Monday, March 13, 2017

மாதா சரஸ்வதி...... சாரதே..... ( நேபாள் பயணப்பதிவு 15 )

முக்திநாத்தில் இருந்து  அதே இடித்தல் குலுக்கலோடு  திரும்ப ஒரு மணி நேரப் பயணம்.  போனதை விட  வரும்போது கால் மணி  குறைவு.  ட்ரைவர் கொஞ்சம்  மெச்சூரிட்டியானவர். ப்ரேக்கில் வச்ச காலை  எடுக்கலைன்னு வையுங்கோ :-)


மலையாடுகள் கூட்டம் அங்கங்கே.... மேய்ச்சலில்.  அதே மொட்டை மலைகள்,  கண்டகி நதி,  சாலை அமைக்கும் வேலை, வேலையாட்கள், வழியில் ஒரு தொங்குபாலம், இன்னபிற காட்சிகளோடு   இந்த  20 கிமீ தூரத்தைக் கடந்து (Lubra) லுப்ரா கிராமத்துக்கு வந்து சேர்ந்தோம். இதுதான் நாம்  ஜொம்ஸம்  பாலம் கடந்து போய் ஜீப் எடுத்த இடம். இங்கிருந்து முக்திநாத் வரை  குட்டிக்குட்டியா கிராமங்கள் வழி நெடுக இருக்கு. சிலதில் நாலைஞ்சு வீடுகள் இருந்தாலே அதிகம். நாம் பகல் சாப்பாடு சாப்பிட்ட இடம் கூட புராங் கிராமம்தான்.  கொஞ்சம் பெரிய ஊர் :-)


கண்டகியும் நம்ம கூடவே வந்துக்கிட்டு இருந்தாள் :-)





போகும்போது கோட்டை விட்டது போல் இல்லாம.... நம்ம ஜீப் ட்ரைவரை க்ளிக்கினேன்:-)

அங்கிருந்து பொடி நடையில்   லுப்ரா கிராமம் கடந்து  அந்த ஹிஸ்ட்டாரிக்கல் மரப்பாலம் வந்து சேர்ந்தோம்.  இதைத் தாண்டினால் ஜொம்ஸொம். மோட்டர்பைக் ஒன்னு போகக் காத்திருந்து இன்னொருவர்   நடந்து போனார்.   அப்புறமா  நாங்களும்   கவனமா நடந்து போனோம்.



பாலம் கடந்ததும் 'ஹொட்டேலுக்குப்போக டாக்ஸி கூப்பிடவா'ன்னார் துர்கா. 'வேணாம். மெள்ள நடக்கலாமு'ன்னு சொல்லிட்டேன். நாலுமணி ஆகி இருக்கு. கண்டகியை ஒட்டியே போகும்  பாதையில் ஊருக்குள் வர்றோம்.
பள்ளிக்கூடம்  விட்டாச்சு.  பூப்போல பிஞ்சுகள் கூட்டமா ஆரவாரத்தோடு வெளியில் ஓடி வர்றாங்க. ஆரம்பப் பாடசாலை!  பசங்க எல்லா ஊர்லேயும் ஒன்னுதான் :-)


பாரம் சுமந்து மலையேறும் குதிரைகள் கோழிகளைச் சுமந்துக்கிட்டுப் போகுது.  மேலே போகப்போக ஒன்னுமே கிடைக்காது என்பதால் எல்லா சமாச்சாரங்களும் கடைசியா வாங்கிப்போவது ஜொம்ஸொம்மில் இருந்துதானாம். அதான்  மேலே எல்லாமே விலை கூடுதல்னு சொன்னார் துர்கா.
குழந்தைத்தொழிலாளர் தடை செய்யப்பட்டது. ரொம்ப நல்லது.

ஹொட்டேல் வரும் வழியில் இன்னொரு சின்ன பாலம், பார்க் கடந்தால் ஒரு கோவில் கண்ணில் பட்டது.  டக்னு ப்ரேக் போட்டது என் கால்கள் :-)   ஸ்ரீ சரஸ்வதி மந்திர்!  சராஸ்வதி மாதா கி ஜெய்!  உண்மைதான். கல்வியை வச்சுத்தான் இனி வாழ்க்கையில் முன்னேற முடியும்.  கலியுகம் பாருங்க!  போய்க் கும்பிட்டுக்கிட்டோம். ஹாஃப் டோர் மூடி இருக்கு!   பாக்கி ஹாஃப் டோரில் தரிசனம்:-)


சாலை(!)யில்  நாலடி வைக்கும்போதே கெமெரா பேட்டரி மண்டையைப் போட்டுருச்சு.  ரெண்டு  பேட்டரி பவரும் காலி.  கிட்டத்தட்ட ஆயிரம் படங்கள் எடுத்துத் தள்ளி இருந்தேனே!   ஏர்ப்போர்ட்வரை வந்துட்டு திரும்பி ஹொட்டேலுக்குப் போறோம்.

