Friday, October 13, 2017

திருக்குறுங்குடி அழகிய நம்பி !! (இந்திய மண்ணில் பயணம் 62)

ஜானகிராமில்  ஒரு இரவு தங்குனதோட சரி.... ஒரு கோவில் தரிசனமோ, இருட்டுக்கடை சமாச்சாரமோ  இப்படி ஒன்னுமே இல்லைன்னா நம்புங்க.  'எல்லாம் போன பயணத்தில் ஆச்சு. இப்போ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கிட்டுக் காலையில் சீக்கிரமா கிளம்புற வழியைப் பார்க்கணுமு'ன்னு நம்மவர் சொல்லிட்டார்.

வந்து சேரும்போதே எட்டேகால் ஆகி இருந்துச்சா....  அறைக்குப்போய்  கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு, இங்கே   மாடியிலேயே இருக்கும் ரெஸ்ட்டாரண்டில்  எனக்கு ரெண்டு இட்லியும், மத்தவங்களுக்கு  சப்பாத்தியும் வெஜிடபிள் கறியுமா  டின்னரும் முடிஞ்சது.

சரியா காலை எட்டரைக்குக் கிளம்பல். அதுக்குமுன் இங்கேயே  பஃபே ப்ரேக்ஃபாஸ்ட். இப்பெல்லாம் எல்லா ஹொட்டேலிலும் இப்படி வச்சுடறது நல்ல வசதியாத்தான் இருக்கு!
போற இடத்தில்  சாப்பாடு வசதிகள் எப்படி இருக்குமோன்னு தெரியலை.... நீ கொஞ்சம் நல்லா சாப்பிடுன்னு எனக்கு அறிவுறுத்தல். சரின்னு நாலு வகைகளுடன் காஃபியுமா முடிச்சேன் :-)

நாப்பத்தியாறு கிமீ தூரம். சுமார் ஒரு மணி நேரப்பயணம். நாங்குநேரி வழியாத்தான்  போறோம். கோபுரதரிசனமும் அதுக்கொரு கும்பிடும்தான்! ஊருக்குள் போகலை.
சந்நிதித் தெருவுக்குள் நுழையும்போதே  பள்ளிக்கூடப்பிள்ளைகளின் நடமாட்டம். இந்து நடுநிலைப்பள்ளி.  நம்ம கண்ணுக்கு நேராத் தெரியுது கோவில் வாசல்.  சட்னு   பார்க்கும்போது நம்ம திருவெள்ளறைக் கோவில் போல!
கோவிலுக்குப் போகும் படிக்கட்டுவரை கார் போகும்:-) வண்டியை ஓரங்கட்டிட்டுப் படிகள் ஏறிப்போறோம். மூணு படிகள் ஏறுனதும் குறுக்கே போகுது ஒரு ரோடு. வேறபக்கம் வந்துருந்தால்  வாசலில் வந்து இறங்கிக்க முடியும். போகட்டும்.... மூணு படி அதிகப் படின்னுட்டு ரோடைக் கடந்து மீதிப்படிகள் ஏறிப்போனோம்.  வாசலில் ஒரு பெரியவர்  வாழை இலையில் சுற்றிய துளசியை வித்துக்கிட்டு இருக்கார்.
அவரைப் பார்த்ததும் அவருக்காகவே வாங்கிக்கலாமுன்னு தோணுச்சு துள்ஸிக்கு.  மூணு சுருள் நமக்கு.   இது கோபுரவாசல்தான். ஆனால் கோபுரம் மிஸ்ஸிங். அதுக்கு வேளை இன்னும் வரலை....



வாசலைக் கடந்து போனால் வெளிப் பிரகாரம். வலமாப்போகணுமேன்னு நமக்கிடது பக்கமா போனால் சகுனம் ரொம்பச் சரியா அமைஞ்சு போச்சு! டீன் ஏஜ் சுந்தரவல்லி குளிச்சுக்கிட்டு இருக்காள். 13 வயசுக்காரி.
அப்புறமா வர்றேன்னுட்டு அந்தாண்டை நகர்ந்து போறோம். கோவில் நுழைவு வாசல் கோபுர சீரமைப்பு நடக்குது.  கும்பாபிஷேகம் வருது போல!
முகப்பில் திருஜீயர் மடம்,  ஸ்ரீ ஸ்வாமி அழகிய நம்பிராயர் தேவஸ்தானம்.

