Wednesday, March 29, 2017

மச்சானுக்கு மச்சான் பரிந்துரை செஞ்சுருக்கலாம்.... ( நேபாள் பயணப்பதிவு 22 )

மீண்டும் பசுபதிநாத் கோவிலுக்குப்போறோம். ரொம்ப இருட்டாகுமுன் பாக்மதி நதியின் அந்தாண்டைக் கரைக்குப்போய் ஆர்த்தி நடந்த இடத்தைப் பார்க்கணும்  எனக்கு. என்னதான் சட்புட்னு கிளம்பினாலும்,  சாயந்திர ட்ராஃபிக்லே  மாட்டிக்கிட்டு எட்டு கிமீ தூரம் போக ஒரு முக்கால் மணி நேரமாயிருச்சு.  வெளிச்சம் நமக்காகக் காத்திருக்குதா என்ன?  ஆறு மணிக்கே இருட்டிக்கிட்டுக்கிடக்கு. கோவில் வாசலில் இறங்குனதும்,  நாம் போக வேண்டிய இடம் உத்தேசமா  வளாகத்தின் வலது பக்கம் இருக்கலாமுன்னு அந்தப் பக்கம்  ஓடறோம்.
நல்லவேளையா நாம் போனது சரியான பக்கம்தான்.  பாக்மதி   ஆரத்திக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு. திங்கக்கிழமைகளில் மட்டும் என்று ஆரம்பிச்ச இந்த நிகழ்ச்சி இப்போ தினசரி விசேஷமா ஆகி இருக்காம்.  இந்தக் கரையில் வரிசையா இருக்கும் சந்நிதிகளில் என்ன இருக்குன்னு பார்க்கலாமுன்னா....  உள்ளே இருட்டோ இருட்டுதான். வாசலில் நந்தி உக்கார்ந்துருக்கறதை வச்சு உள்ளே சிவன் இருப்பாருன்னு கெமெராவை ஆட்டோ மோடில் போட்டுக் கிளிக்கினேன்.  உள்ளே சிவலிங்கம்!

பொதுவா நான் பயணங்களில் ஃப்ளாஷ் பயன்படுத்துவதில்லை. பளிச் பளிச்ன்னு  ஆட்கள் முகத்தில் அடிச்சு வைக்குதேன்னுதான்.
கோவிலையொட்டியுள்ள பாக்மதியின் கரையில் நாலைஞ்சு பேர் எரிஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  கணகணன்னு எரியும் சிதைக்கருகில் ஆண்களும் பெண்களுமாக் குடும்பம் சுத்தி நின்னு நெய்யைக் கோரி  சிதையில் ஊத்திக்கிட்டு இருக்காங்க. இன்னொருபக்கம் பாக்மதியில் கால் நனைச்சபடி 'கிடக்கும்'  உறவினருக்கான சடங்குகள் நடக்குது.  தனி உலகமாவே இங்கே ஒரு இயக்கம்.... நல்ல கூட்டம்!
பசுபதிநாதருக்கு ஆரத்தி  எடுத்து முடிச்சபிறகுதான் பாகுமதிக்கு என்பதால் கூட்டம் கோவிலை நோக்கிப் பரபரன்னு போக ஆரம்பிச்சதும் நாங்களும் அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்தோம்.  சரியான விளக்கு வெளிச்சம் இல்லாமல்  அங்கங்கே கொஞ்சம் தடுமாறத்தான் வேண்டி இருக்கு.  கோவில் முகப்பில் மஞ்சள் வெளிச்சம் பளீர்!

உள்ளே இருக்கும் ப்ரமாண்டமான   பித்தளை நந்தியின் ப்ருஷ்டமும் மஞ்சளோடு மஞ்சளாக ஜொலிச்சது :-)   சரியாக் கூட்டம்  சந்நிதிக் கதவருகில் போகுதேன்னு கூடவே போய், போனமுறை நின்னு பார்த்த அதே இடத்தில்  நின்னு  ஆரத்தி எடுப்பதை எட்டிப் பார்த்துட்டு கீழே இறங்கிட்டோம்.
முதல்முறை (எல்லாம் நாலு நாளுக்கு முந்திதான், திங்கக்கிழமை!)இங்கே  வந்து பசுபதிநாத்தை தரிசனம் செஞ்சப்ப,  'எந்த அபகடமும் இல்லாம, மச்சானை தரிசிக்க அருள்புரியணு'முன்னு ஒரு கோரிக்கை வச்சுட்டுத்தான் போனேன்.  இந்த    நேபாள் யாத்திரையே மச்சானுக்காகத்தானே :-)  அதேபோல் எந்தத் தடங்கலும் இல்லாமல்  முக்திநாத் தரிசனம் ஆச்சே!  அதுக்கான ஒரு நன்றி சொல்லிக்கத்தான் இப்போ வந்தது.