அறை தயாரா இருந்துச்சு.  முதலில் பேட்டரிகளையும்  செல்ஃபோன்களையும் சார்ஜரில் போட்டோம். வந்ததும்  வைஃபை பாஸ்வேர்ட் கேட்டு வாங்குனதும் முதல் வேலையா நம்ம பயணத்திட்டத்தில் கஷ்டமான பகுதியா இருந்த முக்திநாத் தரிசனத்தைப் பெருமாளின் க்ருபையால்  நல்லபடி முடிச்சுட்டோமுன்னு  அண்ணனுக்கும், நெருங்கிய தோழிகளுக்கும் சேதி அனுப்பினேன். கூடவே இன்னொரு கொசுறுத்தகவலும். நான் இப்ப யாருன்னு தெரியுமா? ........  ஜெனமேஜெயன் :-)

அறை ஜன்னலைத் திறந்து பார்த்தால்.....   விமானதளம்.  ஓடுபாதை:-)  நீல்கிரி அதோ!!!
கொஞ்சநேர ஓய்வு.  குளிச்சு ஃப்ரெஷாகலாமுன்னு  தோணுச்சு. அப்போதைய கண்டுபிடிப்பு உடலெல்லாம் விழுப்புண்கள் மாதிரி விழுத்தடயங்கள். வண்டி குலுக்கலில் சம்பாதிச்சது.  கருப்புக் கருப்பா ரத்தம் கட்டிக் கிடக்கு. எனக்கு சின்னதா அடிபட்டாவே ரத்தம் கட்டிரும். இவ்ளோ ஏன்  ரத்தப் பரிசோதனைக்கு  ரத்தம் எடுக்கப்போடும் ஊசி காயம் கூட நாலைஞ்சுநாள் அப்படியே கருப்பாக் கிடக்கும். ரத்த ஓட்டம் சரி இல்லெப்பா....  இந்த அழகில் இருக்கும் உடம்பு  ....  அந்த  ஜீப் குலுக்கலைத் தாங்கி இருக்குமோ!!!

குளிச்சு முடிச்சுட்டு வந்து தலை வாரிக்கிட்டு , சீப்பில் இருக்கும் அழுக்கைப்போட குப்பைத்தொட்டியைத் தேடறேன். அதுலே உக்கார்ந்துருக்கு கோபாலின் ஷூக்கள்!  என்ன ஆச்சு? இதோ இப்படின்னு எடுத்துக் காமிக்கிறார்!  அட ராமா.....
என்னோட ஷூ எப்படி இருக்கோன்னு பார்த்தால்   ஒன்னும் ஆகலை. பஸந்தி காப்பாத்திக் கொடுத்துருக்காள் :-)  புழுதி போக துடைச்சு வச்சேன்.  செருப்பு போதும்.

உடலெல்லாம் அசதி. சீக்கிரம் சாப்பிட்டுத் தூங்கணும். துர்காவும்  போய் குளிச்சுட்டு, அடுக்களைக்குப்போய் நமக்கான சாப்பாட்டைத் தயாரிக்கச் சொல்லியிருந்தார். 'காரமே இல்லாமல் சமைக்கச் சொல்லுங்க'ன்னு  கண்டிஷன் போட்டுருந்தேன்:-)

ஏழேகாலுக்குச் சாப்பிடப்போகலாமான்னு  கேக்க நம்ம அறைக்கு வந்தவர், குப்பைக்கூடையில் இருந்த கோபாலின் ஷூக்களை 'என்ன ஆச்சு'ன்னு  கேட்டுக்கிட்டே  எடுத்துப் பார்த்துட்டு 'இனி இது வேணாமா'ன்னார்.   வச்சு என்ன பண்ணறது? ஊஹூம். 'நான் எடுத்து யாருக்காவது  கொடுக்கவா? ரிப்பேர் பண்ணிப் போட்டுக்குவாங்க'ன்னார்.  'அப்படின்னா இதையும்  கொடுத்துருங்க'ன்னு என்னுடைய ஷூக்களையும் எடுத்துக் கொடுத்துட்டேன்.  முக்திநாத்துக்குன்னே   வாங்குனது. முக்திநாத்  போயும் வந்துருச்சு:-)  அது போதும். யாருக்காவது பயன் ஆனால் நல்லதுதானே?

