Wednesday, June 29, 2016

வைகுந்த விண்ணகரம் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 53)

திருத்தெற்றியம்பலம் பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில் இருந்து இப்போ அடுத்த கோவிலுக்குப் போறோம். திருநாங்கூர் திவ்யதேசக்கோவில்கள் எல்லாமே  அரை அரை  கிமீ தூரத்துலேயே இருக்கு என்பது ஆச்சரியம்தான்.  இந்த அரைக்கிலோ மீட்டர் போகும் வழியிலேயே இன்னொரு கோவில் இருக்கு!  பட்டர் ஸ்வாமிகள் இப்போ அங்கே இருக்கமாட்டார் என்பதால் வைகுந்தப் பெருமாளைத் தரிசனம் செஞ்சுக்கிட்டு வரணும். எல்லாம் நம்ம  குமார் சொல்றபடிதான், கேட்டோ!

இந்த குமார், நமக்கு ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வந்த ஏழெட்டுக் காகிதங்களை ஸ்டேப்பிள் போட்டு ஒரு புத்தகமாட்டம்(16 பக்கங்கள்) கொடுத்துருந்தார், நமது கைடாக ஆன அடுத்த நிமிசமே:-)  அதுலே என்னென்ன கோவில்கள், பட்டர் ஸ்வாமிகள் பெயர் அண்ட் செல்ஃபோன் நம்பர்,  திருநாங்கூர் உற்சவம் பற்றிய  சில தகவல்கள் எல்லாம் இருக்கு.  ரொம்ப நல்ல ஏற்பாடு. இப்படி , செய்யும் தொழிலில் கொஞ்சம் கவனம் எடுத்துச் செய்வது  பாராட்டப்பட வேண்டியதே!

 அவர் கொடுத்தத் தகவல்களை  வாசிச்சபோது தெரியவந்த விவரம்,  இந்த ஏற்பாடே நம்ம அண்ணன் கோவில்  மாதவபட்டர் செஞ்சு கொடுத்ததுன்னு தெரிஞ்சது.  ஸ்ரீ மாதவ பட்டர்ஸ்வாமிகளுக்கு  என் மனம் நிறைந்த பாராட்டுகள்!

450 மீட்டர்கள் பயணத்தில் வைகுந்த விண்ணகரம் வந்து சேர்ந்திருந்தோம்.

பளிச்ன்னு இருக்கு கோவில்.  இப்போ சமீபத்திலே  ஒரு 14 மாசங்களுக்கு  முன்னேதான் புனர் நிர்மாணம் ஆகி கும்பாபிஷேகம் நடந்துருக்கு.
மேலே படம்:  பழசு!  (சுட்டது)
அப்படி இருந்த கோவில் இப்போ இப்படி ஆகி இருக்கு.

வெளியே சுற்றுச்சுவர் எழுப்பி  முகப்பு வாசல் வச்சு   அருமை!
அறநிலையத்துறை செய்யவேண்டியதை, நம்ம முரளீதர ஸ்வாமிகள் செஞ்சுருக்கார்.  நம்மூரில்தான் கடமையைச் செய்யணுமுன்னாவே காத தூரம் ஓடும் அரசு அமைப்புகளாத்தானே இருக்கு. ப்ச்....


முகப்பு வாசலைக் கடந்தால் நேரா கோவில். நடுவிலே பலிபீடம், கொடிமரம், பெரிய திருவடிக்கான குட்டி சந்நிதின்னு ஒன்னும் இல்லை.
கோவில் கட்டிடத்துச் சுவரில் சின்ன மாடத்தில் பெரிய திருவடி இருக்கார்.