இங்கே கோவிலுக்குள் போகுமுன் ஆண்கள் , மேல்சட்டையைக் கழட்டிடணுமுன்னு  சுந்தரவல்லி பக்கத்துலே நின்னுருந்த கோவில் ஊழியர் சொன்னார். மேலும் இன்னொரு வரி சொன்னார் பாருங்க... எனக்கு  மனசே உடைஞ்சு போச்சு :-(  கையில் இருந்த கேமெராவைப் பையில் வச்சேன்.

வாசலுக்குள் போறோம்.  சின்ன மண்டபம் அதுக்கடுத்துக் கொடிமரம் ஜொலிப்புடன் நிக்குது.  கொஞ்சம்  நமக்கு வலப்பக்கமாத் தள்ளி இருக்கோ?  அந்தாண்டை மூலவர் சந்நிதிக்கான  கருவறை வாசல்.

நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார் நம்பிராயர்!  இங்கேயே நின்ற இருந்த கிடந்த ன்னு மூணு கோலம்  காமிக்கிறார் வெவ்வேற சந்நிதிகளில்.  ஹான்னு  வாய் பிளந்து நின்னேன், ஒரு இடத்தில்.
வைணவக் கோவிலுக்குள்ளே   சிவனுக்கும் பைரவருக்கும் சந்நிதிகள் இருக்கே!  ஓ....  அதனால்தான் அழகியநம்பிக்கு வைணவநம்பின்னும் ஒரு பெயர் இருக்கு போல!

சைவ, வைணவ ஒற்றுமைக்கு இதைவிடப் பெருசா என்ன உதாரணம் சொல்ல முடியும் சொல்லுங்க?  தன்னுடைய கோவிலில் இடங்கொடுத்ததும் இல்லாம,  சிவன் சந்நிதியில் பூஜை முடிஞ்சதான்னு பெருமாளே கேட்டுத் தெரிஞ்சுக்குவாராம். தனக்குப் பூஜை நடக்கும் சமயம், (அங்கே) குறை ஏதும் உண்டான்னு  ஒரு கேள்வியும், குறை ஒன்றும் இல்லை(மறை மூர்த்தி கண்ணா!) என்ற பதிலும்  தினப்படி நடக்கும் விஷயமாம்!

இவருக்கு தயாரிக்கும் நைவேத்யங்கள்தான்  அவருக்கும் ! அதானே ஒரே இடத்தில் இருக்கும்போது ரெண்டு சமையலா?

நாங்க போன சமயம் காலை நேர பூஜைகள் எல்லாம் முடிஞ்சு 'எல்லோரும்' கொஞ்சம் ஓய்வாத்தான் இருந்தாங்க. கோவிலில் கூட்டமே இல்லை. பட்டர்ஸ்வாமிகளுடன் சேர்த்து  நாங்க நாலே பேர்தான்.  தீபாராதனை காமிச்சுத் தீர்த்தம் சடாரி கிடைச்சது!

நூத்தியெட்டு திவ்யதேசக்கோவில் இது!   பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோர் மொத்தம் நாப்பது பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செய்த திருக்கோவில். கீழ் திருப்பதின்னு கூட இதைச் சொல்றாங்க!

பெருமாளின் வராஹ அவதாரம் முடிஞ்சதும், மடியில் பூமாதேவியோடு  பூவராஹனா இருக்கும் சமயம், தன்னுடைய பேருருவைச் சின்னதா ஆக்கிக்கிட்டதால் இந்தக் கோவிலுக்கு வாமனக்ஷேத்ரமுன்னும் ஒரு பெயர் இருக்கு!

கரண்டமாடு பொய்கையுள்க ரும்பனைப்பெ ரும்பழம்
புரண்டுவீழ வாளைபாய்கு றுங்குடிநெ டுந்தகாய்
திரண்டதோளி ரணியஞ்சி னங்கொளாக மொன்றையும்
இரண்டுகூறு செய்துகந்த சிங்கமென்ப.


