Monday, September 12, 2016

தரைவழியாக் கடல் கடந்து..... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 85)

மண்டபம் ஸ்டேஷனில் ரயில் ஏறி  ராமேஸ்வரம் போயிருக்கேன். அது ஆச்சு ஒரு 44 வருசத்துக்கு முன்னே!   இதுதான் வழி!  ரோடெல்லாம் கிடையாது. அந்த ரயில் கூட ஒரு பாஸஞ்சர் வண்டிதான்.  கிட்டத்தட்ட  ஆறரை மைல் இருக்கலாம். இதுலே ரெண்டு மூணு ஸ்டேஷன் வேற வரும்.  அக்கா மடம், தங்கச்சி மடம்  என்ற பெயர்தான் நினைவில் இருக்கு.  அந்த  வண்டி முழுசும் மீன், கருவாடு  நாத்தம்தான். மொத்தப் பயணத்துலேயும் மூக்கை மூடிக்கிட்டே கதவாண்டை நின்னு போனது மறக்கலை.
நாங்க போன பஸ்ஸை மண்டபம் கேம்ப் என்ற இடத்தில் நிறுத்திட்டு, எங்களையெல்லாம் அன்றைக்கு மாலை ரயிலில் கூட்டிப்போனார் டூர் கைடு.  அன்று இரவு ராமேஸ்வரத்தில் தங்கி, மறுநாள் காலையில் சமுத்திர  ஸ்நானம் செஞ்சு ஈர ஆடையுடன் எதிரில் இருக்கும் கோவிலுக்குள் போய் அங்கே இருக்கும் தீர்த்தங்களில் எல்லாம் தலையைக் காமிச்சு, ஒரே ஒரு தீர்த்தத்தில் மட்டும் ரெண்டு சொட்டுத் தண்ணீரைத் தலையில் தெளிச்சுக்கிட்டுக் கட்டக் கடைசி தீர்த்தத்தில் (இதுக்குத் தனிக் கட்டணம்) ஒரு குடம்தண்ணீரை அந்தப் பக்கம் ஊத்துனதும், ரெடியா  இந்தப் பக்கம் இருந்த நாங்க கூடியவரை  முழு உடலையும் அதுலே நனைச்சதும் இப்போ  நல்லாவே ஞாபகத்தில் இருக்கு.
தேவிபட்டினத்தில் இருந்து  மண்டபம் வழியா முதல்முறையா சாலையில் போறேன். சாலையின் ரெண்டு பக்கங்களிலும் பனைமரங்களின் வரிசை!   அந்தாண்டை ரயில்பாதைத்  தண்டவாளம் கூடவே வருது. நாரைகள் உக்கார்ந்துருக்குதுகள். மண்டபம் கேம்ப் தாண்டி கொஞ்சதூரத்தில் சுங்கச்சாவடி  விவரம். இன்னும் அம்பது மீட்டரில் காசு கட்டிட்டுப்போன்னுது.  அன்னை இந்திராகாந்தி பாம்பன் பாலமாம்! மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி  திறந்து வச்சுருக்கார்.

ராமேஸ்வரம்  இருக்கும் தீவுதான் பாம்பன் தீவு.  பாம்பன் ஸ்வாமிகள் இங்கேதான் பிறந்துருக்கார். பாம்பன்னு சொல்லும்போதுதான் பாம்பன் ஸ்வாமிகள்  நினைவுக்கு  வர்றாரே தவிர ராமேஸ்வரமுன்னால்   நம்ம கலாம் ஐயாதான் சட்னு  ஞாபகத்து வந்துடறார்.  எழுதவந்த பின் ராமேஸ்வரம் என்றால் இன்னொரு முக்கிய புள்ளியும் மனசில் வந்துட்டுப் போறது உண்மை. யாரு?   ஹாஹா...  நம்ம  பாலபாரதிதான் !
சாலைப்பாலம் வரப்போகுதுன்னு  ஏகப்பட்ட விளக்குக் கம்பங்களின் வரிசையைப்பார்த்தாலே தெரிஞ்சுருது.  ரொம்பவே ஆர்வமாப் பார்த்துக்கிட்டு வர்றேன். இதுவரை  பக்கத்துலே கூடவே வந்துக்கிட்டு இருந்த நறநற மணல்தரையைக் காணோம்.  அதோ கடல்தண்ணி! கூடவே தண்டவாளம்!
இந்த ரயில் பாதைப் பாலத்துக்கு வயசு 102 !    இதுதான் இந்தியாவில் கடலுக்கு மேலே போடப்பட்ட  முதல் ரயில் பாலம்! நீளம்  ரெண்டு கிமீவுக்குக்  கொஞ்சம் அதிகமா இருக்கலாம். இந்த ரயில்பாதை வர்றதுக்கு முன்  படகில் கடலைக் கடந்து ராமேஸ்வரம்    தீவுக்குள் வந்துருப்பாங்க. இந்த ரயில் பாலம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச்  சின்னங்களில் ஒன்னுன்னு பதிவு செஞ்சுருக்காங்க.