அங்கேயே என்னென்ன படியளக்குறாங்கன்னு  ஒரு போர்டு.   ஹூம்....   இதுவாவது  கிடைக்குதேன்னு  சந்தோஷப்படணுமோ?
அவரைக் கும்பிட்டதும், கோவிலுக்குள் போறோம். நாலு படிகள்தான்.  உள்ளே முன்மண்டபம்  போல ஒரு  ஹால். அதுக்கு அந்தாண்டை கருவறை.
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவியுடன்  பெருமாள் ஸ்ரீ வைகுண்டத்தில் எப்படி உக்கார்ந்துருப்பாரோ அதே  மேனிக்குக் காட்சி கொடுக்கறார்.


நாமெல்லாம் 'அங்கே'  போகும்வரை காத்திருக்காமல், இப்போதைக்கிப்போதே   அங்கத்து ஸீனைக் கண்டு களிக்கலாம்.

தீபாராதனை, தீர்த்தம், சடாரி, புஷ்பப்ரஸாதம் கிடைச்சது. கூடவே  ததியன்னமும்!

நல்ல ருசி!

மண்டபத்தில் சில வாகனங்கள். நம்மாளும் உண்டு:-)

கோவில்வாசல் முகப்பில்,  உள்ளே இருக்கும் காட்சிக்கான ட்ரெய்லர்:-)

இக்ஷ்வாகு குலத்தில் வந்த அரசர்  ஸ்வேதகேது, நீதி தவறாமல் நாட்டை ஆண்டு வர்றார். அவருக்கும் அவருடைய மனைவி தமயந்திக்கும், ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் பெருமாளை தரிசிக்கணுமுன்னு பேராவல். காட்டுக்குப்போய் தவம் செய்யறாங்க. சுற்றிலும்  தீ மூட்டி நடுவில் நின்னு, கடுமையான தவம். பூத  உடல் போயிருச்சு!

  வைகுண்டம் போய்ச் சேர்ந்தால் அங்கே பெருமாளைக் காணோம். நாரதர் இருக்கார்.  விவரம் கேட்டால்....   அரசத்தம்பதிகள்  தானதர்மங்கள் செய்யாததால் தரிசனம் கிடைக்கலை.  பிராயசித்தமாப் போய் காவிரிக்கரையில்  ஐராவதீஸ்வரரை வணங்கி தியானம் செய்யுங்கன்னு சொல்லிடறார்.

அதேபோல் தியானம் செய்யும்போது, உதங்கர் அங்கே வந்து அவரும் தியானத்தில் கலந்துக்கிட்டார். ஐராவதேஸ்வரரும், எனக்கும் பெருமாளைத் தரிசனம் செய்ய வேணுமுன்னு அவரும் தியானம் செய்ய உக்கார்ந்துட்டார்.

பல காலங்கள்கடந்து போயிருது. ஒருநாள் திடீர்னு  மஹாவிஷ்ணு,  வைகுண்டத்தில் இருக்கும் அதே போஸில்   இவுங்களுக்கு முன் காட்சி கொடுத்து ஆசிகள் வழங்கறார்.  அப்போ ஐராவதேஸ்வரர், இதே போல் இங்கே இருந்து  எல்லோருக்கும் காட்சி கொடுக்கணுமுன்னு வேண்டவும் அப்படியே ஆச்சு.  நமக்கும் காட்சி காணக்கிடைச்சது.









கோவில் நந்தவனத்தில்  தென்னைகளும் கூடவே சில கொய்யாமரங்களும்  சூப்பரான காய்களோடு!  வலம்வர பளிச்ன்னு  சிமெண்ட் பாதை.  கிணத்தடியும் பளிச்.
கோவில் காலை 7 முதல் 11, மாலை 4 முதல் 7 என்று போட்டுருந்தாலும் விசாரிச்சுக்கிட்டுப்போனால் நல்லது.  இல்லைன்னாலும் பிரச்சனை இல்லை.  இங்கே சுத்திச்சுத்தி நாலு வீதிகளில் எல்லா கோவில்களும் அடங்கிருது. ஒவ்வொன்னும் அரைக் கிலோமீட்டருக்கும் குறைவு. ஓடிப்போய் கூட பட்டர்ஸ்வாமிகள் எந்தக் கோவிலில் இருக்கார்னு  கண்டு பிடிச்சுடலாம். கண்ணாமூச்சி விளையாட்டுதான்:-)