நின்ற வினையும் துயரும் கெடமா மலரேந்தி,
சென்று பணிமி னெழுமின் தொழுமின் தொண்டீர்காள்,
என்றும் மிரவும் பகலும் வஜீவண் டிசைபாட,
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே

நம்பியைத் தென் குறுங்குடிநின்ற, அச்
செம்பொனேதிக ழும்திருமூர்த்தியை,
உம்பர்வானவ ராதியஞ்சோதியை,
எம்பிரானையென் சொல்லிமறப்பனோ


நம்ம திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ ரங்கத்தில்  நம்ம ரங்கநாதரிடம்   மோக்ஷம் வேண்டினப்ப, 'குறுங்குடிக்குப்போ'ன்னு கட்டளை  கிடைச்சு, இங்கே வந்து பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சபிறகு,  இங்கிருந்தே சாமிக்கிட்டே போயிட்டாராம். அவரோட திருவரசு  இங்கேதான்  ஒரு  இடத்தில் இருக்குன்னு  வாசிச்ச நினைவு.
 உள்ப்ரகாரத்தை வலம் வந்த கையோடு வெளியில் வந்துட்டோம். எதிரில் யானை  குளிக்கும் மண்டபத்தையொட்டி  சிற்பக்கூடம் போல பெரிய மண்டபம் ஒன்னு. எட்டிப்பார்த்தால் மணவாளமாமுனிகள் சந்நிதி!  வாசலில்   ரெண்டு பக்கமும் சிரிச்ச முகத்தோடு சிம்ஹர்!  ஒரு தூணில் லக்ஷ்மியை மடியில் இருத்திக் காதலோடும்  வாய் நிறைய சிரிப்போடும்  பார்க்கிறவர் அதே ரசனையோடு  ஹிரண்யகசிபுவை  அதே மடியில் கிடத்தி அவன் வயித்தைக் கீறிக்கிட்டு இருக்கார்!

ஒரு பக்கம் கரும்பு வில்லோடு மன்மதனும், அவனுக்கு  அந்தாண்டை  அன்ன வாஹனத்தில்  ரதியுமா அமர்க்களம். எல்லாமே ஆளுயச் சிலைகள்!   லைஃப் சைஸ் கேட்டோ!

மண்டபத்துக்குள் மண்டபமா இன்னொரு  பக்கம் பார்த்தால் மூச்சே நின்னுரும் போல!  ஹம்மா....  என்ன ஒருஅழகு!  வசந்த மண்டபமோ?  சட்னு நம்ம சேஷராயர்  மண்டபம் (ஸ்ரீரங்கம்)நினைவுக்கு வந்தது உண்மை!

இன்னும்  ஒரு மண்டபத்துக்குள் போனால் ஜீயர் மடம். இருக்காரான்னு கேட்டதும்,  உள்ளே போய் விசாரிக்கறேன்னு  போன கோவில் ஊழியருடன்,  இன்னொருத்தரும்  சேர்ந்து வந்தார்.
அவர் நம்மை  மடத்துள்ளே கூட்டிண்டு போனார்.  ஒரு விசாலமான பெரிய ஹாலில் ஜீயர் ஸ்வாமிகள்  ரெண்டு பக்தர்களுடன்  பேசிக்கொண்டு இருந்தார். நாங்கள் நமஸ்காரம் பண்ணினோம்.  கைகளை உயர்த்தி ஆசி வழங்கியவர்,  இந்தப் பக்கம் உக்காரும்படி கை காமிச்சார்.
நம்மைப் பத்தி விசாரிச்சார்.  'சுருக்கமாச் சொன்னேன்'. ஆனால் நம்மவர் தன்னுடைய கொபசெ பதவியை நினைவில் வச்சுக்கிட்டு நம்ம எழுத்துப்பணியைச் சொன்னதும், ரொம்ப ஆர்வமா அதைப்பற்றிக் கேட்டார். கோவில்களைப் பற்றி எழுதறது அவருக்கு ரொம்பவே பிடிச்ச விஷயமாம். முக்திநாத் தரிசனம் ஆனது  ரொம்பவே நல்லதுன்னார்.

