Friday, May 11, 2018

பேலஸ் டூர்ன்னு வச்சால்..... அதுலே பேலஸ் இல்லையாக்கும்..... பின்னே? சீனதேசம் - 10

படகுலே போகப்போறோம்னு சொன்னதும் எதிர்பார்ப்பும் வந்துருச்சு.  முத்துக்கடையில் இருந்து ஒரு நாப்பது நிமிசப் பயணம். பெய்ஜிங் சுத்துனாப்போலயும் ஆச்சு, இல்லே!
விதவிதமான மாடர்ன் கட்டடங்கள் ஏகப்பட்டவை. இன்னும் கட்டிக்கிட்டே இருக்காங்க. திடீர்னு ஒரு மேம்பாலத்தாண்டை வண்டியை நிறுத்தச் சொல்லி எங்களை இறக்கிக் கூட்டிப்போனார் மைக்கேல்.  இதுலே ஏறி அகலமான சாலையைக் கடந்து அந்தாண்டை போகணும். அப்புறம் இதே ப்ளாட்ஃபார்முக்கு  ஏறி இறங்கும் வகையில்  ரெண்டு பக்கமும் கட்டி இருக்காங்க. நாம் ஏறும் பக்கம் படிக்கட்டுகள்.  அந்தாண்டை கீழிறங்க  வெறும் சரிவுப்பாதையா இருக்கு.  ஏன் இப்படின்னு யோசனையோடு   இந்த சாலையைக்கடந்து  எதிர்ப்பக்கம் இறங்கும் இடத்துக்குப் போனால் நாம் இறங்க வேண்டியதும் படிகள் ஒன்னும் இல்லாத சரிவுப் பாதையில்தான்.  எங்கியாவது சறுக்கி விழுந்துடப் போறோமோ என்ற கவனத்துடன் இறங்கிக் கீழே போறோம்.

இந்த இடத்துக்கு Pபர்ப்பிள் Bபேம்பூ  Pபார்க்னு பெயராம். என் கண்ணுக்கு பர்ப்பிள் பேம்பூ தெம்படலை. ஆனால்..... பர்ப்பிள்(மாதிரி)நிறத்துலே பூத்துக்குலுங்கும் மரம் தெம்பட்டது:-)
'டிக்கெட் வாங்கி வரேன்'னு  ஐவரை விட்டுப்போனார் மைக்கேல்.  பைக் இருக்கேன்னு  ஓட்டிப் பார்க்கலாமான்னா அதுக்கான ஆப் இல்லை நம்மிடம் :-)
எல்லாத்துக்கும் ஒரு QR code போட்டு வச்சுருக்காங்க. சனம் செல்ஃபோனை வச்சுக்கிட்டே எல்லாத்தையும் பயன்படுத்திக்க முடியுது.  இது போல நம்ம நியூஸியிலே இல்லை. ரொம்பவே அட்வான்ஸ்டுன்னார் 'நம்மவர்' !

Almost cashless country.   Mobile wallet on use ! 


அப்பதான்   பால விளக்கம் கிடைச்சது.  இங்கே நம்மூர் டெம்போ போல நிறைய வண்டிகள்,  சாமான்கள் கொண்டுபோகப் பயன்படுத்தறாங்க. இந்தப் படகுத்துறையை ஒட்டி இருக்கும் ரெஸ்ட்டாரண்டுக்கு சாமான்கள் கொண்டுவந்து இறக்கிட்டுத் திரும்பறார் ஒரு வண்டிக்காரர். பாலப்பாதையின் ஆரம்பத்தில் கூட்டமா நிக்கும் மக்களை, தள்ளி நில்லுங்கன்னு குரல் கொடுத்துக்கிட்டே வண்டியில்   ஜிவ்னு  அந்தச் சரிவில் ஏறிப்போய்  பாலத்தின்மேலே ஓடிப்போய் அடுத்த சரிவில் இறங்கி  போக்குவரத்தில் கலந்துட்டார்!  சூப்பர்!

 எல்லாத்தையும் உக்கார்ந்து யோசிச்சுப் பாலம் கட்டி இருக்காங்க இல்லே!!  சிறு வாகனங்கள்  கஷ்டப்படாம  இங்கேயும் அங்கேயுமாப் போய்வர முடியுது பாருங்க !
இதுதான் படகுக்கான டெர்மினல்.  டிக்கெட் வாங்கிவந்த  மைக்கேல் நம்மைப் படகுக்குக் கூட்டிப்போனார்.  அகலமான படகும், அகலமான நதியும்!  முதல்லே நாங்க ஆறுபேர்தான் படகில்!

