Wednesday, November 30, 2016

ஆளாளுக்கு விதியை மாத்தறேன்னு கூப்ட்டா எப்படி? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 102)

கோவில் திருப்பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு. சின்னக்கோவில்தான். வரம் தரும் வரதராஜர்! கோபுரவாசலைத் தாண்டி உள்ளே போனதும்  பலிபீடம் கொடிமரம். சின்ன மண்டபத்தில் பெரிய திருவடி.  கண்ணுக்கு நேரா இருக்கும் வாசலில் நுழைஞ்சால்   சின்ன  முன்மண்டபத்தோடு  கருவறை!  அம்பூட்டுதான்.
பட்டாச்சாரியார், ஜாதகம் கொடுங்கன்னு கை நீட்டுனார். எனக்கு ஒன்னும் புரியலை. எதுக்கு? மொதல்லே எனக்கு ஜாதகமே இல்லையே.....  நம்மவருக்கு இருக்குன்னாலும் அதெல்லாம் ஊருலே மாமியார் வச்சுருந்தாங்க. அவுங்க டைம் முடிஞ்சாட்டு, இப்ப யார்கிட்டே இருக்கோ?
நமக்குப் பின்னாலேயே வந்த இன்னொரு குடும்பம்  பையில் இருந்து  ஒரு  காகிதம் எடுத்து நீட்டுனாங்க.  ஜாதகம் ! அதை வாங்குன பட்டர் சாமியின் காலடியில் கொண்டு போய் வச்சுட்டு,  அவுங்க கொண்டு வந்துருந்த தேங்காய் பழம் பூ  எல்லாத்தையும் ஒரு தாம்பாளத்துலே வாங்கிப்போய் தேங்காயை உடைச்சுட்டு, அர்ச்சனை செய்ய ஆரம்பிச்சார்.  கற்பூர ஆரத்தி ஆச்சு. நாங்களும் கும்பிட்டுக்கிட்டோம்.

ஜாதகத்தைத் திரும்ப அவுங்களிடம் கொடுத்த பட்டரிடம், என்ன ஏதுன்னு விவரம் கேட்டேன்.  'இவர் வரம்தரும் வரதராஜர். அதனால் நமக்கு நம்ம விதிப்படி என்ன கஷ்டம் இருந்தாலும், நம்ம ஜாதகத்தை இங்கே பெருமாள் காலடியில் வச்சு வணங்கினால்  அதை நல்லபடியா மாத்தி நாம் கேட்கும் வரத்தை அருள்வார். எண்ணி நாப்பத்தியஞ்சு நாளில் நல்லது நடக்கும். ஆனால்....  நாம் கேட்கும்  வரம் நியாயமானதா இருக்கணும்'  என்றார்.
  கோவில் மதில்சுவரில்கூட வரம்தரும் பெருமாள்னுதான் போட்டுருக்காங்க.
வெளியே படம் எடுத்துக்க அனுமதி வாங்கிக்கிட்டு வலம் ஆரம்பிச்சோம்.
பின்பக்கம்  ஒரு பெருமாள் நின்ற கோலத்தில் இருக்கார்.  தலைக்கு மேல் ஒரு தென்ன ஓலையில் தட்டுப் பந்தல்!

ஐயோ.... என்னத்துக்கு இப்படிப் பெருமாள்,  கோவிலின் பின்புறம் தனியா நிக்கறார்?  அதுவும் ஓலைப் பந்தலுக்கடியில்?

இப்போ  தலைக்கு மேலே  ஒரு கூரையாவது இருக்கு. ரொம்ப நாளுக்கு முன்னால்   வானமே கூரையாத்தான்  இருந்தாராம்.......   அதான்... ஏன் இப்படி?

கோவில் சங்ககாலத்துலே இருந்தே  இருக்கு. பெருமாளும் அப்போதே இருந்துருக்கார். பிறகு எட்டாம் நூற்றாண்டுலே இரண்டாம் நந்திவர்ம பல்லவன் கோவிலை நல்லபடியாகக் கட்டிக் கொடுத்துருக்கார்.  எல்லாம் சில நூற்றாண்டுகள்தான்.....  பிறகு  சிதிலமடைய ஆரம்பிச்சது.  சடையவர்மன் வீரபாண்டியன்  சரி செஞ்சு கொடுத்துருக்கார்.  அப்பெல்லாம் சாமி புருஷோத்தமன் தானாம்.

