Monday, March 07, 2016

கந்தனும் காளிகாம்பாளும் !(இந்தியப் பயணத்தொடர். பகுதி 4)

அண்ணாசாலை வழியாப் போய்க்கிட்டு இருக்கும்போது கண்ணெதிரே தெம்பட்டது பிரமாண்டமான ஒரு கறுப்புத்  தொட்டி. கப்பலில் இருந்து வரும் கச்சா எண்ணெயைச்சேர்த்து வைக்கும் ராக்ஷஸ அளவுள்ள பெட்ரோல் டேங்க். ஆமா இதைக்கொண்டுவந்து  நட்டநடுவில் ஊருக்கு மத்தியில் வைப்பாங்களான்னு தான் சென்னைக்கு முதல் முதலா வர்ற  வெளியூர்/ வெளிநாட்டு சனம் நினைக்கும். நானும் அப்படித்தான்  மொதல்லே பார்த்தப்ப நினைச்சேன்.




கடைசியில் பார்த்தால்  புது சட்டசபை(யாம்!)  (இப்ப இது ஆசுபத்திரி!) தமிழ்நாட்டுக் கட்டடக்கலையின் ஒரு சின்ன அம்சம் கூட இல்லாமல் கவனமாப் பார்த்துக் காட்டுனதுன்னு அப்புறமாத்தான் தெரியவந்தது:-(  இப்பவும் அதைப் பார்த்தவுடன் மனதில் வெறுப்பு வந்ததே மிச்சம்.

வாலாஜா சாலை வழியா பீச் ரோடைப் பிடிச்சுக் கோட்டையைக் கடந்து பாரி முனை நோக்கிப்போறோம். போறவழியிலேயே  இதே ட்ராவல்ஸைச் சேர்ந்த இன்னொரு ட்ரைவர் நம்மை  இதே கோவிலுக்கு எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுக் கூட்டிப்போனார் என்பதையும் சொல்லி வச்சேன்.

'எல்லாம் புதுசுபுதுசா வர்றாங்க மேடம்.  வண்டி நிறைய இருந்தாலும் ட்ரைவர்கள் கிடைக்காமச் சும்மாத்தான் நிக்குது. அதான் அவசரத்துக்கு யாரையாவது வேலைக்கு வச்சால் இப்படி ஆகிப்போகுது'ன்னு  சமாதானம் மாதிரி ஒன்றைச் சொன்னார்.  அதுசரி. ட்ரைவர்களுக்கு ட்ரைவர் சப்போர்ட்டாத்தானே பேசணும் இல்லையோ?

பீச் ஸ்டேஷனக் கடந்து போய் இடது பக்கம் Jaffar Sarang தெருவுக்குள் புகுந்து அப்படியே மண்ணடித்தெருவோடேயே போய்  லிங்கிச்செட்டிக்கு அடுத்ததா தம்புச்செட்டிக்குள்  இடதுபக்கம் திரும்பினா கோவில். காளிகாம்பாள் கோவில்!

கோவிலுக்குப் போனதையும்  அம்பாளைப் பார்க்காததையும் சொல்லிப் புலம்புனது இங்கே:-)


கோவிலுக்கு எதிரே நல்லவேளையா பார்க்கிங் கிடைச்சது. நாங்க இறங்கி கோவிலுக்கு போறபோது தூரத்தே கொட்டு முழக்கும் நாதஸ்வரமும்! சாமி ஊர்வலம்! எதிரில்வரும் சாமி யாருன்னு இங்கே இருந்தே புரியலை. அம்மன்  பவனி போல்!ஆனாலும் சாமியைப் பார்த்துட்டே கோவிலுக்குள் போகலாம்.
நின்னுக்கிட்டு இருக்கோம். பவனி நாமிருக்குமிடம் வந்தாச்சு. முருகன்!

