Friday, September 22, 2017

ராமராஜ்யாவில்..... (இந்திய மண்ணில் பயணம் 53)

இஷ்டக்கோவிலின் வரிசையில் ஒரு  நாலைஞ்சு வருசங்களா நம்ம பூரணப்ரம்மம் கோவிலும் என் மனசில் இடம்பிடிச்சு உக்கார்ந்தாச்சு.  எப்ப சென்னைக்குப் போனாலும்  இவரையும் தரிசனம் செஞ்சுக்கிட்டுத்தான் வர்றோம்.  ஒரு  தள்ளுமுள்ளு கிடையாது. எவ்ளோ நேரமானாலும் சரி. யாரும் ஒன்னும் சொல்றதில்லையாக்கும்!
பெருமாளின் பத்து அவதாரங்களும்,  மார்பில் உறையும் மஹாலக்ஷ்மியுமா  நெடுநெடுன்னு நின்ற கோலம்.  விசேஷநாட்களுக்குத் தக்கபடி இவரே சிவனாகவும்,  க்ருஷ்ணனாகவும்,  மனம் கவரும் மோஹினியாகவும், இன்னும்  தாய், தகப்பனாக்கூட  மாறிக்கிறார்.

அதானே....   எல்லாமுமாய் நிறைஞ்ச பரிபூரணம் அல்லவா  தெய்வம்!  கடவுள்!

மேலும்....  இங்கே வந்தோமுன்னால்....  கூடுதல் போனஸா  'எல்லோரையும்' தரிசனம் செஞ்சுக்கலாம். பழனி முருகனில் தொடங்கி சகலருக்கும் தனித்தனி கோவில்களும் வளாகத்தில் நிறைஞ்சுருக்கு!

ஆசிரமக்கோவில் என்பதால்,  முன்கூட்டித் தகவல் சொன்னோமுன்னால் அங்கே போய் தங்கியும் இறையருள் பெறலாம். நாங்களும் சில முறைகள் தங்கி இருக்கோம்.

இந்த முறை  நேரம் கொஞ்சம் பற்றாக்குறை என்றதால்  தங்கலாமா என்ற ஆசையைத் தள்ளிப் போட்டோம். அதான் தங்கப் போறதில்லையேன்னு  அங்கே வர்றோம் என்ற தகவலையும் சொல்லலை.

சனிக்கிழமைகளில் காலை  வேளையில்  அக்கம்பக்கத்து  சனம் அத்தனையும் கோவிலில்தான் இருப்பாங்க.  அன்றைக்கு  அனைவருக்குமே அனுமதி உண்டு. நாமும்  இப்போ சனிக்கிழமையில்தானே கிளம்பிப் போய்க்கிட்டு இருக்கோம், இல்லே!

சென்னைன்னு சொன்னாலும்......  போய்ச்சேர ஒரு மணி நேரத்துக்குப்பக்கம் ஆகிருது. கேளம்பாக்கம் போகணும். சித்தயோகி ஸ்ரீ சிவசங்கர் பாபாவின் ராமராஜ்யா!

ராமராஜ்யா வாசலுக்குப் பக்கம் மிளகாத்தம்மன் கோவில் இருக்கு.  ஒரு நாள் போகணுமுன்னு நினைச்சுக்கிட்டே இதுவரை  போகலை.  கண்ணில் பட்டவுடன் ஒரு கும்பிடு போடறதோடு சரி.  ஆத்தா.... இன்னும் கூப்பிடலைன்னு  ஒரு நொண்டிச்சாக்கு சொல்லிருவேன்.  ஆத்தா.... சீக்கிரம் கூப்பிடு ஆத்தா.....

வருகைப் பதிவேட்டில்  பெயரைப் பதிஞ்சுட்டு, ராமராஜ்யா வளாகத்துக்குள் போறோம்.  காலை ஆறு மணிக்கே கிளம்பினதால்....  ஒரு வாய் காஃபிக்கு   மனசு அலையுது. நேரே போனது காண்டீனுக்குத்தான்.

இட்லியும், காஃபியுமா  முடிச்சுக்கிட்டு, ஸ்ரீபுரம்   போகணும்.  'பெரிய கோவிலில்' எட்டுமணிக்கு பூஜை ஆரம்பிச்சுருமேன்னு  காலை எட்டிப்போட்டு முதலில்  துர்கை தரிசனத்துக்குப் போனோம். நிகுநிகுன்னு  நிற்கிறாள்! முகத்தில் எப்பவும் மாறாத புன்முறுவல்!   சாமின்ற பயம் வர்றதில்லை....சொந்த அம்மாவைப் பார்க்கறதுபோல் ஒரு உணர்வுதான் எப்பவும்!  அவளுக்கும் தன் பொண்ணைப் பார்க்கறது மாதிரிதான் இருந்துருக்கும்! உஷத்காலப் பூஜை  முடிஞ்சு  அலங்காரத்தில் மின்னறாள்! இன்றைக்கு  பவுர்ணமி என்பதால் சாயங்காலம் பகவதி ஸேவை உண்டு!

