Wednesday, May 18, 2016

முந்தியெல்லாம் பதிவர் சந்திப்பு மட்டும்தானே? இப்ப முகநூல் பதிவர் சந்திப்பும் சேர்ந்தாச் .... ஆஹா...(இந்தியப் பயணத்தொடர். பகுதி 35)

ஏற்கெனவே வந்து போன இடத்தின் அடையாளம் எப்படி மறந்து போச்சுன்னே தெரியலை.  வளாகத்துக்குள் போய் வண்டியை நிறுத்தினா, எல்லாமே பார்த்த நினைவில் இருக்கு. ஆனால் அக்காவையும் அத்திம்பேரையும் காணோம்! வாசலில் இருந்த செக்யூரிட்டியிடம்  இருவர் உருவையும் விஸ்தரிச்சுச் சொல்லியும் அப்படி அங்கே யாருமே இல்லைங்கறாங்க.

இன்னொருக்கா செல்லில் கூப்புட்டு விவரம் கேட்டால், நமக்காக காத்துக்கிட்டு இருக்காங்களாம். எங்கே?  இதே பெயருடைய காம்ப்ளெக்ஸ் ஆனால் வேறொரு   ஏரியா!   யானைக்கு அடி சறுக்கியே போச்சு:-)
நம்ம சுப்புரத்தினம் ஐயா & மீனாட்சி அக்கா வீடுதான். வழக்கம்போல் அன்போடு வரவேற்பு.  மகளும் பேத்தியும்  வெளிநாட்டில் இருந்து வருகை.  எல்லோரோடும் ஊர்க்கதைகள் பேசி மகிழ்ந்து ஒரு மணி நேரம் போனதே தெரியலை. பேத்தி, எங்களுக்காக ஒரு அட்டகாசமான பாட்டு, ப்யானோ/கீபோர்டுலே வாசிச்சுக் காமிச்சது எனக்கு ரொம்பவே பிடிச்சுருந்துச்சு. சின்ன வீடியோ க்ளிப் எடுத்தேன் என்றாலுமே.....  சொந்தக் கலெக்‌ஷன். வெளியிடமாட்டேன்னு வாக்குக் கொடுத்ததால்....  இங்கே போடலை.
அங்கே  இருந்து நேரா சாலிகிராமம்.  இங்கே இப்போ நமக்கு மூணு சொந்தங்கள்!  இந்த மூன்றில் இருவர் ஃபேஸ்புக் நட்பும்கூட!  முதலில் போனது  நம்ம ஸ்ரீதர் அம்மா அப்பாவைப் பார்க்கதான். நம்மூட்டு பூஜையில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்,   புத்தகத்தைப் பார்க்காமலேயே  ஸ்பஷ்டமாச் சொல்லி  நம்ம  வீட்டு விருந்தினர் மனங்களில் இடம் பிடிச்சாருன்னு முந்தி ஒருக்கா எழுதுனது (?!) ஸ்ரீதர் பற்றித்தான்!  புள்ளையாண்டான், இங்கே நம்மூரில் படிக்க வந்துருக்கார்.
எனக்கொரு புதுத் தம்பி கிடைச்சார். தம்பி மனைவியும் அன்பு காமிப்பதில் கம்மி இல்லையாக்கும்!  எல்லோரையும்விட தம்பியின் தாய் இன்னும் அருமை! புதுக்குடும்ப உறவு ஏற்பட்டது!  பெருமாளுக்கு நன்றி!   மனமும் வயிறும் குளிர்ந்தது உண்மை. பிறந்த வீட்டு  சீர் இல்லாமல் இருக்குமோ?
இன்ப அதிர்ச்சி தாங்கலை கேட்டோ!


இதுலே சாப்பிட வரலைன்னு ஆதங்கம்.  முடிஞ்சால் இன்னொருக்கா வர்றோமுன்னு சொன்னோம்.............. நம்ம பயணத்திட்டங்கள் எல்லாம்  எப்பவுமே  எதிர்பாராதது நிறைந்தவைகளே!

வீட்டுக்கு ஒரு மணி நேரம் என்ற  கணக்கில்தான் இன்றைக்கு ஓடிக்கிட்டு இருக்கோம்.  இடையில் ஒவ்வொரு இடத்துக்கும் பயணநேரமே அரைமணி முக்கால்மணின்னு  ஆகிருது. இன்றைக்கு விடுமுறை நாள் என்பதால் அவ்வளவா ட்ராஃபிக் இல்லைன்னு  நம்ம சீனிவாசன் வேற சொல்லிக்கிட்டு இருக்கார்!

