Monday, October 02, 2017

மோஹினி.......... (இந்திய மண்ணில் பயணம் 57)

கண்டதும் வருவது காதலா இல்லை காமமா?
அழகியைப் பார்த்ததும்  ஆசையில் பித்து தலைக்கேறிப் போச்சு! அவளைக் கண்ட அத்தனை பேருக்குமே! ஒரே ஒருவருக்கு மட்டும்தான் இல்லை... ஏன்? அவர்தான் அழகியைப் பார்க்கவே  இல்லையே:-)  விஷத்தை முழுங்கிட்டு மயக்கமால்லே கிடக்கிறார்... ப்ச் ... பாவம்...

இப்படி ஒரு அழகியை இந்த ஈரேழுபதினாலு உலகங்களில் கண்டதுண்டோ?

ஐய்ய....  இது ஆம்பளைன்னு  யாருக்காவது  புரிஞ்சதோ?  ஊஹூம்.....
திருப்பாற்கடலைக் கடைஞ்சு  அதுலே இருந்து வெளிவந்த அம்ருதத்தை,  கொடுத்த வாக்கின்படி  அசுரர்களுக்கும் தேவர்களுக்குமா பங்கு போட வேண்டிய நேரம். எல்லோரும் பந்தியிலும் உக்காந்தாச்சு.

இங்கோ தேவர்களுக்கு  வயித்துலே பயம் பிடுங்கி எடுக்குது.  சும்மாவே இந்த  அரக்கன்களின் தொல்லை தாங்கமுடியலை. இதுலே  அம்ருதம் சாப்பிட்டு  சாகாவரம் அடைஞ்சுட்டாச் சொல்லவே வேணாம்?  தங்களுக்குக் கெட்ட பெயர்,  அதான் வாக்கு மீறல்  வராமத் தங்களைக் காப்பாத்திக்கணும் இப்போ! என்ன செய்யலாமுன்னு யோசிச்சவுடன்,  மஹாவிஷ்ணுதான் சட்னு நினைவுக்கு வர்றார். அவர்  பெட்ரூமாண்டைதானே இருக்காங்க இப்போ.

பொழுதன்னிக்கும்  உங்களைக் காப்பாத்தறதே எனக்கு வேலையாப்போச்சுன்னு  சலிப்போடு  சொல்லிக்கிட்டே யோசிக்கிறார். இதுவரை எடுக்காத அவதாரம்  எதுன்னு....   பார்த்தால்   பொம்னாட்டி வேஷம் கட்டுதல்.

நம்ம தமிழ் சினிமாக்களில் கூடப் பாருங்க....நிறையப்பேரு பொம்பளை  வேசம் போட்டுருக்காங்க. அந்தக் காலத்து நாடக மேடைகளில்  ஆம்பிளைங்கதான் பெண் வேஷமும் கட்டுவாங்களாம்.  பெண்கள் நடிக்க வந்ததெல்லாம்  ரொம்ப நாளைக்குப்பின்புதான்.  ஒரு படத்துலே சத்யராஜ் பெண் வேஷம் ரொம்ப லக்ஷணமான  இருந்துச்சு.  சரத்குமாருக்கும் பொருத்தமாத்தான் இருந்துச்சு  பெண் வேடம்.

பெருமாளிடம் இல்லாத நகை நட்டா? இல்லே பட்டுப் பீதாம்பரமா?  யாராலும் கண்டுபிடிக்கவே முடியாதபடி  மோஹன உருவத்தில்  அவதாரம் எடுத்ததும்  மனம் மயங்கிய தேவர்கள் ஹா........மனமோஹினின்னு .....உருக ஆரம்பிச்சாங்க.