எதிரே  காயத்ரி மண்டபம் யாகசாலை பளிச்ன்னு சுத்தமா இருக்கு!   அடுத்த மண்டபத்தில் யோகா !  ராமராஜ்ய மக்கள் சிலர் பயிற்சியில்!  காலை வேளை, சுத்தமான காற்று, மரங்களும் செடிகளும் நிறைஞ்ச தோட்டம், பறவைகளின் இனிமையான  குரலிசை தவிர அமைதியான இடம் எல்லாம் மனசை  இழுக்குது என்பது சத்தியம்!

வாம்மான்னு  தும்பிக்கைத் தூக்கி வரவேற்பு கொடுத்தது ஐராவதம் :-)
புதுசா சரணம், அபயம் ஐஸ்வர்யம் னு  ஒரு  'சிற்பம்'  வச்சுருக்காங்க.
ராமராஜ்யத்துலே எனக்குப் பிடிச்ச விஷயமே....   'கோவிலைக் கட்டியாச்சு, நம்ம வேலை முடிஞ்சது'ன்னு இல்லாம புதுசுபுதுசா எதாவது  செஞ்சுக்கிட்டே இருக்காங்கன்றதுதான்!  எப்பவும் புதுமைகள் கூடிக்கிட்டேதான் போகுது!
இந்த  ராமராஜ்யத்தோடு சேர்ந்து இயங்கும் கல்விக்கூடம் இருப்பதால்  பிள்ளைகள்  வரையும் ஓவியங்கள் அங்கங்கே  வளாகம் முழுசும் இருக்கும்!  பார்க்கப் பார்க்க நமக்குக் கண்ணும் மனசும் பரபரன்னு நமக்கு சலிக்கவே சலிக்காது!பூரணப்ரம்மம் கோவிலுக்குள் போனோம்.  முதற்பார்வையில் சட்னு கண்ணைக் கட்டிப்போடும் விஸ்தாரமான  முற்றம். அழகுத் தூண்களும் பளிங்குத் தரையுமா அந்த சுத்தமே ...  ஹைய்யோ!!!

'பெருமாள் அலங்காரத்தில்'  இருந்தார் பெருமாள் :-)   சிவன், முருகன், அம்பாள்,  க்ருஷ்ணன்ன்னு    காலத்துக்கேத்த வேஷம் போட்டுக்கறதில் கெட்டியாக்கும், கேட்டோ :-)

(இந்தப் பதிவை எழுதும் இன்று நவராத்ரி முதல் நாளுக்காக,  கர்பரக்ஷாம்பிகை கோலம் கொண்டு காட்சி தர்றார் எம் பெருமாள்!  மாலையில் இவரே பாரதி கண்ணம்மா !!! )

பெருமாளைக் கும்பிட்டுக்கிட்டுப்போய்  நீளப்படிகளில் உக்கார்ந்தோம்.  திண்ணை போன்ற அமைப்பு நமக்கிரு பக்கங்களிலும் இருக்கு. யார் வேணுமுன்னாலும் அவரவர் இஷ்டம் போல்  உக்கார்ந்துக்கலாம். இங்கே உக்காராதே... அங்கே உக்காராதேன்ற  கெடுபிடி, நாட்டாமைகள் எல்லாம்  இங்கே இல்லவே இல்லை.
எட்டடிக்கப் பத்து நிமிட் இருக்கும்போதே நம்ம பாபாஜி உள்ளே வந்தார். நேராப் போய் பூரணப்ரம்மத்துக்கு  ஒரு கும்பிடு போட்டுட்டு,   முற்றத்தில் இருக்கும்  மக்களிடம் வந்து  குசலம் விசாரிச்சுட்டு, அவருக்கான  இருக்கையில் போய்  உக்கார்ந்துக்கறது வழக்கம்.
நம்மைக் கண்டதும், 'எப்ப வந்தீங்க'ன்னு  விசாரிச்சார்.  ஊரை விட்டுக் கிளம்பி  மூணு வாரம் ஆச்சு. சென்னைக்கு வந்து  அஞ்சுநாளாச்சுன்னு கணக்கு சொன்னேன் :-)

அவர் இருக்கைக்குப் போனதும்  மக்கள் போய் ரெண்டொரு வார்த்தைகள் பேசலாம், வணங்கலாம்....   சம்ப்ரதாயமா  ஒன்னும் இல்லை.  தன்னைச் சுத்தி   உதவியாளர்கள் என்ற பெயரில்   'அரண்' எல்லாம் ஒன்னுமில்லை. அவர்கள் உதவியாளர்கள் மட்டுமே!  தவிர  எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தும் பண்பு!  அதிதி  உபசாரம் அதிகம்.  ராமராஜ்யத்தில்  வசிக்கும் சுமார் முன்னூறு குடும்ப மக்களுக்கும்  அதிதி உபசாரம்  முக்கியமான ஒன்னு!  யாரையும் வேற்றுமுகமாப் பார்க்கவே மாட்டாங்க. நாம் அப்படியே போய் ஜோதியில் கலந்துக்க வேண்டியதுதான் !

இதெல்லாம்தான் என்னைத் திரும்பத்திரும்பப் போகத்தூண்டும் சமாச்சாரம்!

கிட்டப்போனதும்  முதலில் தன் கையால் எதாவது ஒரு இனிப்போ பழமோ நமக்குக் கொடுத்துட்டுத்தான் பேசவே ஆரம்பிப்பார்!  அன்பர்கள்  கொண்டு போகும் அன்பளிப்புகளைத் தொட்டு ஆசி வழங்குவதோடு சரி.