டைனிங் ரூம் போனோம். ஃப்ரைடு ரைஸ், உருளைக்கிழங்கு  குழம்பு, சப்பாத்தின்னு நாங்க மூணுபேரும் சாப்பிட்டு முடிச்சோம். மறுநாள் திட்டம் பற்றிக் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். காலையில்  வெளியே போனவங்க எல்லாரும் திரும்பிட்டாங்க போல.  டைனிங் ஹாலின் அடுத்த பகுதியில் ஒரே கூச்சலும் கொண்டாட்டமுமா இருக்கேன்னு பார்த்தால்  இளைஞர்களின்  குழு. பார்ட்டி நடக்குது!  மலையேற வந்த குழுவாம்!


சரி.  இனிமே இங்கே உக்கார்ந்தால் தலைவலி நிச்சயம்.போய்த் தூங்கலாமுன்னு   துர்காவுக்குக் குட்நைட் சொல்லிட்டு நம்ம அறைக்குப் போறோம். இது இந்தக் கட்டடத்தின் ரெண்டாங்கட்டுப் பகுதி.  நம்ம அறை  ரெண்டு வராந்தா சந்திக்கும் மூலை அறை.  பக்கத்து அறை ஒன்னு  கதவுகள் திறந்து கிடக்க , உள்ளே உக்காந்து பேசிக்கிட்டு இருக்காங்க  நம்ம பாலாஜியும் சங்கரும்!  அட! ஜெயந்தி எங்கேன்னு கேட்டதுக்கு  எங்க அறைக்கு அந்தப் பக்கத்து அறைன்னு  கை காமிச்சாங்க. அதுக்குள்ளே ஜெயந்தியே அங்கே இருந்து  இங்கே வந்துட்டாங்க.

சாப்பாடு ஆச்சான்னு கேட்டதுக்கு, என்னமோ சூப் சாப்பிட்டதாக ரெண்டுபேர் சொல்ல, சங்கர் மட்டும் 'ராத்திரியில் சாப்பாடு  சாப்ட்றது இல்லை'ன்னார். வெறும் பழங்களாம்!  எனக்கு நம்ம ஜெமோ நினைவுக்கு வந்தார்.  அதே சமயம் காலையில் மவுண்டன் வ்யூவில் பார்ஸல் கொடுத்த ப்ரேக்ஃபாஸ்ட்டில் ஆப்பிள் இருந்தது  நினைவுக்கு வர, நம்மவர் போய் அதைப்  பையில் இருந்து கொண்டு வந்தார்.

ஏற்கெனவே வாங்கி வச்சுருக்கேன்னு சொல்லி ஒரு பொதியைக் காமிச்சார் சங்கர். அஞ்சு கிலோ ஆப்பிள் கீழே  சாலைக்கடையில் வாங்கினாராம். ரொம்ப மலிவுன்னார். மூணு பேருமே ஆளுக்கு அஞ்சு கிலோ வாங்கி எடுத்துக்கிட்டுப் போறாங்க இந்தியாவுக்கு!  நம்மவர்  என்னைப் பார்த்தார்.....  ஆப்பிள் என்றாலே காத தூரம் ஓடறேன் இப்பெல்லாம்.  பார்த்து, தின்னு சலிச்சுப்போச்சு இங்கே நியூஸியில்.

'நம்ம கிட்டே இருக்கும் நட்ஸ் கொஞ்சம் கொடுங்க'ன்னதும் அறைக்குப்போய் எடுத்துவந்து சங்கரிடம் கொடுத்துட்டு, இதையாவது சாப்பிடுங்க. வெறும் வயித்துலெ  படுக்க வேணாமுன்னார். நாம் அவுங்களைப் பற்றியும், அவுங்க நம்மைப்பற்றியும் விசாரிச்சுப்பேசித் தெரிஞ்சுக்கிட்டோம். துளசிதளத்துக்கு மூணு வாசகர்கள் கன்ஃபர்மாக் கிடைச்சாங்க,  நம்ம கொ ப செ  கோபாலால் :-)

நம்ம பயணத்திட்டத்தைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, நாம் போகப் போகும் ஒரு இடத்துலே நமக்கு உதவி செய்ய ஒருத்தர் இருக்காங்கன்னு அவுங்க ஃபோன்நம்பர்  கொடுத்தார் பாலாஜி  . நல்லதாப் போச்சு. தெரியாத ஊரில் தடுமாற வேணாம்.....

