஒரு பெண் பேந்தப்பேந்த முழிச்சபடி நிக்க,  செக்யூரிட்டி ஆஃபீஸர் கையில் செல்ஃபோன். பெண்ணுக்கு அருகில் இருப்பவர் (வீட்டுக்காரரா இருக்கணும்) கை ஓங்கி அடிக்கறதுபோல நின்னுக்கிட்டு கத்தறார்.

"எத்தனைதடவை சொன்னேன், ஒன்னும் கையிலே கொண்டுவரக்கூடாதுன்னு...."

"நானும் எல்லாப் பையையும் வச்சுட்டுத்தான் வந்தேன். "

" அப்ப இது?"

"இதை மட்டும்தான் கொண்டாந்தேன். கையிலே வேறொன்னுமில்லை..... "

கையை விரிச்சுக்குக்  காமிக்குது அந்தம்மா.

பாருங்க இந்த செல்ஃபோன் எப்படி மக்களை அடிமையாக்கி வச்சுருக்குன்னு. எல்லாத்தையும் துறந்தாலும் இதைத் துறக்க முடியாதுன்னு இடுப்பில் செருகி வச்சுருந்துருக்கு அந்தம்மா....

உள்ளே அனுப்பமுடியாதுன்னு கண்டிப்பா செக்யூரிட்டி சொல்ல, கோவத்தோடு  'எல்லாரும் வாங்க. நாளைக்கு வரலாமு'ன்னு  அந்த மனுஷர் சொன்னதும்  மந்திரம் போட்டாப்போல நம்முன்னால் இருந்த அத்தனை பேரும் வெளியே போனாங்க. ஒரு பெரிய குடும்பமோ இல்லை ஒரே ஊரில் இருந்து குழுவா வந்தாங்களோ  தெரியலை... பாவம்.   எவ்ளோ நேரம் வரிசையில் நின்னு  காத்திருந்தாங்களோ...........

எங்கே இன்றைக்கு தரிசனம்  கிடைக்காதோன்னுதான்  இருந்தேன்.  ஏழரை முதல் ஒன்பதுவரைதான் இந்த ஸேவை.  மணி வேற எட்டரை. கூட்டமோ அதிகம்.  அப்படி முடியலைன்னா நாளைக்குக் காலை ஊரைவிட்டுக் கிளம்புமுன் வந்துட்டுப் போகலாமுன்னு மாற்றுத்திட்டம் கைவசம்
படங்கள்: நம்ம வீட்டில் சாமி அறையில்.
நம்மை உள்ளே அனுப்புனாங்க. போய் தாயாரைக் கண்டோம். ஆனாலும்  நடந்த சம்பவம் கொஞ்சம் மன உளைச்சலாத்தான் இருந்துச்சு. எவ்ளோ ஆசையோடு காத்திருந்தாங்களோ என்னமோ.... பேசாம அந்தம்மாவும், கணவரும் மட்டும் வெளியேறி இருக்கலாம். எதுக்கு  எல்லோரையும் வெளியே இழுத்துக்கிட்டுப் போனாரோ........


நூத்தியெட்டு வைணவ திவ்யதேசக் கோவில்களில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுமொன்னுன்னு தனியாச் சொல்ல வேண்டியதில்லை. பனிரெண்டு  ஆழ்வார்களில் மதுரகவி, தொண்டரடிப்பொடி தவிர மற்ற  பத்துப்பேரும்  போற்றிப் பாடிய தலம் இது!

திருப்பதின்னு சொன்னால் இது ஒரு கோவில் மட்டுமில்லை. மொத்தம் நாலு கோவில்களையும் தரிசிச்சால்தான் திருப்பதி போய்வந்த பலன் கிடைக்குமாம்.  முதலில் கீழ்த்திருப்பதி அண்ணன் கோவிந்தராஜரையும்,  அடுத்து  மலைமேலுள்ள புஷ்கரணி அருகில் இருக்கும் ஆதிவராஹரையும், அதன்பின்  ஆனந்தவிமானத்தின் கீழ் எழுந்தருளி இருக்கும்  வேங்கடாசலபதியையும்,  அப்புறம் மலை இறங்கி வந்து திருச்சானூர் பத்மாவதித் தாயாரையும் ஸேவிக்கணும் என்பதே சம்ப்ரதாயம்.

