Wednesday, May 25, 2016

ராமராஜ்யத்தில் ஒரு மாலைப்பொழுது! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 38)

அலங்கார யானைகள் அணிவகுத்து  நமக்கொரு வரவேற்பு :-)  சொன்ன நேரத்துக்குள்ளே வந்து சேர்ந்தாச்சு. ஆஃபீஸுக்குள் போனால் ஜானகி மேடம் அங்கே இல்லை. அதுக்குள்ளே அங்கே இருந்தவங்க எதிர்ப்புறம்  விஸிட்டர்ஸ் ஆஃபீஸுக்குக் கை காமிச்சாங்க.  போனமுறை பார்த்த நினைவில்லை. மாலதி மேடம் ரிஸப்ஷன்லே இருந்தாங்க.  நம்ம பெயரைச் சொன்னதும்  நமக்கு  லார்ட்'ஸ் இன் லே அறை ஒதுக்கி இருக்குன்னவங்க,  யாரையாவது வழி காட்ட  அனுப்பறேன்னு  எழுந்தாங்க. நமக்கு ஏற்கெனவே இருமுறை வந்த  இடம் என்பதால் பிரச்சனை இல்லைன்னதும்  கேட் கீப்பர்கிட்டே,  நம்ம வண்டிக்காகக்  கேட்டைத் திறந்துவிடச் சொன்னாங்க.
உள்ளே போய்  லார்ட்'ஸ் இன் வாசலில் வண்டியை நிறுத்தினார் சீனிவாசன். இன்று இங்கேதான் தங்கல்.  நாளை பகலுக்குமேல்  ஃபோன் செஞ்சதும்  வந்து பிக்கப் செஞ்சுக்கச் சொன்னோம். ஒருமணி நேரம் ஆகும்.  அதுக்குத் தகுந்தமாதிரி ஃபோன் செஞ்சுருங்க. வந்துடறேன்னு  சொல்லிட்டுக் கிளம்பிப் போனார் சீனிவாசன்.
உள்ளே போனால் யானை வரவேற்றது.  நமக்கான அறை பூட்டிக்கிடக்கு. சாவி எங்கேன்னு யாரையாவது  கேக்கலாமான்னும்போதே எதிர்த்த வீட்டிலிருந்து ஓடிவந்தவங்க சாவிக்கொத்தை எடுத்துக் கதவைத் திறந்துவிட்டவங்க  அறைச்சாவியைக் கொத்தில் இருந்து பிரிச்சு நம்மிடம் கொடுத்துட்டு நம்மைப் பத்திக் கொஞ்சம் விசாரிச்சுட்டு, இந்தப் பகுதிக்கு சேவை செய்யும் ஆட்களை அனுப்பறேன்னு சொல்லிட்டுப் போனாங்க.

படு நீட்டாக இருந்தது அறை.  பின்பக்கக் கதவைத் திறந்தால்  பள்ளிக்கூடம் போகும் வழி!  சின்ன ஸிட்டவுட் நல்லாவே இருக்கு!


பள்ளிக்கூடம் விட்டுப் பிள்ளைகள்  நாலைஞ்சு பேரா போய்க்கிட்டு இருக்காங்க. இங்கே பேபி க்ளாஸ் முதல்  பத்தாம் வகுப்புவரை நடத்தும் பள்ளிகள். நாம் உள்ளே நுழையும்போதே  பள்ளிக்கூடம் முடிஞ்சு வீட்டுக்குப் போகும் பிள்ளைகளுக்கான  பஸ்களும், தனியார் கார்களுமாக் காத்து நின்னதுதானே! அருமையான சூழலில் படிக்கும் இந்தப் பிள்ளைகள் கொடுத்துவச்சவங்கன்னுதான் சொல்லணும். 2308 பிள்ளைகள் படிக்கறாங்க. ஏறக்கொறைய பாதி எண்ணிக்கை  இங்கே ஹாஸ்டலில் தங்கிப் படிக்கறாங்கன்னு நினைக்கிறேன்.
இங்கே எங்க நியூஸியில் ஒரு பள்ளிக்கூடத்துலே இத்தனை பிள்ளைகள் இருக்கச் சான்ஸே இல்லை. எங்க ஊரில் (கிறைஸ்ட்சர்ச்)தான் நியூஸியிலேயே  அதிக மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிக்கூடம் இருக்கு. மொத்தம் ரெண்டாயிரம் பிள்ளைகள்.  இந்தப் பள்ளிக்கூடத்துக்குள்ளெ மூணு தனித்தனி ஸ்கூல்ஸ் வேற! மொத்தம் சேர்த்தால்தான்  இந்த ரெண்டாயிரம்.
நாங்க பையைக் கொண்டுபோய் உள்ளே வச்சுட்டுக் கிளம்பினோம். போனமுறையும் சரியாப் பார்க்கலைன்னு ஒரு குறை இருந்துச்சே....  ஆரம்பமே புள்ளையாரா இருக்கட்டுமுன்னு முதலில் கணேஷ்புரி.  இது நம் அறைக்கு ரொம்பப் பக்கம். ஒரு அரை நிமிச நடைதான். தோட்டத்துக்குள்ளே கோவில்.  புதுசா புலி ஒன்னு வளாகத்தில்.   காட்டுக்குள்  போகக் காத்திருக்கு.
இப்போ இன்னொரு சமாச்சாரம் சொல்லிக்கறேன். ராமராஜ்யா, நம்ம சித்தயோகி சிவசங்கர் பாபா அவர்கள் ஆட்சி செய்யும் தனி நாடுன்னும் சொல்லலாம். இவர் தலைமையில் தான் இங்கே  எல்லாமே!  இது இவருடைய கனவு சாம்ராஜ்யம்.  ஒரு கம்யூனிட்டி லிவிங் எப்படி இருக்கணும்  என்பதுக்கு எடுத்துக் காட்டு. இருநூறுக்கும் மேற்பட்டக் குடும்பங்கள் இங்கே  வசிக்கறாங்க.

