Saturday, August 12, 2017

சனிக்கிழமை ஸ்பெஷல்: கூட்டு

பெயரே எல்லாத்தையும் சொல்லிரும். எதாவது ஒன்னோ, இல்லை வெவ்வேற விதமான காய்களோன்னு தனியாகவும் கூட்டாகவும்  செஞ்சுக்கும் வகை சமையல்.

இன்னிக்கு நாம்  சமைக்கப்போகும் காய்கள் என்னென்னன்னு  பார்க்கலாம்.

 ச்சொக்கோன்னு  உள்ளுர் கடைகளில் விற்கும் நம்ம பெங்களூரு கத்தரிக்காய்தான் :-)  சௌசௌ !! ChouChou
கூடவே கை கோர்ப்பது குடமிளகாய்.  அதுவும் சிகப்பு.
வாழ்க்கையில் கொஞ்சம் கலர்ஸ் வேணுமில்லையா?

சீஸன் சமயம் கொஞ்சம் மலிவாகக் கிடைக்கும்போது   வண்ணமயமா வாங்கி வந்து கத்தியாலே நறுக்கிக் கூறு போட்டு ஃப்ரீஸ் பண்ணிருவேன்.  இப்போகூட இத்தனை தேவைப்படாது.  ரெண்டு போக மீதி ஃப்ரீஸருக்குத்தான் போகும் :-)

 ஏற்கெனவே ஃப்ரீஸரில் இருந்த  வண்ணக்கலவைகளில்  கொஞ்சம் எடுத்து வச்சுருக்கேன் இன்றைய சமையலுக்காக !



தேவையான பொருட்கள்  :

கடலைப் பருப்பு   அரைக் கப்.

பூண்டு நாலைஞ்சு பற்கள் :-)

ச்சொக்கோ   ஒன்னு

குடைமிளகாய்  ரெண்டு

வெங்காயம்  மீடியம் சைஸில் ஒன்னு

தக்காளி  ரெண்டு/ மூணு

கடுகு, சீரகம்  அரைடீஸ்பூன்

கறிவேப்பிலை  கொஞ்சம்

துருவிய தேங்காய்   ஒரு கால் கப்

எண்ணெய்   மூணு டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள்   கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள்  அரை டீஸ்பூன்

மல்லித்தூள்  அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள்  கால் டீஸ்பூன்

மிளகாய் வத்தல் ரெண்டு/மூணு

உப்பு  முக்கால் டீஸ்பூன்

புளி  கான்ஸன்ட்ரேட் அரை டீஸ்பூன்

கூட்டுப்பொடி  ஒரு ஒன்னரை டீஸ்பூன்

செய்முறை:

அரைக் கப் கடலைப்பருப்பை நல்லாக் கழுவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு, முக்கால் கப் தண்ணீரும்,  உரிச்ச பூண்டுப்   பற்கள் நாலைஞ்சும் சேர்த்துட்டு, ப்ரெஷர் குக்கரில் மூணு விஸில் வரும்வரை வச்சு வேக விட்டுக்குங்க.
பருப்பு வகைகள் வாய்வு என்பதால் பூண்டு.  கடலைப்பருப்பு வேணாமுன்னா பாசிப்பருப்பும் சேர்க்கலாம்.  இது  சீக்கிரம் வெந்துரும் என்பதால் குக்கரில் வச்சால் ஒரு விஸில் போதும்.

குக்கரில் வச்சதால் எல்லாம் பொங்கி வந்துருக்கு. கூடுமானவரை அந்த வெள்ளை நுரையை எடுத்துக் கடாசிடலாம். எத்தனை முறை  பருப்பைக் கழுவினாலும் நுரையைத் தவிர்க்க முடியறதில்லைப்பா....

குக்கர் வேலை முடியட்டும்னு  விட்டுட்டு,  வெங்காயம் சின்னதா நறுக்கிக்கணும்.  ச்சொக்கோ வை தோல் சீவிட்டுச் சின்னத்துண்டுகளா நறுக்கிக்கணும். அப்படியே குடமிளகாய்களை ரெண்டா வகுந்து , உள்ளே இருக்கும் விதைகளைக் கடாசிட்டு,  சின்னத் துண்டுகளா நறுக்கிருங்க.  ரெண்டு காய்களுமே  ரொம்பவே சின்னதா நறுக்க வேணாம். ஒரு ரெண்டு செமீ துண்டுகளா இருக்கட்டும்.
வெங்காயம் தக்காளிகளையும்  நறுக்கி வச்சுக்கணும்.  வெங்காயம்  பொடியா நறுக்கினால் நல்லது.
ஒரு  வாணலி/கடாய்/ ஃப்ரைபேன்  அடுப்புலே ஏத்திட்டு எண்ணெய் ஊத்துங்க. அது சூடானதும், கடுகு, சீரகம் தாளிச்சு  அது வெடிச்சதும்  மிளகாய் வத்தலைக் கிள்ளிப்போட்டு கூடவே பெருங்காயப்பொடி போட்டுடலாம். வறுபட்டதும் கறிவேப்பிலை, நறுக்குன வெங்காயம் சேர்த்து  வதக்கணும்.