நான்  ஒரு  இடும்பி என்பதால் இந்த வரிசையை அப்பப்ப மாற்றி வச்சுக்குவேன். நானும் இதுவரை புஷ்கரணி வராஹரை தரிசிக்கவே இல்லை  :-(  ட்ராவல்ஸ் வண்டிகூட  திருப்பதின்னதும் நேரா மலைக்குக் கொண்டுபோய் விட்டுடறாங்க பாருங்க. திரும்பி வரும்போது தாயார் தரிசனம் உண்டுன்னாலும் பல சமயங்களில் அண்ணனை விட்டுட்டுப் போகும்படியாக ஆகிருது.

நான்  ஸ்ரீநியோடு டெர்ம்ஸ் சரி இல்லைன்னு  அவனை விட்டுட்டு அண்ணனையும்  தாயாரையும் ஸேவிச்சுக்கிட்டேன்.

ரொம்ப வருஷத்துக்கு முன்னே ஒரு சமயம்  தோமால ஸேவைக்கு  இடம் கிடைச்சு திருப்பதிக்குப் போனபோது, ராத்திரி ஒன்னரைக்குக் கோவிலில் இருக்கணும் என்பதால்   சாயங்காலமா திருப்பதி போய் இறங்குனோம். மலைக்குப் போறதுக்கு முன்னாடி தாயாரை கும்பிட்டுக்கலாமுன்னு போறோம். 

கோவிலுக்குள் நுழைஞ்சப்ப தாயார் ஊஞ்சல் சேவை. மெல்லிய வெளிச்சத்துலே தகதகன்னு மின்னும் கொட்டைப்பாக்கு சைஸ் வைரமாப் போட்டுண்டு ஊஞ்சலில் இருந்து லேசா ஆடி ஆடி சேவை சாதிக்கிறாள். அந்த ஜொலிப்பு அப்படியே அள்ளிக்கிட்டுப் போனதென்னவோ நிஜம். இன்னும் உத்துப் பார்த்துருந்தால் பார்வை போகும் அபாயம் இருக்கு:-))))) தாயாரைக் கண்டதை   ஒருவேளை மறந்தாலும்  கொட்டைப்பாக்கை மட்டும் மறக்கவே முடியலைன்றது கொசுறுத்தகவல்:-)

தாயாரை வணங்கியபின் மற்ற சந்நிதிகளுக்குப் போனோம். பலராமர்,கிருஷ்ணன் சந்நிதியில் ஒரு கும்பிடு. கிருஷ்ணாவதாரக்  காலத்தில் ஒரு சமயம் பலராமர் தவம் செய்ய இடம் தேடுனபோது, இந்த இடத்தைக் காமிச்சு,  இது புண்ணியபூமின்னு காமிச்சுக்கொடுத்தாராம் கிருஷ்ணர். (அப்போ இங்கே தாயாருக்குக் கோவில் இல்லை. வேங்கடவனே  இங்கே  இல்லையே!)

இன்னொரு சந்நிதியில்  ஸ்ரீதேவி, பூதேவியுடன் சௌந்திரராஜர்!
அழகர் சந்நிதியில் நம்ம ஸ்ரீநிவாஸன். மலைமேலிருக்கும் அதே கோலம்! அச்சு அசலா இருக்கு!  நிம்மதியா நம்மிஷ்டம்போல் நின்னு  கும்பிடலாம்.  இங்கே நம்ம பெயருக்கு அர்ச்சனை கூட செஞ்சுக்கலாம். போனமுறை நமக்கு லபிச்சது.  இந்தமுறை கொஞ்சம் கூட்டம் இருந்துச்சு. மேலும் கோவில் மூடற நேரமாகிருச்சுன்னு கொஞ்சம்  அவசரத்தில் எல்லோரும்!

இப்பவும் தினம் இரவில்  பத்மாவதியை சந்திக்க , வேங்கடத்தான் வந்து போவதாக ஒரு ஐதீகம் உண்டு. ஆமாம்.... எதுக்காகக் கட்டுனவளை வேற இடத்தில் தங்க வைக்கணும்? தினமும் வந்து போகணும்?

வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணனும்  மஹாலக்ஷ்மியும் தனிமையில் இருக்கும் நேரம் அங்கே வர்றார் ப்ருகு மகரிஷி. சாந்தமான சாமி யார்னு தெரிஞ்சுக்க வந்தாராம். இதுவும் நாரதரின் சிண்டுமுடியும் வேலைகளில் ஒன்னுதான்.  வந்த முனிவரைப் பெருமாள்  கண்டுக்கலை.  கோபத்தில் பெருமாளின் மார்பில் எட்டி உதைச்சார் முனிவர்.  அப்போ 'ஐயோ    எட்டி உதைச்சதில் உம்  பாதத்துக்கு வலிச்சுருக்குமே'ன்னு  மகரிஷி பாதம் பற்றிக் கவலைப்பட்டாராம் விஷ்ணு. இவர்தான் ரொம்ப சாந்தமான சாமின்னு  சர்ட்டிஃபிகேட் கொடுத்துட்டு  மகரிஷி கிளம்பிப் போயிட்டார்.

அவர் அந்தாண்டை போனதும் இங்கெ குடும்பச் சண்டை ஆரம்பிச்சது. 'நீர் ஆனானப்பட்ட   பெரிய ஆள்னு நினைச்சேன். ஆனால் உம்மை ஒருவர் எட்டி உதைக்க இடம் கொடுத்துட்டீரே. அதுவும் நான் எப்போதும் உறைந்திருக்கும் திரு மார்பில்! என்னையே நேரடியா உதைச்சவரை தண்டிக்காம சும்மா விட்டுருக்கலாமா? இது எனக்கு ஏற்பட்ட பெரிய அவமானம். இதைத் தாங்கிக்கிட்டு என்னால் உம்மோடு குடித்தனம் நடத்தமுடியாது'ன்னு விடுவிடுன்னு கிளம்பிப்போய்   பூலோகத்துக்கு வந்துட்டாங்க.

பலகாலம் தவம் செஞ்சு கோபம் ஒருமாதிரி தணிஞ்சதும் தன்னுடைய அம்சமா ஒரு குழந்தை ரூபமெடுத்து இந்தப் பகுதியை அரசாண்டுக்கிட்டு இருந்த  ஆகாச ராஜன் கண்ணுலே ஆப்ட்டாங்க. தாமரை மலர் மேல் கிடந்துருக்குக் குழந்தை. பதுமத்தின் மேல் இருந்த குழந்தைக்குப் பத்மாவதின்னு பெயர் வச்சு வளர்த்து ஆளாக்கி இப்போக் கல்யாண வயசில் பொண்ணு நிக்குது.

இங்கே மஹாலக்ஷ்மியை விட்டுப்பிரிந்த நாராயணன் மனம் வெம்பி, அவளைத் தேடிக்கிட்டு  ஸ்ரீ விட்டுப்போன சீனிவாசன் என்ற பெயரில் பூலோகத்துக்கு வந்து சேர்ந்தான். காட்டுலே அப்போ ஒரு அம்மா இவனைப் பார்த்ததும்  அப்படியே பாசமழை பொழிஞ்சுக்கிட்டு ஓடிவந்து  தன் மகனா ஏத்துக்கிட்டாங்க. இவுங்க பெயர் வகுளா தேவி.  போன யுகத்துலே கிருஷ்ணாவதார காலத்துலே இவுங்கதான் யசோதா. அந்தப் பூர்வஜென்ம வாசனை  இன்னும் இருக்கு!

ஒரு நாள்  யானை வேட்டையாடப்போன சமயம் தப்பி  ஓடும் யானையைத் துரத்திக்கிட்டுப் போனப்ப பத்மாவதியைப் பார்க்கிறான். அவளும் இவனைப் பார்க்கறாள். அம்புட்டுதான்  தீ பத்திக்கிச்சு.

என்ன இருந்தாலும்  அரசகுமாரி இல்லையா....    'அரண்மனைக்கு வந்து பொண்ணு கேளு'ன்னுட்டு  கண்ணால் சேதி அனுப்பிட்டுப் போயிட்டாள். இவளுக்கும் ஒரு பூர்வஜென்ம கதை இருக்கு.  ராமாவதார காலத்தில்  ராமனைக் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்டவள்  இந்த வேதவதி.  அவனுக்கும் ஆசைதான் போல!