சங்குமலி தண்டுமுதல் சக்கரமுனேந்தும் தாமரைக்கண் நெடியபிரான் தானமரும் கோயில்,

வங்கமலி கடலுலகில் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகர்மேல் வண்டறையும் பொழில்சூழ்,

மங்கையர்தம் தலைவன்மரு வலர்தமுடல் துணிய வாள்வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன,

சங்கமலி தமிழ்மாலை பத்திவைவல்லார்கள் தரணியொடு விசும்பாளும் தன்மைபெறு வாரே.

திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்களில் ஒன்று. வழக்கம்போல் பத்துப் பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார். லேசாத் தன்னைப்பற்றியும் ஒரு கோடி காமிச்சும் இருக்கார்! வாள்வீசும் பரகாலன்!!!


கோவில்கதைகள் வழக்கம்போல் சுவரில். அதை மக்கள் படிச்சு  உய்யவிடாமல்  கண்டாமுண்டான் சாமான்கள்  அதன்முன்னால் வழக்கம்போல்  :-(
அமிர்தம் குடிச்சுட்டோம் என்ற கர்வம் உதங்கருக்கு வந்துருச்சு.   அது வேண்டாததுன்னு  குரு வைதர் உபதேசம் செய்யறார். எப்பேர்ப்பட்டவர்களும் நிலையாமை என்பதை உணரவேணும். உலகைப் படைக்கும் ப்ரம்மனுக்கே ஆயுள் முடிஞ்சு புது ப்ரம்மன் வருவார்.  வைகுண்டத்துக்குப் போயாச்சுன்னு  ரொம்பவே மகிழ்ச்சியா இருந்துடக்கூடாது.  நம்ம புண்ணியங்களுக்குத் தக்கபடிதான்  அது ஷார்ட் ஸ்டேவா, இல்லை லாங் ஸ்டேவான்னு  சொல்லமுடியும். புண்ணியம் தீர்ந்துட்டால் மறுபடி பூமியில் பிறவி எடுத்தே ஆகணும் என்றெல்லாம் சொல்லி இருக்கார்.

நிலையாமைதான்!  அதுக்குத்தான்  தொடர்ந்து நல்ல காரியங்களை செஞ்சு  புண்ணியங்களைச் சேர்த்துக்கிட்டே இருக்கணும். மனுசப்பிறவிக்கு  இது சாத்தியமான்னு.....     யோசனைதான். எப்பேர்ப்பட்ட நல்ல  மனுசனுக்குள்ளும் ஒரு  கெட்டது  ஒளிஞ்சுக்கிட்டுத்தானே இருக்கு....   இல்லையோ....... ஒரு அஞ்சு % ?

வயசான பட்டர்  நம்மைப் பத்தி  விசாரிச்சுட்டுக் கோவிலைப் பூட்டிக்கிட்டுக் கிளம்பினார். சரின்னு நாமும் கிளம்பி அடுத்த கோவிலுக்குப் போகலாம் வாங்க.

தொடரும்.............  :-)




Monday, June 27, 2016

திருத்தெற்றியம்பலம் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 52)

சொன்னால் நம்பமாட்டீங்க.  குடமாடு கூத்தனிடம் இருந்து கிளம்பின ரெண்டாவது நிமிஷம் இன்னொரு திவ்யதேசக் கோவிலின் வாசலில் இருந்தோம்! திருத்தெற்றியம்பலம்!  ஜஸ்ட் 500 மீட்டர்தான்! ஊருக்கும் கோவிலுக்கும்  ஒரே பெயர்!   இந்த 108 வைணவ திவ்யதேசங்களில் அம்பலம் என்று பெயருள்ளது இது மட்டும்தானாம்!   உடனே     கோவில்கள் லிஸ்ட் பார்த்தேன்.  அட! ஆமாம்லெ.  கேரள நாட்டு திய்வதேசங்கள்னு பதிமூணு அம்பலங்கள்   போய் வந்தோமே....  அங்கே கூட  அம்பலமுன்னு  பெயருள்ள எதுவும் இல்லையே!