கோபாலுக்குப் பரவசம்!  தேடிக்கிட்டு வந்துட்டான்னாரு. இன்றைக்கு என்ன விசேஷமுன்னு  பக்கத்துலே இருந்த பூஜைசாமான் கடைக்காருகிட்டே கேட்டால்...  கிருத்திகையாம். 'சாமிக்கு தேங்காய் உடைம்மா'ன்னு சின்னக்கூடையை எடுத்துத் தர்றார். வேணாமுன்னு தலையாட்டிட்டுக் கொஞ்சநேரம் சின்ன வீடியோ எடுத்தேன்.  கடைக்காரருக்குப் பக்கத்தில் நின்னவர்  சாமியைப் படமெடுக்கக்கூடாதுன்னார்! அப்படியான்னு தலையை ஆட்டிட்டு என் வேலையைத் தொடர்ந்தேன்.


அதென்ன கந்தனுக்கும் காளிகாம்பாளுக்கும்  இப்படி பாசப்பிணைப்பில் இருக்காங்க! தாய்க்கும் சேய்க்கும் உள்ள உறவு  ரொம்பவே பலமா இருக்கே!  அதிலும் கந்தன் எப்பவும் தாய்க்கு முதல்லே வந்து நின்னுடறாரே! போனமுறையும் கந்தனை சேவிச்சபின் காளிகாம்பாள் கோவிலுக்கு  வந்தோம். இப்போ காளிகாம்பாள்வாசலில் நிக்கும்போதும் 'முதலில் என்னைப் பார்த்துட்டு உள்ளே போ'ன்றார் கந்தன்!

ஊர்வலம் கொஞ்சநேரம் நின்னு  பக்தர்கள் செஞ்ச  மரியாதையை பெற்றுக்கொண்டுநகர்ந்து போய் காளிகாம்பாள் வாசலில் இன்னும் கொஞ்சநேரம் நின்னுட்டு, கோவில் செஞ்ச மரியாதையை ஏத்துக்கிட்டு நகர்ந்து போச்சு.  நாங்களும் கோவிலுக்குள் போனோம்.

இடதுபக்கம் இருக்கும் கோவில்கடைகளையும் வலது பக்கமிருக்கும் பெரிய அம்பாள் சிலைக்கு முன் எண்ணெய் தீபங்கள் ஏற்றி வைக்கும் பெண்கள் கூட்டத்தையும் பார்த்துக்கிட்டே உள்ளேபோறோம். ப்ரத்யங்கரா தேவி!  எல்லோருக்கும் எதிரிகள் பெருத்துப்போயிட்டாங்க போல !   அங்கங்கே  காவல்துறை ஆட்கள் இருக்காங்க.

 உற்சவர் இருக்கும் மேடைக்கு முன்  சிலர் தியானம் செய்வது போல் உக்கார்ந்துருந்தாங்க.  ஓசைப்படாமல் நகர்ந்து  இடப்பக்கம் போய்  அங்கிருந்த வாசலுக்குள் நுழைஞ்சதும் காளிகாம்பாள் சந்நிதி.

கொஞ்ச தூரத்தில் கருவறை. கருவறைக்கருகில்  முன்மண்டபத்தில் ஆடாமல்  அசையாமல் ஒழுங்குமுறையா ஒரு கூட்டம் தரையில் உக்கார்ந்துருக்காங்க. இந்தப்பக்கம் மேடை போலுள்ள அமைப்பில் நாம் ஏறிப்போய்  சந்நிதிக்கு எதிரா நின்னு அம்பாளை தரிசிக்கிறோம். அம்பாளுக்கு முன் ஆதிசங்கரர் ஸ்தாபிச்ச மஹாமேரு!

அபிஷேகம் அலங்காரம் முடிஞ்சு  விஸ்தாரமா ஷோடஸ உபச்சாரம் நடக்குது. கண்குளிரப் பார்த்தோம். அங்கே இருந்தே தீபாராதனைகளை உயர்த்தி மக்கள் பக்கம் காமிக்கிறார் குருக்கள்.  இருந்த இடத்தில் இருந்தே  கைகளை நீட்டி நமஸ்கரிக்கிறோம். எல்லாம் முடிஞ்சு  முன்னால் உக்கார்ந்திருந்த மக்கள் எழுந்து நின்னதும் நாங்களும் மேடையில் இருந்து இறங்கும்போது  சரசரன்னு  இன்னும் காவல்துறை மக்கள்  ஓசைப்படாமல் வந்து அவுங்களுக்கும் நமக்குமிடையில் சுவர் எழுப்பறாங்க.