143   (piers)  காங்க்ரீட் தூண்கள் ரயில் பாலத்தைத் தாங்கி நிக்குது.......... அநேகமா  சாலைப்பாலத்துக்கும்  இதே அளவு தூண்களிருக்கலாமுன்னு நினைச்சேன். ஆனால்...79 தூண்கள்தானாம். இதுலே 64 தண்ணிக்குள்ளே நிக்குதுன்னு விவரம் கிடைச்சது.
 

சாலைப் பாலத்துக்குமேல் வண்டிகள் நிறுத்தக்கூடாதுன்னு போர்டு பார்த்த நினைவு. ஆனால் ரெண்டு பக்கமும் வண்டிகள் வரிசை  காமிச்சுக் கொடுக்குது,  பாம்பன் ப்ரிட்ஜ் வந்துருச்சுன்னு!  மக்கள் கூட்டம் இறங்கி வேடிக்கை பார்க்கும்போது நான் என்ன செய்ய?  வண்டியை நிறுத்துனதும் பாய்ஞ்சு இறங்கினேன்.  ப்ளாட்ஃபாரத்துலே ஏறி நின்னால் காத்து அப்படியே தள்ளுது!
ரயில்பாலம் அதோ தூரத்தில்!   உத்துப்பார்த்தால்  ரெண்டு ஜோடித் தண்டவாளங்கள் ரெண்டு பக்கமும் இருக்கே!   மீட்டர்கேஜ் பாதைதான்  முந்தி. அப்புறம் ப்ராட்கேஜ் மாத்துனது  2007 இல்தான்.  அப்போ பழசை எடுக்காம பக்கத்துலேயே புதுசு போட்டு அகலப்படுத்திட்டாங்கன்னு நினைக்கிறேன்.



கப்பல் வரும்போது அதுக்கு வழிவிடறதுக்காக வேணும்போது திறந்து  மூடும் கேன்ட்டிலீவர் ப்ரிட்ஜ்  தூரத்தில் தெரியுது. அட்டகாசம்!   நாம் ரயிலில்  போகும்போது ப்ரிட்ஜில் இந்த இடம் எப்படி இருக்குமுன்னு தெரியாதே!   இப்பதான் முதல்முதலாப் பார்க்கிறேன்!   ஹைய்யோ!!!   இப்ப மட்டும் ஒரு கப்பல் வந்தா எவ்ளோ நல்லா இருக்குமுன்னு நினைக்கும்போதே.....  இதோன்னு ஒரு சின்னப் படகு ப்ரிட்ஜுக்கு அடியில் போச்சு :-)


இதுமேலே  ரயில் வர்ற நேரம் என்னன்னு தெரியலை....  பார்க்கச் சான்ஸ் இல்லைன்னுதான் நினைக்கிறேன்.  (அதுக்காக ச்சும்மா இருக்கமுடியுதா?  சுட்டுப் போட்டுட்டேன்.  படம் ஆண்டவர் அருளியதே!  நன்றிகள்.)
பத்து நிமிசத்துக்கு மேலே நிக்க விடலை நம்மவர்.  நானும் சடசடன்னு க்ளிக்கித் தள்ளிட்டேன். நூறு எடுத்தா நாலு தேறாதா?  மக்கள் கூடும் இடமுன்னதும் போட்டோ எடுத்து தர்றவங்க, தீனி விற்பவர்கள்னு வியாபாரிகள் வந்துடறாங்க.  சனமும் வாங்கித் தின்னுட்டு குப்பையை அங்கேயே போட்டுட்டுப்போகுது :-(
பாலம் கடந்து ஊருக்குள் நுழைஞ்சவுடன்  நம்ம வண்டியை வழி மறிச்சு  நுழைவு வரி வசூலிச்சாங்க.  அடுத்த ரெண்டாவது நிமிட்டில் நாம் தங்கப்போகும் ஹொட்டேல் கண்ணில் பட்டுச்சு.  ஊருக்கு ஜஸ்ட் வெளியே!  இங்கிருந்து  கோவிலுக்கு 2 கிமீ தூரம்.