நான் இப்போ ஏகபத்னி விரதன். அதனால்  வேறொரு யுகத்தில் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு வாக்குக் கொடுத்துட்டான். அவள்தான்  இப்போ பத்மாவதியா அரண்மனையில் இருக்காள்.

இந்தப் புராணங்களில் வரும் கதைகளில் எப்பவும் எனக்கொரு வியப்பு என்னன்னா.... எல்லாத்துக்கும் ஒரு பூர்வ ஜென்ம தொடர்பு இருக்கும். எப்படியெப்படியோ யுகங்களைக் கடந்தெல்லாம்  கொண்டு போய் கடைசியில்  ஒன்னுக்கொன்னு சம்பந்தம் இருப்பதா கோர்த்துவிட்டுருப்பாங்க.

அம்மாவிடம் சொல்லி  அரண்மனைக்குப் போய் பொண்ணு கேக்கச் சொன்னான் சீனிவாசன். அம்மாவுக்கு விவரம் ஜாஸ்தி. சட்னு ஒரு மலைக்குறத்தி வேஷம் கட்டுச்சு. குறி சொல்லும் தொழிலுன்னு சொல்லிக்கிட்டு அங்கே போச்சு.  அப்பெல்லாம் கடவுள் அருளால் குறி சொல்றவங்க  சொல்றது எல்லாமே பலிச்சுக்கிட்டு இருந்த காலம்.  ஆளுங்க மனசிலும் நேர்மை இருந்த நாட்கள் பாருங்க.

ராஜா வூட்டுலே போய் குறி சொல்லவான்னு கேட்டப்ப, வா, உள்ளேன்னு கூப்ட்டுப்போய் மகள் முன்னே நிறுத்தி  இவளுடைய வருங்காலம் எப்படி இருக்குன்னு பார்த்துச் சொல்லுன்னு சொன்னார் அரசர்.  அரசரா இருந்தாலும் வயசுப்பொண் கல்யாணத்துக்கு நிக்கும்போது  மகளுடைய எதிர்காலம் பற்றிக் கவலை வர்றது சகஜம்தானே?

பொண்ணைப் பார்த்ததும் ரொம்பப் பிடிச்சுப்போச்சு வகுளாதேவிக்கு. கல்யாணத்துக்கான நேரம் நெருங்கி வந்தாச்சு. இவளைக்  கட்டப்போறவன் இப்படி இருப்பான், அப்படி இருப்பான்னு மகனுடைய அழகை  வர்ணிச்சுட்டு,  அப்பேர்க்கொத்த  அழகனான என் மகனுக்குத்தான் இவள் வாழ்க்கைப்படணுமுன்னு  விதி இருக்குன்னு சொல்றாள்.  ராஜாவும்  பொண்ணாண்டை, என்னம்மா சொல்றே....  சம்மதமான்னு கேட்க, பொண்ணும் சரின்னு  சொல்லிருச்சு.

'மகளுக்கு ஓக்கேன்னா எங்களுக்கும் ஓக்கே. என்ன ஒன்னு... எங்க அந்தஸ்த்துக்குத் தகுந்தாப்லெ கல்யாணம் செஞ்சு கூட்டிப்போங்க'ன்னுட்டார். பழம் நழுவி பாலில் விழுந்துச்சு!

அப்பெல்லாம் கல்யாண செலவு பூராவும் மாப்பிள்ளை வீட்டார்தான் செய்யணும்.  ஆனால்... இது எப்போ உள்ட்டா ஆச்சுன்னுதான் தெரியலை.

போனகாரியம் வெற்றின்னு வந்து சொன்னதும் இப்போ தரித்திர நாராயணனா இருக்கும் சீனிவாசனுக்கு  காசுக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. செல்வத்துக்கு அதிபதியான குபேரன்கிட்டே போய்  காசுகொடுன்னு கேக்க, 'அவன் இப்படி  இலவசமா எல்லாத்தையும் தூக்கிக் கொடுக்க இதென்ன ஊரான் சொத்தா?  கடனா வேணுமுன்னா தர்றேன். ஆனால் வட்டிக்குத்தான் தரமுடியும்.   எப்படி வட்டி கட்டப்போறே'ன்னு கேக்கறார். (அதானே... குபேரன் என்ன இந்திய வங்கிகளுக்கு  எல்லாம் உரிமையாளனா ...   மல்யாவுக்கு தானம் செஞ்சாப்லெ ஒன்பதாயிரம் கோடியைத் தூக்கிக்கொடுக்க?)