என்ன சமாச்சாரமுன்னு விசாரிச்சால்.... சண்டிகர் மாநில அமைச்சர் விஜயம். அட!  நாமும் சண்டிகர் வாழ்(ந்த) மக்கள்ஸ் இல்லையோ! ஹமாரா பரிவார் ஹைன்னேன்:-)

பதவியில் இருக்கும்போதே  அதிகாரவர்க்கம் முடிஞ்சவரை மற்ற மாநிலக் கோவில்களுக்கு விஜயம் செஞ்சுடறாங்க. இல்லேன்னா இவ்ளோ மட்டுமரியாதையும், தனி கவனிப்பும் கிடைக்குமா என்ன?

அவுங்க புண்ணியத்தில் நமக்கும் நல்ல தரிசனம் அமைஞ்சது! நலமுண்டாகட்டுமுன்னு  மந்திரியை மனசுக்குள்ளே வாழ்த்திட்டுக் கோவிலைச் சுத்தி வந்தோம். பாதுகாப்புக் கருதி  இன்னும் உள்ளே போகவிடாமல் தடுப்புகள்  அங்கங்கே வச்சுருந்தாங்க.

போனமுறை கோவில்பற்றி எழுதுனப்ப, நம்ம வல்லியம்மா காளிகாம்பாள் சிலையில்  மூணு தேவிகள் சேர்ந்தே காட்சி கொடுப்பாங்கன்னு பின்னூட்டி இருந்தாங்க. அடடா அப்படியான்னு  மனசு ஏங்குனது உண்மை. இப்போ  பூஜை நடக்கும்போது  காளிகாம்பாளுக்கு மூணு தலை இருக்கோ? இல்லை இடதும் வலதுமாய்  வேற தேவிகள் உண்டோன்னு  கண்களை அகலத்திறந்து கவனிச்சுக்கிட்டே இருந்தேன்.  ஊனக்கண்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒரே முகம். ஒரே உருவம்.

யாரிடமாவது கேட்டுத் தெரிஞ்சுக்கலாமுன்னு போனால்   நேரா இருக்கு கோவில் அலுவலகம்.  அங்கே போய் விசாரிச்சேன்.  அப்படி ஒன்னும் இல்லையேம்மா. அம்பாள் ஒரே ஒரு உருவம்தான். ஆனால்  கண்களில் வலப்பக்கம் சரஸ்வதியும் இடப்பக்கம் மஹாலக்ஷ்மியும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம் என்றார்.

மிகவும் புராதனமான கோவில், சுமார் 400 வருடங்கள் பழமையானது. சிவாஜி மஹாராஜா வழிபட்ட பவானி ஸ்ரீ காளிகாம்பாள், யாதுமாகி நின்றாய் காளி என்று பாரதியாருக்கு நா வன்மையை கொடுத்த ஸ்ரீ சாரதை காளிகாம்பாள், தன்னை வணங்கும் அன்பர்களின் செல்வ நிலயை உயர்த்தும் ஸ்ரீ மஹா லக்ஷ்மி கல்வியை கலைகளை வழங்கும் ஸ்ரீ மஹா சரஸ்வதி இருவரையும் தன் கண்களாகக் கொண்டவள் காளிகாம்பாள். தனது இச்சா மந்திர சக்தியால் பன்னிரண்டு ஸ்தலங்களில் காட்சி தந்து வரும் காமாட்சி அன்னை, அவற்றுள் ஒன்றான இத்திருக்கோவிலில் மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் வலக்கால் தொங்கவிடப்பட்ட நிலையில், அங்குச பாசம் மேற்கையில் ஏந்தி, தாமரை வரத முத்திரையுடன், மூக்குத்தி மின்ன, மரகத பதக்க பொன் தாலியும், ஒட்டியாணம், கொப்பு, குழை, கங்கணம், பாதச்சிலம்பு மின்ன, காலை மூன்று அரக்கர்களின் மேல் வைத்த நிலையில் எழிற் கோலம் காட்டுகின்றாள். நாம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் நீக்கினாலே அந்த பரம் பொருளுடன் சேர முடியும் என்பதை குறிப்பாக காட்டுகின்றாள் அன்னை. காளி என்றாலும் சாந்த ரூபத்தில் காமாக்ஷியாக எழிற் கோலம் காட்டுகின்றாள் அன்னை. அவள் சன்னதியில் நின்றாலே ஒரு நிம்மதி அம்மையை தரிசித்தவுடன் நம் பாவமெல்லாம் விலகுகின்றன. ஆதி சங்கர பகவத் பாதாள் ஸ்தாபித்த ஸ்ரீ சக்ர அர்த்த மேருவும் அம்மையின் முன் உள்ளது. அர்ச்சனை அர்த்த மேருவிற்குத்தான் நடைபெறுகின்றது.

