Friday, December 30, 2016

பொட்டிக்குள்ளே பெருமாள் ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 112)

"உங்களுக்கு ஒரு செக் கொடுக்கணும்"  இன்பத்தேன் வந்து பாய்ஞ்சது காதினிலே!  உள்ளூர்க்கணக்குக்கு அக்கவுண்ட் இல்லை.  காசாக் கண்ணுலே காட்டினால் நல்லது. ம்ம்ம்ம்ம்....   நாளைக்கு உங்க அறைக்கு அனுப்பிடறேன்னார் பப்ளிஷர்.


வெளிவந்த, வரப்போகும் புத்தகங்கள் பற்றிக் கொஞ்சம் பேச்சு, கொஞ்சம் புத்தகங்கள் வாங்குவது, கொஞ்சம் க்ளிக்ஸ் எல்லாம் ஆச்சு.  அறைக்குத் திரும்பினோம்.
ரங்கனை எப்படிக் கொண்டு போவது.........   ஒரு கஷ்டமும் இல்லை. பேசாம நான் கேபின் பேகில் வச்சுக்கறேன். சேஷன் மட்டும் சரியா அடங்கமாட்டான். எட்டிப் பார்த்தால்  பயமா இருக்குமோ?
சரி. இந்த வேலையை இன்றைக்கே முடிச்சாகணும். கிளம்புன்னு  தோழி வீட்டுக்குப் போனோம். அங்கேதான்  பாக்கிங் பிரச்சனையே இல்லை.  ஒரு இடம் இருக்குன்னு சொல்லி இருந்தாங்க. ஊறுகாய் எல்லாம் அட்டகாசமா பேக் பண்ணிக் கொடுத்துடறாங்களாம்!  ஹங்...........  அப்படியா?  ஆனா  இவன்.....  ஊறாத காய் இல்லையோ :-)

முதல் கேள்வி 'சாப்டாச்சா' ?   சாப்பாடுன்னு உக்காரலை. ஆனால்  விஸிட்டுகளால் பசி அவ்வளவா இல்லைன்னு தள்ளிப்போட்டுருக்கு.
இட்லி மொளகாய்ப்பொடி இருக்கும் இடமும், சம்புடமும் இந்த வீட்டில் மாறித்தான் போயிருக்கு!  இப்ப இந்தமாதிரி!!!  சூப்பர் :-)

கூடவே காஃபி. முடிச்சுக்கிட்டு  கையோடு கொண்டுபோயிருந்த  கேபின்பேகில் ரங்கனை  வச்சால்....   பாம்பு எட்டித்தான் பார்க்குது :-)

கொஞ்ச தூரத்தில் இருக்கும் பேக்கிங் கடைக்குப் போய்ச் சேர்ந்தோம். நீள அகலத்துக்குத் தகுந்த அட்டைப்பொட்டி கிடைக்கலை. பெட்டி மட்டும் கிடைச்சுட்டால்....  நீட்டாப் பேக் பண்ணிடலாமாம்.  ஹாஹாஹாஹா...

பெட்டி வாங்கிக்கலாம். பிரச்சனை இல்லை. ஆனால் எங்கே கிடைக்கும்? ஆர்.கே. மட் ரோடில் ஒரு இடத்தில் கிடைக்குமாம். சரி கிளம்பு.   போற வழியில் அடையாறில் ஒரு ஸ்டேஷனரிக் கடை கண்ணில் பட்டதும் விசாரிச்சோம். பபிள் ராப் வச்சுருக்காங்களாம்.  அஞ்சு மீட்டர் கொடுங்க.



ராமகிருஷ்ணாமடம் சாலை.  போய்க்கிட்டே இருக்கோம். அடையாளம் வோடஃபோன் கடையாம்:-)  அதுக்குப்பக்கம் நின்னு  கண்ணால் மேய்ஞ்சப்ப,  ஒரு இடம் ஆப்ட்டது. மாடிக்குக்  கூட்டிப்போனாங்க. பெரிய சாமான்களின் ஒரிஜினல் பேக்குகளாக வந்த அட்டைப்பொட்டிகளின் அடுக்குகள்.  நீள அகலம் பார்த்து ஒரு வாஷிங் மெஷீன் அட்டைப்பொட்டி வாங்கிக்கிட்டு மறுபடியும் பேக்கிங் கடைக்குப்போனோம்.  பபுள்ராப்பைச் சுத்தோ சுத்துன்னு சுத்திப் பாம்பையும் பெருமாளையும் பொதிஞ்சு  பொட்டிக்குள் வச்சாச்சு. காலி இடம் நிறைய இருக்கு. அதுலே  துணிகளை அடைச்சுடலாமுன்னு திட்டம்.