நாங்களும் போய் வணங்கிட்டு,  புள்ளையாருக்கு வஸ்திரங்களும்,  பாபாவுக்குப் பொன்னாடையும் ஒரு மரியாதை நிமித்தமாக் கொண்டு வந்துருக்கோம் என்றவுடன்,  பையைத் தொட்டு ஆசீர்வதிச்சுட்டுப் புள்ளையாருக்கு  நீங்களே கொண்டுபோய் சார்த்திட்டுப்,  பொன்னாடையை உங்க விருப்பமுள்ள  ஸ்வாமிக்குப் போர்த்துங்கோன்னுட்டு பக்கத்தில் இருந்த  நபரிடம்  நமக்கு உதவி செய்யச் சொன்னார்.

நமக்குத் தெரிஞ்ச இடம் என்பதால் நாங்களே போறோமுன்னு சொல்லிட்டு,   ஈசனின் நெற்றிக் கண்ணுக்குள் இருக்கும் புள்ளையாரை நோக்கிப் போனோம்.
பிரமாண்டமாய் ஒரு சிவலிங்கம். நெற்றிப்பட்டையின் நடுவில் நெற்றிக்கண். அந்தக் கண் வழியாக நாமும் பார்க்கலாம்.  உள்ளே புள்ளையார் சந்நிதி!  சந்நிதிக்குள் போக படிகள் இருக்கு!
வஸ்திரம் சார்த்திய பிறகு, நாங்கள்  பூரணப்ரம்மம் கோவிலின் முன்னே இருக்கும்  யாக   மண்டபத்தில் புதுசா(அப்போ! ) அமைச்சுருக்கும் லக்ஷ்மிநாராயணருக்குப் பொன்னாடை சார்த்தினோம். பட்டர் அழகா மடிச்சு பெருமாளின் தோளில் போட்டார்.
ஏற்கெனவே பல பதிவுகள்  ராமராஜ்யத்தைப் பற்றி எழுதி இருக்கேன். அப்போ பார்க்காதவர்கள் விருப்பம் என்றால் சாம்பிளுக்கு இங்கே க்ளிக்கலாம் :-)

இங்கேயும்

இங்கேயும்


அதுக்குள்ளே சத் சங்கம் கூடி, ஒளியில்  காட்சி அளிக்கும் தெய்வ உருவங்களைப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தார் பாபாஜி. நானும் பலமுறை  அக்னியில் பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கேன்.
பெருமாளுக்குத் தளிகை சமர்ப்பிக்கும் நேரம் வந்தாச்சு.  முழுக்க முழுக்க மகளிரணியின் சேவை!  (அதானே....  நாங்க சமைச்சோம். நாங்களே  பெருமாளுக்கும் படைப்போம்!   எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு !)     அடுக்களையில் இருக்கும் அன்னபூரணி சின்னச் சிவிகையில் ஏறி, அன்றைய தளிகைக்கான நைவேத்யங்களுடன் பவனி வருவாள் !
சனிக்கிழமை ஸ்பெஷல் இது!  குறைந்த பட்சம் பதினைஞ்சு ஐட்டங்களாவது  இருக்கும். கூடி வந்தால் இருபத்தியொன்னு!

பெருமாளுக்கும், மற்ற சந்நிதிகளில் உள்ள கடவுளர்களுக்கும் சமர்ப்பித்தவுடன்,  மக்களுக்கும் சமர்ப்பணம் ஆச்சு.  அதுக்குள்ளே நமக்கு ரெண்டு தட்டுகள் நிறைய ப்ரஸாதங்களை நிறைச்சு வச்சுக் கொண்டு வந்து கொடுத்தார் ஒரு  அன்பர்.  பாபா சொல்லி அனுப்பினாராம். அதிதி உபசாரம்!
கழுத்துவரை சாப்ட்டாச்சு:-)
பழைய நண்பர்கள் பலரையும் பார்த்துப்பேசின்னு கொஞ்சநேரம் போச்சு.
பாபாவும்  யாகமண்டபத்தில் வந்து உக்கார்ந்தார்.  நாங்களும் போய்க் கொஞ்சநேரம் அவரோடு பேசிக்கிட்டு இருந்தோம். போனமுறை நாங்கள் பார்த்த கல்யாணமண்டபம் கட்டி முடிச்சாச்சாம்.  பள்ளிக்கூடத்துக்கும் புதுக் கட்டிடங்கள் உருவாகிக்கிட்டு இருக்கு!  கட்டுமானப்பணிகளைச் சுத்திக் காட்ட  ஒரு  குட்டிப்பெண்ணை எங்களோடு அனுப்பினார்.

பெரிய குடும்பமா இருப்பதால்  அங்கே என்னென்ன விரிவாக்கம் நடக்குது என்பதெல்லாம் எல்லோருக்கும் அத்துபடி.  பெரியவங்க சமாச்சாரமுன்னு  பிள்ளைகளை ஒதுக்கி வைக்கறதில்லை.  எல்லாம்  வளரும் தலைமுறைக்கானது இல்லையோ!