மேலே உள்ள பத்தி  நம்ம கைலாஷி அவர்கள்  காளிகாம்பாளைப் பற்றி எழுதியதில் ஒரு பகுதி!  நன்றி : கைலாஷி!


மகாகவி பாரதியார் அடிக்கடி வந்து போன கோவில் இது. யாதுமாகி நின்றாய் காளின்னு பரவசத்தோடு பாடுனவைகள் எல்லாமே இந்தக் காளியைப்பற்றித்தானாம்.

ப்ரிட்டிஷார் அரசாண்ட காலத்தில்(1640) ஜார்ஜ் கோட்டைக்குள்  இருந்த அம்மனை தம்புச்செட்டித் தெருவுக்கு மாத்தினாங்களாம். காளிகாம்பாளின் பனிரெண்டு அம்சங்களில் ஒன்னுதான்  காஞ்சிபுரத்தில் இருக்கும் காமாக்ஷி அம்மன் என்கிறார்கள்.

பரவசத்தோடு வெளியே வந்தோம். அழகான பூ அலங்காரத்தோடு  ஒரு பெண்!  வித்தியாசமா இருக்கேன்னு க்ளிக்கினேன்.

கோவிலுக்குள் படமெடுக்க அனுமதி இல்லைன்னு ஒரு அறிவிப்பு பார்த்துட்டுக் கெமெராவைக் கைப்பையில் வச்சுட்டேன். யூட்யூபில் ஒரு புண்ணியவான்  13 நிமிச வீடியோ க்ளிப் போட்டு வச்சுருக்கார். நேரம் இருந்தால் பாருங்க.



ரெண்டுமுறை போயும் இன்னும் சரியாப்பார்க்காத உணர்வு இருக்கு. இன்னொருமுறை போகத்தான் வேணும். நின்னு நிதானமாப் பார்க்கணும்.  காளி கூப்ட்ருக்காடா......
 தம்புச்செட்டித் தெருவழியாவே  என் எஸ் ஸி போஸ் சாலையில் வந்து சேர்ந்தோம். கண் எதிரே உயர் நீதிமன்றம்.  கண்களைப் பறிக்கும் அழகோடு  கம்பீரமா  நிக்குது. ஹை கோர்ட்டுக்கு 150 வயசாச்சுன்னு  ஒரு நினைவு வளைவு வச்சுருக்காங்க.  அதை அடுத்து சட்ட உதவி மையம்னு ஒரு கட்டடம்.


ஏழை,பணக்காரன், அரசியல்வியாதி,சாதாரணன் இப்படி எந்த ஒரு  வித்தியாசமும், ஆளுக்கேத்தாப்போல வளையும் சட்டங்களும் இல்லாமல் இருந்தாலே நாடு உருப்பட்டுடும் என்ற நினைப்பு வந்து பொழைப்பை கெடுத்துச்சு
.
எனக்கு ராட்டன் பஸாரில் ஒரு வேலை இருக்கு. ஹேண்ட்லூம் ஹௌஸ் போகணும். நல்ல காட்டன் ஸல்வார் கமீஸ் துணிகள் அனைத்து மாநில கைத்தறி வகைகளும் கிடைக்குமுன்னு  லேடீஸ் க்ரூப்பில் சொல்லி இருந்தாங்க.  மூணு முறை அந்த ஏரியாவில் சுத்தியும் கண்டு பிடிக்கவே முடியலை.

சென்னையில் இருந்த ஒரு காலத்துலே அடிக்கடி போன கடை.  எங்கதான் போயிருக்குமுன்னு  கொஞ்சம் வயதான ஒரு பெரியவரிடம் விசாரிச்சால்....  இதோ இந்த இடம்தாம்மா. அவுங்க காலி பண்ணிக்கிட்டு  எழும்பூர் போயிட்டாங்கன்னார்.