கோயில்வாசல் முகப்பு உள்ளே இருக்கும் சாமியின் ப்ரீவ்யூ காமிச்சது. ஸ்ரீ பள்ளிகொண்ட ரங்கநாதர் திருக்கோவில்.
வாசல் கடந்து வெளி( முற்றம்)பிரகாரத்தில் பலிபீடம், பெரிய திருவடி கடந்தால் குட்டியா ஒரு மூணு நிலையுள்ள ராஜகோபுரம். கொடிமரம் இல்லை.
ரொம்பப் பெரிய கோவில் கிடையாது. மூலவர் செங்கண்மால் என்ற ரங்கநாதர். பாம்புப் படுக்கையில் நான்கு கைகளுடன்  கிடப்பில்.  கூடவே ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள். (நம்ம ஒரிஜினல் ஸ்ரீரங்கத்து ரங்கநாதருக்கு  ரெண்டே கைகள்தான். தேவியரும் அருகில் கிடையாது)  உற்சவர்கள், சந்தான கோபாலகிருஷ்ணன், சக்கரத்தாழ்வார் எல்லாம் பஞ்சலோக விக்ரஹமா இருக்காங்க.
முன்மண்டபத்திலேயே  ஆழ்வார்கள் பன்னிருவர், ஆஞ்சி எல்லோருமொரு வரிசையில்.


தாயாருக்குத் தனி சந்நிதி. செங்கமலவல்லித் தாயார்.




அப்புறம்.... ? அப்புறம் ஏது? அவ்வளவுதான் சந்நிதிகளே!   இருக்கும் ஒரே வெளிப்பிரகாரத்தில் பின்பக்கத்தில்  பத்துப்பனிரெண்டு  வாழை மரங்கள்.  நாலைஞ்சு செடிகள்.  பக்கவாட்டில் ரெட்டைக் கிணறு. எட்டிப் பார்த்தேன்.  ஒன்றின் உள்ளே ஒரு செடி முளைச்சுக்கிடக்கு!

அடுத்ததிலும் தண்ணீர் இருக்கு. ராட்டினமும் தாம்புக்கயிறும் குடங்களுமா....    இதுதான் அபிஷேக ஆராதனைகளுக்குன்னு  சொல்லும்வகையில்:-)


மண்டபம், தூண்கள்,  சிற்பங்கள் இப்படி ஒன்னும் இல்லை பார்த்து ரசிக்கவோ க்ளிக்கவோ.....
ஹிரண்யாக்ஷன், பூமிதேவியை அப்படியே பாய் போலச் சுருட்டிக்கிட்டு  பாதாளலோகத்துக்குள் கொண்டு போய் ஒளிச்சு வச்சுடறான். இவன் நம்ம பிரஹலாதனின்  தந்தை  ஹிரண்யகசிபுவின் அண்ணன்.  தேவர்கள் எல்லோரும் பெருமாளிடத்தில் போய் இந்த அக்கிரமத்தைச் சொல்றாங்க.  பெருமாள்  வராஹ அவதாரம் எடுத்துக் கிளம்பறார்.

 மஹாலக்ஷ்மித் தாயாரும், ஆதிசேஷனும் , 'நீங்க இல்லாத இடத்தில் எங்களுக்கு என்னவேலை? நாங்களும் கூடவே வர்றோமு'ன்னு சொல்ல,  'அங்கெல்லாம் வரப்டாது. ஆபத்து நிறைஞ்ச இடம். நீங்க போய் பலாசவனத்தில் தவம்செஞ்சு எனக்காகக் காத்திருங்கோ. நான் போன வேலையை முடிச்சுட்டு அங்கே வந்துடறேன்'னார்.