அதுக்கப்புறம்  நாயக்கர்   ஆட்சி காலத்தில்   வரதராஜரா திரும்பப் பிரதிஷ்டை ஆகி இருக்கு.  அட! அப்ப புருஷோத்தமன் என்ன ஆனார்? இப்போ எங்கே?
காலப்போக்கில் என்னென்னமோ ஆகிப்போய்  வரம் தரும் வரதராஜர் இங்கே ஸ்திரம் ஆனார்.

நான் நினைக்கிறேன்...  அப்பெல்லாம் சிவ வைணவ பேதங்களும் சண்டைகளும் அதிகமா இருந்துருக்கலாம். பக்கத்துக் கோவிலில் சைவர்களுக்காக,   பிரம்மனின் தலை விதி மாத்திய ப்ரம்மபுரீஸ்வரர், ப்ரம்மனிடம் பொறுப்பை  ஒப்படைச்சுட்டு இருக்கும்போது,    வைணவர்கள் மட்டும்  தங்கள் தலை விதியை மாத்திக்க எங்கே போவாங்களாம்?
அதுக்குத்தான்  உங்களுக்கு உங்க சாமின்னா எங்களுக்கு  எங்க சாமின்னு  வரதராஜர் எண்ட்ரி ஆனது!    அங்கே வெறுமனே விதியை மாத்திதான் எழுதுவாங்க.  என்ன எழுதறாங்களோ அது ப்ரம்மனின் இஷ்டம்.  ஆனால் இங்கே  .....  நாம் எப்படி இருக்க ஆசைப்பட்டு வரம் கேக்கறமோ  அதை  உடனே  நாப்பத்தியஞ்சு நாட்களில் நிறைவேத்தி வைக்கும் வரம் தரும் பெருமாள். த சாய்ஸ் இஸ் அவர்ஸ்!
இருக்கட்டும்... இருக்கட்டும்  அந்த புருஷோத்தமர் அப்புறம் என்ன ஆனார்?  அடடா.... அவர்தாங்க இங்கே வெளியே நிக்கறார்!
அடப்பாவமே....  அவரையும் கருவறையிலேயே வச்சுருக்கக்கூடாதா?  அது எப்படி?

கோவில் ஒருமுறை சிதிலமாப்போய் இடிஞ்சு விழுந்ததில்  மூலவர் சிலை பின்னப்பட்டுப் போயிருச்சு.    பின்னமான சிலையை  கும்பிடக்கூடாதுன்னு   அதை எடுத்துட்டுப் புதுப்பெருமாளை வச்சுருக்காங்க. பெயர் மாற்றமும் அப்போதான் வந்துச்சோ என்னவோ?

எனக்குப் பெருமாள் வெளியே அம்போன்னு நிக்கறதைப் பார்த்து மனசுக்கு ஆறலை. சாமி நம்ம குழந்தை மாதிரி. குடும்பத்தில் ஒருவர். அப்படி நினைச்சுதானே அபிஷேகம், அலங்காரம், நைவேத்யம் எல்லாம் செய்யறோம். காலையில் எழுப்பி விட்டு, விஸ்வரூபம்னு ஆரம்பிச்சு  பகலெல்லாம் உச்சி பூஜை, சாயரக்ஷைன்னு கொண்டாடி,  ராத்ரியில் அர்த்தஜாம பூஜை நடத்தி, அதன்பின்  பள்ளியறையில் தூங்க வச்சுன்னு  என்னெல்லாம் செய்யறோம்! குடும்ப நபராக் கொண்டாடறோமா  இல்லையா?

நம்ம குடும்பத்தில் நம்ம  நெருங்கிய சொந்தத்துக்கு  எதோ விபத்தில் எதாவது அங்கம் பழுதாகிப்போனால்.... அப்படியே வீட்டை விட்டு விரட்டிடறோமா?  இல்லே வயசாகிப்போய் படுக்கையில் விழுந்துட்டா, தூக்கி எறிஞ்சுடறோமா?  அவுங்க காலம் முடியும்வரை கூடவே வச்சுக் காப்பத்தறோமா  இல்லையா?  அப்படி மனுசருக்கே செய்யும்போது, பின்னமான சிலைன்னு வெளியே போட எப்படி மனசு வருது?
திரும்ப ஓடிப்போய்ப் பெருமாளைப் பார்த்தேன்.....  என் ஊனக்கண்களுக்கு ஒரு பின்னமும் தெரியலை!  இருந்தாலும் பொருட்படுத்த மாட்டேன்றது.....  வேற.  'இருக்க இடமில்லை. ஆனால் அலங்காரம் பண்றேன்னு,  எனக்கு லிப்ஸ்டிக் போட்டுட்டா பாரேன்' என்றார் :-)

 'எனக்கு ஒரு கோவில் கூட தனியா   வேணாம். ஒரு சந்நிதி மட்டும் கிடைச்சாலும் போதுமுன்னு  நீர்  உள்ளே இருப்பவரிடம் வரம் கேட்டுக்கிட்டால் நல்லது'ன்னு  அவர்கிட்டே சொல்லிட்டு, நானும்  உள்ளே இருப்பவரிடம் என் விண்ணப்பத்தை கொடுத்தேன்.