ஒருமணி  நேரம் பேசிக்கிட்டு இருந்துருக்கோம். மறுநாள் காலையில் அவுங்களும் பொகரா வர்றாங்க. ஆனா  ஊருக்குள்ளே வராம,  காத்மாண்டுக்குக் கனெக்டிங் ஃப்ளைட்லே போய், அன்றைக்கு  இரவே  தில்லி.  மறுநாள்  ரயிலில் சென்னையாம்.

காத்மாண்டுவில் நாம் என்னெல்லாம் பார்த்தோமுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, புதா நீலகண்ட் பார்க்கலையேன்னு வழி எல்லாம் கேட்டு வச்சுக்கிட்டாங்க.  இரவுதான் தில்லி ஃப்ளைட் என்பதால்  நடுவில்  அஞ்சாறு மணி நேரம் இருக்கே!  நம்ம செல்லில் இருந்த  ஜல சயன நாராயணன் படங்களைக் காமிச்சேன். அவ்ளோதான். கட்டாயம் போகத்தான் வேணுமுன்னு அடிச்சுச் சொல்றார் பாலாஜி.

துவாரகா போகணுமாம். வழி சொல்லுங்கன்னார்.... துளசிதளத்தின் லிங்குகளை  அனுப்பி விடறேன். பார்த்துக்குங்கன்னு சொல்லியாச் :-)

தொடரும்............ :-)




12 comments:

said...

// பூப்போல பிஞ்சுகள் கூட்டமா ஆரவாரத்தோடு வெளியில் ஓடி வர்றாங்க. ஆரம்பப் பாடசாலை! பசங்க எல்லா ஊர்லேயும் ஒன்னுதான் :-)//

பள்ளிக்கூடத்துல படிப்பு பயிற்றுவிக்கறோம்னு பேசிபுட்டு, பாடம்கற பேர்ல பிஞ்சுப் பசங்களைப் பாடாப்படுத்துனா, பாவம் பசங்க பயந்து போய் பாய்ந்து ஓடுறாங்க ... ஹிஹிஹி.

said...

முக்திநாத் பயணத்தை முடித்துக்கொண்டு ஜொம்சொமுக்குத் திரும்பிவிட்டீர்கள். உங்களுடனேயே நாங்களும் பயணித்தோம்.

ஆறுகளின் புனிதம் என்பது என்ன? எல்லா ஆறுகளுமே, மனிதனுக்கு அவசியமான ஓடும் நீரைத் தருவதால் புனிதமானதுதானே. சில நதிகளின் புனிதத்துக்கு, அது புனிதத் தலங்களைச் சுற்றி அதனை ஸ்பரிசுத்துக்கொண்டே ஓடுவதுதான் காரணமாயிருக்குமோ? கண்டகி நதி ஓரம் காரை நிறுத்தி நதியை ஸ்பரிசித்தீர்களா?

ஆப்பிள் மரங்களைக் கண்டபோது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நீங்களும் ரொம்ப நாளைக்கு முன்பு, இப்போதிருக்கும் வீட்டு நிலத்தில் (கட்டுவதற்கு முன்) 5-6 வகை ஆப்பிள் மரங்கள் இருந்தது என்று எழுதியிருந்த ஞாபகம். அடடா.. மரங்களுக்கிடையில் கிடைத்த இடத்தில் சிறிய வீடாகக் கட்டியிருக்கலாமே என்று தோன்றியது. அதுவும் பச்சை ஆப்பிள்களைப் பற்றி எழுதியிருந்தபோது (மாங்காய் பச்சிடி பச்சை ஆப்பிளை வைத்து), வாவ் என்று தோன்றியது (எங்களுக்குக் கிடைக்கும் பச்சை ஆப்பிள்கள் எத்தனை மாதம் கழித்து எங்களை அடைகிறதோ).

சாளக்கிராமத்தைப் பற்றி இன்னும் எழுதவில்லை.