இவுங்க இங்கிருந்து கிளம்பிப்போறதுக்குள்ளே  வேலை முடிஞ்சு பூமியை அதன் இருப்பிடத்துக்கு கொண்டுவந்தாச்சு. ஆக்ரோஷமாக ஹிரண்யாக்ஷகனோடு போர் செஞ்சதால் கண்ணேல்லாம் சிவந்து போன கோலத்தில் ரொம்பக் களைப்பா வந்தவர், படுக்கை அங்கே வந்தாச்சுன்னதும் கிடந்துட்டார்! செங்கண்மால். சரியான பெயர்தான்:-)

திருமங்கை ஆழ்வார் வந்து தரிசனம் செஞ்சு, பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.  இங்கேயும் பத்துப் பாசுரங்கள்.  ( 1238 -1247 - 10 பாசுரங்கள்.)
மாற்றரசர் மணிமுடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார்குழையும், தந்தை
கால்தளையு முடன்கழல வந்து தோன்றிக் கதநாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்,
நூற்றிதழ்கொ ளரவிந்தம் நுழைந்த பள்ளத் திளங்கமுகின் முதுபாளை பகுவாய் நண்டின்,
சேற்றளையில் வெண்முத்தம் சிந்து நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.


காலை 6 முதல் 11, மாலை 5 முதல் 8 வரை கோவில் 'திறந்திருக்கும் ' நேரம். ஆனால் நீங்க  இதை அப்படியே நம்பிப்  போகக்கூடாது. கம்பி வழியா மூலவரைப்பார்க்கலாம் என்றால் சரி. தீபாராதனை வேணுமுன்னால் பட்டர்ஸ்வாமிகள் இருக்காரான்னு தெரிஞ்சுக்கிட்டுப் போகணும்.

சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி
 யம்பலத்தென் செங்கண் மாலை,
கூரணிந்த வேல்வலவன் ஆலி நாடன் கொடிமாட
மங்கையர்கோன் குறைய லாளி
பாரணிந்த தொல்புகழான் கலியன் சொன்ன
 பாமாலை யிவையைந்து மைந்தும் வல்லார்,
சீரணிந்த வுலகத்து மன்ன ராகிச் சேண்விசும்பில்
வானவராய்த் திகழ்வர் தாமே.

திருமங்கை ஆழ்வார் வந்தகாலத்தில் இங்கே வரிசைவரிசையா மலைபோல் உயர்ந்த மாடங்கள் நிறைந்திருக்கும் தெருக்களாக இருந்துருக்கு!  

இப்போ........  ப்ச்....  ஒன்னும் சொல்றதுக்கில்லை :-(



தொடரும்...........  :-)




Sunday, June 26, 2016

கோவிலும் க்வாட்டரும்.........

உள்ளூர் சமாச்சாரம் இது.  முக்கியமான விஷயத்தை விவாதிக்கணும். சனிக்கிழமை 2 மணிக்கு வந்து சேருங்கன்னு கோவிலில் இருந்து கடுதாசி வந்தது.
கோவிலில் இருந்துன்னா....  கோவில் கட்டடத்தில் இருந்து இல்லை. ஏது கட்டிடம்? அதான்  நிலநடுக்கத்தில் இடிஞ்சு போயிருச்சே.
அஞ்சு வருசமாச்சு இப்பப்போன ஃபிப்ரவரி 22 ஆம் தேதியோடு.

 இடிபாடுகளை அகற்றி,  நிலத்தைச் சரி செய்யுமுன் இன்ஷூரன்ஸ் கிடைக்கக் காத்திருந்தோம். ஒரு வழியா கிடைச்சது. ஆனால்  விலைவாசி ஏறிக்கிடக்கும் இந்நேரத்தில்  கிடைச்ச காசு புதுசு கட்டப்போதுமா என்ன?