இத்தனை களேபரத்திலும் நம்மை பற்றிக் கொஞ்சம் உயர்வாச் சொல்லி ஒரு போர்டு(ம்)  வச்சுருந்தாங்க!
 கூடவே  வரம் தரும் வரதராஜருக்கும் தேவிகளுக்குமா ஒரு அஷ்டோத்ர  நாமாவளி  எழுதி வச்ச போர்டும்!
ஆலயத் திருப்பணிக்கு  தாராளமா கைங்கரியம் பண்ணச்சொல்லி  ஒரு விண்ணப்பம். அதையடுத்து, 'எங்கிட்டே ஒத்தைப் பைஸா கிடையாது!  பெருமாளே கதி' ன்னு ரெண்டு உயிர்கள்.  க்ளிக்கினபோது  சின்னது  லேசா ஒரு கண்ணைத் திறந்து பார்த்தது :-)

உள்ளே கோவில் வாசலை  ஒட்டி ஒரு மேஜையில் அரிசி, பருப்பு  வகைகள், கொஞ்சம் மளிகை சாமான்கள் எல்லாம் ஒரு கிலோ, அரைக்கிலோ, 100 கிராம், இப்படிப் பொட்டலங்களா இருந்துச்சு. பட்டாச்சார்யார்  இதுலே எது விருப்பமோ அதைப் பெருமாளுக்குக் கொடுக்கலாம். இதோ இந்தக் கூடையில் போடுங்கோன்னார்.  அடப்பாவமே............  பெருமாளுக்கே இந்த கதியா?  ஒரு நாலைஞ்சு வகைகளை எடுத்துக் கூடையில் போட்டுட்டு, அதுக்குண்டான காசை பட்டரிடம் கொடுத்ததும் ரசீதும் கொடுத்தார்.
கூடவே  இங்கே பௌர்ணமியில் நடக்கும் சுதர்ஸன  ஹோமம் ரொம்பப் பிரசித்தம்னு அதுக்குண்டான நோட்டீஸையும் கொடுத்தார்.  வாங்கி வச்சுக்கிட்டேன்.
ரமேஷ் பட்டாச்சாரியாரின் பொறுமைக்கும், அயராமல் பக்தர்களுக்கு உதவி செய்யும் குணத்துக்கும், முக்கியமா சிரிச்ச முகத்துக்கும்,  கோவில் விவரங்களைக் கேட்டவுடன்  சலிச்சுக்காமல் சொன்ன  பண்புக்கும் நன்றி சொல்லிட்டு, நல்ல  பட்டர் கிடைச்சுருக்கார். விட்டுடாதேன்னு  'அவனுக்கும்'  சொல்லிட்டுக் கிளம்பினேன்.
வரம்தரும் பெருமாளுக்கே....  இப்படி ஒரு பட்டர் கிடைக்கலைன்னா.....   அவர் கதி இன்னும் மோசமா ஆகி இருக்கும் போல!  போகட்டும்  அவர் கொடுத்த நோட்டீஸை ஸ்கேன் செஞ்சு இங்கே போட்டுருக்கேன். யார் கண்ணிலாவது பட்டு, எதாவது நடக்காதா என்ற நப்பாசைதான் எனக்கும்.....
இன்னொன்னு சொல்லணும்....  பெருமாள் தனக்குத்தானே வரம் தந்துக்கப்டாதான்னு   கேக்கப்டாது, கேட்டோ! பொறத்தியாருக்குத்தான் பலிக்கும். தனக்காக வேண்டினால் பலிக்காதுன்ற நியமம் வைகுண்டத்தில் இருக்கலாம்! யார் கண்டது?
அடுத்தாப்லே ஒரு அம்மன் கோவில் இருக்கு. நமக்கு  நேரம் கொஞ்சம் டைட் இப்போ என்பதால்  வெளியே இருந்தே போறபோக்கில் ஒரு கும்பிடு .


கட்டாயம் போக வேண்டிய அடுத்த கோவிலுக்கு ஓடணும். இன்னும் பனிரெண்டாக  இருபது நிமிட் தான் இருக்கு......... கோவில்  மூடறதுக்குள்ளே..........  போயிடணும்.....