"நீங்க சொன்ன அதே ஊரான் சொத்தை வச்சுதான்.  கல்யாணம் முடிச்சு  ஒரு கோவிலில் சாமியா நின்னுருவேன். கேட்டதைத் தருவேன்னு  என் பேர் பிரபலம் ஆனதும் சனங்க  தங்கள் கோரிக்கை நிறைவேறணுமுன்னு  எனக்குக் காணிக்கை தருவாங்க. அதையெல்லாம் கலியுகம் முடியும்வரை உமக்கு வட்டியாகவே தந்துருவேன்"
இந்தப் படத்தைத் தொடர்ந்து கீழே இருக்கும் மற்ற படங்களும் நாம் தங்கி இருக்கும் ஹொட்டேல் ப்ளிஸ்ஸில் இருக்கும் ஆர்ட் கேலரியில் இருந்தவை.


"சனம் நம்புமா?"

"அதெல்லாம் நம்பவச்சுருவொம்லெ!"

"அப்ப அசல்?"

'அது ஒன்னும் பிரச்சனை இல்லை. கல்யாணம் கட்டுறது  மஹாலட்சுமியைத்தான்.  அவுங்ககிட்டே கேட்டால்  புருசன் கடனை  அடைச்சுட மாட்டாங்களா என்ன'ன்னார்.
கடன் வாங்கி கல்யாணத்தை ஜாம்ஜாமுன்னு நடத்தினார் சீனிவாசன்.  அதுக்குப்பிறகுதான்   அந்த ஆறுமாசத் தேன்நிலவு எல்லாம்.

இப்படியெல்லாம் காதலிச்ச பொண்ணைக் கட்டுனவர்  ஆறு மாசங்கழிச்சு  மலையேறி தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிப்போறார். இவுங்க கிளம்புன சமாச்சாரம் தெரிஞ்ச  ஆகாசராஜன்,  தன் பொண்ணுக்கு சீர்வரிசையா, நகை நட்டு பண்டம் பாத்திரமுன்னு  ஆயிரக்கணக்கான வகைகளை  அரண்மனையில் இருந்து அனுப்பி வைக்கிறார்.

எல்லாத்தையும் நோட்டம் விட்ட வகுளாதேவி,  கல்யாணச்சீர் வரிசையில் கருவேப்பிலை இல்லையேன்னு குத்தமாச் சொன்னாங்க.  இப்ப மாமியார் ஸ்தானம் இல்லையோ?  அதுவும் அவுங்கதானே இன்னைக்கும்  திருமலைக்கோவிலில் மடப்பள்ளி இன்சார்ஜ்! சமையல்காரருக்குக் கருவேப்பிலைமேல் கண் சகஜம்தான் .

'அச்சச்சோ.... எப்படி விட்டுப்போச்சுன்னு தெரியலை. நான் போய் எடுத்தாறேன்'னு  விறுவிறுன்னு மலை இறங்கி வந்தவங்கதான் பத்மாவதி.  'இருட்டறதுக்குள்ளே வந்துரு. இல்லாட்டி அங்கேயே தங்கிரு'ன்னாராம் காதல் கணவர். அப்பெல்லாம் ஒரே காடா இருந்த இடம்தானே இந்த ஏழுமலை. எதாவது காட்டு மிருகம் வந்து அடிச்சுப்போட்டுடப் போவுதுன்னுதான் அப்படிச் சொல்லி இருப்பாருன்னு நம்பலாம், இல்லே?
இருட்டிப்போச்சுன்னு திரும்ப மலைக்குப் போகாம இங்கேயே தங்கிட்டாங்க. தனிக்கோவில், மாலை மரியாதை, உற்சவம் எல்லாம்  இங்கேயே அட்டகாசமா நடந்துக்கிட்டு இருக்கு! ஐயாதான் தினமும் வந்து போறார் இப்போ :-)
நம்ம திருப்பதி திருமலை தரிசனம் இப்படித்தான் இந்தமுறை நடந்துச்சு.
அலர்மேல் மங்கை என்ற பெயர்  சூப்பரா இருக்குல்லே! எனக்கு ரொம்பப் பிடிக்கும். மகளுக்கும் ஜாதகப் பெயர்  இதுதான். 