'மனசு நிறைஞ்ச நன்றி'ன்னு மனசுக்குள் சொல்லிக்கிட்டே கோவிலை வலம் வரலாமுன்னு மேற்கு வாசலில் இருந்து வடக்கு வாசல் பக்கம் போறோம். அப்போ அங்கே திறந்திருந்த வாசல் பக்கம் நின்னுக்கிட்டு இருந்த ஒருத்தர்  உள்ளே வாங்கன்னு கை காட்டினார். என்ன ஏதுன்னு யோசிக்காம சட்னு நுழைஞ்சுட்டோம். அரை இருட்டுலே  சமதளம் சரியாக்கூட இல்லாத தரையிலே தட்டுத்தடுமாறி  அங்கங்கே தரையில் இருக்கும் சமாச்சாரங்களில்  (பலிபீடம் போல்  என்னவோ அங்கங்கே  .... இருட்டில் சரியாத் தெரியலை )  இடிச்சுக்காம  சுத்திக்கிட்டுப்போனால்....  மக்கள் கூட்டம்  கொஞ்சம் இருக்கும் இடத்துக்கு வந்துருந்தோம். எல்லோரும் உள்ளே என்னவோ பார்த்துக்கிட்டு இருக்காங்க. கோவில் பூஜை நேரத்துக்குண்டான  மணிகளின் ஓசையும், டமடமன்னு டமருவின் சப்தமும்  உரக்கக் கேக்குது. நானும் எட்டிப் பார்த்தேன்.

ஹைய்யோ!!!

 சிவனுக்கு ஆரத்தி எடுத்துக்கிட்டு இருக்காங்க.  நல்ல அம்சமான மனித முகம். சந்தனக் காப்பு !  பூக்களால் அலங்கரிச்சுக் கண்களும் புருவங்களும் நெற்றிக் கண்ணுமா பளிச்ன்னு  இருக்கார்.  பெரிய தாம்பாளத்தட்டில் ஓங்கி எரியும் கற்பூர  ஜோதியில்  பார்க்கப் பார்க்கப் பரவசமா இருந்தது உண்மை.

அங்கே ஓரமா நின்னுக்கிட்டு இருந்த ஒருவர் நகர்ந்து போகச் சொல்லி கை காட்டுனதும்,  நகர ஆரம்பிச்ச வரிசையில் நாங்களும் இருக்கோம். வரிசை அப்படியே போய்  கிழக்கு வாசல் முகத்துக்கு முன் நிக்குது. இங்கேயும் அதே படிக்கு கிழக்கு முகத்துக்கு ஆரத்தி நடக்குது. கருவறையை ஒட்டியே இருக்கும் உள்ப்ரகாரத்துக்குள்ளேயே நிக்கறோமுன்னு அப்பதான் புரிஞ்சது எனக்கு!  ரொம்பக் கிட்டக்க நிக்கறதால்  பளிச்ன்னு முகமும் அலங்காரமும் நல்லாவே தெரிஞ்சது.

அதுக்குப்பின் தெற்கு வாசல் முகம்  ஆரத்தி தரிசனம். வரிசையோடு சேர்ந்தே போய்க்கிட்டு இருக்கோம்.  கடைசியா மேற்கு வாசல் முக ஆரத்தி தரிசனமும்  கிடைச்சது.  நாலு முகங்களுக்கும் ஒரே மாதிரி அலங்காரம் செஞ்சு,  ஒரே சமயத்தில் ஒரே மாதிரி ஆரத்தி எடுக்கறாங்க. இந்த வைபவமே சுமார்  நாப்பது நிமிசங்களுக்கு  நடக்குது! வரிசையோடு  வெளியே வாசல் கடந்து வந்தால்....  நாம் உள்ளே போன  வடக்குவாசலில் நிக்கறோம். '