தெய்விக் ஹொட்டேல். வெளிப்பார்வைக்கு நல்லாவே இருக்கு.   செக்கின் செஞ்சு அறைக்குப் போனோம். பால்கனிக் கதவு  பூட்டி வச்சுருக்கு. திரைச்சீலையைத் திறந்தால்.... எதிரில் என்னவோ ஒரு  செவ்வக அமைப்பு. என்னன்னு விசாரிக்கணும்.
மணிவேற ரெண்டரை. சாப்பாட்டு நேரம் தாண்டிக்கிட்டு இருக்கு.   இங்கத்து சாப்பாடு வேணாமுன்னு  நினைச்சேன். சீனிவாசனும் பசியோடுதானே இருப்பார். அதான் வண்டி இருக்கு... என்ன பிரச்சனை?  சீனிவாசனும் ஃப்ரெஷப் பண்ணி வந்ததும் கிளம்பி ஊருக்குள்ளே போறோம்.

ஆர்யாஸ் ரெஸ்ஸிடன்ஸ்  கண்ணில் பட்டது.  உள்ளே ரெஸ்ட்டாரண்ட் லக்ஷ்மிபவன். தாலி மீல்ஸ் ரெண்டு பேருக்கு,  எனக்கு வெறும் சப்பாத்தி.  எல்லாம் போதும்....  போ....  (இது 'அந்த' ஆர்யாஸ் இல்லையாக்கும் !)  மணி மூணு.  கோவில் எப்போ திறப்பாங்கன்னு கேட்டதுக்கு மூணு மணிக்காம்!  கோபுரம் தெரியுதேன்னு  வண்டியை அந்தப் பக்கம் ஓட்டிப்போனால்...  கூடாதுகள் பளிச்.

திரும்பி அறைக்கு வந்து  எங்களுடைய பொக்கிஷங்களைச்  சார்ஜரில் போட்டுட்டு,  வெறுங்கையாக் கிளம்பி கீழே வந்தோம்.   சீனிவாசன் தகவல் சேகரிச்சுட்டார்.  எதிரில் தெரியும் அந்த செவ்வக அமைப்பு நம்ம கலாம் ஐயாவின் உடலை பொதுமக்கள் பார்வைக்கு வச்ச இடமாம். ஐயோ......  ப்ச்.

கோவிலுக்குப் பக்கம் பார்க்கிங் கிடையாது. ஒரு கிமீ தூரத்துக்கு அப்பால்தான் வண்டி நிறுத்தணும்.  எங்களை வாசலில் இறக்கி விட்டுட்டுப் போனார் சீனிவாசன்.  வந்து சேர்ந்துக்குவாராம்.

வாங்க நாம் கோவிலுக்குள் போகலாம் வெறுங்கையுடன்.....

தொடரும்........  :-)


16 comments:

said...

ராமநாதஸ்வாமி தரிசனம், தங்கள் தயவால். நன்றி.

said...

ராமேஸ்வரம் - சின்ன வயதில் சென்றது. நினைவு தெரிந்து சென்றதில்லை.

said...

@ அண்மையில் குடும்பக் குழுவுடன் ராமேஸ்வரம் போன்ற இடங்கள் சென்று வந்த நினைவுகள்

said...

வாவ்.. ரொம்ப நல்லாருக்கு. எனக்கும் என் ஹஸ்பண்டுக்கும் இங்கெல்லாம் போக எப்போ வேளை வரும்னு தெரியலை. எங்க ஊரிலயும் கடலுக்குமேல நிறைய சாலைகள். போகுது. ஆனா பாம்பன் பாலம் கம்பீரத்தையும் பயத்தையும் ஒருங்கே தருகிறது. இங்க ஆழமில்லாத ஏரிமேல சாலைபோட்ட feelingதான் வரும். கோவில்ல எல்லா தீர்த்தங்களுக்கும் என்னபாடு பட்டீர்களோ.. எவ்வளவு வெட்டினீர்களோ.. தொடர்கிறேன்

said...

நான் அந்த உலகநாதனை பார்க்க போனீங்களோனு நினைச்சேன் !!! எப்படியும் தர்ப்பையில உறங்குறவனை பார்த்தீங்க தானே ???

said...

வாங்க விஸ்வநாத்.