தொடரும்..........:-)


28 comments:

said...

என்னவொரு புராணம்! கரிவேப்பிலைக்காக மலை இறங்கி வந்த பத்மா! எல்லாவற்றுக்கும் ஒரு காரணம், முன் கதை இருக்கும் என்பது எனக்கும் ஆச்சர்யம். புராணங்களில் இதெல்லாம் சகஜமப்பா! குபேரன் இருக்கு, இன்னும் எவ்வளவு பாக்கி என்று ஒருவர் சமீபத்தில் வழக்குப் போட்டிருந்தார். அது என்ன ஆச்சோ! திருப்பதியின் கூட்டம் நமக்கு ஆகாது. கடைசியாய் திருப்பதி 2001 இல் போனது!

said...

கடனை ரத்து செய்யச்சொல்லி ஒரு ஆர்டர் இன்னிக்கே போட்டுடறேன். பார்க்க: தேவலோக டூர்.

said...

திருப்பதியில் நான்கு பதிகள் என்பதைத் தங்கள் பதிவின்மூலமாகவே அறிந்தே. நன்றி.

said...

//இதைத் தாங்கிக்கிட்டு என்னால் உம்மோடு குடித்தனம் நடத்தமுடியாது'ன்னு விடுவிடுன்னு கிளம்பிப்போய் பூலோகத்துக்கு வந்துட்டாங்க//

அப்படி வந்து தவம் செஞ்ச இடம்தான் கோலாப்பூர். இங்கே மஹாலக்ஷ்மிக்கு கோவிலும் இருக்கு. ரொம்பவும் பிரசித்தி வாய்ஞ்சதும்கூட. சீனிவாசன் படும் துன்பத்தைக் காணச்சகிக்காம நாரதர் லக்ஷ்மியைத் தேடிக்கண்டு பிடிச்சு விவரத்தைச் சொல்ல, சமாதானமான லக்ஷ்மி தாமரையில் குழந்தையாக அவதரிச்சாங்கன்னு சொல்லுவாங்க.


said...

அப்பப்பா, தகவல்கள் சாரல் போல் கொட்டுகிறதே, உங்கள் எழுத்துக்களில் எனக்கு பிடித்ததே பயணக் கட்டுரையா, தெய்வீக விடயங்களா, புராணக்கதைகளா என்று எந்த ஒரு பிரிவிலும் சேர்த்திட முடியாத அளவுக்கு எல்லாவற்றையும், ஒரே இடத்தில் அதுவும் ஒருபோதும் சலிப்பு தராமல் எழுதும் உத்தி தான் ..
நாமும் ஒருமுறை திருப்பதி போய் வந்தோம் என்கிற திருப்தி மனதில் இருந்தது,, ஆனால் இந்த பதிவை வாசித்த பின்பு எப்போ அந்த வாய்ப்பு கிட்டும் என காத்திருக்கும் மனநிலை வந்து விட்டது,

said...

பயணக்கட்டுரை அருமையாக போகிறது.கருவேப்பிலை வாங்க ஆள் அனுப்ப கூடாதா?

said...


கதை சொல்லிப்போனவிதமும்
இடையிடையே யதார்த்தத இடைச் செருகலும்
மிக மிக அருமை
முன்பு ஸ்ரீனிவாச கல்யாணம் படித்ததுதான்
கொஞ்சம்மறந்திருந்தது
தங்கள் பதிவின் மூலம் ரினுவல் செய்து கொண்டேன்
மிகச் சிறந்த பதிவு.
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

said...

திருப்பதியின் நான்கு கோவில்கள் ,,,தகவல்களுக்கு நன்றி
அலர்மேல் மங்கை ..அழகு

said...