பஷுபதிநாத்துக்கு ஐந்து முகங்கள் இருக்கு. நாலு திசைக்கும் ஒவ்வொன்னு, அஞ்சாவது முகம்  மேலே ஆகாசத்தைப் பார்த்து!  இஷான் என்று பெயர் அந்த முகத்துக்கு!  மற்ற நான்கு முகங்களுக்கும் தத்புருஷா, சத்யோஜதா, வாமதேவா, அஹோரா என்று பெயர்களாம்! இஷானைத்தவிர மற்ற நான்கு முக தரிசனங்களும் கிடைச்சது பாருங்க!!!
இந்த இரண்டு படங்களும் பஷுபதிநாத் எப்படி இருப்பார்னு உங்களுக்கு ஒரு ஐடியாக் கொடுக்கறதுக்காகப் போட்டுருக்கேன். மேலே உள்ள படம்  இந்தியாவில் ஒரு ஊரில் உள்ள பஷுபதிநாத் கோவில். கீழே படம், நான் வாங்கிவந்த  குட்டியான விக்ரஹம்.
எதிர்பாராமக் கிடைச்ச இன்ப அதிர்ச்சின்னுதான் சொல்லணும். இப்படி நாலுமுக தரிசனம்கிடைக்குமுன்னு கற்பனை கூட செஞ்சதில்லை! கண்ணும் மனசும் நிறைஞ்சு போயிருந்தது, எங்க முகத்துலேயே  தெரிஞ்சது. பேச வார்த்தை ஒன்னும் இல்லாம ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு  கொஞ்சநேரம் பிரமிப்போடு இருந்தோம்.


இந்தக் கோவிலில் நம்ம பஷுபதிநாதரைத் தவிர்த்து  ஏகப்பட்ட சந்நிதிகள்.....  (தனிச்சந்தியா இல்லைன்னாலும்....  தரையில், மாடத்தில் இப்படி ) சரஸ்வதி, நடராஜர், உன்மத்த பைரவர்,  லால் கணேஷ், தக்ஷின்காளி,  சத்யநாராயண், சேஷநாராயண், வாசுகி நாகராஜ், நவதுர்கை, கிருஷ்ணர்,  ஹனுமான், அர்தநாரீஸ்வரர்,  அஷ்ட சிரஞ்சீவி,  ச்சௌசாத்தி லிங்கம் (108 லிங்கங்களோ?)  இன்னும் சிலபல.  நல்ல வெளிச்சம் இருந்தால் நிதானமாப்பார்க்க முடியும். போனமுறை (அதான் நாலுநாளைக்குமுன்) பெயர் தெரிஞ்சுக்காமலே நிறையப் பார்த்துருந்தோம்தான்.  நம்ம பவிஷுக்கு இதுவே அதிகம்னு திருப்திப் பட்டுக்கிட்டேன்.

உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லைன்னு  மனசுக்கு பேஜாராத்தான் போச்சு.
கோவிலின் முகப்பு வாசலுக்கு வந்து  கொஞ்சம் படங்களைக் க்ளிக்கினேன். நேர்ந்துவிட்ட ஆட்டுக்கடாக்கள் ரொம்ப போரடிக்குதுன்னு  ஒன்னோடொன்னு தலைமுட்டி விளையாடிக்கிட்டும், கொஞ்சம் வயசானவைகள் எல்லாம் சாய்ஞ்சு ஓய்வெடுத்துக்கிட்டும் இருந்தன.

அப்பதான் சரிதாவைப் பார்த்தேன். முதல்முறை வந்தப்ப ருத்ராக்ஷம், சாளக்ராம் எல்லாம் வேணுமான்னு கேட்ட சின்னப்பெண்ணின் அக்காவாம்.  எனக்கும் ஒரு தோழிக்காக 'ஆறுமுகம்'  வாங்க வேண்டி இருந்தது. வாங்கி வச்சால் அவுங்க நியூஸிக்கு வந்து எடுத்துக்குவாங்களாம்! நேபாளை விட நியூஸி கிட்டக்கே இருக்கோ....  :-)


சரிதா  எதிர்வரிசையில் இருக்கும் அவுங்க கடைக்குக் கூட்டிப்போனாங்க. சாளக்ராம் எல்லாம் முக்திநாத்திலும் பொகராவிலும் வாங்கியாச்சேன்னு  தோழிக்காக ஒரு ஆறுமுகம் வாங்கினேன்.
அங்கே தரவரிசைப்படி இருக்கும் ருத்ராக்ஷங்களைப் பார்வையிட்டுக்கிட்டே இருந்தப்ப ஒரு ஒத்தை முகம் கண்ணில் பட்டது.  ஒரிஜினலா இல்லையான்னு லேசா ஒரு சந்தேகம் வரத்தான் செஞ்சது ...  ஆனாலும் அங்கே மூட்டை மூட்டையா வச்சுருக்கும் ருத்ராக்ஷங்களையும்,  நான் வாங்க நினைச்சது இன்னும்  மேல் தோலோடும் காம்போடும் ஒட்டிக்கிட்டு இருப்பதையும் பார்த்து, க்ருஷ்ணார்ப்பணம்னு சொல்லி வாங்கிக்கிட்டேன். (பேரம் பேசித்தான் கேட்டோ!)இது விதை என்ற கணக்கில் வருமுன்னா... நியூஸிக்குள் கொண்டு வரப்டாது. கொண்டு வரும் பொருட்களை  டிக்ளேர் செஞ்சு பார்க்கலாம்.....   வீடுவரை வர அதிர்ஷ்டம் இருக்குமோ......
லெமன்ட்ரீக்கு திரும்பி வரும்போது மணி எட்டு.  வரவேற்பில் இருந்த ப்ரகாஷிடம்  நாலு முகங்களையும் தரிசனம் செஞ்சதைச் சொல்லாமல் விட்டுருப்பேனோ? :-)