முந்தி எழுதினதின் சுட்டிகள்  இவை.  முதலிரண்டு  முறை  வந்து போனதைப் பற்றி.  ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம்!   தேடிப் பி/படிக்கும் வேலை உங்களுக்கு வைக்காமல்   எல்லாம் இங்கேயே ! விருப்பம் இருப்பவர்கள் க்ளிக்கலாம் :-)

1.   


2


3

4

5


இந்த ராமராஜ்யம், ஒரு Gகேட்டட் Cகம்யூனிட்டியாக இருந்தாலும், சனிக்கிழமைக் காலை பெருமாள் தளிகை நிகழ்வுக்கு அனைவரையும் 'வருக'  என்று அனுமதிக்கிறார்கள். அக்கம்பக்க கிராமத்து பக்தர்களுக்கும் கோவிலுக்கு வந்து செல்ல இது ஒரு வாய்ப்பு.  மேலும் விசேஷ தினங்களிலும் அனைத்து மக்களுக்கும் அனுமதி உண்டு! இதில் ஜாதி, மதம், பொருளாதாரம் என்ற எந்த ஒரு குழப்ப சமாச்சாரங்களும் குறுக்கிடுவதில்லை!

முந்தினநாள்  (ஜனவரி 26)  பாபா அவர்களுக்கு மெய்ஞானம் கிட்டியநாள் என்பதால் இங்கே விசேஷ பூஜைகள் நடந்துருக்கு.  இந்த நிகழ்வுக்கும் வரணும் என்றுதான்  ஆசையோடு அனுமதி வாங்கியும் வச்சுருந்தேன்.  அன்றைக்கு அவர்  மௌனவிரதமாம். அதிகாலையில்  கணேஷ்புரி கோவிலில் யாகம் செஞ்சு  தரிசனம் முடிஞ்ச கையோடு  தனிமையில் தவம் செய்யப் போய்விடுவார் என்று கேள்வி.  ஆனால் 26 அதிகாலையில் நம்மால்  வரமுடியுமான்னு ஒரு சம்ஸயமும் இருந்தது.  நம் திட்டப்படிதான் முதல்நாள் ஷோளிங்கர் என்று இருந்ததே.....

நாளை  ஜனவரி 28  பாபாவின் பிறந்தநாள். அந்தக் கொண்டாட்டத்துக்குதான்  இப்போ  வந்துருக்கோம்.  உலகெங்கிலும் இருந்து அவருடைய பக்தர்கள்  வந்து சேர்ந்துருக்காங்க. நமக்கும் கொடுப்பினை இருந்ததே பெரிய விஷயம். இன்று மாலை முதல்விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகுது.


முதல்நாள் நடந்த விழாவுக்கான அலங்காரங்கள்  கணேஷ்புரியில் அப்படியே இருந்தது.  பழச்சரங்களும் பூச்சரங்களுமா அழகான அலங்காரம்.  தங்க ஃப்ரேம் கண்ணாடி போட்டுக்கிட்டு,  நோட்புக்கில் என்னவோ எழுதிக்கிட்டு இருந்தார் நம்ம கற்பக விநாயகர். பாரதத்தை மீண்டும் படிச்சு நோட்ஸ் எழுதறாரோ?  நடுவில் பசிச்சால்  சட்னு ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிடலாம்!
இவரோட  வாஹனத்துக்கும்  அலங்காரமா சாத்துக்குடி  நெக்லேஸ்!

புள்ளையாரைக் கும்பிட்டபின் இஷ்டம்போல க்ளிக்கினேன்:-)  கருவறை வெளிப்புறத்தில்  மூணு பக்கங்களிலும் அழகான கடவுளர்கள்! ப்ரம்மா, விஷ்ணு, தக்ஷிணாமூர்த்தி!


' இன்னும் பாக்கி  விசேஷம் இருக்கு. சாயந்திரம் ஒரு ஆறரை மணிக்கு வந்துரு. எனக்கு  சதுர்த்தி பூஜை இருக்கு'ன்னார் நம்ம புள்ளையார்.

 ( பதிவு வெளிவரும் இன்றைக்கு(ம்) சதுர்த்தி என்பதால் இன்று மாலையில் அங்கே புள்ளையார் பூஜை ஜேஜேன்னு நடக்கும். புள்ளயாரே,   இந்தப்பதிவு உமக்கே சமர்ப்பணம்!)