இடத்தை க்ளிக்கிட்டு இருக்கும்போது, இன்னொருத்தர்  எல்லாத் துணிகளையும் தில்லையாடி வள்ளியம்மைக்கு மாத்திட்டாங்கன்னு கூடுதல் சேதி சொன்னார்.

ஆஹா...   வாங்காமல் விடுவதில்லை! சலோ எழும்பூர்ன்னு  அங்கே போய்ச் சேர்ந்தோம். ரயில்வே ஆஃபீஸ், சென்ட்ரல் ஸ்டேஷன், ரிப்பன் பில்டிங்னு  தெரிஞ்ச கட்டடங்கள் கண்ணில் பட்டாலும் சாலை முழுசும் தடுப்புகளும், நடை பாலம்,  பெரிய கூட்டமா சாலையைக் கடக்கும் மக்கள்ஸ்னு ரொம்ப  வித்தியாசமா இருக்கு எனக்கு.


 இவ்ளோ களேபரத்தில்   தலைபாகையுடன் ஒரு சிலை! யார்னு தெரியலை. தெரிஞ்சவங்க சொல்லுங்க. நூற்றாண்டு கொண்டாட்டமென்பது நம்ம கேமெராவில் பதிவாகி இருக்கு.

தில்லையாடி வள்ளியம்மை தமிழ்நாடு கைத்தறி விற்பனை கட்டடத்துக்குப் போய்ச் சேர்ந்து விசாரிச்சால்..... 'ஹேண்ட்லூம் ஹௌஸ் சமாச்சாரங்களிங்கே வரவே இல்லை. அது வேற இது வேற'ன்னுட்டாங்க.  அங்கே இருக்கும்  துணிமணி வகைகளில் ப்ரிண்ட் ஒன்னும் எனக்கு விருப்பமானதா இல்லை.  நம்மவருக்கு மட்டும்  வேட்டி கட்டும்போது  போட்டுக்கும் அங்கவஸ்த்திரம் ரெண்டு வாங்கிக்கிட்டு,  வழக்கமா துணிகள் வாங்கும் காஞ்சிபுரத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.

எனக்கானவை அங்கே  எனக்காகக் காத்திருந்தன.  யானை பார்டர் போட்ட புடவை ஒன்னு . கடை இப்போ முன்னை விட ரொம்ப நல்லா இருக்கு!  ஸில்க் காட்டனில்  வைர ஊசி டிசைனில் பத்து கஜம் புடவையும் கிடைச்சது. நல்ல டொமாட்டோ  ரெட்.  சாமிக்கு சாத்தணுமுன்னு வாங்கினோம்.



அடுத்த ஸ்டாப். மயிலை சரவணபவன். பகலுணவு முடிச்சு, அறைக்கு வந்து அரைமணி நேரம் ரெஸ்ட்.

அப்புறம் சுவாரஸியமான  ஒரு இடத்துக்குப் போறோம். எல்லோருக்கும் பிடிச்ச இடம்!



PINகுறிப்பு: சகபதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்குக்கண்ணீர் அஞ்சலியுடன் இந்தப் பதிவை சமர்ப்பிக்கின்றேன். ஆன்மீகப்பதிவென்றால் அவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள், நான் எதாவது முக்கியமான தகவலைக் குறிப்பிட மறந்து போனேனா என்று சரி பார்த்துக்கொள்ள அவர்கள் பதிவை எட்டிப் பார்ப்பது வழக்கம்.  நேற்று இந்தக் காளிகாம்பாள் பதிவு எழுதும்போதும் ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். 
அப்போது அவருடைய மறைவுச்சேதி எனக்குத்தெரியாது. இன்று ஃபேஸ்புக்கில் ஏஞ்சலீன் அவர்கள் எழுதியதைக் கண்டபின்..........  மனம் ஒன்னும் சரியில்லை :-(

அவருடைய ஆன்ம சாந்திக்கு நம் பிரார்த்தனைகள்.

தொடரும்............:-)



28 comments:

said...