மறுநாள் எங்களுக்கான ஏற்பாட்டைச் சொல்லி வண்டி எத்தனை மணிக்கு  வரச்சொல்ல என்றவரிடம்.....  தினமும்தான் காலையில் எழுந்து ஓடறோமே....  நாளைக்குக் கொஞ்சம் நிதானமாக் கிளம்பலாமேன்னு ஒன்பது என்றேன்.

தொடரும்........:-)


8 comments:

said...

மஞ்சள் வெளிச்சத்தில் கோவில் முகப்பு மங்களகரமாய் இருக்கு. நன்றிகள் பல.

said...

திரும்பவும் உங்களுக்கு பசுபதி நாதரின் முழு தரிசனமும் கிடைத்திருக்கு. வேறு என்ன வேண்டும்.

said...

அடடா... கூப்பிட்டு தரிசனம் கொடுத்திருக்காரு பசுபதிநாதர்.

ஆறுமுகம்னு போனால் மனம் ஒருமுகம் ஆகும்னு சொல்லாமச் சொல்லி ஒரு விளையாட்டை நடத்தியிருக்கான் ஆண்டவன். ஆறுமுகமும் கிடைச்சு ஒரு முகமும் ருத்திராட்சத்தில் கிடைச்சிருக்கு. இதெல்லாம் தோராயமா என்ன விலை டீச்சர்?

இந்த ருத்திராட்சங்களை நியூசிக்குள்ள கொண்டு போக முடிஞ்சதான்னு பின்னாடி வர்ர பதிவுகள்ள சொல்வீங்கன்னு நம்புறேன்.

ஒருமுக ருத்திராட்சம் உண்மையா இல்லையான்னு எல்லாருக்கும் சந்தேகம் வரும்னுதான் காம்போட வெச்சிருந்திருக்காங்கன்னு நெனைக்கிறேன்.

இதே மாதிரி ஆரத்தி நீங்க கங்கையிலும் பாத்த நினைவு எனக்கு இருக்கு.

said...

வாங்க விஸ்வநாத்.

கோவில் வளாகத்திலும் கொஞ்சம் நிறைய லைட்ஸ் போட்டுருக்கலாம். ரொம்பவே பெரிய இடம் பாருங்க. இதுலே நிலநடுக்கத்திலே வேற தரை அங்கங்கே பிளந்துருக்கு. பகலில் பரவாயில்லை. ராத்ரி என்பதால் கொஞ்சம் கஷ்டமாத்தான் போச்சு.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

கேட்காமல் கிடைச்ச தரிசனம்! மனம் நிறைஞ்சும் உருகியும் நின்னது உண்மை !

said...

வாங்க ஜிரா.

ரொம்ப அதிகமுன்னும் சொல்லமுடியாது. ஆறுமுகம் விலை குறைவுதான். ஏற்கெனவே என்னிடம் ஒரு ஆறு, அஞ்சு , நாலு, மூணு வச்சுருக்கேன்.

ஒருமுகம்தான் ஆயிரம் ரூபாய்க்கு (நேபாள்) கிடைச்சது. நம்மூருக் கணக்குன்னா ஒரு அறுநூறு ஆகும்.

வீட்டுக்குக் கொண்டு வந்துட்டேன். ரிலிஜியஸ் ஐட்டம்ஸ்னு சொன்னேன். கல் (சாளக்ராம்) வேற இருந்துச்சே!

கங்கை ஆரத்தி ஒரு சமயம் ஹரித்வார், காசின்னு ரெண்டு பயணங்களில் பார்க்கக்கிடைச்சது.

said...

i dont get any chance to these holy places ...thanks ur photos now i have the feeling of being there

said...

Thanks for visiting Babu.

Thulasidhalam is mainly for Armchair travellers :-)