ஆமாம்... ஒன்னு கவனிச்சீங்களா?  சாதாரணமா நிஜப்பெண்கள் நடக்கும்போது தேவையில்லாத குலுக்கல் மினுக்கலோடெல்லாம் நடக்கறதில்லை. நாங்கபாட்டுக்குப் போய்க்கிட்டு இருப்போம். ஆனால் பெண்வேஷம் கட்டுன ஆண்கள் நடக்கும்போது இல்லாத ஒய்யாரமெல்லாம் வந்துரும்.  தளுக்கலும் குலுக்கலுமாத்தான், கண் இமைகளை  தேவைக்கு மீறிப் படபடன்னு  மூடித்திறப்பது, உதடுகளை (கொஞ்சம் அசிங்கமா!) குவிச்சுக் காமிக்கிறது, மேலாடையை  இழுத்து இழுத்து விட்டுக்கறதுன்னு......அய்ய....  யக்:(

இதே தளுக்கல், மினுக்கலுடன்  அம்ருதம் உள்ள குடத்தைத் தூக்கி  இடுப்பில் வச்சுக்கிட்டு ஒய்யாரமா  நடந்துபோறாள் 'மோஹினி' . எல்லோருக்கும் ஜொள்ளு. அரக்கர்களின் பந்தி வரிசைக்கு முதலில் வந்து நின்னு,  மயக்கும் பார்வையை வீசுனதும்.....  கொஞ்சம் பொறுங்கன்னு கொஞ்சும் மொழியில் சொல்லிக்கிட்டே தேவர்கள் வரிசைக்கு வந்து பரிமாற ஆரம்பிச்சாள்.

இடைக்கிடை  இங்கே கொஞ்சல் பார்வையை வீசுனதும்  இதோ இப்ப வரேன்னு ஜாடை காமிச்சதும்.... அரக்கர்கள் எல்லோரும்  வச்ச கண்களை வாங்காம அவள் உருவத்தையே மனசுக்குள் பருகிக்கிட்டு இருக்காங்க.  ஒவ்வொருவர் மனசுக்குள்ளும் அப்படி நுழைஞ்சு ஆட்டுவிக்கிறாள்.

உண்மையைச் சொன்னால்.... இந்த அரக்கர்கள் கடுமையான  உருவத்துடன், கொடுமைக்காரரா இருப்பாங்களே தவிர ஒருவிதத்தில் அப்பாவிகளே. தேவர்களைப்போல் சூழ்ச்சி கீழ்ச்சி எல்லாம் பண்ணத் தெரியாது. நிதானமா யோசிக்கும் புத்தியும் கிடையாது. எல்லாம் அப்போதைக்கப்போது....  அழகான பொண்ணா.... தனக்கு வேணும். தனக்கே வேணும். நல்ல பொருட்களா.... உடனே அங்கேபோய்  அதுக்குண்டான  உரிமை உள்ளவர்களைக் கொன்னு போட்டு அதைக் கவர்ந்துக்கணும் இப்படி. ப்ச்....

இதுக்குள்ளே அம்ருதம் இருந்த சட்டி ஸாரி குடம் காலி. தேவர்கள் எல்லோரும் அம்ருதம்  சாப்பிட்டாங்க, ஒரே ஒருவரைத் தவிர!  உண்மையில் ஒரே ஒரு ஜோடியைத் தவிர!  ஆலகால விஷத்தை முழுங்கி மயக்கமாக் கிடக்கும் புருஷனை மடிமேல்  தூக்கி வச்சுக்கிட்டு அழுதுக்கிட்டு இருக்காள்  ஒருத்தி. மோஹினி அவதார அழகை அப்போது காணாமல் மயங்கிக் கிடந்தவர், இன்னொருசமயம்  கண்டு மயங்குனது தனிக்கதையாக்கும், கேட்டோ!

கடைசியில் அரக்கர்களுக்கு நாமம் போட்டுட்டாள்  மோஹினி!  எல்லோரும் ஜொள்ளுவிட்டு ஏமாந்ததுதான் மிச்சம்.  ஆனாலும் இதுலே ரெண்டு பேர் அம்ருதத்தின் ருசியை அனுபவிச்சுட்டாங்க. நைஸா தேவர்கள் கூட்டத்து பந்தியில் போய் உக்காந்துக்கிட்டாங்க.  மோஹினி பரிமாறிக்கிட்டே வர்றாள். இவர்களில் ஒருவன் இலையில் அம்ருதம் விளம்பியாச்சு. சட்னு எடுத்து வாயிலும் போட்டுக்கிட்டான். அப்பப் பார்த்துப் பக்கத்தில் உக்கார்ந்திருந்த  தேவரில் ஒருவர்,  மோஹினிக்குக் கண் ஜாடையில்  அங்கே இருப்பவர்கள் இருவரும் அசுரர் என்று காட்டியதும், கையிலிருக்கும்  கரண்டியால் சட்னு ஒரே வீச்சில் அவுங்க கழுத்துகளைச் சீவி எறிஞ்சுட்டாள் மோஹினி.