மறுநாள் பொழுது விடியும்போதே ரெண்டுபேருக்கும் ஒரே எண்ணம்.  கோவிலுக்குப்போய் வந்து ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்!  சீனிவாசனைக் கொஞ்சம் லேட்டாத்தான் வரச் சொல்லி இருக்கு. உள்ளூர் என்பதால் ஒரு நாளைக்குப் பனிரெண்டு மணி நேரம் கார் எடுத்துருக்கோம். பனிரெண்டு மணி நேரமும் கார் ஓட்ட வேணாம். ஆனால் வாசலில் வண்டி ரெடியா இருந்தால்.... சட்னு எங்கியாவது போய் வர வசதியாத்தான் இருக்கு. இன்றைய நேரம் பத்து மணி.  அண்ணன் வீட்டுக்குப் போறோம். சமையல் செய்ய வேணாமுன்னு சொல்லி வச்சுட்டேன்:-)

காலை ஏழே காலுக்கு ரெடியாகி  வெங்கடநாராயணா ரோடுக்கு  ஆட்டோ. நாப்பது, அம்பது என்ற கணக்கில்  எல்லோரும் ஒத்துமையா இருக்காங்க.  கெஸ்ட்ஹவுஸ் வாசலில் ஏறினால்  அதுக்கு தண்டனையாக கூட ஒரு பத்து கொடுக்கணுமுன்னு எழுதப்படாத ஒரு விதி ! பாண்டிபஸார், வெங்கடநாராயணா ரோடு,  சென்னை ஸில்க் போதீஸ் ஏரியா, பனகல் பார்க்னு  திநகர் உள்வட்டத்துக்கு  இதுதான் ரேட்டு. மீட்டர் போட்டா ஒரு இருவதுதான் வரும். ஆனா...............

ஆட்டோவை விட்டு இறங்கும்போதே.... யம்மா.... எப்பம்மா வந்தீங்கன்னு  ஒரு உற்சாகமான குரல்.  தலையைத் திருப்பிப் பார்த்தால்.... அட! நம்ம சாமுண்டி!
பார்த்தே சில வருசங்களாச்சு.  கோவிலில் துளசியைக் கடாசிக் கொண்டிருந்த காலத்தில்  முடிவு செஞ்சதுதான்.... பெரும் ஆளைப் பார்க்க வெறுங்கையால்தான் போகணுமுன்னு!  அப்புறம் கோவிலே போர்டு எழுதிப்போட்டு வச்சுருச்சு.... 'துளசியைக்  கொண்டுவர வேணாம்'........  சுத்தம்...........
அதனால் கோவில் வாசலில் இருக்கும் பூக்கடைகளை ஏறெடுத்துப் பார்ப்பதும் பொதுவாக இல்லை.  இப்பதான் கவனிக்கிறேன்.....  திருப்பதி தேவஸ்தான கோவிலின் ரெண்டு கேட்டுக்கும் நடுவில் இருந்த கடைகளை   கோவிலின் வலதுபக்கமா ஒதுக்கிட்டாங்கன்னு!
சாமுண்டி , முன்னைக்கு இப்போ  இன்னும் கம்பீரமா இருக்காங்க. வியாபாரம் நல்லா இருக்காம். பசங்க வளர்ந்துட்டாங்க. பள்ளிக்கூடம் போறாங்கன்னு ஒரு பெருமிதம்!  நல்லா இருக்கணும். முரளி, (சாமுண்டியின் கணவர்) அப்போ பார்த்த அதே மாதிரி. வயசாகுதுல்லே எல்லோருக்கும்.  கொஞ்சம் மெலிஞ்சாப்லெ.....
"சாமிக்குப் பூ  அஞ்சு மொழம் தரவா?"
 