அதிசயமாக் கூட்டமே இல்லையேன்னு சொல்லி வாய் மூடலை.... திமுதிமுன்னு மக்கள் கூட்டம் வந்து  படகு நிறைஞ்சு வழிஞ்சது! 



படகு கிளம்புனதும் படகுக்காரப் பெண், எங்கே போறோம், இந்த இடத்தின் அழகு என்ன, இந்தாண்டையும் அந்தாண்டையும் கரைகளில் என்னென்ன விசேஷம் என்றெல்லாம்   (இப்படித்தான் இருக்கணும், எல்லாம் சீனமொழியில்! ) சொல்லிக்கிட்டே  வந்தாங்க.  சரி... சொல்லிக்கிட்டு இருக்கட்டும், நாம் கொஞ்சம் நம்ம வேலையைப் பார்க்கலாமுன்னு க்ளிக்க ஆரம்பிச்சால், படகின் கண்ணாடி ஜன்னல் எல்லாம்  சுத்தம் செய்யாமக்கிடக்கு.  தண்ணீர் தெறிச்சு எல்லாம் மசமச.  படகு முழுக்க ஏர்கண்டிஷன் செஞ்சது. படகின் பின்னால் ஒரு ஏஸி மிஷின் உக்கார்ந்துருக்கே!


இருவது நிமிசப் படகுப்பயணம் முடிஞ்சு  நம்மை  இறக்கிவிட்டுட்டாங்க.  வர்ற வழியிலேயே ரெண்டு மூணு பாலம் கடந்துதான் வந்தோம். இப்ப நாம் போகும் இடம் சம்மர் பேலஸ்.

 படகுவிட்டு இறங்கியதும் வரும் பாலம் ஒன்னு ரொம்ப அழகு!

அதுக்கு ஏறிப்போகும் படிகள் வேற வகையில்  அமைச்சுருக்காங்க. படிகளுக்கும் சரிவுக்கும் இடையில் ரெண்டுங்கெட்டான்.  குட்டிக்குழந்தை காலுக்குப் பொருத்தமா இருக்கும். ஒருவேளை அரசகுடும்பத்துச் சிறார்களுக்காகக் கட்டுன படிகளோ? சின்னச்சின்னக் காலெடுத்து.....


நமக்கு வலதுபக்கம் ஒரு பெரிய அகலமான பாதை. அதையொட்டிப்போகும் நீளமான மதில் சுவர்.  இடதுபக்கம்..... தண்ணீர்!   ஏரிக்கரையில் நாம் நடக்கறோம்.  ரொம்ப நடக்கவேண்டி இருக்குமான்னு கேட்டதுக்கு 'ஆமாம்'னு சொல்றார் மைக்கேல்.  அதுவரை மறந்து போயிருந்த கால்வலி நினைவுக்கு வந்துருச்சு :-)
இந்த இடத்துக்குள்ளே வர்றதுக்குத் தனி டிக்கெட் வாங்கிக்கணும். அதை ஏற்கெனவே படகுத்துறையிலேயே வாங்கிட்டாராம்.  எங்கெ போனாலும் ஒரு டிக்கெட்  வாங்கவேண்டி இருக்கு.  பரவாயில்லை. அந்தந்த இடங்களின் பரமாரிப்பு செலவு  இதைக்கொண்டே ஆகிருது என்றதும் நல்லதுதானே?

சம்மர் பேலஸுக்கு  எவ்ளோதூரம் நடக்கணும்னு என் கேள்வி.  சம்மர் பேலஸுன்னால்.... சம்மர் பேலஸுக்குள்ளே இப்ப நாம் போகலையாம்.  இப்ப நடந்து போறோமே இதுதான் சம்மர்பேலஸ் டூரில் சேர்த்தியாம்.

ஓ....  மைசூர் போண்டாவிலே மைசூர் இருக்கா?  அதே.... போல....

இந்த பிரமாண்டமான ஏரியின்  அந்தப் பக்கம் எதிர்க்கரையில்  பேலஸ் கட்டடங்கள் இருக்காம் !

ஓ....

அப்ப சம்மர் பேலஸ் டூர்னு சொல்றது.....?
ஹிஹி.....  சம்மர்பேலஸ் போற வழியிலே நடந்து  போறதைத்தான் !