வெங்காயத்தின் பச்சை வாசனை போனதும், மிளகாய், மல்லித் தூள், மஞ்சள்பொடி சேர்த்து  அதே எண்ணெயில் கொஞ்ச நேரம்   வதக்கிட்டு,  நறுக்கி  வச்சுருக்கும் ச்சொக்கோவைச் சேர்த்து, ஒரு அரைக் கப் தண்ணீர் ஊத்தி வேகவிடணும். முக்கால் வாசி வெந்ததும், தக்காளியைச் சேர்க்கணும்.

நான் பச்சைத் தக்காளிக் காய்களைச் சேர்த்தேன். உப்பு போடும் நேரம் இதுதான். ஆச்சா?
எல்லாம் வெந்ததும் புளி சேர்க்கலாம். பார்த்து....ரொம்பப்புளிப்பா ஆகிடப்போகுது.  நான் புளிக்கு பதிலா  ஒரு  பச்சை ஆப்பிள் (நம்ம வீட்டு மாங்காய்)நறுக்கிச் சேர்த்தேன்.




ஒரு கொதி வரட்டும்,  இப்போ  நறுக்கி வச்ச குடமிளகாய் போட்டுருங்க.  ரெண்டு மூணு நிமிசம்  ஆனதும், வேகவச்ச கடலைப் பருப்பைச் சேர்க்கணும். ரொம்பக் கெட்டியா இருந்தால்   கால் இல்லை அரைக் கப் தண்ணீர் சேர்த்துக்கலாம். கூட்டுன்னா கொஞ்சம் இளகின மாதிரி இருக்க வேணாமா?

நல்லா ஒரு கொதி வரட்டும்.  இப்போ கூட்டுப்பொடியைத் தூவி கலக்கி விடணும்.  கூடவே துருவிய தேங்காயையும்,   சேர்த்தால் கூட்டு வேலை முடிஞ்சது. கொஞ்சம் மல்லி இலைகளை மேலாகப்போட்டுட்டு  மூடி வச்சுருங்க.  பரிமாறுமுன் தட்டைத் திறந்தால் கமகம வாசம் :-)


ஆமாம்.... கூட்டுப்பொடி எப்படி, என்னன்னு சொல்லலையே....  ரசப்பொடி, சாம்பார்ப்பொடி, குழம்புப்பொடி வகைகளில் இப்போ கூட்டுப்பொடியையும் சேர்த்தாச்சு.
நாலு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, ரெண்டு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு,  ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு,  ஒரு டேபிள் ஸ்பூன் எள்ளு,  ஒரு டேபிள் ஸ்பூன்  மிளகு,  ஒரு டீஸ்பூன் சீரகம்.  இதையெல்லாம் எண்ணெய் சேர்க்காமல்  வெறும்  போட்டுப் பொடிச்சு வச்சுக்குங்க. விருப்பம் இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி கூட சேர்த்துக்கலாம்.  இந்தப் பொடி கைவசம் இருந்தால் ஒவ்வொரு முறையும் கூட்டுக்குன்னு அரைச்சுக்கிட்டு இருக்க வேணாம்.  நினைச்சாக் கூட்டுதான் கேட்டோ :-)

அதிகம் உரைப்பு வேணுமுன்னால்...   ஒரு பத்திருவது மிளகாய் வற்றல், கால் கப்  மல்லி விதைகளையும் வறுத்து இதோடு சேர்த்துப் பொடிச்சு வச்சுக்கலாம். எனக்கு  காரம் ஆவறதில்லைன்னு நான் சேர்க்கலை.


பத்திருவது மிளகாய்ன்னா....  இவ்ளோ தான்   எடை.  (துரை கவனிக்கவும்)

இந்த சமையல் குறிப்பு வரப்போகும் ஈஸிபீஸி இண்டியன் ரெஸிபியில் இடம் பெறுகிறது!


21 comments:

said...

reads and looks delicious.
கடைசியில சொன்னீங்களே பத்திருவது மிளகாயணு - ஷாக்காயிட்டேன்.

said...

கூட்டுப்பொடி நல்ல ஐடியா.

said...

நல்ல செய்முறை. பூண்டு தவிர மற்ற எல்லாம் ஓகே. அதுக்கும் பதிலா கொஞ்சம் பெருங்காயம் சேர்த்தால் ஆச்சு.

நானும் காரத்தைத் தவிர்க்கணும்னு பார்த்தா, காரம் இல்லாம சாப்பாடு வேண்டியிருக்கறதில்லை.

said...

வாங்க துரை.

ஹாஹா..... அந்த மிளகாய்க் கணக்கு, கூட்டுப்பொடி செஞ்சு வச்சுக்கறதுக்கு! அரைச்சு வச்ச பொடி அத்தனையுமா போடுவீங்க? ஒரு ஒன்னரை டீஸ்பூந்தானே? :-)

இதுலே மிளகாய் சேர்த்தால், தாளிக்கும்போது போடும் மிளகாய்த்தூள் தேவை இருக்காது.