இதைப் பார்த்துக்கிட்டு இருந்த அசுரர்களில் ஒருவர் ஓடிவந்து  ரெண்டு தலைகளையும்  உடம்போடு பொருத்தினார். அவசரத்தில்  தலைகளும் உடம்புகளும் மாறிப்போச்சு! அம்ருதம் விழுங்கியபடியால்  ஒரு  அரக்கனுக்கு மரணமில்லை. துண்டான உடல்கள்  வெவ்வேறு தலையில் சேர்ந்ததால்  ரெண்டு பேருக்குமே மரணமில்லைன்னு ஆகிப்போச்சு.  இவுங்க ரெண்டு பெரும்தான்  ராகு , கேது என்று நவகிரக வரிசையில் சேர்க்கப்பட்டாங்க!

கதை இப்படித்தான் இருக்கணுமுன்னு நினைக்கிறேன். லாஜிக் சரியா வருதான்னு பாருங்களேன்!

இப்படியாக இந்த மோஹினி அவதாரம் எடுத்த இடம்  இந்த மோஹூர் என்றபடியால் திருமோஹூர் என்று திவ்யதேசத்தில் ஒன்றாக இருக்கு. மோஹனக்ஷேத்ரம் என்பதே  இதன் பூர்வீகப்பெயர்.

தாயாருக்குப் பெயர் மோஹனவல்லி.  உற்சவருக்கு  ஆப்தர் என்று பெயராம்.  அப்ப மூலவர்?  காளமேகப்பெருமாள். பக்தர்களுக்குத் தன் கருணையை மழையாகப் பொழிஞ்சு தள்ளிருவார் என்பதால்  இப்படிப் பெயர் லபிச்சுருக்கு. இவரைக் கும்பிட்டால் மோக்ஷம் உறுதி. கூடக் கைபிடிச்சு நடந்து  மோக்ஷத்தில் கொண்டு போய் சேர்த்துடுவாராம் இந்த ஆப்தர். நம்ம நம்மாழ்வாருக்கும்  கைபிடிச்சுக் கூட்டிண்டுபோய் மோக்ஷம் கொடுத்துருக்கார் . ஆப்தர் என்றால்....  என்ன அர்த்தம்?  நண்பேண்டா :-)

புலஸ்திய மகரிஷி இங்கே வந்து பெருமாளை சேவித்து, உன் மோஹினி அவதாரத்தின் அழகைக் கொஞ்சம் காட்டுன்னு வேண்டுனதும் 'இதோ'ன்னு  காமிச்சாராம்.  வழக்கமா ரிஷிகள் கேட்டுக்கொள்ளும் ' இதே ரூபத்தில் இங்கிருந்து பக்தர்களுக்கு அருள் செய்ய வேணும்'  என்ற கோரிக்கைக்கு இணங்கி அப்படியே இங்கே இருக்காராம்.
தாயார் , தன் சந்நிதியை விட்டு வெளியே வரவே மாட்டாங்களாம். புருஷன் பெண் வேஷம் போட்ட தலம் என்பதால் அவருக்கே மதிப்பு இருக்கட்டுமுன்னு நினைப்பாம். ஐயோ  பாவம் என்று சொல்லும்போதே...மனசு கொஞ்சூண்டு குதூகலிச்சதும் உண்மை. புறப்பாடுகளில்   உற்சவர் ஆப்தருடன்    கூட வர்றது  நம்ம ஆண்டாளாம்.  அடிச்சாள் ப்ரைஸ்!

மேலே உள்ளவைகள் எல்லாம் நம்ம துளசிதளத்தில் ஏற்கெனவே  எழுதுனதுதான்.

போனமுறை கோவிலுக்குப் போகும்போதே  இரவு எட்டு, எட்டரை ஆகி இருந்துச்சு. இருட்டிப்போனதால்  பல அம்சங்களைப் பார்க்கலையேன்னு மனசு தவிச்சது உண்மை.  இன்னொருக்கா வர்றதுக்கு நம்ம 'ஆப்தர்' வழி செய்வார்னு வச்ச நம்பிக்கை வீண்போகலை!
இன்றைக்கு திருமோஹூர் போர்டு பார்த்ததும்  அங்கே போயிட்டோம். மணி நாலே முக்கால்தான் ஆகுது. உச்சிக்கு நடை சாத்துனபிறகு, இப்போ மாலை 4 மணிக்குக் கோவிலைத் திறந்துட்டாங்க.