ஒரு  அரைக்கிமீ தூரம் இருக்கும்.... நடந்து நடந்து போய் ஏரிவளையும் இடத்துக்குப் போயாச்சு.... இங்கிருந்து வலப்பக்கம்  ஏரியைச் சுத்தியே  இன்னொரு பாதை.....
இந்த ஏரியே செயற்கையா உண்டாக்குனதுதானாம்.  கோடைகாலத்துலே வெயில் தாங்கவே முடியலைன்னு  ராணியம்மா புலம்புனதும்,  ராஜா  தன்  குடும்பத்துக்கு வேண்டி , 'தோண்டு ஒரு ஏரியை'ன்னு  பணியாளர்களையும், குடிமக்களையும் ஏவினார்.  Kunming Lake இப்படித்தான் உருவாச்சு.  கிட்டத்தட்ட ஒரு சதுர மைல் பரப்பளவு!  அதிகபட்ச ஆழம் ஒரு பத்தடிக்குப் பக்கம்.
 'ஏரிக்கரையாண்டை கட்டு ஒரு அரண்மனையை'ன்னதும் கட்டியாச். மாளிகை வந்ததும் தோட்டமும் வந்தது. எல்லாமே கண்ணுக்கும் மனசுக்கும் ரம்யம்!
தூரத்தில் தெரியும் மாளிகைகளைப் பார்த்துக்கிட்டே நடக்க நடக்க....   இங்கெ ஒரு மண்டபம் கண்முன்னால்...   Kuoru Pavilion
மண்டபத்துக் கூரையில் பார்த்தால்.....  நான்  ஏற்கெனவே சொல்லிட்டு இருந்த நாய்கள்!  மைக்கேலிடம், இந்த நாய்களை, நாய்களான்னு கேட்டதுக்கு.... பெரிய வெடிச்சிரிப்போடு, நாய்கள் இல்லைன்னுட்டார்.
அப்புறம்?   வேறென்னவாம்?  பதில் இல்லை.....  அதுக்காகச் சும்மா விட முடியுமா?  இந்தப் பதிவு எழுதும் சமயம் 'ஆண்டவரை'க் கேட்டேன்.  சீனமரபுகளில்  இப்படிக் கூரையில் பொம்மை வைக்கிறது விசேஷம். சிங்கம், ட்ராகன், மீன், அப்புறம் புராணங்களில் வரும் கற்பனை மிருகங்கள் இப்படியான  வகைகள்.
கூரையின் நிறமும் கூட  விசேஷம்தானாம். ரொம்ப மதிப்பு வாய்ந்தவைகளுக்கு (அரண்மனை, கோவில்....) மஞ்சள் கூரை!  மங்களகரம், இல்லே!

பச்சைக்கூரை.....  வளமை. சிகப்புக்கூரை  மகிழ்ச்சி,  கருப்பு.... துக்கம் இப்படி...

வளைஞ்சு வரிவரியாத் தெரியும் கூரை.....  மூங்கிலை அடுக்குனதைப்போல! மூங்கில்தான். ஆனால் ஓட்டு மூங்கில்!  சரியா மூங்கிலின் கணுவில் முடியும் வரிசைகள்.

மண்டபத்துக்குள்ளே  ஏறிப்போய்ப் பார்த்தால்  உச்சி விதானம் இப்படி!  அழகு!
இதுக்கு இந்தாண்டை ஏரிக்கு மேலே ஒரு பாலம். சொல்ல விட்டுப்போச்சே....  ஏரியில் அங்கங்கே சின்னச்சின்ன தீவுகள்.  இந்தப் பாலமும் ஒரு தீவுக்குத்தான் போகுது!  Nanhu Island.

ஏரியில்  அங்கங்கே  இருக்கும்  சுமார் முப்பது பாலங்களில் ரொம்பவே நீளமானதும் அழகானதும் இதுதான். பதினேழு கண்கள் ! நூத்தியம்பது மீட்டர் நீளம்.  எட்டு மீட்டர் அகலம்!
படிக்கட்டுகள் இல்லாமல்... அப்படியே தரையிலே இருந்து ஆரம்பிச்சுப் போகுது. ரொம்பவே சின்ன சரிவுதான் என்பதால் ஏறிப்போறது சுலபம்.