காளிகாம்பாள் தரிசனம் அற்புதம்.இப்பவே சென்னைக்கு வந்துட மாட்டோமான்னு இருக்கு.. நாங்கள் போன போது உற்சவர்களாக மூவரையும் பார்த்தாக நினைவு. திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்களின் மறைவு பெரிய அதிர்ச்சி.

said...

படங்கள் அத்தனையும் அழகு.

said...

உங்களுடன் பயணித்துக்கொண்டிருக்கும்போது பல அருமையான செய்திகளை அறியமுடிகிறது. காளிகாம்பாள் கோயில் போகவில்லை. இனி போவேன்.
சக பதிவர் ராஜராஜேஸ்வரி அவர்களின் மறைவு பற்றிய செய்தி அதிர்ச்சியைத் தருகிறது. இச்செய்தியினைத் தங்களது வலைத்தளம் மூலமாகத் தான் அறிந்தேன். நல்ல பதிவர், எழுத்தாளர்.

said...

நேத்து வைகோ ஐயாவின் பதிவில் பார்த்துதான் ராஜராஜேஸ்வரிம்மாவின் மறைவுச்செய்தி தெரிய வந்தது. அதிர்ச்சியான விஷயம்தான்.

காளிகாம்பாள் தரிசனம் அருமை

said...

இராஜராஜேஸ்வரி அவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

காளிகாம்பாள் கோயில் நானும் போயிருக்கேன். டூவீலர் நிறுத்தக்கூட எடம் கிடைக்காது. அந்தத் தெருவுக்குள் காரை ஓட்டும் தெகிரியம் எனக்கு இல்லை.

கோயிலில் ஏதோ வேலை நடந்து கொண்டிருந்தது. இப்போது முடிந்து நீங்கள் போன போது கும்பாபிஷேகமும் முடிந்திருக்கும் என நினைக்கிறேன்.

முருகன் உங்களை விடவே மாட்டான் போல. எங்க போனாலும் “என்னைப் பார். என் அருளைப் பார்”னு முன்னாடி வந்து நின்னுர்ரானே.

said...

நீங்க போனது ஹான்ட்லூம் ஹவுஸே இல்லை. அது ஈவ்னிங் பஜாரில் இருக்கு. சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து நடக்கும் தூரம். அதைத் தமிழ்நாட்டின் கோ ஆப்டெக்ஸோடு எல்லாம் இணைச்சிருக்க மாட்டாங்க. மத்திய அரசால் நடத்தப்படும் ஷோ ரூம் அது. எனக்குத் தெரிந்து 40 வருடங்களுக்கும் மேல் ஈவ்னிங் பஜாரில் கண்ணாடிக்கடைகளுக்கு அடுத்தாற்போல் இருக்கும் கட்டிடத்தில் இருந்து வருகிறது. இப்போவும் அங்கே தான்! தில்லையாடி வள்ளியம்மையில் எல்லா மாநிலக் கைத்தறிகளும் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். அவங்க வருஷத்துக்கு ஒருமுறை கண்காட்சி போடுவாங்க. அப்போ மட்டும் கிடைக்கும்.

said...

ம்ம்ம்ம், ராஜராஜேஸ்வரி பத்திப் படிச்சு எனக்கும் அதிர்ச்சி ஆகிவிட்டது. அவங்க குடும்பத்தார் மனம் தேறப் பிரார்த்தனைகள்.

said...

காளிகாம்பாள் கோயிலுக்குப்போறச்சே எல்லாம் பாரதி பாடினது தான் நினைவு வரும். இந்த இடத்தில் தானே நின்று பாடி இருப்பான் பாரதி! இப்படிப் பாடி இருக்கலாமோ என்றெல்லாம் நினைச்சுப்பேன். மனதில் ஒரு கண நேரம் எனக்குள்ளும் வீராவேசம் வரும். :)

said...

அனைவரது பதிவுகளுக்கு தவறாமல் வருகை தரும் அந்த தாமரைப்பூ அவரது எண்ணிலடங்கா ஆன்மீக பதிவுகள் மூலம் நம் அனைவரது மனதிலும் என்றும் நிலைத்திருப்பார் .நம்ம தமிழ் நாட்டில் இத்தனைவழிபாட்டு தலங்கள் இருப்பதை அவர் பதிவுகள் மூலமே அறிந்து கொண்டேன் . அவரது ஆன்ம சாந்திக்கு பிரார்த்திப்போம்

said...