கல்யாண மண்டபம் அட்டகாசமா இருக்கு!  பள்ளிக்கூடக் கட்டடம் ப்ரமாண்டம். கல்லூரிக்குள் நுழைஞ்சாப்போல!  அநேகமா அடுத்த வருசம் முதல் கல்லூரிப் படிப்பும் இங்கேயே தொடரும் வகையில் இருக்கும் போல!
மனசு நிறைஞ்சு போச்சுன்னு கிளம்பினோம். போயிட்டு வர்றோமுன்னு சொல்லிக்கப்போனால்....  இங்கே தங்கலையான்னு  கேக்கறார்.

இந்த முறை கொஞ்சம் நேரக் குறைவு . முக்திநாத், பத்ரிநாத் பயணங்களை நல்லபடியா நடத்திக் கொடுத்துட்டார் பெருமாள். இன்னும்  தமிழ்நாட்டுலே நாலு  கோவில்கள் பாக்கி இருக்கு. அங்கே போய் வரலாமுன்னு இருக்கோம் என்றதும், எல்லாம் நல்லபடி நடக்குமுன்னு  சொல்லி ஆசி  வழங்கினார்.
இவருடன் பேசும்போது,  ஒரு   ஆன்மிகத்தலைவருடன் பேசறோம் என்ற எண்ணமே  வர்றதில்லை. குடும்பத்தின் மூத்த அண்ணனுடன் பேசறாப்போலத்தான் எனக்கொரு உணர்வு.  அவரும்  பரிவோடு இருக்கார்.  அவர் கொள்கையும் அதுதான்.  Love all and Love is all!  அன்பே சிவம், அன்பே பெருமாள்!  அன்பே அனைத்தும்.
மனத்திருப்தியுடன் லோட்டஸ் வந்து சேர்ந்தோம்.  மிளகாத்தம்மன் சந்நிதி மூடி இருந்தது.  வேளை வரலை......

 மவுண்ட் ரோடில் ஒரு வீட்டு மாடியில் எம்ஜியார் இருந்தார் !


தொடரும்.....  :-)


Wednesday, September 20, 2017

1995 நவம்பர் 17 சாமி செத்தே போச்சு ! (இந்திய மண்ணில் பயணம் 52)

தினம் தினம் எதாவது ஷாப்பிங்னு கடைக்குப் போறதும் வாரதுமாத்தான் இருக்கோம்.  'நான் என்ன எனக்காகவா வாங்கறேன்? எல்லாம் மகளுக்கு'ன்னதும்  ஒரு சின்ன முணுமுணுப்பு கூட இல்லாமல்  கூப்பிட்ட இடத்துக்குக் கிளம்பிடறார் நம்மவர் :-)

பாண்டி பஸாரில்  ரெண்டுமூணு கடைகளில் ஏறி இறங்கி வந்துக்கிட்டு இருந்தோம். அப்பதான்  நம்ம ரேமண்ட்ஸ்  கடைக்கு எதிர்வாடையில் இருக்கும்  இளநீர் வண்டிக்காரரிடம் தாகத்துக்கு வாங்கிக்கலாமுன்னு   குறுக்கே வரும் நெரிசலான சந்து (தெருவாமே! ) கடக்கும்போது 'டோபாஸ் வளையல் கடை' கண்ணுலே பட்டது.

மேட்ச்சிங் வளையலுக்காகத்தான் அலைச்சல் இன்றைக்கு. எதுக்கும் அங்கேயும் பார்த்துடலாமேன்னு போனால்...  ஹைய்யோ!!!   இத்தனை வருசம் இந்தக் கடை கண்ணுலேயே படலை பாருங்க.  ஆனால் கண்ணாடி, ஃபேன்ஸி வளைகள் போட்டுக்கறதை விட்டே பல காலம் ஆச்சுன்றதால் தேவையும் இருக்கலைன்றதுதான் உண்மை.

முழுக்க முழுக்கப் பெண்களால் நடத்தப்படும் கடை இது. ஆரம்பிச்சு இப்போ சரியாப் பத்து வருசமாச்சாம்!   கொண்ட்டாட்டம்தான்!  கடையின் ஓனர்களே  கடையை நடத்தி வியாபாரத்தையும் கவனிச்சுக்கறாங்க. கூட வேலை செய்ய ஒரு சில உதவியாளர்கள் மட்டும்தானாம்.

அப்போ ட்யூட்டியில்  இருந்த   திருமதி குப்பம்மா ரொம்பவே நல்லவங்களா இருக்காங்க. என்ன ஏதுன்னு நம்மை விசாரிச்சு, தேடோ தேடுன்னு தேடி கடைசியில் பொருத்தமான நிறமும் டிஸைனுமா கிடைச்சே போச்சு!  இதுக்கிடையில் மகளுக்குப் படங்களை அனுப்பி, டிஸைனும் கலரும் சரியான்னு கேட்டு, பதில் வரும்வரை காத்திருந்துன்னு.... நேரம் ஓடியே போனது உண்மை!
குப்பம்மா அவர்களுக்கு  நன்றியைச் சொன்னதுடன்,  பத்தாண்டு விழாவுக்கான வாழ்த்துகளையும்  தெரிவிச்சுட்டு  சில க்ளிக்ஸ் :-)
அவுங்களும் பதில் மரியாதையாக, மகளுக்குத் திருமணத்துக்கான ஆசிகளையும் தெரிவிச்சாங்க.
இன்னும் இளநீர்  ஆக்ட்டிவிட்டி பாக்கி இருக்கேன்னு  அங்கே போனால் , கடைக்கொரு குடை தர்றதா ஒருவர் வந்து சொல்ல, இளநீர்க் கடைக்காரர் ஏழுமலை, இதுக்குப் பின்னணியில் என்ன இருக்கோன்னு முழிக்க,  நாம் குடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்து விவரம் விசாரிச்சோம்.
இலவசமாத்தான் தர்றாங்களாம். அவுங்க  வியாபாரத்துக்கான விளம்பரம் குடையில் இருக்கு!  இருந்துட்டுப் போகட்டும்,     அடிக்கிற  வெயிலில்  அந்த  இளநீர்கள் கொதிக்காம இருக்கே ... அது போதாதா?