சொந்த நிலம்  என்பதால் அங்கேயே  புதுசு கட்டிடலாமுன்னு  இருந்தோம். கட்டடத்துக்கான திட்டம், வரை படம் எல்லாம்  முடிச்சுக் கவுன்ஸில் அனுமதிக்கு  அனுப்பி  ஒரு வழியா அது  பாஸ் ஆகி வந்ததும், நிலத்தைச் சீர்படுத்தி, இடிஞ்சு விழுந்த  கட்டடக் குவியல்களை வாரிப்போட்டுன்னு எல்லாம் ஆச்சு.

போன வருசம்  மார்கழியில் பூமி பூஜையும் ஆச்சு, தெரியுமோ?  தெரியாதவர்கள் இங்கே க்ளிக்கலாம் :-)



கவுன்ஸில் அனுமதி கிடைச்ச ஆறு மாசத்தில்  கட்டட வேலை தொடங்கணும். அதுக்கப்புறம் எவ்ளோ நாளானாலும் பிரச்சனை இல்லை.  அதான் வெட்டு குழியைன்னு...... சேஷனை இறக்கியாச்சு.
அதுக்குப்பிறகு அந்த பக்கம் போகும்போதெல்லாம்  கதி என்னன்னு பார்த்துட்டுப் போறதுதான்.


கோவில் சமாச்சாரங்கள் எல்லாம்  மின்மடலில் அனுப்பி வச்சுக்கிட்டுத்தான் இருந்தாங்க. கோவில் கட்டடம்தான் இல்லையே தவிர பூஜைகள், வெளிநாட்டு இஸ்கான் முக்கியஸ்தர்கள்  வருகை, சொற்பொழிவுகள், பகவத் கீதை வகுப்புகள் எல்லாம் வழக்கம்போல்....  வீடுகளிலும், கிடைக்கும் சமூகக்கூடங்களிலுமா  இடைவிடாமல்  தொடர்ந்தது.

இன்றைய மீட்டிங் கூட ஒரு சமூகக்கூடத்தில்தான்.  ரெண்டு மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். ஒரு  அம்பது பேர் வருகை.


போகும் வழியிலேயே  புதுக்கோவில் வளர்ச்சியை எட்டிப் பார்த்துட்டுத்தான் போனோம்.

கடவுள் வாழ்த்தாக  வழக்கமாப் பாடும்   பாடலைப்பாடினோம். பெங்காலி மொழியில்  உள்ளதை  வெள்ளைக்கார உச்சரிப்பில் வழவழா கொழகொழான்னுதான்  பாடிக்கிட்டு இருக்காங்க. ரொம்ப ஓசை  வேணாமுன்னு  ஒரே ஒரு ஜால்ரா.

nama om vishnu-padaya krishna-preshthaya bhutale
srimate bhaktivedanta-swamin iti namine
namas te saraswate deve gaura-vani-pracharine
nirvishesha shunyavadi pashchatya desha tarine

முழுப்பாட்டையும் பாடி முடிச்சு ஹரி போல் சொல்லி, அனைவரையும் வரவேற்று  இப்ப இருக்கும் தலைவர் கோவில் கட்டடம் அநேகமா இந்த டிஸம்பர் மாதம் முடிஞ்சுரும். அப்ப  இங்கே வருஷாந்திர விடுமுறை சீஸன் என்பதால்,  கட்டிமுடிச்சதை இன்ஸ்பெக்‌ஷன் செஞ்சு  இனி இதைப்பயன்படுத்திக்கலாமுன்னு  அனுமதி  வழங்குவதில் தாமதம் ஆகிரும் என்றார்.

இங்கெல்லாம் எந்தக் கட்டடம் கட்டினாலும்  ஒவ்வொரு முக்கிய நிலை  முடிஞ்சாட்டு     ஒரு இன்ஸ்பெக்‌ஷன் நடக்கும்.  இப்படி அஞ்சு முறை. கடைசிக்குத்தான்   ஜனவரியில் காத்திருப்பு.