இந்த நூத்தியெட்டு திவ்ய தேச யாத்திரைகள் புத்தகமா  வரும்தானேன்னு  விசாரிச்சப்ப..... ' வரணும்'னு கொஞ்சம் இழுத்தேன்....

வந்தவுடன் ஒன்னு அனுப்பி வைக்கும்படி ஆக்ஞை ஆச்சு!

'இன்னும் நம்ம நூத்தியெட்டு முடியலை , ரெண்டு கோவில்கள் பாக்கி இருக்கு. அதில் ஒன்னு இன்றைக்கு சாயங்காலம் போகறதா இருக்கோம்.  கடைசி ஒன்னுதான் நினைச்சாலே  பயமா இருக்கு'ன்னு அசடாட்டம் சொன்னேன்.  என்ன கோவில்னு விசாரிச்சவர்,  'என்ன பயம்? எல்லாம் நல்லபடியாக நடக்கும்'னு கைகளை உயர்த்தித் திரும்பவும் ஆசி வழங்கினார்.
'மலைமேல் நம்பியை தரிசனம் பண்ணலையா'ன்னார். 'இப்போ அங்கேதான் போறோம்' னதும்,  அங்கே போய் வந்து  சாப்பாடானதும்  கிளம்பினால்  சாயங்காலம் கோவில் திறக்கும்  நேரம் போயிடலாம்' னவர் நம்மை இங்கே உள்ளே கூட்டி வந்தவரிடம், நம்மைக் கவனிக்கும் பொறுப்பைக் கொடுத்துட்டார்.

ஜீயருடைய அனுமதியுடன் சில க்ளிக்ஸ் ஆச்சு.  நமஸ்காரம் பண்ணிட்டுக் கிளம்பினோம்.  நம்ம பொறுப்பை  ஏத்துக்கிட்டவர் பெயர் ராமானுஜர்.! (ஹா!!!)


தொடரும்...... :-)

PINகுறிப்பு:   ஒரு பதிவில் அடக்கமுடியாத  கோவில் என்பதால்  மீதியை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

கோவிலில் எடுத்த படங்களையும் ஆல்பமா போடத்தான் வேணும் :-)




18 comments:

said...

திருக்குறுங்குடி கோயில் நான் இதுவரை பார்த்திராதது. தங்கள் பதிவின் மூலமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

said...

எங்கள, அம்மாவழித் தாத்தா திறுக்குறுங்குடைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். அவருடைய பேரன்கள் பலரும் நம்பி என்ற பெயருள்ளவர்கள். "திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் மின்னு நூலும்..." - எங்கனேயோ அன்னமீர்காள் - நான் அடிக்கடி சேவிக்கும் பாசுரம். வல்லிசிம்ஹனுக்கும் இந்த ஊர்த் தொடர்பு உண்டுன்னு தினைக்கிறேன்.

சேவிக்காத கோவில். படித்ததும் தரிசிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு. பெருமாளின் அழகை நம்மாழ்வார் பாடி, அவனிடத்தில் நாயகியாக தம்மை எண்ணிக்கொண்டு பாடும் ஸ்தலம். தொடர்கிறேன்.

said...

ப்ரம்மாண்டக் கோவிலாய் இருக்கிறது. கூட்டத்தைத்தான் காணோம். கோவில் அழகு. படங்களுக்கு நன்றி.

said...

ஆஹா..அழகிய சிற்பங்கள்...

நானும் சேஷராயர் மண்டபத்தை தான் நினைத்து பார்த்தேன்...நீங்களும் அதே கூறியுள்ளீர்கள்..

said...

கோவில் முன் அகண்ட சுத்தமானத் தெரு,
அரிசிமாவில் கோலம்,
வாழையிலையில் துளசி,
படமெடுத்த நீங்கள்,
பார்க்கும் நாங்கள்,
கொடுப்பினை இது, நன்றி.

said...