பாலத்தின் ஆரம்பத்தில்  பக்கத்துக்கு ரெண்டா, பெருசா நாலு சிற்பங்கள். அதே சிங்கமும் ட்ராகனும்தான்.  பாலம் முழுக்க ரெண்டு கட்டைச்சுவர்களிலும் சேர்த்து ஐநூத்திநாப்பத்திநாலு சின்னச் சிங்கங்கள் , இந்தமாதிரி!
எங்கே பார்த்தாலும்  மக்கள் வெள்ளம்.....  பாலத்துமேலே நிக்கும்போது காத்து பிச்சுக்கிட்டுப்போகுது. வீணாக்காமல்  பலர் பட்டம் விட்டுக்கிட்டு இருக்காங்க.
வகைவகையா சின்னதும் பெருசுமாப் படகுகள்  ஏரியில் சுத்தி வந்துக்கிட்டு இருக்கு. இந்தப் பகுதி படகு சவாரிக்குத் தனியா டிக்கெட் எடுக்கணும். அதுக்கும் பயங்கரக்கூட்டம். அதனால் போகலை.
ட்ராகன் போட் அட்டகாசம்! கண்ணைத் திறந்து நாக்கை நீட்டிப் பார்க்குதே :-)
ஏரிக்கரையோரமாவே  ஏரியைச் சுத்திப் போகும்விதமா பாதை போட்டுருக்காங்க.  கால்வலியால் கண்ணால் நடந்தேன்.  நிறைய நேரம் மிச்சம் :-)

நமக்கு இங்கே ஒரு மணி நேரம்னு ஒரு கணக்கு போல.....   போகலாமான்னு கேட்டார் மைக்கேல்.  ஐவரும் தலையை ஆட்டுனோம்.  வேன் ஓட்டுனரை வரச் சொல்லிட்டு ஏரிக்கரை வளாகத்துலே இருந்த வாசல் வழியாத் தெருவுக்கு வந்துட்டோம்.  நல்லவேளை நம்மை வந்தவழியே கூட்டிப்போகலை !

 அடுத்த நாப்பது நிமிட்லே நம்ம  ஹொட்டேல் இருக்கும் பேட்டைக்கு ( வாங்ஃப்யூஜிங்) வந்தாச்சு. அதான் நாலுமணிக்கு அப்புறம் இந்த ஏரியாவில்  டூரிஸ்ட் பஸ், வேன்களுக்கு அனுமதி இல்லையே.....  ரெண்டு தெரு தள்ளி இறங்கி நடக்க வேண்டியதாப் போயிருச்சு.

இனிமேல் வேறெங்கும் கிளம்பும் எண்ணம் இல்லை.  பகல் சாப்பாடு வேற சரி இல்லையேன்னு  கொஞ்சம் சீக்கிரமா சமையலை  (!)முடிச்சுட்டு எம்டிஆர் டால் ஃப்ரை,  தொட்டுக்க மாம்பழம், புளித் தொகையல் (ஏது? ஹாஹா...   எம்டிஆர் புளிக்காய்ச்சல் கெட்டியாத்தானே இருக்கு அதில் இருந்து அரை டீஸ்பூன்) தயிர்  இப்படி வகைவகையான டின்னர் :-)

நாளைக்கு வேற இடம் பார்க்கலாமா?

 தொடரும்.........:-)

13 comments:

said...

அழகிய இடங்கள்... அழகிய படங்கள்.

said...

//ராஜா தன் குடும்பத்துக்கு வேண்டி , 'தோண்டு ஒரு ஏரியை'ன்னு பணியாளர்களையும், குடிமக்களையும் ஏவினார்//

இதேதான் இங்கேயும், இன்றும். என்ன தோண்டுவதற்கு பதிலா மூடுறாங்க. மூடிட்டு real estate.

அருமை நன்றி.

said...

அனைத்துமே அருமை. இருந்தாலும் படகுப் பயணமும், படகிலிருந்து எடுத்த படங்களும் மிகவும் அருமை.

said...

இடங்களும் படங்களும் மிக அருமை.

இந்தியா இந்த அளவுக்கு எந்த நூற்றாண்டில் முன்னேறும் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. பாலங்கள், மக்களுக்கு வசதி, சுற்றுலா இடங்களைச் சிறப்பாக வைத்துக்கொள்வது..... ம்ம்ம்ம்.. நாம் நிச்சயம் நூற்றாண்டுகளாவது சீனாவை விடப் பின் தங்கி இருக்கோம்.

said...

அன்பின் டீச்சர்,

நயாகராவைச் சுத்திட்டு இப்ப சீனாவுக்கு உங்க கூடவே நானும் வந்தாச்சு. :)
நீங்களும், கோபால் அண்ணாவும் நலமா?