மார்ச்  மாசம் திறப்பு விழா வச்சுக்கலாமுன்னு ஏகமனதா முடிவெடுத்தாச்சு. மூணு நாள்விழா.  அதுலே என்னென்ன நிகழ்ச்சிகள் வைக்கலாம் என்பதற்கான ஆலோசனைகள் கேட்டாங்க.

மேலும் விழா சம்பந்தப்பட்ட வேலைகளில், சுத்தப்படுத்துதல், கோவிலுக்குப் பூக்கள் அலங்காரம், ஸ்வாமி சிலைகளுக்கு  பூமாலை தயாரிப்பு,  வரும் விருந்தினரைத் தங்கள் வீடுகளில் தங்க  வைக்க விருப்பம் உள்ளவர்கள், சமையல் வேலைகளில் உதவி செய்ய  விருப்பம் உள்ளவர்கள் என்று  எல்லா வேலைகளுக்கும் தன்னார்வலர்கள்  தங்கள் பெயரைப் பதிவு செஞ்சுக்கச் சொன்னாங்க. ஹால் சுவரில் ஒட்டி வச்சுருந்த  போஸ்டர் தாளில்  எதுக்கு உதவப்போறோமுன்னு எழுதி வைக்கணும்.

நம்மவர் சமையல் வேலைகளில் உதவி (!!!) செய்யப்போவதாகச் சொல்லி பேரை எழுதி வச்சார். 'நீ என்னம்மா செய்யப்போறே?'ன்னதுக்கு,       கோவிலைப் பத்தி எழுதப்போறேன்னு சொன்னேன். நம்ம தொழில் எழுத்து இல்லையோ!

கோவிலுக்கான வெப் சைட் ஒன்னு ஆரம்பிச்சு வச்சுருப்பதை ஒரு இளைஞர் சொல்லி அது எப்படி இருக்கும்னு விளக்கிக்காட்டினார். வெப் டிஸைனிங் செய்யறாராம்.

இப்பதான் க்வாட்டர் வருது!

  டாக்டர்   மண்டேலா வொயிட் என்ற பக்தர் ( மந்திரா மணி தாஸி)  என்பவர்,   கோவில் வேலைகள் முழுசும் நல்லபடியாக முடிக்கணுமுன்னா இன்னும் ஒரு  கால் மில்லியன் தேவைப்படுதுன்னு சொன்னாங்க. அதுக்கான நிதி வசூலுக்கு ஒரு கம்பெனியை ஏற்பாடு செஞ்சுருப்பதாகவும், அவுங்களோட பக்கத்துலே போய் இவ்ளவு தரேன்னு  பதிஞ்சுட்டு நம்ம  வங்கிக் கணக்கு கொடுத்தால் போதுமுன்னு சொன்னாங்க.


க்வாட்டர் மில்லியன் வேணும். அதுக்காக ஒரு கம்பெனியை வசூலிக்கச் சொல்றது சரி இல்லைன்னு நம்மவர் சொன்னார். என் பிரச்சனை என்னன்னா....  ஒரேதா காசு கொடுன்னு சொல்றதை விட, சின்ன அளவில் கொடுங்கன்னு கேட்டா யாரா இருந்தாலும் சட்னு கையில் இருப்பதைக் கொடுக்கத் தயாராத்தான் இருப்பாங்க. கேஷா கொடுக்கறவங்ககிட்டே, 'வேணாம்...நீ பேங்க் அக்கவுண்ட் கொடுத்து அதுலே இருந்து பணம்  அனுப்புன்னா  கொஞ்சம் யோசனையாத்தானே இருக்கும் இல்லையோ!  எனக்குள் இருக்கும் அந்நியள் பேசறாள்.  நூறு நூறு டாலரா  ஒரு  ஆயிரம் பேர் கொடுத்தால்.....  பப்பப்பத்து டாலரா ஒரு  பத்தாயிரம் பேர் கொடுத்தால்......