தினம் ஆற அமர காலை 7 மணிக்குத்தான் கோவில் திறக்குறாங்க. சனிக்கிழமைகளில் மட்டும் காலை 5.30க்கு திறப்பு.  மாலை 8.30க்கு நடை அடைப்பு. பகல் 12 முதல் 4 வரை  லஞ்சு டைம்.

எத்தனையோ சீர்திருத்தம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.... இந்த லஞ்சு டைமுன்னு  நாலுமணி நேரம் கோவில்களை மூடி வைக்காமல் இருந்தால்  சுற்றுலாப்பயணம்  வரும் பக்தர்களுக்கு  பயனாக இருக்கும். திருமலை, ஸ்ரீரங்கம் கோவில்கள் பகலிலும் திறந்து இருக்கே! ஒருவேளை....வருமானத்தை மிஸ் பண்ணக்கூடாதுன்னோ?

காளமேகப்பெருமாள், நம்ம ஆப்தர் இல்லையோ!   இதோ வந்தேன்னு  கோவிலுக்குள் நுழைஞ்சேன்.  வாசலை ஒட்டியே இருக்கும்  கவுண்ட்டரில் போய் முதல்வேலையா கேமெரா டிக்கெட் ஒன்னு வாங்கினதும்தான் மனசுக்கு நிம்மதி ஆச்சு :-)
கொடிமரம் தகதகன்னு ஜொலிக்குது!  ஸேவிச்சுக்கிட்டு, உள்ளே போறோம். நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கும் மூலவரை மனம் குளிர வணங்கினேன்.  இன்றைக்கு வந்த வழியில்  வரவிருந்த ஆபத்தில் இருந்து காப்பாத்துனது இவரேதான்னு   ஒரு நம்பிக்கை ஏற்பட்டுப்போச்சு. மார்கபந்து !
ஆமாம்னு சொல்றதைப்போல  நம்ம  கோபால் கழுத்தில் ஒரு துளசி மாலையைப் போட்டார் பட்டர் ஸ்வாமிகள்!  சடாரி, தீர்த்தம் எல்லாமும் கிடைச்சது.  பெருமாளே நீர் நல்லா இருக்கணுமுன்னு சொல்லிக்கிட்டேன் மனசுக்குள்!

தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர்
நாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும்
 தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்
காள மேகத்தை யன் றிமற் றொன்றிலம் கதியே.

நம்மாழ்வாரும், திருமங்கையும் பாடி மங்களாசாஸனம் செய்த திவ்யதேசக் கோவில் இது.

மோஹன உருவத்தைப் பார்த்தோ என்னவொ  மெய் மறந்த  நம்ம திருமங்கை ஆழ்வார் தன் வழக்கமான பத்துப் பாசுரங்கள் பாடுவதை மறந்துட்டு ஒரு பாசுரத்தோடு நிறுத்திக்கிட்டார்!

உட்பிரகாரம் நல்லா சுத்தமாத்தான் இருக்கு.  வாகனங்களும் அவ்ளவா மோசமில்லை.  விமானங்களும் பளிச்ன்னுதான்!

தாயாருக்கும், ஆண்டாளுக்கும் தனிக்கோவில்னு சொல்லலாம்.  ஆண்டாள் ரொம்பவே அழகு!   மோகனவல்லித் தாயார் படிதாண்டாப் பத்தினின்னு பெயர் வாங்கிட்டதால்  ஆப்தருடன் நகர்வலம் போறதெல்லாம் நம்ம ஆண்டாள்தான் !
தூமணி மாடத்து ஆச்சு. நமக்கு  அதிர்ஷ்டம் போல....   பட்டர் ஸ்வாமிகள் வந்து தீபாராதனை காட்டினார்!  ஆண்டாளும் நமக்கொரு  அல்லியை அளித்தாள் !
சொர்கவாசல் ஸேவிச்சேன். திறந்த சொர்கவாசல் தரிசனம் எப்போன்னு ....