எதோ.... பார்த்துச் செய்யுங்க. :-)

said...

வாங்க ஸ்ரீராம்.

எவ்வளவுக்கெவ்வளவு வேலையைக் குறைக்க முடியுமோ அதுக்கான உபாயம் தானே கண்டுபிடிச்சுட மாட்டோமா? :-)

said...

வித்தியாசமான கூட்டு. செய்து விடுவோம்.

கடலைப்பருப்பு, சீரகம், தேங்காய், காரம் வேண்டுமென்றால் மிளாகாய், அல்லது பச்சைமிளகாய் அவ்வளவுதான் கூட்டில் சேர்க்கும் பொருட்கள்.
தேங்காய்பூவுடன் சீரகம், ஒரு பல் பூண்டு, சின்ன வெங்காயம் இரண்டு, மிளகாய், அல்லது பச்சை மிளகாய் அரைத்துக் கொள்வோம்.

நீங்கள் சொன்ன கூட்டுப்பொடி சேர்த்து வைத்துக் கொள்கிறேன்.

said...

செய்து பாஅர்க்குறேண்

said...


சீமைக் கத்தரி சௌசௌ என்றெல்லாம் அறியப்படுமிந்தக்காயை நீலகிரியில் மேரக்காய் என்பார்கள் இதை வைத்துக் கூட்டு செய்வது அடிக்கடி எங்கள் வீட்டில் உண்டு

said...


பத்திருவது மிளகாய் எல்லாம் மாவு மில்லில் தான் அரைச்சுப் பாத்திருக்கேன்.

said...

சௌசௌவை மார்க்கெட்டில் பார்த்திருக்கிறேன். இதுவரை சாப்பிட்டதில்லை என்பதால் எடுத்து சமைத்துப் பார்க்க ஒரு தயக்கம். உங்கள் சமையல்குறிப்பை வைத்துக் கொண்டு செய்து பார்க்க வேண்டும். நன்றி டீச்சர். ரெண்டு சந்தேகங்கள்.
தோலை சீவ வேண்டுமா?
இது கொண்டு எரிசேரி செய்யாம்பற்றுமோ?

said...

சனி கிழமை என்றாலே ஸ்பெஷல்தான் :)
செளசெள இங்கும் கிடைக்கும்.

said...

சௌசௌ கூட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். பாசிப்பருப்பில்தான் செய்வது வழக்கம். இம்முறை கடலைப்பருப்பு போட்டு செய்துபார்க்கிறேன். கூட்டுப்பொடியும் செய்துவைத்துக்கொள்கிறேன். படங்களோடு செய்முறை.. பசி தூண்டுகிறது. நன்றி டீச்சர்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நான் இப்பெல்லாம் பூண்டு கொஞ்சம் அதிகமாத்தான் சமையலில் சேர்த்துக்கறேன். பல உடல் கண்டிஷன்களுக்கும் இது நல்ல மருந்து. இயற்கை வைத்தியம்தான்!

பெருங்காயமும் விதிவிலக்கில்லையாக்கும் :-)

said...

வாங்க கோமதி அரசு.

நீங்கள் சொல்லும் முறையிலும் செய்வதுண்டு. எல்லாத்தையும் கொஞ்சம் வறுத்தரைச்சு செஞ்சுருவேன். அரைச்சுவிட்ட கூட்டு :-)

said...

வாங்க ராஜி.

கொஞ்சம் சுலப சமையல்தான் :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

உங்க பழைய பதிவுகளில் மேரக்காய் பற்றி எழுதி இருந்தது நினைவுக்கு வருது :-)

said...

@ துரை.

உங்களுக்காக பதிவில் ரெண்டு படம் சேர்த்துருக்கேன் பாருங்க.

20 மிளகாய்ன்னாலும் வெறும் 16 கிராம்தான். இதையா மாவு மில்லில் அரைச்சுக் கொடுப்பாங்க. குறைஞ்ச பட்சம் அரைக்கிலோ இல்லையோ?

said...

வாங்க ரிஷான்.

கட்டாயம் தோல் சீவித்தான் ஆகணும். தடவிப் பார்த்தால் ரோமம் போல ஒன்னு கையில் நெருடும் சிலசமயம்.


எரிசேரியில் தாராளமாய் சேர்க்கலாம். தேங்காயைக் கொஞ்சம் வறுத்து அரைச்சுக்கணும்.

said...

வாங்க மாதேவி.

நன்றி.

said...

வாங்க கீதமஞ்சரி.

உண்மையைச் சொன்னால்.... கடலைப் பருப்பை விட பாசிப் பயறுதான் நல்லது. வயிற்றுக்குக் கேடு செய்யாதது!

said...

சுவையான குறிப்பு. சௌசௌ இங்கேயும் கிடைக்கிறது. செய்து பார்க்கிறேன்.