"  வேணாம்.  சாமிக்கு ஒன்னும் வேணாம். எனக்குதான் வேணும். வர்றப்ப வாங்கிக்கறேன்"
தரிசனம் முடிக்குமுன் மண்டபத்தில் கொஞ்ச நேரம் உக்கார்ந்துருந்தோம். பெருமாள் தன்னைத்தான் முதலில் கவனிச்சு அருள் செய்ய வேணுமுன்னு கூட்டமில்லாத அந்த நிமிசத்தில்கூட முன்னே நிற்கும் மக்களை இடிச்சுத் தள்ளி  தன் உடம்பை நெருக்கி முன்னால் கொண்டு போகும் சனத்தைப் பார்க்கும்போது....  பெருமாளுக்குக் கிட்டப் பார்வையோன்னு சம்ஸயம்  :-)
தரிசனம் முடிச்சு, சாமுண்டியிடம்  ரெண்டு முழம் மல்லிகை வாங்கினேன். ஒரு முழம்போல் வரும் ரோஜாச் சரத்தைக் கிள்ளி கூடவே  அன்பளிப்பாய்க் கொடுத்த நல்ல மனசு!

அறைக்கு வந்துட்டுக் கீழே ரெஸ்ட்டாரண்ட் போய் ப்ரேக்ஃபாஸ்ட் ஆனதும்  கொஞ்சநேரம் வலை மேய்ச்சல். போகும்போதும் வரும்போதும் பெருமாள் பொட்டி கண்ணுலே படுது.  செக்கின் பண்ணப்போகும் பெட்டி பூதாகாரமா இருக்கே!  அதுலே துணிகளை அடைச்சால்....  கனம் தாங்குமோ....   பொட்டியைச் சின்னது பண்ணால் ஆச்சு.  கைவசம் இருந்த  கத்தியும், பேக்கிங் டேப்பும் கைகொடுத்துச்சு:-)

 அண்ணன் வீட்டுக்குப்போய் அரட்டை ஆரம்பிச்சது.  காஃபி ஒன்னு ஆச்சு!  கிளம்பி எக்ஸ்ப்ரெஸ் மாலுக்கு வந்தோம்.   போன பயணங்களில் பார்த்த  ஆன்ட்டிக் கடை  காணாமப் போயிருந்துச்சு. தேடும்போது  கண்ணில்பட்ட    ஒரு  கலைப்பொருட்கள் கடையில்    கோபால் ஒரு ராதாக்ருஷ்ணா வாங்கினார்.  நான் ஆசைப்பட்ட நான்முகத்துக்குத் தடா போட்டார் :-( கனம் கூடுதலாம்..........


 க்ரீம்செண்டருக்குப்போய் பகல் சாப்பாடு. ப்ரியாணி ஸ்பெஷலாம்.  பனீர் டிக்கா,  பாப்டிசாட், ஃப்ரைய்ட்  ஐஸ்க்ரீம்.....  கூடவே ச்சனா பட்டூரா!


கிளம்பி அறைக்கு வந்து மிச்சம் மீதி இருந்த அரட்டையைத் தொடரும்போது,  வரவேற்பில் இருந்து ஒரு கவர். ஆஹா......    வந்தே வந்துருச்சு சந்தியாவில் இருந்து :-)
ட்ராஃபிக் ஆரம்பிக்குமுன்  வீட்டுக்குக் கிளம்பிப்போனால் நல்லதுன்னு அண்ணன் சொன்னார். அப்படியே ஆகட்டும்.

 தொடரும்..........  :-)




11 comments:

said...

ஃப்ரைய்ட் ஐஸ்க்ரீமா? அதெப்படி?

said...

// "உங்களுக்கு ஒரு செக் கொடுக்கணும்" இன்பத்தேன் வந்து பாய்ஞ்சது காதினிலே! //
2 வருசத்துக்கு முன்னாலேயும் இதேமாதிரி ஒரு செக் வாங்குனது எனக்கு ஞாபகமில்லீங்கோ.