இந்தக் கோவிலில் நம்ம ரங்கநாதருக்கு ஒரு தனிக்கோவிலே இருக்கு!  ஸ்ரீரங்கம்  போலவே தெற்கு பார்த்தபடி கிடக்கிறார். பிரார்த்தனா சயனமாம்!  ஏன்னா  காலாண்டை ரெண்டு தேவியரும் கைகூப்பி உக்கார்ந்துருக்காங்க. ரங்கத்தில் ஐயா மட்டும் ஹாயா இருப்பார்!  (பிக்கல்பிடுங்கல் இல்லாமல்!)
நவநீத கிருஷ்ணனுக்குத் தனிச்சந்நிதி. ஆனால் மூடி இருந்தது.
வெளிப்ரகாரத்தில் இடிஞ்சு விழும்நிலையில் ஒரு பெரிய மண்டபம். நாயக்கர் காலத்தில் கட்டுனதாம்.  அங்கிருந்த சில சிற்பங்களை தனியா எடுத்து வச்சுருக்காங்க.  தொட்டடுத்து நம்ம ஆஞ்சி இருக்கார்.  தனிக்கோவில்னு சொல்லும் வகையில்தான் இங்கே பல சந்நிதிகளும்!
சக்கரத்தாழ்வார் சந்நிதிக்குப்போய் கும்பிட்டாச்சு. பதினாறு கைகளும், அக்னி ஜ்வாலையுமா  ஜொலிக்கிறார் உற்சவர்.  இவருக்காக இங்கே தனி பக்தர்கள் கூட்டமே இருக்கு!  கோவில் தலவரலாறு புத்தகத்தில்கூட முகப்புப் படம் இவரோடதுதான்!
வெளியே இருந்து பார்க்கும்போது  கோவில் வாசல் அவ்ளோ பெருசாத் தெரியலைன்னாலும், உள்ளே போனபிறகு கோவில் ரொம்பவே விஸ்தாரமாத்தான் இருக்கு!  விஜயநகர மன்னர்களும், பாண்டிய மன்னர்களும்,  சிவகங்கைச்சீமை மருதுபாண்டியர்கள் இப்படி அவரவர் காலத்துலே திருப்பணிசெய்து, புது மண்டபங்களும் கோவில்களுமா கட்டி விட்டுருக்காங்க. எல்லாத்துக்கும் கல்வெட்டுகள் சான்றாக இருக்குன்னு போனமுறை வாங்கின  திருக்கோவில் தலவரலாறு சொல்லுது!
இந்தக்கோவிலில் கலை அழகுள்ள சிற்பங்களைப் பொறுத்தவரையில் ரொம்ப விசேஷமே கம்பத்தடி மண்டபம்தான்!
மருது ப்ரதர்ஸ் !
ரதியும் மன்மதனும்  எதிரெதிராய் இருக்காங்க.  சனம் சந்தனத்தைப்பூசி மெழுகி வச்சுருக்கு!


கருடமண்டபத்து கருடர் அப்படி ஒரு அழகு!  நம்ம பெரிய திருவடி! அட்டகாசமா இருக்கார்!
ஆஞ்சிக்கு , ஆதிசேஷன் குடை பிடிக்கிறார்!
சாயரக்‌ஷைக்கான பூஜை வேலைகளில் பட்டர்கள் பிஸி ஆனாங்க. நாங்களும்  மண்டபத்துலே கொஞ்ச நேரம் உக்கார்ந்து பார்த்துக்கிட்டு இருந்தோம். பக்கத்துலேயே பிரஸாத ஸ்டால் இருக்குன்னாலும், யாருக்கும் ஏதும் வேணுமுன்னு தோணலை.....
அப்பதான் ஞாபகம் வந்தது.... கோவில் புஷ்கரணியைப்  பார்க்கலையேன்னு....