தம்பு செட்டி linghi செட்டி பவளக்கார தெரு எல்லாமே குறுகிய சாலைகள் தான் இந்த இடங்களில் தான் பாரதி வழிபட்ட இந்த கோயில் இருக்கிறது ! ஆச்சர்யம் எத்தனை முறை கடந்து சென்றுள்ளேன் அப்பாவுடன் .ட்ராபிக் ஜாம்ல மாட்டிகிட்ட அனுபவம் நிறைய இருக்கு .
படங்களும் செய்திகளும் அருமை

said...

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர், தம்பு செட்டி தெரு பக்கம் வந்த நினைவுகளை உங்கள் பதிவு நினைக்க வைத்தது.

said...

காளிகாம்பாள் கோவில் போனதே இல்லை! அடேடே... என் அப்பன் முருகன் பவனி! ஓம் முருகா...

said...

நல்ல படங்கள். விளக்கங்களும் வழமை போல அருமை....

இராஜராஜேஸ்வரி ஜி அவர்களின் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சியான விஷயம் தான். அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்.

said...

இராஜராஜேஸ்வரி அவர்களின் மறைவு மிகப் பெரிய இழப்பு.இன்று சிவராத்திரி அவர்கள் என்ன பதிவு போட்டிருப்பார்கள், படித்து தெரிஞ்சு follow பண்ணனும்னு யோசிச்சேன். அதிர்ச்சி அடைந்தேன்.அவரது குடும்பத்தார் மனம் அமைதிஅடைய பிரார்த்திக்கிறேன்.

said...

வாங்க வல்லி.

ரொம்ப அதிர்ச்சியான சேதிதான்ப்பா :-(


உற்சவர் மூவர்....... நவராத்ரி அலங்காரமா இருக்குமோ?

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

கட்டாயம் ஒருமுறை போய் தரிசிக்க வேண்டிய கோவில்தான் இது. விசேஷநாட்களில் போகாமல் சாதாரண நாட்களில்போனால் நின்னு நிதானமா கோவிலைச் சுற்றிப் பார்க்கலாம். நானும் அப்படி ஒருவாய்ப்பை எதிர்நோக்கி இருக்கேன்.

சகபதிவர் மறைவு... மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு:-(

said...

வாங்க சாந்தி.

எதேச்சையா ஏஞ்சலீன் பதிவு கண்ணில் பட்டபோதுதான் எனக்கும் சேதி தெரிஞ்சது :-(

said...

வாங்க ஜிரா.

சகபதிவர் அதுவும் நமக்கு எழுத்துகளால் பரிச்சயமானவர் என்றால் துக்கம் அதிகமா இருக்கு :-(

முருகன் எப்பவும் இப்படித்தான் குறுக்கே பாய்ஞ்சு தரிசனத்துக்குக் கூட்டிப்போகிறான். கோபால் முருக பக்தர் என்பதால் இருக்கணும். நெல்லுக்குப் பாயும் நீர் இந்த புல்லுக்கும் கிடைச்சுருது.

ஜார்ஜ் டவுன் தெருக்கள் எல்லாமே ரொம்பக் குறுகியவை. ரொம்பப் பழையகால சமாச்சாரம். குதிரை வண்டிக்காக அமைத்தவைதான். பேசாம சிலதெருக்களை ஒரு வழிப்பாதையா மாத்தினால் தேவலை. இல்லை இப்பவே அது ஒருவழிப்பாதைதானோ என்னவோ?

said...

வாங்க கீதா.

அதே இடம் என்றுதான் நினைக்கிறேன். நானும் பலமுறை போய்வந்த இடம்தான். அந்தக் கட்டிடம் இப்போ வாடகைக்குக் கிடைக்கும் என்று போட்டுருக்காங்க. ஒருவேளை லீஸ் முடிஞ்சு போச்சோ என்னவோ! எதுக்கும் சென்னை வரும்போது கொஞ்சம் விசாரிச்சு வையுங்க.