// பனீர் டிக்கா, ஃப்ரைய்ட் ஐஸ்க்ரீம்//
பேலியோ டயட் ல்லா இந்தியால இருக்கும்வரை இல்லியோ ? ஹிஹிஹி


said...

ரொம்ப நாளைக்கு முன்னாடி அரங்கனை இப்படித்தான் தூக்கிட்டு வந்ததாக ஒரு கதை உண்டு. நீங்க அதை நடத்திக் காட்டீட்டீங்க. ஆசைப்பட்டு வாங்கிட்டு அதைக் கொண்டு போறதுக்கு மெனக்கெடுவதும் ஒரு அனுபவம் தான்.

ஆண்டவனுக்கா கிட்டப்பார்வை? நமக்குத்தான் அவன் கிட்ட பார்வை. பக்கத்துல போய் உத்துப் பாத்துட்டு வந்தாதான் ஒரு திருப்தி. கால் தெரியுதா? கை தெரியுதா? சங்கு தெரியுதா? சக்கரம் தெரியுதான்னு வரிசையா ஒவ்வொன்னாப் பாத்து எல்லாம் சரியா இருக்குன்னு கண்டுக்கிட்டாதான் திருப்தி.

பூக்காரம்மா ஒங்களை ஞாபகம் வெச்சிருந்து கூப்டது மகிழ்ச்சி. அவங்களுக்கும் அவங்க குடும்பத்துக்கும் வாழ்த்துகள்.

கிரீம் செண்டரைப் பத்தி பலர் சொல்லிட்டாங்க. ஆனா இதுவரைக்கும் போனதில்ல. ஒருவாட்டி எட்டிப் பாத்துறனும்.

said...

அரங்கன் துளசியிடம்சிக்கினான்.:)

said...

எங்கு போனாலும் ஒரு நண்பர் பட்டாளம் இருக்கிறதே

said...

வாங்க ஸ்ரீராம்.

ஐஸ்க்ரீமை உள்ளே வச்சு போண்டாபோல பொரிச்சு எடுக்கும் வகைகளும் உண்டு! யூ ட்யூப்லே பாருங்க. செய்முறைகள் இருக்கு.

நாம் சாப்பிட்டது சூடான சிஸ்லர்ப்ளேட்டில் வந்ததுதான்.

said...

வாங்க விஸ்வநாத்.

அதெல்லாம் சீட்டிங் டே! கண்டுக்கப்டாது... ஆமாம்:-)

said...

வாங்க ஜிரா.

என்ன ஆசைப்பட்டா...... வாங்க வுட்ருவாரா? அதுவும் இவ்ளோ பெருசை? ரங்கன், நம்ம வல்லியம்மாவின் அன்பளிப்பு. எப்படியோ நியூஸிக்கு வர ஆசைப்பட்டு வந்தே வந்துட்டார்!!!!

பெருமாளைக் கிட்டப் பார்க்கறதுக்காகவே தனியா ஒரு ஜென்மம் எடுக்கணும். எறும்பு ஜென்மம் என்றால் தேவலை. யார் கண்ணுக்கும்படாம ஒளிஞ்சுருந்து கருவறைக்குள் போயிடலாமே :-)

ஹைதராபாத் பிர்லா மந்திரில்.... சின்னக்குருவிகள் பெருமாள் உடம்பில் அங்கங்கே வந்து கொஞ்ச நேரம் உக்கார்றதும், எதிரில் வச்சுருக்கும் தட்டில் உள்ள பிரஸாதத்தையும் தீர்த்தத்தையும் அப்பப்பக் கொஞ்சம் எடுத்துக்கறதையும் பார்த்தப்பக் குருவியா பிறந்தால் தேவலைன்னு இருந்துச்சு:-)

said...

வாங்க மாதேவி.

சிக்க வைக்கப்பட்டான் :-))))

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நான் சேர்த்த சொத்துன்னா ... இந்த நண்பர்கள் பட்டாளம்தான் !!!!!! எல்லாம் இணையம் தந்த கொடை!

said...

இனிய பயணம் நிறைவுக்கு வருகிறது போலும்.....

தொடர்கிறேன்.