Wednesday, July 20, 2016

திருவாலி திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 62)

இந்தக் கோவில்தான்  எனக்கு  ரொம்பவே பிடித்தமாதிரி  காலை 7.30 முதல் மாலை 7.30 வரை  திறந்துருக்கு!    கோவில்  யாத்திரை செய்யும் பக்தர்களுக்கு எவ்ளோ சௌகரியம் பாருங்க.  பகல் நேரம்  12 முதல் 4 வரை கோவிலை மூடி வச்சுருக்கும் இடங்களில்  கோவிலுக்கு வந்து சேரும் பக்தர்கள்  வேறெங்கே போக முடியும்?  அல்லாடவேண்டி இருக்கு பாருங்க  நாலுமணி நேரம்.  எல்லா ஊரும் காஞ்சிபுரமா என்ன?   ச்சும்மா இருக்கும் நேரத்தில் நாலு புடவையாவது  நிதானமாப்  பார்த்து வாங்கிக்கலாம் என்பதற்கு :-)



திருத்தேவனார் தொகை  (கீழச்சாலை)  மாதவப்பெருமாள் கோவிலில் இருந்து  கூடிவந்தால்  ஒரு கிமீ தூரம்தான். மூணே மினிட்டில் வந்து சேர்ந்தோம்.  கோவிலுக்குப் பக்கத்தில்  காரை நிறுத்த முடியாமல் போச்சு.  அறுவடை முடிஞ்சு வந்த நெற்பயிரைக் காயப் போட்டுருக்காங்க.   நல்லா காய்ஞ்சதும்  அடிச்சுத் தூத்தணும்.


வாசல் கேட்டுக்குள் போனால்  திருமாமணி  மண்டபம். அப்புறம் பலிபீடம், கொடிமரம், பெரிய திருவடிக்கான சந்நிதி.  வாசல் கேட்டில் இருந்து இந்த மொத்தப் பகுதிக்கும் மேற்கூரை போட்டுருக்காங்க.   தரைப்பகுதியில் வெய்யில் வராதது நல்லதாப்போச்சுன்னு  நிறைய மக்கள்ஸ்  'இருந்தும், கிடந்தும்' ஸேவை சாதிக்கிறாங்க. 100 நாள் வேலைத் திட்டமாம்.



காலையில் ஒரு ஒம்போது மணிக்கு  வந்து, இப்படி அப்படின்னு வேலை ஆரம்பிக்கவே பத்தாகிருமாம்.  பனிரெண்டு,  பனிரெண்டரைக்கு வேலையை முடிச்சாச்சு. ஆனால் மேஸ்த்திரி வர மணி ரெண்டாகிரும். அவர் வந்து  சரிபார்த்துக் கையெழுத்துப் போடணும். அதான் அவர் வர்றவரைக்கும் கோவிலில் காத்துருக்கோம்  .....  பேச்சுக் கொடுத்து சேகரிச்ச சமாச்சாரம்!
உங்க படத்தை  உலகமே பார்க்கப்போகுதுன்னதும் அப்படி ஒரு சிரிப்பு. என்னையும் படம் எடுத்துப்போடுங்கன்னு  ஒரு இளைஞர் போஸ் கொடுத்தார்.  அதுதான் எல்லாப் படங்களையுமே போட்டு வச்சேன்.

ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் கோவில்.  அழகியசிங்கர் என்று மூலவருக்குப் பெயர்.  உற்சவருக்கு  ?  திருவாலி நகராளன்.



தாயார் அம்ருதகடவல்லி ! பூரணவல்லின்னும் இன்னொரு பெயர் உண்டு.
லக்ஷ்மியை வலது தொடை மேல் வச்சுக்கிட்டு ஜம்னு  உக்கார்ந்த திருக்கோலம்.

ஹிரண்யனை வதம் செஞ்ச பின்பும் கோபாவேசம் முழுக்கத் தீராத  நிலையில்  இங்கே வந்து உக்கார்ந்துருக்கார்  நரசிம்ஹர்.  அவர் கோபத்தைத் தணிக்க என்ன செய்யலாம்னு யோசிச்ச தேவர்கள், மஹாலக்ஷ்மியை இங்கே வரச்சொல்லி வேண்டிக் கேட்க லக்ஷ்மி  வர்றாள்.
மனைவியைக் கண்டமாத்திரத்தில்  முகத்தில் ஒரு கனிவு  வந்துருது கணவனுக்கு.  ஆலிங்கனம் செய்து, அப்படியே தூக்கி மடிமீது  உக்கார்த்தி வச்சுக்கிட்டார்.  இந்த ஊருக்குப் பழைய பெயரே ஆலிங்கனபுரம் தான். அதுதான்  இப்போ ஆலி ஆகி, திருவைத் தூக்கி வச்சுக்கிட்டதால் திருவாலி ஆகி இருக்கு.