தொடர் வருகைக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நம்ம கோபாலும் சின்ன வயசுலே அப்பாவுடன் போயிருப்பதாகச் சொன்னார். ஆனால் ஒன்னுமே நினைவில் இல்லையாம் :-(

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

உங்கள் வலைப்பதிவுகள் வாசிச்சுருக்கேன்.

said...

வாங்க நெல்லத் தமிழன்.

தீர்த்தமாடலை. ச்சும்மா கோவிலும் சாமி தரிசனமும்தான். அதுக்கு எவ்ளோ புண்ணியமோ அது கிடைச்சால் போதும் என்ற மனசு வந்துருச்சு :-)

எங்களுக்கு இந்த வயசில் வாய்த்தது. உங்களுக்கு சீக்கிரம் வாய்ப்பு வரட்டுமுன்னு எம்பெருமாளை வேண்டிக்கறேன்.

ஆனால் ஒன்னு... உடல்நலம் நல்லா இருக்கும்போதே போகணும். கால் வலி முதுகுவலி இப்படி வலிகளோடு பயணம் எனக்குக் கொஞ்சம் கஷ்டம்தான் :-(

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

போனதே உலகநாதனுக்காகத்தான். இதெல்லாம் இடையில் கிடைச்ச போனஸ் :-)

தூங்கறவனை மட்டுமா, நிற்பவனையும், உக்கார்ந்துருப்பவனையும் கூட ஒரே இடத்தில் சேவிச்சாச்:-)

இதெல்லாம் விரிவாகப் பயணப்பதிவில் வந்துக்கிட்டே இருக்கு!

said...

உங்கள் தயவால் இன்று கோயிலுக்குச் சென்றேன். நன்றி.

said...

கடந்த மாதம்தான் குடும்பத்துடன் ராமேஸ்வரம் போய்வந்தேன். இந்தப் பதிவு மீண்டும் அந்த பரவச உணர்வை தந்தது. அருமையான படங்களுடன் அற்புதமான விவரிப்பு. மீண்டும் பயணித்த மகிழ்ச்சி. பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா!

said...

பாம்பன் சுவாமிகளுடைய சண்முகக் கவசம் கட்டாயம் படிக்க வேண்டியது.

இராமேஸ்வரம் இதுவரைக்கும் போனதில்ல. இத்தனைக்கும் தூத்துக்குடில இருந்து பக்கம் தான். பாலத்தைப் பாக்க அழகா இருக்கு. போக ஆசைதான்.

குப்பை போடுறதுன்னாலே நம்ம மக்களுக்கு அப்படியொரு ஆனந்தம்.

கோயிலுக்குள்ள மொபைல் போனும் கொண்டு போகக்கூடாதா? ஏனாம்? மதுரை மீனாட்சியம்மன் கோயில்ல கேமரா கொண்டு போகக்கூடாது. ஆனா மொபைல் கொண்டு போகலாம். டிக்கெட் வாங்கி மொபைல்ல போட்டோ எடுக்கலாம். இது கொஞ்சம் வித்யாசமா இருக்கே.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

கோவில் சரியா இருக்கோ?

வருகைக்கு நன்றி.

said...

வாங்க செந்தில் குமார்.

பயணங்களில் நாம் நேரடியாக அனுபவிப்பதை விட, அந்த அனுபவங்களை மீண்டும் அசைபோடும்போது 'அட! இப்படியேல்லாம் நடந்ததா! அடடா...' என்று நினைக்கிறோம் பாருங்க அதுதான் மனநிறைவு அதிகம் தருகிறது.

அதுக்காகத்தான் கொஞ்சம் விஸ்தாரமாகவே எழுதறேன்.

நன்றி.

said...

வாங்க ஜிரா.

இங்கே பக்தர்கள் தீர்த்தமாடி ஈர ஆடையோடு குறுக்கும் நெடுக்குமாப் போறதால் மொபைலும் கூடாதுன்னு ஒரு சட்டம். நல்லதுக்குத்தான். இன்னும் மனுசன் வக்ரபுத்தியைக் கைவிடலை பாருங்க :-(

ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு நியதின்னு இருக்கு போல. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கேமெரா டிக்கெட் வாங்கி படம் எல்லாம் எடுத்துருக்கேன். இப்ப என்னன்னா கேமெரா கூடாதாம். போனமுறை மொபைலும் கொண்டு போகக்கூடாதுன்னதால்... திரும்பி வர ட்ரைவரைக் கூப்பிட முடியாமக் கொஞ்சம் கஷ்டமாத்தான் போயிருச்சு :-(

நாளுக்கொரு நியதி !!!