தொடரும்...........  :-)


22 comments:

said...

சன்னதியில் உறங்கும் நாலு கால்கள் - ஸூப்பர். அதிலும் அரைக்கண் திறந்து என்ன செய்கிறீர்கள் என்று பார்க்கும் அழகு.. ஆஹா..

said...

"நடந்த கால்கள் நொந்தவோ"ங்கற மாதிரி நீங்கள் எல்லாக் கோவில்களுக்கும் தொடர்ந்து போறீங்க. நாங்களும் தொடர்கிறோம்.

said...

மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன? …. சுவாமி! (முதல் படம்) பெரும்பாலும் பல கிராமத்து கோயில்களில் பைரவர்கள் நடமாட்டமும், தூக்கமும் இருக்கும். திருச்சிக்கு அருகில் உள்ள ஊர். போய் வரவேண்டும்.

said...

அருமை நன்றி வணக்கம்.

said...

வரம் தரும் வரதராஜரை....உங்கள் வாயிலாக தரிசித்தோம்...

said...

திருபபட்டூரில் ஒரு சிவன் கோயிலுக்குச் சென்ற நினைவு. இக்கோயிலுக்குச் செல்லவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது தாங்கள் குறிப்பிட்டுள்ள கோயில்களுக்குச் செல்வேன்.

said...

வழக்குகளை சாதகமாக தீர்ப்பவர் என்றொரு கோவிலில் பிரபலயங்கள் அத்தனை பேர்களும் சமீப காலத்தில் குவிந்தார்கள். விரைவில் இந்த கோவிலில் அது நடக்கும் என்று நம்புகிறேன்.

said...

திருப்பட்டூர் சிவன் கோவிலுக்கு இரண்டு மூன்று முறை சென்றிருக்கிறேன், வரதராஜ பெருமாள் கோவிலைப் பற்றி கேள்வி பட்டது கூட இல்லை. உங்கள் வாயிலாக தரிசித்ததில் மகிழ்ச்சி! அடுத்த முறை தரிசிக்க முடிகிறதா பார்க்கலாம்.

said...

விவரங்களுக்கு நன்றி. அடுத்த பயணத்தில் சென்று வருகிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பைச் சொரியும் குணம், இந்த நாலு கால்களுக்குத்தானே இருக்கு!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

தொடர்ந்து வரும் கால்களுக்கு நோவில்லைதானே? :-)

said...

வாங்க தமிழ் இளங்கோ!

ஒரு அரைநாள் பயணம் போதும், இங்கே போய்வர! ஆனால் எதுக்கும் வேளைன்னு ஒன்னு வரணும், இல்லையா?

said...

வாங்க விஸ்வநாத்.

தொடர்வருகைக்கு நன்றி.

said...

வாங்க அனுராதா ப்ரேம்குமார்.

விரும்பிய வரம் கிடைக்கட்டும்!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

உங்க கோவில் உலா விரைவில் இந்தக் கோவில்களுக்கும் அமையணும்!

said...

வாங்க ஜோதிஜி.

அதெல்லாம் ஆரம்பிச்சுருச்சு! அதனால்தானே புதுசா ரோடெல்லாம் போட்டு வச்சுருக்காங்க! நமக்கும் சிரமம் இல்லாமல் போய் வர நல்லதாப்போச்சு :-)

said...

வாங்க பானுமதி.

அக்கம்பக்கமாவே இந்தக் கோவில்கள் இருக்கின்றன! வாய்ப்பு கிடைத்தால் நழுவவிட வேணாம் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

குடும்பத்துடன் போயிட்டு வாங்க. புராதனக்கோவில். ரொம்ப நல்லாவே இருக்கு! பௌர்ணமிக்குப் போனால் கூட்டம் அம்முமாம்!

said...


எல்லவிஷயங்களையும் உங்கள் ஸ்ட்ரைடில் எடுத்துக் கொள்ளும் விதம் ரசிக்க வைக்கிறது

said...

அலைபேசின்னு எல்லாம் எழுதி இருக்காங்க. ஆனா அனைத்து வைக்கவும்ன்னு ஒரு சுழி விட்டுப் போச்சே!!

said...

வாங்க கொத்ஸ்.

அதான் ஆஃப்னு அடைப்புக்குள்ளே போட்டுட்டாங்களே :-)

அனைத்து அலைபேசிகளையும்..... இருக்குமோ.... சிலர் ரெண்டு மூணு வச்சுருக்காங்களே!!

said...

தனியே தன்னம்தனியே காத்து காத்து கிடந்தேன். ..பெருமாளே...