ஆளுக்கொரு இளநீர் வாங்கிக்கிட்டுக் குடிக்கும்போதுதான் சிவரஞ்சனியைப் பார்த்தேன். என்ன ஒரு அழகான அமைதியான முகம்.  கை மட்டும் பரபரன்னு மணிகளைப்பின்னி  மாலையாக்கிக்கிட்டு இருக்கு!   நவநிற மாலை போல ஒன்னு   பார்த்தவுடனே எனக்குப் பிடிச்சுப் போச்சு. நாஞ்சொல்லலை.... நேபாள் போனதுலே இருந்து மணிப்பித்து பிடிச்சுருக்குன்னு :-)
யாரோ  ஆர்டர் கொடுத்துட்டுப் போயிட்டு, திரும்ப வரவே இல்லையாம். 'எதாவது அட்வான்ஸ் வாங்குனீங்களா'ன்னு கேட்டால்.... சிரிக்கிறாங்க. இப்படி இருந்தால் என்னத்தை வியாபாரம் செஞ்சு.....  மாலையைக் கையில் எடுத்துப் பார்த்தேன். நல்ல நீளம். சாதாரண அளவை விட டபுள் நீளம்.  லாங்க் செயின் போட்டுக்கும் பழக்கம்  சின்ன வயசுலே பார்த்துருக்கேன். அதில் ஒரு சிலுவையைப் பென்டன்ட்டாப் போட்டுருப்பாங்க!   அதைப்போல ஒன்னு வாங்கிக்கணுமுன்னு ஆசை அப்போ இருந்தது......   ஐ மீன்  த செயின்.
'ஆர்டர் கொடுத்தவங்க வந்தால் அட்வான்ஸ் வாங்கிக்கிட்டுச் செஞ்சு கொடுங்க'ன்னு  ஒரு  வியாபார நுணுக்கம் சொல்லிக் கொடுத்துட்டு, அந்த மணிமாலையை வாங்கியாச்.  எல்லா நிறமும் இருப்பதால் எல்லா நிற உடைகளுக்கும் மேட்ச் ஆகும். ( இதை எழுதும்போதுதான்  ஞாபகத்துக்கு வருது....   இதை இன்னும் நியூஸியில் போட்டுக்கலைன்னு.... தேடணும்!)

சிவரஞ்சனி, ப்ரேம்குமார் தம்பதிகளுக்கு அழகான ரெண்டு குழந்தைகள். பெரியவனை ஸ்கூலில் போடச் சொல்லி, கல்விதான் உண்மையான செல்வம்னு நம்ம ரெண்டு பைசாவை சொன்னதுக்கு  சம்மதம்ன்னாங்க.
இப்பவே மணி ரெண்டு. பசியும் இல்லை. இளநீரும் தேங்காயுமா வயிறு நிறைஞ்சுதான் இருக்கு. (எனக்கு எப்பவும்  கொஞ்சம் தேங்காய் இருக்கும் இளநீர்தான் பிடிக்கும். முழுக்க முழுக்கத் தண்ணீர் இருக்கணும் நம்மவருக்கு!)

பகல் சாப்பாட்டை இன்னைக்கு ஒழிக்கலாமான்னதுக்கு எஸ்ன்னார்.  அறைக்குத் திரும்பிட்டோம். மூணுமுணரை வரை நமக்கும், சீனிவாசனுக்கும் ரெஸ்ட்தான் .

குட்டித்தூக்கம், வலை மேய்ச்சல் கடமைகளை முடிச்சுட்டு மூணரை வாக்கில் கிளம்பி காஞ்சிபுரம் போறோம்.  மயிலை மாடவீதியில்  காஞ்சிபுரம் நெசவாளர் கூட்டுறவு சங்கம் நடத்தும் கடையைப் பத்திச் சொல்லி இருக்கேனே   நினைவிருக்கோ?  அவுங்க இப்போ லஸ் சர்ச் ரோடில் நம்ம ரங்காச்சாரிக்கு எதிர்வாடையில் புதுக் கடை  திறந்துருக்காங்க.
கடை அமர்க்களமா இருக்கு!  பழைய கடையும்  இன்னும் இருக்குதாம்.  கடை ஓனர் சீதாராமன் & தனலக்ஷ்மி தம்பதியர் நமக்கு நண்பர்களாக ஆகி ஒரு  ஒன்பது வருசம் ஆச்சு. நம்ம வல்லியம்மா அறிமுகம் செஞ்ச கடைதான் இது!