காளிகாம்பாள் கோவிலில் பாரதியார் வந்து தரிசித்த விவரம் பார்க்கும்போது மனதில் ஒரு பெருமிதம், வீரம் எல்லாம் வர்றது சகஜமில்லையோ!

பிரார்த்தனைகளுக்கு நன்றி. ப்ச்....

said...

வாங்க ஏஞ்சலீன்.

உங்க பக்கம் பார்க்கலைன்னா........ சேதி இன்னும் தாமதமாகவே தெரிஞ்சுருக்கும்ப்பா:-(

அடுத்தமுறை சந்தர்ப்பம் கிடைச்சால் கோவிலுக்குள் போய்ப் பார்த்துட்டு வாங்களேன்.

said...

வாங்க தமிழ் இளங்கோ.

கொசுவத்தி ஹோல்ஸேல் விற்பனை நாந்தான்:-)

said...

வாங்க ஸ்ரீராம்.

சந்தர்ப்பம் கிடைச்சால் ஒருமுறை காளிகாம்பாள் தரிசனத்துக்குப் போய் வாங்க.

முருகன் விடாமல் துரத்துக்கிறான் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பிரார்த்தனைகளுக்கு நன்றி.

தொடர்ந்து வருவது மகிழ்ச்சி.

said...

வாங்க சசி கலா.


கோவில் விவரங்கள் என்றாலே அவுங்க நினைப்பு வந்துருதுப்பா.

ப்ச்....... காலனுக்கு ரொம்பவே அவசரம் போல :-(

said...

எச்சூஸ் மி ரீச்சர்.

சண்டிகர் மாநிலமா? அதுக்கு அமைச்சரா? என்னமோ உதைக்குதே. ரீச்சர் சொன்னாச் சரின்னு போயிடணுமா? அது யூனியன் பிரதேசமாச்சே? லெப்டினண்ட் கவர்னர், செகரெட்டரி - இவங்கதானே நிர்வாகம்? அப்புறம் எப்படி மாநிலம், அதுல எப்படி அமைச்சர்கள்?

சொல்லுங்க ரீச்சர் சொல்லுங்க...

said...

வாருமையா வகுப்புத் தலைவரே.........

டீச்சர் தப்பா சொன்னால் மட்டும் பாய்ஞ்சு வருவீர் போல!

சண்டிகர் யூனியன் பிரதேசம் என்றாலும் . பாண்டிச்சேரிக்கு இல்லையா மாநிலம் அந்தஸ்து, அது போல அங்கேயும் முதன்மந்திரி உண்டுன்னு நினைக்கிறேன். போதாக்குறைக்கு ஹரியானா, பஞ்சாப் ஆகிய வேற ரெண்டு மாநிலங்களின் secretariat கூட சண்டிகரில்தான் தனித்தனிக் கட்டடங்களில் இருக்கு.

கோவிலுக்கு வந்தவர் இந்த மூணு மந்திரி கூட்டங்களில் ஒருவராகவும் இருக்கலாம்.

சண்டிகரில் இருந்து வந்த அமைச்சர்னு கோவிலில் சொல்லக்கேட்டது உண்மை.

said...

/டீச்சர் தப்பா சொன்னால் மட்டும் பாய்ஞ்சு வருவீர் போல! /

எல்லாம் இங்ஙனத்தேன் சுத்திக்கிட்டு இருக்கோம்.

/அது போல அங்கேயும் முதன்மந்திரி உண்டுன்னு நினைக்கிறேன்./

கிடையாது கிடையாது. நீங்க மெய்யாலுமே அங்க இருந்தீங்களான்னு சந்தேகம் வருதே..

/சண்டிகரில் இருந்து வந்த அமைச்சர்னு /

அப்படியே சொல்லிட்டு போயிருக்கலாமுல்ல... :))

said...

காளிகாம்பாள் கோயில் அழகான கோயில். அட முருகன்...நம்மாளாச்சே!!

இங்கு ரஜனிகாந்தினாலும் புகழ்பெற்றது அவர் தவறாம விசிட் செய்வாராமே முன்பு. இப்போது தெரியவில்லை.

ராஜராஜேஸ்வரி அவர்களின் மறைவு மிகவும் வேதனை. ..அவர்கள் தளத்தில் வெளிவந்த போதே அறிந்தோம்.

கீதா