இதுதான் நியூஸியில் ஒரு பிரச்சனை. வீட்டு வாசலில் வந்து தர்ம கைங்கரியத்துக்கு  பணம் வசூலிக்க வர்றவங்க, கேஷாக்  கொடுத்தா வாங்கிக்க மாட்டாங்க. மாசாமாசம் இவ்ளோ தரோமுன்னு கமிட் பண்ணிக்கச் சொல்வாங்க. நாளைக்கு என்ன நடக்குமுன்னு யாருக்குத் தெரியும்? அப்படியெல்லாம் மாசாமாசம் பணம்  கொடுக்க முடியுமா?

 அதுவும் ஒரு சாரிட்டின்னாகூட ஓக்கே....  ஏகப்பட்டவைகளுக்கு ஆளாளுக்கு வந்து கமிட் பண்ணிக்கோன்னா எப்படி?  எனக்கு எரிச்சல்தான் வரும். நம்மவர் இருந்தால் விளக்கம் எல்லாம் கேட்டு வாங்கிப்பார். நான் மட்டும் வீட்டில் இருந்தால்  வெள்ளைக்காரன் கண்டுபிடிச்ச அதே வார்த்தையைச் சொல்லிருவேன். ஸாரி.  இதேதான்..... எங்க சாமி பெருசுன்னு சொல்லிக்கிட்டு வர்ற கூட்டத்துக்கும்.


நான் என்ன தர்மம், எங்கே, எப்படிப் பண்ணப்போறேன்னு நாந்தானே முடிவு செய்யணும், இல்லையோ!

இன்னொருத்தர் வந்து, இளைய தலைமுறைக்கு எப்படி பக்தியை அடுத்துக் கடத்தப்போறோமுன்னு  கவலையுடன் அதற்கான ஏற்பாடுகள் என்னென்னன்னு விளக்கினார்.   பவர் பாய்ண்ட் ப்ரஸன்டேஷன்.

 பிள்ளைகளை என்னதான் பார்த்துப் பார்த்து வளர்த்தி எடுத்தாலும், சின்னக்குழந்தைகளா இருக்கும்போது நம்ம கூட கோவிலுக்கு வர்றது, சாமி கும்பிடறதுன்னு இருப்பவர்கள், வளர்ந்து  பெருசாகி, தானே சிந்திக்கும்போது   எப்படி மாறிடறாங்கன்னு  சொல்ல எனக்கும் ஒரு அனுபவம் இருக்கோல்யோ?
சரி சரின்னு தலையாட்டிட்டு,  நம்ம பண்டிட் கிஷோர் (தமிழ்க்காரர்) கிட்டே கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். குடும்பம் இப்போ இந்தியாவுக்குப் போயிருச்சு. பையன் ஊர்லே படிக்கிறானாம்.  இன்னொரு பக்தை  லக்ஷ்மியுடன் (திருநெல்வேலிக்காரவுஹ) கொஞ்சம் பேசிட்டு, சாமி ப்ரஸாதம் வாங்கிக்கிட்டுக் கிளம்பினோம்.


Custard slices :-)

பார்க்கலாம் எப்படி இந்த ஃபண்ட் ரெய்ஸிங் போகுதுன்னு....   நமக்கும் ஒரு தொகை கோவிலுக்குக் கொடுக்கும் எண்ணம் இருக்கு. ஆனால்  இந்தக் கம்பேனி மூலம்கொடுக்கும் எண்ணமில்லை. என்னதான் சாரிட்டின்னு சொல்லிக்கிட்டாலும், அவுங்களுக்கு ஒரு பகுதியைப் பிடிச்சுக்குவாங்க. அது வேணுமான்னு  இப்போ.... யோசனை........

ஆங்.... சொல்ல விட்டுப்போச்சே....  இங்கே நம்மூருக்கு  இந்த பக்தி இயக்கம் வந்து  இப்ப ஆச்சு அம்பது வருசம்!  அரை நூற்றாண்டு!   ஸ்பெஷலா புதுக்கோவில் வேணுமுன்னு  'அவன்' தீர்மானிச்சுட்டான் !!!



ஹரி போல்!  ஹரே க்ருஷ்ணா.....