 அடுத்த அஞ்சே நிமிசத்தில்  மாமாவீடு!  மாமாவின் குடும்பங்களோடு இப்பெல்லாம் ஃபேஸ்புக்கில்தான் உரையாடல்ஸ். இந்த இணையம் எப்படி  உறவுகளையும் நட்பையும் இணைச்சு வச்சுருக்கு பாருங்க! விஞ்ஞானத்துலே இதுதான் இப்போதைக்கு மெய்ஞானம்!
மாமாவின் பேரன்  கேஷவ் பெரிய பக்திமானா ஆயிட்டார். பொறந்தப்ப இருந்து பார்த்துக்கிட்டு இருக்கும் பிள்ளைதான். ஆனா தோளுக்கு மிஞ்சியாச்சேபா:-)  இப்ப இளைஞர்கள்  அவரவர் மதங்களில் ஈடுபாடோடு கோவில் கைங்கரியங்கள் செய்யறது நல்லாவே இருக்கு!  நமக்குப்பின் சாமியை யாரு கொண்டாடப்போறான்ற கவலையை ஒழிச்சுட்டாங்க. கேஷவும் மயிலை ஸ்ரீ வேதாந்ததேசிகர் தேவஸ்தானக் கோயிலில் ஈடுபாடோடு கலந்துக்கறார்.
மாமி இருந்து  பார்க்கலையேன்னு ஒரு கணம் நினைச்சது உண்மை.
மூணாவது போன இடமும்  ரொம்பவே முக்கியமான சொந்தபந்தம்தான்.  ஸ்ரீ காவேரிவிநாயகர். கோவிலுக்கும் நமக்கும் பந்தம் ஒரு 32 வருசங்கள்.  இது நம்ம கோவில்.
நம்ம மாமாதான் கோவில் ட்ரஸ்டிகளில் ஒருவராக பல வருசங்கள் இருந்தார். அவர் மறைவுக்குப்பின் மாமாவின் மகன் ராஜகோபால்   கோவில் நிர்வாகத்தில் ஈடுபாடோடு ட்ரஸ்டிகளில் குழுவில் இருக்கார். நம்ம கோவில் என்பதால் இங்கே புள்ளையாரையும், பலவருசங்களாக குருக்களாக இருக்கும்  சிலரையும் நமக்கு நல்லாவே தெரியும்:-)

ரெண்டு  கோபால்களுடன் போய் தரிசனம் ஆச்சு.  ஒவ்வொருமுறை வரும்போதும்  கோவிலில் எதாவது ஒரு முன்னேற்றம் இருக்கத்தான் செய்யுது.  நல்லா இரும் புள்ளையாரேன்னு  வேண்டிக்கிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

தி.நகரைக் கடக்கும் சமயம்  கடைகள் எல்லாமே திறந்துருக்கே... இன்று மத்திய அரசு விடுமுறை இல்லையான்னு வாய்விட்டுச் சொல்லும்போதே...  அதெல்லாம் அடைக்கறது இல்லை. பாங்க்கும், கவர்மெண்ட் ஆபீசும்தான் அடைப்பாங்க.  ஐடி கம்பெனிகளும் வேலை செய்யுது. மகனுக்கு இன்றைக்கு லீவு கிடையாதுன்னார் நம்ம சீனிவாசன்.
ரத்னா ஸ்டோரில் ரெண்டு மூணு ஸ்பூன் வாங்கலாமேன்னு  நினைச்சு, எவர்ஸில்வர்  பாத்திரக்கடையில் இந்த யானை புகுந்தது:-)

புது டிஸைனா வீச்சரிவா மாதிரி  தெரிஞ்ச தோசைத் திருப்பி, ஆறு ஸ்பூன், சிக்கெடுக்க பயன்படும் கம்பிபோல நீ......ளமான ஒன்னும் வாங்கினோம். கம்பி எதுக்கு வாங்கினேன்னு இன்னும் புரியலை!
சரி. அப்போ எதிரில் இருக்கும் கீதா கஃபேயில் ஒரு காஃபி குடிக்கலாமுன்னு போனோம். எனக்கு பஜ்ஜி. கோபாலுக்கும் பஜ்ஜிதான். அவரோட ஃபேவரிட். கூடவே இன்றைக்குப் பகல் சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டதால்  ரவாதோசை ஒன்னு சொன்னார்.  சீனிவாசன் வேற ஒரு டேபிளில் இருந்ததால் என்ன சாப்பிட்டார்னு தெரியலை.



அறைக்கு வந்து சேரும்போதே மணி ஆறரை. கொஞ்சம் கால்நீட்டிப் படுத்தேன். காலையில் அறைக்கு வந்த ஹிண்டு பேப்பரைப் பார்த்துக்கிட்டு இருந்த நம்மவர் ஒரு சின்ன பகுதியைக் காமிச்சு 'போகலாமா'ன்னார்.