அந்த சிறிய படிகள் சீன பெண்களுக்காக இருக்கக் கூடும்.
அந்தக் கால சீனப் பெண்களின் பாதங்களை பாதியாக மடித்து ஒடித்து விடுவார்களாம் என்று நம் எழுத்தாளர் சகோதரி ஜெயந்தி சங்கர் எழுதியிருந்ததை படித்ததாக நினைவிருக்கிறது. அப் படிகள் அந்தப் பாதங்களைக் கொண்ட பெண்களுக்காக இருக்கக் கூடும்.

Xinran எழுதிய The Good Women of China நூலையும் அண்மையில்தான் வாசித்தேன். நவீன சீனா எத்தனையோ துயரங்களுக்கு மேலால்தான் கட்டப்பட்டிருக்கிறது, இல்லையா?

said...

படகோட கண்ணாடிய தொடைச்சிருக்கலாம். வெளிய வேடிக்கை பாக்கவும் படமெடுக்கவும் வசதியா இருக்கும். இந்த வகைல சீனாவும் இந்தியாவைப் போலத்தானோ!

அந்த O பாலம் ரொம்ப அழகு. ஆனா நீங்க சொன்ன மாதிரி படியெல்லாம் குட்டிக்குட்டியா இருக்கு. நடக்க சிரமமா இருக்கும். ஏன் அப்படி வெச்சிருப்பாங்கன்னு யோசிக்கிறேன். புரியலையே.

ஆகா... அப்போ கூர மேல உக்காந்திருந்தது நாய் இல்லையா. டிராகனா. ஆகா. டிராகன் அங்க புனிதமானது. அத அரண்மனையோட கூரை மேல வெச்சதுல வியப்பில்ல.

said...

வாங்க ஸ்ரீராம்,

தொடர்வருகைக்கு நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்.


நாம் எப்பவும் உல்ட்டாவாத்தான் செய்வோம் , இல்லையோ!!!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசித்தமைக்கு நன்றி!

said...

வாங்க நெ த.

மக்கள் மனசு வச்சால் இதைவிட சிறப்பா நம்மால் செய்ய முடியும். ஆனால் சுதந்திரம் என்பதை ரொம்பவே தப்பாப் புரிஞ்சுக்கிட்ட சனம் நம்மது.

இதுலே அரசியல்வியாதிகள் பண்ணிக்கிட்டு இருக்கும் கொள்ளையும் குழப்பமும் அதிகம்.

எனக்கு நம்பிக்கை போயிருச்சு............. ப்ச்...

said...

வாங்க ரிஷான்.

நம்ம 'ஜெ' புத்தகத்தை நினைவு கூர்ந்தது சிறப்பு. விரலை மடிச்சுக் கட்டிவிடுவாங்கன்னு எழுதி இருப்பாங்க. அதனால் நடையே மாறிவிடும்.... ப்ச்..... பாவம்.....

இவ்வளவு துயரங்களில் இருந்தும் அவுங்க உயிர்ப்போடு எழுந்து வந்துருக்கறதைப் பாராட்டணும். உலகில் எந்த நாடானாலும் கிளம்பிப்போயிடறாங்க. சைனா டவுன் இல்லாத நாடுகளை விரல்விட்டு எண்ணிடலாம் போல!

கோபால் நலம். விசாரிப்புக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

தினமும் காலையில் கண்ணாடியைத் துடைச்சு வைப்பாங்கதான். படகு போகும்போது தெறிக்கும் நீர்த்திவலை அப்படியே காய்ஞ்சுபோய் இப்படி ஆகிருது..... நாமும் பகல் மூணுமணிக்குத்தானே போனோம்.

நம்ம ரிஷான் சொன்னதைக் கவனிச்சீங்களா? பெண்கள் பாதங்களுக்காக இப்படிக் கட்டி இருக்கலாமோ? அரச குடும்ப பெண்டிர் விதிவிலக்கா இருந்துருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

ட்ராகன் மட்டுமா.... இன்னும் நிறைய mythological creatures இருக்கு! இதுலே நாம் மட்டும் குறைச்சலா? நம்ம புராணங்களில் எத்தனையெத்தனை !!!

said...

ஏரிக்கரையில்...ஆஹா...

எல்லாமே அழகு..


அந்த பாலம்..படகு...மிக சுத்தமும் கலைநயமும்..