 நமக்கு வேண்டிய டிஸைன் கலர்ஸ் சொன்னால் அதைத் தயாரிச்சும் கொடுப்பாங்க.  மகளுக்கு இப்படி ஒரு முறை வாங்கி இருக்கேன்.  அவள் பாட்டுக்காரி(யும் கூட) என்பதால்  அவுங்க குழுவின் நீலநிறத்தில், ம்யூஸிக் நொட்டேஷன்ஸ்  டிஸைன் பார்டரும் முந்தானியுமா ரொம்பவே அழகா செஞ்சு கொடுத்தாங்க.

நாம் போன நேரம்  சீதாராமன் அங்கே இல்லை. அவரோட மாமனார் இருந்தார்.   இங்கே இருந்த விற்பனையாளர்கள் சிலர்ஏற்கெனவே பழைய கடையில் நமக்குத் தெரிஞ்சவங்கதான் என்பதால் குசல விசரிப்பு முடிஞ்சு புது டிஸைன்களை எடுத்துக் காமிச்சாங்க.  இப்ப அது என்ன ட்ரெண்டோ.....  புடவைக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாம ஒரு முட்டாய் பிங்  கலர் அநேகமா எல்லாப் புது டிஸைன் புடவைகளிலும் இருக்கு.  வாங்கினால் மகள் கொன்னுருவாள்.

அடுத்த விஜயம் பதிவர் வீட்டுக்கு:-) ஏற்கெனவே அங்கே ஒரு பதிவர் சந்திப்பு நடந்துக்கிட்டுத்தான் இருந்தது.  நானும் கலந்தேன் :-)     நெல்லை உலகம்மாள்.  எனக்கும் அறிமுகம்  ஆச்சு.      இதுவரை வாசிச்சதில்லை  என்ற 'உண்மை'யை இருவரும் உரக்கச் சொன்னோம்  :-)
நாச்சியாரும் இப்போ சென்னைக்கு வந்துருக்காங்க.  அடுத்த முறை ரெண்டு பேரும் சந்திக்க எப்போ வாய்க்குமோன்னு  மனசுக்குள்ளே ஒரு புலம்பல் இடைவிடாது இருக்கு  .....

எதுக்கு இப்படி ரெக்கை  கட்டாமலேயே பறக்கிறாய்?  கடிகாரத்தைச் சபிக்கத் தோணுச்சு.  வல்லியம்மாளின் இளைய மகனும் நம்மவரும் ஒரு பக்கமா கலந்துரையாடல் :-) நாங்க இன்னொரு பக்கம் !

அஞ்சேகால் மணி போலக் கிளம்பினோம்.  எனக்குக் கொஞ்சம் ஷாப்பிங் இருக்கு. (எப்பதான் இல்லை? ) மாடவீதி சரவணபவனில் நம்ம பெயர் எழுதி இருந்த பஜ்ஜியையும், காஃபியையும் முழுங்கிட்டு, விஜயா ஸ்டோரில் தேடிப்போனது கிடைக்கலைன்னு அப்படியே பார்த்தசாரதியைக் கண்டுக்கலாமேன்னு  அல்லிக்கேணி போய்ச் சேர்ந்தோம்.
அருமையான தரிசனம். பெருமாள் வழக்கம்போல் மிரட்டும் கண்களும் முரட்டு மீசையுமா ஸேவை சாதிச்சார்.
 ஏற்கெனவே பல முறைகள் வந்துபோன கோவில் என்பதால்  நின்னு நிதானமா  சந்நிதிகளில் போய் தரிசனம் செஞ்சுக்கிட்டேன்.  நின்றும் இருந்தும், கிடந்தும், பறந்தும், இளவலோடும் மனைவியோடும் ராமனாகவும் அஞ்சு பெருமாளா இங்கே  கண்ணும் மனமும் நிறையப் பார்க்கலாம்.  108 திவ்ய தேசக்கோவில்களில் இதுவும் ஒன்னு!  
அங்கேயே அக்கம்பக்கம் ஜவுளிக்கடை இருக்குதான்னதுக்கு,  'போறவழியில் மயிலாப்பூரில்  நல்லி இருக்கு'ன்னார் சீனிவாசன்.  புள்ளையாருக்கு சார்த்த ஒரு வேஷ்டியும் துண்டும், கூடவே ஒரு பொன்னாடையும் வேணும். கிடைச்சது. ஆனால் அதைவிட சுவாரசியமான தகவல் ஒன்னும்  கூடுதலாக் கிடைச்சது பாருங்க!

இந்தக் கடை ஆரம்பிச்சு  65 வருசங்களாச்சாம்.  திநகர் கடை போல  பெருசாவோ, ஆடம்பரமாவோ இல்லை. பார்க்க ரொம்பவே சாதாரணமாத்தான் இருக்கு. இங்கே ரமணின்னு ஒருத்தரை சந்திச்சோம்.
சாமிக்கு சார்த்த ஒரு செட்ன்னு சொன்னதைக் கேட்டு  அவர் ஒரு குண்டு போட்டார்!  சாமி செத்துப் போச்சு!

ஐயோ.... எப்ப?

1995 நவம்பர் 17 சாமி செத்தே போச்சு.

அப்புறம்?

மக்கள் எல்லாரும் ஒரு அபிமானத்தால் கடவுள்  உள்ளதுன்னு நம்புகிறார்கள்.  ஆனால் கடவுள்கள் எல்லாம்  போய் விட்டார்கள்....