பொதுவா  லக்ஷ்மிநரசிம்மர்  கோவில்களில்  இடதுமடியில் உக்கார்ந்துருக்கும் லக்ஷ்மிதான் நாம் இதுவரை பார்த்திருக்கோம்.   இங்கே வலது மடியில்  அமர்ந்த கோலம்  கொஞ்சம் அபூர்வம்தான்.  எங்கோ ஒன்னு ரெண்டு..........    இதைப்போல வலது  பக்கம் லக்ஷ்மி இருக்கும் நரசிம்மர் கோவில் வேலூருக்கு அருகில்   கண்ணமங்கலம் பக்கம் இருக்கும் காட்டுக்கா நல்லூர் என்ற இடத்தில்  இருக்காம்.

நம்ம திருமங்கை ஆழ்வாரை ஆலிநாடன் என்றுதானே சொல்றோம்.  இந்தப் பகுதியில் அரசாண்ட  குறுநில மன்னர்தான் அவர். கலியன், பரகாலன் என்றெல்லாம் இவருக்கு பெயர்கள் இருக்கு.  இதுலே கலியன் என்ற பெயருக்கு  இன்னும் ஒரு கூடுதல் விசேஷம் இருக்கு.  ஏன்? எப்படின்னு கேட்டால்,
ஆழ்வார்களிலே  நம்மாழ்வார் இருக்காரில்லையா...  ஆழ்வார் திருநகரியில்.  அவரை நம்ம ஆழ்வார் என்று  ஆசையோடும் மரியாதையோடும்  அழைத்தவர் மதுரகவி ஆழ்வார்.  மதுரகவிக்கு கடவுளே  நம்மாழ்வார்தான். அவர் பெருமாளைப் பாடவில்லை. குருவையே பாடினார்.

ஆனால்  பெருமாளே, திருமங்கையை நம்கலியன்னு  வாய் நிறையக் கூப்புட்டு இருக்கார்!  தன்னுடைய வாயால் எட்டெழுத்து மந்திரத்தைக் கலியன்  காதில் உபதேசித்தும் இருக்கார்.   ஆனாலும்  பெருமாளுக்கு   திருமங்கைன்னா  ஒரு இதுதான்.......எவ்ளோ பாக்கியம் பாருங்க!
திருமங்கையும்....   சும்மாச் சொல்லக்கூடாது..........   அவர் காலத்துலே பெருமாள் கோவில்களைத் தேடிதேடிப்போய்  பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் பண்ணி இருக்கார். எப்போ வெளியே போனாலும்......   மனைவியையும் கூட்டிக்கிட்டுத்தான் போவாராம்.   இப்பக்கூட,  கருடசேவைக்குப் புறப்படும்போதும் ஜோடியாகத்தான் போயாறது.  ஆழ்வார்களிலேயே  மனைவிக்கு சம அந்தஸ்து கொடுத்து இணைபிரியாமல் இருப்பது இவர்தான்!  'மனைவி சொல்லே மந்திரம்'னு  தான்  வருங்கால மனைவி விருப்பப்படி,  தானே முத்திரை வாங்கி வைஷ்ணவர்  ஆனதோடு, தினமும் ஆயிரம் வைஷ்ணவர்களுக்கு  அன்னதானம் செஞ்சும் குமுதவல்லியின்  குட் புக்ஸ்லே பெயரைப் பதிச்சுக்கிட்டவர்.
திருநகரி, திருவாலி  கோவில்களுக்கு  திருமங்கையின் கதைதான்  முக்கியமா இருக்கு.   இவர் பிறந்த ஊரான திருக்குறையலூரும்,   வருங்கால மனைவியின் விருப்பப்படி அன்னதானம்  செய்த ஊரான மங்கை மடமும் ஆக நாலு கோவில்களில் இருக்கும் பஞ்ச நரசிம்மர்களை தரிசிப்பது  இன்னும் ரொம்பவே விசேஷமாம்.  நமக்குத்தான் மேற்படி விவரங்கள் தெரியாததால்  இங்கிருக்கும் லக்ஷ்மிநரசிம்மரோடு  மூவரை  மட்டுமே தரிசிக்க  வாய்த்தது.
ஏவரி வெஞ்சிலையான் என்ற பெயர் இவ்விடத்துப்பெருமாளுக்குரியது. நம்ம திருமங்கை இப்படிச் சொல்லிப் பாடறார்!

தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே,
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே,
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி,
ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே.

ஆலிங்கனம் செஞ்ச கதை ஒன்னுன்னா...  வேறொரு கதையும்  இங்கே  பிரசித்தம். அதான்  'தானே, தன்வாயால் எட்டெழுத்து மந்திரத்தை,  கலியன் காதில் உபதேசிச்சது'.

ஸ்ரீவைகுண்டத்தில் பெருமாளும் தாயாருமா நிம்மதியா  உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க.

 "கீழே பாருங்க.....   இந்தக் கலியன், நம்ம  சுமங்கலை (   இவள் தேவலோகப் பெண்.  கபிலமகரிஷியின் சாபத்தால் பூலோகத்தில்    குமுதவல்லியாகப் பிறந்தாள்.  இந்தக் கதையை நம்ம அண்ணன்பெருமாள் கோவில் எபிஸோடில் சொல்லி  இருக்கேன்)  சொல்றதையெல்லாம் கேட்டு,  வைஷ்ணவனாக மாறியதோடு, ஆயிரம் பேருக்கு  உங்க பெயரால் அன்னதானம்  செய்ஞ்சுக்கிட்டு இருக்கான்.  அவனிடம் இருந்த செல்வமெல்லாம்  இப்படி சோறு போட்டே கரைஞ்சு போச்சு. வேற வழியில்லாமல்  கொள்ளையடிக்க ஆரம்பிச்சு அந்தக் காசுலே  சாப்பாடு போட்டுக்கிட்டு இருக்கான். அவனுக்கு சீக்கிரம் அருள் புரியக்கூடாதா? கஷ்டப்படட்டும்னு பார்த்து ரசிச்சுக்கிட்டே இருந்தால் எப்படி? "

" இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். காசே கிடைக்கலைன்னா என்னதான் செய்யறான்னு பார்ப்போமே..."

" நம்புன கடவுள் பேசற பேச்சா இது? நல்லா இல்லை. சொல்லிப்புட்டேன்,ஆமா"

இன்னும் அருள் பாலிக்கலைன்னா நடக்கறதே வேறன்னு மிரட்டித்தான்  வேலை வாங்க வேண்டி இருக்கு பாருங்க.  அங்கேயும் இங்கேயுமே இப்படித்தான்....  சொன்னவுடனே  செஞ்சுட்டால் ஏன் குடும்பத்தில் சண்டை வரப்போகுதாம்?

" அப்ப ஒன்னு செய். நீ போய் அங்கெ தவம் செய்யும் பூரண மகரிஷியின் மகளாகப் பிறந்து வளர்ந்து வா. நான் வந்து  சரியான வேளையில் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்.  அப்போ ரெண்டு பேருமாச் சேர்ந்தே கலியனுக்கு அருள் செஞ்சால் ஆச்சு"

லக்ஷ்மித்தாயாரும்  பூரண மகரிஷியின் குடிலில் அவதரிச்சாள். அதான் தாயாருக்கு இங்கே பூரணவல்லின்னும் ஒரு பெயர் இருக்கு.  கல்யாண வயது வந்தது.  பெருமாள் வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டார்.  எப்படி?  சரியான விவரம் ஒன்னும் கிடைக்கலை.  நமக்குக் கதை சொல்லத் தெரியாதா?

 சாதாரண மானிடனா தேவராஜபுரத்து ஆளா வந்து பொண்ணு கேட்டுருப்பார். முதலில்  யாரோ எவரோன்னு  மறுத்துருப்பார் முனிவர்.  அப்புறம் தான் 'உண்மையில் யார்' என்று கோலம் காமிச்சவுடன், பெருமாளே மாப்பிள்ளையா வந்தால் கசக்குமான்னு  கல்யாணம் பண்ணிக்    கொடுத்துருப்பார்.

கருநிறத்தவனான ஒரு யௌவன புருஷன் வந்து, கொடி போல் நுட்பமான இடையை யுடையளாய்  இள மான் போன்றவளான எனது மகளை வா வா என்றழைத்து,வெள்ளை வளைகளணிந்துள்ள கையைப் பிடிக்க, (உடனே அவள்) பெற்ற வளர்த்த தாயாகிய என்னையும்  உபேக்ஷித்து விட்டொழிந்து போய் விட்டாளாமே!