'அதெல்லாம் வந்துருவேன். இப்பப்போய்  கொஞ்சம் சுத்திப் பார்த்து  சூரிய வெளிச்சம் இருக்கும்போதே  கேமெராவுக்குத்தீனி போட்டுக்கறேன்'னு கிளம்பினேன்.
அடுத்துப்போனது துர்கை கோவிலுக்கு. சந்நிதிக் கதவு மூடி இருக்கு. நம்ம புள்ளையார் எப்பவும் க்ரில்கேட் மூலமாக தரிசனம் கொடுத்துருவார்.  ஆனால் அம்மாவுக்குப் பக்காவா கதவு!
பொதுவா இங்கே பூஜைகள் ஆறுமணிக்கப்புறம்தான் ஆரம்பிக்கும்.  பூஜை செய்பவரும், கோவிலுக்கு வருபவர்களும் அவுங்கவுங்க வேலைக்குப் போயிட்டுத் திரும்பிவரணுமே!  தன்னார்வலர்கள்தான் முழுக்க முழுக்க! மனம் உவந்து ஏத்துக்கிட்ட  கடமைகளை முகம் சுளிக்காமல் அந்தந்த நேரத்துக்குச் செஞ்சுடறாங்க.

மணி அஞ்சுகூட ஆகலை .இன்னும் நிறைய நேரம் இருக்கு. அப்புறமா வரலாமுன்னு  மேற்கொண்டு போறோம். காண்டீன் கண்ணில் பட்டது.  ஒரு  டீ குடிக்கலாமா? கூடவே கொஞ்சம் ஸ்நாக்ஸ். ஒரு வடையும், ஒரு மைசூர்பாகும். ஃபிஃப்டி ஃபிஃப்டி :-)
இடமும் படு நீட்!  கொஞ்சம் பெரிய பிள்ளைகள்(ஹை ஸ்கூல்)  என்னவோ வாங்கி சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. பிள்ளைகள் வரைஞ்ச படங்களும் அங்கங்கே  நெடுகிலும் பார்க்கக் கிடைச்சது.  இங்கிருந்து  ரொம்பப்பக்கம் வாசல் கேட்.  திரும்ப ஆஃபீஸுக்குப் போனோம்.
துர்கை அம்மனுக்கு சார்த்த ஒரு புடவை கொண்டு போயிருந்தோம். பத்து கஜம். நல்ல அகலமும் கூட!  நம்ம காஞ்சிபுரம் கடை (மயிலை)யில் வாங்குனதுதான். அதை மாலதி மேடமிடம்  கொடுத்து துர்கைக்கு என்றேன்.  என்ன விலைன்னு கேட்டாங்க?  சாமிக்குக் கொடுப்பதற்கு  விலையைச் சொல்லணுமான்னு தயக்கம்.  'பரவாயில்லை சொல்லுங்க.  கோவிலுக்குக் கொடுப்பதில் கணக்கு வைக்கணும் நாங்க'  என்றதால் விலையைச் சொல்லவேண்டியதாப் போச்சு. வரவு வச்சுக்கிட்டொரு ரஸீது எழுதிக் கொடுத்தாங்க.
'என்றைக்குச் சார்த்தணும்? எதாவது குறிப்பிட்ட நாள், விசேஷ நாள் மனசில் இருக்கா?'ன்னு கேட்டாங்க.

'அப்படியெல்லாம் ஒன்னுமில்லை.  உங்களுக்கு எப்போ வசதிப்படுமோ அன்றைக்குச் சார்த்துங்க' என்றேன்.


தொடரும்..... :-)


6 comments:

said...

இடம் பார்க்கவே குளுமையா இருக்கு ..அந்த வழியே நடந்து ஸ்கூல் போற பிள்ளைங்களுக்கு நல்ல ஒரு ப்ரெஷ் இனிய சூழல் ..எதுக்கு பிள்ளையாருக்கு கோல்ட் பிரேம் கண்ணாடி ? கண்ணுதானே அவருக்கழகு :) அந்த குறும்பு கண்களை மறைக்குது கண்ணாடி

said...

அழகான இடம். அமைதியாவும் இருக்கும் போல. வாழ்க வளமுடன்..

said...

அழகான இடம். பிள்ளையார் கலக்குகிறார். ஓவியம் வெகு அழகு.

தொடர்கிறேன்.....

said...

வாங்க ஏஞ்சலீன்.

படிக்க அவருக்குக் கண்ணாடி வேணுமாம். என்னை மாதிரி அவருக்கும் வயசாகுதுல்லே!

said...

வாங்க வல்லி.

அமைதியாகவும் இருக்குதான். அதிலும் காலையில் எல்லோரும் வேலைக்குப் போனபின் அப்படி ஒரு அமைதி.!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பிள்ளைகள் வரையும் ஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றன. சில ஓவியங்களைக் கண்ணாடியில் பதித்து அழகு படுத்தி இருக்கிறார்கள்.

தொடர்வதற்கு நன்றி.