ஒரு கருவேப்பிலையால குடும்பமே பிரிஞ்சிருச்சே. பழத்தால பிரிஞ்ச குடும்பம் இலையால பிரிஞ்ச குடும்பமெல்லாம் மலையோரமா இருப்பது என்ன ஒற்றுமையோ!

என்னைக் கேட்டா கோயிலுக்குள்ள மொபைல விடலாம். சைலண்ட்ல இருக்கனும்னு சொல்லலாம். பேசக்கூடாதுன்னு சொல்லலாம். மொபைலைக் கொண்டு வந்து.. அதை ஒரு கவுண்டர்ல கொடுத்து.. இதெல்லாம் கொஞ்சம் டூ மச்சுன்னுதான் எனக்குத் தோணுது.

வராகர் மலைமேலதான் இருக்காரு. தெப்பக்குளம் பக்கத்துல பாத்த ஞாபகம்.

said...

ஏம்பா வந்த சனத்திலே ஒரு குழுவை அனுப்பி வறி வேப்பிலை கொண்டுவரச் சொல்லி இருக்கலாமே. நல்ல மாமியார் ,நல்ல மருமகள்.

அதுக்காக அவர் இங்க வராறாம்மா.
இவங்க அங்க வியாழன் இரவு சென்று வெள்ளி இரவு திரும்புவதாகச் சொன்னாங்களே.
அதுதானே பூலங்கி சேவை.
எப்படியோ சுகமா இருக்கட்டும்.

said...

அருமை டீச்சர், கல்யாண விசயத்தில் கடவுளின் குடும்பம் முதல் கடைக்கோடி சாமான்யன் வரை புகைச்சல் இருக்கும் போல!. ( இதுக்காத்தான் நான் கல்யாணமே பண்ணிக்கலைன்னு நீங்க நினைக்ககூடாது).

said...

படித்தால் போரடிக்காத விதத்தில் நகைச்சுவையோடு எழுதி உள்ளீர்கள் அம்மா...
பெருமாள் பெருமை மிகவும் அருமை... பகிர்தலுக்கு நன்றி...

said...

அலர் மேல் மங்கை - இது அருமையான தமிழ். வழக்கில் 'அலமேலு' என்றாகிவிட்டது. தமிழ் திருப்பதி வரையிலும் பரவி இருந்ததற்கு இதுவே சான்று. கேரளத்திலும், "புலரி" என்ற வார்த்தை உண்டு. நாம் பயன்படுத்த மறந்த அருமையான தமிழ். தாயாருக்கு, அலர் மேல் மங்கை. பெருமாளுக்கு "அம்புஜ நாபன்" (தாமரைக் கொப்பூழ்). அடுத்த வாரம் (இன்னும் சில நாட்களில்) என்னை அழைக்கிறான். அதில், நீங்கள் சொல்லியிருந்த பெருமாள் கோவிலையும் சேர்த்து தரிசிக்கும் பேறு வாய்க்கவேண்டும் (முந்தைய இடுகை).

said...

எத்தனை எத்தனை கதைகள்..... கருவேப்பிலைக்காகவே ஒரு கதை! :)

said...

வாங்க ஸ்ரீராம்.

ஒன்னுக்குள் ஒன்னாக இருக்கும் கதைகளுக்கு முடிவேது!

நான் இப்போ சீனிவாசமங்காபுரத்துக்குப் போனால் போதுமுன்னு முடிவு செஞ்சுட்டேன். அப்படியே மலையேறிப் போனாலும் வெளியே மட்டும் சுத்திப் பார்த்துட்டு, வராஹரைக் கும்பிட்டு வரப்போறேன்.

கோவிலுக்குள் கூட்டம் இருக்குன்னாலும் அங்கிருக்கும் அடியாட்களின் தொல்லை தாங்கமுடியலை:-(

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அப்போ குபேரனுக்கும் நாமம்தானா?

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நாலுன்னாலும் சனம் மலைக்குப்போனோமா, சாமி பார்த்தோமா, லட்டுவாங்கினோமான்னு இல்லே இருக்கு!

said...

வாங்க சாந்தி.

ரொம்பச்சரி. கோலாப்பூர் மஹாலக்ஷ்மியை மறக்கமுடியுமா?

said...