கள்வன்கொல் யானறியேன் கரியானொரு காளைவந்து,
வள்ளிமருங் குலென்றன் மடமானினைப் போதவென்று,
வெள்ளிவளைக் கைப்பற்றப் பெற்றதாயரை விட்டகன்று,
அள்ளலம் பூங்கழனி யணியாலி புகுவர்க்கொலோ.

அப்படி வர்ற வேளையில்தான் புதுக்கல்யாணம் முடிச்ச ஜோடி நகைநட்டோடு காட்டுவழியா வர்றாங்கன்னு தகவல் கிடைச்சதும்,  கலியன் ஓடிப்போய்  கொள்ளையடிச்சது! அதுவும் குதிரையில் போய்  கொள்ளை அடிக்கணும்:-)

இந்த இடத்தில்  ஒரு மண்டபம் இருந்ததாம். இப்பவும்  இருக்கு.  அதே இடத்தில் வேடுபறி விழா நடத்தறாங்க. வயலாலி மணவாளன் திருக்கல்யாணம், திருமங்கைமன்னன் வேடுபறி உத்ஸவம் என்ற போர்டு திருநகரி   கோவிலில்  பார்த்தேன்.


திருநகரி திருவாலி ரெண்டு இடங்களையும் ஒரே திவ்ய தேசம் என்று சொன்னாலும் ரெண்டும் வெவ்வேறதான்.  திருநகரி கோவில் ராஜகோபுரத்துடன் பெருசா விஸ்தாரமா இருக்கு.  திருவாலி கோவில் சின்னதுதான்.


திருவாலி  கோவிலில்  வெளிப்பக்கம் மேற்கூரை போட்டதால் பார்க்கக்கொஞ்சம்  பெருசாத் தெரியுது போல!
மேலே: பழைய படம். மேற்கூரை போடுவதற்கு முன்!




வலது மடியில் லக்ஷ்மிதான் உக்காரணுமா? நான் உக்காரக்கூடாதான்னு ......   செல்லம்.

கொஞ்சநேரம் மக்கள்ஸ் கிட்டே பேசிட்டுக் கிளம்பினேன்.
வாசலுக்கு நேர் எதிரா கொஞ்ச தூரத்தில் நம்ம ஆஞ்சிக்கு தனி சந்நிதி இருக்கு.  போற போக்கிலொரு கும்பிடுதான். இவருக்கும் சின்னதா ஒரு மேற்கூரை போட்டு வச்சுருக்காங்க.

சீர்காழிப் பகுதியில் நாம் தரிசிக்க வந்த பதிநான்கு  திவ்யதேசங்களை தரிசிச்சு முடிச்சுட்டோம். இன்றைக்கு மட்டும் பதிமூணு கோவில்களை  நாலு மணி நேரத்தில்  சுத்தி வந்துருக்கோம்.

நம்ம  குமார் இல்லைன்னா  இவ்ளோ சீக்கிரத்தில்  இது முடிஞ்சுருக்காது. நல்லபடியா வழி காட்டி, வழி சொல்லி நம்மைக் கூட்டிப்போய் வந்தார். இதுபோல தெரியாத இடங்களில் ஒரு வழிகாட்டி கிடைச்சார்ன்னா வேணாம், நாங்களே பார்த்துப்போமுன்னு சொல்லிடாதீங்க.  நமக்கு நேரம்  எவ்ளோ மிச்சமாச்சுன்னு பார்க்கணும்தானே?  காலம்... பொன் போன்றதுன்னு சும்மாவா சொல்லி வச்சுருக்காங்க?

நாம் அடுத்துப் போக இருப்பது இன்னொரு திவ்ய தேசக்கோவில் என்றாலும் கூட, திருநாங்கூர் பகுதியில் சேராதது என்பதால்  குமாரின் சேவை இந்தக் கோவிலுடன் முடிஞ்சு போச்சு.  அவர் கேட்டுக்கிட்டது போல  இங்கிருந்து  மூணு கிமீ தூரத்தில் இருக்கும் அண்ணன் பெருமாள் கோவிலுக்குப் பக்கத்தில்  அவரை இறக்கி விட்டோம்.
அவருடைய நேரத்துக்கு நாம் அளித்த  அன்பளிப்பு அவருக்குத் திருப்தியாக இருந்ததுன்னு நன்றி சொன்னார். நமக்கும் அவருடைய சேவை திருப்தியாகத்தான் இருந்தது. அடாவடி ஒன்னும் இல்லை. நல்ல மனிதர்.  நல்லா இருக்கட்டும்!

தொடரும்...........  :-)


10 comments:

said...