//வந்தவுடன் ஒன்னு அனுப்பி வைக்கும்படி ஆக்ஞை ஆச்சு!//

பெரியவா சொன்னா பெருமாளே சொன்னமாதிரி.
நானும் ஆமோதிக்கிறேன், வழிமொழிகிறேன்
கோவிலின் சிலபல படங்கள், பாடல்கள், முடிந்தால் பொருள் /அர்த்தம் சேர்த்து, தங்கும் வசதி - - இவ்வாறு ஒவ்வொரு திவ்யதேசம் பற்றி,
புத்தகம் வாங்க நாங்க ரெடி, (200 ப்ரிண்ட் மட்டும் கூட போடமுடியும் ன்னு உங்க publisher சொன்னதா சொல்லியிருக்கீங்க, நினைவிருக்கும்னு நெனைக்குறே)

said...

13 வயசு பொம்பளை பிள்ளை குளிக்குறதை படமெடுத்ததே தப்பு. இதுல நெட்ல வேற விட்டிருக்கீங்களேம்மா!!! சைபர் க்ரைம் சட்டம் பாயப்போகுது

said...

மிக நன்றி துளசி. இந்த ஜீயர், என் தம்பிக்கு மிக உகந்தவர்.
நிறுத்திக் கொள்கிறேன்.

said...

//இந்த நூத்தியெட்டு திவ்ய தேச யாத்திரைகள் புத்தகமா வரும்தானேன்னு விசாரிச்சப்ப..... ' வரணும்'னு கொஞ்சம் இழுத்தேன்....

வந்தவுடன் ஒன்னு அனுப்பி வைக்கும்படி ஆக்ஞை ஆச்சு!//

இந்த ஆசீர்வாதம் போதுமே!

படங்கள் முன்பு பார்த்ததை நினைவுபடுத்தியது.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நல்ல அழகான கோவில். அஞ்சு நம்பிகளை தரிசனம் செஞ்சுக்கலாம். வாய்ப்பு கிடைத்தால் விட்டுடாதீங்க!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அருமையான கோவில். ஒரு முறை போகத்தான் வேணும்!

said...

வாங்க ஸ்ரீராம்.

விழாக்காலங்களிலும், சனிக்கிழமை, ஏகாதசி நாட்களிலும் கூட்டம் நிறைய வருமாம்.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

வராம இருக்குமோ? :-)

said...

வாங்க விஸ்வநாத்.

துளசி எளிமை இல்லையோ!

புத்தகம்.... நம்ம பதிப்பாளர் மூலம் வெளி வருவதா இருந்தால் படங்கள் ஒன்னு ரெண்டுதான். அதுவும் கருப்பு வெள்ளைப்படங்கள். வண்ணப்படங்கள் போட்டால் புத்தகத்தின் விலை கூடிப்போகும் என்று பதிப்பாளர் சொல்றார்.

நம்ம பதிவுகளில் படங்கள்தான் ரொம்பவே முக்கியமுன்னு நான் நினைக்கிறேன். அதுதான் தாமதம் ஆகிக்கிட்டே இருக்கு.

பேசாம மின்னூலா போட்டுடலாம் என்ற எண்ணம். எல்லோருக்கும் பயன்படும் வகையில் இருக்கும்தானே?

said...

வாங்க ராஜி.

அச்சச்சோ..... இப்ப என்னப்பா செய்யறது? குளிக்கும் ஸீன் பார்த்துட்டாங்களே....

said...

வாங்க வல்லி.

மனசு ஒன்னில் இருந்து ஒன்னுக்குத் தாவிப்போகும்போது ஏராளமான சிந்தனைகள். தம்பி இப்போ பெருமாளோடு ஜம்னு இருப்பார்!

said...

வாங்க கோமதி அரசு.


அவர் சொன்ன முஹூர்த்தம் நல்லபடியா நடக்கட்டும்.

வருகைக்கு நன்றி.

said...

மனதில் ஒருபரவசம்,,மகிழ்வின் பரவல் உடலெங்கும் இறைமீது மிகுந்த பக்தி கொண்டவன், இந்த ஆலயத்தைப்பற்றி இப்போதுதான் அறிந்தேன் மிக்க மகிழ்ச்சி அருள்மிகு நம்பிராயர் எப்போது அழைப்பாரோ ஆவலோடு காத்திருக்கின்றேன்,,உங்கள் பணி த்தொடர இறைவனை வணங்கி வேண்டுகிறேன்