கோவிலின் மதில் சுவருக்கு அந்தாண்டை தனியா, நடுவில் நீராழி மண்டபத்தோடு பெருசாதான் இருக்கு. சுத்தம்....  ஓரளவு தேவலை.  திருப்பாற்கடல்னு திருக்குளத்துக்குப் பெயர். மோஹினி அம்ருதம் விளம்பும்போது ஒருதுளி கீழே பூலோகத்தில் விழுந்த இடமாம்!
வருசாவருஷம் இப்பெல்லாம் தெப்போற்ஸவம் நடக்குதுன்னு சொன்னாங்க.
அந்தக் காலத்தில் கோவிலுக்கு எழுதிவச்ச  நிலங்களும் கிராமங்களும் இப்ப கல்வெட்டில் மட்டும்தான் இருக்குபோல.  கோவில் சொத்து இப்பெல்லாம் கோவிலுக்கு இல்லைன்றதுதான் சோகம்.   நவீன கல்வெட்டுகளில்  ஒரு  முன்னாள் அமைச்சர் தன்பதவி காலத்தில்  கோவிலுக்கு என்ன செய்தார் என்பதையெல்லாம் மறக்காமல் பொறிச்சு வச்சுருக்காங்க.  அப்பவே இடிஞ்சு கிடக்கும் மண்டபத்தைத் திரும்பக் கட்டி இருக்கப்டாதோ?
இன்னும் நமக்கு ஒரு பனிரெண்டு கிமீ பயணம் இருக்கு மதுரை மாநகர் போய்ச்சேர....  இருட்டுக்கு முன்னால்  ஆகட்டுமுன்னு  கிளம்பினோம்.
தொடரும்....:-)

PINகுறிப்பு:  கோவிலில் எடுத்த படங்களை ஃபேஸ்புக்கில் ஒரு ஆல்பமாப் போட்டுருக்கேன். நேரமும் ஆர்வமும் இருந்தால் இங்கே க்ளிக்கலாம் :-)

13 comments:

said...

திருமோகூர் பார்த்ததில்லை. இன்று உங்கள் பதிவு மூலமாகப் பார்த்தேன். வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

விரைவில் எண்ணம் நிறைவேறணும்.!

said...

திருமோகூர் பார்த்திருக்கிறேன். படங்கள் அழகு.

said...

அருமை நன்றி

said...

வாங்க ஸ்ரீராம்.

ரசித்தமைக்கு நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்.

வருகைக்கு நன்றி.

said...

திருமோகூர் பெருமாளை இன்னும் நேரில் தரிசிக்கவில்லை. அந்தக் கோவில் பள்ளிகொண்ட ரங்கனாதரும் அழகு. தொடர்கிறேன்.

said...

இந்த மோகினி கன்ஃப்யூஸ் செய்கிறாள்.எத்தனை மோகினிகள் எல்லாமே ஒருவரா பஸ்மாசுரன்கதையில் வரும் மோகினி. ஐயப்பனின் தாயாக வரும்மோகினி. கால வேறுபாடுகள் உண்டா

said...

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்னு கேள்விப்பட்டதுன்னு. உங்க பதிவு வழியாகப் போயாச்சு.

கதைப்படி ஒரு அசுரன் தான் அமுதம் வாங்கிக் குடிக்கிறான். அவன் தலையும் உடம்பும் துண்டு துண்டானாலும் தலை இராகுவாகவும் உடல் கேதுவாகவும் இருக்கிறதாகப் படிச்ச நினைவு.

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

அருமையான கோவில்தான். வாய்ப்பு கிடைத்தால் விட்டுடாதீங்க .

said...

வாங்க ஜிஎம்பி ஐயா!

ஒரே மோஹினிதான். தேவைக்கு ஏற்ப அப்பப்ப அழகுப்பெண்ணா வேஷம் கட்டக் கசக்குதா? அதுவும் அடுத்தவனைக் கிறங்கடிக்கும் அழகுன்னா.... சொல்லவே வேணாம்...:-)

said...

வாங்க ஜிரா!

// கதைப்படி ஒரு அரக்கன்..... ..//

அட! ஆமாம்.... அதான்நவகிரகத்துலே ராகுவும் கேதுவும் ஒருத்தருக்குப் பாம்பு உடலும் இன்னொருத்தருக்குப் பாம்புத்தலையுமா இருக்கறாங்கல்லே!

ஒருவேளை அந்த ரெண்டாம் அசுரன் நானாக இருந்துருப்பேன் போல.... எழுதும்போது தானே அங்கே போய் உக்கார்ந்துருக்கேன்.

நீங்க குறிப்பிட்டதுதான் சரியான தகவல்! நன்றி !!!

said...

திருமோகூர் சென்றதில்லை. உங்கள் மூலம் தரிசனம் ஆயிற்று. தொடர்கிறேன்.