திருவரங்கத்திலும் வேடுபரி நிகிழ்ச்சி ரொம்ப அழகாக இருக்குமாம்...பார்க்கணும் ரொம்ப ஆசை...பெருமாள் அனுகிரக்கணும்..


வேடுபரி நிகிழ்ச்சினு படிக்கவும் நியாபகம் வந்தது...

அருமையான பயணம்...

said...

கோயில் சின்னதா எளிமையா மக்கள் நிறைஞ்சதா நல்லாருக்கு. அதுவும் உழைக்கும் உள்ளூர் மக்கள்.

ஆலிங்கனத்துல இருந்து ஆலி வந்ததுன்னு சொல்றது ஏற்புடையதா இல்லை. ஆலிங்கனத்துல இருக்கும் ங்கனத்தை ஏன் விட்டாங்களாம்?

ஆலிங்குற சொல்லுக்கு மழை கண்ணீர் என்றெல்லாம் பொருள் உண்டு. பொதுவாகச் சொரிவதற்கு ஆலின்னு பொருள் போல. மழை சொரிந்தது. கண்ணீர் சொரிந்தாள். அந்த மாதிரி. ஒரு காலத்துல நல்லா மழை பேஞ்ச எடமா இருந்திருக்கலாம். ஒருவேளை ஆலங்கட்டி மழையே பேஞ்சிருக்கலாம். அதுனால அந்தப் பெயர்கள் வந்திருக்கலாம்.

தமிழ்நாட்டுப் பெயர்கள் எல்லாமே.. காரணப் பெயர்கள். எதாவது ஒரு காரணம் இருக்கும். அதுவும் இயற்கையை ஒட்டியோ மக்களின் வாழ்வியலை ஒட்டியோதான் இருக்கும். இப்பல்லாம் ரொம்ப லேசா புரம் நகர் சேத்துப் பேர் வெச்சிர்ராங்க. அதுல அறிவும் இல்லை. வரலாறும் இல்ல. வாழ்வியலும் இல்ல. இயற்கையும் இல்லை. :(

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

எனக்கும் ஆசைதான். ஆனால்....... அவன் மனது வைக்கணுமே!

said...

வாங்க ஜிரா.

ஆலிங்கனத்தைச் செல்லமா ஆலி ஆக்கிட்டாங்களோ :-)

இங்கே பெருமாளுக்கு 'வயலாலி மணாளன்' என்ற பெயர் இருக்கு. அந்த வயலாலிதான் காலப்போக்கில் ஆலி ன்னு மரூவி இருக்குமோ என்னவோ?

எனக்கு ஆண்டாள்தான் நினைவுக்கு வர்றாள்.. ஆழி மழைக் கண்ணா.......

வெளிநாட்டார் பெயர்களையும் வெளிநாட்டு அரசியல்வ்யாதி பெயர்களையும் தமிழ்நாட்டுலே வச்சுக்கிட்டு அவைகளையே தமிழ்ப்பெயராக ஆக்கி விட்டவங்க அநேகர் ஆச்சே ..... :-(

said...

நன்றி டீச்சர்.
அடுத்து எங்கே என்ற ஆர்வத்தோடு...

said...

உங்கள் தயவில் நாங்களும் இத்தனை கோவில்களைப் பார்த்து, விஷயங்கள் தெரிந்து கொண்டோம். நன்றி டீச்சர்.

தொடர்ந்து பயணிக்கிறேன்....

said...

திருவாலி மணாளனையும் உங்க புண்ணியத்தில் தரிசிச்சாச்சு...

வேடுபறியில் மொத்த ஸ்ரீரங்கமே கோவில் மணல்வெளியில் தான் குமிந்திருக்கும்....நான் எதேச்சையா போய் தான் நாலுவிரல்களில் பேலன்ஸ் பண்ணி நின்று கதையைத் தெரிந்து கொண்டேன்..

குதிரையில் வையாளி போல் ஒரு வேகத்துடன் இப்படியும் அப்படியுமாக ஓடுவாங்க...

said...

வாங்க விஸ்வநாத்.

அடுத்தும் திவ்யதேச விஸிட்ஸ்தான். கூடவே கிடைக்கும் மற்ற கோவில்களும் போனஸ்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நாங்களும் உங்கள் பதிவுகளின் மூலமாகத்தான் வடக்கே சமாச்சாரங்கள் தெரிஞ்சுக்கறோம்.

தொடர்வருகைக்கு நன்றி.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

அரங்கத்தில் இருக்கும் அதிர்ஷ்டம் உங்களுக்கு ! உங்கள் கண்கள் மூலம் நாங்களும் அனுபவிக்கிறோம்!