எங்கே?  ஙே.....

அவர் ஒன்னும்   பதில் பேசாமல் நின்னார்.

சரிதான். எதோ மனநிலை சரி இல்லாதவரா இருக்கலாம். இல்லைன்னா அந்தக் குறிப்பிட்ட நாளில் எதாவது அதீத சோக நிகழ்ச்சி அவருக்கு  நடந்துருக்கலாம்.....

மனுசர், தாங்க முடியாத சோகம் அனுபவிக்க நேரும்போது....  கடவுளே இல்லைன்னு விரக்தியில்  சொல்றதுண்டே....

என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர், கல்யாணமாகி  ரெண்டாம் வருசம் கணவனை இழந்துட்டாங்க. கையில்  மூணு மாசக் குழந்தை.  இயற்கையா எதாவது மரணம் நடந்துருந்தால் மனசாவது   கொஞ்ச காலத்துக்குப் பின் அடங்கி இருக்கும். இவுங்க வாழ்க்கையில்  வேற விதமான அதிர்ச்சி.  அப்ப இருந்து  கடவுள் நம்பிக்கை இல்லாமல் போச்சு.  அவுங்க எந்தக் கோவிலுக்கும் போகமாட்டாங்க. வீட்டுலே பூஜை நடக்கும் சமயம், அந்த சாமி அறைப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க மாட்டாங்க.  

இவுங்களைப் பத்தி ஒரு  பதிவு கூட ஒரு  பனிரெண்டு வருசத்துக்கு முன் எழுதி இருந்தேன். நேரமும் விருப்பமும் இருந்தால் இங்கே பார்க்கலாம்.பாவம்.... ரமணிக்கு என்ன நடந்ததோ.....   ப்ச்....

திரும்ப லஸ் சர்ச் ரோடு வழியா வரும்போதுதான்  பட்டப்பாவின் தளிகை  கண்ணில் பட்டது.  அங்கே எதாவது வாங்கிக்கலாமுன்னு போனோம்.
ரொம்ப ஒன்னும்வேண்டி இருக்கலை. ஒரு தயிர் சாதம் போதும்.  வாங்கிக்கிட்டு லோட்டஸ் திரும்பியாச்.

கொஞ்சம் விலை அதிகமுன்னு தோணல் எனக்கு.   தயிரில் கொஞ்சம் புளிப்பும் அதிகம்..... வடாமும், மோர் மிளகாயும் கொஞ்சம் ஊறுகாயும் தொட்டுக்க வச்சுருந்தாங்க. நம்மவர் ஒரு ஊறுகாய் ப்ரேமி !
நாளைக்குக் காலையில் ஒரு சுவாரசியமான இடத்துக்குப் போகணும்.  காலை  ஆறுமணிக்கு சீனிவாசனை வரச் சொல்லியாச்சு :-)


தொடரும்...........  :-)

Monday, September 18, 2017

பதிவர் சந்திப்பில் எளக்கியவியாதி சுட்ட பச்சை வடை ! (இந்திய மண்ணில் பயணம் 51)

பொழுது விடிஞ்சதும் எல்லாம் வழக்கம்போல்.  காலை உணவு  இட்லி, வடைகள், கிச்சடி, கேசரி போல ஒன்னு, கொண்டைக்கடலை சுண்டல்னு! லோட்டஸ்லே எனக்குப் பிடிச்ச விஷயம் ஒவ்வொரு தளத்திலும் வாசலுக்குப் பக்கம் வச்சுருக்கும் வட்டக் கண்ணாடி!  முந்தி இது  லிஃப்ட் கதவுக்கு எதுத்தாப்லெ இருக்கும். இப்போ அங்கே புதுசா ஒரு கண்ணாடி லிஃப்ட் வச்சுட்டதாலே இதை இடம் மாத்தி இருக்காங்க. ஆனாலும்  தளத்தை விட்டு வெளியே வரும்போது கண்ணில் படாமல் இருக்கச் சான்ஸே இல்லை :-)

நம்மவருக்கு இன்று ஆஃபீஸ் போகணு(மா)ம். ஒன்பது மணிக்கெல்லாம்  வண்டி அனுப்பி, அவர் கிளம்பிப்போயிட்டார்.  எனக்கு பதிவர் சந்திப்பு இருக்கு. பதினொரு மணிக்குத்தான்  நம்ம சீனிவாசனை வரச்சொல்லி இருந்தேன்.

அலைகள் அருணா வீட்டில் சந்திப்பு ஃபாலோடு பை லஞ்ச் ! மலர்வனம் லக்ஷ்மி, ஒலிக்கும் கணங்கள் நிர்மலா, நுனிப்புல் உஷா , நாச்சியார் வல்லி, இவர்களுடன் துளசிதளம் துளசியும்!   பாட்லக் போல.....  ஆளாளுக்கு  ஒரு வகைன்னு   வகைவகையா சாப்பாடு!  எனக்குத்தான் அடுப்பில்லையே....  எதுக்கு இருக்கு  சுஸ்வாத்? நோ ஒர்ரீஸ்னு   அங்கெ போய்  (நாலெட்டு நடந்துதான்) சில தீனிகளை வாங்கிக்கிட்டு வந்தேன்.