உணவுப்பட்டியலின் விலை 2 டிஜிட் இருந்தாலும், கரன்ஸி என்ன என்று தெரியவில்லை. ஆகமொத்தம் உணவுப் பிரச்சனை இந்தப் பயணத்தில் இல்லை.

said...

வாங்க விஸ்வநாத்.

இங்கே இன்னும் பள்ளிக்கூடங்களும் படிப்பிக்கும் முறைகளும் கெட்டுப்போகலைன்னுதான் நினைக்கிறேன்.

ப்ரைவேட் ஸ்கூல்ஸ் இல்லை போல :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

மேலிருந்து இறங்கும்போதோ, இல்லை மேலே போகும்போதோ நம்மிஷ்டத்துக்கு ஜீப்பை நிறுத்திக்க முடியாது.

நம்ம வீடு இப்போ இருக்கும் இடத்தில் 11 ஆப்பிள் வகைகளுடன் மரங்கள் இருந்தன. தப்பிப் பிழைச்சது அந்த க்ரீன் ஆப்பிள் மரம் ஒன்னுதான். அதுலேயே ஏராளமானவை கீழே உதிர்ந்துதான் வீணாகப்போகுது. பச்சடி, ஊறுகாய் எல்லாம்ரெண்டே பேருக்கு ஏ எவ்ளோன்னு செய்யறது....


சின்ன வீடெல்லாம் வச்சுக்க முடியாதே :-) நாங்களே அரசு சொன்ன 40% இடத்தில் 32% தான் வீட்டைக் கட்டி இருக்கோம். 68% தோட்டத்துக்கு இடம் விட்டுருக்கு :-)

said...

இது போன்ற மலைப் பிரதேசங்களில் கூடவே ஓடி வரும் ஆற்றைப் பார்த்தபடி பயணிப்பது அலாதியான விஷயம். ஒவ்வொரு ஆறும், நீர்நிலையும் நமக்குப் பாடம் சொல்லித் தருபவை. என்ன நம் ஊரில் தான் ஆற்றை மதிக்காமல், மணலெடுத்து மணலெடுத்து தண்ணீரே இல்லாமல் செய்திருக்கிறோம். இதோ இன்னும் சில நாட்களில் திருவரங்கக் காவிரியில் சம்மர் பீச் என்று காசு வசூலிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பதிவின் மூலம் நானும் அங்கே சென்ற உணர்வு. நன்றி டீச்சர்.

said...

படங்கள் உங்கள் பதிவின் ஸ்பெஷல். அதிகம் ரசிக்க வைப்பவை. எப்போதாவது தப்பித் தவறி அங்கு சென்றால் பழகிய, பார்த்த உணர்வு மனதிலிருக்கும்!

said...

கண்டகி ஆறு...அழகோ அழகு..

said...

இந்த மாதிரி இடங்களில் சாலைகளும் பாலங்களும் வீடுகளும் மேலும் கோவில்களும் கட்டிக் கொண்டு இருப்போரைப் பாராட்டவேண்டும்

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கொஞ்சம்கூட அழுக்கே இல்லாமல் தெளிவா சலசலன்னு ஓடிவரும் தண்ணீரைப் பார்க்கும்போதே மனசுக்கு எவ்ளோ மகிழ்ச்சியா இருக்கு!

நம்ம பக்கம் எல்லாம் காசுக்குத்தான் மதிப்பு. அதுக்காக என்ன வேணுமுன்னாலும் செய்யுது சனம்..... இதுலே மணல் கொள்ளைக்கு முக்கிய இடம் :-(

said...

வாங்க ஸ்ரீராம்..

நம்ம பதிவுகள் முக்கியமா ஆர்ம்சேர் ட்ராவலர்ஸ்க்குத்தான் :-)

அதுவுமில்லாமல் ஒவ்வொரு பயணிக்கும் அனுபவங்கள் வெவ்வேறு இல்லையோ!!

போய் வந்து எழுதுங்க..... உங்க அனுபவத்தை வாசிக்க ரெடி நாங்க.

said...

வாங்க அனுராதா ப்ரேம்..

உண்மை! நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நல்ல இயற்கைச்சூழலில் வாழ்க்கை அமைவது ஒரு வரம் இல்லையோ!!!

அவுங்க கொடுத்து வச்சவங்க. நிம்மதி நிறைஞ்ச மனசு!!!