பின்னே?  கிடைக்குமா இது?  சட்னு ரெடியானேன்:-)

தொடரும்........:-)





14 comments:

said...

சந்தோஷ தருணங்களை
பகிர்ந்த விதம் அருமை
எங்களுக்குள்ளும் இப்போது அது
ஒட்டிக் கொண்டது
பகிர்வுக்கும் பயணம் சிறப்பாகத் தொடரவும்
நல்வாழ்த்துக்கள்

said...

சூரி சிவா ஒரு இண்டெரெஸ்டிங் நண்பர் . அவரை அவர் வீட்டில் சந்தித்து இருக்கிறேன் அவருக்கு என்று ஒரு எண்ணம் எல்லா விஷயங்களிலும் தெரிய வரும் பையனின் பனியனில் எழுதி இருக்கும் வாசகம் கவர்ந்தது

said...

அக்கா ம்ம்ம் சூப்பெர் பஜ்ஜி போங்க. அது சரி சென்னை முகனூல் பதிவர் சந்திப்பு மட்டும் தானா? அப்படியே நம்ம வீட்டுக்கும் வாங்கள்.எதிர்பார்புடன் அன்பு தங்கை.

said...

சுப்பு தாத்தாவை சென்னை பதிவர் சந்திப்பில் சந்தித்தது..... ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் அங்கே செல்ல வேண்டும் என நினைத்தாலும், நேரடியாக திருவரங்கம் செல்ல வேண்டியிருக்கிறது. இம்முறை வந்ததும் இரவில் - திரும்புவதும் இரவில்..... என்பதால் சந்திக்க இயலாது. அடுத்த முறை பார்க்க வேண்டும்.

said...

நட்பு, உறவு என்று சந்திப்புக்கள் அருமை.
படங்கள் எல்லாம் அன்பின் வெளிப்பாடு.
நான் இந்த முறை உங்கள் சந்திப்பை இழந்து விட்டேன்.
அடுத்த முறை அவசியம் சந்திப்போம்.

said...

ஆஹா.. புடவை உங்களுக்குப் பிடிச்ச யானைக்கலர் மாதிரி இருக்கே!!

said...

அருமையான சந்திப்புகள்.
அந்தப் பையன் கேஷவுக்கு மனம் நிறைந்த ஆசிகள்.



எல்லாம் அன்பால் நிறைந்த சந்திப்புகள். தொடரட்டும்.
சுப்பு அண்ணா, அவருடைய மீனாக்ஷி எல்லோருக்கும் அன்பு.

said...

வாங்க ரமணி.

எல்லாம் கண்டது கண்டபடி . நடந்தது நடந்தபடி இப்படித்தான் :-)

வாழ்த்துகளுக்கு நன்றி.

தாமதமான பதிலுக்கு... மன்னிக்கணும்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

சூரி சிவா.... இப்ப நம்ம குடும்ப நண்பரும் ஆயாச்சு.

இளைஞர்களுக்கு இப்போ கடவுள் நம்பிக்கை இருப்பது ரொம்ப மகிழ்ச்சியாத்தான் எனக்குத் தோணுது!

கடவுள் என்று உருவம் கொடுப்பதை விட, நம்மை மிஞ்சிய ஏதோ ஒரு சக்தி!

பையனின் பாட்டி எனக்கொரு தாய்! பையன், பிறந்ததில் இருந்தே தெரியும்:-)

said...

வாங்க மீரா.

அடுத்தமுறை முகநூல் நண்பர்கள் சந்திப்பு ஒன்னு வச்சுடலாம்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அருமையான தம்பதிகள்! அன்பு அங்கே ஏராளம்! அதான் மீண்டும் மீண்டும் போகத் தோணுது எனக்கு !

said...

வாங்க கோமதி அரசு.

மாயவரத்துக்குப் போனபோது குறிப்பா அந்தப் பாலம் தாண்டும்போது உங்கள் நினைவு வந்தது. கோபாலும் அதையே சொன்னார்!

மதுரையில் ஒரு சந்திப்பு வச்சால் ஆச்சு :-)

said...

வாங்க சாந்தி.

அதே அதே.... அதுலே மட்டும் ஒரு யானைப் பிரிண்ட் இருந்துருக்கணும் இல்லே!

said...

வாங்க வல்லி.

மிகப் பெரிய குடும்பம் இந்தப் பதிவுலகம் வந்தபின்! எங்கே போனாலும் குடும்பம் இருக்கே!!! விடமுடியுதா சொல்லுங்க :-)