சீனிவாசன் வந்ததும் கிளம்பிப் போயாச்சு.  எங்களையெல்லாம் மயக்க அங்கே மாயக்கண்ணனும் வந்திருந்தான் :-)
தான் பெற்ற இன்பம் வகையில்  எனக்கும் இன்பமூட்டியே ஆகணும் என்ற பிடிவாதத்தோடு,  'பிரபல  எழுத்தாளினி'    ஏகாம்பரி  வடைக்கான மாவை  அரைச்செடுத்துக்கிட்டு வந்துருந்தாங்க.  இலக்கிய வியாதி சுட்ட பச்சை வடை !  முதல் ஈட்டின் முதல் வடை எனக்கு நைவேத்தியமாச்சு :-)சிரிப்பும் கொண்டாட்டமுமா  பகல் சாப்பாடு அமர்க்களம்.  நாங்க போட்ட கும்மாளத்தில், அருணாவின் ரங்க்ஸ் ,   தன் அறைக்குள் இருந்த இடமே தெரியலை!
அடடா.... அப்படி விடலாமா?  எங்களுக்கு  ஃபொட்டாக்ராஃபரா இருக்கும்படிச் செஞ்சோம்.


மூணுமணிக்கு சம்ப்ரதாயமா காஃபி ஆச்சு.  அதன்பின்  நுனிப்புல்லின் மகளுடைய அலுவலகத்துக்குக் கிளம்பிப்போனோம்.  வக்கீலம்மா ! புதுசா  அலுவலகம் செட் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.  அங்கேயும்போய்  இடத்தையே அதிர வச்சுட்டு,    (  ஹௌஸ் வார்மிங்)      அவுங்கவுங்க கிளம்பிப்போனதும்,  நானும் அருணாவும்,  அருணாவின் வீட்டுக்கு வந்தோம்.


கோபால், அவர் போன வேலையை முடிச்சுட்டு  இங்கே வந்து சேர்ந்துக்குவார் என்பது  திட்டம். வீட்டுக்குள் போனா...  காஃபி குடிச்சுக்கிட்டு இருக்கார் கோபால்.  நாங்க  அப்படிப்போனவுடன், இவர் இப்படி வந்துருக்கார். விருந்தோம்பலைக் கைவிடாமல் அருணாவின் ரங்க்ஸ், காஃபி போட்டுக் கொடுத்து உபசரிச்சுக்கிட்டு இருக்கார்:-)

கொஞ்ச நேரம் ஃபேமிலீஸ்  Tடாக் ஆனதும்,  கிளம்பி  நாங்க அடையார் அநந்தபதுமனை தரிசனம் செஞ்சுக்கிட்டு,  திநகர் போயாச்.
பிறகு அங்கேயே  கொஞ்சம் ஷாப்பிங், கீதா கஃபே விஸிட்ன்னு  நேரம் போனது உண்மை.

மறுநாளும்  சைடு பை சைடா  ஷாப்பிங், பதிவர், எழுத்தாளர் ,பத்திரிகை ஆசிரியர் என்ற மூணவதாரம் எடுத்த  நண்பருடன் இன்னுமொரு இனிய சந்திப்பு.  எனக்கு ஒரு அன்பளிப்பு  கிடைச்சதுன்னா நம்புவீங்களா?
ஹை.... ஐநூறு!

 சக்தி விகடனில் வந்த  பிருந்தாவன் முதல் பிரயாகை வரை என்ற தொடருக்கு  அப்பப்பப் படங்களை சப்ளை செய்த வகையில் ! ஒரு ரெண்டு வருசமா அவர் சொல்லிக்கிட்டே இருக்கார், 'உங்க காசு என்னாண்டை இருக்கு'ன்னு!  பேசாம வட்டிக்கு விடச் சொல்லி இருக்கலாம்...இல்லே?  போச்சு :-)
இங்கே லோட்டஸ் தரை தளத்தில் இருக்கும் க்ரீன்வேஸிலேயே சாப்பாடு ஆச்சு.
காலையில் ப்ரேக்ஃபாஸ்டே  கூட  பதிவர் சந்திப்பு சமாச்சாரம்தான்!  போண்டா ! (பார்த்தவுடன் நம்ம டோண்டு நினைவு வந்ததுப்பா.... ப்ச்.....)

இந்தப் பயணத்தில் கீதா கஃபே பஜ்ஜிகளில் நம்ம பெயரை எழுதிட்டார் பெருமாள்.!
மகள் கல்யாணத்துலே ப்ளவர் கேர்ளுக்கான  அலங்காரமா வளைகள், கழுத்தணிகள் வாங்கிக்கன்னு  அங்கே பாண்டிபஸாரிலேயே சுத்தித் திரிஞ்சும், தைக்கக் கொடுத்தவகைகளை  சேகரிச்சுக்கிட்டுமா இருந்துட்டு,  கடைசியில்  மயிலை வரை போய் கபாலியையும் கப்புவையும் கும்பிட்டவுடன்,    சரவணபவனில் ராச்சாப்பாடு முடிச்சுக்கிட்டு  அறைக்கு வந்தோம்.


எனக்கு இடியப்பம், நம்மவருக்கு இட்லி.  கூடவே பாதாம் பால் !


தொடரும்.........  :-)