வாங்க பராசக்தி.

இப்படித்தான் திரும்பப்போகணும் என்ற ஆசையை நம்முள் விதைச்சுருவான். ஆசை ஆசையா நாமும் ஓடுவோம். போனதும்......... மண்டையில் ஒரு அடி கொடுத்துத் திருப்பி அனுப்புவான். போனதுக்கு வாங்கிக் கட்டிக்கிட்டு வருவோம்:-)

பொம்மையா ஆட்டி இல்லே வைக்கிறான்!

said...

வாங்க கோமதி அரசு.

அரசகுமாரிக்கு 'யார் அங்கே?'ன்னு அதிகாரமாக் கேக்கத் தோணலை பாருங்க!

said...

வாங்க ரமணி.

மசாலா சேர்த்தால் கொஞ்சம் சுவை கூடுமேன்னுதான் இப்படி:-) அதுக்காக அள்ளிப் போடமாட்டேன். கிள்ளிப் போடுவதுதான்........

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

அழகே அழகு! அதுவும் அப்போ இருந்த காலத்துக்கு ஏற்றபடி நல்லா ஸாலிட்டா இருக்காங்க. 0 சைஸ் பைத்தியம் பிடிக்காத காலம் அது!!!!

said...

வாங்க ஜிரா.

பேசக்கூடாதுன்னா நம்ம சனம் கேட்டுருமாக்கும்? சினிமாத் தியேட்டரில் கூட செல்லை ஆஃப் பண்ணி வைக்கமாட்டாங்க. குறைஞ்சபட்சம் சைலண்ட் மோடில் போட்டுக்கலாம்தானே? கால் வந்தவுடன் படம் ஓடிக்கிட்டு இருக்கும்போதே சத்தமா ஹலோ சொல்வதைக் கேட்டால் எரிச்சலாக இருக்கும் நமக்கு.

வராஹர் அங்கே புஷ்கரணிகிட்டே இருக்காருன்னு சொல்லி இருந்தேனே :-)

said...

வாங்க வல்லி.

வந்த முதல் நாளிலேயே மாமியாரிடம் நல்ல பெயர் வாங்கிக்கணுமே என்ற துடிப்பில் வேலையாட்களை அனுப்பாமல் தானே கிளம்பிடாங்க ராஜகுமாரி. ப்ச்... பாவம்.

நான் ஒரு இடத்துலே வாசிச்ச சமாச்சாரம் ஒன்னு....... புதுக் கல்யாணம் பண்ணி மாமியார் வீட்டுக்கு வந்ததும் முதல் ஒரு நாலைஞ்சுநாள் மாமியார் பேச்சைத் தட்டவே கூடாதாம். எள்ளுன்னா எண்ணெயா இருக்கணுமாம்.

மாமியாரும் மனம் கொள்ளாத மகிழ்ச்சியில் அக்கம்பக்கம் எல்லாம் போய் மருமகளைப் புகழ்ந்து தள்ளிருவாங்க.

அப்புறம் மெள்ள சுயரூபம் காமிக்கலாம். புது மருமகள் கெட்டவள்னு போய்ச் சொன்னாலும் அக்கம்பக்கம் நம்பாது. எப்படி இருக்கு டெக்னிக்?

பூலங்கி சமாச்சாரம் பெருமாளுக்குத்தானே? தாயார் மலைஏறி வர்றாங்களா என்ன? தெரியலையேப்பா............

said...

வாங்க பித்தனின் வாக்கு.

ஒரு துரும்பைக் கிள்ளி, நீ மாமியார்னு சொல்லிக் கீழே போட்டதும் துள்ளுமாம்!

அந்தந்த பதவிக்கு அந்தந்த குணம் :-)

said...

வாங்க சிக்மா.

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

சீனிவாச மங்காபுரம் போய் நிம்மதியா தரிசனம் செய்யுங்க. நாலு கோவில்களையும் விடவேண்டாம்!

நல்லபடி அமையணுமுன்னு பெருமாளை வேண்டிக்கறேன்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கொத்தமல்லிக்கும் ஒரு கதை இருந்தாலும் இருக்கலாம்!

தெரியும்போது பகிர்ந்தால் ஆச்சு:-)